சாலையை பார்த்தபடி ரகுநந்தன் வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்க, பின்னால் வந்து கொண்டிருந்த பசுபதி மற்றும் அபிநயாவை பார்த்து “அந்த பெண்ணை உனக்குத் தெரியுமா?” என்று சற்று பொறாமை உணர்வோடு கேட்டாள் இந்திரா.
ரகுநந்தன் மறுப்பாகத் தலை அசைக்க, “அப்புறம் எப்படி, லவ்வர்ஸ்ஸான்னு உறுதியா கேட்ட?” என்று இந்திரா மனசுணக்கத்தோடு கேட்டாள்.
“நான் கேட்டதுக்கு அவங்க ரியக்க்ஷன் என்ன?” என்று இந்திரா அவர்களைப் பார்ப்பதற்கு ஏதுவாக, அவர்கள் ஜீப்புக்கு முன் அவன் காரை சற்று நிதானப்படுத்திக் கொண்டே நமட்டு சிரிப்போடு கேட்டான் ரகுநந்தன்.
“வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிற மனுஷன், மீசையை முறுக்குகிட்டு சந்தோஷமா சிரிக்கறார். அந்த பொண்ணு வெட்கப்பட்டு சிரிக்குது.” என்று இந்திரா தன் தலையை திருப்பி அவர்களை பார்த்தப்படி கூறினாள்.
“அப்ப உறுதியா லவ் தான்… இல்லைனா இந்நேரம் நம்மளை அடிக்க வந்திருப்பாங்க…” என்று கலகலவென்று சிரித்தான் ரகுநந்தன்.
இந்திரா, தன் தலையைத் திரும்பி, அபிநயாவைப் பார்த்து, “என் அளவுக்கு கலர் இல்லைனாலும், அந்த பொண்ணு அழகா இருக்கால்ல?” என்று இந்திரா ரகுநந்தனிடம் பேச்சை ஆரம்பித்தாள்.
‘இல்லை… நீ தான் அழகுன்னு சொல்லுவானா?’ என்று இந்திராவின் கண்கள் ரகுநந்தனை ஏக்கமாகப் பார்த்தது.
ரகுநந்தனோ, சாலையில் கவனத்தைச் செலுத்தியபடி, “நான் அந்த பொண்ணை சரியா பார்க்கலை.” என்று கவலை தோய்ந்த குரலில் கூறினான் ரகுநந்தன்.
“இப்ப அது தான் முக்கியமா?” என்று இந்திரா சீற, “நீ தானே கேட்ட?” என்று ரகுநந்தன் பாவமாகக் கூறினான்.
இந்திரா கடுப்பாகச் சாலை பக்கமாகத் திரும்ப, “அழகு முகத்தில் இல்லை. மனசில் இருக்கு. எனக்கு அந்த பெண்ணையும் தெரியாது. உன்னையும் தெரியாது.” என்று உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக கூறினான் ரகுநந்தன்.
‘தன்னை தெரியாது…’ என்று ரகுநந்தன் கூறியதில் ஏமாற்றமாகி, இந்திரா முகம் சுழிக்க, “இதுல கோப படுறதுக்கு என்ன இருக்கு?” என்று நேரடியாக கேட்டான் ரகுநந்தன்.
“நீ என் அக்கா, புருஷன் அத்தானுக்கு தங்கைன்னு ஒரே காரணத்துக்குத் தான் உன்னை பிக்கப் பண்ண வந்தேன். அதுவும் அக்கா சொல்லிட்டா மறுக்க முடியலைன்னு வந்தேன்.” என்று ரகுநந்தன் தெளிவாக கூறினான்.
“எனக்கு உன்னை பத்தி என்ன தெரியும்?” என்று அவன் கேட்க, ‘இவனை கல்யாணம் வரை கொண்டு செல்வது ரொம்ப கஷ்டமோ?’ என்ற சந்தேகம் இந்திராவுக்கு எழுந்தது.
“பை தி வே… நான் ரொம்ப ஜாலியான ஆளு. ஆனால், இந்த காதல் கத்திரிக்காய்… கல்யாணம் புடலங்காய் எல்லாம் எனக்குச் சரி பட்டு வராது. கல்யாணம் செஞ்சவங்க எல்லாம் என்னத்த சாதிச்சிட்டாங்க?” என்று கேட்டான் ரகுநந்தன்.
“கல்யாணம் இஸ் எ பாண்ட்… அடிமை சாசனம். இது பெண்களுக்கு மட்டுமில்லை. ஆண்களுக்கும் பொருந்தும். எதுக்கு கல்யாணம் பண்ணனும். எதுக்கு அடிமையா வாழனும்?” என்று ரகுநந்தன் சீட்டியடித்தபடி, தன் கூலர்ஸ்ஸை சரி செய்து கொண்டு கேட்டான் ரகுநந்தன்.
‘இவரு பெரிய தத்துவ மேதை அண்ணான்னு நினைப்பு.’ என்று கடுப்பாக எண்ணினாள் இந்திரா.
‘சுரேஷ் அண்ணா என்னவோ ரகு தான் மாப்பிள்ளைன்னு உறுதியா சொல்றாரு. ரகு பார்க்க நல்லாருக்கான். நல்ல வசதி. ஆனால், கல்யாணத்துக்கு ஒதுக்க மாட்டான் போலியே?’ என்று இந்திரா சுயசிந்தனையில் ஆழ, “உங்க இடம் வந்திருச்சு இறங்கிக்கோங்க.” என்று விலகல் தன்மையோடு கூறினான் ரகுநந்தன்.
இந்திரா இறங்கி கொள்ள, அவளை சொடக்கிட்டு அழைத்தான். “இனி என்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். ஐ ஹேட் கேர்ல்ஸ் பிரெண்ட்ஷிப். இட் இஸ் இஞ்சுரியஸ் டு ஹெல்த்.” என்று கண்சிமிட்டினான் ரகுநந்தன்.
“அதை விட, லீகுவர் இஸ் பெட்டெர். சோ அதை கூட எப்பாவது எடுப்பேன். பட் ஸ்ட்ரிக்ட்லி நோ கேர்ல்ஸ் பிரெண்ட்ஷிப்.” என்று உறுதியாகக் கூறினான் ரகுநந்தன்.
இந்திரா அவனை கேள்வியாக பார்க்க, ” லீகுவர் எடுத்தா, அது என் கண்ட்ரோலில் இருக்கும். பட் பொண்ணுங்க அவங்க கண்ட்ரோலை எடுத்துப்பாங்க. சோ நோ டு…” என்று வாக்கியத்தை பாதியில் நிறுத்திவிட்டு, இந்திராவை கை காட்டிவிட்டு உல்லாசமாக தலை அசைத்து சீட்டியடித்தபடி காரை சர்ரென்று அழுத்தினான் ரகுநந்தன்.
தன்னை ஒதுக்கிவிட்டு, சர்ரென்று சென்று கொண்டிருந்த காரின் வேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திராவின் எண்ணங்களும், அதே வேகத்தோடு பயணித்தது.
‘தத்துவமா பேசுற… பேசு பேசு… உன் வார்த்தையை உண்மை ஆக்குறேன். இந்த இந்திரா உன் கண்ட்ரோலை அவ கையில் எடுப்பா.’ என்று எண்ணியபடி அவள் இருப்பிடத்தை நோக்கிச் சென்றாள்.
வேகமாக சென்ற ரகுந்தன் வீட்டிற்குள் சென்று, “அம்மா… அம்மா…” என்று அலறினான்.
அவன் உள்ளே நுழைந்த வேகத்தில், அவன் போட்ட கூப்பாட்டில் வேலைக்காரர்கள் அத்தனை பெரும் அவன் கண்களிலிருந்து ஜீம்பூம்பா என்பது போல் மாயமாக மறைந்து விட்டனர்.
‘ரகு ஏன் ராகு வந்த மாதிரி கத்தறான்? இன்னைக்கி இந்த ரேவதி என்னத்த செஞ்சி வச்சாளோ?’ என்று எண்ணியபடி, வந்தார் பவானி அம்மாள்.
பவானி அம்மாள். திருநீறு மட்டுமே பூசி இருந்தார். உயர்ரக சேலை உடுத்தி இருந்தார். குண்டும், இல்லாமல் ஒல்லியும் இல்லாத தோற்றம். அவர் தலைமுடி வெள்ளையும், கருப்புமாகப் போட்டிப் போட்டுக்கொண்டு நின்றது. இன்றைய அஜித் ரசிகர்கள் அதை சால்ட் அண்ட் பேப்பர் லுக் என்று கூறினாலும், பவானி அம்மாளின் வயதையே அது எடுத்துக் கூறியது.
நடையில் ஒரு கம்பீரம். அவர் வருவதில் வேலைக்காரர்கள் சற்று விலகி நடந்தனர். மொத்தத்தில் அவரின் ஆளுமை குணம் வெளிப்படையாகத் தெரிந்தாலும், மகனின் முன் அவர் ஆளுமையும், கம்பீரமும் தோற்றுப் போகும் என்பதை அவர் கவலை தோய்ந்த முகம் அப்பட்டமாக எடுத்துக் கூறியது.
“என்ன ஆச்சு ரகு?” என்று அவர் தன் மகனை பார்த்தபடி தயக்கத்தோடும், சற்று பயத்தோடும் கேட்க, “ம்… அதை உங்க சீம புத்தரி கிட்ட கேளுங்க.” என்று கடுப்பாகக் கூறினான் ரகுநந்தன்.
‘அவ கிட்ட கேட்குகறதுக்கு, இவன் ஏன் என்னை இப்படி கூப்பாடு போட்டு அழைக்கணும்?’ என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தாலும், தன் மகனிடம் அதைக் கேட்கத் தைரியம் இல்லாமல், “ரேவதி… ரேவதி…” என்று மென்மையாக அழைத்தார் பவானியம்மாள்.
‘அம்மா ஏன் இப்ப கூப்பிடுறாங்க?’ என்று சலிப்பாக எண்ணியபடி ரேவதி அவள் அறையில் சோம்பேறித்தனமாக நடக்க, “அக்கா…” என்று ரகுநந்தனின் சத்தத்தில், சோம்பேறித்தனம் மறைந்து சுறுசுறுப்பாக ஓடி வந்தாள் ரேவதி.
“சொல்லு தம்பி…” அந்த குரலில் தேன் ஒழுகினாலும், அதன் சுவையை உணர விரும்பாதவனாக, இல்லை உண்மை குணம் அறிந்தவன் போல் அதை ஒதுக்கிவிட்டு, “என்னை உன் வீட்டு வேலைக்காரன்னு நினைச்சியா?” காட்டமாக வந்து விழுந்தன ரகுநந்தனின் வார்த்தைகள்.
‘இவ என்னத்த செஞ்சாலோ?’ என்று பவானி அம்மாள் தன் மகளை யோசனையாகப் பார்க்க, ‘தப்பு செய்தவளுக்கு தெரியாதா?’ என்பது போல் பவ்வியமாகப் பேச ஆரம்பித்தாள் ரேவதி.
ரேவதி, முப்பதுகளில் அவள் வயதைச் சொல்லலாம். சற்று பூசினார் போல் தோற்றம். “தம்பி…” என்று அவள் ஆரம்பிக்க, “தம்பி எப்பவும் சொக்க கம்பியாக இருக்க மாட்டேன்.” என்று மிரட்டலாக தன் தமக்கையை இடைமறித்தான் ரகுநந்தன்.
ரகுநந்தனின் கோபமறிந்து, “அத்தான் தான் இந்திராவைக் கூப்பிடச் சொல்லச் சொன்னார்.” என்று ரேவதி பழியைக் கணவன் மீது போட்டாள்.
‘ஹ்ம்ம்… இவ்வளவு தான் விஷயமா? இதுக்கு தான் இவ்வளவு அளப்பறையா? ரேவதி சொல்ற மாதிரி இவனுக்குச் சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும். அந்த இந்திரா பொண்ணே நல்ல பொண்ணா தான் தெரியுறா. அத்தை… அத்தைன்னு என் கிட்ட பாசமா பேசுறா.’ என்று பவானி அம்மாள் சிந்தித்துக் கொண்டிருக்க, அவர் சிந்தனையைக் கலைத்தது ரகுநந்தனின் குரல்.
“என்ன அத்தான் பெயரை சொன்னா, அமைதியா இருப்பேன்னு நினைப்பா?” என்று ரகுநந்தன் சிடுசிடுக்க, “ரகு! ஏன் இப்படி கோபப்படுற? இந்திரா நல்ல பொண்ணு. உனக்கு பேசி முடிக்கலாமுன்னு…” இது தான் இந்திராவை பற்றி பேசும் வாய்ப்பு, என்று இடை சொருவலாக திருமணத்தைப் பற்றியும் பேசலாம் என்றெண்ணி பவானி அம்மாள் தன் மகனைச் சமாதான படுத்த முயற்சித்தார்.
கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல், “என் கனவு உங்களுக்குத் தெரியும். நான் அதுக்காகத்தான் வெளிநாட்டுக்குப் போய் படிச்சேன். என் கனவுக்காக, நான் என் வேலையை ஆரம்பிக்கப் பணம் கேட்டு ஒரு மாசம் ஆகுது. பணம், இன்னும் என் கைக்கு வரலை.” என்று திருமண பேச்சை விடுத்து, தன் வேலையைப் பற்றிப் பேசினான் ரகுநந்தன்.
‘தம்பி விடமாட்டான் போலையே!’ என்ற எண்ணத்தோடு, “இப்ப அதுக்கு என்ன அவசரம்? அத்தான் தான் பிசினெஸ் பாக்குறாங்க. முதலில் கல்யாணம் பண்ணிக்கோ. கொஞ்ச நாள் ஜாலியா இரு. அப்புறம் உன் பிசினெஸ்ஸை பார்க்கலாம்.” என்று ரேவதி கூற, தன் கண்களை இடுக்கி, தன் சகோதரியை யோசனையாகப் பார்த்தான் ரகுநந்தன்.
‘இப்பவரைக்கும் அக்காவும், அத்தானும் தான் பிசினெஸ்ஸை பாத்துக்கறாங்க. அப்பா, இருக்கிற வரைக்கும் எல்லா கணக்கு வழக்கும் நானும் பார்த்திருக்கேன். எல்லாம் லாபம். அப்பா இறந்து மூணு வருஷம் ஆகுது. நானும், அப்பதான் வெளிநாட்டுக்குப் போனேன். இடையில் ஏதோ நடந்திருக்கு. என்னவா இருக்கும்?’ ரகுநந்தனின் மனம் கணக்கிட்டுக் கொண்டிருந்தது.
‘எதுவோ சரி இல்லை.’ ரகுநந்தன் மனதில் குறித்துக்கொண்டான்.
“ஆமா ரகு. கல்யாணத்தய் பேசி முடிச்சிருவோம்.” என்று பவானியம்மாள் கூற, தன் தாயை யோசனையாகப் பார்த்தான். இந்திராவைப் பற்றி ரேவதி புகழ் பாட, அதற்கு அவன் தாயும் ஒத்து ஊத, அவர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்தான் ரகுநந்தன்.
‘ஆக… எல்லாம் ரேவதி கைங்கரியம்.’ தன் அக்காவின் செயலை புரிந்து கொண்டான். ‘அப்பாவுக்கு அப்புறம், இவள் ராஜ்ஜியம் தான் போலும்!’ என்று ரகுநந்தனின் முகத்தில் ஓர் ஏளன புன்னகை வந்தது.
‘வீட்டில் சரி. அலுவலகத்தில் என்ன நடந்திருக்கும்? ஏன் பணம் கைக்கு வரவில்லை? பிசினெஸ் நடக்கும் இடத்திற்கு நான் செல்வதற்கு பல தடங்கல்கள் இருப்பது போல் தெரிகிறதே?’ ரகுநந்தன் தன் போக்கில் சிந்தனையில் ஆழ, “ரகு… கல்யாணத்துக்கு தேதி குறிச்சிருவோமா?” என்று ஆர்வமாக கேட்டாள் ரேவதி.
“எனக்கு கல்யாணம் செய்ய பிடிக்கலை. அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், இந்திராவை பண்ணிக்க சுத்தமா பிடிக்கலை.” அசட்டையாகக் கூறினான் ரகுநந்தன்.
“அவங்க தங்கையை வேண்டாமுன்னு சொல்லிட்டோமுன்னா, அத்தானுக்கு கோபம் வந்திரும். என் வாழ்க்கை…” என்று ரேவதி விசும்ப ஆரம்பிக்க, “இந்த பாரு… அத்தான், நொத்தான்னு சொல்லி என் கிட்ட நடிக்காத. இதெல்லாம் அம்மாவோட வச்சுக்கோ.” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் ரகுநந்தன்.
“அம்மா…” என்று தன் தாயை அழைத்து, ரேவதி சண்டைக்குத் தயாராக, “ரகு…” என்று தன் மகனைக் கண்டித்தார் பவானியம்மாள்.
“அம்மா… நான் அத்தானை மதிக்கிறதுக்குக் காரணம் அக்காவுக்காகத் தான். ஆனால், அக்காவே சரி இல்லைன்னா, நான் இப்படி இருக்க மாட்டேன்.” என்று ரகுநந்தன் உறுதியாகக் கூறினான்.
“ரகு…” என்று அவன் தாய் பேச ஆரம்பிக்க, “எனக்கு நாளைக்கு எல்லா பிசினெஸ் கணக்கு வழக்கையும் பார்க்கணும்.” என்று அவன் அழுத்தமாகக் கூற, “ரேவதி! அவன் கேட்பது சரி தானே? அதுல என்ன கஷ்டம். என்ன வேலை இருந்தாலும், நாளைக்கி ரகு எல்லாத்தயும் பார்ப்பான்.” என்று பவானி அம்மாள் நியாயமாகப் பேசினார்.
‘கணக்கு வழக்கு பார்த்தா? ஐயோ…’ ரேவதி பதட்டமானாள். “அம்மா! ரகுவுக்கு பணம் தானே வேணும். அவுங்க ஏற்பாடு பண்ணுவாங்க. நீங்க பேசுறது அவுங்களை சந்தேக படுற மாதிரி இருக்கு. இப்படி எல்லாம் பேசினா, நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன். வெளிய போறேன்.” என்று ரேவதி எகிற, பவானியம்மாள் பதட்டமானார்.
ரகு ஆசுவாசமாக, சோபாவில் அமர்ந்து கொண்டு, “கிளம்பு.” என்று கூற, ரேவதியின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.
‘இதுக்கு தானே இந்திராவை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்குறேன். இந்திரானா ஒண்ணுக்குள்ள ஒன்னு. இப்பவே இப்படி பேசுறான். வேற யாரையாவது ரகு கல்யாணம் பண்ணிக்கிட்டா?’ என்று ரேவதியின் எண்ணம் தறிகெட்டு ஓடியது.
ரேவதி தன் தாயை தனக்குச் சாதகமாகப் பயணிக்க வைக்கும் அவள் ஆயுதம் தன் தம்பியின் முன் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.
‘ரகு சரியாகக் கையாளுவான்.’ என்ற நம்பிக்கை பவானி அம்மாவுக்கு இருந்தாலும், ‘அக்கா, தம்பி சண்டை பெருசாகிவிடுமோ?’ என்ற அச்சம் அவருள் சூழ, சற்று கவலை தோய்ந்த முகத்தோடு அவர்களைப் பார்த்தார்.
அப்பொழுது, மேலிருந்து ஒரு கார் பறந்து வந்து ரேவதியின் தலையைப் பதம் பார்க்க , “அக்கா…” என்று அலறிக்கொண்டு ரேவதியை தன் பக்கம் இழுத்தான் ரகுநந்தன்.
“கவின்… அறிவில்லை! இதுக்கு தான் இவனுக்குப் பொம்மை வாங்கி குடுக்க கூடாதுன்னு சொல்றேன்.” என்று தன் மகனை அடிக்க ரேவதி வேகமாக வீட்டிற்குள் அமைந்திருக்கும் படிகளில் ஏற, ரேவதியை முந்திக்கொண்டு வேகமாக ஓடினான் ரகுநந்தன்.
கவினைத் தூக்கிக் கொண்டு, “மாமா, ரூமுக்கு வாடா…” என்று அவனை அள்ளி அணைத்து தன் குட்டி மருமகனை அவன் அறைக்குள் தூக்கிச் சென்றான் ரகுநந்தன்.
‘இவன் அன்பு இந்த குடும்பத்தைக் காப்பாற்றிவிடும்.’ என்று அவன் தாய் எண்ண, அவன் அக்காவின் எண்ணமோ சற்று வித்தியாசமாக இருந்தது.
அதே நேரம், பசுபதியின் ஜீப், அபிநயாவின் வீட்டை அடைந்திருந்தது.
“உங்க அப்பன் வீட்ல இருக்காக போல?” என்று மீசையை முறுக்கினான் பசுபதி.
“ஆமா அத்தான்.” என்று அபிநயா, தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.
“என் கூட ஏன் வந்தேன்னு வைவாகளே.” என்று பசுபதி, கரிசனத்தோடு கூற, “அதெப்படி என்னை வைய முடியும்? சின்ன வயசுலேர்ந்து அவுகத்தேன் சொல்லி சொல்லி வளத்தாக. எனக்கு அம்மா அப்பாவுக்கு அப்புறம் எல்லாமே நீங்க தானே? எனக்கு எப்பவும் எல்லாம் அத்தான்தேன். நான் எதுனாலும், உங்க கிட்டத்தானே சொல்லி சொல்லி வளந்திருக்கேன். திடீருன்னு, அக்காளும், தம்பிக்கும் சண்டைனா நம்ம அன்பு முறிஞ்சி போயிருமா?” என்று அபிநயா நியாயம் கேட்டாள்.
“அம்மு குட்டி எப்பவும் நியாயக்காரி….” என்று பசுபதி சிலாகிக்க ஆரம்பிக்க, “நியாயக்காரி, பாசக்காரி, புத்திசாலி, தைரியசாலி…” என்று அபிநயா அடுக்கிக்கிட்டே போக, அவளை நிறுத்தினான் பசுபதி.
“இதை தானே சொல்ல போறீக அத்தான்?” என்று அபிநயா கெத்தாக கேட்க, “அம்முக்குட்டி… நியாயக்காரி, ஆனால் அப்பாவின்னு.” சொல்ல வந்தேன் பசுபதி சிரிக்க, அவனை முறைத்தாள் அபிநயா.
அவளை விட்டு செல்ல மனமில்லாமல், அவன் பேச்சை வளர்த்துக் கொண்டே போக, “அத்தான்!” அவள் அன்பாய் அழைத்தாள். ‘என்ன?’ என்று அவன் புருவம் உயர்த்த, “இந்த அரிவாள் சண்டை எல்லாம் வேண்டாம் அத்தான்.” வரும் வழியில் அரங்கேறியதை மனதில் வைத்துக் கூறினாள் அபிநயா.
ஆம்! வரும் வழியில் கூட ஒரு பஞ்சாயத்து. தன் அரிவாளைக் காட்டி மிரட்டி இருந்தான் பசுபதி.
“ஹா… ஹா…” பெருங்குரலில் சிரித்தான் பசுபதி. தன் மீசையை முறுக்கி கொண்டான். “அம்மு குட்டி! எப்ப கல்யாணமுன்னு சொல்லு. எல்லாத்தயும் நிறுத்திப்புடுதேன்.” என்று கண்சிமிட்டிச் சிரித்தான் பசுபதி.
அபிநயா உள்ளே நுழைய, அவள் மீது ஒரு வாளி தண்ணீர் குபுக்கென்று விழுந்தது. அதைத் தொடர்ந்து அபிநயாவின் தந்தை ராமசுவாமி கூறிய வார்த்தையில் அபிநயாவின் முகம் சுண்டைக்காயாகச் சுருங்கியது.
பசுபதி, ஜீப்பிலிருந்து வேகமாக இறங்கி தன் மாமன் முன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வெட்டவா குத்தவா என்று நின்றான்.
பொழுதுகள் விடியும்…
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss