AnthaMaalaiPozhuthil-37

AnthaMaalaiPozhuthil-37

அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 37

   பசுபதி அபிநயா இருவருக்குள்ளும்  எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. பசுபதி வேகமாக வண்டியை செலுத்தி பண்ணை வீட்டிற்குள் சென்று ஒரு மரத்தின் கீழ் நிறுதினான்.

     “அம்முக்குட்டி இறங்கு. நாம, இன்னைக்கு இங்க தான் இருக்க போறோம்.” அவன் கூற, “நான் இறங்க மாட்டேன் அத்தான்.” என்று பிடிவாதமாகக் கூறினாள் அபிநயா.

          “அம்முக்குட்டி, இது என்ன பிடிவாதம்?” அவன் கேட்க, “ஏன் என் பிடிவாதத்தைப் பத்தி உங்களுக்கு தெரியாதா?” என்று அபிநயா கோபமாக கேட்டாள்.

     அவன் வண்டியிலிருந்து இறங்கி, அவள் அருகே வந்து நின்று, “நான், உன் நல்லதுக்குத் தான் சொல்லுவேன்னு உனக்கு தெரியாதா?” என்று தன்மையாகப் பேசினான் பசுபதி.

   “எது நல்லது? என்னை இப்படி கடத்திட்டு வந்தது தான் நல்லதா?” என்று அபிநயா எகிற, “நான், எந்த தப்பும் பண்ணலை அம்முக்குட்டி.” என்று பசுபதி கூற, அவனைக் கோபமாக முறைத்தாள் அபிநயா.

                    “ஊரு உலகத்தில், யாரும் பண்ணாததையா நான் பண்ணிட்டேன். நீ என் மாமன் மவ. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. உனக்கும் என்னை பிடிக்கும். பிடிக்காத பெண்ணையோ தூக்கிட்டு வந்திருக்கேன். நான் அப்படி பண்ணா தான் தப்பு. உங்க அப்பனை, சரி கட்ட எனக்கு வேற வழி தெரியலை.” என்றான் பசுபதி கடுப்பாக.

        “எனக்கு இப்ப உங்களை பிடிக்கலை அத்தான். என்னை என் வீட்டில்  கொண்டு விடுங்க.” அவள் கூற, “ஏன்னு சொல்லு.” அவன் அசட்டையாக கேட்டான்.

    “ம்… இப்ப என்னை அடிச்சீங்களே. அதனால் தான். இப்படி தான் என்னை கல்யாணத்துக்கு அப்புறம் போட்டு அடிப்பீங்கன்னு நான் நினைக்குறேன்.” அவளும் அசட்டையாகவே கூறினாள்.

    நடந்தேறிய, சம்பவத்தின் வீரியம் அபிநயாவுக்கு இன்னும் புரியவில்லை.

         பசுபதியிடம் பேசி, எப்படியாவது வீட்டிற்கு திரும்பி விடலாம் என்ற எண்ணம் அவளுள்.

   “அது தான் அம்முக்குட்டிக்கு கோபமா? நீ சாலையோரம் நின்னு இப்படி பிரச்சனை செய்யலாமா? நான் உன் அத்தான் தானே? என்னை நம்பி வராம இறங்கினது தான் கோபம். மன்னிச்சிரு அம்முக்குட்டி.” அவன் தழைந்து பேசினான்.

        “அத்தான், விருப்பம் இல்லாத பெண்ணை தூக்குறது மட்டும் இல்லை, பொண்ணோட சம்மதம் இல்லாமல் ஒரு பொண்ணை தூக்கறதும் தப்பு தான் அத்தான் .” அவள் சமாதானமாகவே பேசினாள்.

                  “என்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுங்க அத்தான்.” அவள் கெஞ்சினாள்.

        “முடியாது அம்முக்குட்டி. நாளைக்கி நம்ம ஊரு கோவில்ல நமக்கு கல்யாணம். ஆத்தா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்காக. நான், ஆத்தாவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்.” அவன் கூற, “உங்களுக்கு ஆத்தாக்கு கொடுத்த வாக்கு தான் முக்கியம். நான் இல்லை தானே?” அவள் கோபமாக கேட்டாள்.

       “உனக்கு இப்ப என்ன குறை? என் கூட தானே இருக்க. நாளைக்கி  காலையில், ஊருக்கு கூட்டிட்டு போறேன். நம்ம கல்யாணம் நடக்கும்.” அவன் உறுதியாகக் கூறினான்.

      “ஊரெல்லாம் என் பெயர்   கெட்டு  பொய்டும் அத்தான்.” அவள் கூற, “கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரி ஆகிடும்.” அவன் கூற, அவள் அவனை வெறுப்பாக பார்த்தாள்.

     “எல்லாம் புரிஞ்சி தான் பேசுறீகளா அத்தான்?” அவள் தோற்றுவிட்ட உணர்வோடு கேட்க, “ஆத்தாவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன் அம்முக்குட்டி. என்னை கஷ்டப்படுத்தாத. இந்நேரம், ஆத்தா எல்லா வேலையும் செய்திருப்பாக.” என்று அவன் கூறினான்.

     ‘இனி பேசி பயனில்லை.என்ற எண்ணம் தோன்ற அபிநயா மௌனித்துக் கொண்டாள்.

        பசுபதிக்குள் மெல்லிய குழப்பம். வடிவம்மாளுக்கு அழைத்துப் பேசினான்.

 திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும்.” என்று அவர் கூறிவிட, பசுபதிக்கு ஆத்தா கூறுவது சரி என்று பட்டது.  அபிநயாவின் பாசம் அவன் அறிந்ததே.

             பசுபதி எவ்வளவு அழைத்தும் அபிநயா வீட்டிற்குள் செல்லவில்லை. அசையாமல் ஜீப்பில் அமர்ந்திருந்தாள்.

         மாமனுக்கு அழைத்துப் பேசினான், அபிநயா அவனோடு பத்திரமாக இருக்கும் விஷயத்தைத் தெரிவித்து விட்டு, திருமணத்திற்கு வந்துவிடுமாறு அழைப்பும் விடுத்தான்.

                   அபிநயாவின் தோழிகள் மற்றும் மாடசாமி மூலம் குப்புசாமி, ராமசாமி, ஆறுச்சாமி எனப் பலருக்கும் பசுபதி, அபிநயாவை அழைத்துச் சென்று விஷயம் ஊரெங்கும் பரவியது.

 

      பார்வதி, “லபோ திபோ…” என்று கூப்பாடு செய்தார்.

      ராமசாமியிடம் சண்டை பிடித்தார். “பசுபதிக்கு என்ன குறை? உங்க அக்கா பையன் தானேஅம்முக்குட்டி மேல பாசம். நீங்க சம்மதிச்சிருந்தா, இந்த கல்யாணம் எளிதா நடந்திருக்கும். இப்ப பாருங்க இப்படி ஆகிருச்சு.” என்று தாயாக அவர் வெடித்தார்.

 

    “உனக்கு இன்னமுமா புரியலை? இதுக்கு தான், நான் அவனுக்கு என் பொண்ணை கொடுக்க மாட்டேன்னு சொன்னேன். சுய புத்தி கிடையாது. அவன் ஆத்தா சொல்றதை அப்படியே நம்புவான். முன் கோபக்காரன். முரடன். அவசர குடுக்கை.யோசிக்கவே மாட்டான். யோசிச்சிருந்தா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிருப்பானா?” தன் மனைவியிடம் எகிறினார் ராமசாமி.

 

    “அபிநயா, எங்க இருக்கன்னு தெரியலை? இப்ப என்ன பண்றது?” பார்வதி, தன் மகளைப் பற்றிய கவலையோடு கண்ணீர் வடித்தார்.

   “பசுபதி அத்தனை கெட்டவனும் இல்லை. என் மகள் அத்தனை கோழையும் இல்லை. சமாளிப்பா.” அவர் சற்று தைரியமாகவே பேசினார்.

      மாலைப் பொழுது அதன் பொழிவை இழந்து இருளை தொட்டது.

     அபிநயா, வீட்டிற்குள் செல்லவில்லை. அசையாமல் ஜீப்பில் அமர்ந்திருந்தாள். எதுவும் பேசவும் இல்லை. பசுபதி, ஜீப்பின் பின்னே கால் நீட்டி படுத்திருந்தான்.

 

    நீ செய்வதை நீ செய். நான் செய்வதை நான் செய்கிறேன் என்று இறுமாப்பு இருவரிடமும்.

     

மணி பன்னிரண்டைத் தொட, மழை “சோ…” என்று கொட்ட ஆரம்பித்தது.

 

   “அம்முக்குட்டி, உள்ள வா.” என்று அவன் அழைக்க, அவள் அசையவில்லை.

 

    “உடம்புக்கு ஏதாவது வந்திரும்.” அவன் கெஞ்ச, “ஏன், உங்க கல்யாணம் நடக்காதுன்னு கவலையா?” அவள் நக்கல் பேசினாள்.

 

   “நீ வரியா? இல்லை, நான் உன்னை தூக்கட்டுமா?” அவன் பேச, அவன் சுதாரிப்பதற்குள் சரேலென்று வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்தி கொண்டாள் அபிநயா.

 

    அவள் செயலில் அத்தனை கோபம் வெறி இருந்தது. பசுபதிக்கு சற்று அச்சம் தொற்றிக்கொண்டது.

 

   “அம்முக்குட்டி… அம்முக்குட்டி…” அவன் கதவைப் பதட்டத்தோடு தட்டினான்.

 

      அபிநயா, உள்ளே அமர்ந்து கொண்டாள். கிஞ்சித்தும் அசையவில்லை.

 

   “அம்முக்குட்டி… அம்முக்குட்டி…” கதவை இன்னும் வேகமாகத் தட்டினான் பசுபதி.

 

   “உள்ள வர முயற்சிக்காதீக அத்தான்.” அவள் குரலில் ஆணை இருந்தது.

 

    “நீ எதுவும்…” அவன் தடுமாற, “உங்களுக்கு அம்முக்குட்டி பத்தியும் தெரியலை. அவ பிடிவாதம் பத்தியும் தெரியலை அத்தான்.” அவள் குரலில் உறுதி இருந்தது.

       “தப்பான முடிவுக்கு போறதுக்கு நான் கோழையும் இல்லை. முட்டாளும் இல்லை. ஆனால், நீங்க செய்த வேலைக்கு பதில் சொல்லியே ஆகணும். சொல்ல வைப்பேன்.” அவள் கூற, பசுபதியின் மனம் மெல்ல அசைந்தது.

 

    ‘தப்பு பண்ணிட்டோமோ?’ அவன் தடுமாறினான்.

 

   “அம்முக்குட்டி, நான் உன் மேல வச்சிருக்கிற அன்பு நிஜம். கல்யாணம், ஆனா எல்லாம் சரியாகிரும்.” அவன் கதவின் அந்த பக்கம் நின்று கூற, கதவின் வழியே அவளின் மெல்லிய விசும்பல் சத்தம்.

 

          அவள் விசும்பல் சத்தம், அவனை ஏதோ செய்தது. “அம்முக்குட்டி…” அவன் குரல், அத்தனை பிடிவாதத்தையும் விடுத்து கீனமாக ஒலித்தது.

 

இவர்கள் போராட்டத்தில், மணி விடியற்காலை மூன்றைத் தொட்டு இருந்தது.

 

                         அவளின் விசும்பல் சத்தம் மட்டுமே. அவள்  அறைக்குள் தூங்கவில்லை. அவனும் தூங்கவில்லை. கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

 

அவர்கள் உறவுக்கும், அன்பிற்கும் இடையே எழுந்து விட்ட சுவரை அறிந்து கொள்ளாதவனாக!

 

  அவள் விசும்பல் சத்தம் மட்டுமே கேட்க, “அம்முக்குட்டி… ” அவன் அழைக்க, பதிலில்லை. அவள் தூங்கி இருக்க மாட்டாள் என்று அவனறிவான்.

 

    அவள் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

 

நமக்கு நாளைக்கி கல்யாணம். நான் இப்ப, உன்னை உன் வீட்டில் விடுறேன் வா. காலையில் கூப்பிட்டுக்குறேன்.” அவன் கூற, “தேவை இல்லை. நாம, இங்க இருந்து நேரா கல்யாணத்துக்கு போறோம். ஆனால், கல்யாணம் நடக்காது.” அவள் உறுதியாகக் கூறினாள்.

 

   “கல்யாணத்தை மாத்த முடியாது அம்முக்குட்டி. உன் வாழ்க்கை என்னோட இருந்தா தான் சந்தோஷமா இருக்கும். எல்லாம் உனக்காக தான். உங்க அப்பன் தான் உன் மனசு புரியாமல் வெளிய மாப்பிள்ளை பாக்குறாகன்னா, நீயுமா?” என்று சலிப்பாகக் கேட்டான் பசுபதி.

 

     அபிநயாவிடம் பதில் இல்லை. பேசி பிரயோஜனம் இல்லை…என்று இருவரும் ஒரு சேர எண்ணிவிட, அங்கு மௌனம் மட்டுமே நிலவியது.

 

   மறுநாள் காலையில், பசுபதி பட்டுச் சேலையை நீட்ட, அதைக் கட்டிக் கொண்டு கிளம்பினாள் அபிநயா.

 

   கோவிலில், அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்க, அங்கு ஊர்க்காரர்களும், உறவினர்களும் கூடி இருந்தனர். பார்வதி, ராமசாமியும் உட்பட.

 

       அங்கு சலசலப்பு. என்ன பேச ஆரம்பிப்பது  என்று யாருக்கும் தெரியவில்லை.

 

                கோவிலில் பசுபதி, அபிநயா இருவரும் இறங்க அனைவரின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது.

 

    அபிநயா, அவள் பெற்றோர் அருகே சென்றாள். பார்வதியின் முகத்தில் பதட்டம். ராமசாமியின் கண்களில் ரௌத்திரம்.

 

  “அப்பா, இந்த கல்யாணம் வேண்டாம். வீட்டுக்கு போகலாம்.” தோளைக் குலுக்கினாள் அபிநயா.

 

           ராமசாமியின் முகத்தில் கம்பீர புன்னகை. வடிவம்மாள் சற்று அசந்துவிட்டார்.

 

       “என்ன அபிநயா பேசுற? ஊரெல்லாம் என்ன பேச்சுன்னு தெரியுமா? உன்னை வேற யாரு கல்யாணம் பன்னிப்பாக?”  உறவு பெண்மணி நியாயம் பேசினார்.

 

    ராமசாமியிடம் அமைதி. பார்வதியின் கண்களில் கண்ணீர். பசுபதியிடம் மெல்லிய குற்ற உணர்ச்சி. அபிநயா, அசரவில்லை.

 

   “அதுக்கு?” தெளிவாகக் கேட்டாள்.

 

   “அபிநயா, நீ ஆசை பட்டது தானே? ஏதோ தப்பு நடந்திருச்சு.” பார்வதி கூற, “ஏதோ தப்பு இல்லை அம்மா. பெரிய தப்பு.” அபிநயா அழுத்தமாக கூறினாள்.

 

ஊராரின் சலசலப்பு அவன் காதை எட்டியது. மன்னிச்சிரு அம்முக்குட்டி. எல்லா தப்பும் என் மேல தான்.” பசுபதி அனைவர் முன்னும் மன்னிப்பு கேட்டான்.

 

    “எலே, பசுபதி அப்படி என்ன பண்ணிட்ட? கல்யாணம் கட்டினா எல்லாம் சரியாகிரும். வாங்க, வாங்க மணமேடைக்கு.” அவர் கூற, “வரமுடியாது அத்தை.” அவள் உறுதியாகக் கூறினாள்.

 

  “அபிநயா, இது குடும்ப பிரச்சனை. கல்யாணம் முடியட்டும். இல்லைனா, உன் வாழ்க்கை பாழாகிரும். பேசிக்கலாம்.” பார்வதி பொறுமையாக எடுத்துக் கூறினார்.

 

      “அது தான் பசுபதி மன்னிப்பு கேட்குறான்ல. மன்னிப்பு, தான் எல்லார் வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும். மன்னிச்சிரு.” தன் மகளின் எதிர் காலத்தைப் பற்றிய பயத்தில், அவர் தன் மகளுக்கு விளக்க, “அம்மா” இடைமறித்தாள் அபிநயா.

 

   “மன்னிச்சிட்டேன். அத்தானை நேத்தே மன்னிச்சிட்டேன். அது தான், அத்தான்னு கூப்பிட்டு பேசுறேன். ஆனால், என்னால் இதை மறக்க முடியாது.” அபிநயா பேச, தன் மகளைப் புரியாமல் பார்த்தார் பார்வதி.

 

   “என்னடி ரொம்ப பேசுற? படிச்ச திமிரா? என் மகன், நேத்து உன் கூட வாழ்ந்திருந்தா என்ன டீ பண்ணுவ? மன்னிச்சிட்டேன்னு இப்படி பேசிட்டு இருப்பியா? இல்லை செத்துருப்பியா?”என்று வடிவம்மாள் இடக்கு பேச, ராமசாமியின் கைகள் இறுகியது.

 

   அவர் எதுவும் பேசவில்லை.

 

   பார்வதி, கண்கலங்கப் பசுபதி முகத்தைச் சுழித்தான். வடிவம்மாளின் அந்த பேச்சு பசுபதிக்கு ரசிக்கவில்லை.

 

       “நான் ஏன் அத்தை சாகனும். தப்பு பண்ணிருந்தா அத்தானை கொன்றிருப்பேன். அதுக்கு காரணமா இருந்த உங்களையும் சேர்த்து கொல்லுவேனே தவிர நான் சாக மாட்டேன்.” அபிநயா வடிவம்மாளிடம் எகிற, பசுபதிக்கு அந்த சூழ்நிலையிலும் தன் அம்முக்குட்டியின் பேச்சில் புன்னகை எட்டிப் பார்த்தது.

 

     ‘அடுத்து என்ன?’ என்று அனைவரும் குழம்ப, “நடந்தது நடந்து போச்சு. வேற வழி இல்லை…” பார்வதி பேச, “பார்வதி…” என்று ராமசாமி கர்ஜித்தார்.

 

    “தப்பு பண்ணவனுக்கு கல்யாணம் பண்ணி வைன்னு, நாட்டாமை சொல்ற மொக்கை தீர்ப்பு மாதிரி இருக்கும்மா உங்களுது. யாராவது தப்பு பண்ணவகளுக்கு பெண்ணை கொடுப்பாகளா?” என்று அபிநயா சீற்றமாகக் கூறினாள்.

 

     “எனக்கு அத்தானை பிடிக்கும். ஊர்ல யாரால பிரச்சனை நாளும்  என்னை பாதுகாக்குற அத்தானை பிடிக்கும். எல்லாரும், நான் பிடிவாதமுன்னு சொன்னா, நான் சரின்னு சொல்ற அத்தானை  எனக்கு பிடிக்கும். ஆனால், ஊரே என்னை அவமானமா பார்க்குற மாதிரி செய்த அத்தானை எனக்கு பிடிக்கலை.” அபிநயா உறுதியாகக் கூறினாள்.

 

     அங்கு மயான அமைதி நிலவியது. “அத்தான், என் சந்தோஷத்துக்கு தானே இதெல்லாம் பண்ணீங்க. நான், நீங்க செய்த தப்பை மன்னிச்சிட்டேன். ஆனால், என்னால் மறக்க முடியாது.” அவள் நிதானமாகப் பேசினாள்.

 

    “மன்னிக்கும் மனசை கொடுத்த சாமி, எனக்கு மறக்கும் மனசை கொடுக்கலை அத்தான்.” அவள் கண்களில் கண்ணீர்.

 

    “கடத்தினாலும் காதல்… அசிட் ஊத்தினாலும் காதல்… ரேப் பண்ணலாம் காதல்…  சந்தேகப் பட்டாலும் காதல்… பொசெசிவ்னெஸ் என்ற பெயரில் காதல்… பழிவாங்க கல்யாணம் பண்ணாலும் காதல்… அசிங்கமா பேசிட்டு அவமான படுத்தினா காதல்… பெயரை கெடுத்தாலும் காதல்… எல்லாம் பண்ணிட்டு அதீத காதலன்னு மன்னிப்பு கேட்டா ஒரு பெண் மன்னிக்கனுமா?” அவள் நிறுத்த, அங்கு மெல்லிய சலசப்பு மட்டுமே.

 

    “சரி மன்னிக்குறானே வச்சிப்போம். மன்னிச்சிட்டேன். மறந்து, கூட சேர்ந்து வாழணும்னு சொல்றது என்ன கொடுமை?” அபிநயா பரிதாபமாகக் கேட்டுச் சலிப்போடு புன்னகைத்தாள்.

 

   “ராமர் கூட தப்பு பண்ணிருக்கார்.” என்று பார்வதி தன் மகளிடம் விளக்க முயற்சிக்க, “இதிகாசம் பேசாதீங்க அம்மா.” அபிநயா கோபமாக பேசி இடைமறித்தாள்.

 

    “இப்படி பேசி, பேசி எத்தனை நாள் பொண்ணுங்க வாழ்க்கையை அடகு வைப்பீங்க. நான் பேசட்டுமா இதிகாசம்?” என்று அபிநயா கேட்க, யாரும் பதில் பேசவில்லை.

 

    “தன்னை காட்டிற்கு அனுப்பிச்ச ராமரை கூட சீதை மன்னித்திருக்கலாம். விரும்பி இருக்கலாம். தெய்வமாக வணங்கி இருக்கலாம். ஆனால், மகன்களை  கொடுத்துட்டு பூமிக்குள் தான் போனாகளே ஒழிய, ஏத்துக்கிட்டு அவர் கூட வாழ போகலியே அம்மா. அவங்க அம்மா  பூமி தாய், சீதையை ஏத்துக்கிட்ட மாதிரி, நீங்க என்னை ஏத்துக்க மாட்டீங்களா அம்மா.” என்று கண் கலங்க கேட்டாள் அபிநயா.

 

அபிநயாவுக்கு, இப்படி ஓர் அநீதியை தானே  இழைத்ததை எண்ணி, பசுபதி மொத்தமும் உடைந்து போனான். தான் செய்து வைத்த வேலையின் வீரியம் அவனுக்கு நன்றாக புரிந்தது.

  

    தன் மகள் பேசுவது பார்வதிக்கு புரிந்தாலும், மகளின் எதிர்காலம் குறித்து அவர் கண்கள் கலங்கியது.

 

    வேகமாக சென்ற அவள், அங்கிருந்த தாலியை எடுத்து பசுபதி முன் நீட்டினாள் அபிநயா.

 

   “அத்தான், நீங்க என்ன சொல்றீங்க. நான், உங்களை மன்னிச்சிட்டேன். நீங்க செய்த தப்பை மறந்து சந்தோஷமா வாழுவேனான்னு எனக்கு தெரியாது. இந்த கல்யாணம், நடக்கணும்னு நீங்க நினச்சா, நடக்கட்டும்.” அவள் தாலியை நீட்டியபடியே கூற, பசுபதி அதை கைகளில் வாங்கி கொண்டான்.

 

    அபிநயாவின் முகத்தை ஆழமாகப் பார்த்தான்.

 

    “எனக்கு இந்த கல்யாணத்தை விட, உன் சந்தோசம் தான் முக்கியம். உன் சந்தோஷத்துக்கு தான் நான் எல்லாமே பண்ணேன். அதுவே இல்லைனா…” என்று “ம்..ச்…” கொட்டி தாலியைக் கடாசினான் பசுபதி.

அம்முக்குட்டி வாழ்க்கைக்கு முன் அவன் ஆத்தாவிற்கு கொடுத்த வாக்கு தோற்றுவிட்டது.

   “என் அத்தானை பத்தி எனக்கு தெரியும்.” அவள் கண்களில் கண்ணீர். தன் மனதிற்கு பிடித்தவர்கள் தவறு செய்தால்  மட்டும் வெளிவரும்  அவள் கண்ணீர்.

  

     பார்வதி கலங்கினாலும், தன் மகளின் தைரியத்தையும், நிதானத்தையும் எண்ணி அவருக்கு சற்று பெருமையாக இருந்தது. இதுக்கெல்லாம் என் மகள் அசாருவாளா?’ என்ற பெருமிதம் மட்டுமே ராமசாமியின் கண்களில்.

   

பசுபதி, அன்றைய நினைவுகளோடு நிகழ் காலத்திற்கு திரும்பினான். ஊரின் முன், அவன் அபிநயாவிற்கு ஏற்படுத்திய அவமானத்தை எண்ணி இன்றும் அவன் கண்களில் கண்ணீர் துளிகள்.

 

பொழுதுகள் விடியும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!