4

சூர்யா வீட்டில் தான் மற்ற சம்பிரதாயங்கள். சூர்யாவின் அறை பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது…

பத்து நிமிடக் காத்திருப்பே ஒரு யுகமாகத் தோன்றியது அவனுக்கு…

அகல்யா வந்தாள்…

மல்பரி சில்க் புடவையில், தலை நிறைய மல்லிகைப்பூவுடன், அதீத ஒப்பனையில்லாமலேயே தேவதை போலிருந்தாள்.

கதவைப் பூட்டியபின், தலை குனிந்து நின்றிருந்தவளை பார்த்து ரசிக்க ஆரம்பித்தான்…

தனிமை, மலரின் மணம், அவள் வெட்கம் அவனை என்னென்னவோ செய்யத் தூண்டியது…

அகல்யா அவனை நிமிர்ந்து பார்க்கவே சில நிமிடங்கள் யோசித்தாள்…

இப்படி இருந்தால் சரிவராது என்று நினைத்தவன், அவளை நெருங்கி, இரண்டு கைகளால் மென்மையாக அவள் முகத்தைப் பற்றி நிமிர்த்தி, “என்ன அமைதியா இருக்கே?” என்று கிசுகிசுப்பாகக் கேட்க,

“ ம்ம்… என்ன சொல்லனும்?”அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை…

“எதுவும் சொல்ல வேணாம்… செஞ்சா போதும்…” காதில் கிசுகிசுத்தான்… அதற்கும் மேல் அங்கே இருவருக்கும் பேசும் சந்தர்ப்பம் இல்லை…

மலராத பெண்மை மலரும்!

முன்பு தெரியாத உண்மை தெரியும்!

மயங்காத கண்கள் மயங்கும்!

முன்பு விளங்காத கேள்வி விளங்கும்!

*****

அகல்யா காலையில் கண்விழித்தபோது எங்கேயிருக்கிறேன் என்பதை உணரவே சிறிது நேரம் ஆனது… சூர்யா இன்னும் விழிக்கவில்லை… அவசரமாகத் தன் குளியலை முடித்துவிட்டு, ஒரு பட்டுச் சுடியை அணிந்து கொண்டாள்.

சேலை கட்ட வேண்டுமோ? யோசித்தவள்… கட்ட தெரிந்தால்தானே என்று தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். முதலில் மடிக்கத் தெரிந்துக் கொள்வோம் என்று முடிவு செய்து கொண்டவள், முன்னர் இவள் மஹாவை இவள் படுத்திய பாட்டில்,

“நீ தயவு செய்து சேலை கட்டாதே, சுடியே போடு” என்று விட்டுவிட்டார். திருமணத்திற்கு பிறகு அணிவதற்கு நிறைய சல்வாரே வாங்கியும் கொடுத்திருந்தார்.

காபி குடிக்க வேண்டும் போல இருந்தது அகல்யாவுக்கு. தனியே கீழே போலாமா என்று சந்தேகமாக இருந்தது. சூர்யாவை எழுப்பிப் பார்த்தாள், அவன் அசையக் கூட இல்லை.

இப்போதே மிகவும் தாமதமாகிவிட்டது… இனியும் போகாமலிருப்பது நல்லதல்ல என்றெண்ணிக் கொண்டு, நாமாவது போவோம் என்று கீழிறங்கி வந்தவள், தனது மாமியாரைத் தேடிப் போனாள்.

ராஜம் கிட்சனில் சமைத்துக்கொண்டிருந்தார். மேல் வேலைக்கு வரும் லட்சுமி, காய் நறுக்கியபடி இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்…

“என்னம்மா சீக்கிரம் எந்திருச்சிட்டே?”என்று ராஜம் இவளைப் பார்த்துக் கேட்க, இவள் கடிகாரத்தை பார்த்தாள்.

மணி எட்டரை!

அசடு வழிந்தபடியிருந்தாள் அகல்யா.

“சூர்யா இன்னும் தூங்குறானா?” வேலை பார்த்தபடியே ராஜம் கேட்க,

“ஆமா அத்தம்மா…” என்று தலையாட்டினாள். கேள்வி முடிந்ததும் ராஜம் மறுபடி அடுப்பில் கிண்ட ஆரம்பித்துவிட்டாள்.

அகல்யா அவரை நெருங்கி “அத்தம்மா எனக்குக் காபி வேணும்…” என்று கேட்க,

“அப்படியா? நீ போய் உக்காருமா” என்று கூறியவர் லட்சுமியிடம் திரும்பி… “லட்சுமி அந்த வேலையை முடிச்சிட்டு அகல்யாவுக்கு காபி போடு…” என்று கூற, காபி வந்தது லட்சுமியிடமிருந்து, ஒரு மணி நேரம் கழித்து…

‘சின்ன சின்ன வேலை செய்யக் கத்துக்கோன்னு சொன்னியே மா? கேட்கலையே நான் ! எனக்கு வேணும்…’ அகல்யாவின் மைண்ட் வாய்ஸ் அவளுக்குக் கேட்டது…

பூஜை முடித்து அங்கு வந்த அவள் மாமனார், இவளைக் கண்டதும்,

“என்ன மா சீக்கிரம் கிளம்பிட்டியே கோவிலுக்கு…”

“கோவிலுக்குப் போறோமா?” ஆச்சரியமாக அவள் கேட்க,

“ஆமா, நம்ம குலதெய்வ கோவிலுக்கு… ராஜம், நீ சொல்லலை?” மனைவியைப் பார்த்து அவர் வினவ,

“மறந்துட்டேங்க…” வெகு இயல்பாகக் கூறினார் அவர்.

‘இந்த விஷயம் மறக்குமா’ அகல்யாவுக்கு ஏதோ வித்தியாசமாய் படவும், சூர்யாவை கிளம்ப சொல்றேன் என்று மாடிக்கு ஓடி வந்துவிட்டாள்…

தன் மேல் ராஜமிற்கு ஏதோ கோபம் என்று புரிந்து கொண்டவள், அதைப் பத்தியே எண்ணிக்கொண்டிருக்க,

“என்ன தனியா விட்டுட்டு எங்கே டீ போன?” என்று அவளை வளைத்துக்கொண்டான்…

“அய்யோ, என்னது இது… விடுங்க…” அவனிடமிருந்து அவள் நழுவ செய்த வேலைகளெல்லாம் அவனிடம் பலிக்கவில்லை.

அவன் பேசவில்லை, எப்போதும் போல் செயல் மட்டும் தான்…

“கீழே எல்லாரும் ரெடி, கோவிலுக்குப் போறோமாம், ப்ளீஸ் விடுங்க…” அவள் கெஞ்ச,

“ம்ம்… சரி சரி… பொழைச்சி போ…” பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தான் சூர்யா.

இருவரும் தயாராகி கீழே வந்தனர்…

முதலில் கோவில், பின் அகல்யா வீட்டுக்குப் போகலாம் என்று சூர்யா முடிவெடுத்ததும், ராஜம், “கோவிலுக்குப் போனா, நம்ம வீட்டுக்குத் தான் நேர வரணும். வேற எங்கயும் போகக் கூடாது…” கறாராகப் பேசினார்.

சூர்யாவுக்கு வினோதமாக இருந்தது…

ஏன்? எவ்வளவு முறை வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறோம்… அவனுக்கு வாதாட விருப்பமில்லை…

“ஆமா அகல்யா, நாளைக்கு நாம உன் வீட்டுக்குத் தானே போறோம்? டூ டேய்ஸ் ஸ்டே வேற… அத்தம்மா மாமாவும் நம்ம கூடக் கோவிலுக்கு இப்போ வரத் தான் போறாங்க, என்ன?”

அவள் சரி என்று தலையசைத்தாள்…

அனைவரும் கிளம்பி காரில் ஏறும் வரை ஒன்றும் கூறாத ராஜம், கார் கிளம்பியதும் “ஏன் மா கல்யாணம் ஆன பொம்பளைங்க கோவிலுக்குப் புடவை தான் கட்டணும்னு உனக்குத் தெரியாதா?” என்று அகல்யாவிடம் கேட்டாள்…

திருதிருவென விழித்தபடியிருந்த அகல்யா,

“எனக்குப் புடவை கட்ட தெரியாது அத்தம்மா…” சிறு குரலில் கூற,

சூர்யா சமாதானமாக, “விடுங்க மா, அவளுக்கு எது வசதியோ அப்படியே இருக்கட்டும்”

ஏனோ ராஜமின் இந்தக் கேள்விகளும், தோரணைகளும் அகல்யாவுக்கு கலக்கமாகவே இருந்தது… சூர்யாவின் கைகளைப் பிடித்தபடியிருந்தாள்.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வரும் பெண் ஒரு நெல் நாத்து போல், முளைத்த இடத்தில் தனக்கு கிடைக்கும் அக்கறையும், பேணுதலையும் போலவே சேரும் இடத்திலும் எதிர்பார்க்கும். அந்த அளவிற்கு முடியவில்லை என்றாலும் சமாளித்து, அனுசரித்து கொண்டு செல்பவர்களையே கடவுளும் ஆசிர்வதிப்பார்…

சூர்யாவின் மேல் உள்ள காதலும், புதுமணப்பெண் என்ற நிலையும் இருந்ததால் அகல்யாவால் ராஜத்தின் உதாசினத்தை விட்டுத்தள்ள முடிந்தது. இதுவே தொடர்கதையானால் என்னவாகுமோ?

கோவிலில் தன் குடும்பத்தினரை கண்டவளுக்கு மகிழ்ச்சியே… நடுவில் ஒரு பதினான்கு மணி நேரம் அவர்களைப் பிரிந்திருந்ததே, மாதங்கள்போல் தோன்றியது…

மஹா, அகல்யாவின் கைகளைப் பிடித்தபடியே கோவிலில் வலம் வந்தாள்.

சிறிது தனிமை கிடத்ததும், “என்ன மா ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”

“ஒண்ணுமில்லையே…” சிரித்தபடி அகல்யா கூற மஹாவுக்கு நிம்மதியானது.

கோவிலின் பூஜையை முடித்தபின், கிரிதரன் அடுத்த நாள் மறுவீட்டுக்கு சூர்யா மற்றும் அவன் பெற்றோரை முறையாக அழைத்தார்.

“சீதா வீட்டுக்கும் சொல்லிட்டோம், கட்டாயம் வர்றேன்னு சொல்லிருக்காங்க” என்றார் மஹா ராஜமிடம்… ராஜமுக்கு தன் பெண்ணை முன்னிருத்தி சொன்னதில் மகிழ்ச்சி…

கோவிலிலிருந்து வீட்டுக்குத் திரும்பியதும், சூர்யா அகல்யாவை கைப்பிடியிலேயே வைத்திருந்தான்… அக்கினி வலம் வரும்போது எப்படி கெட்டியாகப் பிடித்திருந்தானோ அதே போல்… தோட்டத்தைக் காட்டுறேன், பழைய போட்டோஸ் காட்டுறேன் என்று எல்லா காரணத்தையும் சொன்னான்…

அகல்யாவுக்கோ சங்கடம், அதுவும் அத்தை மாமா முன்!

“சூர்யா கைய விடுங்க, நான் எங்கையும் போகமாட்டேன்…”

காதில் கிசுகிசுத்தாள்…

அவன் காதே கேட்காதவன் போலிருந்தான்…

இரவில், “ஏன் அகல்யானு உனக்குப் பேரு வச்சாங்க?” அவளை அணைத்துக் கொண்டு அவன் கேட்க… அவள் வெட்கச் சிரிப்போடு,

“அகல்யானா ‘களங்கமற்றவள்’ ன்னு அர்த்தம்” என்று கூற…

அவன் “அப்படியா… அப்ப ரொம்ப நல்ல பொண்ணு தான் நீ” என்று விட்டு மேலும்,

“புருஷன் சொன்னதை எல்லாம் கேட்கணும்னு உங்க வீட்டில சொல்லிக் குடுத்தாங்களா?” அவன் சில்மிஷமாகக் கேட்டான்.

“ம்ம் சொன்னாங்க…”

“சரி அதை இப்போ டெஸ்ட் பண்ணி பார்க்குறேன்…”

“கால் பிடிச்சிவிடு…” செய்தாள்,

“கை?” பிடித்துவிட்டவள்,

“அகல்யா ‘ஐ லவ் யூ’ போலோ…” குரலில் குறும்பு வழிந்தது. அதற்குப் பதில் சொன்னவளை,

“இன்னிக்கு இது போதும்… இதுலையே டையர்ட் ஆயிட்டனா எனக்குக் கஷ்டம்!” என்று கிசுகிசுப்பாகக் கூறிக்கொண்டான்.

அடுத்த நாள், மறுவீடு…

இன்றைக்காவது ராஜம் தன்னிடம் எந்தக் குறையும் கண்டுபிடிக்கக் கூடாது என்று முடிவெடுத்தவள், புடவையா நானா என்று பார்த்துவிடுவோம் என்று கட்ட ஆரம்பித்தாள்…

ஒரு மணி நேரமாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை! அவள் அண்ணன் அகிலன் பத்து தடவைக்கு மேல் ‘கிளம்பியாச்சா’ என்று போன் செய்துவிட்டான்…

அய்யோ வேறு வழியே இல்லை, சுடியே போடலாம் என்று எண்ணுகையில், சூர்யா வந்தான்.

“என்னமா, ஏன் அந்தப் புடவையை இந்தப் பாடு படுத்துற?” அவளது கோலத்தைப் பார்த்துச் சிரித்தவன்,

“லேட் ஆயிடிச்சு, எனக்குக் கட்ட வரலை, கொஞ்சம் உதவி பண்ணுங்களேன், ப்ளீஸ்…” பாவமாக அவள் கேட்க,

“நான் சும்மா எல்லாம் உதவி பண்ண மாட்டேன், ஓகே வா?” செல்லமாக அவன் மிரட்டினான்.

“சரி போங்க, நானே பார்த்துக்குறேன்…” அவளும் மிஞ்ச,

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது?” அவளிடம் அதற்கான சன்மானத்தை வாங்கியவன், தன்னால் ஆன முயற்சியை ஆரம்பித்தான்.

மேலும் பத்து நிமிடம் சென்றது… பாதி கட்டியாகிவிட்டது…

புடவையைச் சரி செய்கிறேன் என்று அவளை அணைத்தபடி இருந்தவன்,

“இப்போவே போகணுமா? நாம ரெண்டு பேரும் வேணா மத்தியானம் போலாமா?” கொஞ்சினான்… வேறு வினையே வேண்டாம் என்று அவனை இரண்டு அடி பின்னால் தள்ளிவிட்டவள், மறுபடியும் சுடிதாரை தேட ஆரம்பித்தாள்…

சூர்யாவோ, “சரி வா நான் கட்டி விடுறேன், புடவை தான் எனக்கும் வசதி” என்று அழுச்சாட்டியம் செய்தான்…

ஏனோ தானோ என்று ஒரு வழியாகக் கட்டிமுடித்தனர்…

தான் மாட்டிய எட்டு பின்களை சரி பார்த்தவள், தன் இடுப்பிலிருந்து சூர்யாவின் கையைத் தட்டிவிட்டாள்…

“கிளம்புங்க லேட் ஆயிடிச்சு” என்று அவள் சிணுங்க, அவனோ உற்சாகத்தின் பிடியில் இருந்ததாள்,

“இருடி ஃபைனல் செக் பண்ணிட்டிருக்கேன்ல?”

அகிலனிடம் ரெடி என்றதும் அவனே வந்து எல்லாரையும் அழைத்துச் சென்றான்…

மிகசிறப்பாக நடந்தது மறுவீட்டு விருந்து.

ராமானுஜம் ராஜமும் சீதாவுடன் பேசியபடி இருந்தனர்…

சீதாவை தேடி சென்ற அகல்யா, “நல்லா இருக்கீங்களா? வீட்டுக்கு வாங்க”என்று அழைத்தாள்… விருந்து முடிந்து அனைவரும் சென்றதும், சூர்யாவுக்கு தன்னுடைய வீட்டைச் சுற்றி காட்டினாள்…

மனதுக்கு பிடித்தவனாயிருந்த சூர்யாவுடன் தன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் இருக்கும் என்று அகல்யா நூறு சதவிதம் நம்பினாள்… எல்லா கதைகளையும் பேசினார்கள். அவன் இவளை நிறைய பேச விட்டு ரசித்தான்…

“அகல்யா, நிறைய புக்ஸ் படிப்பே போல?”

“ஆமா, சப்ஜெக்ட் புக்ஸ் தவிர எல்லாம் படிப்பேன்…”

“அப்போ நீ நம்மாளு…” அவளைக் கட்டித்தழுவினான்.

“போதுமே உங்களுக்கு…” சற்று தள்ளி அமர்ந்துக்கொண்டாள்…

மறுபடியும் எதையோ சல சல என்று பேச ஆரம்பித்தவளை…

“ உனக்கு வாய் வலிக்காதா மா?”

“ஏன் வலிக்கணும்?”

“இவ்ளோ பேசுறியே?”

“என்ன கிண்டலா? நீங்கத் தானே அந்த டாபிக் ஆரம்பிச்சீங்க?”

“ஆமா, ஆனா இந்த மணிரத்தினம் படம் மாதிரி ஒரு லைன்ல பதில் சொல்லேன்…”

“எனக்கு அப்படியெல்லாம் சொல்லத் தெரியாது”

“அப்போ கிட்ட வாடீ, பாவா சொல்லித் தர்றேன்…” என்று அவளை இழுத்துக்கொண்டான். தங்கள் திருமணம் முடிந்து இரண்டாவது வாரமே சூர்யா அலுவலகம் கிளம்பிவிட்டான்

“நான் மட்டும் ஒரு மாசம் லீவ் போட்டிருக்கேன்?”

“சாயங்காலம் சீக்கிரம் வந்துருவேன் அகல்யா…” அவளைக் கட்டிக்கொண்டபடியே அவன் ஏக்கமாகக் கூற… அவன் இல்லாமல் எப்படி தனியே இந்த வீட்டில் இருப்பது என்ற பயம் பரவியது அவளது மனதினுள்.

“இன்னும் ஒரு வாரம் இருங்க, ப்ளீஸ்.”

“இல்ல மா, முக்கியமான ரெண்டு பிராஜக்ட் ரிலீஸ் இந்த வாரம், நான் கட்டாயம் அங்க இருக்கணும்…”

கிளம்பிவிட்டான்…

பொழுதை நெட்டித்தள்ளினாள்… அகிலன், அம்மா, பூவிழியுடன் போன், அவன் ரூமை சீர்செய்வது என்று பொழுது போனாலும் நகர்வேனா என்றிருந்தது…

இது சரிப்படாது என்று எண்ணியவள்…

சூர்யாவுக்கு வாட்ஸ்அப்பில் அம்மா வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன், என்று மெசேஜ் செய்தபின், ராஜமிடம் சென்றாள்.

“அத்தம்மா எனக்குக் கொஞ்சம் பிராஜக்ட் வேலை இருக்கு, எங்க வீடுவரை போகணும்…”

“ஓ, போய்ட்டு வா மா…”

“டிரைவர விடச் சொல்றீங்களா?”

ராஜம் சற்று யோசித்துவிட்டு, “சீதாவுக்கு ஒரு வேலையிருக்கு, நான் அவளைக் கூப்பிட்டு போகணும், நீ உங்க வீட்லயிருந்து உன்னைக் கூப்பிடுக்க சொல்லேன்…” ஒன்று அறியாதவர்போலக் கூறிவிட்டு தனது வேலையில் பிசியாகிவிட,

‘இப்போ வண்டி சும்மா தான் நிக்குது?’ என்று அவளுக்குப் பார்க்கத் தோன்றியது.

“சரி… நான் போயிட்டு வர்றேன்…” என்று கூறினாலும் அகல்யாவுக்குள் ஒரு நெருடல், இருந்தாலும், ‘இது ஒரு விஷயமா’ என்று தன்னையே சமாதானபடுத்திக் கொண்டாள்.

அகிலனை வரச் சொல்லி வீட்டுக்குச் சென்றாள்…

அம்மா வீடு…

இத்தனை வருடங்களும் தன் வீடாக இருந்தது இனி அம்மா வீடு…

எவ்வளவு உற்சாகம், இந்த வீட்டிற்குள் வந்ததும்?

தனக்கு மட்டும் தான் இப்படியோ?

பூவிழி கல்லூரிக்குத் திரும்பி விட்டாள்… படிக்கவேண்டிய பகுதிகளை வாட்ஸ் அப்’ல் அனுப்பியிருந்தவள், ‘படிக்கவும்’ என்று முடித்திருந்தாள்…

‘அடி போடி, இப்போ படிப்பா முக்கியம்?’

மறுபடியும் அவளுடன் போனில் அரட்டை, அம்மாவிடம் கொஞ்சல், அகிலனிடம் ஒரு குட்டி சண்டை என்று முடித்தவள், அப்பாவின் அருகில் வந்தாள். கிரி அகல்யாவிடம் அதிகம் பேசமாட்டார். கண்டிப்பு காட்டவில்லை என்றால் பின்னாளில் பெண் பிள்ளையால் கஷ்டம் என்றொரு எண்ணம் அவருக்கு.

ஆனால் இப்பொது அதற்கு அவசியம் இல்லையே… தன் மகள் தான், தான் சொன்னபடி நடந்துகொண்டாளே.

அவள் தலையைத் தடவி கொடுத்தவர்,

“என்னம்மா, அப்பா உனக்குச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சி வச்சிட்டேனா?”

என்ன பதில் சொல்வாள்? இப்போது பிடித்துத்தான் இருக்கிறது என்றா? வெளிப்படையாக அதைக் கூற ஒரு மாதிரியாக இருந்தாலும்,

“நான் சந்தோஷமா இருக்கேன் ப்பா. சூர்யா என்னை நல்லா பார்த்துப்பார்…” என்று கூறினாள்.

“சந்தோஷம்… ஆனா உனக்குக் கஷ்டம் தர மாதிரி எது நடந்தாலும் தைரியமா எங்க கிட்ட சொல்லிடணும், நாங்க இருக்கோம்…” ஒரு அப்பாவாகச் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு.

சூர்யாவுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினாள், தன்னை இங்கே வந்து அழைத்துக்கொள்ளுமாறு… “ஓகே டீ பொண்டாட்டி…” உடனே வந்தது பதில்.

அவன் அங்கே வந்ததும் அகிலனும் அவனும் சேர்ந்து அவளை ஒரு வழி செய்தனர்…