vizhi24

vizhi24

மின்னல் விழியே – 24

“என்ன சொன்ன??? உன்னோட பொண்ணா??? எப்போதுல இருந்து???
இந்த ரெண்டு வாரமாவா??? மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்ற
உன்னோட பொண்ணுன்னு.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்க
போயிருந்த??? பெத்து போட்டதோட சரி.. ஹனிக்காக என்ன
பண்ணிருப்ப??? உங்களோட பிரச்சனையில பாவம் அந்த பச்சை மண்ணை
அப்போன்னு என்கிட்ட விட்டுட்டு போனியே.. உனக்கு என்ன தகுதியிருக்கு
என்னோட வினுவை சொல்றதுக்கு????” என்றவனின் குரலில் அத்தனை
நக்கலும் கோபமும்..

தன் அண்ணனிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வருமென
எதிர்பாராதவள் அதிர்ந்து நிற்க, திருவோ, “இன்னைக்கு நீ உன்
பொண்ணுக்காக துடிக்கிறன்னா அது ரத்த பாசத்தால.. ஆனா பாரு,
ஹனிக்காக துடிக்கணும்னு வினுவுக்கு எந்த அவசியமும் இல்ல.. ஆனா
அவ துடிக்கிற… அது தான் அம்மா ஸ்தானம் அப்படிங்கறது.. ஹனி
உன்னோட பொண்ணுன்னு தெரியுறதுக்கு முன்னாடியே அவ அவளை
ஏத்துக்கிட்டா… அப்படி பட்டவளை என்னவெல்லாம் சொல்ற????” திரு
ஹாஸ்பிட்டல் என்றும் பாராமல் சுமியை கண்டிக்க, அவனது ஒவ்வொரு
வார்த்தையிலும் இருந்த உண்மையில் சுமி கூனி குறுகிப்போனாள்..

“அரசு ப்ளீஸ்..” சுமி ஒடுங்கி நிற்பது தாங்க முடியாமல் வினு
திருவை தடுக்க முயல, திரு அவள் சொல்வதையெல்லாம் கேட்கும்
நிலையில் இல்லை….

“தனியா நானும் என் பொண்ணும் நின்னுட்டு இருந்தப்போ, எங்க
வாழ்க்கையில சந்தோஷத்தை கொண்டு வந்தவங்க வினுவும் விக்கியும்…
நீ அவங்க ரெண்டு பேருல ஒருத்தரை திட்டினாலும் அது என்னை
தண்டிச்சதுக்கு சமம்.. இங்க பாரு.. பெத்தது வேணா நீங்களா இருக்கலாம்..

ஆனா உள்ளே இருக்கிறது என்னோட பொண்ணு.. என் பொண்ணுன்னா
அவ என் பொண்டாட்டிக்கும் பொண்ணு தான்.. ஹனி மேல நம்ம
எல்லாரையும் விட அவளுக்கு தான் உரிமை அதிகம்.. இனி யாராச்சும்
அவளை ஹனிகிட்ட இருந்து பிரிச்சிங்க???” ஒற்றை விரலை நீட்டி
மிரட்டியவன், “தங்கச்சின்னும் பார்க்க மாட்டேன்” என்றுவிட்டு ஹனியை
காண உள்ளே சென்றான்…

அனைவரும் திரு இவ்வளவு கோபக்காரனா??? இவனுக்கு இவ்வளவு
பேசத் தெரியுமா என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.. அகிலுக்குமே
அதிர்ச்சி தான்.. கடைசியாக ஏர்ப்போர்டிலும் சரி வினுவின் காதலனாக
சந்தித்த அன்றும் சரி, திரு அவனை திட்டியிருந்தாலும் அதில் இவ்வளவு
கடுமை இல்லை.. கோபம் இருந்தது.. ஆத்திரம் இருந்தது ஆனால் இன்று
தன்னவளுக்காக அவன் பேசிய வார்த்தைகள்!!! அகிலை புல்லரிக்கவே
செய்தது.. அதே சமயம் அவனால் சுமியை விட்டுக் கொடுக்கவும்
முடியவில்லை…

“மை மச்சான் டா!!!!” மனதுக்குள் திருவிற்கு சபாஷ் போட்டுக்
கொண்டிருந்தான் விக்கி ஆனால் வெளியே அமைதியாக நின்றான்…

சுமியின் அனுமதியில்லாமல் உள்ளே செல்லவும் தயங்கியவாறு
வினு அங்கேயே தேங்கி நின்றாள்.,

“அண்ணி அவன் எதோ கோபத்துல பேசுறான்.. நீங்க தப்பா
நினைச்சிக்காதிங்க..” அப்போதும் அவள் சுமியை சமாதனம் செய்வதை
தொடர, உள்ளிருந்து திருவின் குரல் கேட்டது..

“வினு நீ உள்ளே போ.. அரசு கூப்பிடுறான்..” அகில் அவளை உள்ளே
செல்ல சொல்ல, சுமி கண்ணீர் சுமந்த விழிகளோடு நின்றிருந்தாள்.. அகில்

அவளிடம் எதுவும் கூறவில்லை அவளை ஆறுதலாக அணைத்துக்
கொண்டான்.. அவளுக்கும் அது தேவைப்படவே, மறுப்பு தெரிவிக்காமல்
அவனோடு ஒன்றியவாறு நின்றிருந்தாள்…

கண்களில் பரிதவிப்போடு நின்றிருந்த தாயிடம் திரும்பியவன்,
“அம்மா நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.. நாங்க காலையில ஹனியை
டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வரோம்…” ஹாஸ்பிட்டலில் அனைவரும்
இருக்க முடியாது என்பதால் அவர்களை அனுப்ப நினைத்தான்..

“இல்ல டா.. ஹனியை ஒரு தடவை பார்த்துட்டு போயிடுறோம்..”
பேத்தியை காணாமல் செல்ல சுதாவிற்கு மனமில்லை…

தாயின் மனம் புரிந்தாலும் அதே சமயம் அனைவரும் இங்கேயே
இருந்தால் அது சுமியை மேலும் சங்கடப்படுத்தும் என்பதால்
அனைவரையும் பேசி சமாளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
அனைவரும் அரை மனதாக கிளம்ப, விக்கி மட்டும் அங்கேயே
இருந்தான்….

சுமியும் அகிலும் அறையின் வெளியே அமர்ந்திருக்க, திருவும்
வினுவும் உள்ளே ஹனியின் அருகில் அமர்ந்திருந்தனர்.. திரு கோபத்தில்
அமர்ந்திருப்பது அவனது புருவம் சுருங்கியிருப்பதிலே புரிய, வினுவால்
கூட அவனை நெருங்க முடியவில்லை.. ஹனியின் கைகளை பற்றிக்
கொண்டு அவள் விழிக்கும் வரை காத்திருந்தாள்.. விக்கியும் அறையின்
ஒரு மூலையில் அமர்ந்திருந்தான்… உள்ளே வரும் முன் அகிலிடம்
காய்ந்துவிட்டு தான் வந்திருந்தான்..

மூன்று மணி நேரம் கழிந்திருக்க, வினு கொட்ட கொட்ட
விழித்திருந்து ஹனியை பார்த்துக் கொண்டிருந்தாள்.. திருவும் விக்கியும்

கூட நாற்காலியில் அமர்ந்தவாறே தூங்கிவிட்டனர்.. ஹனியின் கையில்
ஏறிக் கொண்டிருந்த ட்ரிப் முடிந்துவிடவும் வெளியே சென்று நர்சை
அழைத்து வந்து, அதை கழற்ற வைத்தவள் மீண்டும் அவள் கண்விழிக்கும்
வரை அமர்ந்திருக்க, அவளின் செய்கையை வெளியே அமர்ந்து பார்த்துக்
கொண்டிருந்தாள் சுமி…

சிறிது நேரத்தில் ஹனி கண்விழித்துவிட, அவளது குரல் கேட்டு
சுமியும் அகிலும் உள்ளே விரைந்தனர்.

“மம்மி !!!” கண் விழித்ததும் தன்னருகே கலங்கிய கண்களோடு
அமர்ந்திருந்த வினுவை பார்த்த ஹனி எழும்பி அவளை அணைக்க
முயற்சிக்க, ட்ரிப் போட்ட இடம் வலியெடுத்தது. அதில் ஹனி சிணுங்க
ஆரம்பிக்க,

“அச்சோ பேபிக்கு வலிச்சிடுச்சா???” என்றவள் ஹனியின் கையை
பற்றி ட்ரிப் போட்ட இடத்தை ஊதிவிட்டாள்.. திருவும் ஹனியின்
தலையை கோத, “டேடி!!!” என்றவாறு அவனிடம் தாவ முயன்றவளை
குனிந்து அணைத்துக் கொண்டான் திரு.

“டேடி ரொம்ப பயந்துட்டேன் டா.. இனி உங்களுக்கு ஐஸ்கிரிம் கட்”
திரு செல்லமாக கூற, ஹனி பாவமாக முழித்தாள்..

“ஹோய் பேபி.. உன் பக்கி மாமா நான் எதுக்கு இருக்கிறேன்???? உன்
மம்மி டேடிக்கு தெரியாம நாம ஐஸ்கிரிம் சாப்பிடலாம் சரியா???” விக்கி
ஹனிக்காக பரிந்துக் கொண்டு வர, ஹனி கிளுக்கி சிரித்தவாறே
விக்கியோடு ஹை-பை அடித்துக் கொண்டாள்.. அவர்களின்
பாசப்பினைப்பை பார்த்தவாறு வாசலில் நின்றுக் கொண்டிருந்தனர் சுமியும்
அகிலும்..

இருவருக்குமே தன் மகளுக்காக தாங்கள் எதுவும் செய்யவில்லை
என்பதே உறுத்திக் கொண்டு இருந்தது.. விழித்த பின்னும் தங்களை
தேடாத மகளை காண்கையில் யாரோ செருப்பால் முகத்தில் அடித்தாற்
போல் உணர்ந்தார்கள்..

சுமி கூட அழுது தன் உணர்வுகளை காண்பித்தாள் ஆனால் அகில்
தான் உள்ளுக்குள் மொத்தமாக செத்துக் கொண்டிருந்தான்.. திரு கூறியது
அனைத்தும் சுமிக்கு மட்டும் என்று அவனால் எடுத்துக் கொள்ள
முடியவில்லை.. அதில் தன் பங்கும் தவறு இருக்கிறது என புழுங்கிக்
கொண்டிருந்தான்..

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் சுமி வெளியேறப் போக,
ஹனி அவளை கண்டுக் கொண்டாள்..

“அம்மா!!!!” தாயை பார்த்ததும் ஹனி அழைக்க, சுமி திரும்பி
பார்த்தாள்…

“ம்மா…” கைகளை விரித்து கொண்டு தன்னை பார்த்தவளை ஓடிச்
சென்று அணைத்துக் கொண்டாள் சுமி.. அவள் முகமெங்கும்
முத்தமிட்டவள் அவளை கட்டிக் கொண்டு அழ, அகில் வந்து இருவரையும்
சேர்த்தணைத்துக் கொண்டான்…

“சாரி ம்மா.. இனி ஐஸ்கிரிம் சாப்பிடமாட்டேன்.. அழாதிங்க…”
சுமியின் கண்ணீரை துடைத்துவிட்டவள் கன்னத்தில் முத்தமும் வைக்க,
சுமி அவளை அணைத்துக் கொண்டாள்..

திரு தன் தங்கை அழுவதை பார்த்தாலும் எதுவும் பேசவில்லை..
டாக்டரை காண வெளியே சென்றுவிட்டான்.. அதன்பின் மீண்டும்
பரிசோதனை செய்து அவர்கள் அனைவரும் வீடு திரும்ப, ஹனி சுமியின்
கைகளை விட்டு அகலவில்லை..

வீட்டிற்கு வந்ததும் சுதா வந்து தன் பேத்தியை வாங்கிக் கொள்ள,
மற்றவர்கள் யாருமே சுமியை கடிந்து ஒரு வார்த்தை பேசவில்லை..
அனைவரும் எப்போதும் போலவே அவளிடம் பேச, சுமிக்கு தான்
குற்றவுணர்வாக இருந்தது.. கோபத்தில் பேசியது எல்லாம் இப்போது
பூதாகரமாக தெரிய அவளுக்கே அவளை பிடிக்கவில்லை.. தானா இப்படி
பேசினோம் என்று நினைக்கையில் மீண்டும் அழுகை வர, தன் அறையில்
அமர்ந்து அழ துவங்கினாள்… ஹனி அவள் அருகில் தூங்கிக்
கொண்டிருக்க, அகில் சுமிக்கு சாப்பாடு எடுத்து வந்தான்..

அவள் அழுவதை பார்த்தவன் அவள் அருகில் அமர்ந்தான்… அவளை
தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், “சாரி… நான் கோபத்துல… ரொம்ப
சாரி…” இதுவரை தன்னை ஒரு வார்த்தை கூட திட்டாமல் தன்னோடு
இருப்பவனிடம் அவள் மன்னிப்பை வேண்ட, அகில் அவள் வாயை தன்
கையால் பொத்தினான்..

“எனக்கு புரியுது சுமிம்மா.. நான் எதுவும் தப்பா நினைச்சிக்கலை..”
அழுதழுது வீங்கியோயிருந்த அவள் விழிகளில் முத்தமிட்டவனின்
முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்..

“ஆனா வினுவை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்.. அண்ணா
சொன்னது எல்லாம் சரி தான்.. நான் இப்படி பேசியிருக்க கூடாது.. சின்ன
பொண்ணு கூட போய் சண்டை போட்டிருக்கேன்.. ஐ யம் சாரி.. வினு
என்னை மன்னிச்சிருவாளா அகி???” அவன் நெஞ்சில் சாய்ந்தவாறு அவள்
தேம்ப,

“ஹ்ம்ம் இதை நீ வினு கிட்ட தான் கேட்கணும்.. ஆனா நீ இப்படியே
அழுதிட்டே போய் மன்னிப்பு கேட்டா மன்னிக்க மாட்டா.. உன் அண்ணா
தான் உன்னை அடிக்க வருவான்..” அவள் தன் தவறை புரிந்துக்
கொண்டதே அகிலுக்கு பெரும் ஆறுதலாக இருக்க, அவளை சகஜமாக்கும்
பொருட்டு கேலியாக கூறினான்..

“என்ன சொல்ற?? எதுக்காக என்னை அடிக்கணும்???” மூக்கை
சுருக்கியவாறு சுமி புரியாமல் பார்க்க..

“ஹ்ம்ம் நீ இப்படியே அழுமூஞ்சியா போய் மன்னிப்பு கேட்டா என்
தங்கச்சி மயங்கி விழுந்திடுவா அப்புறம் உன் அண்ணன் உன்னை
அடிக்காம என்ன பண்ணுவான்???” சிரிப்பை அடக்க முடியாமல் அகில்
கூற, சுமி அதை உண்மையென்று நம்பி அவனை ஏறிட்டாள்..

“ரொம்ப கொடூரமா இருக்கேனா?? நான் முகத்தை கழுவிட்டு
போகட்டுமா???” அவன் கூறியதை நம்பி அவள் அப்பாவியாக கேட்க,
அகில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டான்…

அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், “அடியே என் செல்ல மட்டி,
நான் விளையாட்டுக்கு சொன்னேன்.. உன் அண்ணா அப்படியெல்லாம்
உன்னை அடிக்க மாட்டான்.. அதுக்கு என் தங்கச்சியும் விடமாட்டா..”

“அப்போ நான் எப்படி மன்னிப்பு கேட்கிறது???”

“ஒரு நிமிஷம் இரு” என்றவன் அவளை விட்டு எழுந்த சென்று
அவனது துணியோடு கொண்டு வந்திருந்த பார்சலை அவளிடம்
நீட்டினான்.. அதை பார்த்து கண்ணை விரித்தவள்,

“இ..இது????” வார்த்தைகள் வராமல் தடுமாறினாள் சுமி.

“வினு உனக்காக வாங்கின புடவை.. நீ வேண்டாம்னு தூக்கிப்
போட்டது தான். இந்த புடவையை கட்டிக்கிட்டு இன்னைக்கு
திருவிழாவுக்கு போ.. வினு புரிஞ்சிக்குவா..” முறுவலோடு கூறியவன்
புடவையை அவள் கையில் கொடுத்தான்..

அதை வாங்கிக் கொண்டவள் கலங்கும் கண்களை துடைத்துக்
கொண்டு, “அன்னைக்கு கோபத்துல அப்படி பண்ணிட்டேன் சாரி ஆனா
உனக்கு எப்படி தெரியும்??” என்றாள் கேள்வியாக…

“பரவாயில்ல சுமிம்மா.. இந்த புடவை இன்னைக்கு தான் உன்கிட்ட
சேரணும்னு இருந்திருக்கு… அன்னைக்கு வினு அழுதிட்டு போறதை
நானும் பார்த்தேன்.. ரூம்ல வந்து எட்டிப் பார்த்தா, நீ ஒரு பக்கம் கோவமா
முகத்தை தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருந்த.. தரையில இந்த புடவை
கிடந்துச்சு அப்போவே புரிஞ்சிக்கிட்டேன்..” என்றவன் அவள் அருகில்
அமர்ந்து, அவன் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அவளுக்கு ஊட்ட
ஆரம்பித்தான்..

எல்லாம் தெரிந்தும் தன் தங்கைக்காக அவன் சண்டையிடாமல்
பொறுமையாக இருந்ததே அவளுக்கு வியப்பாக இருந்தது.. அவன் மீது
கொண்டிருந்த கோபம் எல்லாம் மெல்ல உருகுவது போல் தோன்ற,
எதுவும் கூறாமல் அவன் ஊட்டியதை சாப்பிட்டாள்…

அறைக்கு வந்த திருவை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்
கொண்டிருந்தாள் வினு.. நேற்று சுமியிடம் கடுமையாக பேசியது தான்
அவன் கடைசியாக பேசியது.. அதன்பின் கேள்வி கேட்பவர்களுக்கு மட்டும்
பதில் கூறினானே தவிர, வேறு பேச்சு வார்த்தை எதுவும் இல்லை. ஒரு
மாதிரி இறுகிய நிலையில் இருந்தான்..

கட்டிலில் சாய்ந்துக் கொண்டு அவன் கண்களை மூடி அமர்ந்திருக்க,
வினு மெதுவாக சென்று அவன் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்..
அவளின் நெருக்கம் உணர்ந்து அவன் கண்களை திறக்க, வினு அவன்
கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டு அவனை
அணைத்திருந்தாள்..

“லவ் யூ அரசு.. லவ் யூ சோ மச்..” என்றவள் அவனை மேலும்
இறுக்க, திருவும் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்..
திருமணத்திற்கு பிறகு அவளிடமிருந்து வரும் முதல் லவ் யூ…
தங்கையை நினைத்து மனதில் வருந்திக் கொண்டிருந்ததெல்லாம்
காணாமல் போக,

“சாரி டா.. சுமிக்காக நான் மன்னி..” அவன் வாயில் தன் கையால்
ஒரு அடியை வைத்தவள்,

“அவங்க என்னோட அண்ணி.. நாங்க இன்னைக்கு அடிச்சிக்குவோம்
நாளைக்கு சேர்ந்துக்குவோம்.. எங்க நடுவுல நீ ஏன் வர்ற????” என்க, திரு
அவளை ஆச்சரியமாக பார்த்தான்…

“புஜ்ஜி???? “

“நீ ஏன் டா அண்ணிய சத்தம் போட்ட?? என் மேலயும் தப்பு தான்.
அவங்க ஹனியை பெத்தவங்க.. ஏற்கனவே அகில் அண்ணா கூட எதுவும்
சரியாகலை அதுக்குள்ள ஹனியும் என்கிட்ட அதிகம் ஒட்டிக்கிட்டதும்
தனியா ஃபீல் பண்ணிருப்பாங்க.. இது புரியாம என்னவெல்லாம் பேசுற நீ???
ஹ்ம்ம்” அவனை அடிப்பது போல் பாவனை செய்தவள் அவனை
அணைத்துக் கொண்டு,

“என் மேல அவ்ளோ காதலா டா??? அன்னைக்கு அண்ணிக்காக தான்
என்னை தூக்கிப் போட்டுட்டு போன.. இப்போ எனக்காக அண்ணியை
திட்டுற??? என்னடா நினைச்சிட்டு இருக்க உன்னோட மனசுல???” அன்று
தன்னை திட்டியதையெல்லாம் மறந்து அவள் கேட்க,

“என் மனசுல எப்பவும் நீ தான் இருக்க புஜ்ஜி.. அன்னைக்கு நீ
என்கிட்ட மறைச்சிட்டியே அப்படிங்கிற கோபம் தான் அதுவும் உன்
அண்ணாவுக்காக என்னை நடிச்சி ஏமாத்திட்டியோன்னு வருத்தம்” திரு
அவ்வாறு கூறியதும் வினுவிற்கும் அன்று நடந்தது எல்லாம் படமாக
ஓடியது.. அவளுக்கும் அதில் பெரிய மனக்காயம் தான் ஆனால் அவனை
வெறுக்க முடியவில்லை..

அவள் முகத்தை பற்றி அவள் கண்களோடு தன் கண்களை
கலந்தவன், “ஆனா நைட் மேடம் வந்து ஒரு பெரிய லெக்சர்
கொடுத்திங்களே அப்போவே புரிஞ்சிக்கிட்டேன்.. இந்த மேடம், நான் தான்
திருன்னு தெரியுறதுக்கு முன்னாடிய என்கிட்ட மயங்கிட்டாங்கன்னு..
அதுக்கப்புறம் எப்படி என் புஜ்ஜி மேல கோவப்படுவேன்??? உன்கிட்ட
மன்னிப்பு கேட்டேன் ஆனா நீ தான் புரிஞ்சிக்கல… என்னை ரொம்ப தள்ளி
வச்சிருக்க…” என்றவன் இருவருக்குள்ளும் இருந்த இடைவெளியை
குறைத்தான்.

வினு அவன் கண்களை பார்த்தவாறே அமர்ந்திருக்க திருவே மேலும்
தொடர்ந்தான், “உன்கிட்ட பர்மிஷன் கேட்காம உன்னை எடுத்துக்கிட்டேன்
அப்போ கூட நீ என்மேல கோபப்படல.. உன்னை புரிஞ்சிக்காமா வீட்டை
விட்டு கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளினேன் அப்போவும் சிரிச்சிக்கிட்டே
தான் இருந்த, ஆனா இப்போ பூனைக்குட்டி மாதிரி உன்னையே சுத்தி
வரேன் ஆனா நீ ஏன் என்னை ஒதுக்கி வச்சிருக்க புஜ்ஜி???” என்றவனின்
குரல் கரகரப்பாக மாறியிருந்தது….

ஏக்கமும் குழப்பமும் போட்டி போட தன் முகத்தை பார்த்துக்
கொண்டிருந்தவனின் தலை முடியை கலைத்து விட்டவள், “நான் எங்க டா
உன்மேல கோவமா இருக்கேன்.. என் அரசு மேல எனக்கு கோபமே
வராது… ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சு.. என்னை புரிஞ்சிக்காம
பேசுறான்னு.. ஆனா நீ இப்படி எனக்காக பேசும் போதும்.. என்னை
புரிஞ்சிக்கிட்டு என் அண்ணாவை ஏத்துக்கிட்டத பார்க்கும் போதும் எல்லா
கோவமும் கஷ்டமும் போச்சு.. போயே போச்சு…” இரண்டு கைகளையும்
விரித்து போச்சு என்பது போல் அவள் அபிநயம் வைக்க, திரு அவள்
சொல்வதை நம்ப முடியாமல் பார்த்தான்..

“அப்போ என் மேல கோபம் இல்லையா???? தேங்க்ஸ் டா புஜ்ஜி..
நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?? என் புஜ்ஜிக்கு
என்மேல கோபம் போய்டுச்சாம்…” மகிழ்ச்சியில் கத்தியவன் அவளை
அணைத்து அவள் முகமெங்கும் முத்தமிட, அவள் அவன் கன்னத்தில்
வலிக்காதவாறு அடித்தாள்..

“ஏன் டி???” கன்னத்தை தேய்த்தவாறே திரு கேட்க,

“ஏன் டா கத்துற??? நாம ராசியாகிட்டோம்னு தெரிஞ்சா உன் தங்கச்சி
என் அண்ணாவை அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க மாட்டாங்க அப்புறம்
மொட்டை மாடி தான் என் அண்ணாவுக்கு வீடாகிரும்.. எங்க அண்ணாவ

வெளிய அனுப்பினா நான் என்ன பண்ணுவேன்?? உன்னை வெளிய
அனுப்பிடுவேன் அதனால அவங்க சேருற வரைக்கும் நாம
சண்டைக்காரங்க தான்..” வினு கண்களை உருட்டிக் கூற, திருவிற்குள்
பொங்கிக் கொண்டிருந்த காதல் ஊற்று புஸ்ஸென்றாகியது

“புஜ்ஜி குட்டி.. என்னடி இதெல்லாம்.. உன் சாமியார் அண்ணன்
எப்போ என் தங்க்ச்சியை கரெக்ட் பண்ணி நான் எப்போ உன் கூட பாப்பா
பெத்துக்கிறது?? அன்னைக்கு வேற நான் சோகத்துல இருந்ததுனால
எதுவும் சரியா கவனிக்கல.. இனியாச்சும் ரசிச்சி வாழணும்” என்றவன்
ஏக்கப் பெருமூச்சு விட, வினு அவனை முறைத்தாள்…

“லூசு லூசு.. நான் என்னப் பேசிட்டு இருக்கேன் நீ என்னடா பேசுற???”
அவன் தலையிலே குட்டியவள், “சீக்கிரம் என் அண்ணாவையும் உன்
தங்கச்சியையும் சேர்த்து வைக்கிற வழியை பாரு.. இல்லாட்டி நீ
மொட்டை மாடில என் அண்ணாவுக்கு துணையா தான் தங்கிக்கணும்..”
அவன் இரண்டு கண்ணத்தையும் தன் கையால் பற்றி அவனை
அச்சுறுத்தியவள் அங்கிருந்து அகன்றாள்…

அவள் செல்வதை பார்த்திருந்த அவனுக்கும் மனது லேசாகியது
போன்ற உணர்வு. அவனுக்குமே தன் தங்கையின் வாழ்வுக்கு ஒரு தீர்வு
கிடைக்காமல் தன் வாழ்வை தொடங்க விருப்பமில்லை. இவ்வளவு
நாட்கள் வினுவை எப்படி சமாதனம் செய்வது என முழித்துக்
கொண்டிருந்தவனுக்கு இப்போது அவள் மன்னித்துவிட்டதும் யானை பலம்
வந்தது போல் இருந்தது. தன் தங்கையும் ஒரு நாள் அகிலை ஏற்றுக்
கொள்வாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது.. அப்படி இல்லாவிட்டாலும்
எப்படியாவது இருவரையும் சேர்த்து வைத்துவிட வேண்டும் என
நினைத்துக் கொண்டான்.

ஹனிக்கு உடம்பு சரியில்லை என்பதால் அன்று காலை
கோவிலுக்கு செல்லாமல் மாலை செல்வதற்காக அனைவரும் தயாராகிக்
கொண்டிருந்தனர்.. வினுவும், ஹனியின் அறை பக்கம் எட்டி
பார்க்கவில்லை. சுமியே ஹனியை பார்த்துக் கொள்ளட்டும் என்று
ஒதுங்கிக் கொண்டாள்.

அனைவரும் கோவில் செல்வதற்கு கிளம்பி வர, சுமி வினு
கொடுத்த புடவையில் வந்தாள். வினுவும் திரு அன்று தனக்காக வாங்கி
கொடுத்திருந்த புடவையை தான் அணிந்திருந்தாள்.. தான் வாங்கி
கொடுத்ததை சுமி அணிந்திருப்பதை பார்த்தவள் ஆச்சரியமாக விழி
விரித்தாளே தவிர அவளிடம் வேறு எதுவும் பேசவில்லை…

சுமி அவள் எதாவது கூறுவாள் என்று நினைத்துக் கொண்டு அவளை
பார்த்தவாறு வர, வினு எதுவும் கூறாமல் வெளியே கோவிலுக்கு செல்ல
தயாராக நின்றுக் கொண்டிருந்த வேனில் சென்று அமர்ந்துக் கொண்டாள்…

வினு அப்படி போகவும் சுமி திருவின் முகத்தை பார்த்தாள்..

“சாரிண்ணா” மெல்லிய குரலில் சுமி கூற, திரு அவள்
உச்சந்தலையில் கை வைத்து புன்னகைத்தான்..

“போ.. உங்கண்ணி கோவமா இருக்கிற மாதிரி நடிப்பா… விட்டுடாத..”
வினுவை புரிந்தவனாக திரு உரைக்க, சுமியும் மகிழ்ச்சியாக தலையை
ஆட்டிக்கொண்டு வினுவை தேடிச் சென்றாள்..

வேனில் இருவர் அமரும் இருக்கையில், ஜன்னலோரத்தில் வினு
அமர்ந்திருக்க, சுமி சென்று அவள் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.. அதை

கவனித்தாலும் வினு எதுவும் பேசவில்லை.. ஒரு முறை திரும்பி
பார்த்துவிட்டு வெளியே வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்…

சுமிக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாலும் எப்படி கேட்பது
என தெரியாமல் தடுமாறியபடி அமந்திருக்க சரியாக ஹனி வந்தாள்..

“மம்மி!!! நானும் வின்டோ சீட்…” ஆர்வமாக துள்ளியபடி ஹனி
கேட்க, சுமி அவளை தூக்கி வினுவின் மடியில் அமர வைத்தாள்…

சுமியின் செய்கையில் அதிர்ந்த வினு, தன் மடியில் இருந்த
ஹனியிடம், “குட்டி நீங்க உங்க அம்மா மடியில உட்காருங்க.. நான் அந்த
பக்கம் உட்கார்ந்துக்கிறேன்..” ஹனிக்கு ஜன்னல் சீட்டும், அதே சமயம்
சுமியிடமே அவள் இருக்கட்டும் என்பதற்காக வினு அப்படி கூற, சுமி
ஹனியை வினுவின் மடியிலேயே பிடித்து இருத்தினாள்…

“குட்டிமா.. நீங்க உங்க அம்மா மடியில தான்
உட்கார்ந்திருக்கிங்கன்னு உங்க அம்மாகிட்ட சொல்லுங்க…” ஹனியிடம்
பதில் கூறினாலும் வினுவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமி..

சுமி சொல்வதை நம்ப முடியாமல் பார்த்தவள் திகைக்க, சுமி அவள்
கைகளை பற்றிக் கொண்டாள்..

“சாரி வினு… நான் எதோ லூசு மாதிரி அப்படி நடந்துக்கிட்டேன்…”
தயங்கி தயங்கி சுமி கூற, வினு பதறிவிட்டாள்..

“ஹய்யோ அண்ணி நான் அதை பெரிசாவே எடுத்துக்கல.. எனக்கு
புரியுது.. உங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் அப்படி தான் நடந்துகிட்டு
இருந்திருப்பேன்…” சுமியை புரிந்துக் கொண்டவளாக வினு அவள்
கைகளை பற்றிக் கொண்டாள்..

வினுவின் பெருந்தன்மையான மனதை பார்த்து சுமிக்கு மேலும்
சங்கடமாக இருக்க, “மன்னிச்சிடு டா.. நான் திரும்பி வந்ததே ஹனிக்காக
தான், ஆனா இந்த கல்யாணம் எல்லாம் நான் நினைச்சி கூட பார்க்காதது..
அதனால தான் என்னால சட்டுனு ஒட்ட முடியல.. அதுவும் ஹனி வேற
உன் பின்னாடியே சுத்தவும், எனக்காக யாருமே இல்லாத மாதிரி ஒரு
எண்ணம் அதனால தான் அப்படி நடந்துக்கிட்டேன்.. சாரி..” வினு திருவிடம்
கூறியதையே சுமி வினுவிடம் கூற, வினு அவள் கைகளை தட்டிக்
கொடுத்தாள் புன்னகையோடு.

“இட்ஸ் ஓ,கே அண்ணி.. எவ்வளவு தான் ஹனி என் பின்னாடி
சுத்தினாலும் அவ உங்க பொண்ணு அப்படிங்கிறது மாறாது அண்ணி.. அதே
மாதிரி உங்களுக்காக யாரும் இல்லன்னு சொல்லாதிங்க… நாங்க
எல்லாரும் இருக்கோம் அதுலயும் அகில் அண்ணா உங்களுக்காக என்ன
வேணும்னாலும் பண்ணுவாங்க..”

“ஹ்ம்ம்” என்று இழுத்தவள் “எனக்காக தான் அவன் எதுவும்
பண்ணலயே” என்றாள் சிரிப்போடு,

அகில் தன் தந்தையிடம் தனக்காக எதுவும் பேசவில்லை என்பதை
தான் சுட்டிக் காண்பிக்கிறாள் என்று புரிந்துக் கொண்ட வினுவும்,

“அகில் அண்ணா அப்படி பட்டவங்க இல்ல அண்ணி.. கண்டிப்பா
எதாச்சும் காரணம் இருக்கும்.. நீங்களும் ஹனியும் வந்த அப்புறம் தான்

அவன் சந்தோஷமா இருக்கான்.. என்னோட அண்ணா அப்படிங்கிறதுக்காக
நான் சொல்லலை.. ஒரு நாள் நீங்களே அவனை புரிஞ்சிக்குவிங்க…”
என்றவள் சுமியின் முகத்தை பார்க்க… அதில் குழப்ப ரேகைகளும்
ஏமாற்றத்தின் வலியும் தான் தெரிந்தது…

தன் பதிலுக்காக வினு காத்திருக்கிறாள் என்று புரியவும், அதற்கு
மேல் அந்த பேச்சை வளர்க்க விரும்பாமல், “உங்க காதல் பத்தி சொல்லு
வினு… என் அண்ணாவை எப்போ பார்த்த???” என்க,

சுமி பேச்சை மாற்றுகிறாள் என்று புரிந்துக் கொண்ட வினுவும்
அவளை புரிந்துக் கொண்டு தங்களின் காதல் கதையை கூறினாள்..
திருவை பற்றி கூறும் போதே வினுவின் கண்களில் மின்னல் தெறிக்க,
சுமி சுவாரஸ்யமாக வினு கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்..
கோயிலை அடைந்த போது இருவருக்குள்ளுமே ஒரு நட்பு
உண்டாகியிருந்தது..

அதன்பின் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல சுற்ற,
மொத்த குடும்பமும் வாயை பிளந்தது.. அதிலும் திருவும் அகிலும் தான்
தங்களின் ஜோடிகள் இல்லாமல் தனியாக சுற்றிக் கொண்டிருந்தனர்..

இப்படியே மேலும் இரண்டு நாட்கள் கழிய, அனைவரும்
சென்னைக்கு கிளம்பினர்.. இசக்கிமுத்துவும் அவரது மனைவி பொன்னியும்
அவர்களுக்கு பிரியா விடை கொடுக்க, அனைவரும் கணத்த மனதுடன்
சென்னை வந்து சேர்ந்தனர்..

சென்னையில் இரு ஜோடிகளுக்கும் சுதா ஆரத்தி சுற்றி உள்ளே
வரவேற்க, சுமி தான் அந்த வீட்டோடு தனக்கு இருக்கும் ஞாபகங்களை
மறக்க முடியாமல் திண்டாடிப் போனாள்.. அவள் உணர்வுகள் புரிந்து

அகில் அவள் அருகில் இருந்தாலும் சுமிக்கு அவனை காண காண தன்
தந்தையின் இறப்பிற்கு இவனும் ஒரு காரணம் என்றே தோன்றியது…
அதனால் முடிந்த வரை அவனை விட்டு விலகவே செய்தாள்… அகில்
தான் மீண்டும் நத்தையாக சுருண்டுக் கொண்டவளை சமாதனம் செய்யும்
வழியறியாமல் சோர்ந்து போனான்..

தன் கண் முன் இருந்த ஆளுயரக் கண்ணாடியின் மேல் அருகில்
இருந்த பூஞ்சாடியை விட்டெறிந்தான் ராம். அதில் கண்ணாடி துண்டுகள்
சிதறி அவன் கையையும் பதம் பார்க்க, அதை கவனிக்கும் நிலையில்
அவன் இல்லை. அவன் உள்ளம் திகுதிகுவென்று எரிந்துக் கொண்டிருந்தது..
வினுவிற்கும் திருவிற்கும் திருமணம் முடிந்து விட்டது என்பதை
அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

அகிலின் அழைப்பேசிக்கு திரு மற்றும் வினுவின் புகைப்படத்தை
அனுப்பி சிறு கலவரத்தை உருவாக்கி, அதை பூதாகரமாக மாற்ற
நினைத்தவைனை வற்புறுத்தி மும்பை அனுப்பியிருந்தார் அவனது தந்தை
ரகுவரன்..

வினுவின் தந்தை கிருஷ்ண குமார் அமெரிக்காவில் இருந்து திரும்பி
வந்ததும் ராமின் தந்தையும் அவரது நண்பருமான ரகுவரனோடு சேர்ந்து
புதிதாக தொழில் தொடங்க இருப்பதால் அதற்கு தேவையான
ஏற்பாடுகளை ரகுவரனிடம் கவனிக்க கூறியிருந்தார்.. அதற்காக தான்
அவர் ராமை பெங்களூர், மும்பை என்று அனுப்பிக் கொண்டிருந்தார்..
ராமிற்கும் வினு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு அவளின்
தந்தையிடம் நற்பெயர் சம்பாதிப்பதும் முக்கியம் என்பதால் இந்த மூன்று
வார காலத்திற்குள் எதுவும் நடந்துவிடாது என்றென்னியே
கிளம்பியிருந்தான்.. ஆனால் இப்போது வினுவின் திருமணம்
முடிந்துவிட்ட செய்தியை கேட்டு, தன் அறையில் இருந்த அனைத்து
பொருட்களையும் உடைத்துக் கொண்டிருந்தான் ராம்..

“விட மாட்டேன் டி.. நீ எனக்கு தான்.. உன்னை கல்யாணம்
பண்ணிட்டு உங்கப்பனோட சொத்தெல்லாம் எனக்கு வரும்னு நான் கனவு
கண்டுட்டு இருக்கேன்.. ஆனா நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு
சந்தோஷமா இருக்கியா??? உன்னை சும்மா விட மாட்டேன்.. நான் தான்
தப்பு பண்ணிட்டேன்.. அந்த வெத்துவேட்டு அகிலுக்கு அந்த போட்டோவை
அனுப்பினதுக்கு பதிலா உன் அப்பனுக்கு அனுப்பியிருக்கனும்… ஷிட்..
இப்போவும் எதுவும் கெட்டு போகல… உன்னையும் உன் சொத்தையும்
எப்படி அடையனும்னு எனக்கு தெரியும்..” வெறி பிடித்தவன் போல்
கத்தியவன் தன் அழைப்பேசியை எடுத்தான்..

வேகவேகமாக சில எண்களை அழுத்தியவன் மறுமுனையில்
இருப்பவர் அழைப்பை ஏற்க காத்திருந்தான்.

“ஹலோ… கிருஷ்ண குமார் ஸ்பீக்கிங்..” அழைப்பை ஏற்றவர் தன்
கம்பீரமான குரலில் பேச,

“அங்கிள் நான் ராம் பேசுறேன்…”

“சொல்லு ராம்.. மும்பை கான்ஃப்பெரன்ஸ் எப்படி முடிஞ்சிது???”
தொழிலை மட்டுமே உயிர் மூச்சாக கருதுபவர் அதை பற்றியே முதலில்
விசாரிக்க…

“அங்கிள் நான் உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”
என்றான் ராம்.

ராம் அப்படி கூறியதும், யோசனையாக தன் தாடையை தடவியவர்,
“சொல்லு ராம்” என்றார்….

விழிகள் தொடரும்……

error: Content is protected !!