அந்த மாலை பொழுதில்…
அத்தியாயம் – 20
அபிநயா, அசையாமல் நின்று கொண்டிருந்தாள். ரகுநந்தன், என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்க, அவள் சேலையை பிடித்து இழுத்தான் கவின்.
சுய உணர்வு பெற்றவளாக, தன் கண்களை விழித்தாள். அவள் இமைகள் படபடத்தது. அவள் விழியோரத்தில் நீர் துளி. வேகமாக தன் இமைகளை படபடவென்று அடித்து கொண்டு, தன் விழிநீரை காற்றோடு பறக்க விட்டாள்.
“கவின், நீ அம்மா கூட விளையாடு. நான் வரேன்.” என்று கூறி கொண்டு, ரகுநந்தன் முன் நின்றாள்.
“நான் அத்தானை பார்க்கணும்.” என்று அபிநயா கூற, “இப்பவா?” என்று யோசனையாக கேட்டான் ரகுநந்தன்.
“உடனே பார்க்கணும்.” அழுத்தமாக உறுதியாக ஒலித்தது அவள் குரல்.
“ம்… போகலாம்.” ரகுநந்தன் சம்மதம் தெரிவிக்க, இருவரும் பவானியம்மாளிடம் கூறிக்கொண்டு அபிநயாவின் ஊரை நோக்கி பயணித்தனர்.
இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை.
அதே நேரத்தில், வண்டியில் சென்று கொண்டிருந்த பசுபதியை வழி மறித்தார் ராமசுவாமி அபிநயாவின் தந்தை.
“யாரை கேட்டு இந்த பொண்ணை முடிவு பண்ண?” என்று அவர் கேட்க, “யாரை கேட்கணும் ?” என்று ஜீப்பின் முன்னால் ஏறி அமர்ந்து அசட்டையாக கேட்டான் பசுபதி.
ராமசுவாமி பசுபதியை கோபமாக முறைக்க, “உங்க பொண்ணை தந்திருந்தா கட்டிருப்பேன்.” என்று நக்கலாக கூறினான் பசுபதி.
“அம்முக்குட்டிக்கு தங்கை பொம்மு குட்டி இருந்தா சொல்லுங்க கட்டிக்குறேன்.” என்று பசுபதி கேலி பேச, “உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. உங்க அப்பனும், என் சொல் பேச்சு கேட்காம சீரழிஞ்சி சின்னப்பட்டு போனான். நீ இப்ப, கல்யாண விஷயத்தில் என் பேச்சை கேட்க மாட்டங்கள்ல. நான் ஒரு நல்ல பொண்ணை பார்த்து கட்டிவைக்கேன். இல்லை, உங்க ஆத்தாவை, நல்ல பொண்ணா பார்க்க சொல்லு.” என்று தொடர்ந்து ராமசுவாமி பேசியது காற்றோடு தான் போய் கொண்டிருந்தது.
பேசி பயனில்லை, என்று அவர் கிளம்பிவிட ரகுநந்தனின் எண்ணிலிருந்து அழைப்பு வர பசுபதியின் அலைபேசி ஒலித்தது.
“சொல்லுங்க மாப்பிள்ளை.” என்று பசுபதி கூற, “அத்தான், நான் நம்ம தோப்பு கிட்ட நிக்கேன். உங்களை பார்க்கணும்.” என்று பேச்சை முடித்து விட்டாள் அபிநயா.
‘அம்முக்குட்டி விளாசி விடுவா போல.‘ என்று எண்ணிக் கொண்டே கிளம்பினான் பசுபதி.
‘எல்லாரையும் மிரட்ட வேண்டியது.‘ என்று எண்ணிக்கொண்டு அமைதியாக நின்றான் ரகுநந்தன்.
சில நிமிடங்களில், பசுபதி அங்கு வந்து சேர்ந்தான்.
“வீட்டுக்கு வந்திருக்கலாமில்லை? மாப்பிள்ளையை இப்படி தான் தெருவில் நிக்க வைப்பியா?” என்று பசுபதி கண்டிக்க, “யாரை கேட்டு இந்த கல்யாணத்தை அவசரஅவசரமா பேசி முடிச்சீக அத்தான்?” என்று கடுப்பாக கேட்டாள் அபிநயா.
பசுபதி, தன் மாமனிடம் எகிறினான். ஆனால், அபிநயாவிடம் தன்மையாக பேசினான்.
“எனக்கு இந்திராவை ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல அழகு. நல்ல படிச்சிருக்கா. பார்த்ததும், என் மனசில் பதிஞ்சி போய்ட்டா. இந்த அத்தானை பத்தி உனக்கு தெரியாதா? நினச்சா முடிச்சிரணும்.” அவன் கூற, “இந்த கல்யாணம் வேண்டாம் அத்தான்.” அபிநயா உறுதியாக கூறினாள்.
“இல்லை, அம்முக்குட்டி இந்திரா தான் என் மனைவி.” பசுபதி அழுத்தமாக கூறினான்.
“நீங்க இந்திராவை கட்டிக்கிட்டா, இந்த அம்முக்குட்டி உங்க கிட்ட பேசமாட்டா.” கூறுகையில் அவள் குரல் உடைந்தது.
பசுபதியின் கண்களிலும் கண்ணீர் தேங்கியது. வேறு பக்கம் திரும்பி கொண்டான்.
“இந்த கல்யாணம் நடக்கும் அம்முக்குட்டி. நீ, மாப்பிள்ளையோடு வந்து வாழ்த்தணும்.” என்று பசுபதி ஆணையிட, “நீங்க செய்றது முட்டாள்தனம். இது நடக்காது.” அவள் கோபாமாக கூறினாள்.
ரகுநந்தன், இவர்கள் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
“நடக்கும்.” பசுபதியின் குரல் ஆணி அடித்தார் போல் அந்த தோப்பில் எதிரொலித்தது.
“அம்முக்குட்டி, உங்களை அத்தான்னு கூப்பிட மாட்டா.” அபிநயா மேலும் பேச இயலாமல், காருக்குள் ஏறி கொண்டாள்.
ரகுநந்தன், பசுபதியின் தோள் தொட்டு, ஏதோ பேச எத்தனிக்க, “அம்முக்குட்டியை சமாதானம் செய்யுங்க. பிடிவாதக்காரி தான், ஆனால் சொன்னா புரிஞ்சிப்பா உங்க வாத்தியரம்மா.” ரகுநந்தனின் முகம் பார்க்காமல் பேசினான் பசுபதி.
பசுபதி கண்கள், கண்ணீரை கோர்த்துக் கொண்டு மின்னியது.
ரகுநந்தன், காரில் ஏற, பசுபதி அபிநயா அமர்ந்திருக்கும் பக்கம் சென்று, “அம்முக்குட்டி…” என்று அவன் அழைக்க, “காரை எடுங்க.” என்று ரகுநந்தனை பார்த்து கூறினாள் அபிநயா.
“அத்தான்னு கூப்பிடலைனாலும், கூப்பிட்டாலும் நீ என் அம்முக்குட்டி. நான் உன் அத்தான் தான். கல்யாண பத்திரிக்கையோடு வரேன். கல்யாணத்துக்கு வந்து சிறப்பிச்சிடுங்க.” என்று கூறினான் பசுபதி.
“காரை எடுங்கன்னு சொன்னேன்.” என்று அபிநயா பிடிவாதம் பிடிக்க, ரகுநந்தன் காரை எடுக்க, பசுபதி கை அசைத்து விடை கொடுத்தான்.
“கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம். இப்படி வந்து சண்டை போடுவீயா?” என்று ரகுநந்தன் மனத்தாங்கலோடு கேட்டான்.
“அத்தான், ஏதோ நினச்சிகிட்டு இப்படி பண்றாக. எனக்கு மனசு தாளலை.” அவள் குரல் உடைய, “எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திருவோம். இந்திரா செட் ஆக மாட்டா.” என்று ரகுநந்தன் கூற, “நிறுத்த முடியுமா?” என்று சந்தேகமாக கேட்டாள் அபிநயா.
‘ஆம்…‘ என்பது போல் தலை அசைத்தான் ரகுநந்தன்.
இருவரும் வீட்டிற்குள் நுழைய, “எங்க போயிட்டு வரீங்க ? இவ்வளவு தாமதமா வரீங்க?” சுள்ளென்று கேட்டாள் ரேவதி.
“தினமும் குடிச்சிட்டு, தாமதமா வர்ற உங்க மாப்பிள்ளையை கேட்க முடியலை? பொண்டாட்டியை கூட்டிட்டு போயிட்டு வர, இவுகளை கேளுங்க.” வெடுக்கென்று கூறினாள் அபிநயா.
“நான் உன்னை கேட்டேன்.” என்று ரேவதி விடாப்பிடியாக கேட்க, அபிநயா சரேலென்று நிமிர்ந்து ரேவதியை பார்க்க, “நீ உள்ள போ.” அழுத்தமாக வெளிவந்தது ரகுநந்தனின் குரல்.
அபிநயா எதுவும் பேசாமல், அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“என்ன தம்பி, என்னை அவமதிச்சி உன் பொண்டாட்டியை காப்பாத்துறியா?” என்று ரேவதி கோபமாக கேட்க, “எந்த அவமானமும் நடந்திற கூடாதுன்னு பாக்குறேன் அக்கா.” என்று தன்மையாக கூறினான் ரகுநந்தன்.
ரேவதி கண்களை சுருக்கி தன் தம்பியை பார்க்க, பவானியம்மாள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடி, இவர்களை பார்த்து கொண்டிருந்தார்.
“அவ சொல்றது நியாயம் தானே?” ரகுநந்தன் கேட்க, “எது நியாயம்?” ரேவதி கேட்க, “அத்தான் இன்னும் வரலை. அத்தானை நீ கேட்க வேண்டியது தானே?” என்று கேட்டான் ரகுநந்தன்.
“அவங்க எப்ப வேணாலும் வருவாங்க? அதை கேட்க அவ யார்?” என்று ரேவதி பேசியதிலிருந்து, ‘இன்னும் சுரேஷ் இந்திரா கல்யாண விஷயத்தை கூறவில்லை‘ என்று கணித்து கொண்டான் ரகுநந்தன்.
ரேவதி மேலும் தொடர்ந்தாள்.
“நீ மட்டும் என்ன யோக்கியமா? குடிச்சிட்டு திரிஞ்சவன் தானே நீ?” என்று ரேவதியின் வார்த்தை ரகுநந்தனை சாட்டையாக தாக்க, ரகுநந்தன் தன் கண்களை இறுக மூடி திறந்தான்.
“நான் இப்ப குடிக்கறதில்லை.” என்று கூறிவிட்டு, மடமடவென்று அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
எதுவும் பேசாமல், அபிநயா படுத்துவிட்டாள். அவள் மனநிலை அறிந்து அவளை ரகுநந்தன் தொந்திரவு செய்யவில்லை.
மறுநாள் காலையில், பசுபதி வயல் வேலையில் மூழ்கி இருக்க, “அண்ணாச்சி… உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு.” என்று கூற, தன் தலையை திருப்பி பார்த்தான் பசுபதி.
“நான் கட்டிக்க போற பொண்ணு தான். படிச்ச புள்ளை. அது தான் ஆசைப்பட்டு அதுவே வந்திருச்சு.” என்று சத்தமாக கூறிக்கொண்டு, அவள் அருகே சென்றான் பசுபதி.
“யோவ்… என்ன நக்கலா?” என்று கேட்டாள் இந்திரா.
“அப்படி போய் பேசுவோமா? நாம்ம வருங்கால புருஷன், பொஞ்சாதி தனியா போய் பேசுவோம்.” என்று கூறிக்கொண்டு வேகமாக முன்னே நடந்தான் பசுபதி.
வேறு வழியின்றி அவனை பின்தொடர்ந்தாள் இந்திரா.
சற்று, ஆள் இல்லாத இடத்திற்கு சென்று ஒரு மரத்தடியில் நின்றான் பசுபதி.
கருப்பு நிற மினி ஸ்கர்ட், மஞ்சள் நிற மினி டாப்ஸ் அணிந்திருந்தாள். அந்த மினி டாப்ஸ், அவள் எம்புகையில் அவள் இடுப்பை எடுத்து காட்டியது. அந்த டாப்ஸின் மஞ்சள் நிறமோ என்னை பார், என் அழகை பார் என்று கூறியது.
“இந்த மாடர்ன் டிரஸ் இந்த கிராமத்துக்கு செட் ஆகாது. இந்த புருஷன் முன்னாடி நீ என்ன வேணாலும் போடு. இல்லை…” என்று மீசையை முறுக்கி நமட்டு சிரிப்பு சிரித்தான் பசுபதி.
பசுபதி கூற வருவதை கற்பனை செய்ய முடியாமல் அவனை முறைத்து பார்த்தாள் இந்திரா.
“இந்த டிரஸ் மட்டுமில்லை. நானும் உனக்கு செட் ஆக மாட்டேன். என் அண்ணனை மிரட்டி என் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வச்சிருக்க. இந்த கல்யாணம் நடக்காது.” இந்திரா சத்தம் செய்ய, அவளை சரேலென்று மரத்தில் சாய்த்தான் பசுபதி.
அவள் வாயை தன் கைகளால் மூடினான்.
“இந்த கத்துற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம்.” என்று அவன் அவளை மிரட்டினான்.
அவன் கைகளை எடுக்க, அவன் நின்ற நெருக்கத்தில் மரத்தை விட்டு அசைய முடியாமல், அதில் சாய்ந்து நின்றாள்.
“என்னை கல்யாணம் பண்ணாம, யாரை கல்யாணம் பண்ண போற? அந்த ரகுநந்தனையா?” என்று அவன் ஒற்றை புருவம் உயர்த்த, “என்ன உன் அம்முக்குட்டி வாழ்க்கையை காப்பாத்துறதா நினைப்பா?” அவனின் அந்த நெருக்கத்திலும் சிறிதும் பயமின்றி கேட்டாள் இந்திரா.
“ம்…. ஜோரா சொல்லிட்ட. எம் பொஞ்சாதி கற்பூரம் மாதிரி புத்திசாலியா இருக்கா. இதுக்கு தான் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று சீட்டியடித்தான் பசுபதி.
“எனக்கு அம்முக்குட்டி வாழ்க்கை முக்கியம். அவ வாழ்க்கையில் நீ தலையிட கூடாது. அதுக்கு தான் இந்த கல்யாணம். இதை, இந்நேரம் பலர் கண்டுபிடிச்சிருப்பாக. எவன் கண்டுபிடிச்சாலும், இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது. புரியுதா?” என்று பசுபதி சற்று தள்ளி நின்று கூறினான்.
“டேய்… இந்த கல்யாணாம் நடக்காது. நான் உனக்கு செட் ஆக மாட்டேன். நான் இப்படி தான் டிரஸ் பண்ணுவேன். என் இஷ்டப்படி தான் இருப்பேன். உன்னால என்ன டா பண்ண முடியும்? அயோக்கிய ராஸ்கல்.” என்று இந்திரா எகிறினாள்.
“யாருடி அயோக்கிய ராஸ்கல்? இப்ப காட்டுறேன் அயோக்கிய ராஸ்கல் அப்படினா என்னனு?” என்று கூறிக்கொண்டு அவளை மரத்தோடு சாய்த்தான்.
மரத்தோடு சாய்த்ததில், அவள் எம்ப, அவள் மஞ்சள் நிற மினி டாப்சும் எம்பி கொண்டு நின்றது.
அவள் இடை, அவன் கைகள் கொடுத்த அழுத்தத்தில் வலியை உணர, அவள் ஏதோ பேச எத்தனிக்க, அவள் இதழ்களை அவன் சிறை செய்தான்.
நொடிகள் நீண்டு கொண்டே, போக இந்திரா அந்த வன்மையான தாக்குதலில் தடுமாற, அவளை விடுவித்தான் அவன்.
விடுவித்த வேகத்தில் மரத்தில் மோதி நின்றாள் இந்திரா.
“இனி மரியாதை இல்லாம பேசாத. நீ சொல்றதை நான் செய்வேன். அப்புறம் இப்படி எல்லாம் டிரஸ் போடாத. நான் யோக்கியன் தான். ஆனால், பொண்டாட்டி கிட்ட எவ்வளவு யோக்கியனா இருப்பேன்னு சொல்ல முடியாது, அங்கங்க தெரிஞ்சா தொடணும்னு தோணும். ஒழுங்கா டிரஸ் போட்டுட்டு வா.” என்று எங்கேயோ பார்த்தபடி அவளை எச்சரித்தான் பசுபதி.
இந்திரா, அவனை சற்று அச்சம் கலந்த கண்களோடு பார்த்தாள்.
மேலும் பசுபதி கூறிய வார்த்தையில், அவனை யோசனையோடு பார்த்தாள் இந்திரா.
பொழுதுகள் விடியும்…