AnthaMaalaiPozhuthilEpi-19

AnthaMaalaiPozhuthilEpi-19

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 19

         காலை நேர வேலைகளை முடித்துவிட்டு, ரகுநந்தன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டான். அன்று கிளாஸ் இல்லாததால், அபிநயா வீட்டில் இருந்தாள்.

இந்திரா, அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்.

        இந்திராவை, தவிர்த்து விடுவது அபிநயாவின் வழக்கம். ஆனால், இன்று என்றும் இல்லாத வழக்கமாக அவள் அபிநயாவின் அறைக்கே வந்துவிட்டாள்.

     அபிநயா, அவளை யோசனையாக பார்த்தாள்.

         “உன் கிட்ட பேசணுமுன்னு நான் ரொம்ப நாளா நினைக்குறேன், நடக்க மாட்டேங்குது. நடக்க மாட்டேங்குது என்ன நடக்க மாட்டேங்குது? ரகு விடலை.” என்று சிரித்தமுகமாக நிறுத்தினாள் இந்திரா.            

                  “பேசினா எல்லா உண்மையும் தெரிஞ்சிருமில்லை.” என்று கூறிக்கொண்டே தன் கழுத்தில் உள்ள மஞ்சள் கயிறை சரி செய்தாள் இந்திரா, “அனாவசியமா பேசினா எனக்கு பிடிக்காது.” என்று நறுக்குதெறித்தார் போல் கூறினாள் அபிநயா.

   “நான் எதுக்கு பேச போறேன்.” என்று பேசாமல், அபிநயாவிடம் தன் அலைபேசியில் சில புகைப்படங்களை காட்டினாள் இந்திரா.

      அபிநயா, அதை பார்த்தாள். அவள் முகம் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.

 

        இந்திரா சற்று அசந்து போனாள். தன் கணவன் மற்றொரு பொண்ணுக்கு தாலி கட்டும் காட்சியை பார்த்து கூட ஒரு பெண் அசந்து போகாமல் இருப்பாளா?’ என்ற அதிர்ச்சி இந்திராவின் முகத்தில்.

          “இந்த உண்மையை நான் உன்கிட்ட சொல்லிற கூடாதுன்னு தான், உன்னை என் கண்ணில் காட்டாம உன் புருஷன், உன்னை அவன் கூடவே கூட்டிட்டு போறது. உன்னை ஏதேதோ கிளாசில் சேர்த்து விடுறதெல்லாம்.” இந்திரா அசட்டையாக இருப்பது போல் காட்டிக்கொண்டு கூற, “ஓ!” ஒற்றை வார்த்தையாக கூறினாள் அபிநயா.

   ‘இவ நம்பலையா?’ என்று கடுப்பான இந்திரா, தன் கழுத்தில், உள்ள தாலியை அவள் முன் நீட்டி, “இது உன் புருஷன், என் கழுத்தில் கட்டினது.” என்று அழுத்தமாக கூறினாள்.

  “சரி… அதுக்கு?” என்று அபிநயா கேள்வியாக நிறுத்தினாள்.  

  அபிநயாவின் முகத்தில், அதிர்ச்சியை எதிர்பார்த்து, ஏமாந்து அதிர்ச்சியாக நின்றாள் இந்திரா.

          அப்பொழுது, “அம்மு குட்டி…” என்ற அழைப்பு கீழே கேட்க, “அத்தான்…” என்று துள்ளி குதித்து படி இறங்கினாள் அபிநயா.

    இந்திராவுக்கு குழப்பம் மேலோங்கியது. ஒருவேளை, அபிநயா மனசில் ரகு இல்லையோ? அது தான் அதிர்ச்சி ஆகலியோ?’ இந்திராவின் தப்பு கணக்கு நீண்டு கொண்டே போனது.

   “நம்ம தோப்புல விளைஞ்சது. வாழை , மாங்காய், இளநீர் எல்லாம் கொண்டு வந்தேன். அப்புறம், உனக்கு பிடிக்குமுன்னு நுங்கு.” என்று பசுபதி நீட்டினான்.

 

    “ஏன் அத்தான், இதெல்லாம் இருந்தா தான் என்னை பார்க்க வருவீகளா? சும்மா வர மாட்டீகளோ?” என்று அபிநயா கழுத்தை நொடித்தாள்.

    அப்பொழுது உள்ளே வந்தான் ரகுநந்தன்.

   “என்கிட்டே தான் வம்பு வளக்குற? வீட்டுக்கு வந்தவங்க கிட்டையுமா?” என்று கேலியோடு தான் சோபாவில் அமர்ந்து கொண்டு, பசுபதியையும் அமர சொன்னான் ரகுநந்தன்.

    “அத்தான் வரது, உங்களுக்கு தெரியுமா?” என்று அபிநயா கண்களை விரித்தாள்.

  “நான் மாப்பிள்ளைக்கு கூப்பிட்டு பேசினேன்.” பசுபதி கூற, “அத்தான், அப்ப நான் தான் யாரோ போல?” என்று அபிநயா மீண்டும் முகத்தை சுழித்தாள்.

   “வீட்டுக்கு வந்தவங்களுக்கு எதுவும் கொடுக்காமல், பேசிட்டே இருந்தா எப்படி?” என்று கேட்டான் ரகுநந்தன்.

  “அத்தான் சாப்பிட்டுட்டு தான் போகணும்.” அபிநயா, கண்டிப்போடு கூறினாள்.

    “இல்லை… அம்முக்குட்டி, வேலை இருக்கு. நான் போற வழியில் வந்தேன்.” பசுபதி மறுக்க, “அத்தான், அப்ப என்னை பார்க்க வரலை?” அபிநயா கோபமாக கேட்டாள்.

   “அம்முக்குட்டி, உன்னை பார்க்காமேலேயா?” என்று பசுபதி அன்பாக கேட்க, “அப்ப, சாப்பிட்டுட்டு போங்க.” என்று அதிகாரமாக கூறினாள் அபிநயா.

    “வாத்தியாரம்மா, சொன்னால் சொன்னது தான். மறுப்பே கிடையாது.” என்று ரகுநந்தன் சோகமாக உதட்டை பிதுக்கினான்.

    பசுபதி பெருங்குரலில் சிரிக்க, ‘யார் இந்த பட்டிக்காட்டான். வேஷ்ட்டியும், அவனும், அவன் சிரிப்பும்…என்று அவனை வெறுப்பாக பார்த்தாள் இந்திரா.

   பவானியம்மாள், ரகுநந்தன் அருகே அமர்ந்து, முகமனோடு பேச ஆரம்பித்தார். ரேவதி அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். இந்திரா, ரேவதியோடு சென்றாலும், அவள் கவனம் இவர்கள் மீதே இருந்தது.

     ‘ரகு எல்லாத்தையும் அபிநயா கிட்ட சொல்லிட்டானா? ஏன் அபிநயா கொஞ்சம் கூட பதட்டம் அடையவே இல்லை?’ இந்திராவுக்கு தலை விண்விண்னென்று வலித்தது.

   ‘இந்த பசுபதி தானே அவன். அவனை பார்த்து ரகு கொஞ்சம் கூட கோப படலியே? ரகுவுக்கு எல்லாம் தெரியுமா? சோதிச்சு பார்த்திர வேண்டியது தான்.இந்திரா அவர்களை யோசனையாக பார்த்தாள்.

  “இந்திரா, எனக்கு இந்த அபிநயாவை கொஞ்சம் கூட பிடிக்கலை. எல்லாரும், அவ பக்கம் தான். முதலில், அவளை இங்க இருந்து கிளப்பனும்.போற போக்கை பார்த்தா, அவ பேச்சை கேட்டுட்டு என்னை இங்க இருந்து கிளம்ப சொல்லுவான் போல என் தம்பி.” என்று ரேவதி புலம்பினாள்.

     “இவன் யாரு? கல்யாணம் ஆனா, பொண்ணை குட்டின்னு கூப்பிட்டுக்கிட்டு.” என்று முணுமுணுத்தாள் ரேவதி.

     இந்திரா மௌனமாகவே அமர்ந்திருக்க, “இன்னைக்கு காலைல இவங்க அடிச்ச கூத்தை பார்த்து மனசு பொறுக்காம தான் நான் உனக்கு போன் பண்ணேன்.” என்று ரேவதி கூற, இந்திரா தலை அசைத்து கொண்டாள்.

    ரகுநந்தனும், பசுபதியும் பேசி கொண்டிருக்க, அபிநயா உணவை தயாரித்திருந்தாள்.

    இந்திராவும், அவர்களோடு அமர்ந்து கொண்டாள்.

                    “என்ன அம்முக்குட்டி, அதுக்குள்ள சொதி பண்ணிட்டியா?” என்று பசுபதி ஆச்சரியமாக கேட்டான்.

   “உங்களுக்கு சொதி, ரொம்ப இஷ்டமாச்சே அத்தான். அதான்.” என்று அபிநயா அழகாக சிரித்தாள்.

      இந்திரா ரகுநந்தன் அருகே அமர்ந்து கொண்டாள். பசுபதியின் கண்கள் இந்திராவை ஒரு தடவை தொட்டு மீண்டது.

   “ம்… சொதி, இஞ்சி பச்சடி, உருளை கிழங்கு பொரியல், பாயாசம் வேறேயா? என்ன பாயசம்?” என்று கண்களை விரித்து அப்பாவியாக கேட்டாள்  இந்திரா.

  “தேங்காய்ப்பால் அவல் பாயாசம். அத்தான் எங்க கல்யாணத்துக்கு அப்புறம் இப்ப தான் முதல்முதலா எங்க  வீட்டுக்கு வந்திருக்காக.” சந்தோஷமாக கூறினாள் அபிநயா.

            ‘எங்க…அதில் அடங்கி இருந்த உரிமையில், சந்தோஷத்தில் ரகுநந்தன், அவளை வாஞ்சையோடு பார்த்தான்.

    பசுபதி, ரகுநந்தனின் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து புன்னகைத்து கொண்டான்.

       உணவு பாரிமாறுகையில்,  “ஏன் ரகு, உங்களுக்கு பிடிச்சதை இப்படி ஏதாவது பார்த்து பண்ணிருக்காங்களா வாத்தியாரம்மா?” என்று வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் நாசுக்காக கேட்டாள் இந்திரா.

    ‘இது என்னடா வம்பு?’ என்று பசுபதி, ரகுநந்தனை பதட்டமாக பார்க்க, அபிநயா இந்திராவை கோபமாக முறைத்தாள்.

   “அவசியமில்லை.” என்று ரகு அசட்டையாக கூறினான்.

     மூவரும் அவனை புரியாமல் பார்க்க,  “ம்ம்ம்… பசுபதிக்கு, இது மட்டும் தான் பிடிக்கும் போல. எனக்கு தான் என் மனைவி என்ன செஞ்சாலும் பிடிக்குமே. அவள் கையால் எதை சாப்பிட்டாலும், தேவாமிர்தம் தான்.” என்று கூறிவிட்டு, “இன்னும் கொஞ்சம் சொதி கொடு.” என்று கேட்டான் ரகுநந்தன்.

   பசுபதி, பெருங்குரலில் சிரிக்க, இந்திரா கடுப்பாக தலை குனிந்து கொண்டாள்.

             “என்ன நக்கலா?” சொதியை ஊற்றியபடியே, அபிநயா ரகுநந்தனின் காதில் கிசுகிசுக்க, அவன் கண்சிமிட்டி சிரித்தான்.

   “அவ, ஏன் உங்க பக்கத்தில் உட்காந்திருக்கா?” மீண்டும் தன் கணவனின் காதை கடித்தாள் அபிநயா.

             ‘அட, பொறாமையோ?’ என்று தன் மனைவியை யோசனையாக பார்த்தான் ரகுநந்தன். பசுபதி எதுவும் பேசாமல், இவர்களை கவனித்து கொண்டிருந்தான்.

   இந்திரா விடுவேனா என்று அடுத்த ஆயுதத்தை வீசினாள்.

               “இந்த அத்தானை நீ கட்டிக்க போற மாதிரி இருந்ததில்லை?” என்று விஷம் கலந்த நாக்கை, தேனின் குரலில் பேசுவது போல் இனிமையாக கேட்க, அங்கு அமைதி நிலவ, அந்த அமைதியை மீண்டும் இந்திராவே கலைத்தாள்.

   “நம்மளை மாதிரி.” என்று ரகுநந்தனை பார்த்து சிரித்து வைத்தாள்.

   ரகுநந்தன் தன் கண்களை இறுக மூடி திறந்தான்.  அபிநயாவிற்க்கோ, அவள் சற்று முன் காண்பித்த புகைப்படம் கண்முன் வந்தது.

     அங்கு, நிலவிய நிசப்தத்தை கலைத்தது பசுபதியின் குரல்.

   “அம்முக்குட்டி. சாப்பாடு அருமை. அத்தானுக்கு பாயசம் குடு. அப்படியே மாப்பிள்ளையை கவனி.என்று கூறி அபிநயா ஊற்றிய பாயசத்தை ரசித்து குடித்தான்.

     ‘இவன் என்ன சாப்பாட்டு ராமனா? நான் எவ்வளவு தீவிரமா பேசிட்டு இருக்கேன்?’ என்று இந்திரா அவனை கடுப்பாக பார்த்தாள்.

        “சும்மாவே, மாப்பிள்ளை தேவாமிர்த்தமுன்னு சொல்லிட்டாக. இன்னைக்கு சாப்பாடு உண்மையிலே எ கிளாஸ்.” என்று பசுபதி அபிநயாவின் சமையலை சிலாகிக்க, “எனக்கும் கொஞ்சம் பாயசம் குடு. இனிப்பு சாப்பிடணும் போல இருக்கு.” ரகுநந்தன் இந்திராவை ஏளனமாக பார்த்தபடி கூறினான்.

  ‘குடும்பமே சாப்பிட தான் லாய்க்கு. இவ்வளவு பேசியிருக்கேன். யாராவது ஒத்த வார்த்தை சண்டை இழுத்திருந்தா, அதை வச்சி ரணகளம் பண்ணிடலாமுன்னு பார்த்தா…என்று நொந்து கொண்டே, அங்கிருந்து எழுந்து கையை கழுவிட்டு ரேவதி அறைக்குள் நுழைந்து கொண்டாள் இந்திரா.

      ‘என்ன செய்யலாம்?’ என்ற எண்ணம் அவளை வண்டாக குடைந்தது.

   “நீ எப்ப சாப்பிடுறதா உத்தேசம்?” என்று ரகுநந்தன் அபிநயவை பார்த்து கேட்க, “அத்தை ரெஸ்ட் எடுக்கறாக. அத்தை, நான், உங்க அக்கா எல்லாரும் ஒண்ணா சாப்பிடுறோம்.” என்று கூறினாள் அபிநயா.

   சிறிது நேரம் பேசிவிட்டு பசுபதி கிளம்ப, ரகுநந்தனும் அவன் பணியை கவனிக்க கிளப்பிவிட்டான்.

   மாலை வீடு திரும்பிய ரகுநந்தன் , அபிநயாவை தேடினான்.

     அபிநயா, கவினோடு தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தாள்.

    “போன் பண்ணா எடுக்க மாட்டியா? மாமா, உனக்கு ரொம்ப நேரமா கூப்பிடுறாங்க.” என்று சிடுசிடுத்துவிட்டு அவன் மேலும் கூறிய செய்தியில் அபிநயா திக் பிரமை பிடித்தார் போல் நின்றாள்.

பொழுதுகள் விடியும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!