Thathi thaavuthu maname 1
Thathi thaavuthu maname 1
அத்தியாயம் – 1
“ஷஷ்டியை நோக்க சரவண பவனார்” என்று அந்த வீட்டில், இல்லை அரண்மனை போன்ற மாளிகையில், கந்த ஷஷ்டி கவசம் பாடலை பூஜை அறையில் பாடிக் கொண்டு இருந்தார் லக்ஷ்மி அம்மாள். இவரது கணவர், ராஜா மாணிக்கம், இவர்களது புதல்வன் ஆதித்தயா தான் நம் கதையின் நாயகன்.
ஆதி, 29 வயது இளைஞன் சிவில் எஞ்சினீரிங் மற்றும் M.B.A முடித்துவிட்டு, தந்தையுடன் சேர்ந்து, ஆதி பில்டிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் கீர்த்தி ரெடிமேட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல் பார்த்துக் கொள்வதோடு, அவன் தனியாக தாயின் பெயரில் இருக்கும் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் கல்லூரி ஒன்றை திறம்பட நடத்தி வருகிறான்.
வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் என்ற விருதையும், இந்த ஆண்டு வாங்கி பெற்றோருக்கு புகழை சேர்த்து கொடுத்தான். இவனுக்கு ஒரு தங்கை கீர்த்தி, மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கிறாள்.
போன வாரம் தான் அவளுக்கு அத்தை மகன், சஞ்சய் உடன் நிச்சயம் முடிந்து இருந்தது. இன்று பிறந்தநாள் காணும் அவளுக்கு தான், ஆதி அவளுக்கு பிடித்த ஸ்விப்ட் வண்டி வாங்கி கொடுத்து, அவளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டு தந்தையுடன் தொழில் சம்மந்தமாக பேசிக் கொண்டு இருந்தான்.
“ஆதி, நம்ம டிரஸ்ட் ஆரம்பிக்க போற விஷயமா, மினிஸ்டர் கிட்ட ஒரு பேச்சு வார்த்தை நடத்தினோமே, உனக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்டார் அவனின் தந்தை.
“நியாபகம் இருக்கு பா, இன்னைக்கு நம்மளை அவர் 11.30 மணிக்கு வர சொல்லி இருக்காரே அவர் ஆபிஸ்க்கு” என்று அன்றைய வேலைகளை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தான் தந்தையிடம்.
அதற்குள் பூஜையை முடித்து இருந்த லக்ஷ்மி அம்மா, அவர்களை சாப்பிட அழைத்து சென்றார். அன்று கீர்த்திக்கு பிடித்த காரட் அல்வா, செய்து இருந்தார் அவர். அதை ரசித்து உண்ட தன் தங்கையை பார்த்து, கேலி செய்து சிரித்துக் கொண்டு இருந்தான்.
அவளும் பதிலுக்கு கேலி செய்து, அந்த இடத்தை மேலும் கலகலப்பாக ஆக்கிக் கொண்டு இருந்தனர். அதன் பின் கீர்த்தி அவளின் அண்ணன் பரிசளித்த காரில் தன் கல்லூரி நோக்கி ஒரு பக்கம் செல்லவும், ஆதி தன் ஆடி காரில் கம்பெனிக்கு சென்றான்.
இதே நேரத்தில் அங்கே நம் நாயகி மதியழகி வீட்டில், எட் ஷெரீன் பாடல் “ஐ அம் இன் தி லவ் வித் தி ஷேப் ஆப் யு” என்ற ஆங்கில பாடல் ஹை டெசிபலில் அலறிக் கொண்டு இருந்தது.
“அடியே மதி! இப்போ நீ பாட்டை நிப்பாட்டிட்டு கீழே வரல, நான் மேல வந்து அந்த சிஸ்டமை உடைச்சிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பேன் தெரிஞ்சிக்கோ” என்று அவளின் தாயார் கோமதீஸ்வரி, கீழே இருந்து அவளை மிரட்டினார்.
தாயை பற்றி நன்கு தெரியும் என்பதால், அவள் உடனே அவர் சொன்னதை செய்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி செல்ல தயாராக வந்தாள் மதியழகி.
“காலையில் சீக்கிரம் எழுந்தோமா, சாமி பாட்டை படிச்சிட்டு அம்மாவுக்கு கூட மாட உதவி செஞ்சோமான்னு இருக்கிறதை விட்டுட்டு, எழுந்த உடனே அந்த கன்றாவி பாட்டை போட்டு ஆடிகிட்டே ரெடியாக வேண்டியது”.
“கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? பாரு உன் அண்ணி எனக்கு எவ்வளவு உதவியா இருக்கா” என்று அவளின் அண்ணன் ஹரியின் மனைவி சவிதாவை பற்றி புகழ்ந்து கொண்டு இருந்தார்.
“அம்மா! சும்மா இப்படி புலம்பாதீங்க மா, அது எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு நான் என் மாமியாருக்கு எல்லா ஹெல்ப் செய்வேன். நீங்க சும்மா சும்மா இதையே சொல்லி, என்னை திட்டாதீங்க மா” என்று சலித்துக் கொண்டாள்.
“ம்கும்.. பார்ப்போம் பார்ப்போம், நீ எப்படி இருக்கன்னு. சரி சரி சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு, காலேஜ்க்கு நேரம் ஆகிடுச்சு” என்று கூறிக் கொண்டே அவளுக்கு வேண்டியதை பார்த்து பரிமாறினார்.
பின்னர் அவள் சாப்பிட்டு முடித்தவுடன், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு தன் அக்டிவா வண்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தாள்.
அவள் சென்ற சிறிது நேரத்தில், அங்கே வந்தனர் ஹரியும், பரமேஸ்வரரும். இருவரும் காலையில் கிளப்பிற்கு சென்று, அங்கே தங்களுக்கு பிடித்த வகையில் அன்றைய காலை பொழுதை கழித்து விட்டு தான் வீடு திரும்புவர்.
“என்ன கோமு, மக காலேஜ் கிளம்பி போயிட்டாளா! இன்னைக்கு என்ன டிபன்?” என்று கேட்டுக் கொண்டே கை கால்களை அலம்பிக் கொண்டு வந்து அங்கே மேஜையில் வந்து அமர்ந்தார்.
“அது எல்லாம், அவ காலேஜ் போயிட்டா. எத்தனை தடவை, உங்களுக்கு சொல்லுறது?போங்க போய் குளிச்சிட்டு வாங்க, அப்புறம் சாப்பாடு எடுத்து வைக்குறேன். நம்ம பிள்ளையும் உங்க கூட தான வந்தான், பாருங்க அவன் குளிக்க போயிட்டான் வந்த உடனே. நீங்க தான் இன்னும் சின்ன பிள்ளை மாதிரி இப்படி இருக்கீங்க, போங்க போய் குளிச்சிட்டு வாங்க” என்று கூறி அவரை குளிக்க அனுப்பிவிட்டு, கோவிலுக்கு செல்வதற்காக பூஜை பொருட்களை எடுத்துக் கொண்டு இருந்தார் கோமதீஸ்வரி.
“அத்தை! இன்னைக்கு டாக்டர் வர சொல்லி இருக்காங்க, ஸ்கேன் பார்க்க. இவங்களுக்கு ஏதோ வேலை இருக்காம் அத்தை, அதனால நாம போயிட்டு வரலாமா அத்தை ஒரு பதினொரு மணிக்கு” என்று அவரிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள் சவிதா, ஹரியின் மனைவி.
“சரி டா, நாம போகலாம் அப்போ. பாரு ஹரி வந்துட்டான், முதல அவனுக்கு சாப்பாடு எடுத்து வை மா” என்று அவளை அங்கு அனுப்பி வைத்தார்.
மதி தன் அக்டிவா வண்டியை அங்கே வண்டி நிறுத்தும் இடத்தில், நிறுத்தி விட்டு அங்கே கல்லூரி மரத்தடியில் அமர்ந்து இருந்த தன் தோழிகளை நோக்கி கை ஆட்டிக் கொண்டே சென்றாள்.
“ஹே! என்னது இது எல்லோரும் கிளாஸ்க்கு போகாம, இங்கே எதுக்கு உட்கார்ந்து இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவளும் அங்கே மரத்தடியில் வந்து அமர்ந்தாள்.
“இன்னைக்கு புதன்கிழமை மதி” என்று ஒற்றை வார்த்தையில் முடித்த தன் தோழிகளை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
மதியழகி, படிப்பது B.B.A. இறுதி ஆண்டு, லக்ஷ்மி ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் கல்லூரியில் தான் படித்துக் கொண்டு இருக்கிறாள். தன் தோழிகள், இப்படி ஒவ்வொரு புதன்கிழமையும் யாரை பார்க்க இப்படி அமர்ந்து இருக்கிறார்கள் என்றும் தெரியும்.
ஆதித்தயா, அந்த கல்லூரியின் chairman. ஒவ்வொரு புதன்கிழமையும் அவன் இங்கே வந்து எல்லாவற்றையும், மேற்பார்வையிட்டு அதில் ஏதும் திருத்தங்கள் இருந்தால் அதை மாற்ற சொல்லிவிட்டு செல்வான். அவனின் மேற்பார்வையில், கல்லூரி நன்றாக நடந்து கொண்டு இருந்தது.
அவனை காண தான் இப்படி ஒவ்வொரு மரத்தடியில், ஒவ்வொரு டிபார்ட்மென்ட் மக்களும் அமர்ந்து அவனை சைட் அடித்துக் கொண்டு, தங்களை அவன் திரும்பி பார்க்க மாட்டானா என்று ஏங்கிக் கொண்டு இருப்பர்.
மதி மட்டும் மனதிற்குள் புன்னகைத்து விட்டு, இவர்களோடு சேர்ந்து சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு கிளாஸ் உள்ளே சென்று விடுவாள். அவர்களோ, அவன் வந்து இறங்கிய பின் அவனை நன்றாக பார்த்துவிட்டு, அதன் பின் வகுப்புக்குள் நுழைவர்.
இன்று அவன் வராமல் இருக்கவும், சோர்வுடன் வந்த தன் தோழிகளை பார்த்து என்னவென்று கேட்டாள்.
“இன்னைக்கு வரல டி, என்னன்னு தெரியல?” என்று கூறியவர்களை பார்த்து என்ன சொல்வதென்று தெரியவில்லை.
கல்லூரி முடியும் வரைக்கும் தான் இந்த கிரேஸ் எல்லாம், அதன் பின் எல்லோருமே பெற்றோர்கள் சொல்பவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள். அதுவரைக்கும், இது அவர்களை பொறுத்தவரை ஹீரோ இமேஜ் உள்ள ஒருவனை அந்த வயதில் பார்த்து சைட் அடித்துக் கொள்கிறோம் என்பது போல் தான் அவர்களின் பதிலும் இருக்கும்.
மதிக்கும் அது புரிந்ததினால், அட்வைஸ் என்ற பெயரில் தோழிகளை ஏதும் சொல்ல மாட்டாள்.
ஆதி, அன்று தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, தந்தையுடன் அந்த மினிஸ்டரை சந்திக்க சென்றான். மினிஸ்டருடன், அவர்களின் பேச்சு வார்த்தை நல்ல படியாக முடியவும், டிரஸ்ட் தொடக்க விழாவிற்கு நாள் குறித்துவிட்டு, பின்னர் அவரை வந்து திறந்து வைக்கும் படி இருவரும் கேட்டுக் கொண்டு அங்கு இருந்து வெளியேறினர்.
தந்தையிடம் சொல்லிக் கொண்டு, அவன் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு சென்றான். அங்கே தன் வலது கை விஷ்வாவை வைத்துக் கொண்டு, அந்த இடத்தை சுற்றி பார்த்தான்.
“விஷ்வா! இன்னும் ஒரு மாசத்துல இந்த வேலை முடியனும். அப்போ தான் சீக்கிரம் நாம சொன்ன தேதியில், இந்த அப்பார்ட்மென்ட் உரியவங்க கிட்ட ஒப்படைக்க முடியும் பார்த்துக்கோ”.
“சாரி சார், லேட் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டு வராத, அப்புறம் நான் என்ன செய்வேன்னு உனக்கே தெரியும்” என்று மிரட்டிவிட்டு நேராக கல்லூரிக்கு தான் விரைந்தான்.
அன்று காலை செல்ல முடியாமல் போனதால், மதிய பொழுதில் அவன் அங்கு சென்றான். சரியாக 1.30 க்கு எல்லாம் கல்லூரி முடிவடைந்து விடும், மாணவிகள் ஓட்டமாக பஸ்சில் இடம் பிடிக்க விரைந்தனர் ஒரு புறம், மறு பக்கம் தங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல சில மாணவிகள் பேசிக் கொண்டே அங்கே வண்டி நிறுத்தும் இடத்திற்கு வந்தனர்.
அந்த பரபரப்புக்கு இடையில் தான் ஆதி, அங்கே வந்து சேர்ந்தான். எல்லோரும் வீட்டிற்கு கிளம்பும் மும்முரத்தில், யாரும் இதை கவனிக்கவில்லை. அவன் நேராக பிரின்சிபால் அறைக்கு, அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தான்.
அங்கே பிரின்சிபால் ஸ்ரீவள்ளி, அந்த வருட ஆண்டு விழா ஏற்பாடு பற்றி மாணவிகளுடன் பேசிக் கொண்டு இருந்தார். அங்கே மதியழகி, தன் தோழியோடு நின்றுக் கொண்டு இருந்தவள் இவனை பார்த்தவள், மனதிற்குள் இவனை சைட் அடிக்க முடியாமல் வருந்திய தன் தோழிகளை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
“மதி! ஸ்பீச் எல்லாம் பக்காவா இருக்கணும், இந்த வருஷம் கோல்டன் ஜுபிலி கொண்டாடுறோம் நினைவு இருக்கு தான” என்று ஸ்ரீவள்ளி கேட்டார்.
அவளும் நினைவு இருப்பதாக கூறிவிட்டு, எல்லாவற்றையும் வெள்ளி அன்று அவரின் பார்வைக்கு கொண்டு வந்துவிடுவதாக கூறினாள். அதன் பின் அவர் அவர்களை எல்லாம் அனுப்பிவிட்டு, ஆதியிடம் பேச தொடங்கினார்.
அவனும் அவரிடம், அன்றைய நிலவரங்களையும் மேலும் அங்கே அவன் கொண்டு வர போகும் மாற்றங்களை பற்றியும் கூறிவிட்டு அன்றைய கணக்குகளை காண அலுவல் அறைக்கு செல்ல வெளியே வந்தான்.
அங்கே மதி, தன் குழுவினரோடு ஆண்டு விழாவிற்கு செய்ய வேண்டியது எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டு இருந்தாள். அதை பார்த்துவிட்டு, அவன் அலுவல் அறைக்கு சென்று அங்கே பார்க்க வேண்டியதை எல்லாம் பார்த்துவிட்டு வெளியே வர ஒரு மணி நேரம் கடந்து சென்றது.
எல்லாவற்றையும் முடித்துவிட்டு, மதியும் அப்பொழுது தான் அவள் வண்டி நிறுத்திய இடத்திற்கு சென்றாள். ஆதி அவள் வண்டி எடுப்பதை பார்த்து, அவன் தன் ஆடி காரை அவளருகில் சென்று நிறுத்தினான்.
“உன் வண்டி இங்கேயே இருக்கட்டும், நீ வா என் கூட நான் உன்னை வீட்டுல இறக்கி விடுறேன்” என்று கூறியவனை பார்த்து முறைத்தாள்.
“டேய்! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? நீ போ நான் என் வண்டியில் போயிடுவேன்” என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறினாள்.
அவனோ விடாகொண்டனாக அவள் ஏறும் வரையில், வண்டியை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு எடுக்காமல் அப்படியே இருந்தான். யாரும் பார்த்து விடுவார்களோ, என்று சுற்றி முற்றும் பார்த்துவிட்டு வேகமாக அவன் வண்டியில் ஏறினாள் மதியழகி.
தொடரும்…