AnthaMaalaiPozhuthil-17

 அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 17

   அன்றைய காலை பொழுதில் சூரிய பகவான் ரகுநந்தன், அபிநயா அறையில் கதிர் வீச்சுக்களை வீச தயாராக இருந்தான்.

       அபிநயா தன் புகுந்த வீட்டிற்கு பழகி இருந்தாள். எல்லோரோடும், ஒட்டி உறவாடிவிட்டாள்.என்றெல்லாம் கூற முடியாது. ஆனால், யாரோடு எப்படி பேசி, பழக வேண்டும் என்று ஓரளவுக்கு  கற்றுவிட்டாள். 

     பவானியம்மாள், அன்பாக பேசினார். அளவாக பேசினார். இவள் விஷயத்தில், அனாவசியமாக மூக்கை நுழைப்பதில்லை. அவருண்டு, அவர் வேலை உண்டு என்று இருந்தார்

        ரேவதியின் பேச்சு அவளுக்கு பழகி இருந்தது. சுரேஷ் அந்த வீட்டில் இருக்கிறானே ஒழிய, அவனால் எந்த பிரச்சனையும் அவள் கண்களுக்கு புலப்படவில்லை. ரேவதியின் கணவன், கவினின் அப்பா, என்ற உறவோடும் அந்த வீட்டு மாப்பிள்ளை என்ற மரியாதையோடும் அவனின் அளவீடு நின்று விட்டது.

     கவின், ‘அத்தை…என்று இவளை நெருங்கிவிட்டான் என்று கூற முடியாது.

        ஆனால், வந்த அன்று, அவன் பாராட்டிய பகைமை இன்றில்லை. மாமாவுக்காக, அத்தையை ஏற்றுக் கொண்டான் என்றும் கூறலாம். அவளும், அவனை அதிகம் நெருங்க முயற்சிக்கவில்லை.

    குழந்தையை எதிலும் கட்டாயப்படுத்த கூடாதுஎன்ற கொள்கை அவளுள். அதுவும் கவின் போன்ற குழந்தையிடம் தனக்கு நிதானம் அவசியம் என்று முடிவு எடுத்திருந்தாள்.

அலாரம் அடிப்பதற்கு முன் விழித்துவிட்டாள்.

அவள் எண்ணம் கவினை சுற்றி வந்தது.

       இப்ப என் கிட்ட கவின் முன்ன மாதிரி இல்லை. நான் பேசினாலும், அவன் காது கொடுத்து கேட்கிறான். நான் இனி அவனிடம் நெருங்கி பழக முயற்சி எடுக்கணும்.தனக்குள் குறித்து கொண்டாள்.

                    எழுந்திருக்கும் நேரம் நெருங்க, திரும்பி படுத்தாள்.

     ரகுநந்தன் தூக்கத்தில் இருந்தான். அவள் கண்கள் அவனை ரசித்தது. அவளை விட அதீத நிறம். செதுக்கினார் போல் இருந்தான். தினமும், ஜாக்கிங், உடற்பயிற்சி செய்து கட்டுக் கோப்பான உடல்.

            அவன் கண்களில் அழுத்தம். ஆனால், உதட்டில் எப்பொழுதும் ஒரு புன்னகை. அழகன்…அவள் மனம் ஒத்து கொண்டது.

        கோபக்காரன் தான். கோபம் வராதுனெல்லாம் சொல்ல முடியாது.அவளுடைய இத்தனை நாள் பழக்கம் கூறியது.

அவன் கோபத்தை எண்ணி கண்களை உருட்டி கொண்டாள்.

    ஆனால், சண்டை எல்லாம் போட மாட்டாக. என்ன, கோபம் வந்தாலும் நிதானமா சமாதான கோடி பறக்க விட்டுருவாக. அவுக அக்கா கிட்ட கூட, அப்படி தான் இருக்காக.தன் கணவனை மெச்சுதலாக பார்த்தாள்.

            கல்யாணத்து முதநாள் சாயங்காலம் குடிச்சிருந்தாக. அப்புறம் குடிக்கலை. எப்பவாது குடிப்பாக போல. இல்லை விட்டுட்டாகளா?’ என்ற சந்தேகம் அவளுள் வந்தது.

     கண்கள் என்னவோ அவனை தான் தழுவி கொண்டிருந்தது.

                  அவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியையும் தான்.

சூரியனின் கதிர் வீச்சை விட, அவள் பார்வையின் வீச்சின் தாக்கம் அதிகம் இருக்க அவனுக்கு விழிப்பு தட்டிவிட்டது.

     கண்மூடி குப்புற படுத்துக்கொண்டான். கைகளால், அவன் முகத்தை மறைத்துக் கொண்டு, அதன் இடுக்கின் வழியாக அவளை பார்க்க ஆரம்பித்தான்.

     அவளோ அவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை பார்த்து கொண்டிருந்தாள்.

     சொன்னால் சொன்ன வார்த்தையை காப்பாத்துவாக.அவள் மனம், ஒரு நொடி துள்ளியது.

    மறுநிமிடமோ, அவள் கண்கள், அந்த இடைவெளியை ஏக்கமாக தழுவியது. அவன் அவளை கண்டுகொண்டான்.

                நானா இவளை தள்ளி போக சொன்னேன். அவ தானே சொன்னா?’ அவன் மனம் முரண்டு பிடித்தது.

 முதல் இரண்டு நாள் இருந்த நெருக்கம் கூட இப்பொழுது இல்லை.அவளுக்கு லேசாக வலித்தது.  அவள் முகத்தில் மெல்லிய வாட்டம்.

     என்ன இப்படி வருத்தப்படுறா? இதை சரி செய்யணுமே?’ அவன் சிந்திக்க ஆரம்பித்தான்.

               இந்த இடைவெளி இப்படியே இருந்திர கூடாது.அவனும், அவளும் ஒரு சேர அதையே எண்ணினர்.

    அலாரம் அடிக்க, அவள் அடித்து பிடித்து கொண்டு எழ, “வாத்தியாரம்மா…” அவன் குரல் அவளை தடுத்தது.

          முழிச்சிட்டாகளா? எப்ப? என்னை பார்த்திருப்பாகளோ?’ அடுக்கடுக்கான கேள்வியோடு அலாரம் சத்தத்தை நிறுத்திவிட்டு அவனை தன் கண்களை விரித்து அதிர்ச்சியாக பார்த்தாள்.

           இப்படி தூங்கும் பொழுது கண்ணை விரிச்சி விரிச்சி பார்க்க மட்டும் தான் செய்வீங்களா? தூங்கும் பொழுது, இந்த கதையில், சினிமாவில் வர்ற மாதிரி தலை கோதுறது, நெத்தியில் கிஸ், மீசையை முறுக்குறது? அதெல்லாம் கிடையாதா?” அவன் திரும்பி படுத்து, தன் கைகளை தலைக்கு அண்டை கொடுத்து புருவம் உயர்த்தி கேட்டான் ரகுநந்தன்.

     தான் சிக்கி கொண்டதை மறைக்க, தன் இடுப்பில் கை வைத்து, அவனை முறைத்தாள்.

      வாத்தியரம்மா, உங்க கண்டிஷன் எனக்கு தானே? உங்களுக்கு இல்லையே?” என்று நியாயம் கேட்டான் அவன்.

  இதுக்கு தான் நான் சொல்றேன். கதை புக் படிக்காதீங்க. சினிமா எல்லாம் பார்க்காதீங்க. ரொம்ப கெட்டு போயிடுவீங்க. பகவத்கீதை, சிவபுராணம் மாதிரி புக் படிங்கன்னு சொல்றேன்.” அவள் மிடுக்காக கூறினாள்.

     ரகுநந்தன் அலறி அடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான்.

     என்னை சாமியாரா போக சொல்றியா?”  அவன் கடுப்பாக கேட்க, “கல்யாணத்தில் விருப்பம் இல்லாதவக, சாமியாரா போனா தப்பில்லை.” அவள் முகத்தில் குறும்பு கூத்தாடியது.

   அதெல்லம் அப்ப, இப்ப இல்லை.” அவன் எழுந்து கொண்டே கூறினான்.

     இப்ப என்ன ஆச்சு?” அவள் கேட்க, “ஓர் அழகான நல்ல மனசு கொண்ட பொறுமையான பிடிவாதக்கார புத்திசாலி பெண் என் தவத்தை கலைச்சிட்டா.” அவன் ரசனையோடு கூறினான்.

   காலையிலே இவ்வளவு பொய் சொன்னா உடலுக்கு நல்லதில்லை. அன்னைக்கு முழுக்க பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.” அவள் கூற, “வாத்தியரம்மா உங்களை பத்தி நான் சொன்னதெல்லாம் நிஜம்.” அவன் உறுதியாக கூறினான்.

     அது தான் எனக்கே தெரியுமே. நான் பொய்ன்னு சொன்னது, உங்கள் தவத்தை.” என்று கூறி கொண்டே, அவள் கிண்கிணியாக சிரிக்க,  வாத்தியர்மமா, சிஷ்யப்பிள்ளை பாவம். என்கிட்டே உங்க வேலையை காட்டுறீங்க.” என்று அவன் அப்பாவியாக கேட்டாலும், அவன் கேலி அவளை தொடர அவள் குளியறைக்குள் நுழைந்து கொண்டாள்.

         இவுக என்ன சொல்ல வராக?’ அவளுள் கேள்வி. நான் சொல்ல வரதை அவ புரிஞ்சிகிட்டாளா?’ அவனுள் கேள்வி.

     இத்தனை நாள் போல் நான் ஒதுங்கி இருக்க கூடாது.அவன் உறுதி எடுத்து கொண்டான்.

         அபிநயா, குளித்துவிட்டு, அழகிய கோலமிட்டாள்.அதன் பின் சமையலறை  வேலையில் மூழ்கி இருந்தாள்.

 சிறிது நேரத்தில், கவினின் சத்தம் வீடெங்கும் எதிரொலித்து கொண்டிருந்தது.

     வேலைக்கார்கள் உற்பட, அவர்கள் முகத்தை சுழித்து கொண்டார்கள்.

   பால் வேண்டாம்.” அவன் கால்களால் எட்டி உதைத்தான். டம்ளர், உருண்டு ஓடி, பால் கீழே சிதறியது. 

   ரேவதி அவனை, “மொந்த்… மொந்த்..” என்று முதுகில் நாலு போட, கவினின் அழுகை சத்தம் இன்னும் கூடியது. 

     அபிநயாவுக்கு சங்கடமாக இருந்தது. வழக்கமாக ரேவதி குழந்தையை கண்டிக்கும் பொழுது யாரும் குறுக்கே செல்வதில்லை. ரேவதியின் பேச்சுக்கு முதல் பயம். கவினின் பிடிவாதத்திற்கு அடுத்த பயம்.

    ரகுநந்தன் மட்டுமே அதற்கு விதி விலக்கு.  அபிநயா, ரேவதியின் பேச்சுக்கு பயந்தே குறுக்கிடுவதில்லை. ஆனால், இன்று அதற்கு முற்று புள்ளி வைக்க எண்ணி அவர்கள் அருகே சென்றாள்.

    கவின்…” என்று அன்பாக அழைத்தாள்.

         அழுகைக்கு இடையில், அவளை பார்த்தான் கவின். “பால் வேண்டாமா?” அவனுக்கு இசைவாக கேட்டாள் அபிநயா.

   வேண்டாம்…என்பது போல் கவின் தலை அசைக்க, “சரி வேண்டாம்.” அபிநயாவும் கூற, கவின் முகத்தில் புன்னகை.

    இப்படி வேண்டாமுன்னு சொல்ல எங்களுக்கு தெரியாது?” ரேவதி முணுமுணுத்தாள்.

     ஸ்கூலுக்கு போகணும் தானே?” அவள் கேட்க, “ம்…” கவின் தலை அசைத்தான்.

    என்ன சாப்பிட்டுட்டு போக போறீங்க?” அபிநயா கேட்க, அவன் மறுப்பாக தலை அசைத்தான்.

   அடி வாங்கியாவது, குடிக்கறது இந்த பாலை மட்டும் தான்.   அதையும் கெடுத்தாச்சு.” ரேவதி சலித்துக் கொண்டாள்.

        அபிநயா அவளை பொருட்படுத்தவே இல்லை.

   ரகுநந்தன் வேலைக்கு செல்ல ஆயுத்தமாகி படிறங்கி வந்தான்.

                    அப்பொழுது, சுரேஷ் கிளம்பி இருந்தான். சுரேஷிற்கும், ரகுநந்தனுக்கும் இடையில் அளவான பேச்சு தான் இருந்தது.

              ரகுநந்தனின் பேச்சு, தன் அக்காவின் கணவர் என்ற மரியாதை நிமித்தமாக மட்டும் தான் இருந்தது. சுரேஷின் பேச்சு, இந்த வீட்டில் தங்க வேண்டும் என்ற நிர்பந்தத்திலும், தொழிலின் நிர்பந்தத்திலும் இருப்பதை இத்தனை நாட்களில் அபிநயா கணித்திருந்தாள்.

                         தம்பி, கவின் இன்னைக்கு பால் கூட குடிக்கலை.” ரேவதி, அபிநயாவை குற்றம் சாட்டும் விதமாக ரகுநந்தனிடம் முணுமுணுத்தாள்.

    ரகுநந்தன், கவினை தூக்கி கொண்டு மேஜை அருகே சென்றான்.  “இட்லி நோ…” என்று அவன் மீண்டும் உரக்க கத்தினான்.

    ஹை... பை… எனக்கும் இட்லி நோ.” என்று கவினிடம் ஹைபை செய்தாள் அபிநயா.

   இருவருக்கும், அவர்கள் ஏர் ஹை பைநினைவு வர அவர்கள் கண்கள் ஒருசேர மற்றவர்களை பார்த்துக்கொண்டு ஐ ஹை பைசெய்து கொண்டது.

       அபிநயாவின் முகத்தில் வெட்க புன்னகை. அவன் முகத்திலும், சிறிதும்  ஆர்வம் குறையாத புன்னகை.

      என்ன என் பையன் சாப்படையும் கெடுத்துட்டு, ரெண்டு பேரும் நடு ஹாலில், பார்வையாலையே ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க.ரேவதி இவர்களை கடுப்பாக பார்க்க, “நாம்ம ஸ்கியுவர் சாப்பிடுவோமா?” என்று கவினிடம் கேட்டாள் அபிநயா.

  கவின், ‘இது என்ன?’ என்பது போல் அபிநயாவை பார்த்தான்.

      கவின் குட்டி, அம்மா கிட்ட சமத்தா கிளம்பி வருவானா? அத்தை ரெடி பண்ணி வச்சிருப்பேனா? சரியா?” என்று கேட்க, ‘என்ன தான் என்று பார்ப்போம்.என்ற எண்ணத்தோடு, அவர்கள் அறைக்குள் கம்பீரமாக நுழைந்து கொண்டான் கவின்.

அவனின் அழுத்தத்தையும், பிடிவாதத்தையும் கொண்ட நடையை மனதில் குறித்து கொண்டாள் அபிநயா.

   கவின் என்னத்த சாப்பிட போறான்?’ என்ற சலிப்பு ரேவதியின் முகத்தில்.

   அப்படி என்ன தான் கொண்டு வாரான்னு பார்ப்போம்.என்ற ஆர்வம் ரகுநந்தனின் முகத்தில்.

    கவின் வரவும், தன் பின்னே மறைத்து வைத்திருந்த தட்டை அவன் முன் நீட்டினாள் அபிநயா.

         சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறத்தில் சதுர வடிவில் சின்ன சின்ன இட்லி. ஒரு மெல்லிய மர குச்சியில் கோர்க்கப் பட்டிருந்தது. கண்ணைக் கவரும் விதத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக, இட்லி என்று கூற முடியாத படி இருந்தது. இட்லிக்கு இடையே, குடை மிளகாய், பன்னீர் இடம் பெற்றிருந்தது.

     சாப்பிடுவோமா?” என்று ஆர்வமாக கேட்டாள் அபிநயா.

கவின் அதை பார்த்து, ஆசையாக தலை அசைத்தான்.

   அத்தைக்கு ஒன்னு குடுப்பியா?” குழந்தை போல் அவனிடம் கை நீட்டினாள் அபிநயா.

    கவினுக்கு அந்த ஸ்கியுவர் பிளேட் அவனது என்ற சந்தோசம் மனதில் வர சம்மதமாக தலை அசைத்தான்.

   மாமாவுக்கு ஒன்னு.” ரகுநந்தன் கை நீட்ட, அவனுக்கும் கொடுக்க எத்தனித்தான் கவின்.

    வேண்டாம் கவின். நீ சாப்பிடு. நான் உங்க அத்தை கிட்ட ஷேர் பண்ணிக்குறேன்.” என்று அபிநயாவின் கைகளில் இருந்த ஸ்கியுவரை அவள் விரல் வரை நெருங்கி, பெற்று கொண்டான்.

      அதை பெறுகையில், அவளை நெருங்கி அவள் காதில், “நான் உன்னை தொடலை.” மெலிதாக அவள் காதில் கிசுகிசுத்தான்.

     அவன் குரல் மட்டுமே அவள் செவிகளை தீண்டியது. அவன் இதழ்கள் அல்ல.

     அவன் மூச்சு காற்று மட்டுமே அவள் தேகத்தை தீண்டியது. அவன் தேகம் அல்ல.

   அனைத்தும் ஒரு நொடி தான்.  இருப்பினும், அபிநயா சற்று தடுமாறி போனாள். என்ன நடக்கிறது?’ என்று மற்றவர்களுக்கு தெரியவில்லை. கவின் ஆர்வமாக சாப்பிட்டு கொண்டிருந்தான். 

   ரேவதியும், பவானியும் கவினை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தனர்.

   ரகுநந்தன் முகத்தில் கேலி புன்னகை. “எனக்கு ஸ்கியுவரா இல்லை இட்டிலியா?” அவன் தீவிரமாக கேட்க நினைத்து, மென்மையாக கேட்டான்.

     எது கேட்டாலும் தரேன்.” அவள் தீவிரமாக தான் பதில் கூறினாள். “எதுனாலுமா?” அவன் இருள் பொருள் பட கேட்டு, கண்சிமிட்டி சிரித்தான்.

        ஆறின இட்லி தான் உங்களுக்கு.” முணுமுணுத்து கொண்டே, வெடுக்கென்று திரும்பி சமையலறைக்குள் சென்றாள் அபிநயா.

திரும்பிய பின், அவன் பேசிய பேச்சில் அவள் மறைத்து வைத்திருந்த புன்னகை, “க்ளுக்…” என்று எட்டி பார்த்தது.

    அவள் தோள் குலுங்கியதில், அவள் இடை அசைவில் அவள் புன்னகையை கண்டு கொண்டு, தன் நாக்கை துருத்தி அவளை ரசனையோடு பார்த்தான் ரகுநந்தன்.

கவினை பார்த்தபடி, “இத்தனை வருஷம் இருக்க, பிள்ளை கிட்ட எப்படி பேசணும், பிள்ளையை  எப்படி கையாளனும் தெரியலை. அழகா ஒரு மாசத்தில் பிள்ளையை கணிச்சி, அவ சொல்றதை கேட்க வச்சிட்டா.” என்று ரேவதியிடம் மருமகளை பற்றி பவானியம்மாள் பெருமையாக பேசினார்.

    தன் தாயின் சொல், ரேவதியை சுருக்கென்று தைக்க, “பார்த்துமா, என் பையனை மட்டுமில்லை, உன் பையனையும் அவ வழிக்கு கொண்டு வந்திற போறா.” என்று ரேவதி கழுத்தை நொடித்தாள்.

      பவானிம்மாள், தன் மகனை பதட்டமாக பார்க்க, ரகுநந்தன் புன்னகையோடு தன் கண்களை சமையலறை பக்கம் சுழட்டி கொண்டிருந்தான்.

   நல்லவேளை. ரகு கேட்கலை. கேட்டிருந்தான், ரகு ராகுவா மாறி இருப்பான்.என்று எண்ணியபடி ரேவதியிடம் மேலும் பேச்சு வளர்க்காமல், சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

    அபிநயா இட்லி பரிமாற, “உட்காருங்க வாத்தியாரம்மா, கிளாஸ் போகனுமில்லை?” அவன் கேட்க, தலை அசைத்து அமர்ந்து கொண்டாள்.

    கிளாஸ் எப்படி போகுது?” அவன் கேட்க, “நல்லாருக்கு.” அவள் ஒற்றை வார்த்தையாக கூறினாள்.

    என்ன வாத்தியாரம்மா, ஒற்றை வார்த்தையா பேசுறாங்க? வெட்கமா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே? அது எப்பாவது தானே இவளுக்கு வரும்.என்ற கேள்வியோடு அவளை பார்த்தான்.

     அபிநயா, ஏதோ யோசனையோடு சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

   நான் இன்னைக்கு உன்னை கிளாஸ்ல ட்ரோப் பண்ணிட்டு பிக்கப் பண்ணட்டுமா?” என்று அவன் அவளோடு இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தும் எண்ணத்தோடு கேட்க, பதட்டமாக மறுப்பாக தலை அசைத்தாள்.

                 நான் வழக்கம் போல் போய்க்குறேன்.” அவள் கூற, “உன் இஷ்டம்.” அவன் தோள்களை குலுக்கினான்.

    ரகுநந்தன் வேலைக்கு சென்றாலும், அவன் எண்ணங்கள் அபிநயாவை சுற்றியது.

    அன்று மாலை, வீடு திரும்புகையில் அவன் துணி கடையை கடந்து வருகையில், அவன் மனதில் அந்த எண்ணம் தோன்ற, கடைக்கு முன் காரை நிறுத்தினான்.

     நாளைல இருந்து, வாத்தியரம்மாவை ஜாக்கிங் கூட்டிட்டு போகணும்.திட்டமிட்ட படியே, அவளுக்கு ட்ராக்ஸ் வாங்கினான்.

     ட்ராக்சில், அபிநயாவை கற்பனை செய்து பார்த்தான். அவன் முகத்தில், ரசனையோடு ஒரு புன்னகை பூத்தது.

              ரகுநந்தன், கடையை விட்டு வெளியே வர, எதிரே அபிநயா செல்லும் வகுப்பில் ஒருவரை சந்திக்க, அவன் முகமனோடு புன்னகை புரிந்தான்.

         மேலும் பேசுகையில், அவர் கூறிய செய்தியில் ரகுநந்தனின் கை முஷ்டி இறுகியது. அவன் கைகளில் இருந்த உடை, நழுவி கீழே விழுந்தது.

      அபிநயா ஏன் இப்படி செய்தாள்?’ என்ற கேள்வியும் அவன் மனதை தைத்தது.

பொழுதுகள் விடியும்…