Ani Shiva’s Agalya 2

Ani Shiva’s Agalya 2

2

சொந்த நிறுவனம் ஆரம்பிப்பது தான் அனேக பேரின் கனவு. ஆனால் அதனை நிறைவேற்றுவதில் உள்ள சிரமங்களையும், அலைச்சலையும், பண நேர விரயத்தையும் கருத்தில் கொண்டு பின்வாங்கிவிடுவார்கள். முன்னேறுவது மட்டுமே குறிக்கோளாய் கொண்டவர்கள் இந்தச் சிரமங்களை அனைத்தும் தூசு போல் கருதி, அதைத் தாண்டி ஜெயித்தும் காட்டிவிடுவார்கள்.

சூர்யா அத்தகைய குணத்தைக் கொண்டவன். ஜப்பானின் வேலையை உதறிவிட்டு நெல்லை வந்தவன் முழுமூச்சாகத் தன் நிறுவன பணிகளைத் துவங்கினான். திருநெல்வேலி – நாகர்கோவில் நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது அவனது,

‘எஸ் எஸ் சாப்ட்வேர் சொல்யுஷன்ஸ்’

பணியாளர்களுக்கு அவரவரின் விருப்பபடி என்ஜிஓ காலனி, பெருமாள்புறத்தில் என்று குவார்ட்டர்ஸ் அமைத்துத் தந்துவிட்டான்.

வெளிநாட்டில் வேலை பார்த்த சமயம் நிறைய நண்பர்களிடமும், சில பெரிய நிறுவனங்களின் மேலாளர்களிடமும் நல்லதொரு உறவைப் பெற்றிருந்ததால், அவர்கள்மூலம் ஏராளமான ப்ராஜெக்ட்டுகள் அவன் நிறுவனத்திற்கு வந்தவண்ணமிருந்தன.

மனித வளம் அதிகம் உள்ள நாடுகளான சீனாவும், இந்தியாவும் பல திறமையான மனிதர்களையும் பெற்றிருக்கிறது. அதில் இந்தியாவின் தமிழகத்தில் உள்ளவர்களின் திறமையைப் பார்த்து உலகமே வியக்கும் அளவிற்கு வந்தாயிற்று…

திருவள்ளுவர், பாரதியார், அவ்வையரென வாழ்ந்து, சாதித்து முடித்துவிட்டார்கள்… இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் அறிந்த வகையில் சிலர் அப்துல் கலாம், சுந்தர் பிச்சை, இந்திரா நூயி, சிவா ஐயாதுரை, ஷிவ் நாடாரென இன்னும் எத்தனையோ ஜாம்பவான்களை நம் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது.

அந்த வரிசையில் சூர்யாவும் வரலாம்…

அவனைப் போலவே எண்ணம் கொண்ட சிலரை அந்த நிறுவனத்தில் பணியாளர்களாக அமைத்துக்கொண்டான். பணம் மட்டுமே குறிக்கோளாய் இல்லாமல் தானும் முன்னேற வேண்டும், வேலை செய்யும் நிறுவனமும் உயர வேண்டும் என்ற ஒரே நேர்கோட்டுச் சிந்தனையுள்ள சிலர் அவனின் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.

அவர்களை மகிழ்விக்கும்படியான நல்ல சம்பளமும், வசதியான வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தமையால் அவர்களுக்கும் இங்கே வேலை செய்வது மகிழ்ச்சியே… இவை சூர்யாவின் நிறுவனத்தின் நல்ல நிலைக்குக் காரணியாக அமைந்துவிட்டது.

முதல் ஆறு மாதங்கள் வருமானம் அதிகமில்லை, அவன் சேமிப்பை வைத்தே செலவு செய்ய வேண்டிய நிலை. நாட்கள் செல்லச் செல்ல வியாபாரம் சூடு பிடித்தது. வீட்டிற்குக் கூடத் திரும்பாமல் வேலை பார்க்கும் சூழ்நிலையும் இருந்தது.

“மகிழ்ச்சியுடன் செய்தால் எதுவும் சுமையாகாது” என்று உணர்ந்தவன் அவன். ஆதலால் இவை அனைத்தையும் சந்தோஷமாகவே செய்தான், வருமானமும் பெருகியது…

தினமும் பணி முடிந்து வீட்டுக்குப் போனால் தான் அவனுக்குத் தலைவலி ஆரம்பம்…

“இந்தப் பொண்ண பார்க்கலாமா ப்பா?” என்று ஆரம்பித்துக் குடும்பம், படிப்பு, சொத்து என்று விளக்குவார்கள்.

அவன் அனைத்தையும் கேட்டு அவன் முடிவைச் சொல்வதற்கு முன்னமே, “ இல்லப்பா இது சரிவருமென்று தோணலை, நம்ம சீதா விட்டாளுங்களுக்கும், இந்தப் பொண்ணோட சித்தப்பாவோட மச்சானுக்கும் பகை” என்று முடித்துவிடுவார்கள்…

சத்திய சோதனை!

‘பேசாமல், ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்கோ டா ‘ என்று மனசாட்சி சிரித்தது…

இவர்கள் இப்படிச் செய்வது எத்தனையாவது முறை என்று எண்ணிபார்க்க கூட அவன் விரும்பவில்லை.

இதற்கும் மேல் பொறுமையில்லை அவனுக்கு… ஒரு முடிவுக்கு வந்தவனாய்,

“அம்மா, அப்பா உங்களுக்கு இரண்டு மாசம் டைம் தர்றேன். நீங்களா பார்த்துப் பொண்ணு அமையலைன்னா நானே பார்த்துக்குறேன், எனக்கு இதற்கும் மேலே காலம் தாழ்த்த முடியாது…” சற்று கறாராகக் கூறிவிட்டு அவனறைக்குச் சென்றுவிட்டான்.

ராஜம் ராமானுஜத்தை பார்த்தாள்.

“கேட்டியா, நான் அப்போவே சொன்னேன், அவனை ரொம்பச் சோதிக்காதேன்னு…”

“என்னங்க எல்லாப் பழியும் என் மேலே போடுறீங்க?”

“சும்மாயிரு டீ, எவ்ளோ நாள் தான் அவனும் எதிர்பார்த்திட்டே இருப்பான்? வயசாகுதுல்ல?” ராமானுஜம் சற்று நியாயத்தைப் பேசினார்.

“அந்தத் தரகர் கொண்டு வந்த ஜாதகத்தைப் பார்ப்போமா?”

“சரி நாளைக்கு நாள் நல்லா தான் இருக்கு, பார்த்துட்டு வர்றேன், சீக்கிரம் அவனுக்கு ஏற்பாடு பண்ணுவோம்.”

அடுத்த நாள் ஜோசியர் வீட்டிலிருந்து வந்ததும், “ராஜம், நம்ம பையனுக்குக் கல்யாண நேரம் வந்தாச்சு, அந்த ஜாதகம் ஒன்பது பொருத்தமிருக்கு, தரகருக்குப் போன் போடு…” ராமானுஜத்தின் குரலிலேயே தென்பட்டது அவரது மகிழ்ச்சி.

அதன்பிறகு மட மடவென வேலைகள் நடந்தன. இன்னும் இரண்டு நாளில் பெண் பார்க்க வருகிறோம் என்று பெண் வீட்டில் பேசி முடிவாயிற்று… சூர்யாவுக்கு போன் செய்து உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.

இவர்கள் பெண் பார்க்க வரும் அகல்யாவை பற்றி நாமும் பார்ப்போம்.

“அம்மா என்னமா, இப்பதான் படிப்பே முடிய போகுது, அதுக்குள்ள கல்யாணமா? ப்ளீஸ் மா எனக்கு வேலைக்குப் போகணும், அப்பாகிட்ட சொல்லுங்க மா…” அகல்யா அவள் அம்மாவிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்…

இவற்றைக் கேட்டுக்கொண்டே வந்தார் அவள் அப்பா, “என்ன சொல்லனும் என் கிட்ட?”

“அம்மா சொல்லுங்க…” என்று கிசுகிசுத்தாள் தன் அன்னையிடம்.

“ஏன் நீயே சொல்லேன்…” அவள் அப்பா கேட்க…

“அப்பா ஃப்ளேஸ்மன்ட்க்கு டிரை பண்றேன், அனேகமா கிடைச்சிடும். எனக்குக் கொஞ்சநாள் வேலை பார்க்கணும் ப்பா, ப்ளீஸ்…”

“இதோ பாருமா, எனக்கு நீ மட்டும் ஒரே பொண்ணாயிருந்திருந்தா, நீ கேட்ட மாதிரி நானும் கொஞ்சம் விடலாம், ஆனா உனக்கு ஒரு அண்ணன் இருக்கான், உனக்குக் கல்யாணம் நடந்தா தான் அவனுக்குச் செய்ய முடியும்…” உறுதியாகக் கூறிச் சென்றுவிட்டார்…

அகல்யா அவள் அண்ணன் அகிலனை முறைத்தாள்…

“ஏன் டா… கல்யாணம் கல்யாணம்ன்னு அலையுறே! உன்னால் எனக்கும் பிரச்சனை!”

“ஹி… ஹி…”

“உன்னை வச்சிட்டு நாங்க படுற கஷ்டம் போதாதா? புதுசா வேற ஒரு பொண்ணு வரவேண்டுமா?”

“ரொம்பப் பேசாதே டீ…”

“உனக்கு வெட்கமே இல்லையாடா, எப்படி அப்பா கிட்ட போய்க் கல்யாணம் பண்ணிவைங்கன்னு கேட்கிற!”

அகிலன் பதில் சொல்லாமல் தங்கையைக் கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்…

அகல்யாவுக்கு புரிந்துவிட்டது, அடுத்தது அடி தான் கொடுக்கப் போகிறான் என்று!

“சரி சரி, என் கதைக்கு வருவோம்… இப்போ நான் என்ன டா பண்றது?”

“வயசாகுதுல்ல, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ… என் வழில குறுக்கே நிக்காதே…”

“ஆமா இவரு பெரிய சிறுவாணி ஆறு, நான் அதுல குறுக்கே டேம் கட்டுறேன்? போவியா?”

“ஹா… ஹா…”

“டேய் அண்ணா, உனக்குச் சிரிப்பா இருக்கா டா? இவ்ளோ நாளும் இந்த வீட்ல நான் சொன்னதைத் தானே செஞ்சாங்க, இப்போ மட்டும் ஏன்டா?”

“இந்த விட்டுப் பிடிக்கிறதுன்னு ஒரு விஷயம் இருக்கு… கேள்விபட்டிருக்கியா, அதான் இது…”

“இந்த வாரம் ஊருக்கு வந்திருக்கவே கூடாது, தப்பு பண்ணிட்டேன்…”

அகிலன் சமாதானமாக, “எப்போ வந்தாலும் இதே கதை தான் அகல்யா. சின்னப்பிள்ளை மாதிரி பேசாதே, அம்மா அப்பா உன் நல்லதுக்குத் தான் சொல்றாங்க. சரின்னு சொல்லு…”

அகல்யா அமைதியாகிவிட்டாள்… இவர்களிடம் வாக்குவாதம் பண்ண முடியாது, நடப்பது நடக்கட்டும்…’நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்ற முடிவுக்குத் தன்னை வரவழைத்துக் கொண்டாள்.

அகல்யாவின் அப்பா கிரிதரன், அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர், பரம்பரை சொத்தின் மூலம் வந்த வயல்களில் விவசாயம் செய்துகொண்டிருப்பவர்…

நம்மாழ்வாரின் தீவிர பக்தர், தோட்டமே தனக்கு நிம்மதியை தருகிறது என்று அடிக்கடி கூறுவார்…

அவர் மனைவி மஹாலட்சுமி, இல்லத்தரசி… கவிதை, கட்டுரை, பிள்ளைகள், வீடு, தோட்டம், கோவில் இந்த வட்டத்திலிருப்பவர்…

தமிழ் கற்றுத்தருவதில் அதிக ஆர்வமுள்ளவர்…

அகிலன், கோவை விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றவன்.

சுயமாக ஐந்தாறு இடங்களில் ‘ஆர்கானிக் ஃபார்ம்ஸ்’ வைத்திருக்கிறான்… பண்பானவன், அழகன்…

இந்த வீட்டின் செல்ல மகள் தான் அகல்யா…

மாநிறம், களையான முகம், அப்பாவைத் தவிர யாருக்கும் பயம் கிடையாது, சென்னை பொறியியல் கல்லூரியில் நான்காம் வருடம் படிக்கிறாள்…

சென்னைக் கல்லூரியில் சேர வேண்டும் என்பது அகல்யாவின் விருப்பமே… அவள் உயிர்த் தோழி பூவிழிக்கு அந்தக் கல்லூரியில் ‘ஃப்ரீ ஸீட்’ கிடைத்தது என்பதனால், தன் தந்தையிடம் போராடி அதே கல்லூரியில் ‘மானேஜ்மண்ட் ஸீட்’ பெற்றுவிட்டாள். பூவிழியும் அகல்யாவும் மூன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாய் படித்தவர்கள். அகல்யா துறு துறு என்றிருப்பவள், பூவிழியோ மிகவும் அமைதி…

இருவரும் எப்படித் தோழிகளாயினர் என்று யோசிக்காதவர்கள் இருக்கவேமுடியாது…

மஹாலட்சுமி கூட எவ்வளவோ தடுத்து பார்த்தார், ஏன் இவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டுமென்று!

ஆனால் கிரிதரன் இந்தமுறை மகள் பேச்சுக்கே உடன்பட்டுவிட்டார். அகல்யாவுக்கோ பேரானந்தம்!

‘கட்டாயம் அப்பா விடமாட்டார், ஆனாலும் கேட்டுப் பார்ப்போமே’ என்று ஆரம்பித்தவளுக்கு, தான் கேட்டது நடந்தேவிட்டது என்பதை நம்பத்தான் முடியவில்லை.

அகிலனுக்கு ஆத்திரம், “ இந்த வீட்டில் வாய் இருக்கிற பிள்ளை மட்டும் தான் பிழைக்கிறது…” என்று கடுப்படிக்க, மஹாலட்சுமிக்கு சங்கடமாயிருந்தது.

பிள்ளைக்காக வருந்தியவள் அகல்யாவையும் விட்டுத்தராமல், “நாளைக்கு வேற வீட்டுக்குப் போகப் போறா, அவ இஷ்டப்படி இருக்கட்டும், நீ கொஞ்சம் விட்டுகொடுப்பா!”

“அவன் என்ன எனக்கு விட்டுக்கொடுத்தான்? என்னம்மா பிள்ளை மேல் பாசம் பொங்குதோ?”என்றாள் அகல்யா…

“எனக்கு இரண்டு பேரும் ஒன்றுதான், நீ அடுத்தப் பிரச்சனையை ஆரம்பிக்காதே… சரி சரி எப்போ கிளம்பணும் ஹாஸ்டலுக்கு?”

“ஆங்… அதைப் பத்தி பூவிழி கிட்ட தான் கேட்கணும், அவள பார்த்திட்டு வர்றேன் மா… பை… பை…”

போய்விட்டாள்…

“எப்போ பாரு அவளோடயே இருக்கணும் இவளுக்கு, கூடிய சீக்கிரம் நம்ம வீட்டிலேயே குடி வச்சிருவா போல.”

அவன் அம்மா கூறிய கடைசி வாக்கியம் ஏனோ அகிலனுக்கு பிடித்திருந்தது…

******

அகல்யாவை பெண் பார்ப்பதற்காக அவளது வீட்டிற்குச் சூர்யா, அவன் தங்கை சீதா, சீதாவின் கணவர் மாதவன், ராஜம், ராமானுஜம் என அனைவரும் வந்திருந்தனர்.

அகிலன், அவன் அம்மாவுடன் அனைவரையும் உபசரித்தபடியிருந்தான். கிரிதரன் மாப்பிள்ளை சூர்யாவுடன் சகஜமாக உரையாடினார்.

ஆர்ப்பாட்டமில்லாத அமைதி, அம்மா அப்பாவை எல்லா விஷயத்திலும் முன்னிறுத்தும் பணிவு ஆகிவற்றை, அவரின் அனுபவத்தால் நடிப்பில்லை என்பதை உணர்ந்தவருக்கு, தன் மகளுக்கு ஏற்ற மணாளன் தான் என்று நம்பிக்கை வந்தது.

மஹாலட்சுமிக்கும் அதே உணர்வே! ஆனாலும் ராஜம் எப்படிப்பட்டவர் என்பதை அவரால் யூகிக்க முடியவில்லை… போகப் போகத் தெரிந்துவிடும் என்று விட்டுவிட்டார். சூர்யா பேசுவதைக் கவனித்தபடியிருந்த அகிலனுக்கும் திருப்தியே.

சிறிது நேரத்தில் சீதா “அகல்யாவை பார்க்கலாமா? கூப்பிடுகிறீர்களா?” என்று கேட்க, அகிலன் அவன் தங்கையை அழைத்து வர அவள் அறைக்குச் சென்றான்.

“மாப்பிள்ளை சூப்பர், நல்லா பார்த்துக்கொள்…”

காதில் ஓதிவிட்டு நிமிர்கையில் வரவேற்பறைக்கு வந்துவிட்டார்கள்.

அனைவரையும் வணங்கிவிட்டு அகிலன் பக்கம் அமர்ந்துகொண்டாள். சூர்யா அவளைப் பார்த்த பார்வையிலேயே ராஜமுக்கு புரிந்து விட்டது…

லாவண்டர் நிற சாஃப்ட் சில்க் புடவையில், அளவான நகைகளுடன், அலங்காரம் அதிகமில்லாமலிருந்தவளை அனைவருக்கும் பிடித்திருந்தது.

ராமானுஜம் “என்னம்மா படிக்கிறே?” என்று கேட்க,

“பி.ஈ கடைசி வருஷம்”

“என் பையனும் பி.ஈ தான்… சொந்தமா சாஃப்ட்வேர் கம்பெனி வச்சி நடத்திட்டு இருக்கான்…” என்று அவர் பெருமையாகக் கூற, அருகிலிருந்த ராஜம் “சமைக்கத் தெரியுமா மா?” என்று கேட்க,

அகல்யா தயக்கமாக “இல்லை தெரியாது” என்று கூறினாள்.

“என் பொண்ணுக்கு சின்ன வயசிலிருந்தே சமைக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்… நல்லா சமைப்பா…” என்று பதிலுக்கு அவர் தன் பெண்ணைப் பற்றிப் பெருமையாகக் கூற,

“ஓ…” என்று கேட்டுக்கொண்டாள்.

சீதா எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை, அகல்யாவை நோட்டமிட்டுக் கொண்டாள்.

“இது தான் எங்க பையன் சூர்யா…” ராமானுஜம் அவனை அறிமுகப்படுத்தினார்.

நல்ல உயரம். வசீகரமான முகம். கம்பீரமான தோற்றம். அண்ணன் சொன்னது உண்மையே என்று எண்ணிக்கொண்டாள். உள்ளுக்குள் என்னவோ செய்தது.

மெலிதாகத் தலையசைத்து “ஹலோ…” என்றான் அவளிடம்!

“ஹலோ…” வார்த்தை வெளிவர வேலைநிறுத்தம் செய்தது.

ஓரக்கண்ணால் பார்க்க, அண்ணன் அகிலன் இவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடியிருந்தான்.

அகல்யாவுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

அவளுக்கு இது புது அனுபவம். இந்த வெட்கம் மிகவும் புதியது.

கிரிதரன் மஹாவுக்குமே இது புது அனுபவம், அகல்யா வெட்கப்பட்டு அவர்கள் பார்த்ததேயில்லை.

‘நம்ம பொண்ணா இது!?’ என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அகிலன் ‘ஆ…’ என்று அகல்யாவை ஒரு அதிசயப் பிறவிபோல் பார்த்துக்கொண்டிருந்தான். பெரியவர்கள் ஜாதகம், உறவுக்காரர்கள் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர்…

சூர்யாவுக்கு அகல்யாவை பிடித்திருந்தது.

இவள் தான் தன் வாழ்க்கைத் துணை என்று மனம் கூறியது.

அவன், தன் தந்தையிடம் ஏதோ கூற, ராமானுஜம் “பையன் பொண்ணுகிட்ட தனியா பேசலாமான்னு கேட்கிறான்…” என்று கேட்டார்.

கிரிதரன் “அகிலன், முன்னாடி தோட்டத்தில் அவங்களுக்கு இரண்டு சேர் போடுப்பா…” என்று கூற,

மஹா அவளுடன் தோட்டம்வரை வந்தவர், “நீ வாயாடித் தானென்று முதல் நாளே காமிக்காதே” என்று கூறிவிட்டு அகல்யாவின் கண்களைச் சந்திக்காமல் உள்ளே வந்துவிட,

‘கிரிய கூடச் சமாளிச்சிரலாம், ஆனால் இந்த மஹா இருக்கிறாளே…’ அகல்யா தனக்குள்ளாகப் புலம்பிக்கொண்டிருக்கும் போதே சூர்யா வந்துவிட்டான் அவளிடம்…

இருக்கையில் அமர்ந்தவன், தோட்டத்தைச் சுற்றி முற்றிப் பார்த்தான்.

“தோட்டம் அழகாயிருக்கு”

“தேங்க்ஸ்…”

“உனக்குக் கார்டனிங் பிடிக்குமா?”

“ஆமா ரொம்ப, அப்பா, அண்ணன் செய்றத பார்த்து வந்தது…”

“எனக்கும் பிடிக்கும், ஆனால் நேரமில்லை…” என்று கூற, கேட்டுக்கொண்டாள். பின் அவனே,

“பிஈ ல என்ன பிரான்ச்?” என்று கேட்க,

“ஈ சி ஈ…” என்று கூறினாள். அவளால் நிமிர்ந்து அவனைப் பார்க்க முடியவில்லை. வெட்கம் தடுத்தது.

“நல்லா படிப்பியா?” எனக் கேட்டுச் சிரித்தான்.

அகல்யா அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்…

‘ஏன் இவரு ஃபர்ஸ்ட் ராங்க் எடுக்கிற பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்ன்னு வேண்டிட்டிருப்பாரோ…’

அவள் அம்மா கூறியது நினைவு வந்தது, ‘கொஞ்ச நேரம் அடக்கிவாசி…’ ஆனாலும் அவனது அந்தப் புன்னகை அவளை ஈர்த்தது.

“ஏதோ படிப்பேன், ஏன் கேட்டீங்க?”

“நானும் அப்படித்தான்…” என்று முறுவலித்தான்.

சூர்யாவுக்கு அவளது பேச்சு, செய்கை எல்லாம் பிடித்திருந்தது… தலை குனிந்திருந்தவளையே பார்த்துக்கொண்டிருந்தான்… அகல்யாவோ இதை எதையும் அறியாமல் அவனின் அடுத்தக் கேள்விக்குக் காத்துக் கொண்டிருந்தாள்…

“எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது, உனக்கும் இஷ்டமிருந்தா, அம்மா அப்பாகிட்ட சொல்றேன்…” சூர்யா இயல்பாகக் கூற அகல்யா விழித்தாள். அவள் செமஸ்டர் பரிட்சையில் கூட இந்த அளவுக்கு யோசித்ததில்லை, விடைத்தெரியாமல் விழித்ததில்லை…

‘என்ன பதில் சொல்றது?’

அவன் சிறிது நேரம் இவள் பதிலுக்காகக் காத்திருந்துவிட்டு…

“யூ கேன் டேக் யுவர் டைம், உடனே முடிவெடுக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்… இது என் பிசினஸ் கார்ட், வச்சிக்கோ” என்று அதைக் கொடுத்தவன் கடமை முடிந்தது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டான்…

அங்கேயே நடைபயின்று கொண்டிருந்தவளை அகிலன் வந்து வீட்டிற்குள் அழைத்துச்சென்றான்… இவளையும் பார்த்து,

“போயிட்டு வர்றோம் மா, உங்களை எல்லாம் சந்தித்ததில் மகிழ்ச்சி…” ராமானுஜம் அனைவரின் சார்பாகவும் விடை பெற்றுக் கொண்டார்… அவர்களை அனுப்பிவிட்டு மொத்த குடும்பமும் அகல்யாவை சூழ்ந்துகொண்டனர்.

“என்னடி பேசின…” மஹா ஆர்வமாகக் கேட்க,

“என்ன அகல்விளக்கு, மாப்பிள்ளை எப்படி?” என்று அகிலன் கேட்க,

“உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா ம்மா” என்று கிரிதரன் கேட்க,

அகல்யா யாருக்கும் பதில் கூறவில்லை

‘என்னவென்று சொல்ல?’ அவளுக்குப் புரியவில்லை.

அவன் கார்டையும் யாருக்கும் காட்டாமல் மறைத்துக்கொண்டாள்…

“அவங்களும் இன்னும் இரண்டு நாளில் சொல்றேன்னு சொல்லிருக்கிறார்கள்” என்று அவளது அப்பா கூற,

“அது என்ன இரண்டு நாள், நமக்கு எவ்ளோ பதட்டமாயிருக்கும்? சீக்கிரம் சொன்னா தானே நிம்மதி?” என்று மஹா குறைபட்டார். ஆனால் அவர்களின் இரண்டு நாள் முடிவு அகல்யாவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை…

அன்று இரவு முடியாத இரவாய் அமைந்துபோனது அவளுக்கு, உறக்கம் வருவேனா என்றிருந்தது கூடப் பரவாயில்லை, ஆனால் சூர்யாவின் நினைவே அவளை ஆக்கிரமித்திருந்தது.

‘அட என்னடா இது, சினிமால பார்க்குற மாதிரி எல்லாம் நமக்கும் நடக்குது?’

அவளது குடும்பத்தினர் அவனைப் பற்றியே பேசியதன் விளைவு…

என்ன பதில் சொல்வது?

அவன் வேண்டாம் என்று சொல்ல அவளுக்கு ஒரு காரணம் கூடக் கிடைக்கவில்லை…

இன்னும் இரண்டு நாளில் கல்லூரிக்குக் கிளம்ப வேண்டும், அதற்குள் அவனிடம் பேசிப்பார்க்கலாம், முடிவெடுத்தபின் தூங்கி போனாள்.

அடுத்த நாள் மதியம் பூவிழியை பார்க்கப் போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு, காரில் அவனது நிறுவனத்துக்கே சென்றுவிட்டாள்.

‘சம்மதமே சொல்லலை அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே அகல்யா?’

கொக்கரித்த மனதை, ‘வந்த வேலையைச் செய்’ என்று அடக்கி, அவன் மொபைலுக்குப் போன் செய்தாள்…

“எஸ் சூர்யா ஹியர்…”

“ஹலோ, நான்… நான் அகல்யா… நேற்று மீட் பண்ணோமே”

“ஓ ஹாய்… ஜஸ்ட் எ மினிட்… கைஸ் ஐ வில் பி பேக் சூன்…” என்று யாரிடமோ கூறிவிட்டு,

“சொல்லு அகல்யா” என்று கூற,

“நான் உங்களை மீட் பண்ணவேண்டும்…”

பேசிக்கொண்டே கம்பெனி வாசலுக்கு வந்துவிட்ட சூர்யாவை காரிலிருந்து பார்த்தபடியிருந்தாள்.

படு ஸ்டைலாக, சிரித்தபடியே நின்று பேசிக்கொண்டிருந்தான்.

“நான் இப்போ முக்கியமான மீட்டிங்ல இருக்கிறேன், அப்புறம் பார்க்கலாமா?”

“இல்ல உங்ககிட்ட பேசி ஒரு முடிவுக்கு வரலாமென்று தான் இங்கே…” அவளுக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது.

“அப்படியா? அப்போ சரி… எங்கே வரணும் சொல்லு?” என்று அவன் உடனே கேட்க,

‘இப்போ மட்டும் மீட்டிங் இல்லையா டா…’ மனசாட்சி அவனைக் கேள்வி கேட்டது.

“நீங்க ரொம்பத் தூரம் வர வேண்டாம், உங்க வலது பக்கத்தில் ஒரு ஸான்ரோ கார் இருக்குல, அதுல தான் இருக்கேன், வாங்க…”

சுற்றி முற்றிப் பார்த்தான். காரில் அவளைக் கண்டதும், மென்மையான புன்னகையைத் தவழவிட்டபடி காரை நெருங்கினான்.

காரின் முன் கதவைத் திறந்துவிட்ட அகல்யா அவனை வண்டியில் ஏறிக்கொள்ளுமாறு சைகை செய்தாள். பின்னர் இருவரும் சிறிது தூரத்தில் உள்ள கோவிலின் முன் காரிலிருந்த படியே பேசினர்,

“என்ன அகல்யா? என்ன பேசவேண்டும்?”

சிறிது தயங்கிவிட்டு, “நான் நேத்து உங்ககிட்ட பதில் சொல்லலை…”

“ம்ம்…”

“எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்ன்னு அப்பா கிட்ட சொன்னேன்…” அவனிடம் ஒரு குண்டைத் தூக்கிப் போட,

சூர்யாவின் மனதோ ‘இதுவும் போச்சா டா? முப்பத்தியஞ்சு வயசு கன்ஃபர்ம்ட்…’ என்ற நிலையில் இருந்தது.

“ஆனா அவர் ஒத்துக்கலை…”

“சோ?” அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.

“உங்களை வேணாம்னு சொன்னாலும் வேற மாப்பிள்ளை பார்க்கத் தான் போறாங்க…”

“ம்ம்…” என்று ம் கொட்டியவன், ‘என்னதான் சொல்ல வர்றா?’ என்று அவனது மனசாட்சி கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தது.

“சோ, உங்களுக்கே ஓகே சொல்லலாமென்று…” என்று அவள் இழுக்க,

‘இப்படியொரு ஓகேவ உலகத்தில் எந்தப் பொண்ணும் சொல்லிருக்காது சாமி!’ என்று நினைத்துக் கொண்டு சூர்யா சிரித்தான்…

“நல்லா யோசிச்சிக்கோ அகல்யா…” என்று அவன் கூற,

“நல்லா தான் யோசித்து இந்த முடிவைச் சொல்றேன்…” என்றவள் “அப்பாகிட்டயே முதலில் சொல்லிருப்பேன், ஆனால் நீங்க கேட்டீங்களே, அதான் உங்ககிட்ட நேரில் சொல்லலாமென்று…” என்று தயங்க,

“ஒகே, தென்… என் வீட்டில் சொல்றேன்…”

“ம்ம்… சரி…”

அவனை மறுபடி அவன் கம்பெனியில் இறக்கிவிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தாள்… வந்ததும் மஹா “ஏன் டீ இவ்ளோ லேட்? ரெண்டு பேரும் படிச்சிட்டு இருந்தீங்களா?” என்று கேட்க,

‘யாரு ரெண்டு பேரு? ஓ… பூவிழி…’ என்று நினைத்துக்கொண்டே,

“எங்க மா… அந்தப் பூவிழி நேத்தே படிச்சிட்டு என்கூடப் பேசிட்டே இருக்கா…”

“ஓ… அவ அப்படியெல்லாம் செய்வாளா…”

“ஆமா மா, சரியான பொறாமை பிடிச்சவ, நான் அவளைவிட அதிகம் மார்க் வாங்க கூடாதுன்னு என்னல்லாம் செய்றா!” சகட்டு மேனிக்கு அவிழ்த்து விட,

“என்னது?” என்று அதிர்ந்து மகா கேட்க,

“சினிமாக்குப் போலாம், நெல்லையப்பர் கோவிலுக்குப் போலாம்னு என்னைத் துளைத்து எடுத்திட்டா மா! அகிலனும் அவளும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி இருக்காங்க…”அகல்யா தன் இஷ்டப்படி சுற்றிக் கொண்டிருக்க, “ஓஹோ அப்படியா டீ…”என்ற குரல் கேட்டது. ஆஹா இது பூவிழியின் குரலாயிற்றே என்று தோன்றும் போதே “எம்பேர ஏன் டீ இழுக்குற?” என்று அகிலனும் கேட்க… வசமாக மாட்டிக்கொண்டாள் அகல்யா.

“எங்க டீ போன?… உண்மைய சொல்லு…” என்று மஹா மிரட்ட,

“அதுவா… அது…” அவள் மென்று விழுங்கினாள்.

“அம்மா நாகர்கோவில் பைபாஸ்ல எஸ்எஸ் கம்பெனி பக்கம் நம்ம கார பார்த்ததா என் ஃபிரண்டு சொன்னான்…” அகிலன் வாகாகப் போட்டுக்கொடுக்க,

“திருநெல்வேலில உனக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் டா? ஒருத்தனுக்கும் வேலை வெட்டி இல்ல போல…” அகல்யா கடுப்படித்தாள்.

“முதல்ல எனக்குப் பதில் சொல்லு, நீ ஊர் சுத்த என் பேர ஏன் டீ சொன்னே …” பூவிழி மையமாகப் பிடித்துக்கொள்ள, “அதானே…” இது அகிலனே தான்.

‘ஒண்ணுகூடிட்டாய்ங்கயா… ஒண்ணுகூடிட்டாய்ங்க…’ என்று மனசாட்சி வடிவேலுவாகப் புலம்பியது.

அகல்யா தப்பிக்க வழி இல்லாமல் நடந்தவற்றைக் கூறி முடித்தாள். அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி…

“இப்போ தான் மாப்பிள்ளை வீட்டிலிருந்தும் சம்மதமென்று போன் வந்தது” என்று மஹாவும் மகிழ்ச்சியாகக் கூறினார்.

இன்னும் இரண்டு வாரங்களில் நிச்சயதார்த்தம் என்று உறுதியாயிற்று…

******

சென்னை

சம்மதம் என்று சொன்னாலும் கல்யாண கனவு காண ஆரம்பித்தாள் என்றெல்லாம் சொல்ல முடியாது… ஏதோ ஒரு புது அனுபவம்… அவ்வளவே!

கல்லூரியில் கடைசி வருடம் பிராஜக்ட் தான். தன் பிராஜக்டில் நன்றாக வேலை செய்யும் பூவிழி, கார்த்தி, ப்ரியா, நந்தினி ஆகியோரும் இருந்ததால் தனக்கு அதிகக் கவலை இல்லை, என்று நினைத்துக்கொள்வாள்… பிராஜக்ட் தான் என்பதால் கல்லூரி நேரம் குறைவே, பொழுது நன்றாகவே போனது.

‘நிச்சயதார்த்த தேதிக்கு இரண்டு நாள் முன்பே ஊருக்கு வந்துவிட வேண்டும்’ அப்பாவின் கட்டளையை மீறும் எண்ணம் அவளுக்கில்லாததால், தனக்கும் பூவிழிக்கும் டிக்கெட் வாங்கியாயிற்று…

கார்த்தித் தான் பொழுது முழுவதும் கேலி செய்தான்,

“வர வர நீ சரி இல்லை அகல்யா…”

“என்ன…”

“ஆள் மட்டும் தான் இங்கே இருக்கே, நினைப்பு எல்லாம் வேற எங்கேயோ இருக்கு…”

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை…” மீசையில் மண் ஒட்டவே இல்லை என்ற கணக்காக அவள் கூற,

“அப்படியா? எங்கே இப்போது நான் சொன்ன கான்சப்ட்ட மறுபடியும் சொல்லு பார்ப்போம்…” என்று அவன் கிடுக்கி பிடி போட,

‘எப்போ சொன்னான்?’ என்று அவள் யோசித்ததிலேயே கூட்டம் ஆர்ப்பரிக்கத் துவங்கியது.

“பார்த்தியா!”

அந்தக் கோஷ்டியில் உள்ள அனைவரும் அதன்பிறகு அவளை ஒரு வழி செய்துவிட்டார்கள்…

“கார்த்தி, உன்னச் சுத்தி ஒரு கூட்டம் இருக்குன்னு பேசுறியா? எனக்கும் ஒரு காலம் வரும்…”

“ஹா ஹா” என்று அவன் சிரிக்க,

“நான் கிளம்புறேன்…” ரோஷமாக அவள் கிளம்ப,

“ஏன் அவரு போன் பண்ணுவாரா இப்போ?” அதற்கும் அவன் கிண்டல் செய்ய, மறுபடியும் சிரிப்பொலி.

சூர்யா தினமும் அவளுக்குப் போன் செய்வான்… ‘என்ன பண்றே, சாப்பிட்டியா, எக்ஸாம் எப்போ’ என்பது போல் சிறு சிறு உரையாடல்கள்…

சங்கீத ஸ்வரங்கள்

ஏழே கணக்கா

இன்னும் இருக்கா

என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு

அங்கே இரவா

இல்லை பகலா

எனக்கும் மயக்கம்

3 thoughts on “Ani Shiva’s Agalya 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!