ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 3

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 3

அன்று சனிக்கிழமை. நேரம் மாலை நான்கு.
அந்த பங்களாவின் முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தினாள் ராதா. பார்க்கும் போதே பழைய பிரிட்டிஷ் காலத்து வீடு என்று தெரிந்தது.
பாலிஷ் பண்ணப்பட்ட செங்கற்கள் அந்த வீட்டை முற்று முழுதாக அலங்கரித்திருந்தன. சுற்றி வர இருந்த தோட்டத்தில் பலவர்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின.
வீட்டுக்குப் பின்னால் தெரிந்த மலையில் மேகங்கள் தவழ்ந்து கொண்டிருந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.
தான் இன்னாரென்று கூர்க்காவிடம் அறிமுகப் படுத்தியவள் அனுமதி பெற்றுக்கொண்டு நேராக உள்ளே சென்றாள். கூர்க்கா வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் சொன்னாரோ என்னவோ ஒரு பெண்மணி வாசல் வரை வந்து வரவேற்றார்.
“வாம்மா! நான்தான் ஆத்மிகாவோட பாட்டி.” அழகாகப் புன்னகைத்தார் சுஜாதா. அசப்பில் ‘மன்னன்’ படத்தில் வரும் தலைவரின் அம்மா போல இருந்தார். ஆனால் கை நன்றாகவே இருந்தது.
“வணக்கம் மேடம்.”
“வணக்கம். உள்ளே வாம்மா.” உள்ளே அழைத்துச் சென்றவர் சோஃபாவைக் கை காட்டினார்.
“பரவாயில்லை மேடம். ஆத்மிகாவைப் பார்க்கலாமா?” இவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆணும் பெண்ணும் வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வந்தார்கள்.
“அம்மா! நாங்க கிளம்புறோம்.” சொல்லிவிட்டு அவர்கள் நகர,
“சரிப்பா.” என்றார் சுஜாதா. ராதாவின் பார்வை அவர்களைத் தொட்டு மீண்டது.
“அது என்னோட இளைய பையனும் மருமகளும்.” சொல்லியபடி புன்னகைத்தார் சுஜாதா.
“ஓ… அப்படியா மேடம்.” அவள் கண்கள் வீட்டை ஒரு முறை வலம் வந்தது. அவள் கண்கள் தேடிய முகம் எங்கேயும் தட்டுப்படவில்லை.
வீடு மிகவும் பழமையாக இருந்தது. பொறுக்கி எடுத்தாற்போல கலைநயம் மிகுந்த பொருட்கள் ஆங்காங்கே வீற்றிருந்தன. பழங்கால பாணியில் இருந்த சுவர்க் கடிகாரம் ராதாவை விடச் சற்று உயரமாக இருந்தது.
“ஆத்மிகாவோட ரூம் மேல இருக்கு. அங்க போகலாமாம்மா?” சுஜாதாவின் கேள்வியில் நிஜத்திற்கு வந்தாள் ராதா.
“போகலாம் மேடம்.” சொல்லிய படியே அவரைத் தொடர்ந்தாள் இளையவள். அறுபதுகளைத் தாண்டிய தோற்றம் தெரிந்தது சுஜாதாவிடம். ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகைப்பார் போலும். இருந்தாலும் வயதை மீறிய முதுமை முகத்தில் தெரிந்தது.
மேலே இருந்த ஹாலில் அவளை உட்காரச் சொன்னவர் ஆத்மிகாவை அழைக்கப் போக அவரைத் தடுத்தாள் ராதா.
“மேடம்! நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்.”
“ஓ… தாராளமாப் பேசலாம். உட்காரும்மா.” சொன்னவர் தானும் ஒரு சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.
“மேடம், இது இந்த வாரம் ஃபுல்லா ஆத்மிகாவை ஆப்சேர்வ் பண்ணி எடுத்த நோட்ஸ். இதை நீங்களும் படிச்சிட்டு ஆத்மிகாவோட பேரன்ட்ஸுக்கும் குடுங்க.”
“சரிம்மா.” ராதா கொடுத்த ஃபோல்டரை வாங்கிக் கொண்டவர்,
“ஆத்மிகா எப்படி நடந்துக்கிறா ஸ்கூல்ல?” என்றார். கண்களில் அத்தனை கலக்கம் தெரிந்தது. அந்தக் கேள்விக்கு பதில் போல அழகாகப் புன்னகைத்தாள் ராதா.
“ரொம்ப நல்லாப் பண்ணுறா மேடம். சில குழந்தைங்க புதுச் சூழலுக்குப் பொருந்த ரொம்பவே கஷ்டப்படுவாங்க. பேரன்ட்ஸைப் பிரியுறது அவங்களுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். ஆனா, ஆத்மிகா அந்த ஸ்டேஜை ஈஸியா கடந்துட்டா.”
இதைச் சொன்னால் சுஜாதா மகிழ்ந்து போவார் என்று ராதா நினைக்க அவர் முகம் சோர்ந்து போனது. கொஞ்சம் கவலையைக் காட்டினாற் போல தோன்றியது.
“மேடம்! ஆத்மிகா வீட்டுல எவ்வளவு நேரம் உங்களோட செலவழிக்கிறாளோ அதே அளவு நேரம் எங்கூட இப்போ செலவழிக்கிறா. என்னோட வகுப்புல இருக்கிற இருபத்தைஞ்சு குழந்தைங்களும் என்னோட குழந்தைங்க தான். அவங்க வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு எது அவசியமா இருந்தாலும் அதைச் செய்ய நான் தயாரா இருக்கேன்.”
“………………”
“எங்கிட்ட ஆத்மிகாவைப் பத்தி எதை வேணும்னாலும் நீங்க டிஸ்கஸ் பண்ணலாம். எல்லாம் கான்ஃபிடென்ஷியலா இருக்கும். என்னை நீங்க நம்பலாம்.”
சுஜாதாவின் கண்களை நேராகப் பார்த்து ராதா சொன்ன போது அந்தப் பெண்மணி கலங்கிவிட்டார். கண்களிலிருந்து கண்ணீர் மளமளவென்று இறங்கியது.
எதுவும் பேசாமல் அவர் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தாள் ராதா. அவள் கை சுஜாதாவின் கைகளைத் தட்டிக் கொடுத்தது. ஆறுதலான நான்கு வார்த்தைகளுக்கு மிகவும் ஏங்கி இருப்பார் போலும். கலங்கிய வேகத்திலேயே தன்னை சுதாகரித்தும் கொண்டார்.
“சாரிம்மா.”
“பரவாயில்லை மேடம்.”
“சின்னக் குழந்தைங்கன்னா முதல் நாள் பள்ளிக்குப் போனா, பெத்தவங்களைப் பிரிஞ்சா நீ சொன்ன மாதிரித்தானேம்மா நடந்துக்கணும்? அழணும், ஆர்ப்பாட்டம் பண்ணணும். அதுதானேம்மா இயல்பு.”
“அப்படிச் சொல்ல முடியாது மேடம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. சில குழந்தைங்க வித்தியாசமா இருப்பாங்க.”
“அதைத்தான் நானும் சொல்லுறேன். இந்த வீட்டோட மூத்த பேரக் குழந்தை. எப்படியெல்லாம் வளரவேண்டியவ. நீ குடுத்த ரிப்போர்ட்டைப் படிச்சுத்தான் என்னோட பேரக்குழந்தை ஏப்படி இருக்கான்னு நான் தெரிஞ்சுக்கணுமா ராதா?”
“மேடம்!”
“என்னால என்ன பண்ண முடியும் சொல்லு? ஒரு பாட்டியா அந்தக் குழந்தையை அரவணைச்சுக்க முடியும். பார்த்துக்க முடியும்.”
“இந்த வயசுக் குழந்தைங்களுக்கு இருக்க வேண்டிய வெயிட் கூட ஆத்மிகாக்கிட்ட இல்லை மேடம்.”
“அவளுக்குச் சாப்பாடு குடுக்கிறது ரொம்பக் கஷ்டம்மா. பிடிவாதமெல்லாம் பிடிக்க மாட்டா. ஆனா… ஒடுங்கிப் போன மாதிரி இருப்பா. யார் கூடவும் அத்தனை சீக்கிரத்துல பேசமாட்டா. ரொம்ப மனசளவுல பாதிக்கப்பட்டிருக்காம்மா.”
“அவங்க அப்பா இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?” இதை ராதா கேட்டபோது சுஜாதா ஒரு பெருமூச்சு விட்டார்.
“தன்னோட கவலைகளை மறக்க அவன் எடுத்துக்கிட்ட ஆயுதம் அவனோட ஃபாக்டரி. ராப்பகலா அங்கே தான்.”
“அம்மா…”
“அதுக்கு அவகிட்ட குழந்தையைக் குடுத்தாத் தானேம்மா!”
“பொண்ணுங்க எந்த இடத்துல வேணும்னாலும் பொய்த்துப் போகலாம். ஆனா, கெட்ட தாய்ன்னு யாரும் இல்லை மேடம்.”
“ஐயையோ! என் பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஒத்துப் போகலைங்கறத்துக்காக நான் ஸ்வரா வைத் தப்பான பொண்ணுன்னு சொல்லமாட்டேம்மா.”
‘ஸ்வரா…’ மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்தாள் ராதா. பெயரே இத்தனை அழகா இருக்கே! இளையவள் முகத்தைப் பார்த்தே அவள் மனதைப் படித்தவர் போல சொன்னார் சுஜாதா.
“ரொம்ப அழகா இருப்பா. பெரிய வீட்டுப் பொண்ணு. ரொம்பச் செல்லமா வளர்த்திருக்காங்க. என் பையனோட எதிர்பார்ப்புகளுக்கு ஈடு குடுக்க அவளால முடியலை.”
“ஓ…”
“இந்தக் காலத்துல எந்தப் பொண்ணும்மா இவன் சொல்லுற மாதிரி இருப்பா? மாடர்னா ட்ரெஸ் பண்ணி ப்யூட்டி பார்லர், பார்ட்டி, ஃபங்ஷன்னு சுத்துற பொண்ணுக்கிட்ட போய் புடவை கட்டு, பூ வைய்யி, வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்கோன்னு சொன்னா… ஏத்துப்பாளா?”
“…………”
“அதுக்காக எங்களையெல்லாம் எடுத்தெறிஞ்சு ஒரு நாளும் நடக்கமாட்டா. ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு.” உறவு விட்டுப் போனாலும் தன் பேத்தியின் தாயை விட்டுக்கொடுக்கவில்லை சுஜாதா.
“எம் பொண்ணையும் அவகிட்ட குடுத்தா அவளைப்போல தான் வளப்பான்னு சொல்லி ஆத்மிகாவை அவங்க அம்மாக்கிட்ட குடுக்க மறுத்துட்டான்.”
“அவங்க கேட்டு சண்டை போடலையா மேடம்?”
“கேட்டா… சண்டையெல்லாம் போடலை.”
“அவங்க…‌ இப்போ…”
“வேற கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டாங்களாம்.” அந்தப் பதிலில் கொஞ்சம் திடுக்கிட்டாள் ராதா.
“ராதா… நான்… ஏதோ ஒரு கவலையில…” தடுமாறிய முதியவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் ராதா.
“ஆத்மிகாவைப் பார்க்கலாமா மேடம்?” அந்தக் கேள்வியில் பல அர்த்தங்கள் இருந்தாற்போல தோன்றியது சுஜாதாவிற்கு. ஒரு புன்சிரிப்போடு ராதாவை ஆத்மிகாவின் ரூமிற்கு அழைத்துச் சென்றார்.
ரூம் கதவைத் திறந்த போது மலைத்துப் போனாள் ராதா. பின்ங் கலர் பெயின்ட்டில் ரூம் பளபளத்தது. பெட், பில்லோ, கர்ட்டன் முதற்கொண்டு அனைத்தும் பின்ங் கலரிலேயே இருந்தது.
கால் புதையும் கார்பெட், அட்டாச்ட் பாத்ரூம், டீவி என அந்த ரூமே ஒரு ஹோட்டல் அறை போல வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆறு வயதுக் குழந்தை ஒன்றுக்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தும் அங்கு நிறைக்கப்பட்டிருந்தது.
“ஹாய் ஆத்மிகா.” ராதாவின் குரலில் டீவி யில் கவனமாக இருந்த பெண் திரும்பிப் பார்த்தது. இந்த ஒரு வார காலப் பழக்கத்தில் லேசான புன்னகை ஒன்று குழந்தையின் முகத்தில் தோன்றியது.
ராதா எதையும் கண்டு கொள்ளவில்லை. தன் உடமைகளைக் கழட்டி ஒரு பக்கமாக வைத்தவள் ஆத்மிகாவோடு போய் அமர்ந்து டீவி பார்க்கத் தொடங்கி விட்டாள்.
குழந்தை முதலில் மலைத்த போதும் தனக்கொரு துணை கிடைத்த மகிழ்ச்சியில் லேசாகப் பேச ஆரம்பித்தது. ஆச்சரியமாகப் பார்த்த சுஜாதா மெதுவாக ரூமை விட்டு வெளியேறினார்.
டீவி யில் ‘பார்பி’ மூவி போய்க்கொண்டிருக்க தனக்கு எதுவும் தெரியாதது போல கேள்விகளைக் கேட்டு குழந்தையிடம் பேச்சை வளர்த்தாள் ராதா.
தனது மிஸ்ஸுக்கு ஒன்றும் தெரியாது என்று புரிந்த மாத்திரத்தில் ஆத்மிகா குஷியாகிப் போனாள். பேச்சுக்கு நடுவே லேசாகச் சிரிப்பும் வந்தது.
தனது கூட்டை விட்டு வெளியே வரக் குழந்தை ஆயத்தமாகத்தான் இருந்திருக்கிறது என்று ராதா உணர்ந்து கொண்டாள். ஆனால் அந்தக் கூட்டை உடைக்கத்தான் யாரும் இருக்கவில்லை.
பள்ளிக்கூடத்தில் பார்த்த ஆசிரியரிடம் வராத நட்பு வீட்டில் பார்த்தபோது வந்தது. இவர் தனக்குப் பாதுகாப்பான ஒரு உறவு தான் என்பதை அந்தச் சின்ன மனம் புரிந்து கொண்டது.
கையில் ட்ரேயோடு உள்ளே நுழைந்தார் சுஜாதா. சூடாக சமோசாவும் காஃபியும் இருந்தது. குழந்தைக்குப் பாலும் கொண்டு வந்திருந்தார். ட்ரேயைப் பார்த்தவுடன் முகத்தைச் சுருக்கினாள் ஆத்மிகா. சுஜாதா அர்த்தத்தோடு ராதாவின் முகத்தைப் பார்த்தார்.
“இவ்வளவு நேரமும் டீவி பார்த்தது ரொம்பப் பசிக்குதில்லை ஆத்மிகா? வாங்க வாங்க. ஹான்ட் வாஷ் பண்ணிட்டு பாட்டி சூடா சமோசா கொண்டு வந்திருக்காங்க சாப்பிடலாம்.”
விடாமல் சின்னவளைக் கையோடு பாத்ரூமிற்குக் கூட்டிக்கொண்டு போய் கைகளைக் கழுவி விட்டாள். பேச்சுக் கொடுத்த படியே குழந்தைக்கும் ஊட்டி விட்டாள். மீதிப்படம் ஸ்நாக்ஸுடன் கழிந்தது.
நேரம் ஆறைத் தாண்டியிருக்க லேசாக இருள்பரவ ஆரம்பித்திருந்தது. கைக்கடிகாரத்தைப் பார்த்த ராதா பாட்டியிடமும் பேத்தியிடமும் விடைபெற்றுக் கொண்டாள்.
“ஓகே ஆத்மிகா. மன்டே ஸ்கூல்ல பார்க்கலாம், பாய்.” அவள் சொல்லி முடிக்கவும் குழந்தை,
“மிஸ்…” என்றது தயக்கமாக. ராதாவிற்குத் தன் காதுகளை நம்பவே முடியவில்லை. தன் தூண்டுதல் இன்றி முதல் முறையாக ஆத்மிகா அவளிடம் பேசும் வார்த்தை இது. சுஜாதாவை வியப்போடு பார்த்தவள்,
“என்னடா?” என்றாள். குரலில் அத்தனை கனிவு இருந்தது.
“நாளைக்கும்… வர்றீங்களா? விளையாடலாம்.” தயக்கமாக வந்தது குரல். ராதா சட்டென்று சுஜாதாவைத் திரும்பிப் பார்த்தாள்.
சுஜாதாவின் முகம் சங்கடத்தைக் காட்டியது. இருந்தாலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் ராதாவின் முகத்தைப் பார்த்தார். ராதா எதுவும் பேசவில்லை. குற்றமுள்ள நெஞ்சு, லேசாகப் படபடத்தது.
“ஆத்மி குட்டி, மிஸ்ஸுக்கு நிறைய வேலை இருக்கும்டா. ஒவ்வொரு நாளும் நம்ம வீட்டுக்கு அவங்களால வர முடியாது.” தன்மையாகத் தன் பாட்டி சொன்னதைக் கேட்டபோது சின்னவளின் முகம் சுருங்கிப் போனது.
பெரியவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.
“மேடம்… நான் இங்க வர்றதால உங்களுக்கு ஏதாவது…” ராதா சொல்லி முடிக்குமுன் அவளின் கையைப் பற்றிக் கொண்டார் சுஜாதா.
“என்ன பேச்சு ராதா இது? உனக்கு எத்தனையோ வேலை இருக்கும்னு தான் நான் தயங்கினேன். நீ எப்போ வேண்டுமானாலும் இந்த வீட்டுக்குத் தாராளமா வரலாம்மா.”
“தான்க்யூ மேடம்.” சுஜாதாவைப் பார்த்துப் புன்னகைத்தவள் குழந்தையிடம் திரும்பினாள்.
“ஆத்மிகா, மிஸ் நாளைக்கு ஈவ்னிங் வர்றேன். நீங்க உங்க டாய்ஸ் எல்லாம் எடுத்து வைங்க. விளையாடலாம், ஓகே.” பதில் சொல்லாவிட்டாலும் குழந்தை ஆர்வமாகத் தலையாட்டியது.
நாட்கள் வேகமாக உருண்டோட இதுவே வாடிக்கை ஆகிப் போனது. ஆனால், ராதா யார் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாளோ அந்த முகத்தை மட்டும் பார்க்க முடியவே இல்லை.
இருந்தாலும், அவன் வசிக்கும் அந்த வீடும், அவன் சொந்தபந்தங்களும் அவளுக்கு அத்தனை நிறைவைக் கொடுத்தன.
ஆத்மிகாவின் ரூமில் உட்கார்ந்து விளையாடியவர்கள் இப்போது கார்டன் வரை வந்திருந்தார்கள். மேடம், மிஸ் எல்லாம் காணாமல்ப் போய் அங்கு ஆன்ட்டி குடியேறி இருந்தது.
அவ்வப்போது தன் முதுகைத் துளைக்கும் ஏதோ ஒன்றை உணருவாள் ராதா. சுற்றிவர ஏதோ ஒரு எதிர் பார்ப்போடு கண்களைச் சுழற்றுவாள் பெண். ஆனால், அவள் தேடிய முகம் எங்கும் புலப்படாது.
“என்ன? பார்ட் டைமா ஆயா வேலைக்கு இப்போவே சேர்ந்துட்டே போல?” அர்ச்சனாவின் கேலியில் அவளை முறைத்தாள் ராதா.
“சரி சரி நீ நடத்து. எஸ்டேட் போற வழியில பார்த்தேன் உன்னோட ஹீரோவை.” ராதா எதுவும் பேசவில்லை. கண்கள் மின்னத் தன் தோழியையே பார்த்திருந்தாள்.
“ம்… பரவாயில்லை. பார்க்க சுமாரா இருக்காரு. உனக்குப் பொருத்தம் தான். விசாரிச்ச வரைக்கும் வீட்டுலயும் எல்லாரும் நல்ல மாதிரின்னு தான் சொல்லுறாங்க.” அர்ச்சனா சொல்லி முடித்த போது ராதா ஓடிவந்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“ஏய்! என்னடீ இது? ச்சீ… விடு என்னை. கன்னத்தை எச்சில் பண்ணிக்கிட்டு…” ராதாவைத் தள்ளி விட்டவள் அவள் முத்தம் வைத்த கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.
ஒரு முறைப்போடு ரூமை விட்டு வெளியேறினாள் அர்ச்சனா. ஆனாலும் முகத்தில் மெல்லியதாக ஒரு புன்னகை தெரிந்தது.
அன்று இரவு…
அம்மாவைத் தேடி ஹாலுக்கு வந்தான் அபராஜிதன். டீவி யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார் சுஜாதா.
“அம்மா!” மகனின் குரலில் கவனம் கலைந்தது அன்னைக்கு.
“என்ன தம்பி?”
“ஆத்மிகா தூங்கிட்டாளா?” எப்போதும் தன் பெண்ணைப் பற்றிய பேச்சு வந்தால் சோகத்தை அப்பிக் கொள்ளும் அன்னையின் முகம் அன்று மலர்ந்து போவதை மனதுக்குள் குறித்துக் கொண்டான் அபராஜிதன்.
“ம்… அப்பவே சமத்தா சாப்பிட்டுட்டு தூங்கிட்டா.”
“இப்பெல்லாம் நீங்க சொல்றதைக் கேட்டு ரொம்ப நல்ல பொண்ணா ஆயிட்டா போல ஆத்மி!”
“இல்லையா பின்னே! என் பேத்தி சக்கரைக்கட்டி தான். என்ன? அப்போல்லாம் அவளை சரியா யாரும் வழி நடத்தலை. இப்போ தான் ராதா வந்துட்டா இல்லை.”
“ம்… டீச்சர் அடிக்கடி வர்றாங்களோ?” மகனின் குரல் பேதத்தை அன்னை கவனிக்கவில்லை.
“ஃப்ரீயா இருந்தா வாம்மான்னு நானும் சொல்லி இருக்கேன். நம்ம சின்னக்குட்டியைப் பார்த்தியா தம்பி? இந்த ஒரு மாசத்துல லேசா சதை போட்டு பார்க்க எவ்வளவு அழகா இருக்கா! என் தங்கத்துக்கு என் கண்ணே பட்டுரும்.”
அம்மாவின் பேச்சு அத்தனை தூரம் ருசிக்கவில்லை அபராஜிதனுக்கு. வயசுப்பெண். அடிக்கடி இங்கே வந்து தன் பெண்ணைக் கவனித்துக் கொள்வது அவனுக்குச் சரியென்று படவில்லை.
“அம்மா…”
“சொல்லு தம்பி.”
“ஆத்மி கிட்ட தெரியுற மாற்றம் ரொம்ப நல்ல விஷயம் தான். இல்லேங்கலை. அதுக்காக டீச்சர் இங்க அடிக்கடி வர்றது அவ்வளவு நல்லாப் படலைம்மா.”
“அதுக்கு?” கொஞ்சம் கடினமாக வந்தது சுஜாதாவின் குரல். சுஜாதாவிற்கு கோபப்படத் தெரியாது. எதுவாக இருந்தாலும் சிரித்த முகமாகவே பேசித் தீர்ப்பார். இப்போது அம்மாவின் குரலில் வந்த கடினம் அபராஜிதனை ஆச்சரியப் படுத்தியது.
“அம்மா!”
“அதுக்கு என்ன பண்ணச் சொல்லுற தம்பி. இத்தனை காசு பணம் இருந்தும் இவ்வளவு நாளா அனாதை மாதிரித் தானே நின்னுச்சு அந்தக் குழந்தை? காலம் போன கடைசியில என்னால ஓட முடியுமா? ஆட முடியுமா?”
“……………”
“இத்தனை வளர்ந்த பிறகும் உனக்கு அம்மா தேவைப் படுதில்லை. அப்போ அந்தப் பிஞ்சுக்கு எவ்வளவு தேவைப்படும்? யோசிச்சுப் பார்த்தியா நீ? யார் சொன்னதையும் கேக்காம உன் இஷ்டப்படி தானே எல்லாம் பண்ணினே?”
“என் கஷ்டம் என்னன்னு உங்களுக்குப் புரியலையாமா?”
“எம் மகனோட கஷ்டம் எனக்குப் புரிஞ்சுது. அதால தான் அமைதியா இருந்தேன். உம் மகளோட கஷ்டம் உனக்குப் புரிஞ்சுதா?”
“அம்மா!”
“யார் பேச்சையும் நான் கேக்குறதா இல்ல தம்பி. இத்தனை நாளும் எம் பேத்தியோட வாழ்க்கை என்ன ஆகுமோ, ஏது ஆகுமோன்னு நான் கிடந்து மருகினது எனக்குத் தான் தெரியும். ஆண்டவனாப் பார்த்து அந்தப் பொண்ணை இங்க அனுப்பி இருக்கான். அதைத் தயவு பண்ணி யாரும் கெடுக்காதீங்க.”
சூடாகச் சொல்லி முடித்தவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். அபராஜிதன் மலைத்துப் போனான். தன் தோளில் விழுந்த கையில் திடுக்கிட்டவன் திரும்பிப் பார்த்தான். அப்பா வெங்கடேசன் நின்றிருந்தார்.
“அப்பா… அம்மா சொன்னதைக் கேட்டீங்களா? ஏம்பா அம்மா என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க?” மகனின் ஆதங்கத்தில் புன்னகைத்தார் வெங்கடேசன்.
“அவளுக்கும் புரியுதுப்பா. அதையும் தாண்டி ஆத்மிகாவோட எதிர்காலம் அம்மாவை பயமுறுத்துது. நீ எதையும் மனசுல வச்சுக்காம போய்த்தூங்கு. நான் பேசுறேன் அம்மாக்கிட்ட.”
அப்பாவின் வார்த்தைகளில் பெருமூச்சு ஒன்று கிளம்பியது மகனிடமிருந்து. எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டான். போகும் மகனை வேதனையோடு பார்த்திருந்தார் வெங்கடேசன்.
error: Content is protected !!