AnthaMaalaiPozhuthil-32

       அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 32

 அன்று காலை, தன் விடியலை கதிரவன் உணர்த்தி கொண்டிருக்க, இந்திராவின் மனதில் ஒரு சந்தேகம்.

   இரண்டு நாளைக்கு முன்னாடி என்னை இவன் கூட்டிட்டு போறேன்னு சொன்னான், கூட்டிட்டு போவானா?’ என்ற சந்தேகத்தோடு மெத்தையில் உருண்டு படுத்தாள்.

   அவள் கண்கள், கீழே நித்திரையில் ஆழ்ந்திருந்த பசுபதியை தழுவியது.

      அவள் மேலே படுப்பதும், அவன் கீழே படுப்பதும் திருமண முடிந்த நாள் முதல் பழக்கமாகிருந்தது.

       பசுபதி முழிக்கும் நேரம். வழக்கமாக அவன் தான் முதலில் எழுவான். அவன் கிளம்பும் சத்தத்தில் தான் இவள் விழித்து கொள்வது.

    இன்று, அவள் மனதில் இருந்த சந்தேகத்தில், மனதோடு, அவள் விழிகளும் விழித்து கொண்டது.

   பசுபதி எழுந்து கொள்ள, இந்திராவின் கண்கள் அவனை ஆர்வத்தோடு நோக்கியது. வீட்ல போர்… இவன் கூட போனா, கொஞ்சம் பொழுது போகும்.

   இன்னைக்கு வரியா என்கூட?” அவன் கேட்க, இந்திரா தலை சம்மதமாக தலை அசைக்க, இருவரும் கிளம்பினர்.

        சேலை எல்லாம் வேண்டாம் தானே? லெகின்ஸ் ஒகே தானே?” அவள் கேட்க, “உன் இஷ்டம்.” என்று தோளை குலுக்கினான் பசுபதி.

   

        ஆத்தா, நாங்க போயிட்டு சாப்பிட வரோம்.” கூறிக்கொண்டு ஜீப்பில் வயல் நோக்கி இந்திராவை அழைத்து கொண்டு கிளம்பினான்.

        பொழுது புலர்ந்தும் புலராத வேளை. காற்று சில்லென்று வீசியது.

      இந்திரா, ரசனையோடு அந்த காற்றை அனுபவிக்க, “இன்னைக்கு முழுக்க வயலில் வேலை இருக்கும். அங்க இங்க அசைய முடியாது. சேறு எல்லாம் பார்க்க முடியாது. நான் சொல்ற மாதிரி நாத்து நடனும். புரியுதா?” அவன் சாலையை பார்த்தபடி மிரட்டும் தொனியில் கேட்டான்.

 ஏய், அதெல்லாம் என்னால முடியாது. நான் வீட்டில், பொழுது போகலைன்னு தான், இங்க வரேன். ஏன், இதெல்லாம் பண்ண, உன் வயலில் ஆள் இல்லையா? உன் பொண்டாட்டி தான் பண்ணனுமா?” என்று இந்திரா, தலை அசைத்து, வேகமாக பொரிந்தாள்.

   பசுபதியின் முகத்தில் கேலி புன்னகை.

   நீ இருக்கும் பொழுது, எதுக்கு வேலைக்கு ஆள். எல்லாரையும் போக சொல்லிட்டேன்.” தன் புன்னகையை மறைத்தப்படி கூறினான் பசுபதி.

   நீ என்ன வேணாலும், பேசிக்கொள். என்னால், எதுவும் முடியாது.என்பது போல் அமர்ந்திருந்தாள் இந்திரா.

    வயல் அருகே ஜீப்பை நிறுத்தி விட்டு அவர்கள் இறங்க, வயலில் ஒரு சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

        வயல் வரப்பில், புதிதாக ஒரு அறை இருந்தது.

       அன்னைக்கு நான் வந்தப்ப, இந்த அறை இல்லையே?’ என்று எண்ணியப்படி அந்த அறையை நோட்டமிட்டாள் இந்திரா.

      பசுபதி, அவளை அறைக்குள் கூட்டி செல்ல, அங்கு ஒரு லேப்டாப்.

    இந்திராவின் கண்களில் மலர்ச்சி.

         பசுபதியை இந்திரா ஆச்சரியமாக பார்க்க, “என்னை என்ன படிக்காத பட்டிகாட்டான்னு நினைச்சியா? இல்லை, இந்த வேஷ்ட்டி கட்டிய பட்டிகாட்டானுக்கு லேப்டாப் பத்தி தெரியாதுன்னு நினைச்சியா?” என்று அவன் நக்கலாக கேட்டான்.

   இல்லை, வயல்ல, வேலை செய்யலாமுன்னு ஆசையா வந்தேன். இப்படி, லேப்டாப் குடுக்கறியேன்னு ஷாக். அவ்வளவு தான்.” அவள் கூற, “சரி, வா! வயல்ல, நம்ம சோலியை பார்ப்போம்.” அவன் எழ முயற்சிக்க, அவன் தோள் தொட்டு அவனை அமர்த்தி, தானும் அமர்ந்து கொண்டாள் இந்திரா.

   நீ, சொன்னா சரியாதான் இருக்கும்.” அவள் சமரசம் பேச, பசுபதி பெருங்குரலில் சிரித்தான்.

   அந்த பயம்…” அவன் கண்களை உருட்ட, இந்திரா அவனை முறைத்து பார்த்தாள்.

    சிறிதும் அச்சமில்லாத கண்கள்.

   வயல்ல விருப்பப்பட்டு வேலை பார்க்கணும். கட்டாயப்படுத்தி இல்லை. பழக்கம் இல்லாதவகளுக்கு, இதெல்லாம் ஒத்து வராது.” அவன் தன் கவனத்தை மடிக்கணினியில் செலுத்தியப்படி கூறினான்.

         நம்ம பலசரக்கு தொழில் விவரம் எல்லாம் இதுல இருக்க.” என்று அருகே அவன் குறித்து வைக்கும் குறிப்பேட்டை நீட்டினான் பசுபதி.

    படிச்சது விவசாயம் நாளும், இதை எல்லாம் நானும் கத்துக்கிட்டேன். ஆனால், எனக்கு இந்த வேலை எல்லாம் தோது படலை. எனக்கு விவசாயம் தான். முன்ன இதெல்லாம், அம்முக்குட்டி பண்ணி கொடுப்பா. நீ, இது சம்பந்தமா படிச்சிருக்க தானே? பண்றியா?” என்று அவன் கேட்க, இந்திரா தலை அசைத்தாலும், அவள் கண்கள் அவனை கூர்மையாக பார்த்தது.

   இந்த ரூம் புதுசா?” என்று அந்த அறையையும், அதில் இருந்த ஏ. சி. யையும் பார்த்தபடி கேட்டாள் இந்திரா.

  பசுபதி தலை அசைக்க, “எனக்காக பண்ணியா?” என்று அவள் புருவம் உயர்த்த, தன் தலையை மேலும் கீழும் அசைக்க எத்தனித்து, மறுப்பாக தலை அசைத்து, “இந்த லேப்டப்க்காக பண்ணேன்.” என்று குறுஞ் சிரிப்போடு கூறி, மீசையை நீவிக்கொண்டு வெளியே சென்றான் பசுபதி.

    வெளியே சென்ற தன் கணவனை, புன்னகையோடு பார்த்தாள் இந்திரா.

       என்ன உணர்வென்று, அவளுக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால், அவளுக்கு சுகமாக இருந்தது. அவனுக்கும் தான்!

    இந்திரா, வேலையை தொடர்ந்தாள். பசுபதியின், பலசரக்கு வியாபாரம் பற்றிய கணக்கு. சில, பொருட்கள், இவர்கள் வயலிலிருந்து செல்கிறது. சில பொருட்களை, இவன் கை மாத்தி விடுகிறான்.

    அபிநயாவை, இந்திராவுக்கு பிடிக்காது என்றாலும், யாரும் எதுவும் சொல்ல தேவையிராத வகையாக, அபிநயா வேலை  செய்திருந்த நேர்த்தியை இந்திரா பாராட்டத்தான் வேண்டியதிருந்தது.

           இந்திரா, வேலையை முடித்து அறையிலிருந்து வெளியே வந்து சற்று காற்றாட நடந்தாள்.

    அவள் வெளியே சென்றதும், உள்ளே வந்த பசுபதி, இந்திரா செய்த வேலையை பார்த்தான்.

   வேலையில் கெட்டிகாரி தான்.அவன் மனம் மெச்சிக் கொண்டது.

   குணமும் மோசம் எல்லாம் இல்லை. அண்ணன், மேல பாசமா இருக்கா. ஆத்தா, கிட்ட எந்த வம்பும் வளர்க்கறதில்லை. ஆனால், அப்பப்ப கிறுக்கு பிடிச்சிரும்.என்று எண்ணியபடி சிரித்துக் கொண்டான் பசுபதி.

   இந்திரா, அப்படியே வரப்பின் ஓரமாக நடந்து கொண்டே, ஆள் அரவம் இல்லாத இடத்திற்கு சென்று விட்டாள்.

    அவளுள், சில கேள்விகள். நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்? இந்த கிராமம் தான் என் வாழ்க்கையா?’

   ம்… ச்…” அவள் குரலில் ஒரு சலிப்பு.

   பசுபதி… நல்லவன் தான். ஆனால், என் அண்ணனை மிரட்டி இருக்கான். என்னை கட்டாயப்படுத்தி, கல்யாணம் பண்ணிருக்கான்.அவளுள் குழப்பம்.

    இந்திரா சற்று நேரம் காணமால் போக, பசுபதியின் புருவம் வளைந்தது.

   நல்லா கூட விடியலையே? அத்தனை ஜன நடமாட்டம் இல்லை, இவ எங்கிட்டு போனா?” வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவன் சிந்தித்தபடியே அவளை  தேட, “அண்ணாச்சி… அம்மா, இங்கிட்டு போனாக.” அவர்கள் கூற, பசுபதி வேகவேகமாக அவர்கள் காட்டிய திசையில் நடந்தான்.

     அங்கு, இந்திரா இருக்க, “அறிவில்லை. யாரும் இல்லாத வேளையில் இங்கேயா வருவ?” அவன் தன் நாசியை தடவியபடி, அவள் அருகே வர, அவள் முகம் அசௌகரியத்தை வெளிப்படுத்தியது.

   இந்திரா” அவன் கணித்து விட்டான், அந்த அரவத்தின் வாடை அவன் வரும் பொழுதே அதன் இருப்பை கூறிவிட, “எங்க?” என்று அவன் கேட்க, அவள் கால்களை நீட்டினாள்.

       அவள் பாதத்தை கைகளில் ஏந்த, அவள் சங்கோஜத்தோடு உறுவிக்கொள்ள முயல, “இந்திரா…” அவன் குரல் கர்ஜித்தது.

   காலை கீழே வைக்க முடியாமல் அவள் தடுமாற, அவளை அலேக்காக தூக்கி சென்று வேகமாக அங்கிருந்த கல் மீது அவளை அமர வைத்தான் பசுபதி.

       அவள் அணிந்திருந்த லெக்கின்ஸை மேலே மடக்கி விட்டு, அவள் பாதத்தை கைகளில் ஏந்தி, தன் மடியில் வைத்தான் பசுபதி.

    அவள் கணுக்காலில், பாம்பின் தடம்  நடந்ததை தெளிவாக கூறியது.

       தன் சட்டை பையிலிருந்த சிறு கத்தியை எடுத்து, சரேலென்று அவன் கீற, “ஸ்…” என்று சத்தத்தோடு, அவன் தோள்களை அழுத்தினாள் இந்திரா.

     அவள் வலியை அவனுக்கு கொடுப்பது போல.

       அவன்  நஞ்சை நீக்கிவிட்டு, தன் மேல் கிடந்த துண்டை அவள் காலில் கட்டினான்.

       இந்திரா, அம்மா என்றும் அழவில்லை. அண்ணன் என்றும் அழைக்கவில்லை.

 அவள் கண்களில் நீரும் கொருக்கவில்லை. ஓர் அமைதி மட்டுமே. வலியை, உள்ளே அமர்த்திய அழுத்தம்.

    அதன் பின், அவளை தூக்க, “நான் நடந்திருவேன்.” அவள் கூற, அவன் அவள் பேச்சை கண்டு கொள்ளவில்லை.

   ஜீப்பில் அமர வைத்து, மருத்துவமனைக்கு சென்றான். எந்த ஆபத்துமில்லை.என்று மருத்துவர் கூறிய பின்னரே, பசுபதியின் கண்களில் பதட்டம் குறைந்தது.

        அங்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தான். வடிவம்மாள், முகத்திலும் கவலை இருந்தது. ஆனால், அவர் வெளி காட்டிக் கொள்ளவில்லை.

   இந்திரா அவர்கள் அறையில் மெத்தையில் அமர்ந்திந்தாள்.  “பாம்பு கடிச்சி சாகறவனை விட, பயத்துல சாகுறவேந்தேன் அதிகம். ஒன்னும் பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாகிரும். விஷப்பாம்பா எல்லாம் இருக்காது.” மெட்டு விடாமல் கூறி வெளியே சென்றவர், தன் மகனை கண்களால் அழைத்தார்.

   பட்டணத்து பிள்ளை. ரொம்ப பயப்படும் இதுக்கெல்லாம். கூட இருந்து பார்த்துக்கோ.” அவர் கூற, பசுபதி தலை அசைத்தான்.

    இவர்கள் பேச்சை கேட்ட , இந்திரா முகத்தில் மெல்லிய புன்னகை.

         பசுபதி உள்ளே நுழைய, இந்திரா அவனை பார்த்து புன்னகைத்தாள்.

   வேலை செய்ய மாட்டேன்னு நேரா சொல்ல வேண்டியது தானே? அதுக்காக இப்படி எல்லாம் பண்ணுவியா?” அவன் நக்கல் போல் பேசி சூழ்நிலையை சமாளித்தான்.

 கிராமத்தான், பாம்பு கடிச்சதுக்கு இப்படி பயப்படுற?” அவள் நக்கல் பேசினாள்.

   எனக்குனா, பயந்திருக்க மாட்டேன். உனக்கு, இதெல்லாம் புதுசில்ல?” அவன் தடுமாற, “என் மேல உனக்கு பாசம்.” அவள் உதட்டை மடித்து மீண்டும் நக்கல் பேசினாள்.

       அதெல்லாம் இல்லை. என் பொஞ்சாதின்னு பொறுப்பு.” அவன் புன்னகைத்து கொண்டே, மெத்தைக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர எத்தனிக்க, அவன் கைகளை பிடித்து, அவள் அருகே அமரும் படி செய்கை காட்டினாள் இந்திரா.

   ஒரு நொடி சிந்தித்து, அவள் அருகே அமர்ந்தவன், “என்ன, பயந்துட்டியா?” என்று இப்பொழுது பசுபதி நக்கல் பேசினான்.

            இந்திரா மறுப்பாக தலை அசைத்து, “எனக்குன்னு யாருமே இல்லாதப்ப கூட, எனக்கு எதுவும் ஆகலை. இப்ப எனக்காக நீ இருக்கிறப்ப, எனக்கு என்னவாகிற போகுது. நான் கொஞ்சம் கூட பயப்படலை.” அவன் கண்களை பார்த்தபடி ஆழமாக கூறினாள் இந்திரா.

     இன்று நடந்த சம்பவத்தில், இவள் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள்.என்று யோசித்தவனாக, “என் மேல என்ன திடீர் பாசம்?” அவன் கேலி போலவே வினவ, “பாசம் இல்லை நம்பிக்கை.” என்று அவள் புன்னகைத்தாள்.

   நான் அத்தனை நல்லவன் இல்லை. நம்பிக்கை வச்சவங்களுக்கு கூட துரோகம் பண்ணவன் நான்.” அவன் அவளை பார்த்தப்படி அழுத்தமாக கூறினான்.

       நீ, அப்படி பெரிய தப்பு பண்ணிருக்கமாட்ட. நிச்சயம் மன்னிக்க கூடிய தப்பை தான் பண்ணிருப்ப.” அவள் கறாராக கூற, ‘அத்தான், செய்த தப்பை என்னால், மன்னிக்க முடியும். ஆனால், மறக்க முடியாது.என்று அம்முக்குட்டி கதறியது நினைவு வர, பசுபதி தன் கண்களை இறுக மூடினான்.

                அந்த மாலை பொழுதில், அவன் செய்த தவறை எண்ணி வருந்தினான் அவன்.

                 உன் கணிப்பு சரியா தான் இருக்குமுன்னு என்ன நிச்சயம்?” அவன் கேட்க, “நான் தவறிய விஷயம் ஒண்ணே ஒன்னு தான்.” அவளும் அந்த மாலை பொழுதின் தவறை எண்ணி இன்று வருந்தினாள்.

     தவறை செய்திட சில நொடி பொழுதுகள் போதும். ஆனால், நிவர்த்தி? அதனால், ஏற்பட்ட அவமானம், வலி இதை எல்லாம் கடக்க, காலம் விதிக்கும் அவகாசம் என்ன?’ கணவன் மனைவி இருவரும் ஒரு சேர ஒரே மாலை பொழுதில் அவர்கள் செய்த தவறை எண்ணி வருந்தினர்.

    இந்திரா முதலில், தன்னை மீட்டுக் கொண்டாள்.

   இப்பொழுது, இந்திரா அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள். அவள் பிடிமானத்தில், பசுபதி நிகழ் காலத்திற்கு திரும்பினான்.

          இந்திரா, சட்டையை பிடித்து கொண்டு அவள் கேட்ட கேள்வியில், அவன் முகம் வேதனையை வெளிப்படுத்தியது.

     அவன் வேதனைக்கு சிறிதும், குறைவில்லா வேதனையை, தன் மனைவியின் முகமும் வெளிப்படுத்த, பதில் கூற முடியாமல் தவித்தான் அவன்.

பொழுதுகள் விடியும்…