Nallai07

Nallai07

ஒரு வாரம் கடந்திருந்தது. தோட்ட வேலைகளை அதுபற்றிப் பேசிய அடுத்த நாளே ஆரம்பித்து விட்டான் மாதவன். நேற்றுத்தான் பல்லவி சொன்னது போல ஹட் வேலை முடிந்திருந்தது. மேய்ப்பாளன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் போல.

எந்த நவீனங்களையும் அந்த இடத்தில் நுழைய பல்லவி அனுமதிக்கவில்லை. காய்கறிகளுக்குக் கூட இயற்கை உரம் என்றுதான் திட்டம் போட்டாள்.

‘உனக்கு எது இஷ்டமோ அது படியே செய் பல்லவி.’ இது மாதவன். என்றைக்கு அவன் மனைவியின் ஆசைக்கு மறுப்புச் சொல்லி இருக்கிறான்.

ஹட்டின் கூரைக் கூட வேலி கொண்டு வேயப்பட்டிருந்தது. கணவன் மனைவி இருவரும் வந்தால் தங்குவதற்கு என்னத் தேவையோ அவையனைத்தும் நேற்றே அங்கு குடிவந்து விட்டன. 

தோட்டத்தில் மண்ணைக் கொத்திப் புரட்டி முடித்திருந்தார்கள். இனிச் செடிகளை நடுவதுதான் மீதமிருந்த வேலை.

அன்று காலையிலேயே பல்லவி கணவனோடு கிளம்பி வந்து விட்டாள். தினமும் வருவதுதான் என்றாலும் மாதவன் கூடவே இருந்து அழைத்துச் சென்று விடுவான். 

ஆனால் நேற்றே ஹட் வேலை முடிந்து விட்டதால் அங்கு மனைவி ஓய்வெடுக்கலாம் என்று தன் வேலையைப் பார்க்கப் போயிருந்தான் மாதவன். வேலைச் செய்பவர்களுக்கு காஃபி, நொறுக்குத்தீனி என்று வரும்போது பல்லவியும் அவர்களோடு இணைந்து கொள்வாள்.

வேலைப் பார்ப்பவர்களுக்கும் அந்தப் பட்டணத்துப் பெண் தங்களோடு சரிக்குச் சமனாக உட்கார்ந்து அளவளாவுவது ஆனந்தமாகத்தான் இருந்தது. 

“ஏன் அண்ணா! இன்னைக்கு மழை வரும் போல இருக்கே?”

“ஆமாங்கம்மா, வந்தா நல்லதுதான். தண்ணி பாய்ச்சத் தேவையில்லை. செடிகளை நட ஆரம்பிக்கலாம்.”

“ஓ… அப்பச்சரி.” 

வேலையை மீண்டும் அவர்கள் ஆரம்பிக்க ஹட்டை நோக்கி வந்தாள் பல்லவி. கொஞ்சம் பின்னால் கிணறு தெரிந்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் பல்லவியின் முகத்தில் புன்னகை.

அன்று ஒரு ஜலக்கிரீடை நடத்திவிட்டுத்தான் ஓய்ந்தான் கணவன். 

‘என்னையும் இப்படித் தண்ணியில இழுத்துவிட்டா எப்படிங்க? உங்களுக்கு மட்டுந்தான் ட்ரெஸ் எடுத்து வெச்சேன்.’ மனைவியின் கோபத்தில் மாதவன் சிரித்தான். பையைத் திறந்து அவனுக்கு டவலை எடுத்துக் கொண்டவன் புடவையை அவள் புறமாக நீட்ட பல்லவி திடுக்கிட்டுப் போனாள்.

‘ஆக… திட்டம் போட்டுத்தான் கூட்டிட்டு வந்திருக்கீங்க!’

‘கட்டம் போட்டு உன்னைத் தூக்கினவனுக்கு இது எம்மாத்திரம்?’

‘ஆமா, ரொம்பப் பெருமைதான். திரும்புங்க அந்தப் பக்கம்.’ அவனுக்கு ஆணைப் போட்டுவிட்டு சட்டென்று உடைகளை மாற்றிக்கொண்டாள் பெண்.

‘சீக்கிரமா ஹட் வேலையை முடிக்கணுங்க. இப்படியெல்லாம் நின்னு என்னால ட்ரெஸ் சேன்ஞ் பண்ண முடியாது.’

‘சரிம்மா… நாளைக்கே ஆரம்பிச்சுடலாம்.’ 

“பல்லவி!” அன்றைய நினைவுகளில் மூழ்கி நின்ற பல்லவி திடுக்கிட்டுத் திரும்பினாள். அந்தக் குரல்?! அவள் பார்வைப் போன திசையில் கௌதம் நின்றிருந்தான்.

பல்லவிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தன் எதிரே நிற்பது கௌதம்தான் என்பதைக் கிரகித்துக் கொள்ளவே அவளுக்குக் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. தன்னையே ஊன்றிக் கவனித்தபடி நின்றிருந்த பெண்ணையே வந்தவனும் பார்த்தபடி நின்றிருந்தான்.

“எப்படி இருக்கே பல்லவி?” அந்த அக்கறையில் பல்லவி நிஜத்திற்கு வந்தாள். ஆனால் அந்த அக்கறை இப்போது அவளுக்கு அனாவசியமாகப் பட்டது.

“என்ன, சொல்லாமக் கொள்ளாம இங்க வந்து நீ பாட்டுக்கு உக்கார்ந்துட்டே?” இப்போது அங்கு நின்றிருந்த பல்லவி என்ற பொம்மைக்கு லேசாக உணர்வு வந்தது.

“எங்க வந்தீங்க?”

“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் பல்லவி.” அளவுகடந்த நிதானம் அவன் பதிலில்.

“எதுக்கு?”

“என்னக் கேள்வி பல்லவி இது? நீயும் நானும்…”

“போதும் நிறுத்தறீங்களா?” அவனை முழுதாகப் பேச விடவில்லைப் பெண். முகத்தில் வெறுப்பு வழிய பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“நீ இவ்வளவு வெறுக்கிற அளவுக்கு நான் அப்பிடியொன்னும் பெரிய தப்புப் பண்ணலை பல்லவி.” 

“அந்த ஒரு இடத்துலதான் நமக்குள்ள ஒத்து வரலை கௌதம். நீங்கப் பண்ணினதை இன்னைக்கு வரைக்கும் தவறுன்னே நீங்க நினைக்கலை.”

“அப்படி என்னத்தைப் பெரிசாப் பண்ணிட்டேன் பல்லவி? இந்த வயசுல எல்லாப் பணக்காரப் பசங்களும் பண்ணுறதுதானே?” இதை கௌதம் சொல்லும்போது பல்லவியின் இதழ்கள் இகழ்ச்சியாகப் புன்னகைத்தது. 

“நீ என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணுறே பல்லவி.”

“உங்களுக்கும் எனக்கும் நடுவுல எதுவும் இல்லைன்னு நான் எல்லாத்தையும் முடிச்சு ரொம்ப நாளாச்சு.”

“அதை நீ மட்டும் முடிவு பண்ணக் கூடாது.”

“பாதிக்கப்பட்டது நான். அப்போ நான்தானே முடிவெடுக்கணும்?”

“அப்படி என்னத்தைப் பாதிக்கப்பட்டுட்டே நீ? உன்னைக் காதலிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேனா? இல்லை உன்னைக் கர்ப்பமாக்கிட்டுக் கைகழுவி விட்டேனா?”

“கௌதம்!” பல்லவியின் முகம் செந்தணலாகிப் போனது.

“அம்மா! ஏதாவது பிரச்சினைங்களாம்மா?” தோட்டத்தில் வேலை செய்யும் பெரியவர் ஒருவர் ஓடிவந்து கேட்கவும் பல்லவி தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.

“இல்லைண்ணா, தெரிஞ்சவங்கதான். நீங்க வேலையைக் கவனிங்க.” செயற்கையான புன்முறுவல் ஒன்று இப்போது அவள் முகத்தில்.

“சரிங்கம்மா.” சொல்லிவிட்டு நகர்ந்தாலும் அந்த மனிதரின் கண்கள் கௌதமை சந்தேகத்தோடேயே பார்த்தது.

“காவல் பலமாத்தான் இருக்கு. சும்மா சொல்லக் கூடாது. காட்டானா இருந்தாலும் பக்காவாத்தான் காய் நகர்த்தி இருக்கான்.” 

“கௌதம்! இதுக்கு மேலே உங்களுக்கு மரியாதை இல்லை. போயிடுங்க.”

“அட! கோபமெல்லாம் வருது. அப்பிடி எதைப் பார்த்து அவங்கிட்ட மயங்கினே? அந்த அழுக்கு வேட்டியையும் டப்பா ஸ்கோடாவையும் பார்த்தா?” பல்லவிக்கு இப்போது மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. தன் எதிரில் நிற்பவனை அடித்து நொறுக்கும் ஆத்திரம் வந்தது.

“உங்கப்பா குடுக்க வேண்டிய பணத்துக்காகக் கல்யாணம் பண்ணி இருக்கான், இவனெல்லாம் ஒரு ஆம்பளையா? பணந்தான் வேணும்னா நீ எங்கிட்டக் கேட்டு இருக்கலாமே. உனக்கில்லாத பணமா பல்லவி? அதை அந்தப் பட்டிக்காட்டான் முகத்துல விட்டெறிஞ்சு இருக்கலாமே?”

“எறிஞ்சுட்டு? என்னப் பண்ணச் சொல்லுறீங்க?”

“புரியலை…”

“கடனைக் குடுத்துட்டு உங்கப் பின்னாடி நாய் மாதிரி வரச் சொல்றீங்களா?”

“இதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தைகள் பல்லவி. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தோம்.”

“அந்த எண்ணத்தைத் தூக்கித் தூரப் போட்டுட்டேன்னு உங்கக்கிட்ட அப்பவே நான் சொல்லிட்டேன். அதுக்கப்புறமா நான் உங்கக்கூட பேசினதாவோ, உங்களைப் பார்த்ததாவோ எனக்கு ஞாபகம் இல்லை.” 

“எதுக்கு பல்லவி இவ்வளவு ஆவேசம்? என் தரப்பு விளக்கத்தை நீ கேக்கவே இல்லையே.” 

“அதான் அன்னைக்குச் சொன்னீங்களே ஒரு விளக்கம். அப்பப்பா! புல்லரிச்சுப் போச்சு. நீங்களா யாரையும் தேடிப் போகலை. அவங்களா வந்து உங்கக்கிட்டப் பழகினாங்க. அவங்க யாருக்கும் எந்த வாக்குறுதியும் நீங்கக் குடுக்கலை… ஸ்டுப்பிட்! இதெல்லாம் கேக்கும் போது எனக்குப் பத்திக்கிட்டு எரியுது.”

“பல்லவி… எதுக்கு நீ இவ்வளவு உணர்ச்சி வசப்படுறேன்னு எனக்குப் புரியலை. இப்போ நீ சொன்னதெல்லாம் என்னோட பாஸ்ட். அப்போ எனக்கு உன்னைத் தெரியாது. எப்போ உன்னைப் பார்த்து உம்மேல நான் ஆசைப்பட்டேனோ அந்த நொடியில இருந்து உனக்கு நான் ட்ரூவாத்தான் இருக்கேன்.”

“போதும்! இந்தச் சப்பைக் கட்டெல்லாம் எனக்குத் தேவையில்லை. உங்களைவிட்டு நான் என்னைக்கோ ஒதுங்கிட்டேன். நமக்கு நடுவுல எதுவுமேயில்லை மிஸ்டர். கௌதம். நீங்கக் கிளம்பலாம்.”

“அப்படி அவ்வளவு சுலபத்துல உன்னை நான் விட்டுக்குடுக்க மாட்டேன் பல்லவி. ஒரு கிராமத்துக் காட்டான்கிட்ட என்னைத் தோக்கச் சொல்றியா? அது இந்த ஜென்மத்துல நடக்காது. என்னைக்கு இருந்தாலும் உன்னை இங்க இருந்து நான் தூக்குவேன். நானா அவனான்னு ஒரு கைப் பார்த்துடலாம்.” சொல்லிவிட்டு கௌதம் திரும்ப சற்றுத் தொலைவில் ஒரு மரத்தில் சாய்ந்தபடி நின்றிருந்தான் மாதவன்.

பல்லவியின் சப்த நாடியும் ஒடுங்கியது. எப்போது வந்தான் என்று தெரியாது. ஆனால் அவன் பார்வைக் கூட இவர்களைக் கவனிக்கவில்லை. தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த வேலைகளைப் பார்த்தபடி சாதாரணமாக நின்றிருந்தான்.

அதற்குமேல் கௌதமும் அங்கு தாமதிக்கவில்லை. இரண்டெட்டு நடந்து போனவன் திரும்பவும் பல்லவியிடம் வந்தான்.

“இப்பவும் ஒன்னும் ஆகிடலை. எங்கூட இந்த நிமிஷமே கிளம்பி வந்திடு. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்.” அவன் முடிக்கும் முன்னமே பல்லவியின் கண்கள் அனலைக் கக்கியது. அவளை இரண்டொரு நொடிகள் ஆழ்ந்துப் பார்த்தவன் நகர்ந்து விட்டான்.

மாதவனைக் கடந்து கௌதம் போகும் போது, நெய் தடவிப் பராமரித்துத் தீட்டிய இரு கூர் வாள்கள் மோதிக்கொள்வது போல அவர்கள் பார்வைகள் மோதிக் கொண்டன. 

கௌதமின் முகம் ‘உன் சாவு என் கையில்தான்’ என்பது போல குரோதத்தைக் கக்கியது. ஆனால் மாதவன் அமைதியாக நின்றிருந்தான். ஆனால் அவன் இதழ்க்கடையோரம் லேசாகச் சுளித்திருந்தது. அந்த ஒற்றை ஏளனப் புன்னகை கௌதமின் வெறியை எங்கோ கொண்டு போனது.

பல்லவி எனும் ஓர் உயிர் அந்த இடத்தில் அவன் கவனத்திற்கு வரவில்லை. தன் முன்னால் நின்றுகொண்டு தன்னையே ஏளனமாகப் பார்க்கும் மாதவன் மட்டும்தான் இப்போது அவனுக்குத் தெரிந்தான்.

தன் பரம வைரி இவன்தான் என்று அவன் மனம் உள்ளுக்குள் கறுவிக் கொண்டது. சட்டென்று போய்விட்டான். அதுவரை அமைதியாக இருந்த மாதவன் மனைவியை நோக்கிப் போனான்.

“கிளம்பலாமா பல்லவி?” அவன் கேட்ட மாத்திரத்தில் பல்லவியின் கண்கள் தாரைத் தாரையாகக் கண்ணீரை உகுத்தது. உடம்பு லேசாக நடுங்கியது.

“ஷ்… பல்லவி என்ன இது? எல்லாரும் நம்மளைத்தான் பார்க்கிறாங்க.” அவளை அதட்டியவன் அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரை அழைத்தான்.

“எல்லாரையும் போய் சாப்பிட்டுட்டு நாலு மணி போல வரச் சொல்லுங்க. நாளையோட வேலையை முடிச்சிரலாம் இல்லை?”

“ஆமா தம்பி… முடிச்சிரலாம்.”

“நல்லது.” அவரை அனுப்பிவிட்டு பல்லவியிடம் திரும்பினான் கணவன்.

“பல்லவி கிளம்பலாம். எனக்குப் பசிக்குது.”

“ம்…” இருவரும் கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டார்கள். மாதவன் எதுவுமே பேசவில்லை. அதுவே பல்லவிக்குக் கிலியைக் கிளப்பியது. ஏதாவது கேட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. இல்லை இரண்டு அடி அடித்திருக்கலாம். அவன் மௌனம் அவளைக் கொன்று புதைத்தது.

“நீயும் உக்காரு. சேர்ந்தே சாப்பிடலாம்.” வாணி பரியாற இரண்டு பேரும் உண்டு முடித்தார்கள். அதன் பிறகும் மாதவன் எதுவும் பேசாமல் மேலே போய்விட்டான். பல்லவிதான் தடுமாறிப் போனாள்.

பெயருக்கு மாமியாரிடம் தோட்டம் பற்றிப் பேசிவிட்டு அவள் மேலே வந்தபோது மாதவன் மீண்டும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான். 

“பல்லவி, நான் எப்படியும் நேரத்துக்கு வீட்டுக்கு வந்திடுவேன். ஒருவேளை லேட் ஆனா தோட்டத்துக் கூலியை நீயே குடுத்திடு. கப்போர்ட்ல பணம் இருக்கு.” சொல்லிவிட்டு நகர்ந்தவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள் பல்லவி. மாதவன் மனைவியைக் கேள்வியாகப் பார்த்தான்.

“எங்கிட்ட எதுவுமே கேக்க மாட்டீங்களா?” இப்போது அவள் குரல் கண்ணீரில் கரைந்திருந்தது. ஹீனமாக வந்த அந்தக் குரலில் மாதவன் பெருமூச்சு விட்டான்.

“என்ன கேக்கணும் பல்லவி?”

“ஏதாவது கேளுங்க. சண்டைப் போடுங்க. என்னை நாலு அடி அடிங்க.” 

“எதுக்கு? நீ என்னத் தப்புப் பண்ணினே?” 

“தப்புத்தான், நான் பண்ணினது எல்லாமே தப்புத்தான்.” வெறி கொண்டவள் போலக் கத்தியவள் கணவனின் கையை எடுத்து அவள் கன்னத்தில் அவளாகவே அடித்துக் கொண்டாள்.

“பல்லவி!” மாதவனின் அதட்டல் இப்போது அவளிடம் வேலைச் செய்யவில்லை. அவன் மார்பிலேயே வீழ்ந்து கதறினாள்.

“எனக்கு வரப்போறவன் சுத்தமா இருக்கணும்னு நினைச்சது ஒரு தப்பா? நான் அப்பிடித்தானே இருந்தேன்.”

“பல்லவி! அழுறதை நிறுத்து.” கதறிய மனைவியை உலுக்கினான் மாதவன்.

“நாலு பொண்ணுங்களோட ஊர் மேய்ஞ்சு திரிஞ்சவன் எனக்குப் புருஷனா? அதுக்கு நான் சாகலாமே!” அவள் கதறல் தீரவில்லை. அவளைச் சமாதானப் படுத்தும் வழி தெரியாமல் மனைவியின் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்தான் கணவன்.

இப்போது அவன் கையை வெடுக்கென்று தள்ளிவிட்ட பல்லவி அவனை விட்டுத் தூரப் போனாள். மரியாதை காற்றில் பறந்தது.

“யோவ்! புத்தனாய்யா நீ? வந்து அவனை நாலு அறை அறையாம, கையைக் கட்டிக்கிட்டுப் பார்த்துக்கிட்டு நிக்கிறே?”

“எதுக்கு பல்லவி?” ஆக்ரோஷமாகக் கேள்வி கேட்ட அவள் விழிகள் இப்போது மீண்டும் கண்ணீரைக் கொட்டியது.

“நீங்களும் என்னை நம்பலை இல்லை? உங்களுக்கு எம்மேல உரிமை இருந்திருந்தா அப்போ உங்களுக்குக் கோபம் வந்திருக்கும். எம்மேல கோபம் வரலையே உங்களுக்கு.”

“வந்திச்சு பல்லவி. கோபம் நிறையவே வந்திச்சு. அங்க நின்னிருந்த அந்தக் காரை அப்படியே கொளுத்தலாமான்னு ஒரு வெறியே வந்திச்சு. ஆனா அதால யாருக்கு என்ன லாபம் சொல்லு? பல்லவியோட கடந்த காலத்தைப் பத்தி எனக்குத் தெரியாது. அது தேவையும் இல்லை. ஆனா, இப்போ பல்லவி என்னோட பொண்டாட்டி. அவ தப்புப் பண்ண மாட்டா. அந்த நம்பிக்கை மனசு நிறைய இருக்கும்போது எதுக்கு பல்லவி உம்மேல கோபம் வரணும்?” 

மாதவன் பேசி முடிக்கும் போது பல்லவியின் கண்கள் இமைக்க மறந்தன. பிரமைப் பிடித்தவள் போல சிறிது நேரம் நின்றிருந்தவளைப் பார்த்து மாதவனே பயந்து போனான். 

ஆனால்… சாது மிரண்டால் காடு கொள்ளாது அல்லவா? அந்தப் பரம சாது இதுவரை நேரமும் மிரட்சியோடு நின்றுவிட்டு இப்போது மிரண்டது.

“ஏய் பல்லவி!” மனைவியின் தாக்குதலை எதிர்பார்க்காத மாதவன் நிலைதடுமாறி நிலத்தில் சரிந்திருந்தான். அவனை முற்றாக ஆக்கிரமித்திருந்தவள் அந்த முகம் முழுவதும் ஒரு வேகத்தோடு முத்தம் பதித்தாள். 

“பல்லவீ…” அந்தக் கட்டுக்கடங்காத இளமையைக் கையாள முடியாமல் சிறிது நேரம் அனுமதித்தான் கணவன். நிலைமை அவனையும் மீறியே போய்க் கொண்டிருக்கவும் ஒரு புன்னகையோடு தன் ஒற்றைக்காலால் நிலத்தில் கிடந்தபடியே கதவைப் பூட்டினான் மாதவன்.

தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் முடிவிலும் இவர்கள் அன்னியோன்யம் அதிகரிப்பதை கௌதம் அறிவானா?!

***

ரூம் கதவு தட்டப்பட்டது. சட்டென்று மூண்ட எரிச்சலோடு கதவைத் திறந்தான் கௌதம். எதிரே சித்தி நின்று கொண்டிருந்தார்.

“ஹாய் கௌதம்.” சித்திக்குப் பின்னாலிருந்து சட்டென்று எட்டிப் பார்த்தாள் தன்வி. சித்தியின் நாத்தனார் பெண்.

“ஓ… தன்வியா! கம் இன்.” சொல்லிவிட்டு வழிவிட்டான் கௌதம்.

“என்ன கௌதம்? ஏன் ரொம்ப டல்லா இருக்கே?”

“ஒன்னுமில்லை சித்தி.”

“ஒரு ஃபங்ஷனுக்குப் போய்ட்டு இந்த வழியாத்தான் வந்தோம். தன்விதான் உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு சொன்னா. பேசிக்கிட்டு இருங்க. நான் காஃபி கொண்டு வர்றேன்.” சித்தி நகர்ந்துவிட இளையவளுக்கு நாற்காலியைக் காட்டினான் கௌதம்.

“கௌதம்! எனி ப்ராப்ளம்? நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணுறேனா?”

“இல்லையில்லை… உக்காருங்க.” அவள் இப்போது அங்கு அதிகப்படிதான். இருந்தாலும் அவளைத் தவிர்க்க இப்போது மனம் வரவில்லை. இருவரும் அமர்ந்தார்கள்.

“மெஹந்தி ஃபங்ஷன் கௌதம். ரொம்ப நல்லா இருந்தது.”

“ஓ…”

“நம்ம வெட்டிங் எப்போ கௌதம்?” முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் கேட்டாள் தன்வி.

“தனு…” கௌதமின் தடுமாற்றம் பார்த்துப் பெண் புன்னகைத்தது.

“அந்தப் பல்லவியை இன்னும் நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா கௌதம்?” சோஃபாவை விட்டு எழுந்தவன் ஜன்னல் வரை நடந்து போனான்.

“என்னால மறக்க முடியலை தனு.” 

“அப்படியெல்லாம் எதுவுமேயில்லை கௌதம். நீங்க முயற்சி பண்ணலை. அதுதான் உண்மை.”

“…………….”

“ரெண்டு ஃபேமலிக்கும் விருப்பம் இருந்தாலும் உங்க மனசுல வேற எண்ணம் இருந்ததாலதான் நான் எதுவுமே பேசலை. ஆனா… இதுக்கு மேலேயும் எதுக்குத் தாமதிக்கணும்னு தோணுது கௌதம்.”

“ஜஸ்ட் ஒன் வீக் டைம் எனக்குக் குடு தனு. ஒரு சின்னக் கணக்கு பாக்கி இருக்கு. முடிச்சிட்டு வந்தர்றேன். அதுக்கப்புறமா நாம நிதானமா முடிவெடுக்கலாம். அவசரப்பட வேணாமே.”

“கௌதம்… தப்பா எந்த ஸ்டெப்பும் எடுத்து வெச்சிராதீங்க.”

“நோ… நோ…” கௌதம் அவசரமாக மறுத்த போதும் நம்பாத புன்னகைச் சிந்தினாள் தன்வி.

“ஓகே… பை கௌதம்.” சட்டென்று பெண் வெளியே போய் விட்டாள். இள மஞ்சள் நிற லெஹெங்கா அணிந்திருந்தாள். பெரிய இடத்துப் பெண். குறையென்று சொல்ல அவளிடம் எதுவுமேயில்லை. 

ஆனாலும் கௌதமின் மனது அவளைச் சேர மறுத்தது. தன் குடும்பத்திற்கு இவளைப் போன்ற பெண்தான் சரியாக இருப்பாள். அவன் மூளைக்கு அனைத்தும் புரிகிறது.

இருந்தாலும்… அந்த வெட்கத்தை, நளினத்தை, பயந்து பயந்து பேசும் அழகை இவளிடம் எதிர்பார்க்க முடியாது. கௌதமின் மனது கொதித்துக் கொண்டிருந்தது.

“கௌதம் என்ன சொல்றான் தன்வி?” காரில் போய்க் கொண்டிருக்கும்போது கேட்டார் ஜானகி. தன் அக்காவின் பையன் பண்ணும் கூத்து அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. பிடிபடவும் இல்லை.

“அவங்க இன்னும் அந்தப் பொண்ணு நினைப்புலேயே இருக்காங்க ஆன்ட்டி.”

“லூசாமா இவன்? அந்தப் பொண்ணுக்குத்தான் இப்போ கல்யாணம் ஆச்சே?”

“இல்லையில்லை… இது வேற மாதிரித் தெரியுது ஆன்ட்டி.”

“வேற மாதிரியின்னா?”

“கௌதம் மனசுல ஏதோ ரிவென்ஜ் இருக்கு.”

“என்ன?!” ஜானகி ஆச்சரியப்பட தன்வி சிரித்தாள்.

“விட்டுப் பிடிக்கலாம் ஆன்ட்டி. கௌதமுக்கு ஏதோ ஒரு அட்ராக்ஷன் அந்தப் பொண்ணு மேலன்னு எனக்குத் தோணுது.”

“அதெல்லாம் பெருசா ஒன்னுமில்லை தன்வி. இதுவரைக்கும் நம்ம லெவல்லயே மனுஷங்களைப் பார்த்துட்டு திடீர்னு வித்தியாசமா ஒன்னைப் பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு வருமில்லை. அதுதான் இது.”

“எனக்கும் அது புரிஞ்சுது ஆன்ட்டி. ஆனா நாம சொன்னா அதை கௌதம் ஏத்துக்க மாட்டாங்க. சப்போஸ், நாம அதைப்பத்திப் பேசப் பேச இன்னும் பிடிவாதம்தான் ஜாஸ்தியாகும்.”

“கரெக்ட்.”

“அதால நான் விட்டுட்டேன். ஒரு கட்டத்துல கௌதமே அதைப் புரிஞ்சுக்குவாங்க.”

“ம்… இதென்ன சினிமாவா தன்வி? இந்த மிடில் கிளாசெல்லாம் நமக்கு செட் ஆகாதும்மா. ஒரே மாசத்துல ரெண்டு பேரும் தலையைப் பிச்சுக்குவாங்க. அது புரியலை கௌதமுக்கு.”

“கூடிய சீக்கிரம் புரியும் ஆன்ட்டி.”

“இவன் ஏதாவது ஏடாகூடமாப் பண்ணிட்டான்னா?”

“அப்பிடித்தான் தோணுது ஆன்ட்டி. ஒரு கண்ணை கௌதம் மேல வெக்கச் சொல்லி அப்பாக்கிட்டச் சொல்றேன்.” இரண்டு பெண்களும் கொஞ்சம் கவலையோடே வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

***

அதே இடம்… அதே கிணறு…

ஆனால் அன்றைக்கு பூரண நிலா பவனி வந்தது. இன்று… நிலா சற்றே தன் முழு வடிவம் இழந்திருந்தது. அந்த இடமே கொஞ்சம் இருளில் மூழ்கிக் கிடந்தது.

நீரில் சலசலப்புச் சத்தம். மாதவன் அந்த ராத்திரிப் பொழுதில் அங்கு நீச்சலடித்துக் கொண்டிருந்தான். பல்லவி படிக்கட்டின் முடிவில் உட்கார்ந்து கணவனையே பார்த்திருந்தாள். பச்சையும் சிவப்பும் ஆரஞ்சும் கலந்தடித்த கண்டாங்கிச் சேலை. தலை நிறையப் பூ. நெற்றி வகிட்டில் தீட்டியிருந்த குங்குமம். பார்க்க அத்தனை அழகாக இருந்தாள். ஆனால் முகத்தில் கடுமையான சிந்தனைத் தெரிந்தது.

கௌதமை இன்று அங்கு அவள் கொஞ்சமும் எதிர்பார்திருக்கவில்லை. அதுவுமில்லாமல் அதே சமயத்தில் அங்கு மாதவனும் வந்து நின்ற போது பல்லவிக்கு மூச்சடைத்து விட்டது. விதி அவளது வாழ்க்கையில் எதற்குத் திரும்பத் திரும்ப விளையாடுகிறது என்று அவளுக்குப் புரியவில்லை.

தன் வாழ்க்கையில் வந்த அந்த இரு ஆண்கள் மனதிலும் என்ன இருக்கிறது என்று அவளுக்குப் புரியவில்லை. கணவன் அளவுக்கு மீறிய அமைதியைக் காட்டுகிறான். அமைதியாக ஒதுங்க வேண்டியவனோ தேடி வந்து வில்லங்கம் பண்ணுகிறான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? நீர்த்துளிகள் தன்மீது தெறிக்கவும் திடுக்கிட்டுப் பார்த்தாள் பல்லவி.

“என்ன யோசனை?” கணவனின் கேள்வியில் சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டாள் பெண்.

“ஒன்னுமில்லை.” இப்போது கணவன் அவளுக்காகக் கையை நீட்ட ‘இல்லை’ என்பது போலத் தலையை ஆட்டினாள்.

“ஏன்?”

“இதுக்கப்புறமா தலையைக் காய வெக்குறது கஷ்டம்.”

“பரவாயில்லை. நீ வா.”

“ஏங்க! நாம இன்னைக்கு இங்கயே தங்கலாமா?”

“சமாளிப்பியா?”

“ஏன்? ஹட்லதான் இப்போ எல்லாம் இருக்கே.”

“உனக்கு ஓகேன்னா எனக்கும் ப்ராப்ளம் இல்லை பல்லவி. அம்மாக்கு ஃபோனைப் போட்டுச் சொல்லிடு. இங்கயே சாப்பாட்டை அனுப்பட்டும்.”

“சரிங்க.” ஃபோனோடு அவள் மேலே வந்துவிட மாதவனும் கொஞ்ச நேரத்தில் குளியலை முடித்துக்கொண்டு வந்துவிட்டான். சாப்பாடும் சற்று நேரத்திலேயே வந்துவிட உண்டுவிட்டுத் தோட்ட வேலைகளைப் போய் பார்த்துவிட்டு வந்தார்கள்.

சுற்றிவர இருந்த மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு வெளியே வந்தாள் பல்லவி. கயிற்றுக் கட்டிலை முற்றத்தில் போட்டுக்கொண்டு வானம் பார்த்துப் படுத்திருந்தான் மாதவன். 

காரிருள்… லேசாக ஒன்றிரண்டு மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கே. இரவு நேரம் என்பதால் வண்டுகளின் ரீங்காரம் மட்டும் காதில் கேட்டது. அவளையறியாமலேயே பெருமூச்சு விட்டாள் பல்லவி.

இந்த ஒன்றரை மாதங்களுக்குள் அவள் வாழ்க்கையில் என்னவெல்லாமோ நடந்து விட்டன. எல்லார் வாழ்விலும் வருவதுபோல அவள் வாழ்விலும் காதல் ஒன்று வந்தது. ஆனால் தகுதியற்றவன் மேல் வந்த போது மனம் சுக்கு நூறாகிப் போனது. 

அதிலிருந்து மீண்டு வருவதற்கு முன்பே இன்னொரு மனிதன் கழுத்தில் கத்தியை வைத்து, அதே கழுத்தில் மூன்று முடிச்சையும் போட்டுவிட்டான். 

ஆனால்… அவள் மனதில் அவள் உருவகித்திருந்த இரண்டு பிம்பங்களுமே பொய்த்துப் போயின. ஆசையாகக் காதலித்தவன் வாழ்ந்த வாழ்க்கை கண்ணியமானதாக இருக்கவில்லை. ஆசையின்றிக் கைப்பிடித்தவன் கொடுத்திருக்கும் வாழ்க்கை கண்ணியமாக இருக்கிறது.

கணவனைச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் பல்லவி. இவளையே இமைக்காமல் பார்த்திருந்தான். பல்லவி கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள். அவன் கை அவளுக்காக நீள அதைத் தாமதிக்காமல் பற்றிக் கொண்டாள்.

“என்ன யோசனை?”

“ஒன்னுமில்லை.” அவள் பதிலை அவன் நம்பவில்லை. அவன் பக்கத்தில் அவள் அமர, அவன் தலை அவள் மடிக்கு இடம் மாறியது.

“என்னோட வாழ்க்கையைப் பத்தி யோசிச்சேன்.”

“அவ்வளவு கஷ்டமா இருக்கா என்ன?”

“இல்லை… சுகமா இருக்கு.” இதைச் சொல்லும் போதே பல்லவியின் குரல் ரசனையாக இருந்தது.

“உன்னோட வாழ்க்கைன்னு தனிச்சுப் பார்க்காம அதுல என்னையும் சேர்த்து நம்ம வாழ்க்கைன்னு சொல்லிப்பாரு பல்லவி. இன்னும் அழகா இருக்கும்.”

“நீங்க இல்லாம எனக்கு ஏதுங்க தனியா ஒரு வாழ்க்கை?” அவள் கை அவன் தலையைக் கோதியது. 

“அப்போ நம்ம வாழ்க்கையில நாம ரெண்டு பேர் மட்டுந்தானா பல்லவி?” அவன் எங்கே வருகிறான் என்று புரிய பல்லவி புன்னகைத்தாள். இது வாழ்க்கையின் அடுத்த கட்டம் இல்லையா!

“நீங்க எப்பிடிச் சொன்னாலும் சரிதாங்க.”

“ஏன்டா? உனக்குன்னு எந்த ஐடியாவும் இல்லையா?”

“இருக்கா இல்லையாங்கிறதை விட… தேவையில்லைன்னு தோணுது.”

“ஏனப்பிடி?”

“தெரியலை… நீங்க முடிவெடுத்தா அது சரியாத்தான் இருக்கும்.” அவள் கண்களும் முகமும் ‘என் சகலமும் உன் அடைக்கலம்’ என்று சாசனம் எழுதியது.

“தான்க் யூ!” தன் தலைக் கோதிய அவள் கரத்தை எடுத்து அதில் முத்தம் வைத்தான் மாதவன். 

“ஆனா… கல்யாணம் பண்ணும் போது இந்த நம்பிக்கை இருக்கலைல்ல?” கணவனின் கேள்வியில் ஓசையின்றிச் சிரித்தாள் பல்லவி.

“இல்லை… சத்தியமா இல்லை.”

“ம்… அன்னைக்கு ராத்திரி பட்டுப் பட்டுன்னு பேசினப்பவே புரிஞ்சுது.”

“அது… உங்களைப் பிடிக்காம எல்லாம் இல்லீங்க.”

“பிடிக்கலைதானே?”

“ஏங்க? பிடிக்காம யாராவது கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா?”

“அப்போ பிடிச்சிருந்ததா?” அவள் மடியிலிருந்து எழுந்தவன் ஒரு கையைத் தலைக்கு அணையாகக் கொடுத்து அவள் முகம் பார்த்துப் படுத்துக் கொண்டான்.

“பிடிச்சுதான்னு தெரியலை… ஆனா இந்த மனுஷன்கிட்ட எல்லாம் சரியா இருக்கும்னு தோணியிருக்குமாக்கும்.”

“நல்ல பதில்.” அவன் கேலியாக சிலாகிக்க பல்லவி இப்போது சத்தமாகச் சிரித்தாள். 

“தெரியலைங்க… அப்பாவைத் தவிர வீட்டுல இருக்கிற அத்தனைப் பேருக்கும் உங்க மேல அவ்வளவு நல்ல அபிப்பிராயம். ஒரு வேளை அதுதான் காரணமோ?”

“இருக்கலாம்.”

“ஆனா போகப்போக மனசுல இருந்த எண்ணம் எல்லாம் மாறிப்போச்சு.”

“என்னன்னு?”

“ஊர் உலகத்துக்குத்தான் இது கல்லு, நமக்கில்லைன்னு.”

“உங்களுக்கு என்னவாம்?” இப்போது பல்லவி அவனருகில் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.

“பல்லவின்னு வந்துட்டா இந்தக் கல்லு கரைஞ்சு போயிடும்.” சொல்லிவிட்டு பல்லவி கணவன் முகம் பார்க்க அவன் புன்னகைத்தான்.

“நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?”

“என்னம்மா இப்பிடியொரு கேள்வி?”

“பதில் சொல்லுங்க. உங்களால நான் சந்தோஷமா இருக்கேன். அதுமாதிரி என்னால நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?”

“நிறைய…” இப்போது பல்லவியின் கண்களில் சட்டென்று கண்ணீர் துளிர்த்தது.

“ஏய்! என்ன இது?” 

“தெரியலை, எனக்கு அழணும் போலத் தோணுது.” கண்ணீரோடு அவள் சிரிக்க அவள் மார்பில் அவன் தலை சாய்த்துக் கொண்டான்.

கூடலே இல்லாத கூடல் அது! அந்த சௌந்தர்யமான பொழுதில் இருவரும் மௌனித்து ஒருவர் அருகாமையை மற்றவர் ரசித்திருந்தார்கள். பாதி நிலவு அவர்கள் உறவுக்கு சாட்சியாக நின்றிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!