என்றும் என்துணை நீயேதான் 14
மொத்த குடும்பமும் வைஷூவை இழந்த துக்கத்தில் இருந்தனர். கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அதுவும் கொலை செய்தோ, தற்கொலை செய்தோ இறந்தால் போதும் அவர் ஏன் அப்படி இறந்தார்.. அதற்க்கு என்ன செயல் காரணமாக இருந்தது என அவர்கள் யோசனையில் அவர்களே கண் காது மூக்கு வைத்து பேசி கதை கட்டிவிடுவார்கள். அதே போல் தான் வைஷூ இறந்ததில் ஏதோ காரணம் இருக்கிறது என அவர்களுக்குள்ளே பேசி கடைசியில் கர்ணனின் ராசியில் வந்து நின்றனர்.
“பாவம் ஒன்னு தெரியாத பொண்ணு இப்படி அல்பாயுசுல போயிருச்சு. எல்லாம் பரிசம் போட்டு போன மாப்பிள்ளையோட ராசி தான். இப்படியா அந்த பொண்ணுக்கு வாழ்க்கை சின்ன வயசுலேயே முடியனும்.” துக்கப்படுவது போல கர்ணனின் ராசியை வைத்து பேச.
“நீ வேற.. சொந்த தாய் மாமா பொண்ணும், மாப்பிள்ளையும். அப்படி இருந்தா ஜாதகம் பார்க்காமல் கல்யாணத்தை முடிவு செய்வாங்க. ஆனா இவங்களும் ஜாதகம் பார்க்காமல் கல்யாணம் முடிவு செய்தாலும் ஒருக்கா ஜாதகத்தை பார்த்திருந்தா அந்த பொண்ணோட உயிரைவாச்சும் காப்பாத்திருக்கலாம்.”
”என்ன செய்து என்ன ஆகப்போகிறது போன உசுரு போனது தான். திரும்ப கூப்பிட்டாலும், அழுதாலும் வரவா போகுது. இனி யாரு கோடியம்மா பேரனுக்கு பொண்ணு கொடுப்பாங்க இப்போ அது தான் முக்கியம்.”
“எதுக்கு இன்னொரு உசுரும் போறதுக்கா.. போதும்த்தா.. ஒரு உசுரு போனதுக்கே முல்லையும், பாண்டியனும் ஏன் இன்னும் உயிரோட இருக்கனும் நினைச்சு கண்ணீர் விடுறாங்க. இதுல இன்னொரு பெத்தவனும், பெத்தவளும் கண்ணீர்விட தைரியம் இருக்கா என்ன?”
“அதுவும் சரி தான்.. இனி கர்ணன் வாழ்க்கை முனிவர் வாழ்க்கை தான் போல.” கிராமத்து பெண்மணிகள் பேசிக்கொண்டதை கோடியம்மா கேட்டுவிட.
“அடி செருப்பால.. என்ன தைரியம் இருந்தா என் பேரனையும், அவன் வாழ்க்கையையும் பத்தி பேசுவீங்க. ஏன் டி குடும்பத்துல ஒரு உசுரு போயிருச்சேனு நாங்க கவலையில இருந்தா, இனி என் பேரன் வாழ்க்கை இருண்டு போக போகுதுனு சொல்லுரேங்க. இதுல என் மகள் வீட்டையும் சேர்த்து பேசுறீங்க, உங்களுக்கெல்லாம் படியளந்தவ வீடுடி என் வீடு எப்படி பேச உங்களுக்கு மனசு வந்திச்சு.. என்ன சொன்னீங்க, என் பேரன் முனிவன் வாழ்க்கை தான் வாழனுமா? இதோ பாருங்கடி.. போன ஆயுசு குறைவுனாலும் அவளோட அம்சமா என் வீட்டுக்கு மருமகள் வருவாடி. இவ்வளவு ஏன் என் பேத்தி இன்னொரு பொறப்பெடுத்து கூட என் பேரனுக்கு மகளா பொறாப்பாடி. எண்ணி ஒரு வாரத்துல என் பேரனுக்கு கல்யாணம் முடிக்கலை என் பேர் கோடியம்மா இல்லை, சோனைமுத்து பொஞ்சாதியும் இல்லை டி.” பேசியவர்களின் முன் கர்வமாகவும், தைரியமாகவும் பேசி வந்தவர் வீட்டில் அதே சூழ்நிலையில் இருக்க நேராக முல்லை, பாண்டியனிடம் சென்றார் கோடியம்மா.
“ஏய்யா.. உன் மகளை இழந்த வலி எனக்கு புரியுது. ஆனா ஊருக்குள்ள என்னவோ பேசுறாங்கய்யா.. உன் பிள்ளை வாழ்க்கை முடிந்து போனாலும் என் பேரன் வாழ்க்கையும் முடிந்திரும் போல.” அவர்கள் காலில் விழாத குறையாக பேசியவர்களை பற்றியும், அவர்கள் பேசியதை பற்றியும் கூறிய கோடியம்மா, “உங்க கையெடுத்து கும்பிடுறேன்ய்யா.. என் பேரன உன் மகனா நினைச்சிட்டு அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையனும். அவன் வாழ்க்கையில வரபோற பொண்ணுக்கு, உன் மகளே பொண்ணா பொறப்பாய்யா. இதெல்லாம் நடக்கனும்னா அவன் வாழ்க்கையில கல்யாணம் வேண்டும்.”
“என்ன அத்தை என் முன்னாடி போய் கையெடுத்து கும்பிட்டுட்டு.. கீழ இறக்குங்க.. இப்போ என்ன கர்ணனுக்கு கல்யாணம் நடக்கனும். கண்டிப்பா நடக்கும் இது என் பொண்ணுமேல சத்தியம்.” அவர் வாக்கு கொடுக்க. கர்ணன் வரவும் சரியாக இருந்தது.
சந்தோஷ் கூறிய அனைத்தும் வேதாசலமும், விருஷாலியும் அதிர்ந்த முகத்துடன் கேட்டுகொண்டிருந்தனர். சாருவுடனான காதலும், அதன் பின் ஏற்ப்பட வலிகளையும் சந்தோஷ் சொல்லி முடித்தான். பின் தான் சாருவின் இதயம் விருஷாலிக்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது. சந்தோஷ் ஹரியை தேடிகொண்டிருந்த போது, விருஷாலியுடனான கல்யாணம் பேச்சு வார்த்தை அவனுக்கு தெரியவந்தது. அதுவும் மதுரையில் ஒரு வேலையின் விஷயமாக வந்த போது தான் தெரியவந்தது. அதன் பின் தான் வேதாசலமும் கல்யாணத்தை நிறுத்த உதவி செய்வதாக சொல்லவும் தான் அவருக்கு முன் சந்தோஷ் ஹரியை பற்றிய தகவல்களை திரட்டி, அதில் ஒரு பெண்ணை ஹரியின் திருமண மண்டபத்துக்கோ அனுப்பி வைத்து பயம் காட்டி, திருமணத்தை நிறுத்தினான்.
”ஆனா, ஹரி ஷாலினியையும், வைஷாலியை கடத்துவானு நான் எதிர்பார்க்கலை. அதுகடுத்து தான் ஹரி கடத்தி வச்சிருந்த வீட்டுக்கு நான் போகும் போது அவன் வைஷாலியை சுட்டுட்டான். எல்லார் கவனமும் வைஷாலி மேல இருப்பதை பார்த்து, ஹரியை நான் தூக்கி என் வீட்டுக்கு கொண்டுவந்துட்டேன்.” என அதன் பின் நடந்தவற்றையை சந்தோஷ் சொல்லி முடித்தான்.
”உங்களை பார்த்து இந்த விஷய்த்தை சொல்லிட்டு, அப்படியே கர்ணன் வீட்டுக்கும் செல்லனும் தான் நினைச்சு வந்தேன். உங்ககிட்ட சொல்லிட்டேன் இனி கர்ணன் வீட்டுக்கு போய் அவர்கிட்டயும் நான் தெளிவா சொல்லி, வைஷாலியோட இறப்புக்கு மன்னிப்பு கேட்க்கனும். நான் வரேன் சார்.. வரேன் விருஷாலி.” அவன் புறப்படும் போது தடுத்தார் வேதாசலம்.
“என் பொண்ணுக்காக நீ இவ்வளவு செய்து, என் இன்னொரு பொண்ணுக்கான வாழ்க்கையையும் நீ காப்பாற்றி கொடுத்திருக்க. உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுனு எனக்கு தெரியலை.”
“என் சாருவோட அப்பா தான நீங்க, அப்போ எனக்கும் அப்பா தான். நன்றியெல்லாம் வேண்டாம் சார்.. உங்களை கடைசிவரை பார்த்துகிற உரிமை மட்டும் எனக்கு கொடுங்க அது போதும். சாரு என்கிட்ட ஒரு விஷயம் அடிக்கடி சொல்லுவா, அப்பா, அம்மாவ, நம்ம தான் பார்த்துக்கனும் சொல்லி என்கிட்ட சத்தியம் கூட வாங்கிருக்கா. ஆனா நான் எப்படி உங்களை சந்திக்கிறது தான் யோசிச்சுட்டு இருந்தேன்.”
“உரிமையை தரேன் எடுத்துக்கோ.. எப்போ என் வீட்டுக்கு வரேனு மட்டும் சொல்லு சந்தோஷ்.” அவரின் வார்த்தையில் கட்டியணைத்து அழுதான். ஏதோ சாருவின் ஒற்றை சத்தியத்தை நான் நிறைவேற்றிவிட்டேன்.
“நானும் வரேன்.. கர்ணன் வீட்டுக்கு.” விருஷாலியின் குரல் ஒலிக்க அதிர்ந்து பார்த்தான் சந்தோஷ்.
அண்ணனிடம் அனைத்து உண்மையையும் ஆரம்பம் முதல் இறுதி வரை கூறிய நகுலனை கர்ணன் கோவப்பார்வையில் பார்த்துகொண்டிருந்தான். கர்ணனின் கோவமான பார்வையை முதல் முறையாக பார்த்த நகுலனின் உடம்பு வெடவெடத்து போனது.
“ஒரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்த போய் இப்படி நம்ம வீட்டு பொண்ணோட உயிரை பறிச்சுட்டோம். என் மேல தான் தப்பு, உனக்கு உதவி செய்ய நான் ஒத்துட்டு இருக்ககூடாது. ஆனா ஏன் டா ஒன்னும் தெரியாத அப்பாவி பொண்ண கொன்னான் அவன். அதுக்கு பதில என்னை கொன்னுருக்கலாமே. என்ன காப்பாற்ற போய், வைஷூவோ உயிர் போயிருச்சே.” தலையில் அடித்துகொண்டே கர்ணன் அழுதான்.
அண்ணனின் கண்ணீரை பார்த்ததும் தான் நகுலனுக்கு தப்பு செய்துவிட்டோமோ என்ற உணர்வு தோன்றியது.
“சாரி..கர்ணா.. இப்படி ஒரு உயிர் போகும்னு நான் நினைக்கலை.” நகுலன் மன்னிப்பு வேண்ட
“இனி நான் உன்னை மன்னிச்சா என்ன? மன்னிக்கலைனா என்ன? போன வைஷூ உயிர் திரும்பி வந்திருமா. போடா என் கண்ணு முன்னாடி நீ வந்திராத இனிமே.” நகுலனிடம் ஒதுங்கியது போல் நடித்துகொண்டிருந்தவன், இப்பொழுது உண்மையில் ஒதுங்கிவிட்டான் கர்ணன்.
கர்ணனின் முன் நின்றிருந்தார்கள் சந்தோஷூம் விருஷாலியும். வீட்டுக்கு செல்ல இருந்தவர்களை நகுலன் தான் வயலில் கர்ணன் இருப்பதாக சொல்ல அங்கேயே அவர்கள் இருவரும் சென்றனர். நடந்த அனைத்து உண்மையைகளையும் சந்தோஷ் கூறவும், விருஷாலியின் பக்கம் இருந்த நியாயத்தையும் அவள் சொல்லவும். கர்ணன் கேட்டான் ஆனால் அவர்களுக்கு எந்த பதிலும் பேசவில்லை. அவனின் அமைதியை பார்த்த இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துகொண்டு புரியாமல் நின்றனர்.
“சார்.. ஏன் அமைதியா இருக்கீங்க.” அவனின் அமைதியை கலைத்தான் சந்தோஷ்.
“என்ன பேசனும்.. இனி பேச என்ன இருக்கு. அதான் எல்லாவற்றையும் சொல்லிட்டீங்களே. ஒரு உயிர் போனது போயிருச்சு மறுபடியும் வைஷாலியோட உயிர் வரவா போகுது. போங்க சார்.. என்கிட்ட சொன்ன உண்மையை என் குடும்பத்துகிட்ட சொல்லி நீங்க மன்னிப்பு கேட்க முடியுமா? இல்லை அவங்களோட துக்கத்துல தான் உங்களால பங்கெடுத்துக்க முடியுமா. இதோ இந்த பொண்ணு என் அத்தை மாமாவுக்கு தான் இன்னொரு மகளா வரமுடியுமா.. எல்லாம் முடிந்தது போங்க இங்க இருந்து.” விரக்த்தியில் கர்ணன் பேச அதை கேட்ட சந்தோஷூம், விருஷாலியும் திகைத்து போனார்கள்.
மகளின் துக்கத்தில் இருந்தாலும், மருமகனின் வாழ்க்கை இனி கிராம மக்களின் வாயில் விழுந்த அவலாக மாறக்க்கூடாது என நினைத்து கர்ணனுக்கு ஏற்ற பெண்ணாக பாண்டியன் தேடிகொண்டிருந்தார். பெண் வீட்டில் கர்ணனின் பரிசத்தை பாதியில் நின்றதையும், அதற்கான காரணத்தையும் முழுதாக கேட்டவர்கள் பெண் கொடுக்க தயங்கினார்கள்.
வீரபத்திரனும், லட்சுமியும் பேசிகொண்டதை கேட்க நேர்ந்த நகுலன். கர்ணனுக்கு பெண் அமையவில்லை என்ற சோகத்திலும், வைஷாலி இந்த வீட்டிற்க்கு மருமகளாக வரமுடியவில்லை என்ற துக்கம் தான் அதிகமாக இருந்தது. அதுவும் பெண்ணை இழந்தவர்களே கர்ணனின் வாழ்க்கைக்கு போராடுகிறார்கள் அதுதான் மிகபெரிய வியப்பாக இருந்தது.
நகுலன் அனைவரின் சோகத்தை பார்த்தவனின் மனம் ஷாலினி உதவி கேட்டதில் வந்து நின்றது அவனது நினைவு. ஷாலினி மட்டும் தன்னிடம் உதவி கேட்க்காமல் இருந்தால் இப்படி ஒரு துயரம் நேராமல் இருந்திருக்கும். அண்ணனும் தன்னைவிட்டு ஒதுங்கி இருக்கமாட்டான். என அவன் யோசிக்க, அண்ணனின் வாழ்வு சீரக அமைய வேண்டும் என்றால் ஷாலினியை பிரிய வேண்டும் என்று நகுலன் தவறான முடிவு எடுத்தான் நகுலன்.
நகுலனின் வார்த்தையில் ஷாலினி அதிர்ந்து நிற்க. நகுலனோ உறுதியாய் நின்றான் அவனது வார்த்தையில். “பிரிந்துவிடலாம் ஷாலினி நாம்.. இனி நம் வாழக்கையில் காதல் என்ற அடையாளம் இல்லை. தனி தனியாய் வாழ்வில் பயணிக்கலாம் என அவன் சொன்னதை அவளால் ஏற்க முடியவில்லை.” கல்லூரி ஆரம்பம் முதல் காதல் வளர்த்து, அவனின் நிழலில் நான், என் நிழலில் அவன் என எண்ணியிருக்க. இப்படி பாதியில் காதலில் இருந்து பிரித்தால் நான் என்ன செய்வேன். அவள் மனம் நினைக்க நினைக்க மனம் வலித்தது.
“நகுலா என்ன சொல்லுற..” அவள் திக்கி திணறி கேட்க.
“என் அண்ணன் வாழ்க்கையே போயிருச்சு இதுல நம்ம காதல் வேற. முதல என் அண்ணன் வாழ்க்கை சரியாகனும். ஆனா நம்ம காதல், வாழ்க்கையில இல்லை அதை புரிந்துக்கோ. நீ உதவி கேட்க்காம இருந்தா என் அண்ணன் வாழ்க்கை இப்படி ஆகிருக்காது, வைஷாலியும் இறந்துருக்கமாட்டா.”
அவனின் பாதி பேச்சில் அழுதுகொண்டே சென்றவள் வீட்டுக்கே சென்றுவிட்டாள். அழுதுகொண்டே அவளது அறைக்கு சென்றவளை பார்த்த விருஷாலி என்ன ஏதென்று ஷாலினியின் பின்னேயே சென்றாள்.
“ஷாலினி என்னாச்சு.. ஏன் அழுதுட்டு வர..” தங்கையின் தோளில் கை வைத்து கேட்க.
“உன்னால தான் எல்லாம் உன்னால தான் என் காதல் வாழ்க்கையே போயிருச்சு. நகுலன் இனி என்னை காதலிக்க மாட்டேனு சொல்லிட்டான். உனக்காக அவன்கிட்ட உதவி கேட்க போயி இப்போ வைஷாலி நம்மளால தான் இறந்தானு சொல்லுறான். அவன் சொன்னதுல என்ன தப்பு இருக்கு.. உனக்காக அவன்கிட்ட உதவினு கேட்டு போனது நான் தானே. இப்போ நீ சந்தோஷமா இருக்க.. ஆனா நான் என் காதலை இழந்துட்டு நிக்குறேன்.”
“என்ன டி ஏன் அப்படி சொன்னான்… அவன்கிட்ட நான் பேசி புரிய வைக்குறேன் ஷாலினி. அழுகாத டி.. உன்னை விட்டுட்டு அவனால இருக்க முடியுமா. இப்படி பிரியிறதுக்கா காதலிச்சீங்க இரண்டு பேரும்.”
“நாங்க எங்க பிரிந்தோம் உன்னால தான் அவன் என்னை விட்டுட்டு போறான். உன்னால தான் அவனுக்கு நான் வேண்டாமா. எல்லாமே உன்னால தான் நடந்துச்சு இனி நான் நகுலனை மறந்துட்டு வாழ பழகிக்கனுமா அவன் சொல்லுறான்.” நகுலன் பேசியதை கேட்ட விருஷாலிக்கு இப்போ என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தாள்.
கர்ணனின் வாழ்க்கையில் திருமணம் நடக்குமா?
நகுலன் ஷாலினி காதல் பயணம் தொடருமா?
விருஷாலி தங்கையின் முறிந்த காதலை சேர்த்து வைப்பாளா?
தொடரும்………………….