YNM-4

YNM-4

4

சந்தேகம்

சமீர் அதிர்ச்சி நிலையிலிருந்து வெளியே வந்து… பரியை பார்த்த அடுத்த நொடி, “போடாங்க ஆஆஅ… நீயும் உன் நாசமான போன பிரெண்ட்ஷிப்பும்” என்று கடுப்பாக சொல்லிவிட்டு,

“நான் இப்பவே ஊருக்கு போறேன்… சரியான கொலைகார குடும்பம்டா இது… பிணத்தை புதைச்சு மரத்தை நடுவாய்ங்களாமே!” என்று தாமாக புலம்பி கொண்டே தன்னுடைய பையில் துணிகளை உள்ளே திணித்தான் சமீர்.

“டேய் சமீர்!” என்று பரி அழைக்க, அவனை கண்டுக்கொள்ளாமல்,

அங்கே தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நின்றிருந்த தன் நண்பர்களின் கூட்டத்தை பார்த்து, “ஒழுங்கா எல்லாம் என் கூடவே கிளம்பிடுங்க… இல்ல இவனோட கொலைகார மாமன் நம்மல எல்லாம் இங்கிருக்க தோப்பில மரமா நட்டுடுவான்…சொல்லிட்டேன்” என்றான் எச்சிரக்கையோடு!

சமீரின் வார்த்தைகளை கேட்டு மற்ற நண்பர்களுக்கும் பீதி கிளம்ப, “சமீர் சொல்றதை பார்த்தா எங்களுக்கும் பயமாத்தான் இருக்கு மச்சான்… நாங்களும் கிளம்புறோம்” என்று அவரவர்கள் தத்தமது பெட்டி பைகளை கைகளில் தூக்கி கொண்டு புறப்பட எத்தனித்தனர்.

பரி உச்சபட்ச கோபத்தோடு சமீரின் பையை பிடுங்கி வீசிவிட்டு, “அட.. ச்சீ த்தூ… இப்ப எதுக்கு ஓவரா சீனை போட்டுட்டு இருக்க” என்க,

“சீனை போடுறேனா… நீ பாட்டுக்கு என்னை தனியா விட்டுட்டு போயிட்ட… உன் மாமன் என்னை அந்த தோப்பு பக்கம் கூட்டிட்டு போய்  என்ன பேச்சு பேசுனா தெரியுமா? எனக்கு குலையே நடுங்கி போச்சு… அதுவும் மரமா நட்டிருவேன்னு எல்லாம் மிரட்டிறான் டா… அவ்வ்வ்வ்!

நான் என் வீட்டுக்கு நாலாவது பையன்?” என்று சொல்ல பரி கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்துவிட்டான்.

அப்போது அவன் நண்பர்களில் ஒருவன் சமீரிடம், “நாலாவது பையனா… டே! இந்த டைலாக்ல  ஒரே பையன்னுதான் சொல்லி நான் கேள்வி பட்டிருக்கேன்” என்றான்.

“ஏன்… நாலாவது புள்ளயா இருந்தா சாவனுமாடா… எந்த ஊரு நியாயம்டா இது?” என்று சமீர் பரிதாபமாக கேட்க,

பரி சிரித்து கொண்டே, “நீ சொல்றதெல்லாம் கரெக்ட்தான் மச்சி… ஆனா என் மாமன் பேசுனதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே… சும்மா மிரட்டிறான் அந்த ஆளு” என்றான்.

“எனக்கு அப்படி தெரியல… நான் கிளம்பிறேன்” என்று சமீர் மீண்டும் தன் பையை எடுக்க,

“சொல்றது கேளுடா… இன்னும் ரெண்டே நாள்… நம்ம எல்லோரும் ஒன்னாவே கிளம்பலாம்… பேகெல்லாம் ஓரமா வையுங்க” என்று தன் நண்பர்களிடமும் சமீரிடமும் நிதானமாகவே உரைத்தான் பரி.

அவன் நண்பர்கள் எல்லாம் யோசனையாக தயங்கி நிற்க சமீர் தெளிவாக, “உளராதடா… உனக்கு கல்யாணமே நாலு நாள் கழிச்சுதான்… அப்புறம் எப்படிறா நீ ரெண்டு நாளில எங்க கூட வர முடியும்?” என்று கேட்க,

“அதெல்லாம் ஏன் எப்படின்னு கேட்க கூடாது… வருவேன்… அவ்வளவுதான்… எல்லோரும் இங்க இருக்கிற வரைக்கும் ஜாலியா இருந்துட்டு கிளம்புவோம்” என்றான்.

“ஜாலியா இருக்கிறதா… அடப்பாவி! எவன் எப்போ என்ன பண்ணுவான்னு தெரியுமா நாங்க எப்படிறா ஜாலியா இருக்கிறது?” என்று சமீர் புலம்பி கொண்டே தலையை பிடித்து தரையில் அமர்ந்து கொள்ள,

பரி தீவிரமான யோசனையோடு அறையை விட்டு வெளியே வந்து சிகரெட்டை புகைக்க ஆரம்பித்தான். அவன் பாட்டுக்கு புகையை விட்டு கொண்டிருக்க,

அப்போது கொலுசு சத்தம் ரீங்காரமிட மகிழினி படியேறி வருவதை கவனித்த பரி அவசரமாக தன் சிகரெட்டை பின்னோடு மறைத்து சுவற்றில் தேய்த்துவிட்டு கீழே போட்டுவிட்டான்.

அவள் நேராக அவனை நோக்கித்தான் வந்து கொண்டிருந்ததாள். பரியின் பார்வை அவளை முழுவதுமாக மனதில் நிறைத்து கொள்ள அவளோ நேராக அவனிடம் வந்து நின்று,

“மாமா! உங்களையும் உங்க பிரெண்டசையும் கீழே சாப்பிட கூப்பிட்டாங்க… வாங்க” என்று சொல்லிவிட்டு இறங்க போனாள்.

பரி அவளை அழைக்க எண்ணும் போது அவளாகவே மீண்டும் திரும்பி வந்து நின்று தன் மூக்கை உள்ளுக்காக இழுத்து பார்த்துவிட்டு, “சிகரெட் பிடிச்சிட்டு இருந்தீங்களா?” என்று கேட்க,

“சேச்சே… என் பிரெண்ட் சமீர் புடிச்சிட்டு இருந்தான்” என்று ஒரு அப்பட்டமான பொய்யை அவன் சொல்லி முடிக்கும் போது சமீர் அறை வாசலில் வந்து நின்றிருந்தான்.

‘அடப்பாவி! இப்படி வாய் கூசாம பொய் சொல்லிட்டு இருக்கானே… எனக்கு சிகரெட் புடிக்கிற பழக்கமே இல்லையே டா!’ என்றவன் பொருமி கொண்டு நிற்க, பரி சொன்ன பதிலை கேட்டு அமைதியாக திரும்பி நடந்தாள் மகிழினி!

எதற்காகவும் யாருக்காகவும் தன் பழக்கவழக்கத்தையும் குணத்தையும் விட்டு கொடுக்காத தாமா இப்படி இவளிடம் நடந்து கொள்கிறோம் என்று பரிக்கு தனக்குத்தானே ஆச்சர்யப்பட்டு கொண்டான்.

அவன் இந்த சிந்தனையோடு அவள் சென்ற திசையையே பார்த்து கொண்டிருக்க சமீர் அங்கே வந்து, “அட ச்சே!… இந்த மாறி மொக்க சீன் எல்லாம் தமிழ் சினிமால நிறைய பார்த்துட்டேன்… ஓவரா பண்ணாதே” என்று நண்பனிடம் கடுப்பாக உரைத்தான்.

“இல்ல… மச்சான்… நிஜமாவே இவகிட்ட மட்டும் எனக்கு டிஃப்பெரண்ட் ஃபீல் வருது” என்று பரி உணர்வுகள் பொங்க சொல்ல,

“டே டே டே… உனக்கு அழகான பொண்ணுங்களை பார்த்தா எந்த மாதிரி ஃபீல் வரும்னு எனக்கு நல்லா தெரியும்டா” என்று நண்பனை வாரிய சமீர் மேலும், “டே! உன் காலில் வேணா விழுறேன் மச்சி! உன் கோக்கு மாக்கு வேலையெல்லாம் இந்த பொண்ணுகிட்ட மட்டும்  வைச்சுக்காதே… அவங்க அப்பன் உனக்கு   பாடை கட்டிறானோ இல்லையோ எனக்கு கட்டிடுவான்” என்றான்.

பரி நண்பன் சொல்வதை கேட்டு மௌனமாக நிற்க அப்போது சமீர் அவனிடம், “சரி சரி… கேட்கணும்னு நினைச்சேன்… அந்த பொண்ணை கூட்டிட்டு போனியே… தனியா என்ன பேசுனே?!” என்று ஆர்வமாக வினவ,

பரி மேலும் கீழுமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் கூப்பிடு… சாப்பிட கூப்பிட்டாங்க… எல்லோரும் கீழே போலாம்” என்று சொல்லிவிட்டு அவன் முன்னே சென்றான்.

‘இவன் எதையோ மறைக்கிறான் போலவே’ என்று சமீர் எண்ணி குழப்பமற்றான். அதேநேரம் நண்பர்களை அழைத்து கொண்டு சமீர் கீழே உணவு பரிமாறும் இடத்திற்கு சென்றான். பரி அங்கே ஏற்கனவே ஆஜாராகி இருக்க மாப்பிள்ளை என்பதால் எல்லோரும் அவனுக்கு எந்த குறையுமில்லாமல் உபசரிப்பதில் பரபரப்பாக இருந்தனர்.

அங்கே இருந்த மகிழினியை பார்த்த சமீர் நண்பன் அருகில் அமர்ந்து கொண்டே, “டே ப்ளீஸ் டா… சாப்பிடுற வேலையை மட்டும் பாரு” என்று அறிவுறுத்த,

அதற்கு முன்னதாகவே பரி தான் பார்க்க வேண்டிய வேலையில் தீவிரமாக இறங்கியிருந்தான். மகிழினியை பார்த்து ஜொள்ளு விடுவது!

அப்போது ஒற்றுமைக்கு அரத்தமே தெரியாத ஓரகத்திகள் இரண்டு பேரும் முறைத்து கொண்டே உணவுகளை பரிமாற அவர்கள் கூடவே சிலர் வரிசையாக எல்லோர் இலையிலும் பரிமாறி கொண்டு வந்தனர்.

பரி அவர்கள் வைத்த உணவு வகைகளை, ‘போதும் போதும்’ என்று சொன்னவன்,

மகிழினி அருகில் வரவும் அப்படியே தலைகீழாக மாறி போனான்.

அவள், “போதுமா? போதுமா?” என்று கேட்க இவனோ, “இன்னும் வேண்டும் வேண்டும்” என்று கேட்டு வாங்கி கொண்டான்.

மகிழினி புரியாமல், “உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?” என்று கேட்க, “ஹம்ம்” என்று மயக்கத்தில் தலையை மட்டும் அசைத்தான்.

அவள் சென்ற பிறகு சமீர் நண்பனின் பின் மண்டையிலேயே போட்டு, “அவ என்ன வைச்சிட்டு போயிருக்கான்னு உன் இலையில பாரு” என்க,

அப்போதே குனிந்து பார்த்தவன், “என்னடா இது இவ்வளவு பீன்ஸ்  பொரியல் … இதெல்லாம் மனுஷன்  சாப்பிடுவானா?” என்று முகத்தை சுளித்தான் பரி.

“நீதானே இன்னும் வேணும் இன்னும் வேணும்னு கேட்ட … அப்ப நீதான் இதை தின்னாகணும்” என்க,

“என் நண்பன் இருக்கும் போது எனகென்ன கவலை?” என்று அவன் இலையிலிருந்த பீன்ஸ் பொரியலை அப்படியே சமீரின் இலைக்கு இடமாற்றினான்.

“அடப்பாவி டேய்! இதெல்லாம் என் ஜென்மத்தில நான் சாப்பிட்டதில்ல… மட்டன் சுக்கா சிக்கன் டிக்கான்னு வெரைட்டி வெரைட்டியா சாப்பிட்ட என்னை இப்படி வரட்டி மாறி பச்ச பச்சயா சாப்பிட வைக்கிறானே… நல்லா இருப்பியாடா நீ” என்று சாபம் விட்டு கொண்டே சமீர் சாப்பிட பரியோ மகிழினியை நோட்டம் விட்டு  கொண்டே சாப்பிட்டான்.

அவ்வப்போது சமீர் வடிவேல் பாணியில் தரையை தொடை டா ரேஞ்சுக்கு, “இலையை பார்த்து சாப்பிடுடா?” என்று சொல்லி சொல்லி கடுப்பாகி நொந்து போயிருந்தான்.

“சாப்பிட்டு முடிச்சாச்சு இல்ல… எழுந்திரு” என்று சமீர் சொல்ல,

“இருடா மகிழினி கையில என்னவோ இருக்கு” என்று எழுந்திருக்காமல் அமர்ந்திருந்தான் பரி!

“அது ஊருகாடா?” என்று சமீர் உச்சபட்ச டென்ஷனோடு சொல்ல, “சரி அதையும் கொஞ்சம் தொட்டுக்க்கலாம்” என்று இழுத்தான் பரி!

“ஏன்? அவளை பினாயில் ஒரு லோட்டா எடுத்துட்டு வர சொல்றேன்… அதையும் வாங்கி குடியேன்… சீ எழுந்திருடா” என்று சமீர் கடுப்படிக்க பரியும் எழுந்து கை அலம்பி கொண்டு திரும்பினான்.

அதற்குள் சமீர் அங்கே உணவு பரிமாறி கொண்டிருந்த மகிழினியிடம், “ஒரு நிமிஷம் சிஸ்டர்… உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்க,

அவள் புரியாமல் என்ன என்பது போல் அவனை பார்த்தாள்.

சமீர் அப்போது, “நீங்க நெக்ஸ்ட் டைம்ல இருந்து சாப்பாடு பரிமாறும் போது இந்த வடை ஸ்வீட் பாயசம் இப்படிஎதாச்சும் பரிமாருங்க… இந்த பீன்ஸ் கூட்டு இதெல்லாம் வேண்டாம்” என்று அவன் பரிதாபமாக உரைக்க,

“ஏன் ண்ணா?” என்பது போல் மகிழினி குழப்பமாக கேட்டாள்.

“கஷ்டமா இருக்கு… சத்தியமா என்னால முடியல ம்மா” என்று சமீர் வேதனையோடு சொல்லி கொண்டிருக்கும் போதே பரி அவன் தோளை பற்றி இழுத்து கொண்டு வந்தான்.

“என்னடா சொல்லிட்டு இருந்த?”

“என் கஷ்டத்தைதான்… இனிமே உன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடவே மாட்டேன்டா நான்!” என்று புலம்பி கொண்டே வந்த நண்பனிடம்,

“அதில்ல டா மச்சான்… என்னவோ நான் பார்த்த பொண்ணுங்களையே இவ கிட்ட மட்டும் ஸ்பெஷலா என்னமோ இருக்கு… அப்படியே மேக்னட் மாறி என்னை கட்டி இழுக்கிறா?” என்று பரி மகிழினையை திரும்பி பார்த்து மயக்கத்தோடு சொல்லி கொண்டு வர,

“இழுக்குறளா… அப்படியே போயிருடா… அவங்க அப்பன் அப்படியே கட்டி உன்னை குழில இறக்கி மண்ணை போட்டு அது மேல செடியை நட்டிருவான் சொல்லிட்டேன்” என்று சமீர் தாங்க முடியாத எரிச்சலோடு  சொல்லி முடிக்கும் போது விமலனும் சுசீந்தரனும் ஒன்றாக அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

“ஐயோ! காண்டாமிருகம்… அதுவும்  டுயுள் கெட் அப்ல” என்று சமீர் பம்மி கொண்டு பரி பின்னோடு போய் ஒளிந்து கொண்டு நின்றான். அப்போது பரியை நெருங்கிய விமலன் ரொம்பவும் இயல்பாக, “சாப்பாடு எல்லாம் நல்லா இருந்துச்சா மாப்பிள்ளை?” என்று உபசரணையாக கேட்க,

“அவன்… என்ன சாப்பாடையா சாப்பிட்டான்” என்று சமீர் பின்னோடு நின்று ரகசியமாக நண்பனை கலாய்த்து கொண்டிருந்தான்.

ஆனால் பரி சொன்னதை காதில் வாங்காமல் ஒரு மழுப்பல் சிரிப்போடு, “நல்லா இருந்துச்சு” என்று விமலனை பார்த்து சொல்லிவிட்டு, “மாமா” என்று சுசீந்தரனை பார்த்து கள்ளத்தனமாக புன்னகையோடு சொல்லி கண்சிமிட்ட,

‘அடப்பாவி… இவன் வம்பை வான்ட்டடா ஆர்டர் பண்ணி வாங்குவான் போல இருக்கே… சமீர் எஸ்கேப்” என்று சொல்லி அப்போதே நழுவி சென்றுவிட்டான் சமீர்!

பரி பேசியது விமலனுக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. “சரிங்க தம்பி… சாயந்திரம் கோவிலுக்கு போனோம்… நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க” என்று விமலன் பரிவாக சொல்ல, “சரிங்க” என்று பரி விமலனை பார்த்துவிட்டு, “மாமா” என்று சுசீந்திரனை பார்த்து அழுத்தம் கொடுத்து சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

விமலன் பரி பேசியதை கூர்ந்து கவனிக்காமல், “சரி வா தம்பி சாப்பிடலாம்” என்று சுசீந்தரனை அழைத்துவிட்டு உள்ளே செல்ல,  சுசீந்திரனுக்குத்தான் பரியின் செயல்பாடுகள் ஒன்றும் சரியாகப்படவில்லை. அவன் மனதில் வேறெதோ எண்ணம் வைத்து கொண்டிருக்கிறான் என்று ஆழமாக சந்தேகித்தார்.

error: Content is protected !!