ANRA11

ANRA11

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 11

எஸ்டேட்டில் இருந்தான் அபி. ரிவோல்விங் சேரில் இங்கும் அங்கும் லேசாக அசைந்த படி இருக்க அவன் முன்னால் அந்தப் பழுப்பு நிறக் கவர் ஜம்மென்று வீற்றிருந்தது.

கோர்ட்டில் இருந்து வந்த சம்மன் அது. ஸ்வராவின் குடும்ப வக்கீல் அவள் சார்பாக கோர்ட்டின் உதவியை நாடியிருக்க இவனுக்குச் சம்மன் அனுப்பப் பட்டிருந்தது.

நேற்றிரவு தபால்களை ஆராயும் போது இதைக் காணவும் அபிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பக்கத்தில் வந்தமர்ந்த மனைவியையும் கவனிக்காமல் அந்தக் கவரையே பார்த்திருந்தான்.

ராதாவிடம் அதைக் காண்பிக்க நினைத்துத் தான் வாயைத் திறக்கப் போனான். ஆனால் அதற்குள் தன் தோள் சாய்ந்த மனைவியின் மனநிலையில் அனைத்தையும் மறைத்து விட்டான். அவனும் மறந்து விட்டான்.

அம்மாவிடமும் இதைப் பகிர்ந்து கொள்ள அவனால் முடியவில்லை. ஸ்வராவின் பெயரைச் சொன்னாலே சுஜாதா கலங்கி விடுகிறார். 

கொஞ்ச நேரம் நிதானமாக இருந்த பிறகு ஸ்வராவின் அப்பாவைத் தொடர்பு கொண்டான் அபி. இவன் எண்ணைப் பார்க்கவும் சட்டென்று லைனுக்கு வந்தார் மனிதர்.

“அங்கிள்! நான் அபி பேசுறேன்.”

“சொல்லுங்க அபி.” எந்தச் சங்கடங்களும் இல்லாமலேயே பேச்சுத் தொடர்ந்தது.

“கோர்ட் சம்மன் ஒன்னு வந்திருக்கு எனக்கு.”

“ஓ…” அந்த இழுவையே சொன்னது, இவருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடந்திருக்கிறது என்று.

“இதுக்கு என்ன அர்த்தம் அங்கிள்?”

“அபி! ஸ்வரா பண்ணுறது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவ சொல்லுறது நியாயம் தானே?”

“இதுல என்ன நியாயத்தை அங்கிள் நீங்க கண்டுட்டீங்க? இவ்வளவு நாளும் எம்பொண்ணை நான் பார்த்துக்கலியா? அதே மாதிரி இனிமேலும் பார்த்துக்கப் போறேன்.”

“அது சரிதான் அபி. இருந்தாலும் இதுவரை நீங்க தனியா இருந்தீங்க. என்னோட பேத்தியைப் பார்த்துக்கிட்டீங்க. ஆனா இப்போ நிலைமை அப்படி இல்லையே? உங்களுக்குன்னு ஒரு பொண்ணு வந்திருக்கா. நாளைக்கு உங்களுக்குக் குழந்தைகள் பொறக்கும். அப்போவும் இதே மாதிரி நீங்க ஆத்மியைப் பார்த்துக்குவீங்கன்னு என்ன நிச்சயம்?”

“எனக்காக மட்டும் நடந்த கல்யாணம் இல்லை அங்கிள் இது. அது தான் என்னோட நோக்கம்னா இத்தனை நாள் நான் காத்துக்கிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பேபிக்காவும் நடந்த திருமணம்.‌ அதை நீங்க புரிஞ்சுக்கணும்.”

“எனக்குப் புரியுது அபி. அதை நீங்க ப்ரூஃப் பண்ணுங்க.”

“எதையும் யாருக்கும் ப்ரூஃப் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை அங்கிள்.” 

“அப்படிச் சொல்லாதீங்க அபி. ஆத்மி மேல உங்களுக்கிருக்கிற உரிமை எம் பொண்ணுக்கும் இருக்கு இல்லையா?”

“அந்த உரிமை இத்தனை நாள் எங்க போச்சு அங்கிள்? புதுசா பாசமெல்லாம் பொங்குது.”

“அது அப்படி இல்லை அபி. நீங்க பிரிஞ்சதுக்கப்புறம் எம் பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுறதுல நான் ரொம்பவே உறுதியா இருந்தேன். அதனால ஆத்மிகாவை நீங்க கேட்டப்போ எனக்கு அது தப்புன்னு தோணலை. ஆனா இப்போ நிலைமை அப்படியில்லையே. அதனால உங்க தரப்பு நியாயத்தை நீங்க ப்ரூஃப் பண்ணத்தான் வேணும். ஒரு எல்லைக்கு மேலே என்னாலயும் எல்லாரையும் கன்ட்ரோல் பண்ண முடியாது அபி. அதை நீங்களும் புரிஞ்சுக்கணும்.” 

அதற்கு மேல் அபி பேசவில்லை. மகளின் வாழ்க்கையில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் வந்த போது, ‘இது எல்லோர் வாழ்க்கையிலும் வருவது தான். விட்டுக் கொடுத்து வாழப் பழகு. உன் கணவனையும் உன் வழிக்குக் கொண்டு வா.’ என்று சொல்லிக் கொடுக்காமல்,

‘பிடிக்கலைன்னா விடு ஸ்வரா. எதுக்கு உன்னையே நீ சிரமப் படுத்திக்கணும். ஒத்து வரலைன்னா விட்டுட்டு அடுத்தது என்னன்னு பாரு.’ இப்படிச் சொன்ன அப்பனிடம் என்ன பேசுவது?

கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்தருந்தான் அபி. சூழ்நிலையைக் கையாள்வது சற்று சிரமமாக இருந்தது. ஸ்வராவை எதிர்ப்பதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ராதாவை எப்படிச் சமாளிப்பது? 

ஆத்மிகா மேல் உயிரையே வைத்திருக்கும் அந்தப் பெண்ணிடம் இதை எப்படிச் சொல்வது? ஸ்வரா வாய் வார்த்தையாக அன்று இதைப் பற்றிப் பேசியதற்கே அத்தனை வேதனைப்பட்டாள். இப்போது கோட் கேஸ் என்றால் தாங்கிக் கொள்வாளா?

மனதின் குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நிகழ் காலத்துக்கு வந்தவன் ராதாவின் நம்பருக்கு அழைத்தான்.

“ஹலோ.”

“ராதா.”

“சொல்லுங்க.”

“கொஞ்சம் எஸ்டேட் வரைக்கும் வர்றியா?”

“என்னாச்சுங்க? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரியா இருக்கு? ஏதாவது ப்ராப்ளமா?”

“ப்ராப்ளம் எல்லாம் இல்லை டா. நீ கிளம்பி வா நான் சொல்லுறேன்.”

“சரிங்க. ஒரு பத்து நிமிஷத்துல வந்தர்றேன்.”

“ஸ்கூட்டி வேணாம். ட்ரைவரோட வா.”

“ம்… சரி.”

ஃபோனை வைத்து விட்டு தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டான் அபி. ஸ்வராவின் பிரச்சினை என்னவென்று அபிக்குப் புரியவில்லை. 

ராதாவைப் பார்த்தாலே பார்ப்பவர்களுக்குப் புரிந்து போகும். அவள் எத்தனை அன்பான அக்கறையான பெண் என்று. குறை சொல்ல அவளிடம் எதுவும் இல்லை.

அப்படியிருந்தும் இப்படி ஒரு பிரச்சினையை ஸ்வரா கொண்டு வருகிறாள் என்றால், இதில் வேறேதோ காரணம் இருக்க வேண்டும். 

இத்தனை நாளும் தன் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களா, இல்லையா என்று எட்டியும் பார்க்காதவள் இன்று புதிதாக என்ன நாடகம் போடுகிறாள்?

கதவு திறக்கும் ஓசை கேட்கவும் நிமிர்ந்து பார்த்தான் அபி. அவன் ஒட்டு மொத்த சந்தோஷமும் எதிரே பாட்டில் க்ரீன் காட்டன் புடவையில் நடந்து வந்து கொண்டிருந்தது.

அனைத்தையும் மறந்து மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான். எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் அவள் அருகாமை துடைத்தெறிவதை ஒரு ஆச்சரியத்தோடு ஏற்றுக் கொண்டான் அபி.

“என்னங்க ஆச்சு?” வந்ததும் வராததுமாகக் கணவனைக் கேள்வியோடே எதிர்கொண்டாள் ராதா.

“உட்காரு டா.” 

“பரவாயில்லை சொல்லுங்க.” மறுத்தவளைத் தான் உட்கார்ந்திருந்த இருக்கையில் அமர வைத்தவன் அவளருகே மேஜையில் சாய்ந்து நின்றான்.

“என்னங்க ஆச்சு?” மீண்டும் அதே கேள்வி சற்றுப் பதட்டத்தோடு வந்தது. அபி தான் சாய்ந்திருந்த மேஜையில் இருந்த அந்தப் பழுப்பு நிறக் கவரை அவளிடம் நீட்டினான்.

நெற்றி லேசாகச் சுருங்க ஒரு கேள்வியான பார்வையோடு கவரை வாங்கியவள் அதை மெதுவாகப் பிரித்தாள். மனதுக்குள் உருவமில்லாத ஏதோ ஒன்று அவளை வதைத்தது.

சற்று நேரம் அந்தக் காகிதத்தில் விழி பதித்திருந்தவள் அண்ணாந்து அபியைப் பார்த்த போது அந்தக் கண்கள் இரண்டும் குளமாகி இருந்தது.

“ராதூ…” மனைவியை அப்படியே அள்ளி எடுத்தவன் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். ராதா வெடித்து அழவில்லை. ஆனால் அந்தக் கண்கள் மட்டும் கார்கால மேகம் ஆகிப்போனது.

“ராது… அழக்கூடாது. இப்போ எதுவும் தப்பா நடந்திடல்லை. எனக்குத் தைரியம் சொல்ல வேண்டிய நீயே இப்படி அழுதா நான் என்ன பண்ணுவேன் சொல்லு?” அந்த வார்த்தைகளில் அவனின் வலியைப் புரிந்து கொண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“சொல்லுங்க, என்ன பண்ணப் போறீங்க?” இப்படி ஒரு சுதாரிப்பை ராதாவிடம் அபி எதிர்பார்க்கவில்லை. கணவனுக்கு ஒரு கஷ்டம் என்றால் இந்தப் பெண்கள் எதையும் தாங்கிக் கொள்வார்களோ?

“சிம்பிள் டா. வர்றதை ஃபேஸ் பண்ணுவோம். யாராலயும் என் குழந்தையோட மனசு கஷ்டப் பட்டிரக் கூடாது. அவளுக்கு யாரோட இருக்கிறது சௌகர்யமாப் படுதோ அங்க இருக்கட்டும். என்ன? ஒரு சின்ன வருத்தம் தான். இத்தனை நாளும் என் குழந்தையைக் கண்டுக்காம பிஸினஸ் பிஸினஸ்னு அலைஞ்சேன். அப்போல்லாம் இப்படிப் போர்க்கொடி தூக்கி இருந்தா மனசு ஆறிப்போயிருக்கும். ஆனா இப்போ… குடும்பம், பொண்டாட்டி, பொண்ணு ன்னு அக்கறையா வாழ ஆரம்பிக்கும் போது இப்படிப் பண்ணுறாங்க. அதுதான் ஜீரணிக்க முடியலை.”

கணவனின் கவலைக் குரல் ராதாவைக் கலங்க வைக்க அவன் முகத்தை மென்மையாக வருடிக் கொடுத்தாள்.

“வருத்தப் படாதீங்க. எதுவும் தப்பா நடக்காது. ஆத்மிக்குட்டி நம்மை விட்டு எங்கேயும் போக மாட்டா.” அந்தக் குரலின் உறுதியில் அபாஜிதனுக்கும் கொஞ்சம் பலம் வந்தது.

மனைவியை எப்படி சமாதானப் படுத்த என்று அபி கலங்கியது போக, இப்போது மனைவி அபியைச் சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தாள்.

* * * * * * * * * *

ஃபாமிலி கோர்ட்.

குழந்தை சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் சாதாரணமான ஒரு அறையிலேயே அனைவரும் கூடி இருந்தார்கள். நீதிபதியாக ஒரு பெண்ணே நியமிக்கப் பட்டிருந்தார். வயது ஐம்பதையும் தாண்டி இருந்தது. 

இருபக்க வழக்கறிஞர்கள், அபி தரப்பில் அபி, ராதா, ஆத்மிகா. ஸ்வரா தரப்பில் ஸ்வரா, ஸ்வராவின் அம்மா இவ்வளவு பேர்தான் அங்கு கூடி இருந்தார்கள்.

வழக்கு என்றவொரு எண்ணப்போக்கு குழந்தையின் மனதை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் மிகவும் யதார்த்தமாக வழக்கை விசாரித்தார் நீதிபதி. 

“உங்க பேரு என்ன?” குழந்தையை அருகே அழைத்துக் கொண்டவர் புன்னகை முகமாகச் சின்னவளிடம் கேட்டார். முதலில் தனக்கு அறிமுகமில்லாத அந்தப் பெண்ணிடம் போக மறுத்த குழந்தை ராதாவின் தூண்டுதலில் அவரிடம் பேச ஆரம்பித்தது.

“ஆத்மிகா.”

“ஓ… வெரி நைஸ் நேம்.”

“தான்க் யூ ஆன்ட்டி.”

“ஆத்மிகா ஸ்கூல் போறீங்களா?”

“ம்…” தலையை மேலும் கீழுமாக ஆட்டியது குழந்தை.

“ஸ்கூல்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா உங்களுக்கு?”

“இருக்காங்க ஆன்ட்டி.”

“யாரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?”

“ராஜி யை.”

“ஓ… வீட்டுல யாரைப் பிடிக்கும் ஆத்மிகாக்கு?”

“ஆன்ட்டியை.”

“ஆன்ட்டியா? அது யாரு?” இந்தக் கேள்வியில் ஸ்வராவின் முகத்தில் லேசான ஏளனப் புன்னகை ஒன்று தோன்றியது. ராதா சங்கடமாகத் தலையைக் குனிந்து கொண்டாள். 

“அது தான் ஆன்ட்டி.” அபிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ராதாவைக் கை காட்டியது குழந்தை. 

“அது ஆன்ட்டி இல்லையே? அவங்க உங்க மம்மி தானே?” லேசாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார் நீதிபதி.

“அது மம்மி இல்லை ஆன்ட்டி. மம்மி அங்க இருக்காங்க.” இப்போது குழந்தை வேறு புறமாகக் கை காட்டியது. அந்தப் பிஞ்சுக் கையைத் தொடர்ந்த ராதாவின் பார்வை நிலைகுத்தி நின்றது. 

குழந்தை கைகாட்டியது வேறு யாரையுமல்ல. ஸ்வராவைத் தான். அபியே கொஞ்ச நேரம் ஆடிப் போய் விட்டான். அப்படியென்றால் ராதாவின் நிலையைக் கேட்கவும் வேண்டுமா? பிரமை பிடித்துப் போய் அமர்ந்திருந்தாள்.

 

error: Content is protected !!