Lovely Lavi – Episode 24

 

அத்தியாயம் – 24

லவியின் இமைகள் வேகமாகத் துடிக்க, அவள் உதடுகள் கேள்விகளைத் தொடுக்க, “தெரியலை. உன் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியலை. உனக்கு மதிப்பிருக்கா? இல்லை உன் இஷ்டத்திற்கு மதிப்பிருக்கா? இல்லை உன் சொல்லுக்கு மதிப்பிருக்கா? இதுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை.” என்று இறங்கிய குரலில்  லவியின் முகம் பார்த்து சங்கர் கூற, ‘நான் இவனைக் காயப்படுத்திவிட்டேனோ?’ என்று முதல் முறையாக அவனுக்காகச் சிந்தித்தாள் லவி.

லவி மௌனமாக ராஜைப் பார்த்தபடி படுத்திருக்க, சங்கர் மெத்தையிலிருந்து எழுந்து அந்த மெல்லிய இரவு விளக்கின் ஒளியில் நடக்க ஆரம்பித்தான்.  லவி எழுத்தமர்ந்தாள்.

“என் வார்த்தைக்கு மதிப்பிருக்கானு எனக்கு தெரியணும். நான் வந்து ஐந்து வருஷத்திற்கு மேல ஆகுது. என் பிரெண்ட்ஸ் நிறையத் தடவை நயகரா போயிருக்காங்க. என்னையும் கூப்பிட்டு இருக்காங்க. ஆனால், நான் யார் கூடவும் போனதில்லை. என்னைக்காவது நீ வருவ… நான் உன்னோடு போகணும்னு காத்துகிட்டு இருந்தேன். நாம நயகரா போகணும். நீ என் கூட வரணும்.  ராஜுக்காக இல்லை.  எனக்காக!” என்று சங்கர் கூற, அவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் லவி.

லவி அருகே வந்து, “நீ, நான், ராஜ் போவோமா?” என்று உரிமையாக, அன்பாக, ஆசையாக, குழந்தையின் ஆர்வத்தோடு சங்கர் கேட்க, சங்கரின் அருகாமையில் மெய்சிலிர்த்து அவன் குரலில் ஆட்கொண்டு அவன் கண்கள் வெளிப்படுத்திய அன்பில் கட்டுண்டு லவி சம்மதமாக தலை அசைத்தாள்.

லவியின் முகத்தை கைகளில் ஏந்தி, அவள் நெற்றியில் இதழ் பதித்து, “தேங்க்ஸ்…” என்று கண்கலங்கக் கூறினான் சங்கர்.

லவி பதிலேதும் கூறாமல், அமைதியாக படுத்துக் கொள்ள, சங்கரும் மௌனமாகப் படுத்துக் கொண்டான்.

‘சங்கருக்கும் எனக்குமான இடைவெளி எப்ப குறைஞ்சிது?’ என்ற எண்ணத்தோடு லவி புரண்டு படுக்க, ‘எதுவும் டென்ஷன் ஆகிருப்பாளோ? தூக்கம் வராமல் என்ன செய்றா?’ என்ற பதட்டத்தோடு, “ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று அக்கறையாகக் கேட்டான் சங்கர்.

“ம்.. ஹும்…” என்று மறுப்பாகத் தலை அசைத்து ஓர் அழகான புன்னகையோடு லவி கண்ணுறங்க, சங்கர் லவியின் தூக்கத்தை உறுதி செய்து கொண்டு நிம்மதியாக உறங்கினான் சங்கர்.

நாட்கள் அதன் போக்கில் நகர, அவர்கள்  நயகரா செல்ல திட்டமிட்ட நாளும் வந்தது.

செல்லும் இடங்களில் சப்வே, பிஸ்ஸா, மெடிட்டரேனியன், மெக்ஸிகன் போன்ற பல உணவு வகைகள் கிடைத்தாலும், நாக்கு அதன் சுவையைத் தேடும் காரணத்திற்காக, எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், எலக்ட்ரிக் க்ரிடில், அரிசி, இட்லிப் பொடி, கொத்தமல்லி, பருப்புப் பொடி வகைகள், வத்தக்குழம்பு,  புளியோதரை மிக்ஸ் என அனைத்தையும் நித்திலா மற்றும் லவி எடுத்து வைக்க, சங்கர் சில பதபடுத்தப்பட்ட பொருள்களையும், நொறுக்குத் தீனிகளையும் எடுத்து வைத்தான்.

“உங்க மூணு பேரையும் பார்த்தா ஊர் சுத்தி பாக்க போற மாதிரி தெரியலை. எதோ சாப்பிட போற மாதிரி தெரியுது.” என்று யாதவ் ராஜுடன் விளையாடியபடியே நக்கலாகக் கூற, “மவனே! சாப்பாட்டுல  கை வச்சி பாரு. அப்ப இருக்கு உனக்கு.” என்று லவி இடுப்பில் கை வைத்து சண்டைக்குத் தயாராக, சங்கர் லவியை புன்முறுவலோடு பார்த்தபடி தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான்.

“லவி! நமக்கு நிறைய வேலை இருக்கு. நாம நமக்கு மட்டும் எடுத்து வைப்போம். யாதவ் கார்ன் பிளக்ஸ், பிஸ்சா, பிரட்ன்னு  எதையாவது சாப்பிடட்டும்.” என்று நித்திலா மும்முரமாக அனைத்தையும் எடுத்து வைத்தபடி கூற, “அடடா… இவள் அல்லவா சிறந்த மனைவி.” என்று யாதவ் சிலாகிக்க, அங்குச் சிரிப்பலை பரவியது.

கேலியும் கிண்டலுமாக அவர்கள் பயணம் நயகராவை நோக்கித் தொடங்க, யாதவ், சங்கர் இருவரும் சற்று மாறி மாறி காரை ஓட்ட, அவர்கள் செல்லும் வழியில்   பிட்ஸ்பேர்க் கோவிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்தனர்.

கோவிலில் சுவையான புளியோதரை, சாம்பார் சாதம் என நித்திலா, லவி களத்தில் இறங்க, “சங்கர்… இரண்டு பெரும் சாப்பிடத் தான்டா வந்திருக்காங்க.” என்று யாதவ் ராஜைத் தோளில் சுமந்தபடி சங்கரின் காதில் கிசுகிசுத்தான்.

சங்கர் எதுவும் பேசாமல் புன்னகைத்துக் கொள்ள, “பேசிறாத…” என்று கடுப்பாக முணுமுணுத்த படி அவர்கள் பயணம் மீண்டும் நயாகரா நோக்கிச் சென்றது .

காரை நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு அனைவரும் நடக்க, “காரை நிறுத்திட்டோம்… எல்லா இடத்துக்கும் எப்படிப் போக போறோம்?” என்று நித்திலா கேட்க, அங்கு நிதானமாக வந்து கொண்டிருக்கும் ட்ரோலியை காண்பித்தபடி, “இதில் தான் போக போறோம்.” என்று யாதவ் கூற, “ஜாலி … ஜாலி…” என்று குதித்தான் ராஜ்.

ஆங்காங்கே இருந்த பலகையில் நயாகரா பால்ஸ் ஸ்டேட் பார்க் என்றிருக்க, “இது பார்க்… அவ்வுளவு தான்… ஆனா இங்க பால்ஸ் இருக்க போய், இவ்வுளவு பேமஸ் ஆகிருச்சு?” என்று லவி கேள்வியாக நிறுத்த, “அதுமட்டுமில்லை. நயாகரா பால்ஸ், அமெரிக்க, கனடாக்கு இடையில் இருக்கு.” என்று யாதவ் கூற, ஆமோதிப்பாகத் தலை அசைத்தான் சங்கர்.

முதலில் எங்குச் செல்லலாம்  என்று நித்திலா, சங்கர், யாதவ் தீவிர ஆலோசனையில் இருக்க, அங்கிருந்த மிருகங்களுக்குப் பின்னும், பறவைகளுக்குப் பின்னும் ஓடிக்கொண்டிருந்த ராஜைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள் லவி.

முதலில் மெய்ட் ஆப் தி மிஸ்ட் செல்லலாம், என்று முடிவெடுத்து அவர்கள் வரிசையில் நிற்க, நீரில் நனையாமல் இருக்க அவர்களுக்கு ஒரு நீல நிற கோட் கொடுக்கப்பட்டது. அனைவரும் அதை அணிந்து கொண்டு படகில் ஏறினர். மெய்ட் ஆப் தி மிஸ்ட் என்பது நயாகரா பால்ஸ் போட் டூர். போட் டூர் என்று கூறினாலும், அந்த படகு கப்பலைப் போன்று பிரமாண்டமாகக் காட்சி அளிக்க, அவர்கள் அந்த இரண்டு தள படகின் மேல் பகுதியில் நிற்க அந்த படகு அசைந்து அசைந்து நயாகரா நீர் வீழ்ச்சி அருகே சென்றது.

படகு லம்ப, லம்ப ராஜ் சற்று அச்சத்தோடு லவியை நெருங்க லவி ராஜை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். “ராஜ் பயப்படுறானே? கீழவே நின்றுக்கலாமோ?” என்று லவி கேட்க, “எப்படி பால்ஸ் பார்க்கறது?” என்று சிரித்த முகமாக சங்கர் கேட்டுக் கொண்டே, ராஜை தூக்கிக் கொள்ள… “தூக்க வேண்டாம். உனக்கு பாலன்ஸ் இருக்காது. கீழ விழுந்திர போற…” என்று கூறிக் கொண்டே ராஜை பிடிக்க, லவி தடுமாறி விழ சங்கர் லவியை தாங்கி பிடித்தான்.

ராஜையும், லவியையும் தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டு நயகரா நீர் வீழ்ச்சியை ரசித்தான் சங்கர்.

படகு நீர்வீழ்ச்சி அருகே செல்ல, செல்ல நீர் சாரலாக இவர்கள் மேல் தெளிக்க, “ஓ… ஓஹ்… ஓ…” என்று சத்தம் செய்து மக்கள் ஆர்ப்பரிக்க, நித்திலா, யாதவ் அவர்களை மறந்து நீர்வீழ்ச்சியின் அழகில் ஆழ்ந்தனர்.

“எவ்வுளவு தண்ணீர்? சங்கர் சூப்பரா இருக்குல்ல!” என்று லவி பிரமிப்பாகக் கூற, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு ஆமென்று  தலை அசைத்தான் சங்கர்.

நயாகரா நீர்வீழ்ச்சியின் தண்ணீர் லவியின் முகத்தில் முத்து முத்தாக வடிய, அவள் அழகில் தன்னை மறந்து லவியை பார்த்துக் கொண்டிருக்க, சங்கரின் எண்ணம் புரிந்தார் போல்  புருவம் உயர்த்தி, ‘என்ன?’ என்று வினவினாள் லவி.

சங்கரின் முகத்தில் ஒரு கம்பீரம் கலந்த ஓர்  வெட்கப் புன்னகை பூக்க, மறுப்பாய் தலை அசைத்து ராஜை இறுக்கி கொண்டான் சங்கர். லவி அவனை கண்கொட்டாமல் பார்த்து, “நீயும் நனைச்சிட்ட…” என்று லவி கேலியாகக் கூற, “நனைச்சா   நான் உன்னளவுக்கு அழகா இருக்கேனா?” என்று சங்கர் கேட்க, லவி அவனைச் செல்லமாகத் தட்டிவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

“நித்திலா… அங்க  என்ன நடக்குது? ரொம்ப ஓவரா போற மாதிரி தெரியுது?” என்று யாதவ் நித்திலாவிடம் கிசுகிசுக்க, “நானும் அதைத் தான் பாக்குறேன்.” என்று நித்திலா யாதவின் காதில் கிசுகிசுத்தாள்.

“சங்கர், நாங்க வேணா ராஜை வச்சிக்கிடட்டுமா?” என்று யாதவ் கேலி பேச, ‘அவ்வுளவு அப்படமாவா தெரியுது?’ என்றெண்ணியபடி, “இல்லை பரவால்லை… நாங்க சமாளிப்போம்.” என்று மேட்டுவிடாமல் சங்கர் கெத்தாக கூற, லவி தாங்கள் பார்த்து விட்டு திரும்பிய நீர் வீழ்ச்சியை பார்த்தபடி தன்  வெட்க புன்னகையை மறைத்துக் கொண்டாள்.

அடுத்ததாக அவர்கள் கேவ் ஆப் விண்ட்ஸ செல்ல, சற்று அச்சுறுத்தும் விதமாகவே அந்த படிகள் இருக்க, லவி, ராஜ் இருவரையும் பத்திரமாக பிடித்துக் கொண்டு படி ஏறினான் சங்கர். அங்கு நீரில் நனையாமல் இருக்க, அவர்களுக்கு மஞ்சள் நிற கோட் கொடுக்கப்பட அவர்கள் அதை அணிந்து கொண்டு, படியேறி அந்த நீர் வீழ்ச்சி அருகே சென்றனர்.

அப்பொழுது நித்திலாவின் கால்கள் படியில் வழுக்க, யாதவ் அவளைப் பதட்டத்தோடு பிடிக்க, நித்திலா வெட்கத்தோடு விலகி நிற்க, சங்கரின் கண்கள் கூர்மையானது.

“நித்தி… பார்த்து வர மாட்டியா.” என்று லவி கடிந்து கொள்ள, “தெரியலை லவி.. பார்த்துத் தான் வந்தேன்.” என்று கூறிக்கொண்டே, அவர்கள் நீர் வீழ்ச்சியின் அழகைப் பிரமிப்போடும், நீரின்  வேகத்தை அச்சத்தோடும், அந்த இடத்தின் செழுமையை ஆர்வமாகவும் கண்டு ரசித்தனர்.

அங்கு அருவி பாய்ந்தோட, சூர்ய ஒளி பட்டு அங்கு ஓர் நிரந்தர வானவில் அமைந்திருக்க, ராஜ் அதைப் பார்த்து, “ரெயின்போ… ரெயின்போ…” என்று ஆர்ப்பரிக்க, லவி, நித்திலா அந்த இடத்தின் அழகில் மயங்கி அந்த இடத்தை ரசித்தபடி நின்றனர்.

சங்கர் யாதவ் அருகே சென்று, “உங்களுக்குள்ள என்ன நடக்குது?” என்று யாதவிடம் சங்கர் கூர்மையாகக் கேட்க, “சங்கர். நான் கேட்க வேண்டியதை நீ கேட்கற.” என்று சங்கரின் கேள்வி புரிந்தும் புரியாதது போல் பதில் கூறினான் யாதவ்.

“ஜோக்… கேவலமா இருக்கு.” என்று சங்கர் கோபமாக கூற, சங்கர் கூறுவது புரிந்தது போல், “எப்படிடா நானும் நித்திலாவும் சந்தோஷமா இருப்போம். நீங்க இரெண்டு பெரும் இப்படி இருக்கும் போது?” என்று யாதவ் தன் கண்களைக் கூர்மையாக்கிக் கேட்க, சங்கர் யாதவை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“அன்னைக்கி எங்க அம்மா எந்த குழப்பமும் பண்ணமா இருந்திருந்தா… நான் எங்க அம்மாவை தடுத்திருந்தா உன் வாழ்க்கை நல்லேந்திருக்குமோன்னு எனக்கு ஓர் குற்ற உணர்ச்சி. தன்னால தான் லவியோடு வாழ்க்கை இப்படி ஆகிருச்சுன்னு நித்திலாவுக்கு குற்ற உணர்ச்சி. உங்க வாழ்க்கையை எப்படியாவது சரி பண்ணிராலும்னு, நாங்களும் பல வருஷமா போராடுறோம். இப்ப தான் எதோ கொஞ்சம் பரவால்லை.” என்று யாதவ் எங்கோ பார்த்தபடி கூற, “லூசா நீ…” என்று கடுப்பாக கேட்டான் சங்கர்.

“என் வாழ்க்கையை எனக்குப் பாக்க தெரியும். என் மனைவியை நான் பார்த்துப்பேன். நீ ஒழுங்கா நித்திலாவை பாரு.” என்று சங்கர் அறிவுரை கூற, “எனக்கும் அப்படி தான் தோணுது. நீங்க ரெண்டு பெரும் தேரிருவீங்கன்னு…” என்று யாதவ் கண்ணடித்துக் கூற, சங்கர் தலையில் அடித்துக் கொண்டான்.

‘எப்பேற்பட்ட நட்பிது.’ என்றெண்ணி சங்கர் யாதவின் தோள் மேல் கை போட்டு, “நீயும், நித்திலாவும் சந்தோஷமா இருக்கனும்.” என்று ஆழமான குரலில் ஆணையாக கூறினான் சங்கர்.  அந்த நண்பனின் ஆணைக்கு கட்டுப்பட்டு தலை அசைத்தான் யாதவ்.

அவர்கள் இன்னும் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தனர்.

சூரியன் தன் பணியை முடித்து விட்டு, சற்று ஓய்வெடுக்க மாலை நேர காற்றில் அந்த ஹார்ஸ் ஷூ பால்ஸ் என்றழைப்படும் இடத்தில் புல் தரையில்  அமர்ந்திருந்தனர் லவி மற்றும் நித்திலா.

ராஜ் அங்குமிங்கும் ஓட, சங்கர் மற்றும், யாதவ் அவன் பின்னே ஓடிக் கொண்டிருந்தனர்.

லவியின் முகத்தில் புன்னகை. “நித்தி… என்னனு தெரியலை. நான் இன்னைக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்று சங்கரை பார்த்தபடி கூறினாள் லவி. நித்திலா தலை அசைக்க, “சங்கர் பாவம் நித்தி. நான் அவனை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.” என்று வருத்தம் தொனிக்கும் குரலில் கூறினாள் லவி.

லவிக்கு சுருக்கென்று வலி அவள் நெஞ்சில் தைக்க, தண்ணீரை குடித்துக் கொண்டாள். ‘இவ ரொம்ப யோசிக்க கூடாதே!’ என்ற எண்ணம் தோன்ற, நித்திலா, “அப்படி எல்லாம் இல்லை சங்கர், சந்தோஷமா தான் இருக்கான்.” என்று நித்திலா கூற, லவி அதற்கும் புன்னகைத்துக் கொண்டாள்.

“நம்ம என்னைக்கும் குழந்தை மனசோட இருக்க, நமக்கு குழந்தை வேணும். அந்த குழந்தையும் நாமளும் பாதுகாப்பா இருக்க கல்யாணம் வேணும். நல்ல கணவன் அமைஞ்சிட்டா வாழ்க்கை சொர்க்கம் இல்லையா நித்தி?” என்று லவி கேள்வியாக நிறுத்த, “இதில் என்ன சந்தேகம்.” என்று கேட்டு  நித்திலா ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

‘கல்யாணம் பண்ணா நாசமா போவ! என்று கூறிய லவியா இது?’ என்ற பிரமிப்பு நித்திலாவின் கண்களில் தெரிந்தது.

லவி மேலும் பேச, “சங்கர், ராஜை நல்லா பார்த்துப்பான்ல்ல?” என்று லவி ஆழமான குரலில் கேட்க, “லூசு… என்ன நீ இப்ப  தேவை இல்லாமல் பேசுற?” என்று நித்திலா கடிந்து கொள்ள, சங்கர், யாதவ் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

நேரம் செல்ல, செல்ல அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றனர்.

ராஜ் தூங்கிவிட, லவி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“தூக்கம் வரலையா?” என்று சங்கர் லவி அருகே நின்று கேட்க, லவி மறுப்பாகத் தலை அசைத்தாள்.

“இன்னைக்கி உனக்கு எல்லாம் இடமும் பிடிச்சிருந்ததா?” என்று என்ன பேசுவது என்றறியாமல் கேட்டான் சங்கர். “ரொம்ப நாளைக்கி அப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த இடத்தோட அழகு நான் சாகுற வரைக்கும் மறக்காது.” என்று லவி கூற, ‘எதுவோ சரியில்லை.’ என்ற எண்ணம் தோன்ற, “வா தூங்கு.” என்று பட்டும் படாமலும் கூறினான் சங்கர்.

லவியின் இதயம் சுருக்கென்று குத்த, சங்கரின் கைகளைப் பிடித்து அவனை நிறுத்தினாள் லவி. “நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?” என்று லவி கேள்வியாக நிறுத்த, ‘இவளுக்கு என்ன ஆச்சு?’ என்று எண்ணியபடி லெவியை பார்த்தான் சங்கர்.

அங்கு மௌனம் நிலவ, “நான் தான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.” என்று கூறி  லவியின்  கேள்விக்கு  மறுப்பாகத் தலை அசைத்தான் சங்கர்.

“என்னதிது புதுசா. நான் சந்தோஷமா தான் இருக்கேன்.” என்று சங்கர் மேலும் இன்முகத்தோடு கூற, “அது உன் பெருந்தன்மை.” என்று பிடிவாதமாக சங்கரின் கூற்றை மறுத்தாள் லவி.

“சங்கர்…” என்றழைக்க, லவியி்ன் வலி அதிகரிக்க, அதை மறைக்க அரும்பாடுபட்டாள் லவி. “மாத்திரை சாப்பிட்டியா?” என்று சங்கர் பதட்டமாகக் கேட்க, “சாப்பிட்டேன். ஏனோ.. மாத்திரை வேலை செய்யற மாதிரி தெரியலை.” என்று புன்னகைத்தாள் லவி.

“டாக்டர் கிட்ட போவோமா?” என்று சங்கர் பதற, “ஐ அம் ஒகே. நான் பேசணும். நீ கேளு. எல்லாம் சரி ஆகிரும்.” என்று லவி கூற, சங்கர் சம்மதமாகத் தலை அசைத்தான்.

‘கொடுத்தவன் கேட்டால் திருப்பி கொடுத்து தானே ஆக வேண்டும்.’ என்ற எண்ணம் லவிக்குள்.

“நான் நீ கூப்பிடத்துக்கோ… இல்லை எனக்காகவோ இங்க வரலை. எனக்கு கொஞ்ச நாளா எதோ சரியில்லை. ராஜை உன்கிட்ட ஒப்படைக்கத் தான் வந்தேன்.” என்று லவி கூற, ‘அவள் பேசட்டும்…’ என்ற எண்ணத்தோடு அவளை மௌனமாகப் பார்த்தான் சங்கர்.

சங்கர் மௌனம் காக்க, “என் உடல் நிலை, உனக்குத் தெரியும் அப்படி தானே?” என்று லவி சந்தேகமாகப் பார்க்க, வேறு வழியின்றி ஆமோதிப்பாகத் தலை அசைத்தான் சங்கர்.

சங்கரின் பதிலில் லவியின் கண்களில் வலி தெரிய, “நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளேன்.” என்று சங்கர் கெஞ்ச, “நான் பேசணும்.” என்று அழுத்தமாக, பிடிவாதமாக கூறினாள் லவி.

“வாயேன்… இப்ப எதுக்கு தேவை இல்லாத பேச்சு.” என்று சங்கர் கூற, “உனக்கு என்னை பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். பிடிக்கிற அளவுக்கு நானும் நடந்துக்களை. அதுக்கு அவசியமுமில்லை.’ என்று லவி கம்பீரமாகக் கூற, சங்கரின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

“எனக்கு உன்னை முன்னாடி சுத்தமா பிடிக்காது.” என்று லவி கூற, சங்கரின் முகத்தில் பூத்த புன்முறுவல் விரிந்தது. ‘இப்ப?’ என்று சங்கரும் கேட்கவில்லை. லவியும் கூறவில்லை.

“ராஜைப் பத்திரமா பார்த்துக்கோ. நான் இருக்கிற வரைக்கும் நான் பார்த்துப்பேன்.” என்று கூறுகையில் லவியின் வலி அதிகரிக்க, வலி தாளாமல், “ராஜை பார்த்துக்கோ.” என்று முனங்கிக் கொண்டே தரையில் சரிந்து விழுந்தாள் லவி.

யாதவ், நித்திலா, சங்கர், ராஜோடு லவியை அழைத்துக் கொண்டு  மருத்துவமனைக்கு சென்றனர்.

அனைவரும் பதட்டத்தோடு, காத்திருந்தனர். அவர்கள் உரையாடல் தமிழாக்கத்தில்.

“ஷி ஐஸ் ஸ்ட்ரெஸ்ட்,” என்று மருத்துவர் கூற, “இல்லை… சந்தோஷமா தான் இருந்தா.” என்று சங்கர் மருத்துவருக்கு மறுப்பு தெரிவித்தான்.

“அந்த சந்தோஷமும் அவங்களால் தாங்கிக்க முடியலை.” என்று கூறிவிட்டு மருத்துவர் செல்ல, சங்கர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

சங்கர் உள்ளே சென்று லவியை பார்க்க, “அப்பா… சங்கர்… அப்பா… சங்கர்…” என்று லவியின் உதடுகள் முணுமுணுக்க, சங்கர் தன் தலையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான். எத்தனை மருந்து கொடுத்தாலும்  லவியின் எண்ணங்கள் அவள் இதயம் வலிக்க வலிக்க  கட்டுப்படாமல் கடந்த காலத்தை நோக்கிச் சென்றது.

“இவங்க ஒரு பிடிவாதக்கார பெண்மணி. அவங்க எண்ண ஓட்டம் வேகமா இருக்கு. அவங்க மைண்ட் ஸ்டெப்பிலா இருந்தா போதும். அவங்களை காப்பாத்திரலாம். ஆனால், அவங்க மனசைப் பாதித்த விஷயத்தை நினைக்கிறாங்க.” என்று மருத்துவர் கூற, மூவரும் மருத்துவரை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

“ஐ அம் சாரி.” என்று கூறி மருத்துவர் மேலும் சில விஷயங்கள் கூற, சங்கர் தன் முழு உலகத்தையும் தொலைத்த தவிப்பில், கண்களில் கண்ணீர் வழியக்  கடந்த காலத்து எண்ணத்தோடு நாற்காலியில் சாய்ந்தான்.

லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!