ANR8

ANR8

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 8

திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்று அபராஜிதனை அவன் எஸ்டேட்டில் பார்த்துவிட்டு வந்த பிறகு எல்லாம் துரிதமாக நடந்தேறியது. 

ராதாவின் வீட்டிலிருந்து எதிர்பாரா விதமாக சம்மதம் கிடைத்திருந்தது. சுஜாதா ஆனந்தத்தில் மிதந்து போனார். ராதாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டாடித் தீர்த்து விட்டார்.

ராதா குழம்பிப் போனாள். தன் வீட்டில் இதற்கு எப்படி சம்மதம் சொன்னார்கள்? மீராவிற்கு அழைத்துக் கேட்க, அபராஜிதன் நேரடியாக வீட்டுக்கே வந்து அம்மா அப்பாவிடம் பேசியதாகத் தகவல் சொன்னாள்.

‘அக்கா! சான்ஸே இல்லை. அத்தான் சூப்பர் தெரியுமா?’

‘என்ன ஆச்சு மீரா? எனக்கு பயமா இருக்கு.’

‘சூப்பர் மேனைப் பக்கத்துல வச்சுக்கிட்டு எதுக்கு பயப்பிடுறே?’ 

‘என்ன நடந்ததுன்னு சொல்லு மீரா.’

‘ஒன்னுமில்லை.‌ உன்னோட ஆள் வந்தாரு. அப்பாவையும் அம்மாவையும் உட்கார வெச்சு கொஞ்ச நேரம் பேசினாரு.’

‘என்ன பேசினார்?’ அவசரமாகக் கேட்டாள் ராதா.

‘இந்தக் கல்யாணத்துக்கு நம்ம அம்மா அப்பா ஏன் மறுப்புச் சொல்றாங்கன்னு அவரே புட்டுப் புட்டு வெச்சாரு. அவரோட பழைய லைஃபைப் பத்தி கொஞ்ச நேரம் பேசினாரு. இதுக்கும் ராதாக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு புளி போட்டு தேக்காத குறையா விளக்கினாரு. உன்னோட அவர் வாழப்போற வாழ்க்கையப் பத்திப் பேசினாரு. ப்ராப்ளம் சால்வ்ட்.’ அவள் பாணியில் சொல்லி முடித்தாள் மீரா.

‘அம்மா அப்பா என்ன பேசிக்கிறாங்க? உண்மையைச் சொல்லு மீரா.’ இப்போது ராதாவின் குரலில் பதட்டம் இருந்தது.

‘ரெண்டாந் தாரம் எங்கிறதைத் தவிர வேறேந்த நெருடலும் இல்லைங்கிற அளவுக்கு வந்திட்டாங்க.’

‘உண்மையாத்தான் சொல்லுறியா?’ 

‘சத்தியமாத்தான் சொல்லுறேன்க்கா. ஐயோ! அத்தான் எவ்வளவு ஸ்மார்ட்க்கா. ஒரு ஃபோட்டோ குடேன். என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட காட்டுறேன்.’

‘எங்கிட்ட இல்லை மீரா.’

‘ஐய்! இதானே வேணாங்கிறது.’

‘சத்தியமா இல்லை மீரா.’

‘நீயெல்லாம்… உன்னைக் கொண்டு போய் மியூசியத்தில தான் வெக்கணும்.’ கொலை வெறியோடுதான் பேச்சை முடித்திருந்தாள் மீரா.

ராதாவின் மனம் அத்தனை சீக்கிரத்தில் சமாதானம் ஆகவில்லை. அபராஜிதனையும் அழைத்துப் பேசினாள். மீராவாவது நடந்ததைச் சொன்னாள். இவன்,

‘அம்மா அப்பா சம்மதிச்சிட்டாங்க ராதா. டோன்ட் வொர்ரி. பீ ஹாப்பி.’ என்று முடித்துவிட்டான்.

திருமணத்தில் எந்தக் குறையும் வராதவாறு சுஜாதா ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார். ‘இரண்டாம் திருமணத்திற்கு இத்தனை அமர்க்களம் எதற்கு?’ என்று பார்ப்பவர்கள் மனதில் எண்ணத் தோன்றும் அளவிற்கு அத்தனையும் சிறப்பாக இருந்தது.

அர்ச்சனா கூட மிரண்டு போனாள். ‘என்ன ராதா? இப்படி க்ரான்ட்டா பண்ணுறாங்க?’ அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. 

அபராஜிதன் ஏற்கனவே சுஜாதாவிடம் சொல்லி இருந்தான்.

‘அம்மா! ரெண்டாவது கல்யாணம் தானேன்னு ராதா வீட்டுல ஒரு குறை கண்டிப்பா இருக்கும்.’

‘ஆமாப்பா.’

‘அந்தக் குறையை அவங்க எந்த இடத்திலேயும் உணரக் கூடாதும்மா. அதுதான் அவங்களுக்கு நாம செய்யப்போற மரியாதை.’

‘கண்டிப்பா பண்ணிடலாம்பா.’ சுஜாதாவும் உறுதியாகச் சொல்லி இருந்தார்.

மணப்பெண்ணிற்கு என்று மாப்பிள்ளை வீட்டார் செய்த சீரில் மகேஷ்வரியே கொஞ்சம் திணறித்தான் போனார். மருமகள் என்று நினைக்காமல் ராதாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்கிய சுஜாதாவை அவருக்கு நிறையவே பிடித்திருந்தது.

எங்கேயும் எந்தக் குறையும் தெரியவில்லை. சொல்லப்போனால் அபியின் முதல் திருமணத்தை விட இந்தத் திருமணம்தான் மிகவும் கோலாகலமாக இருந்தது.

கனவில் மிதப்பதைப் போல உணர்ந்தாள் ராதா. போராட வேண்டி இருக்கும் என்று நினைத்தது போக இன்று அபராஜிதனின் மனைவியே ஆகிப் போயிருந்தாள்.

மதர், ஸ்கூல் ஸ்டாஃப் என அத்தனை பேரும் வந்திருந்தார்கள். ஆத்மிகாமிவைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அப்பா சொல்லிக் கொடுத்த ‘அம்மா’ என்ற வார்த்தை அவள் வாய்க்குள் அத்தனை எளிதில் நுழையவில்லை. அந்தக் குழந்தைக்குத் தெரிந்ததெல்லாம் தன் பிரியத்திற்குரிய ராதா ஆன்ட்டி இனிமேல் தன் வீட்டிலேயே இருப்பார் என்பது தான். 

ராதாவைப் பார்க்கும் போதெல்லாம் அதை அவளிடமே கேட்டு ஊர்ஜிதப் படுத்திக் கொண்டாள்.

‘ஆன்ட்டி! நீங்க இனிமே எங்க வீட்டுல தான் இருப்பீங்களா?’ ஜவுளி எடுக்க வந்திருந்த போது ராதாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்டாள் ஆத்மிகா.

‘பேபி! எங்க வீடுன்னு சொல்லக் கூடாது. நம்ம வீடுன்னு சொல்லணும்.’ இது அபராஜிதன். 

அப்பா சொல்வதை எல்லாம் குழந்தை கேட்டுக் கொண்டாலும், சாதாரணமாக அப்பா மகளுக்கு இடையில் இருக்கும் ஒரு சுமூகமான உறவு அங்கு இன்னும் உருவாகவில்லை. அபி அதை இன்று வரை உருவாக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

‘சரிப்பா. நீங்க சொல்லுங்க ஆன்ட்டி. நம்ம வீட்டுல தான் இனி நீங்க இருப்பீங்களா?’ கொஞ்சலாக வந்தது குழந்தையின் குரல்.

‘ம்…’

‘ஜாலி… ஜாலி…’ கை கொட்டி ஆர்ப்பரித்த ஆத்மிகாவின் சத்தத்தில் கடையில் இருந்த அத்தனை பேரும் அன்று இவர்களைத் தான் திரும்பிப் பார்த்தார்கள்.

திருமணம் முடிந்த கையோடு எல்லோரும் அபராஜிதன் வீட்டுக்கு வந்திருந்தார்கள். பெண் வீட்டாரின் சொந்த பத்தங்களுக்காகத் தனியாக ஒரு பங்களாவை ஏற்பாடு பண்ணி இருந்தார் சுஜாதா. 

அர்ச்சனாவும், மீராவும் வீட்டை ஒரு முறை வலம் வந்தார்கள். மகேஷ்வரி திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தாலும் கொஞ்சம் இறுகினாற் போலத்தான் தெரிந்தார். 

“என்னாச்சு?” மனைவியின் முகத்தில் கவலை தெரியவும் சட்டென்று கேட்டான் அபராஜிதன்.

“இல்லை… அம்மாதான்…” ராதா இழுக்கவும் மகேஷ்வரியைத் திரும்பிப் பார்த்தான் அபி. ஒட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல் அமர்ந்திருந்தார்.

“ராதா! கல்யாணம் முடிஞ்ச கையோட தன் கடைமை முடிஞ்சு போச்சுன்னு எந்த அம்மாவும் நினைக்க மாட்டாங்க. தன் பொண்ணோட வாழ்க்கை இனி அவ புருஷனோட சந்தோஷமா இருக்கணுங்கிற வேண்டுதல், கவலை அவங்க மனசுல இருக்கும். புது இடம், புது மனுஷங்க… இதையெல்லாம் நம்ம பொண்ணு சமாளிச்சிடுவாளாங்கிற பயம் இருக்கும். அவங்க இப்போ அந்த டென்ஷன்ல இருக்காங்க. நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கிறேன்.”

“ம்…” இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை ராதாவிற்கு. நடக்குமா என்று நினைத்திருந்த திருமணத்தையே நடத்திக் காட்டியவன் இல்லையா! இதையும் அவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டாள்.

இரவு விருந்தும் மிகவும் தடபுடலாக ஏற்பாடாகி இருந்தது. உணவை முடித்துக் கொண்டு எல்லோரும் கிளம்பிப் போக நேரம் இரவு பத்தைத் தாண்டி இருந்தது. பெண் வீட்டாரும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பங்களாவிற்குக் கிளம்பி விட்டார்கள்.

ராதா ஆத்மிகாவின் ரூமில் உட்கார்ந்து கொண்டு குழந்தையோடு கதை பேசிக் கொண்டிருந்தாள். அதீத மகிழ்ச்சியில் குழந்தை உறக்கத்தைத் தொலைத்திருந்தது. 

“ஆன்ட்டி… ஸ்டோரி புக் ரீட் பண்ணுங்க.” தனது ‘ஸின்டரெல்லா’ புக்கை ராதாவிடம் கொடுத்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டாள் ஆத்மிகா. 

ஒரு புன்னகையோடே படிக்கத் தொடங்கினாள் ராதா. இரண்டு பக்கங்கள் கூடப் படித்திருக்க மாட்டாள். சுஜாதா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்.

“ராதா! நீ இங்க இன்னும் என்ன பண்ணுறே?” 

“ஆன்ட்டி எனக்கு ஸ்டோரி ரீட் பண்ணுறாங்க.”

“இன்னைக்குன்னு பார்த்து உனக்கு ஸ்டோரி வேணுமா ஆத்மி! ஆன்ட்டிக்குத் தூக்கம் வருது பாரு. அவங்க தூங்க வேணாமா?”

“ஆன்ட்டி… உங்களுக்குத் தூக்கம் வந்தா எங்கூடவே தூங்குங்க என்ன?”

“சரிடா குட்டி.” ராதாவின் பதிலில் திகைத்துப் போனார் சுஜாதா.

“என்னம்மா ராதா? குழந்தை தான் ஏதோ சொல்லுதுன்னா நீயும் அவ கூட சேர்ந்து பேசுறே.”

“நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி. நீங்க போய்த் தூங்குங்க.”

“அதுக்கில்லைம்மா…”

“ஆன்ட்டி… அதான் நான் சொல்லுறேனில்லை. நீங்க போய்த் தூங்குங்க.” அதற்கு மேல் சுஜாதா எதுவும் பேசவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. ஒரு பெரு மூச்சோடு நகர்ந்து விட்டார்.

கதையின் சுவாரஸ்யத்தில் குழந்தை ராதாவின் மார்பில் தலைவைத்த படி உறங்கி இருந்தது. ‘உம்’ கொட்டும் சத்தம் நின்று போயிருக்கவும் குனிந்து பார்த்தாள் ராதா. ஆத்மிகா தூங்கிப் போயிருந்தாள்.

நேரம் பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. வீடே கல்யாணக் களைப்பில் உறங்கிப் போயிருந்தது.

புன்னகைத்த படி புத்தகத்தை மூடி வைத்தவள் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தாள். அடுத்து என்ன பண்ணுவதென்று புரியவில்லை. 

சின்னவளைத் தனியாக விட்டுப் போக ஒரு மனது தயங்கியது என்றால், இன்னொரு மனது தானாக அபராஜிதனைத் தேடிச் செல்வதா என்று தயங்கியது.

‘அதுதான் எல்லாவற்றையும் யார் உதவியும் இல்லாமல் நடத்தத் தெரிகிறதே! இப்போதும் நடத்திக் கொள்ளட்டும்.’ மனது சண்டித்தனம் பண்ண அப்படியே சாய்ந்திருந்தாள். உதட்டில் இருந்த புன்னகை வாடாமல் இருந்தது.

அவள் சிந்தனையைக் கலைத்த படி திறந்தது ரூம் கதவு. திரும்பிப் பார்த்தாள் ராதா. அபி தான் நின்றிருந்தான். கதவிற்குப் பக்கத்தில் நின்ற படியே ஒரு கணம் அவளையும் குழந்தையையும் நோட்டம் விட்டவன் உள்ளே வந்தான்.

ராதாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. குழந்தை தன் மீது தூங்கியதால் எழுந்து கொள்ளவும் முடியவில்லை. 

நேராக அவள் பக்கத்தில் வந்தவன் அவள் மேலிருந்த குழந்தையை மெதுவாகப் பிரித்தான். அந்த நெருக்கத்தில், ஸ்பரிசத்தில் சிலிர்த்துப் போனாள் ராதா.

குழந்தையை அந்தப் புறமாக கட்டிலில் தூங்க வைத்தவன் ராதாவைக் கைப்பற்றி எழுப்பினான்.

“இன்னும் எத்தனை நேரத்துக்கு இங்கேயே உட்கார்ந்திருக்கிறதா உத்தேசம் ராதா?” அந்தச் சரசக் குரலில் விக்கித்துப் போனாள் ராதா. 

லைட்டை ஆஃப் பண்ணி விட்டு நைட் லாம்ப்பை ஆன் பண்ணியவன் மனைவியை அழைத்துக் கொண்டு அவர்கள் ரூமிற்கு வந்தான். பிடித்த அவள் கையை இன்னும் விடவில்லை.

முதன் முறையாக அந்த ரூமிற்குள் காலை எடுத்து வைக்கும் போது ஏனோ லேசாக நடுங்கியது ராதாவிற்கு. ஒரு முறை கண்களைச் சுழல விட்டாள்.

தலை ராத்திரிக்கான எந்த ஆர்ப்பாட்டமும் அங்கே இருக்கவில்லை. சாதாரணமாக இருந்தது ரூம். சேர்ந்தாற் போல ஒரு பாத்ரூம் தெரிந்தது.

“பிடிச்சிருக்கா?” அவள் ரூமை நோட்டம் விடுவதைப் பார்த்தவன் சட்டென்று கேட்டான்.

“ம்…” 

“ராதா… நீ ரொம்பப் பேச மாட்டியோ?” இயல்பாக அவன் கேட்கக் கோபம் வந்தது அவளுக்கு.

“கேக்குற கேள்விக்கெல்லாம் ரெண்டு வரியிலேயே பதில் சொல்லுறவங்க இதைக் கேக்கக் கூடாது.”

“ஏய்! நான் சாதாரணமாத் தான் கேட்டேன்.” அவன் சிரித்தான்.

“ஆனா நான் சீரியஸாத்தான் சொன்னேன்.” அவள் முறுக்கிக் கொண்டாள்.

“அப்படியா என்ன? அவ்வளவு ஷார்ட்டாவா பேசுறேன்?”

“ரொம்பவே.”

“சரி சரி. இனித் திருத்திக்கிறேன். ஒரு வேளை பேச்சைத் தொலைச்சிட்டேனோ என்னவோ?” அவன் வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் ராதா. 

“இத்தனை அழகா, பக்கத்துல ஒரு பொண்ணு, நமக்கே நமக்குன்னு நிக்கும் போது பேச்சு வருமா ராதா?” 

அந்தக் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தாள் ராதா. அவன் கெட்டிக் காரத்தனமாகச் சுதாகரித்துக் கொண்டது போல் தான் முதலில் தெரிந்தது ராதாவிற்கு.

இல்லையில்லை! அந்தக் கண்களில் கவலை தெரியவில்லை. மாறாகக் காதல் தான் வழிந்தது. 

அவன் கடந்தகாலம் இப்போது நிழலாடுவதை ராதா விரும்பவில்லை. அவன் கண்களுக்குள் தெரிந்த காதலை இமைக்காமல் பார்த்தாள்.

“அடேயப்பா! இந்தக் கண்கள் அப்படியே என்னை விழுங்கிவிடும் போல இருக்கே.” அந்தக் குற்றச்சாட்டில் இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

“என்ன? திடீர்னு மௌனமாகிட்ட?” அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டியவன் லேசாகச் சிரித்தான். 

“ஒரு வேளை பேச்சு இப்போ தேவையில்லைன்னு நினைச்சியோ?”

“ஐயையோ! நான் அப்படி நினைக்கலை.” சட்டென்று பதில் வந்தது.

“எப்படி நினைக்கலை?”

“நீங்க சொன்ன மாதிரி நினைக்கலை?” தந்தியடித்தாள் ராதா.

“நான் என்ன சொன்னேன்?”

“இப்போ பேச்சு தேவையில்லைன்னு…”

“பார்த்தியா… இப்போ நீயே சொல்லிட்டே, பேச்சு தேவையில்லைன்னு.”

“இல்லையில்லை.”

“ஏய் பேச்சை மாத்தாத.” அவன் கிடுக்கிப்பிடியில் திணறிப் போனாள் ராதா. அந்தத் திணறலை வெகுவாக ரசித்தான் அபி. 

படித்த பெண். டீச்சர் வேறு. ஆனால் தான் பேசும் வார்த்தைகளைத் தாங்க முடியாமல் அவள் திணறுவதும் நாணுவதும் அவனுக்கு அத்தனை பிடித்தமாக இருந்தது. கண்கள மிரள அவனைக் கடைக் கண்ணால் அவள் பார்க்கும் போது என்னென்னவோ தோன்றியது. அவனுக்கு வித்தியாசமான ஒரு உலகை ராதா அடிக்கடி அறிமுகப் படுத்தினாள்.

“ராதா!” அந்தக் குரலில் அத்தனை கிறக்கம். மெதுவாக அந்தப் பட்டு இதழ்களை அவன் நெருங்கும் போது… 

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு விலகினாள் ராதா. அபியும் குழம்பிப் போனான். 

‘யார் இந்த நேரத்தில்? அதுவும் அவர்கள் ரூம் கதவை இங்கிதமில்லாமல் தட்டுவது?’ தன்னை சுதாரித்துக் கொண்டவன் கதவைத் திறந்தான்.

“அப்பா! ஆன்ட்டியைக் காணலை.” கண்களில் நீர் திரள நின்றிருந்தாள் ஆத்மிகா. அபராஜிதன் ஒரு புன்னகையோடு ராதாவைத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வையும் சிரிப்பும் ஏதோ பண்ண உதட்டைக் கடித்தாள் ராதா.

“பேபிக்கு இப்போ ஆன்ட்டி வேணுமா?”

“ம்…” 

“அப்போ உள்ள வாங்க.” அப்பாவின் அழைப்பில் ஆச்சரியமாகப் பார்த்தது குழந்தை. அப்பாவின் ரூம் அதுவென்று தெரிந்திருந்தாலும் அங்கெல்லாம் அவள் இதுவரை வந்ததில்லை.

குழந்தையின் தயக்கத்தைப் புரிந்து கொண்டவன் சட்டென்று விலக, அப்போதுதான் அப்பாவிற்குப் பின்னால் நின்ற ஆன்ட்டியைக் கண்டது குழந்தை.

“ஆன்ட்டீ…” ஒரே ஓட்டமாகச் சென்று ராதாவைக் கட்டிக் கொண்டாள் ஆத்மிகா.

“சின்னக்குட்டி தூங்கலையா என்ன?” சின்னவளைத் தூக்கிக் கொண்டாள் ராதா. தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்திருந்த குழந்தையின் கன்னத்தில் மென்மையாக முத்தம் வைத்தாள்.

“ஊஹூம்.”

“ஏன்டா?”

“ஆன்ட்டி இல்லை அங்க.”

“அப்போ ஆன்ட்டியோட இங்க தூங்குறீங்களா?”

“ம்…” சின்னவள் சம்மதிக்கவும் கணவனை நிமிர்ந்து பார்த்தாள் ராதா. அதுவரை கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவர்களையே பார்த்திருந்தவன் கட்டிலைக் காட்டினான். ஒரு புன்னகையோடே அங்கு குழந்தையோடு போனாள் ராதா. 

சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை உறங்கிப் போனாள். அபி எங்கே என்று திரும்பிப் பார்க்க, அந்த ரூமோடு ஒட்டி இருந்த பால்கனியில் வானம் பார்த்து அமர்ந்திருந்தான். 

ஏனோ அவன் அமர்ந்திருந்த தோற்றம் ராதாவின் மனதைப் பிசைந்தது. சற்று முன் அநாதரவாக நின்ற ஆத்மிகாவைப் பார்ப்பது போல் இருந்தது. அமைதியாக அவன் பக்கத்தில் போய் அமர்ந்தாள். 

“தூங்கிட்டாளா என்ன?”

“ம்…”

“என்னாச்சு இன்னைக்கு?‌ இப்படி பாதி ராத்திரியில எந்திரிக்க மாட்டாளே?”

“குட்டிப் பொண்ணு இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருந்தாளா, அதான் தூக்கம் வரமாட்டேங்குது போல.”

“எனக்கும் தூக்கம் வரமாட்டேங்குதே ராதா. அப்போ நானும் ஹாப்பியா இருக்கேனா என்ன?”

“அதை நீங்க தான் சொல்லணும்?”

“என்ன சொல்லணும்?”

“ஹாப்பியா இருக்கீங்களா? இல்லையான்னு.” அவள் சொல்லி முடிக்க ஒரு மெல்லிய புன்னகையோடு அவளை இழுத்துத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

“இன்னைக்கு மட்டுமில்லை. இந்தப் பொண்ணு எப்போ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சுதோ! அப்ப இருந்தே நான் ஹாப்பியாத்தான் இருக்கேன்.” அவன் பேச்சில் ஆச்சரியமாக அவனை விழி விரித்துப் பார்த்தாள் ராதா.

“நான் நிஜத்தைத் தான் சொல்லுறேன் ராதா.”

“நான் உங்களை இங்க பார்த்ததே இல்லையே?” அவள் சொல்லவும் ஒரு தினுசாகச் சிரித்தான் அபி.

“ஆரம்பத்துல பெருசா ஒன்னும் தோணலை. ஆனாப் போகப் போக புரிஞ்சு போச்சு. இந்தப் பொண்ணு கிட்ட நாம கெஞ்சிக்கிட்டு நிக்கப் போற நாள் இன்னும் அதிக தூரத்துல இல்லைன்னு.” 

“நான் உங்களை… முதல் நாளே பார்த்தேன்.”

“எங்க? ஸ்கூல்ல பார்த்ததைச் சொல்லுறியா?”

“அன்னைக்குத்தான். ஆனா ஸ்கூல்ல பார்க்கிறதுக்கு முன்னாடி.”

“எங்கடா?”

“ரயில்வே க்ராஸிங்ல.”

“ஓ! நான் பார்க்கலையே?”

“என்னோட ஸ்கூட்டிக்குப் பக்கத்துல தான் கார் நின்னுது. நீங்க கூட அப்போ சிகரெட் பிடிச்சீங்க.”

“அப்படியா?”

“அந்த வாசத்துல எனக்கு இருமல் வரவும் சாரி சொல்லி சட்டுன்னு தூக்கிப் போட்டீங்க.”

“இங்கப்பார்றா. அப்புறம்…”

“அப்போவே தோணிச்சு…” 

“என்ன தோணிச்சு?”

“நீங்க செம ஸ்மார்ட்னு.”

“ஹா…ஹா… லவ் அட் ஃபர்ஸ்ட் ஸைட்டா?” அவன் வாய்விட்டுச் சிரிக்கவும் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ராதா.

“அப்புறம் என்ன ஆச்சு?”

“மதர் கூப்பிட்டு அறிமுகப்படுத்தினாங்க. ஆத்மிகாவைப் பார்த்தப்போ…” அதற்கு மேல் அவள் பேசவில்லை. வார்த்தைகள் சிக்கிக் கொண்டன. அவளை மென்மையாக வளைத்திருந்த அவன் கரங்களும் சட்டென்று இறுகிப்போயின. 

“ராதா!”

“ஆரம்பத்துல அதிர்ச்சியாத்தான் இருந்திச்சு. ஆனா சமாளிச்சுட்டேன். அப்புறம் வீட்டுக்கு வந்தப்போ தான் எல்லாம் தெரிய வந்தது.”

“அப்போ என்ன தோணிச்சு?”

“முயற்சி திருவினையாக்கும்.” மெல்லச் சிரித்தாள் பெண்.

“இவ்வளவு குறைகளைத் தாண்டி வர்ற அளவுக்கு அப்படி எங்கிட்ட என்ன இருக்கு ராதா?”

“தெரியாது.” சட்டென்று சொன்னாள்.

“பிடிச்சிருந்தது. அவ்வளவுதான்.”

“பிடிச்சிருந்ததுன்னா… எவ்வளவு பிடிச்சிருந்தது?”

“எனக்கு அதைச் சொல்லத் தெரியாது.”

“ஆனா உன்னை எவ்வளவு பிடிக்கும்னு எனக்குச் சொல்லத் தெரியும். சொல்லட்டுமா?” சொல்லத் தொடங்கியவனின் செய்கைகளில் அதிர்ந்து போனாள் ராதா.

“ஐயோ! என்ன இது? இங்க வச்சு…”

“வேற என்னை என்ன பண்ணச் சொல்லுற? அதான் உம் பொண்ணுக்கு ரூமைத் தாரை வார்த்துட்டயே.” அவள் சிணுங்கல்கள் எதையும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கருமமே கண்ணாகினான்.

 

error: Content is protected !!