AnthaMaalaiPozhuthil-36

AnthaMaalaiPozhuthil-36

அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 36

அழகான மாலைப் பொழுது!

                சூரிய பகவான் காலையிலிருந்து அரங்கேறிய பல நடைமுறைகளைப் பார்த்துவிட்டு அஸ்தமித்துக் கொண்டிருந்தார். பல அநியாயங்கள் நடந்தேறினாலும், காதல் என்ற பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கும் கூத்தை மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

           சில காதல் கண்ணியமாக இருந்தன. சில காதலின் ஆழத்தில் மயங்கினார். சில காதலைப் பார்த்து சூரிய பகவானும் மெல்லிய வெட்கத்தோடு ரசித்துச் சிரித்துக் கொண்டார்.

     ஆனால், எல்லா காதலும் நியாயம் செய்கிறதா? ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிநிகராகக் காதல் அன்பை மட்டும்தான் பொழிகிறதா? பதிலறியா கேள்வியோடு, அவர் உலகின் மறுபக்கத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்.

             அவர் பயணத்தை உணர்த்தும் விதமாக வானம் செவ்வானமாக மாறிக் கொண்டிருந்தது. 

       ஆம், அந்த மாலைப் பொழுதில் தான்!

 காதல் என்ற பெயரில் பலரின் வாழ்க்கையைச் சூறையாடக் காத்திருக்கும் அதே மாலைப்பொழுது தான்!

          முறுக்கு மீசையை நீவியபடி, வலிமையான கரங்களால் ஸ்டியரிங்கை அவன் அடக்குமுறைக்குள் கொண்டுவந்து இருபுறமும் அவனுக்குச் சொந்தமான நிலபுலன்களை பார்வையிட்டபடி ஜீப்பை ஒட்டிக் கொண்டிருந்தான் பசுபதி.

 

அந்த ஜீப், அவன் அடக்குமுறையில் அடங்கி அவன் சொற்படி ஓடிக்கொண்டிருந்தது. அனைத்தையும் அடக்குவதில் வல்லவன் இந்த பசுபதி.

    அந்த பசுபதி அடங்கும் இடமும் ஒன்று உண்டு. அவள் தான் அபிநயா.

அவன் பார்வையோ, அவன் கழனியின் மீதிருந்தது.

                      “சல… சல…” என்ற நீரின் சத்தத்திலும், அங்கிருந்த பசுமையிலும் தன் இடத்தின் செழுமையில் அவன் முகம் சற்று கர்வம் கொண்டது.

               அதே நேரம், அவன் மனம் தன் தந்தையையும் நினைத்துப் பார்த்தது.

                          ‘இவ்வளவு, சொத்தும் பணமும் இருக்கு. இழந்து போன சொத்தையும் பணத்தையும் எண்ணி, அப்பா இவ்வளவு வருத்தம் கொண்டிருக்க வேண்டாம். ஆத்தா, சொல்றது போல மாமா இதைத் தடுத்திருக்கக் கூடாதா?’ அவன் சிந்தனை, தந்தையிடம் ஆரம்பித்து, அவன் மாமனிடம் சினமாக வந்து நின்றது.

பசுபதி, சற்று குழப்ப நிலையிலிருந்தான்.

தான் செய்யப் போகும் செயல் சரியா?’ என்ற கேள்வி, அவன் மனதில் சந்தேகத்தோடு நின்றது.

             அத்தோடு, ஆத்தாவின் சொல்லும் கூடவே அவன் காதில் ஒலித்தது.

                 ‘எலே பசுபதி… நம்ம பொறுமை நாசமாத்தாலே போவும். பொறுத்தார் பூமி ஆள்வார் எல்லாம் கிடையாதுலே. பொறுத்தார் மண்ணுக்குள் புதைந்தது தான்லே சரித்திரம். உன் மாமன்காரன் சரிப்பட்டு வரமாட்டான். நான் சொன்னபடி செய்லே. நாளையோட எல்லாஞ் சுவமா நடக்கும்.‘  ஆத்தா கூறியது அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

      ‘ஆத்தா சொல்றது சரிதானோ? பொறுமையான சீதை மண்ணுக்குள் புதைந்தது தானே சரித்திரம்?’ சரித்திரத்தை தனக்குச் சாதகமாக யோசித்துக் கொண்டிருந்தான் பசுபதி.

              மீண்டும் ஆத்தாவின் சொற்கள் அவன் எண்ண ஒட்டத்தில்!

   ‘உங்க மாமனுக்கு நம்ம குடும்பத்து மேல அக்கறையே கிடையாது. அம்முகுட்டி, மனசு முழுக்க நீத்தேன் இருக்க. அவளுக்கு, உன்னை கட்டிக்கறதில் அத்தனை இஷ்டம். உங்க மாமன்தேன் கௌரவம் பார்த்துட்டு இதுக்கு இடைஞ்சல் பண்ணிகிட்டு இருக்கான்.’ வடிவம்மாள், நிலவரத்தை எடுத்துக் கூறி இருந்தார்.

     ‘உன் அம்முகுட்டி, தான் விவரம் இல்லாம, நியாயம் நேர்மைன்னு அவ அப்பன் சொல் கேட்டு, ஆடுதா. அவளை வேற யாருக்கோ கட்டி கொடுத்துட்டா, அவ சந்தோஷமா இருக்கா மாட்டாலே. அவ, வாழ்க்கை நாசமா போனா, அதுக்கு நீயும்தேன் காரணம்.’ ஆத்தாவின் இந்த சொற்கள், அவனை அசைத்துப் பார்த்திருந்தது.

 

     ‘தூக்கியாலே, எம் மருமவளை. நாளாக்கி, அவ நம்ம வீட்டு மஹா லக்ஷ்மி.’ வடிவம்மாள் கூறியது மட்டுமில்லமால், தன் மகனிடம் வாக்கும் பெற்றிருந்தார்.

      ‘எங்கு அவர் திட்டமிட்டபடி நாளை திருமணம் நடக்காதோ? நேர்மை, கருமை என்று பசுபதி மாறிவிட்டால்?’ என்ற ஐயம் அவருள்.

   ‘ஆத்தா, சொல்வதுதேன் சரி. அம்முகுட்டிக்காக நான் இதை செய்துதேன் ஆகனும்.’ பசுபதி முடிவெடுத்துவிட்டான்.

 

     ஜீப்பில் வேகம் எல்லாம் இல்லை. வேகத்திற்கு இன்னும் அவசியம் வரவில்லை என்ற எண்ணம் அவனின் செய்கையில் தெரிந்தது. நிதானமாகவே வண்டியைச் செலுத்தினான்.

    அபிநயா, இன்று தோழிகளோடு அவள் தோழியின் திருமணத்திற்குச் சென்றிருப்பது அவனுக்குத் தெரியும்.

 அவள் வரும் நேரமும் வழியும் அறிந்தவன் அவள் வரும் இடம் நோக்கி, தன் வண்டியை, மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.

           எதிரில் சைக்கிளில்  வந்தவன். “அண்ணாச்சி வணக்கம்.” என்று கை குவித்துக் கும்பிட்டான்.

         “எலே மாடசாமி… என்னவே? என்னை பாத்ததும், அப்புடியே பம்முதே? ஆத்தா கிட்டே மருவாதை இல்லாம பேசிருக்க?” என்று கேட்க, “ஆத்தா வார்த்தையை விடுதாக.” என்று அவன் கூறினான்.

    “ஆத்தாவை குத்தம் சொல்லுத?” வண்டியை நடுசாலையில் நிறுத்திவிட்டு, அருகே இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு அவன் மீது பாய்ந்தான் பசுபதி.

                எதிரில் இருந்தவன், ‘இது போல் பல அரிவாளைப் பார்த்தவன்.என்ற தெனாவட்டு அவன் முகத்திலிருந்தாலும், பசுபதி வந்த வேகத்தில், சற்று அசந்து தான் போனான்.

    “என்னலே? வீட்டுக்காரி, புள்ளைக் குட்டி நினைப்பு இருக்கா? இல்லையா? இது முதல் முறைன்னுதென், அரிவாளைக் கழுத்து கிட்ட கொண்ணாந்து நிறுத்திப்புட்டேன் பாத்துக்கோ. இல்லைனா வகுந்திருப்பேன். வாங்கின, காசை கொடுக்க துப்பில்லை. கடனும், வட்டியும் சேர்ந்து கிட்டே போகுது. புள்ள குட்டிக்காரன் பொழச்சி போகட்டும்முனு விட்டா… நீ அறுவடை முடிஞ்சி இன்னும் காசு கொடுக்கலை. கேட்டா எதிர்த்து பேசிருக்க.” என்று கூறி அவனைக் கொத்தாக பிடித்து அவன் கழுத்தில் அரிவாளை இன்னும் நெருக்கினான்.

 

    “உன்னை பார்த்த இடத்துல, வகுந்து போடத்தேன் சொல்லுச்சு ஆத்தா. நாந்தேன் உன்னை பாவம் பார்த்து விட்டா என்கிட்டவே எகிருத?” என்று அரிவாளை அவன் கழுத்தில் இன்னும் நெருக்கிக்  கொண்டே பேசினான் பசுபதி.

      அவன் பிடித்திருந்த இடத்தில் மெல்ல, மெல்ல ரத்தம் வடிய ஆரம்பித்தது.

     ரத்தத்தில் ஏற்பட்ட பிசுபிசுப்பில், மாடசாமிக்குச் சற்று பயம் வந்தது. ரத்தத்தோடு, வியர்வை துளியும் விழுந்தது. “பசுபதினா அச்சப்படணும். இந்த அச்சம் எப்பவும் இருக்கணும். என்கிட்டயேவா?” என்று மீசையை முறுக்கினான் பசுபதி.

    பசுபதியின் நரம்புகள் புடைத்தது. அவன் உடலில் வியர்வை துளிகள். உழைப்பில், முறுக்கேறிய  உடல் என்று அவன் துடிப்பு ஒன்றொன்றும் கூறியது.

      “காசு… ஆத்தா சொன்னபடி நாளைக்கி விடிஞ்சதும் வந்திருக்கணும்.” என்று பசுபதி கூற, அவன் சம்மதமாகத் தலை அசைத்து சைக்கிளைத் திருப்பினான்.

    “எலே நில்லு!” வண்டியிலிருந்த நுங்கை எடுத்து நீட்டினான். “உம் பயலுக்கு நுங்கு பிடிக்கும். கொடுத்திரு…” என்று கொத்தாக நுங்கை அவன் சைக்கிளில் வைத்து, கட்டினான் பசுபதி.

 ‘இவனை என்னவென்று சொல்வது? இந்த நுங்கு இலவசம். இதைக் காசில் கழிக்க மாட்டாக. இது என்ன கணக்கோ?’ என்று புரியாமல் பசுபதியைப் பார்த்தான் மாடசாமி.

     மாடசாமி, சைக்கிளில் வேகம் எடுக்க, “அந்தானைக்கு ஓடாத… காயம் சிறுசுதேன். காபி தூளை வச்சி கட்டினா சுவமாயிடும்.” பெருங்குரலில் கூறி சிரித்தான் பசுபதி.

    அந்த சிரிப்பு, அங்கிருந்த மரங்கள், வயல், நீர் என அனைத்து இடத்திலும் எதிரொலித்தது.

    அவனைப் பார்த்தபடி அங்கு நின்று கொண்டிருந்தாள் இளம்பெண்.

      “அம்முக்குட்டி…” அவளைப் பார்த்து கண்களை விரித்தான் பசுபதி. அவன் கண்கள் அன்பு மொழி பேசியது.

தன் வேஷ்டியை மடித்துக் கட்டினான்.

   “அத்தான் என்னை அப்படி கூப்பிடாதீக!” என்று கோபமாகக் கூறினாள் அவள்.

        “ஏன்? இந்த அத்தான் மேல என்ன கோபம்?” என்று பசுபதி புருவம் உயர்த்தி, வெண்பற்கள் தெரியக் கம்பீரமாகச் சிரித்தான்.

             “பாசமா நுங்கை கொடுத்துட்டு காசுக்கு அரிவாள் வீசுதீக?” என்று அவள் சிலுப்பிக்கொள்ள, “வியாபாரத்தில் தர்மம் பார்க்க முடியாது. தர்மத்தில் காசு பாக்க முடியாது அம்முக்குட்டி.” என்றான் பசுபதி.

    “அம்முகுட்டின்னு கூப்பிடாதீக. நான் என்ன சின்ன புள்ளையா? பாக்குறவ என்ன நினைப்பாக?” அவள் கேட்க, “பாக்குறவைகள, அவுக சோலியைப் பாக்க சொல்லு. நீ பிறந்ததிலிருந்து, நான் உன்னை அப்படிதேன் கூப்பிடுதேன். என் மனசுக்கு பிடிச்ச மாதிரி தான் நான் உன்னைக் கூப்பிடுவேன். அதை யாராலும், மாத்த முடியாது.” என்று அவன் உரிமை கொண்டாடினான்.

       “இந்த அத்தானை இப்பவே கட்டிக்க. அம்முக்குட்டி வேண்டாம் இன்னும் நெருக்கமா  வேற பேரு சொல்லி கூப்பிடுதேன்.” அவள் காதோரமாக கிசுகிசுத்து, அவன் கண்சிமிட்ட, அவள் முகம் செவ்வானமாகச் சிவந்தது.

       “அதுக்கு அப்பா சம்மதிக்கணுமே.” அவள் சிரிக்க, “உங்க அப்பன் சம்மதம் என்னக்கெதுக்கு? அது உனக்குத்தேன். இப்ப வண்டியில் ஏறு.” என்று கூறினான் பசுபதி.

  “ஐயோ… அத்தான் நான் உங்க கூட வரலை. நான், உங்க கூட வந்தா. அப்பா வைவாக.”

நீங்க கிளம்புங்க. நான் என் பிரெண்ட்ஸ் கூடவே வரேன்.” என்று மறுப்பு தெரிவித்தாள் அவள். 

  “மத்தவிகல்லாம் எங்கன இருக்காக?” என்று பசுபதி கண்களைச் சுழல விட்டபடி வினவினான்.

இங்கனக்குள்ள தான் இருப்பாக. என்னோட தான் வந்தாக. நீங்க வீசின அரிவாள் வேகத்துல பயந்துகிட்டு அங்கனயே மறைஞ்சி நின்னுக்கிட்டாக.” என்று அவள் கூறினாள்.

 ‘அதுவும் நல்லது தான். சாட்சி வேணும். ஆனால், தொந்திரவு இருக்கக் கூடாது.என்று எண்ணிக்கொண்டான் பசுபதி.

    “சரி, அவிக வரட்டும். அம்முக்குட்டி! நான் உன்னைப் பார்க்கத்தேன் வந்திட்டு இருந்தேன். நீ சத்த நேரம் கழிச்சி பைய வருவேன்னு நினச்சேன். நீ விரைவா வந்துட்ட…”என்று பாதி விஷயத்தை மட்டுமே சொன்னான் பசுபதி.

      “ஏன்? திடீருன்னு. அத்தானுக்கு அம்முக்குட்டி மேல இம்புட்டு  பாசம்?” என்று கறாராகக் கேட்டாள் அவள்.

            அவள் பேசிக்கொண்டே இருக்கையில், சரேலென்று அவளை அலேக்காக தூக்கி வண்டிக்குள் போட்டு ஜீப்பை வேகமாகக் கிளப்பினான் பசுபதி.

   “அத்தான்…. எல்லாரும் பார்க்காறாக. என்ன காரியம் பண்ணுதீக?” என்று துள்ள முயன்று தோற்றுக்கொண்டே அவள் கேட்க, “எல்லாரும் பார்க்குறாகளா? அதுதேன் எனக்கு வேணும். ராமசாமி பொண்ணை பசுபதி தூக்கிட்டான்னு ஊரு பேசணும். என் உரிமையை நான் சொந்தம் கொண்டாடுறேன்னு ஊருக்கே  தெரியட்டும். நான், உன்னை கடத்திட்டு போறேன்.” என்று சாவதீனமாக சிரித்துக்கொண்டே கூறினான் பசுபதி.

 அவன் சிரிப்பில், ஜீப் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள் அபிநயா.

 பசுபதி, அவ்வப்பொழுது விளையாட்டாகக் கூறுவது தான்.

           “ம்… க்கும்… விளையாடாதீக அத்தான்.” என்று அவள் அசட்டையாகக்  கூற,    “ஓய்… அம்முக்குட்டி விளையாடலை. நாளைக்கு நமக்குக் கலியாணம்.” பசுபதி உறுதியாகக் கூறினான்.

இந்த பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லை. எங்க அப்பாவைப் பேசி சரிக்கட்ட முடியலை.” என்று தலையைச் சிலுப்பினாள் அவள்.

    “பேசபோய்த்தேன் சரிக்கட்ட முடியலை. என் அரிவாளை வீசிருந்தா, எப்பவோ சோலி முடிஞ்சிருக்கும்.” என்று கூறினான் பசுபதி.

   “வீசுவீக… வீசுவீக… எங்க அப்பா கை என்ன பூவா பறிக்கும். அவுகளும் வீசுவாக அரிவாளை. இல்லை, எங்க அப்பாவுக்காக, இந்த அபிநயாவும் அரிவாளை வீசுவா. இந்த  அபிநயா, நீங்க நல்ல அத்தானை இருக்கிற வரைக்கும்தேன் அம்முக்குட்டி. இல்லைனா, நடக்கிறதே வேற…” என்று விளையாட்டு போலவே பசுபதியை மிரட்டி தன் மனதை வெளியிட்டாள் அபிநயா.

      மீசையை முறுக்கிக் கொண்டிருந்த பசுபதி இப்பொழுது இல்லை.

அந்த மீசைக்குக் கீழ் உள்ள அவன் அதரங்கள் புன்னகையில் மடிந்தது.

     “இந்த அம்முக்குட்டி அரிவாள் வீசி, நான் சாவணுமுன்னு இருந்தா சாவுதேன் புள்ளை! அந்த மரணம் கூட, அத்தானுக்கு சுவந்தான்.” அவன் நெஞ்சை நீவிக் கொண்டே உணர்ந்து கூறினான்.

   “அத்தான்…” அவள் பதட்டமாக அவனைப் பார்த்தான். அவள் கண்களில் பாசம் கொட்டிக்கிடந்தது

   “இந்த அத்தானுக்கு உன் மேல் காதல் மட்டுமில்லை. அன்பு, அக்கறை எல்லாம் இருக்கு. உங்க அப்பன் பிடிவாதத்துக்கு, நாம ஏன்ல கஷ்டப்படணும்? உங்க அப்பன் சம்மதிச்சிருந்தா, இந்நேரம் ஆத்தா மடியில நம்ம புள்ள தவழ்ந்திருக்கும்.” அவன் கூற, அவள் மௌனித்தாள்.

       “என்னை மன்னிச்சிரு அம்முகுட்டி. இன்னைக்கு நீ என் கூட தான் இருக்க போற.” பசுபதி ஆழமான குரலில் கூற, “ஆத்தா சொல்லுச்சா என்னை தூக்க சொல்லி?” சிறிதும் அசராமல் அவள் கேட்க, பசுபதி பதில் பேசவில்லை.

    “ஆத்தாக்கு அறிவில்லை.” முணுமுணுத்தாள் அபிநயா.

     “சொத்துக்காக தான் நீங்க என்னை கல்யாணம் பண்ண நினைக்கிறீகன்னு அப்பா சொல்றது சரியாகிரும் அத்தான். வேணாம்!  இப்படி பண்ணாதீக.” அபிநயா பொறுமையாகக் கூறினாள்.

                       “உங்க அப்பனுக்கு அதைப் புரிய வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.” அவன் கூறிக்கொண்டு வண்டியை வேகமாகச் செலுத்தினான்.

    “அப்பா… சொல்றது நிசம்தென். என்னை யாரோ கல்யாணம் பண்ணிக்கிட்டா, எங்க சொத்து யார் கைக்கோ போய்டும். நீங்க என்னை கல்யாணம் கட்டிக்கிட்டிகனா, மொத்த ஊருக்கும் நீங்க ராசாவாயிடலாமுன்னு ஆத்தாவுக்கு  நினைப்பு.” அவள் கூற, “ஆத்தா சொல்றதில் என்ன தப்பு?” என்று கேட்டான் பசுபதி.

      “அத்தான், நீங்களும் அதைத்தேன் நினைகுறீகளா?” அபிநயா சற்று கடுப்பாகக் கேட்டாள்.

        பசுபதி பெருங்குரலில் சிரித்தான். அவர்கள், ஜீப் மாடசாமியைக் கடந்து சென்றது.

மாடசாமியின் கண்கள் இவர்களை குறுகுறுவென்று பார்த்தது.

   அபிநயா அவளை முறைக்க, “இந்த அத்தானுக்கு அம்முக்குட்டியை எம்புட்டு பிடிக்குமுன்னு உனக்கு தெரியும்? கல்யாணம் எதுக்காக நடந்தா என்ன? அம்முக்குட்டி என் கூட சந்தோசமா மட்டுந்தென் இருப்பா.” பசுபதி உறுதியாகக் கூறினான்.

      “எங்க அப்பா சம்மதம் இல்லாம, இந்த கலியாணம் நடக்காது.” அபிநயா உறுதியாகக் கூறினாள்.

   “உங்க அப்பா சம்மதம் நாளைக்கி கிடைக்கும். ஊரு கிடைக்க வைக்கும். நீ இன்னைக்கே என் பொஞ்சாதி ஆகிரு.” அவன் கூற, “அத்தான்…” என்று அலறினாள் அவள்.

பசுபதியின் ஜீப் ஊரிலிருந்து சற்று வெளியே வந்திருந்தது.

    வேகமாகச் சென்று கொண்டிருந்த ஜீப்பிலிருந்து அவள் குதிக்க எத்தனிக்க, “அம்முக்குட்டி…” அலறிக்கொண்டு  அவன் வண்டியை சரேலென்று திருப்பினான்.

அப்பொழுது எதிரே வந்த கார் மீது மோத எத்தனித்து படக்கென்று  ஜீப்பை  நிறுத்தினான் பசுபதி.

                  வண்டியை ஒரு பெண் ஓட்டிக் கொண்டிருந்தாள்.

 அவள் பக்கத்தில் ஒருவன் குடி போதையில்!

   அந்த பெண்ணின் முகத்தில் ஒரு கலவரம்.  அவள், பசுபதியைத் திட்ட, பசுபதி, அவளை மீண்டும் திட்டினான். அங்கு ஒரு குட்டி கலவரம் அரங்கேறிக் கொண்டிருந்தது.

         காரை செலுத்தியதும், பதட்டத்தில் கோபத்தில் பசுபதியைத் திட்டிக்கொண்டு இருப்பதும் இந்திரா. குடிபோதையில் இருப்பது ரகுநந்தன்.

        அன்றைய சூழலில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமும் இல்லை.

 ஒவ்வொருவரும், மற்றவர்களை இன்று நினைவுகூர்வார்களா?’ என்பதும் கேள்விக்குறி தான்.

     இந்திரா அவள் செயலை நிறைவேற்ற வேகம் காட்ட, பசுபதியும் அவன் செய்ய வேண்டிய வேலையை மனதில் கொண்டு சண்டையை விடுத்து வேகமாகத் திரும்ப, அபிநயா எதிர் பக்கமாக நடந்து கொண்டிருக்க பசுபதி அவளை நோக்கி நடந்தான்.

               ‘விட்டது தொல்லை.’ என்று இந்திரா, வண்டியை வேகமாகக் கிளப்பிச் சென்றாள்.

      அந்த சாலையில், அபிநயாவையும், பசுபதியும் தவிர வேறு யாருமில்லை.

           “அம்முகுட்டி வண்டியில் ஏறு.” அவன் அதிகாரமாகக் கூற, “முடியாது அத்தான். உங்களுக்கு என் மேல பாசமில்லை. இருந்தா, இப்படி செய்ய மாட்டீக. எங்க அப்பா…” அவள் பிடிவாதமாகப் பேச, அவள் கன்னத்தில் பசுபதியின் கைகள் இறங்கியது.

          ‘ஆத்தவுக்கு நான் வாக்கு கொடுத்திருக்கேன்.’ அவன் மனம் கடுகடுத்தது.

      “எப்ப பாரு எங்க அப்பா எங்க அப்பான்னு….” பசுபதி சிடுசிடுத்தான்.

     அவன் ஆத்தாவின் வாக்குக்கு முன் அபிநயாவின் வார்த்தைகள் தோற்றுவிட்டன.

              சிறுவயதில், தன்னை கொஞ்சும் பசுபதி, பருவ வயதில்  தன்னை பாதுகாக்கும் பசுபதி, தன்னை தாங்கும் பசுபதி, அன்பை மட்டுமே பொழியும் பசுபதி அபிநயாவின் மனதிலிருந்து சற்று விலகி விட்டான்.

       அவள் முன் அவளை அறைந்த பசுபதி மட்டுமே நின்று கொண்டிருந்தான்.

                “வண்டியில் ஏறு.” பசுபதியின் குரல் கர்ஜித்து.

 அவன் அறைந்ததில் அவளிடம் அதிர்ச்சி.  அவள் எதுவும் பேசவில்லை.

       ‘என்னை மீறி இவுகளால என்ன பண்ணிட முடியும?’ அவளுள் பிடிவாதம் அமர்ந்து கொள்ள, எதுவும்  பேசாமல் பசுபதியோடு ஜீப்பில் ஏறினாள் அபிநயா.

  ஆள் அரவமற்ற அந்த இடத்தில், வேறு வழி இல்லை என்பதும் ஒரு காரணம்.

        ‘அம்முகுட்டி கோபப்படுவா… கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பா… ஆனால் புரிஞ்சிப்பா…’ எண்ணியபடி வண்டியை யாரும் இல்லாத தன் நண்பனின் பண்ணை வீட்டை நோக்கி செலுத்தினான்.

              ‘பேசி சரி பண்ணிவிடலாம்…’ என்று அவன் எண்ண, ‘தான் நினைத்தை சாதித்து விடலாம்.’ என்று இவள் எண்ண இயற்கை இருவரின் எண்ணத்தையும் பொய்ப்பித்து விட்டது.

 பொழுதுகள் விடியும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!