தூறல் போடும் நேரம் – 5

தூறல் போடும் நேரம் – 5

பகுதி 5

மறுநாள் காலையில் இருந்து, உறவினர்கள் பலரும் வந்த வண்ணம் இருந்தனர். முன்பை விட வீடு இன்னும் களைக்கட்ட தொடங்கியது. மேலும் அழகூட்ட, அதிகாலையில் உதயாவும், ராதாவும் வெளியே வாசலில் பெரியதொரு கோலத்தை இட்டு அசத்தியிருந்தார்கள்.

வீட்டிற்கு வந்தவர்கள், அனைவரும் அதைப் பற்றி கேட்காமல் இருக்கவில்லை, மேலும் வாசலில் நடந்து சென்றவர்கள் எல்லோரும் ஒரு நிமிடமேனும் நின்று திரும்பி பார்த்து விட்டு தான் சென்றனர். அவ்வளவு அழகுற இருவரும் கோலமிட்டிருந்தனர்.

“ஏண்டி லண்டி… இன்னிக்கும் இந்த கருமத்த தான் போடணுமா… ஆயா, அய்யால வந்திருக்காக. இன்னும் சித்தநேரத்துல உங்க ஆயித்த, அம்மான்லாம் வந்திருவாக டி… போய் குணமா நல்ல புடவையா உடுத்து” என இரவு உடையான நைட்டியை அணிந்திருந்த உதயாவை பாசமாய் திட்டியவர், நம் வள்ளியம்மை தான்.

“போ… பெரிம்மா… நான் அனுவல் அப்போ கட்டிக்குறேன்… இப்போ இருந்து கட்டுனா… என் இடுப்புல நிக்காது”

“இதுக்கு தான் நல்லா உங்கணும்கிறது. சீக்கு வந்த கோழியாட்டம் கொத்திட்டு இருந்தா, இப்படி தான் இருப்ப. போய் மருவாதையா கட்டுடி…” என அவளை விரட்டி விட்டவர், “ப்பா… இன்னும் அப்படியே பொல்லாப் பூடமா தா இருக்கா…” எனத் தனக்கு தானே சொல்லிக் கொண்டு அவரும் நகன்றார்.

அன்று நடுவீட்டில் கோலமிடும் சடங்கு நடக்கவிருந்தது. அதற்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். வீட்டு மனிதர்கள் மட்டுமே பங்கெடுத்து கொள்ளும், இந்தச் சடங்கில், வீட்டில் உள்ள மனிதர்கள் என்ற நிலையில், ராதாவும் பங்கேற்க தயாரானாள்.

வீட்டுப் பெரியவர்களாகட்டும், நேற்று வந்த உமையாள் ஆகட்டும் அவளின் பங்கேற்பை யாரும் எதுவும் குறைக் கூறவுமில்லை, நிறைக் கூறவுமில்லை. ஏனெனில் பெரியவர்களை ஒத்த அவளின் ரசனையும், நளினமான பாங்கும் அவளை மனதிற்குள் பாராட்ட தான் தோன்றியது.

இடத்திற்கு தகுந்தார் போல் பொருந்திக் கொள்வாள் ராதா. அதனால் தான் உதயா, அவளிடம் உயிர் தோழியாகி, வீடு வரை கட்டாயப்படுத்தி உரிமையாய் அழைத்து வந்திருந்தாள்.

நமக்கு பலரைப் பிடித்திருந்தாலும், சிலரை மட்டும் தான் வீடு வரை, வீட்டு மனிதர்களோடு உறவாட விட மனம் விழையும். அப்படி உதயாவுக்கு விழைந்தவள், ராதா மட்டுமே.

உதயாவிற்கு முன், ராதா மிதமான ஒப்பனையில் தன்னை அழகுபடுத்திக் கொண்டு, கீழே சென்றாள். அதே சமயம் எதிர் சாரியில் இருந்த அவனும் தயாராகி, இவளுக்கு முன்னே எதிர் படிக்கட்டு வழியே இறங்கிக் கொண்டிருந்தவன், கொலுசொலிக் கேட்டு, அது வந்த திசையைக் கணித்து, எதிரே நிமிர்ந்து பார்த்தான்.

குங்கும வர்ணத்தில் பாவாடை, ரவிக்கையும் அதற்கேற்ப இளநீல வர்ணத்தில் தாவணி உடுத்தி இருந்த பாவையைப் பார்த்த பார்வையாளனுக்கு விழிகளில் இமைகள் இருப்பதே மறந்து போனது.

பார்த்ததும் கவரும் அழகியில்லை தான் ராதா. முதலில் பார்ப்பவர் எவரும் அவளைத் திரும்பி பார்ப்பதில்லை. ஆனால் திரும்ப பார்க்க நேரிடுபவர்கள் எவரும், அவளைத் திரும்பி பார்க்காமல் விட்டதில்லை.

முதலில் ராதாவைப் பார்த்த அவனுக்கும், பெரிதாய் ஏதுவும் ஏற்படவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்க நேர்ந்ததில், அவளின் மிளிரும் அழகு அவன் கண்ணில் பட தவறவில்லை.

“மருக்கா… மருக்கா பார்க்க தோணுதா” எனத் தன்னிடம் வினவப்பட்ட கேள்விக்கு, வார்த்தையால் பதில் சொன்னால், எங்கே இந்த அழகான தருணம் தூர போய் விடுமோ என்று “ம்ம்…” என ரீங்காரமிட்டான்.

“நான் வேணா அந்தப் புள்ளைய, திரும்ப ஒருக்கா மாடில இருந்து இறங்க சொல்லவா?” என்ற கேள்வியில், அந்த தருணம் தரமிழந்து போக, சுதாரித்தான் அவன்.

யார் தன்னிடம் கேள்விக் கேட்டார்கள் என தனக்கு பின்னே திரும்பி பார்த்தான். கேட்கப்பட்ட கேள்வித் தெரியாமல் போகலாம், ஏனெனில் அவனது கவனம் எல்லாம் கயல் விழியாளின் மீது இருந்தது எனலாம். ஆனால் இங்கோ, கேள்விக் கேட்கப்பட்ட குரல் ஆணா? பெண்ணா? என்றே தெரியாத அளவிற்கு அவன் மெய் மறந்திருந்தான்.

தங்கை தான், தன் பின்னே நின்று கேட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், என்ன கேட்டாள் என்று தெரியாமல் விழித்து, ‘அட நீயா?’ என்ற ஆச்சரிய புன்னகையால் அவன் பார்த்தான்.

அவளும், ‘நானே தான்’ என இதழ்களை பெரிதாக்கி பதில் புன்னகை தந்தவாறே, ‘என்ன?’ என்பது போல் புருவத்தை மேலேற்றி, அவனை ஜாடையாய் கேட்டாள்.

“இல்ல… அங்க யாரோ கூப்பிட்டாங்கன்னு தான் பார்த்தேன்” என ராதா அங்கில்லாத தைரியத்தில், கை நீட்டி சுட்டி வேறு காட்டினான்.

‘எங்க கிட்டயேவா?’ என உதயா அவனை எகத்தாளமாய் பார்க்கும் போதே, “ஏண்டி… நீ இன்னுமா புடவ மாற்ற போகல…? அக்காவ கூப்பிடவா?” என்றவாறு வந்த தன் அன்னைக்கு பயந்து, சட்டென மாடியேறி விட்டாள்.

தக்க சமயத்தில் தப்பித்ததால் பெருமூச்சொன்றை வெளியிட்டவன், தான் ராதாவைப் பார்த்ததை எண்ணி, தனக்கு தானே வியப்பை அள்ளி வீசியவாறு, கீற்று புன்னகையோடு நகர்ந்தான்.

வள்ளியம்மையும் உமையம்மையும் நடுவாசல் எனப்படும் பூஜை அறையின் வாயிலில் கோலமிட, பின் பலகை போன்ற ஒன்றிலும் கோலமிட்டு கொண்டிருந்தனர். அதுவும் வித்தியாசமாய் கோலமாவினால் கம்பிக் கோலம் போன்று சிக்கிமுக்கிக் கோலத்தினைப் போட்டு கொண்டிருந்தனர்.

ராதாவிற்கு சிறு வயதில் இருந்து வரைவதும், கோலம் போடுவதும் மிக பிடித்தமான விஷயங்கள். உதயாவும் உமையாவும் அவர்களுக்கு உதவாமல் ஏதோ வேலையாய் இருப்பதை உணர்ந்தவள், அதனால் வெகுளியாய் அவர்களிடம் சென்று “ஆன்ட்டி, நான் வேணா ஹெல்ப் பண்ணவா?” என வினவினாள்.

“இல்ல… இருக்கட்டும் மா… நீ போய் டீய குடி. உனக்குன்னு எடுத்து வச்சிருக்கேன். ஆறிடப் போகுது. போ…” என உமையம்மை அவளை நாசுக்காய் நகர்த்த, “பரவாயில்ல ஆன்ட்டி, இங்க கொடுங்க… நீங்க ஏன் குனிஞ்சு கஷ்டப்பட்டு போடுறீங்க” என மேலும் அவர்களுக்கு உதவ போனாள்.

“இதென்ன மருக்கொளியாட்டம்… சொன்னதையே சொல்லுறவ… இந்த கோலமெல்லாம் வீட்டாளுங்க தான் போடணும். நீயெல்லாம் போடக் கூடாது. ஒருக்கா சொன்னா புரிஞ்சுக்கோ…” என வள்ளியம்மை சற்றே காட்டமாய் கூறி விட, சட்டென ராதாவின் முகம் வாட, “சரி ஆன்ட்டி” எனத் தலைக் குனிந்து கொண்டாள்.

ஒரு கோலம் போடுவதற்கு கூடவா, வீட்டு மனிதர்கள், அயல் வீட்டு மனிதர்கள் எனப் பிரிப்பார்கள் என்ற எண்ணம் அவளை மிகவும் வாட்டியது.

ஏனோ அவள் மட்டும் அந்நியமான உணர்வோடு சமையலறைக்கு சென்றாள். அவளின் தேநீரை அங்கிருந்த உமையா அவளின் பெயர் சொல்லி நீட்ட, அதைக் கூட பாராமல் கடப்பாக்கல்லைப் பார்த்தவாறு, அதன் மீது சாய்ந்து நின்றாள்.

‘என்ன இவ புதுப் பொண்ணு கணக்கா… குனிஞ்ச தல நிமிராம, டீய கூட பார்க்காம நிக்கா…’ என உமையா அவளை ஆராய்ந்தாள்.

அதே சமயம் உமையம்மை “ராதாம்மா, அக்கா வெடுக்குன்னு சொன்னத நீ மனசுல வச்சுக்காத மா. அவுங்க எப்போவுமே அப்படி தான் பேசுவாங்க. ஆனா மனசுல எதுவும் இருக்காது. கொஞ்ச நேரத்துல மறந்திருவங்க” என வள்ளியம்மையின் தன்மையை எடுத்துக் கூறியவர், “எங்களுக்கு பழகிடுச்சு… நீ தப்பா நினைச்சுக்காத மா” என தங்களின் தன்மையையும் எடுத்து கூறினார்.

“அம்மா என்ன சொல்லுச்சு சின்னம்மா?” என உமையா கேட்கும் போதே, அங்கு வந்த உதயாவும் அதைக் கேட்டு “ம்ச்… அவ்ளோ தானா? நா கூட என்னமோ ஏதோன்னு நினச்சுட்டேன்” எனத் தமையன் ஏதேனும் செய்து விட்டானோ எனப் பயந்தவள், “சரி நீ போ மா… நா அவள தெளிய வைக்குறேன்” எனத் தன் தோழி மீது நம்பிக்கையோடு சொன்னாள்.

“இதான் மேடம்… யோசனையா இருந்ததுக்கு காரணமா? ஆமா நீ ஒன்னு யோசிச்சியா, நாங்களே ஏன் அங்க போய் கோலம் போட போகலன்னு? இல்ல எங்களுக்கு கோலம் போட தெரியாதுன்னு நினைச்சியா?” எனத் தோரணையாய் கேட்டாள்.

இதில் ஏதோ விஷயம் உள்ளது போலும் என நினைத்தவள், “இல்ல நீ சோம்பேறியா இருக்கலாம்னு நினச்சேன்” எனப் பழையப்படி தன் இயல்புக்கு திரும்பினாள்.

பதிலுக்கு முறைப்பைத் தந்தவள், “இத அப்புறமா டீல் பண்ணிக்குறேன். இந்தக் கோலம் போடுறாங்கள… இது கல்யாணத்துல ஒரு சடங்கு. இதுக்கு பெயர் நடுவீட்டுக் கோலமிடுதல்ன்னு சொல்வாங்க.

இத நடுவீட்டிலும் நடையிலும் கோலம் இடுவாங்க. பெரும்பாலும் பங்காளி வீட்டுப் பொண்ணுங்க வந்து சட்டம் வச்சு கட்டம் போட்டு கோலக்கூட்டைக் கரைச்சு துணி கொண்டு போடுவாங்க.” என எடுத்துரைத்தாள்.

பின்னே வந்த உமையாளும் “அதனால தான் இத ரெண்டு பேரும் போடுறாங்க. நாங்க கூட இத போட மாட்டோம். ஏன்னா எங்கள கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டாங்கள. அதுனால நாங்களும் வெளியாளுங்க தான். ஐ மீன் சம்பந்திஸ்.” எனத் தன் பங்குக்கு விரிவாக்க,

“இன்னும் இது மாதிரி எங்க ஆளுங்க கல்யாணத்துல நெறைய இருக்கு. இது அறுபதாம் கல்யாணம்கிறதால ஷார்ட்டா முடிச்சாலும், நாங்க நிறைய ப்ளான் வச்சிருக்கோம்” என எல்லாவற்றையும் விவரித்தாள்.

சற்று நேரத்தில் அனைவரையும் அழைத்து, சாமி அறையில் பேழையில் இருக்கும் துணிகளைக் கொண்டும், வாங்கிய புது துணிகளை துவைத்து காயவைத்தும், அதனோடு நகைகளை அணிவித்தும் சாமிக்கு அலங்கரித்து பூஜைகள் செய்து, படைப்பு வைத்தார்கள். படையல் போடுதல் என்பது முன்னோர் தெய்வங்களைத் துணைக்கு அழைத்து ஆசி வழங்குமாறு வேண்டுதல் ஆகும்.

முன்னோர்களையும், சாமிவீட்டு சாமிகளையும் வணங்கி, கத்திரிக்காய், வாழைக்காய் கூட்டி அவித்துக் குழம்பு வைத்து, பருப்பு மசியல், பாற்சோறு, படைப்புப் பணியாரம், வடை அப்பளம் என்று படையல் போட்டார்கள். இதனோடு மரக்கறிக்காய் தோசை, வள்ளிக்கிழங்கு பொரியல், மண்டி கூட்டு, பச்சடி எனப் பல வகைகளை வைத்து சாமிக்கு பரிமாறினர்.

அவர்கள் படையல் போடும் போதே எப்போதடா இதைச் சாப்பிடுவோம் என எண்ண தோன்றும். அத்தனை வகைப் பலகாரங்களாகட்டும், கூட்டு, பொரியல், குழம்பு என உணவு வகையாகட்டும், படைப்புக்கு என்று தனியே செய்யப்படும் பாற்சோறும், படைப்பு பணியாரம் என எல்லாவற்றின் சுவையும் தனி ரகம் தான்.

அதனால் தான் சமையலிலேயே இவர்களின் சமையல் ஒரு தனி பிரிவாய் செட்டிநாட்டு சமையல் எனப் பெயர் பெற்றிருக்கிறது போலும்.

அவ்வீட்டின் பெரியவரான வள்ளியம்மை தூபம் போட்டு சாமிகளுக்கு தீபாராதனைக் காட்ட, வீட்டுப் பெரியவர் ஒருவர் சங்கினை ஊத, அனைவரும் கண்களை மூடி வேண்டிக் கொண்டனர்.

இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க ராதாவுக்கு சற்று வித்தியாசமாய் பட்டது. எவ்வளவு வித விதமான உணவுகள், இவற்றை சாமிக்கு படைத்தது கூட அவளுக்கு வித்தியாசமாய் படவில்லை.

ஆனால் சாமி வீட்டின் நேரே அடுப்பை அமைத்து சமைத்ததும், சாமிக்கு எடுத்த புது துணிகளை கோவில் குளத்திற்கு சென்று துவைத்து, உலர்த்தி அலங்கரிப்பது சற்றே புது விதமாய் பட்டது.

அதனினும் மேலாய், இவர்கள் படைப்புக்கு என்று இல்லாமல், எந்த மங்கள காரியங்கள் நடைப் பெற்றாலும் சங்கினை ஊதி தான் தொடங்குவார்களாம்.

பொதுவாகவே சங்கினை ‘சங்கூதிட்டான்’ என அமங்கலமாய் தான் சொல்வார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் சங்கு, கடவுளர்களுக்கு எவ்வளவு முக்கியமான, ஒரு மங்கலமான பொருள் என்று இன்று அவளுக்கு விளங்கிற்று.

இவையனைத்தும் அவளுக்கு வியப்பை ஏற்படுத்தி பக்தியைக் கூட்ட, அப்படியே மெய்மறந்து கண்கள் மூடி, அங்கிருந்த கடவுளை இரு கரம் கூப்பி தொழுதாள்.

எல்லோரும் கண்களை மூடி வேண்டிக் கொண்டிருக்க, அவன் மட்டும் ராதாவின் மூடிய நீள் விழிகளை அதிசயமாய் கூர்ந்து கொண்டிருந்தான்.

எப்போதுமே ராதா நேர்பார்வைக் கொண்டவள் தான். அது பார்க்கும் பார்வை ஆகட்டும், பேசும் விஷயமாகட்டும், எதிலுமே அவள் அவ்வாறு தான்.

ஆனால் பாந்தமாய் மூடிய இமைகளும், எந்த தொய்வும் இல்லாமல் நிமிர்ந்த மெய்யோடு, குவிந்தக் கட்டான கரங்களும் கூட, அவள் நேர் குணம் கொண்டவள் என்பதை நேர்த்தியாய் காட்டியது.

சிலர் குனிந்து பவ்யமாய் கும்பிடுவார்கள், சிலரோ குழைவாய் குலைந்து ஒரு அசட்டைத் தன்மையுடன், கைகளை ஏனோதானோவென்று குவித்து, சிரத்தையின்றி கடனே என்று கும்பிடுவார்கள்.

ஆனால் இவளோ கடவுளிடத்திலும் கூட, தான் நேர்மையானவள், நேர் குணம் கொண்டவள் என்பதைத் தெரிவிக்கிறாளோ?

இப்படி அவளைப் பற்றியே சிந்திக்க அவள் வைத்தாளோ? இல்லை அவன் செய்தானோ? ஆக மொத்தம், அவனின் நடவடிக்கையில் சிறிது மாற்றத்தை உணர்ந்தான். ஏனோ அது அவனுக்கு இதமாக இருந்தது.

தீபாராதனையைக் கண்ணில் ஒற்றியவளைக் காணவும் தான், அவன் தன் கண்களைச் சிமிட்டி, சுற்றுப்புறத்தை உணர்ந்தான். பின் அங்கு படையலில் இருந்த பாற்சோற்றை அனைவருக்கும் பிரசாதம் போல் கொடுத்தனர்.

ராதாவோ, அதன் சுவையில் பெண்களுக்கே உரித்தான சிந்தையோடு அது எவ்வாறு எதனால் செய்யப்பட்டது என ஆராய தொடங்கினாள். கிட்டத்தட்ட சக்கரைப் பொங்கலின் சுவையில் சற்றே மாறுப்பட்டு இருந்தது.

இதனை தன் தோழியிடம் கூற, “ஆமா, கொஞ்சம் பொங்கல் மாதிரி தான் இருக்கும், ஆனா இதுல கொஞ்சம் தேங்காய் சேர்த்திருவாங்க. அதான் சக்கரைப் பொங்கல்ல விட டேஸ்ட்டா இருக்கு” என விளக்கமளித்தாள்.

மேலும் பந்தி பரிமாறப்பட்டு, அனைவரும் உண்ணுவதற்கு அமர்ந்தனர். ராதாவின் முறை வரும் போது, தன் இலையில் நெருங்கியடித்து கொண்டு பரிமாறப்பட்ட உணவு பதார்த்தங்களைப் பார்த்தவளால், தன் நாக்கின் சுவை அரும்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல், பணியாரத்தை எடுத்து வாயில் போட்டு சுவைத்தாள்.

அதன் சுவையில் லயித்தவள், தன் இலையில் இருந்த பணியாரத்தை முழுதும் காலி செய்தாள். மீண்டும் அவளின் இலைக்கு பணியாரம் வந்தமரவும், நிமர்ந்து பார்த்தாள்.

வள்ளியம்மை தான் அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தார். “என்னாத்தா, பணியாரம் நல்லா இருக்கா? நல்லா இன்னம்புட்டு போட்டு உண்ணு. ஊருக்கு போறப்ப, ஒரு டப்பால போட்டு கொடுக்குறேன், கொண்டு போ. ஒரு வாரம் ஆனாலும் கெடாது. ஏன்னா… வெல்லத்த காய்ச்சி ஊற்றி மாவு கரைச்சு, நெய்யில பொரிச்சது ஆத்தா. நல்லா இருக்கும். சாப்பிட சாப்பிட கொண்டா கொண்டா ன்னு கேக்கும்” எனப் பணியாரத்தின் பெருமையைக் கூறினார்.

அவளும் சரியென தலையாட்டியவாறு உண்ண, “இப்படி இட்டப் போசனத்த இன்பமா சாப்பிடோனும். இவளும் தா இருக்கா பாரு, உன் சோட்டுக்காரி… நெய்னாலே ஆகாது. அதான் நொய்ன்னு இப்படி இருக்கா” என உதயாவைச் சேர்த்து தாளித்தார்.

அப்போது அங்கு எதற்கோ வந்த சுந்தரம், இதைக் கேட்டு சிரித்து விட, பொங்கியவளாய் “பெரிம்மா… எனக்கு அந்த வாடையே வாய்க்கிலட்டா இருக்கு. பின்ன எப்படி சாப்பிடறதாம்? நீ மட்டும் மீன்னு சாப்பிடுறியா? அது மாதிரி தா எனக்கும்…” என அவரையே சுட்டிக் காட்டினாள்.

“நல்லா உனக்கையா பேசு… ம்க்கும்” என அவளை முறைத்தவர், “ஏலே அரசு… அயித்தியாண்டிய வர சொல்லு… பந்தி போட” எனச் சுந்தரத்திடம் சொல்லிவிட்டு, தன் பரிமாறும் வேலையைச் சுறுசுறுப்பாய் எறும்பு போல இங்கும் அங்கும் ஓடி செய்தார்.

ஆனால் அவரின் அரசு என்ற விளிப்பில், பொருள் விளங்காமல் பார்த்தவள் நம் ராதா தான்.

பின் மாலையானதும், பெண் வீட்டார் ஒரு பக்கமும், மாப்பிள்ளை வீட்டார் ஒரு பக்கமும் எனச் சாமான்களைப் பரப்பினர். இதுவும் கல்யாணத்தில் ஒரு சடங்கு, பெண் பிள்ளைகள் வீட்டில், தங்களின் பெண் பிள்ளைக்கும், அவரின் மாமியாருக்கும், மாப்பிள்ளைக்கும் என்ன என்ன வாங்கியிருக்கிறார்கள் என வாங்கிய பொருட்களைக் கடைப் போல் பரப்புவர்.

அதே போல் மாப்பிள்ளை வீட்டிலும், மணப்பெண்ணிற்கு குறிப்பிட்ட சிலவற்றை வாங்கி வைத்து பரப்புவர். இங்கோ மாப்பிளையும் பெண்ணும் ஒரே வீட்டில் இருப்பதால், இரு வீட்டாரும் தங்களின் பொருளை வளவின் இரு பகுதியில் பரப்பிக் கொண்டிருந்தனர்.

இதில் தான் எந்தப் பிரிவைச் சேர்வது எனக் குழப்பமுற்று நின்றாள் ராதா.

 

மீண்டும் தூறும்…

error: Content is protected !!