ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 7

ராதாவும் அர்ச்சனாவும் அப்போதுதான் டின்னரை முடித்து விட்டு ரூமிற்கு வந்திருந்தார்கள். சாப்பிட டைனிங் ஹால் போகும் போது ஃபோனை இருவருமே எடுத்துக்கொண்டு போகமாட்டார்கள்.

உண்ணும் போதாவது எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதில் இருவருக்குமே ஒத்த கருத்து உண்டு.

ராதா, அபராஜிதனைப் பார்த்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியிருந்தது. எப்போதும் போல இவள் ஆத்மிகா வீட்டிற்குப் போய் வந்து கொண்டிருந்தாள்.

ரூமிற்கு வரவும் ஃபோன் சிணுங்கவும் சரியாக இருந்தது. அழைப்பை ஏற்ற ராதா ஸ்பீக்கரை ஆன் பண்ணினாள். ஏனென்றால், அழைத்துக் கொண்டிருந்தது அவள் அம்மா மகேஷ்வரி. 

ராதாவின் வீட்டிலிருந்து யார் அழைத்தாலும் அர்ச்சனாவும் இணைந்து கொள்வாள். அதனால் இதுதான் வசதி.

“சொல்லுங்கம்மா.”

“நான் சொல்லுறது இருக்கட்டும். நீ முதல்ல உன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கிட்டு வீடு வந்து சேரு.” காட்டமாக வந்தது மகேஷ்வரியின் குரல்.

திகைத்துப் போன ராதா அர்ச்சனாவைத் திரும்பிப் பார்த்தாள். இவளுக்குக் குறையாத அதிர்வு அவள் முகத்திலும் தெரிந்தது.

“என்னாச்சும்மா? ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?” 

“வேற எப்படிப் பேச? யாருன்னே தெரியலை. நாலு பெரிய மனுஷங்க வந்தாங்க. உன்னைப் பொண்ணு கேட்டாங்க. சரி… பெரிய இடமா இருக்கே, நம்ம பொண்ணு அங்க நல்லா வாழுவான்னு விசாரிச்சா… உன்னை ரெண்டாம் தாரமா இல்லை கேக்குறாங்க! எனக்கு வந்த ஆத்திரத்துக்கு…” மகேஷ்வரி அங்கே பல்லைக் கடிப்பது இங்கே கேட்டது.

ராதா விக்கித்துப் போனாள். யார் பெண் கேட்டது? சுஜாதா ஆன்ட்டியாக இருந்திருந்தால் நிச்சயம் தன்னிடம் சொல்லி இருப்பாரே! கலக்கத்தோடே அர்ச்சனாவை ஏறிட்டாள்.

“ஆன்ட்டி! வந்தவங்க யாரு? எந்த ஊருக்காரங்களாம்?” நிதானமாகக் கேட்டாள் அர்ச்சனா.

“எல்லாம் அந்த ஊட்டிக்காரங்க தான் அர்ச்சனா. அந்தப் பையனோட பொண்ணு ராதா ஸ்கூல்ல தான் படிக்குதாம். கருமம்… அதுக்கு மேல எங்கிட்டக் கேக்காதே.” நறுக்கென்று முடித்தார் மகேஷ்வரி. அழைப்பையும் துண்டித்து விட்டார்.

“என்ன ராதா இது?” அர்ச்சனாவின் கேள்வியில் ராதாவின் கண்களில் குழப்பம் குடிகொண்டது.

“அதுதான் எனக்கும் புரியலை அர்ச்சனா. என்ன திடீர்னு இப்படிப் பண்ணி இருக்காங்க? எங்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை.”

“ம்… நம்ம ஹீரோ சார் செம ஸ்பீடு போல. தீயா வேலை பார்த்திருக்காரு.” 

அர்ச்சனாவின் கேலியைப் புறந்தள்ளிவிட்டு தன் தங்கைக்கு ஃபோனைப் போட்டாள் ராதா.

“அக்கா! சொல்லுக்கா.”

“மீரா! அங்க என்ன நடக்குது? அம்மா என்னென்னவோ சொல்லுறாங்க.”

“அக்கா… அது வந்து…” 

“சொல்லு மீரா.”

“ரெண்டு நாளைக்கு முன்னாடி தரகர் ஒரு ஃபாமிலியைக் கூட்டிக்கிட்டு வந்திருந்தார். ரொம்பப் பெரிய இடம் போல. அந்தம்மாவைப் பார்த்தாலே தெரிஞ்சுது, ரொம்ப சாதுன்னு.” ராதாவும் அர்ச்சனாவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.

“பையன் வரல்லை. ஆனா, ஃபோட்டோ குடுத்தாங்க. செம ஸ்மார்ட் க்கா. உனக்கு இவரை விட சூப்பரா யாராவது கிடைப்பாங்களான்னா… நான் இல்லைன்னு தான் சொல்லுவேன்.”

“மேலே சொல்லு.”

“எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்துது. அம்மாவும் அப்பாக்கிட்ட நாலு இடத்துல விசாரிக்கச் சொன்னாங்க. சென்னையில சொந்தமா ரெண்டு வீடு இருக்காம். ஊட்டியில டீ எஸ்டேட் இருக்காம். எல்லாம் ஓகே தான். ஆனா… அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது…” 

“ம்… அப்புறம்?”

“அம்மா அந்தத் தரகரைக் கூப்பிட்டு கன்னா பின்னான்னு திட்டிட்டாங்க. இதை ஏன் முதல்லேயே சொல்லலை… எங்களைப் பார்த்தா எப்பிடித் தெரியுது உங்களுக்குன்னு.”

“ம்…”

“அவரும் பாவம் தான். இந்த ஒரு விஷயம் மட்டும் இல்லைன்னா இதைப் போல ஒரு வரன் உங்க பொண்ணுக்குக் கிடைக்கப் புண்ணியம் பண்ணி இருக்கணும்மா. ரொம்ப நல்ல மனுஷங்கன்னு எவ்வளவோ சொன்னார். ஆனா அம்மா ஆடித் தீத்துட்டாங்க.”

“அப்பா என்ன சொன்னாங்க?”

“ஹேய்! என்னக்கா? நீ பேசுறதைப் பார்த்தா இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருவ போல இருக்கு?” மீரா அதிசயப்பட ராதாவின் கையிலிருந்த ஃபோனைப் பிடுங்கிக் கொண்டு அர்ச்சனா ரூமை விட்டு வெளியே போய் விட்டாள். 

ராதாவிற்குப் புரிந்து போனது. மீராவிடம் அத்தனையையும் ஒப்புவிக்கத்தான் அர்ச்சனா வெளியே போகிறாள் என்று.

அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாக சுஜாதாவிற்கு ஃபோனைப் போட்டாள் ராதா. உடனேயே லைனுக்கு வந்தார்.

“ஆன்ட்டி, நான் ராதா பேசுறேன்.”

“ராதா! சொல்லும்மா. என்ன இத்தனை ஏர்லியா கூப்பிட்டிருக்கே?”

“ஆன்ட்டி… சென்னைக்குப் போயிருந்தீங்களா?”

“ஆமாம்மா. அபி உங்கிட்ட சொல்லலையா?”

“இல்லை.”

“இல்லையா? நான் கேட்டப்போ, அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்கன்னு சொன்னானேம்மா!”

“ஓ… ஆனா எங்கிட்ட எதுவும் சொல்லலை ஆன்ட்டி.”

“அப்படியா என்ன? அதை விடும்மா. வீட்டுல என்ன சொல்லுறாங்க? சம்மதிப்பாங்களா?” ஏக்கத்தைக் குரலில் தேக்கி ஆர்வமாகக் கேட்டார் சுஜாதா. அந்தக் குரலுக்கு என்ன பதில் சொல்வதென்று ராதாவிற்குப் புரியவில்லை. 

“நான் இங்க இருக்கிறதால ஒன்னும் தெரியலை ஆன்ட்டி. என்னோட தங்கை தான் இந்த விஷயத்தை நேத்து நைட் பேசினப்போ சொன்னா.” ஏதோ சொல்லிச் சமாளித்தாள் ராதா. அவள் தயக்கம் சுஜாதாவிற்கும் புரிந்தது.

“ஓ… நான் அந்த ஆண்டவன் பாரம்னு விட்டுட்டேன் ராதா. உங்க அம்மா அப்பாவையும் தப்புச் சொல்ல முடியாதில்லையா? எனக்கொரு பொண்ணிருந்தா நானும் இப்படித்தானே யோசிப்பேன்.” அபராஜிதன் தனது மகன் என்பதையும் தாண்டி மனச்சாட்சி அங்கு பேசியது.

“சரிம்மா, உனக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகும். நீ கிளம்பும்மா.” பேச்சை முடித்துக் கொண்டார் சுஜாதா. ராதாவிற்குத் தான் என்னவோ போல் இருந்தது.

அன்று ஈவ்னிங்கே எஸ்டேட்டிற்கு ஸ்கூட்டியை விட்டாள் ராதா. மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்றன. இருந்தாலும் பொறுமையை முயன்று கடைப்பிடித்தாள்.

இவள் திடீர் வருகையை அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. மானேஜர் இவளைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ சொல்ல முயல அதைப் புறக்கணித்தவள் ஒரு புன்சிரிப்போடு அவரைக் கடந்து சென்றாள்.

கதவைத் தட்டி அனுமதி கூடக் கேட்கவில்லை. வந்த வேகத்திற்குக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அபராஜிதன் ஒரு ஃபைலில் மூழ்கி இருந்தான் போலும். கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் எரிச்சலோடு நிமிர்ந்து பார்த்தான். 

அவன் முகத்தில் தெரிந்த பாவம் ராதாவைக் கண்டதும் சீராகிப் போனது. ஒரு புன்முறுவலோடு எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினான் அபி.

“என்ன? திடீர்னு சொல்லாமக் கொள்ளாம வந்து நிக்குறீங்க?” அந்தக் குரலில் கேலியையும் தாண்டி ஒரு பரவசம் தெரிந்தது.

“நீங்களும் எல்லாம் சொல்லாமக் கொள்ளாமத் தானே பண்ணுறீங்க.”

“அப்படி நான் என்ன பண்ணினேன்?”

“எதுக்கு ஆன்ட்டியை இப்போ சென்னைக்கு அனுப்பினீங்க?”

“இது என்ன கேள்வி ராதா? வயசு இருபத்தி நாலு ஆகுது. உங்கம்மா வேற தீவிரமா மாப்பிள்ளை தேடுறாங்க. நான் முந்திக்க வேணாமா?”

“…………”

“என்னை நிராகரிக்க ஏற்கனவே நிறையக் காரணங்கள் இருக்கு. இந்த லட்ஷணத்துல நான் தாமதிக்க வேற செய்யணுமா?”

“அதுக்காக? எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம…”

“சொல்லியிருந்தா என்ன ஆகியிருக்கும்? உனக்கும் வீணான டென்ஷன் தானே. அதான் சொல்லலை. வீட்டுல என்ன சொல்லுறாங்க?” அவளை முடிக்க விடாமல் குறுக்கறுத்தவன் இலகுவாகக் கேட்டான்.

காலையில் அம்மா கேட்ட அதே கேள்வியை இப்போது மகன் கேட்கிறான். ஆனால் அம்மாவிடம் பேசத் தயங்கிய விசயங்களை மகனிடம் பேசுவது இலகுவாக இருந்தது.

“சம்மதம் கிடைக்கும்னு தோணலை.”

“எதிர் பார்த்தது தான்.” அவன் நிதானமாகச் சொல்ல சட்டென்று நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள் ராதா.

“இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு ராதா? ஆத்மிகாவுக்கு இப்படி ஒரு வரன் வந்தா நான் ஏத்துப்பேனா? அது மாதிரித்தானே உங்க வீட்டுலயும்.” அவன் பேச்சிலிருந்த நியாயம் ராதாவிற்கு மெல்லிய வலியைக் கொடுத்தது. 

இவனிடம் அப்படி என்ன குறை இருக்கிறது? மனம் பொருந்தாத ஒரு வாழ்க்கை அமைந்து போனது அவன் குற்றமா? எத்தனை கனவுகளோடு அந்த வாழ்க்கையை ஆரம்பித்திருப்பான்! அது பொய்த்துப் போன போது எத்தனை வலிகளைத் தாங்கி இருப்பான்! அவனுக்காக அவள் மனமே அவளிடம் மல்லுக்கு நின்றது.

“என்ன யோசனை?” அவன் குரலில் நிஜத்துக்கு வந்தவள் ஒன்றும் பேசவில்லை. 

“வீட்டுல என்ன சொன்னாங்க? திட்டினாங்களா?”

“இது சரிவராது. விட்டுடுங்க. எதுக்கு நீங்க தேவையில்லாம என் வீட்டு மனுஷங்க முன்னாடி தலை குனியணும்?” ஒரு ஆதங்கத்தோடு பேச ஆரம்பித்தவள் முடிக்கும் போது லேசாகக் கண்கள் கலங்கியது. 

அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் முகம், அந்தக் கண்களில் கண்ணீரைக் கண்ட போது மிருதுவாகிப் போனது. எழுந்து அவள் பக்கமாக வந்தவன் அவளையும் கைப்பிடித்து எழுப்பினான். கன்னத்தில் கோடாக இறங்கிய கண்ணீரை அவன் துடைத்து விட்ட போது ஒரு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து அழுதாள் ராதா.

“முட்டாள் பெண்ணே! எதுக்கு இப்போ இந்த அழுகை?”

“இது… இது சரி வராது. விட்டுடுங்க.”

“சரி. நான் விட்டுட்டா… உங்கம்மா விட்டுடுவாங்களா? இனிமேல் தான் தீவிரமா மாப்பிள்ளை தேட ஆரம்பிப்பாங்க. அது உனக்கு ஓகே வா?”

“இல்லையில்லை… நான் அம்மாக்கிட்ட பேசுறேன்.” அவசரமாக வந்தது பதில்.

“என்ன பேசுவ ராதா?”

“இப்போதைக்கு இந்தப் பேச்சை எடுக்க வேணாம்னு சொல்றேன்.”

“கேப்பாங்களா?”

“நான் உறுதியா சொல்லிடுவேன்.”

“சரி, எத்தனை நாளைக்கு? ஒரு ஆறு மாசம் போனதுக்கு அப்புறமா திரும்ப ஆரம்பிப்பாங்க. அப்போ என்ன பண்ணுவ?”

“அதுக்காக… நீங்க… இறங்கிப் போக வேணாம்.” அந்த வார்த்தைகளில் அவன் முகம் மலர்ந்து போனது.

“நம்ம மேல பிரியமா இருக்கிறவங்களுக்காக தாழ்ந்து போறதுல ஒன்னும் தப்பில்லை ராதா. இருபத்தியேழு வயசுல ஒரு கல்யாணம். அம்மா எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் பண்ணினாங்க. ஆனா எங்கேயோ சறுக்கிடுச்சு.” எங்கோ வெறித்துப் பார்த்தபடி பேசினான் அபராஜிதன்.

“இப்போ எதுக்கு அதெல்லாம்?” அவன் ரணத்தைக் கீறிப்பார்க்க அவள் பிரியப்படவில்லை.

“பரவாயில்லை, இந்த ஒரு முறை மட்டும் கேட்டிடு. இன்னொரு முறை இதை நானே பேசுவேனான்னு கூட எனக்குத் தெரியாது.” கொஞ்சம் நிதானப் படுத்திக் கொண்டவன் மீண்டும் தொடர்ந்தான்.

“புரிஞ்சு போச்சு. அது சரிப்பட்டு வராதுன்னு. போலியா எதுக்கு ஒரு வாழ்க்கைன்னு ஈசியா அதைத் தூக்கிப் போட முடிஞ்சுது. யாரையும் குத்தம் சொல்ல விரும்பலை. அதேமாதிரி… யாரும் என்னையும் குத்தம் சொல்லலை. சுமூகமா முடிஞ்சு போச்சு. முறிஞ்சு போச்சு. எம் மேலயும் தப்புகள் இருந்திருக்கலாம். ஆனா… எங்கிட்ட மட்டும் தப்பு இருக்கலை.” 

“நான்… கிளம்பணும். ஆத்மிகா காத்துக்கிட்டு இருப்பா.” சட்டென்று பேச்சை மாற்றினாள் ராதா. அவள் நோக்கம் புரிந்தவன் புன்னகைத்தான்.

“ஆத்மிகாவை உன்னை ‘அம்மா’ ன்னு கூப்பிடச் சொல்லு ராதா. அந்த ஆன்ட்டி வேணாம்.”

“இல்லையில்லை… அப்படியெல்லாம்…”

“நீ சொல்லிக் குடுக்கலைன்னா என்ன? நான் சொல்லிக் குடுக்கிறேன்.” அவளை முடிக்க விடாமல் மீண்டும் அவனே பேசினான்.

“சொன்னாப் புரிஞ்சுக்கோங்க. இது நடக்காது.”

“நான் நடத்திக் காட்டுறேன். என் பெயரோட அர்த்தம் தெரியுமா உனக்கு?”

“தெரியும்.”

“என்ன?”

“கிருஷ்ணரோட நூற்றி எட்டுப் பெயர்கள்ல ஒன்னு.”

“அர்த்தம் சொல்லு.”

“வெல்லப்பட முடியாதவன்.”

“புரியுதில்லை. அப்புறம் என்ன?”

“எம்மேல இருக்கிற அன்பில அம்மா அப்பா உங்களை ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்க முடியாது.”

“அதே அன்பு எனக்கும் இருந்தா அவங்க சொல்லுற வார்த்தைகளை உனக்காக நானும் தாங்கத் தானே வேணும் ராதா?” பிடிவாதமாக நின்றவனின் வார்த்தைகளில் சொக்கிப் போனாள் பெண்.

“இன்னைக்குப் புடவை கட்டலையா?” இதுவரை அந்தக் கண்களில் தெரிந்த உறுதி போய் இப்போது குறும்பு குடியேறி இருந்தது. சட்டென்று விலகியவள் நகர்ந்து விட்டாள்.

“நான் கிளம்புறேன்.” சொல்லாமல் வந்தவள் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். 

“பொண்ணு மேல காட்டுற கருணைய அவங்க அப்பா மேலயும் கொஞ்சம் காட்டலாம். தப்பில்லை.” அவள் முதுகில் வந்து மோதிய வார்த்தைகளில் முகம் சிவந்து போனது ராதாவிற்கு. திரும்பிப் பார்க்காமல் ஓடி விட்டாள்.

 

error: Content is protected !!