Nan Un Adimayadi–EPI 19

அத்தியாயம் 19

கட்டுக்குள்ள நிற்காது

திரிந்த காளையை

கட்டி விட்டு

கண் சிரிக்கும் சுந்தரியே (முத்துக்காளை)

 

மேடையில் அலங்காரங்கள் சரியாக இருக்கிறதா என மேற்பார்வைப் பார்த்தப்படி கூட மாட உதவிக் கொண்டு நின்றான் காளை. அன்றுதான் ஊர் திருவிழாவின் ஹைலைட்டான கலைநிகழ்ச்சி நடக்கப்போகும் நாள். ஊர் மக்கள் எல்லோரும் ஒரே ஆவலாக அதை எதிர்ப்பார்த்திருந்தனர்.

ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லோரும் வருகிறார்களே! அட, வருபவர்கள் அவர்களின் டூப்பாக இருந்தாலும், குதூகலம் இல்லாமல் போய் விடுமா என்ன! அதோடு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ரீட்டாவும் (இது யாருன்னு கேக்கக்கூடாது) புக்காகி இருந்தார். ரீட்டாவைப் பார்க்க ஆவலாக முதல் வரிசையிலே துண்டைப் போட்டு இடம் பிடித்திருந்தார் நம் குசும்புக்கார பெருசு. இன்னிசை மழையில் மக்களை நனைக்க மேயாத மான் முரளியின் இசைக்குழுவும்(இதுவும் யாருன்னு கேக்கக்கூடாது) வரவழைக்கப்பட்டிருந்தது. வீதி எங்கும் போஸ்டர் பேனர் என வரிசைக்கட்டி நிற்க ஊரே ஒரு வாரமாக அதைப்பற்றி கூடி கூடி நின்றுப் பேசி பரவசப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஏற்பாட்டுக் குழுவில் இருந்த காளை காலையில் இருந்து இங்குதான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். மைக் செட் சரியாக இருக்கிறதா, தலைமைத்தாங்க அழைக்கப்பட்ட பிரமுகருக்கு வசதிகள் சரியாக செய்யப்பட்டிருக்கின்றனவா, வாழை மரம் தோரணம் பக்காவாக கட்டப்பட்டிருக்கிறதா என பல வேலைகள் அவன் தலையில்.

“மாப்பிள்ளை சார்!”

“வாட்?”

“பார்டா! இங்கிலீசு டீச்சர கட்டனதும் நம்ம காளைக்கு இங்கீலீசு டஸ்சு புஸ்சுன்னு வருது!” என அவனை வம்பிழுத்தான் செவல.

“யூ வை கோடேர்ட்டல் மேன்?”

“கோடேர்ட்டல்டா? டேய் டேய் காளை! ஸ்கோலுக்கு நானும் போயிருக்கேன்டா! நாலாப்பு வரைக்கும் படிச்சிருக்கேண்டா! கோடேர்ட்டல்னு ஒரு வார்த்தை இங்கிலீசுலேயே இல்லடா. யாருக்கு காது குத்தப் பார்க்கற!”

“இருக்கு மேன்! கோ ன்னா தமிழ்ல என்னா?”

“போ”

“டேர்ட்டல்?”

“ஆமை”

“இப்போ சேர்த்து சொல்லு”

“போ ஆமை”

“இன்னும் சேர்த்து சொல்லுடா வெளக்கெண்ணேய்”

“போறாமை”

“யெஸ்சு! யூ சீ கோடேர்ட்டல் இஸ் போறாமை(பொறாமைதான். பேச்சு வழக்கு மொழியில் போறாமை என கொடுக்கிறேன்) அண்டர்ஸ்டேண்ட்?”

“டேய் கேட்டுக்கங்கப்பா! இங்கிலீசு இலக்கியத்த பிச்சு உதறுர நம்ம கிராமத்துக் காளை, இன்னில இருந்து இங்கிலீசு புல்லுன்னு(bull) அழைக்கப்படுவான்.” என அவனை கலாய்த்தான் செவல.

“என்னைய ஓட்டறத விட்டுட்டுப் போய் வேலைய பாருங்கடா வெண்ணெய்ங்களா!” என செவலையையும் மற்றவர்களையும் அவன் துரத்தி விட்ட நேரம்தான் மங்கையும் மற்ற ஆசிரியர்களும், அவர்களது நாடக குழுவும் அந்த இடத்தை அடைந்தார்கள்.

வந்த உடனே மங்கையின் கண் அங்கும் இங்கும் அலைந்து அவனைக் கண்டுக் கொண்டது. பிறகென்ன, மற்ற வேலைகளோடு மாணவர்களை மேடையில் நடிக்க வைத்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த மங்கையை ஓரக்கண்ணால் சைட் அடிக்கும் பெரு வேலையும் காளையை சேர்ந்துக் கொண்டது. இருவர் கண்ணும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் நேரமெல்லாம் மின்னல் தெறித்தது. அவன் வெட்கப் புன்னகை சிந்த, இவள் நாணப் புன்னகையைக் கொடுத்தாள். அவளின் நாணமும் முக சிவப்பும் இன்று விடிகாலையில் நடந்ததை காளையின் கண் முன்னால் கொண்டு வந்தது நிறுத்தியது.

காதல் செய்து களைத்து உறங்கிய இருவரில் முதலில் விழிப்பு வந்தது முத்துக்காளைக்குத்தான். தன்னைக் கட்டிக் கொண்டு, சிறு குழந்தைப் போல வாயை பிளந்தபடி தூங்கும் தன் மங்கையையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தான் அவன். வெறும் காளையாய் இருந்தவனை காங்கேயம் காளையாய் மாற்றியவளைப் பார்க்க பார்க்க வெட்கம் பிடுங்கித் தின்றது இவனுக்கு. பிளந்திருந்த வாயில் ஆசையாய் முத்தமிட தோன்றிய உந்துதலை, எங்கே அவள் தூக்கம் கெட்டுப் போய் விடுமோ எனும் அக்கறையில் கஸ்டப்பட்டு அடக்கினான்.

“எலிசு மை எலிசு! எப்பா சாமி, நைட்டு முழுக்க பாடாப்படுத்திட்டடி என்னை!” மெல்லிய குரலில் கொஞ்சிக் கொண்டான் தன்னவளை.

தனக்கிருந்த தாழ்வு மனப்பான்மையில் மங்கையை நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளுக்குள்ளேயே ரத்தக் கண்ணீர் வடித்திருந்தவனுக்கு அவள் அருகில் படுத்திருப்பதை இன்னமும் நம்ப முடியவில்லை. இதெல்லாம் நிஜம் போல தோன்றும் கனவோ என பயந்தவன், தன் மீசையைப் பிடித்து இழுத்து சோதித்துப் பார்த்தான். சில மீசை முடிகள் கையில் வந்ததோடு வலிக்கவும் செய்தது.

“கனவில்ல கனவில்ல! நெஜம்தான்” முனகிக் கொண்டான்.

மங்கையை மனதில் நினைத்துக் கொண்டே மிச்ச வாழ்க்கையை பிரம்மச்சாரியாகவே ஓட்டி விடலாம் என நினைத்திருந்தவனுக்கு கல்யாணம் முடிந்ததே அதிர்ச்சி என்றால், இரவு நடந்த தகாதகா(கஜகஜாவுக்கு புது பேரு) இன்னும் பேரதிர்ச்சி. அது என்ன தகாதகா? (த)வாவும் (கா)ளையும் ஒன்றோடொன்று கலந்துப் போனால் தகாதகாதானே!

“எலிசு, என் பட்டுக் குட்டிடி நீ!”

அவள் விழித்திருந்தால் எலிசும், டியும் இப்படி சரளமாக வாயில் வருமா! மிக மிக மென்மையாக அவள் கன்னம் வருடியவன் சந்தோஷமாக,

“என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட

மங்கை பேரும் என்னடி

எனக்கு சொல்லடி

விஷயம் என்னடி!!!”

என மெல்லிய குரலில் பாடினான்.

“ஓஹோ!! பேரு தெரியாமத்தான் ராத்திரி முழுக்க மால்கோவா, கிளிமூக்கு, அல்போன்சா, பங்கனப்பள்ளின்னு கொஞ்சுனீங்களா? உன்னை தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரு தவமங்கை. விஷயம் என்னடின்னா என்னன்னு சொல்ல? நமக்குள்ள மேட்டர் ஆகிப்போச்சுன்னு சொல்லவா? இல்ல எல்லாம் கதம் கதம்னு சொல்லவா?” என மெல்லிய குரலில் சிரிப்புடன் அவள் கேட்க, அரண்டு புரண்டு எழுந்து அவளுக்கு முதுகு காட்டி கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான் காளை.

“என்ன சார்? வெக்கமா? திரும்பி உட்கார்ந்திருக்கீங்க!” மெல்லிய குரலில் அவனை சீண்டினாள் மங்கை.

“அது..வந்து..ஒரே கூச்சமா இருக்கு டீச்சர்! இது, இந்த மாதிரி எனக்கு மொத தடவையா..அ..அதான்..ஒரு மாதிரியா!”

அவளிடமிருந்து மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்க, மெல்ல திரும்பி அவளை வெட்கத்துடன் பார்த்தவன் மீண்டும் திரும்பிக் கொண்டான்.

அவன் வெட்கத்தைப் பார்த்து சத்தமாகவே சிரித்தாள் தவமங்கை.

மெல்ல மெல்ல நகர்ந்தவாறே,

“நண்டு வருது, நரி வருது! முத்துக்காளைய புடிக்க வருது” என சொல்லியபடியே அவனை நெருங்கிப் பின்னோடு கட்டிக் கொண்டாள் தவமங்கை.

“டீ….டீச்சர்”

வாயில் வார்த்தை வராமல் தடுமாறியது அவனுக்கு.

“காலையிலே எழுந்ததுமே என்னை நேரா பார்க்க பயந்து தோப்புக்கு ஓடிப் போயிடுவீங்கன்னு நெனைச்சேன்! ஆனா ஐயா கெத்துதான்! வெக்கப்பட்டாலும் ஸ்டெடியா உட்கார்ந்துருக்கீங்க!” என அவன் தோளில் தலை வைத்து அவன் முகத்தைப் பார்த்தப்படி பேசினாள் மங்கை.

அவள் பின்னிருந்து அணைத்து தோளில் தொங்கியதில் இவனுக்கு வார்த்தை சிக்க தலைக் குனிந்தபடி,

“அதெப்படி ஓடிப் போவேன் டீச்சர்! நேத்து அப்படி இப்படி நடந்துருச்சே நமக்குள்ள, அதைப் பத்தி நீங்க என் கிட்ட எதாச்சும் பேச நெனைக்கலாம். இப்படி புடிக்கல, இந்த மாதிரி புடிக்கலன்னு சொல்ல நெனைக்கலாம். நேத்து நீங்க இருந்த பயத்துல, கலக்கத்துல என்னை நெருங்கி இருக்கலாம். காலைல முழிச்சதும் ஐயோ தப்பு பண்ணிட்டோமேன்னு தோணி இருக்கலாம். சூட்டோட சூடா இனிமே என் பக்கத்துலயே வராதடான்னு சொல்ல நினைச்சிருக்கலாம்! இத்தனை இருக்கலாம் இருக்கறப்போ அதெல்லாம் தெரிஞ்சுக்காம எப்படி போவேன் டீச்சர்!” என தொண்டை கமற தட்டுத்தடுமாறி சொன்னான் காளை.

அவன் பின்னால் இருந்து நகர்ந்து வந்து அவன் மடியில் அமர்ந்துக் கொண்டாள் மங்கை. தன் ஒற்றை விரல் கொண்டு தாழ்ந்திருந்த அவன் முகத்தை நிமிர்த்தினாள்.

“என்னைப் பாருங்க!” என சொன்னவள் குரலும் கரகரத்திருந்தது.

மங்கையின் கண்களை நோக்கியவன், அது கலங்கி இருந்ததைக் கண்டதும் பரிதவித்தான்.

“ராத்திரி நடந்தது புடிக்கலியா டீச்சர்?” கேட்கும் போதே அவன் குரல் மெல்ல நடுங்கியது.

“புடிச்சாலும் புடிக்கலைனாலும் நாட்டுல பாதி மனைவிங்க அப்படியே வாயைத் திறக்காம வாழ்ந்துடுவாங்களாம் காளை. எனக்கு இந்த மாதிரி பிடிக்கும், இதுலாம் பிடிக்காதுன்னு மூச்சு கூட விட மாட்டாங்களாம். அவங்க கணவர்களும் அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்களாம்! எங்க ஸ்டாப் ரூம்ல டீச்சர்ஸ் இப்படிலாம் பேசிக்கிறத கேட்டுருக்கேன்!”

“அவங்களாம் எப்படியோ போகட்டும் டீச்சர்! நீங்க அப்படி இருக்க வேணாம்! எது பிடிக்கலனாலும் என் கிட்ட சொல்லுங்க! நான் கண்டிப்பா திருத்திக்குவேன்! எனக்கு புருஷன்னா நீ தான், ஒனக்கு பொண்டாட்டின்னா நான் தான்னு நீங்க தானே சொன்னீங்க! இனிமே என் கூடவே என் காலம் முழுக்க இருக்கப் போறீங்க! உங்களுக்குப் புடிச்ச மாதிரி நான் நடந்துக்கனும்ல!”

அழுகை வரும் போல இருந்தது அவளுக்கு. பெரு முயற்சி எடுத்து அழுகையைக் கட்டுப்படுத்தினாள். பின் கரகரப்பான குரலில்,

“இந்தக் காளைய மங்கைக்கு ரொம்ப புடிச்சிருக்கு! ஏன் புடிச்சது எப்படி புடிச்சதுன்னுலாம் தெரியல! ஆனா புடிச்சிருக்கு!”

“நெஜமா என்னைப் புடிச்சிருக்கா டீச்சர்? இல்ல தாலி கட்டிட்டதனால என் மேல பாவப்பட்டு சொல்றீங்களா?” உயிரைக் கண்களில் தேக்கிக் கேட்டான் அவன்.

“நெஜம்மா புடிச்சிருக்கு காளை! இந்த கருப்பு ஸ்கின்ன புடிச்சிருக்கு! கருத்தடர்ந்த சிகையைப் புடிச்சிருக்கு! வீரமா முறுக்கி விட்டிருக்கற மீசையைப் புடிச்சிருக்கு! ராத்திரி முழுக்க இச்சு இச்சுன்னு முத்தம் குடுத்த இந்த அழுத்தமான லிப்ஸ புடிச்சிருக்கு. நான் எங்க போனாலும் என்னையே நோட்டம் விடற இந்தக் கண்களப் புடிச்சிருக்கு! கிண்ணுன்னு புடைச்சுக்கிட்டு இருக்கற இந்த ஆர்ம்ஸ்ச புடிச்சிருக்கு! நாலு பேரு வந்தாலும் தூக்கிப் போட்டு மிதிக்கற அளவுக்கு வளத்து வச்சிருக்கற இந்த பாடிய புடிச்சிருக்கு. காளைடா நானுன்னு வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு மீசைய முறுக்கற ஸ்டைல்லு புடிச்சிருக்கு! மொத்தத்துல இந்த முத்துக்காளைய ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு”

அவள் சொன்ன ஒவ்வொரு புடிச்சிருக்கு என்ற வார்த்தைக்கும் அவன் கண்கள் பளிச் பளிச்சென மின்னியது. சொல்லி முடித்தவள்,

“எலிசுன்னு கூப்டுங்க” என கேட்டாள்.

“இல்லல்ல”

“கடவுளே! மறுபடியும் மொதல்ல இருந்தா!!!” பொய்யாக சலித்துக் கொண்டாள் மங்கை.

வெட்கமாய் புன்னகைத்தவனைப் பார்க்க பார்க்க திகட்டவில்லை மங்கைக்கு.

“ஸ்கூலுல புதுசா ஒரு சிலிபஸ் ஆரம்பிக்கறப்போ, எல்லா ஸ்டூடண்டும் ரொம்ப தடுமாறுவாங்க காளை! மறுபடி மறுபடி பயிற்சி செஞ்சிக்கிட்டே இருந்தா போக போக ரொம்பவே தேறிடுவாங்க! இதுவும் நமக்கு ஸ்கூல்தான். நமக்கும் இது புது சிலிபஸ்தான். உங்களுக்கு வேற வெக்க வெக்கமா வருது! சோ வீ ஷெல் ப்ராக்டிஸ் அகேய்ன்! ப்ராக்டிஸ் மேக்ஸ் பெர்பெக்ட்! எங்க சொல்லுங்க எ..லி..சு..” என மறுபடியும் பாடம் எடுக்க ஆரம்பித்தாள் தவமங்கை.

“எ.எலிசு” என திக்கித் திணறி அவன் சொல்ல, காதல் பள்ளி மணியடிக்காமலே அங்கே ஆரம்பமானது. கற்க வந்தவன் கற்று கொடுக்கும் விந்தையெல்லாம் இந்தப் பள்ளியில் தான் நடக்கும்.

மைக்கின் டெஸ்டிங் டெஸ்டிங் ஓன் டூ த்ரீ சத்தத்தில் தான் மீண்டும் பூமிக்கு வந்தான் காளை.

மங்கை மாணவர்களை ஸ்டேஜில் கரேக்ட்டாக இடம் பார்த்து நிற்க வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டவன், செவலைக்கு கண் காட்டி விட்டு அவளுக்கு ஜூஸ் எடுத்துக் கொண்டு போனான். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும் என்பது போல, மங்கையோடு சேர்ந்து அவள் குழுவுக்கும் தடபுடல் கவனிப்புத்தான். அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஜூஸ், காபி, பலகாரம் என வந்துக் கொண்டே இருந்தது. அதுவும் மங்கைக்கு காளையே கொண்டு வந்துக் கொடுத்தான். அவளும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

ஸ்டேஜில் இருந்து கீழே இறங்கி நின்று ஒத்திகையைக் கவனிக்க ஆரம்பித்தாள் மங்கை. தமிழாசிரியர் மேடையிலேயே நின்று இன்னும் சொதப்பும் மாணவர்களை திட்டிக் கொண்டு இருந்தார். மறை மங்கைக்கு சற்று தள்ளி நின்றிருந்தான். அவனும் இன்னும் சில ஆசிரியர்களும் ப்ரோப்ஸ் மற்றும் உடைகளுக்குப் பொறுப்பேற்றிருந்தனர்.

மறை கடுப்போடு மங்கையையும் காளையையும் முறைத்துக் கொண்டே தன் வேலையைப் பார்த்தான். மூன்றாவது முறையாக மங்கைக்கு ஜுஸ் வர பொங்கி விட்டான் அவன்.

“புது சோப்பு நல்லா வாசமாத்தான் இருக்கும்! போக போக தேஞ்சி போகறதோட வாசனையும் போயிடும்! ஓவரா ஆடாதிங்கடா டேய்” என காளையின் காதுபடவே முணுமுணுத்தான்.

தன் அருகில் நின்றிருந்த மங்கையின் கையை மெல்ல பற்றிக் கொண்ட காளை,

“என் புது சோப்ப பாங்கு பத்திரமா தேஞ்சிப் போகாம எனக்குப் பாத்துக்கத் தெரியும்! நெஞ்சுல நேசம் இருந்தா வாசம் எப்படி விட்டுப் போகும்! பாட்டி தட்டுல மீதி எத்தனை வடை இருக்குதுன்னு தெரியாதவங்களுக்கு, இதெல்லாம் எங்க தெரிய போகுது!” என சொன்னான் காளை.

மேடைக்கு கீழே தான் இத்தனை பேச்சும் நடந்தது.

“விடுங்க காளை! இதெல்லாம் ஸ்டமாக் பர்னிங்ல பேசறது, அப்படியே கண்டுக்காம போயிடனும்! சூரியனப் பார்த்து லொல்லொல்னானும், நிலாவ பார்த்து வள்வள்னானும் வாய் வலிக்கப் போறது அந்த ப்ளடி டாக்குக்குத்தான்! சோ நம்ம பார்த்து குலைச்ச இந்த டாக்குக்கு வாய் வலிச்சிருக்கும், அந்த ஜூச அவருக்கே குடுத்துடுங்க”

“ஏய்! யாரப் பார்த்துடி..”

சட்டென மறையின் புறம் திரும்பிய காளை, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மீசையை முறுக்கியப்படி அவனை ஆழ்ந்துப் பார்த்தான். காளையின் கோபப் பார்வையைக் கண்டு பயந்துப் போன மறை, ஈரடி பின்னால் எடுத்து வைத்தான்.

“இதே பழைய காளையா இருந்தா டீச்சர டி போட்டதுக்கு இந்நேரம் உன் வாயில உள்ள பல்ல எல்லாம் தட்டிக் கையில குடுத்துருப்பான். இப்போ உன் முன்ன நிக்கற காளை டீச்சரோட புருஷன். உன் கூட சண்டைப் போட்டு, என் பொண்டாட்டிய எல்லார் முன்னுக்கும் நான் கேவலப்படுத்த விரும்பல. இதுக்கும் மேல டீச்சர் கிட்ட மரியாதை இல்லாம நடந்துகிட்டன்னு கேள்விப்பட்டேன், கண்டந்துண்டமா வெட்டி என் தோப்புல பொதைச்சிருவேன்! ஜாக்கிரதை” என குரலைத் தாழ்த்தி மிரட்டியவன், மறையின் கைப்பிடித்து குலுக்குவது போல கையை ஒர் அழுத்து அழுத்தி விட்டுப் போனான்.

சற்று நேரத்துக்கெல்லாம் கை வீங்கித் தடித்துப் போனது மறைக்கு. வலி வேறு உயிர் போக, அவனை முறைத்தவாறே சுற்றிக் கொண்டிருந்த காளையைக் கண்டு இன்னும் பயமெடுத்தது அவனுக்கு. ஒரு அழுத்தத்திலேயே கை எலும்பை உடைத்து விட்டானோ என கலங்கிப் போன மறை, யாரிடமும் எதுவும் சொல்லாமல் டவுன் ஹாஸ்பிட்டல் தேடி கிளம்பி போய் விட்டான்.

ஒரு வழியாக ப்ராக்டிஸ் முடிய மாலையாகி இருந்தது. மாணவர்களை ஸ்டேஜ் பின்னால் ஏற்பாடு செய்திருந்த கொட்டகைக்கு அனுப்பி உடை மாற்ற சொல்லிவிட்டு அவர்களுக்கு காவலாக அப்பொழுதுதான் அங்கு வந்த டீச்சரை வைத்து விட்டு காளையைத் தேடிப் போனாள் மங்கை.

“சொல்லுங்க டீச்சர்”

“வீட்டுக்குப் போய் குளிச்சு கிளம்பனும்! ஸ்கூட்டி ஸ்கூலுல இருக்கு”

“சரி வாங்க!” என தனது வேலையை செவலையிடம் கொடுத்தவன், மங்கையை பைக்கில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான். அவன் வயிற்றில் கைக் கொடுத்து அணைத்து, முதுகில் முகத்தை சாய்த்துக் கொண்டாள் மங்கை.

“தூக்கமா வருது”

“டீச்சர்! அப்படியே தூங்கிடாதிங்க, எங்கயாச்சும் விழுந்து வச்சிடுவீங்க!” என சொல்லியபடியே ஒரு கையால் ஹேண்டிலைப் பிடித்துக் கொண்டவன் மறு கையால் தன் வயிற்றில் கோர்த்திருந்த அவளிரு கரங்களையும் இறுக பற்றிக் கொண்டான். மெல்ல ஓட்டிக் கொண்டு வந்து மங்கையை வீடு சேர்த்தான் காளை.

இறங்கிக் கொண்டவள், புன்னகையுடன் அவனை ஏறிட்டாள். அவனும் புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான்.

“அன்னிக்கு ஏன் கடலை மிட்டாய வாங்கிக்கல?” என புன்னகை முகம் மாற ஆதங்கத்துடன் கேட்டாள்.

“அது வந்து.. நீங்க உங்களை அறியாம கடிச்சுக் குடுத்திட்டீங்கன்னு நெனைச்சேன் டீச்சர்! எங்க அதை நான் சாப்பிட்டுட்டா நீங்க ஃபீலாயிடுவீங்களோன்னு வாங்கிக்கல. ஆனாலும் மனசு கெடந்து அடிச்சிக்கிச்சு டீச்சர், அது வேணும் வேணும்னு. உங்கள விட்டுட்டு மறுபடி அந்த இடத்துக்குப் போய் அந்த கடலை மிட்டாய் எங்கயாச்சும் விழுந்து கெடக்கான்னு தேடுனேன் டீச்சர்”

“வாட்!!!!”

“ஹ்ம்ம் ஆமா! ஆனா அத ஒரு கோழி கொத்தி கொத்தி தின்னிட்டு இருந்துச்சு டீச்சர். அந்த மிட்டாய பொறுக்கி எடுத்தாச்சும் சாப்பிடனும் நெனைச்ச என் ஆசை சுக்கு நூறா அந்த எடத்துலயே ஒடஞ்சிப் போச்சு!”

கலகலவென சிரித்தாள் தவமங்கை.

“அப்படியே விட்டுருவோமா நாங்க! அந்தக் கோழிய தொரத்திப் புடிச்சு சுட்டு சூப் வச்சு சாப்டேன்ல! எப்படியும் அந்தக் கடலை மிட்டாய் கோழி வழியா என வயித்துக்குத்தானே வந்துச்சு.” என அவன் சொல்ல, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள் மங்கை. சிரித்து முடித்தவள், அவன் கன்னத்தை தன் இரு கைகளாலும் தாங்கி,

“ஆவ் துஷோ மோக் கோர்த்தா”(கொங்கனி லேங்குவேஜ்) என சொல்லி விட்டு வீட்டினுள் நுழைந்து விட்டாள்.

“இந்த லெவல் இங்கிலீஸ்லாம் எனக்குப் புரியாது டீச்சர்! என்னாத்த கோர்த்து எடுத்து வரனும்? சொல்லிட்டுப் போங்க” என அவன் கத்த சிரித்தப்படியே போய் விட்டாள் மங்கை.

அன்று இரவு கோலாகலமாக தொடங்கியது அவர்கள் ஊரின் கலைநிகழ்ச்சி. ஆடல், பாடல், நகைச்சுவை, நாடகம் என களைக்கட்டியது அந்த இடமே! காளை பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருக்க, மங்கையோ நாடகம் முடிந்ததும் காமாட்சியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டாள். அசதியாய் தெரிந்தவளுக்கு, எடுத்து வந்திருந்த ப்ளாஸ்கில் இருந்து டீ ஊற்றிக் கொடுத்து, பலகாரமும் கொடுத்தார் காமாட்சி. சாப்பிட்டப்படியே இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிகழ்சிகளை மென்னகையுடன் பார்த்திருந்தாள் மங்கை.

“ஏன்பா காளை! வருஷா வருஷம் மேடையேறி பாடி பட்டையைக் கிளப்புவ! இந்த வருஷம் பாடலியா?” என கூட்டத்தில் இருந்து ஒருத்தர் குரல் கொடுக்க, இல்லையென தலையை இட வலமாக ஆட்டினான் காளை.

“புது மாப்பிள்ளைக்கு பொண்டாட்டி முன்ன பாடறதுக்கு வெக்கம் டோய்” என பாண்டி கிண்டலடிக்க,

“ஆமா டோய்” என இன்னும் பலர் கோரஸ் கொடுத்தனர்.

“யாருக்குடா வெக்கம்? எங்க காளைக்கா? இப்ப பாருங்கடா எப்படி பிரிச்சு மேயறான்னு” என சொல்லிய செவலை காளையை இழுத்துக் கொண்டு போய் ஸ்டேஜில் நிறுத்தினான்.

கூட்டத்தில் அமர்ந்திருந்த மங்கையை அவன் நோக்க, பாடு என்பது போல தலையை அசைத்தாள் அவள்.

“டீச்சர் தலையாட்டுனாத்தான் பாடுவானாம்ப்பா! டீச்சர் காலடியில காளை தலைக் குப்புற கவுந்துட்டான் டோய்!” என மாடசாமி குரல் கொடுக்க ஊரே கெக்கெபெக்கெவென சிரித்தது,

குரலை செறுமி சரிப்பண்ணிக் கொண்ட காளை,

“மங்கை நீ மாங்கனி” என ஆரம்பிக்க மறுபடியும் சிரிப்பு வெடித்து கிளம்பியது கூட்டத்தில்.

“பாருங்கடா டேய்! டீச்சருக்கும் அவன் நட்டு வைக்கற மாங்காய்க்கும் எப்படி கனேக்சனு குடுத்தான்னு” என மாடசாமி எடுத்துக் கொடுக்க ஊரே அவனை கலாய்த்து தள்ளியது. காமாட்சிக்கும் மச்சக்காளைக்கும் கூட சிரிப்பு வந்தது.

மங்கைக்கு வெட்கத்தில் முகமே சிவந்துப் போனது.

“இப்ப நான் பாடவா வேணாமா?” என காளை கடுப்பாகக் கேட்க,

“பாடு பாடு! ஊரையே கூட்டி வச்சு லவ் பாட்டு பாடி சைட்டடிக்கற மொத ஆளு நீதான்டா! பாடு பாடு” என ஆர்ப்பரித்தார்கள் அமர்ந்திருந்தவர்கள்.

இசைக்குழுவில் இருந்த தபலா வாசிப்பவர் டொங் டொங் என இசை எடுத்துக் கொடுக்க, மக்களின் ஆர்ப்பாட்டம் அடங்கியது.

தபலா பிண்ணனியில் இசைக்க உயிரை உருக்கி தன் குரலில் கொட்டி,

“மங்கை நீ மாங்கனி

மடல் விடும்

மல்லிகை வாழ்த்திடும்

மழைத்துளி!!!

சிந்திடும் புன்னகை சிந்தாமணி

நடக்கும் தோட்டம் நீ

நான் ஒரு தேனி” என ஆழ்ந்து அனுபவித்து தன் மங்கையைப் பார்த்தப்படியே பாடினான் காளை.

கண்களில் கண்ணீர் மறைக்க, காளையின் உருவம் மங்கலாக தெரிய, கண்ணைத் துடைத்து விட்டுக் கொண்டே அவனையேப் பார்த்திருந்தாள் மங்கை.

அவன் பாடி முடிக்க கரகோஷம் வானைப் பிளந்தது.

(அடி பணிவான்….)