AnthaMaalaiPozhuthil40

அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 40

     நாட்கள் அதன் போக்கில் இனிமையாக நகர , அன்று கவினின் பிறந்த நாள்.

                   கவினுக்கு அவன் நண்பரகளை அழைத்து கொண்டாட வேண்டும் என்று ஆசை. அவன் முதல் வயதில் பிறந்தநாள் கொண்டாடினார்கள். அதன் பின் அதை ரேவதியும், சுரேஷும்  செய்வதில்லை. மற்றவர்கள் பிறந்தநாளுக்கு கவினை அழைத்து சென்று வருதே அவர்களுக்கு பெரிய விஷயமாகி போனது.

              கவினோடு பழகிய ஒரு சில நாட்களில் அவன் ஆசையை அறிந்து கொண்ட அபிநயா, கவினின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையே ரகுநந்தனிடம் கோரிக்கையாக  வைத்திருந்தாள்.

    ரகுநந்தனுக்கு பெரிய விருப்பம் என்றெல்லாம் சொல்ல முடியாது.  கவினிடம் நல்ல முன்னேற்றம் தான். ஆனால், ரேவதி? எதற்கு ரேவதி வாயிற்கு அவலாக வேண்டும் என்பது அவன் எண்ணம்.

    ஆனால், அபிநயா கேட்டால் தானே.

     கவினின் நண்பர்கள். அவர்களின் பெற்றோர். அபிநயாவின் பெற்றோர். இந்திரா, பசுபதி, ஆவுடையம்மாள் என்று பலருக்கு அழைப்பு சென்றிருந்தது.

  உணவை வெளியே வாங்கிவிடலாம்.என்று ரகுநந்தன் பல முறை கூறியும், அபிநயா மறுப்பு தெரிவித்து விட்டாள்.

   நான் நினைக்குற மாதிரி எல்லாம் கிடைக்காது.அவள் மறுத்துவிட்டு, அவள்  தேவையான சாமான் என்று அவள் நீட்டியதை பார்த்து, “இவ்வளவு பெரிய லிஸ்ட்டா?” அவன் அதிர்ந்தான்.

   சிலது, இங்க கிடைக்காது. ஆன்லைன்ல போடுங்க.அபிநயா கூறியிருக்க, ரகுநந்தன் அதை செய்திருந்தான்.

                  செலவு மிக பெரிய விஷயம் இல்லை. ஆனால், அதை தேடிப்பிடித்து வாங்குவது சற்று பிரயத்தனமாக தான் ரகுநந்தனுக்கு இருந்தது.

      மனைவி கேட்டு மறுப்பேது?’ அனைத்தையும் வாங்கி  கொடுத்துவிட்டான்.

               ஆனால், இன்று சற்று கோபமாகவே இருந்தான். காலையிலிருந்து அபிநயாவை பார்க்க முடியவில்லை.  “அபி… அபி…” அவன் குரல் வீடெங்கும் ஒலித்தது.

   இப்ப எதுக்கு இப்படி கூப்பிடுறாக?” முனங்கி கொண்டே அவர்கள் அறையை நோக்கி சென்றாள் அபிநயா.

    அபிநயா செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி.  சும்மாவே தாங்குவான். இப்ப பிள்ளைத்தாச்சி வேற?’ அவள் எண்ணம் ஓடியது.

     கவினிடம் நல்ல முன்னேற்றம். அவன் முன் போல் இல்லை. புரிந்து நடந்து கொள்கிறான். பிடிவாதம் இல்லை. அழுகை இல்லை. முன்னெல்லாம், அபிநயா சொன்னால் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தான். இப்ப எல்லாம் யார் சொன்னாலும் கேட்டுக்குறான்.ரேவதிக்கு மகிழ்ச்சி தான்.

   அபிநயாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்என்று தோன்றினாலும், ‘அனைத்தையும் அவள் செய்து விட்டாளேஎன்று மனிதர்களுக்கே உண்டான பொறாமை உணர்ச்சியும் ரேவதியிடம் இருக்க தான் செய்தது.

     தன் மகனுக்காக…என்ற எண்ணம் வருகையில், ரேவதி தழைந்து விட்டாள். அனைவருக்கும் ஒத்து நடந்து கொண்டாள்.

  

   அபிநயாவின் வயிறு சற்று மேடிட்டிருந்தது.  வயிறை அசைத்து அசைத்து நடந்து வரும் தன் மனைவியை அவன் கண்கள் ஆசையாக பார்த்தது.

           அபி, நான் சொல்றதை கேட்க கூடாதுன்னு முடிவோட இருக்கியா நீ?” ரகுநந்தன் கோபமாக கேட்க முயன்று, அக்கறையாக கேட்டுக் கொண்டிருந்தான்.

       மெத்தையில் ஆயாசமாக அமர்ந்தபடி, “நான் என்னங்க கேட்கலை?” அவள் கேட்க, “சாயங்காலம் தான் பார்ட்டி. நீ சொல்ற, அதை செய்யறதுக்கு ஆள்கள் இருக்காங்க. இப்படி நின்னு கிட்டே இருக்கணுமா?” என்று அவன் எடுத்து வைத்திருந்த பழச்சாறை நீட்டினான்.

   என்ன ஜூஸ்?” அவள் சினுங்க, “மாதுளை பழம்.” அவன் சிரித்தான்.

   எனக்கு பிடிக்கலை.” அவள் சிடுசிடுக்க, “ப்ளீஸ்…” அவன் கெஞ்சினான்.

   அவளை பார்த்துக்கொண்டே, “எப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிட்ட அபி?” அவன் கேலியாக கூற,”எப்படி இருந்தீங்க?” அவள் புருவம் உயர்த்தினாள்.

      அவன் கைகளை விரிக்க, அவன் மார்பில் சாய்ந்து அவள் அமர்ந்து கொண்டாள்.

 அவளை தன் கை வளைவுக்குள் வைத்து,  அவள் கைகளை தன் கைகளுக்குள் புதைத்து, “காதல் கத்திரிக்காய், கல்யாணம் புடலங்காய் எல்லாம் எனக்கு செட் ஆகுமா? அப்புறம், அன்பு அவரைக்காய், பாசம் பாகற்காய் இதெல்லாம் வருமான்னு யோசிச்சேன்.” என்று அவன் கூற, அபிநயா தன் தலையை அண்ணாந்து அவனை கேள்வியாக பார்த்தாள்.

   அவன், ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்த, “அது என்ன காதல் கத்திரிக்காய், கல்யாணம் புடலங்காய், அன்பு அவரைக்காய், பாசம் பாகற்காய்?” என்று அவள் கேட்டாள்.

      காதல் முத்தினா கடை தெருவுக்கு வந்தது தானே ஆகணும், கத்திரிக்காய் மாதிரி. புடலங்காய் மாதிரி நெளிவு சுழிவு நிறைந்தது கல்யாணம். பூத்து குலுங்க ஆரம்பிச்சா அவரைக்காய்  மாதிரி பூத்து குலுங்க முடியாது. அதை மாதிரி தான் அன்பு வைக்க வைக்க பெருகும். பாசம் வைத்த இடத்தில் சில சமயம் கசப்பான சம்பவங்கள் நடக்கும் பாகற்காய் மாதிரி, ஆனால், அதை கடந்துட்டா வாழ்க்கை ரொம்ப நல்லாருக்கும்.” என்று அவன் நிறுத்தினான்.

   அட, காய்கறியில் இத்தனை வாழ்க்கை தத்துவமா?’ என்று அபிநயாவின் கண்களில் ஆச்சரியம்.

    இதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வருவேனான்னு யோசிச்சேன். இப்ப எப்படி இருக்கேன்?” என்று அவன் கெத்தாக கேட்க, “அச்சு அசல் காய்கறி விக்கறவக மாதிரியே இருக்கீக.” அவள் முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு கண்களில் குறும்பு மின்ன கூறினாள் அபிநயா.

     உன்னை…” அவன் அவள் காதுகளை திருக, அவள் லாவகமாக விலகி, “நந்தன்…” அவள் கொஞ்சினாள்.

    அவன் விடுவதாக தெரியவில்லை. “வேலை இருக்கு.” அவள் மிஞ்ச, “உனக்கு கஷ்டமா இல்லையா?” அவன் குரலில் அக்கறை வந்து அமர்ந்து கொண்டது.

    கஷ்டமா இருந்தா நான் செய்வேனா? அத்தை இருக்காங்க. வேலை செய்ய ஆளு. இன்னைக்கு புதுசா வேற ரெண்டு பேரை வர சொல்லிருக்கீங்க. நான் நேரடி சமையல் வேலை மட்டும் தான்” அவள் அவனை சாமாதானம் செய்துவிட்டு   செல்ல,  தன் மனைவியின் பாசத்திலும், அன்பிலும் கரைந்து போனான் ரகுநந்தன்.

    வெளியே சென்ற அபிநயா, தன் தலையை பின் பக்கமாக திருப்பி, “உங்க அக்கா கூட, நிறைய வேலை பாக்குறாக. முன்ன மாதிரி இல்லை.” அவள் கண்சிமிட்டிவிட்டு செல்ல, அவள் குறும்பையும் ரசித்தான் காதல் கணவனாக.

                      அதே வேளையில், பசுபதி அவன் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

                      என்ன ஆச்சு? பயங்கர சிந்தனை மாதிரி தெரியுது.” என்று இந்திரா  கேட்க, “இந்த அம்முக்குட்டி பண்றதெல்லாம் தேவை இல்லாத வேலை.” என்று கடுப்பாக கூறினான் பசுபதி.

   இப்படி திட்ட வேண்டியது. அப்புறம் நேரில் பார்த்தவுடனே, அம்முகுட்டின்னு உருக வேண்டியது.” என்று இந்திரா கூற, “ஹா… ஹா…” என்று பசுபதி சிரித்தான்.

          பொறாமையோ?” அவன் கேலி பேச, “எனக்கென்ன பொறாமை? நானே சாயங்காலம் கவின் பிறந்த நாளைக்கு போற சந்தோஷத்தில் இருக்கேன். நாம, விருந்துக்கு போன அன்னைக்கு கவின் எக்ஸாம்ன்னு ஸ்கூலுக்கு போய்ட்டான்.” என்று கண்களில் ஆசை மின்ன கூறினாள் இந்திரா.

       அது தான் சாயங்காலம் போறோமே.” அவன் கூற, “உனக்கு பிடிக்கலையா?” என்று அவள் கேட்க, அவன் யோசனையாக தலை அசைத்தான்.

  பிடிக்காமல் என்ன? ஆனா, அம்முக்குட்டி ஆத்தாவையும் கூப்பிட்டுருக்கா. மாமா அத்தையையும் கூப்பிட்டுருக்கா. இவுக ரெண்டு பெரும் ஒரே விஷேஷ வீட்டுக்கு போறதில்லை. அது வேற, ஏதாவது பிரச்சனை வந்திருமோன்னு தான்…” என்று பசுபதி யோசனையோடு கூறினான்.

               ஆத்தா கிட்ட, உங்க மாமா மேல தப்பில்லைனு சொன்னா புரிஞ்சிக்க மாட்டாங்களா?” என்று இந்திரா கேள்வியாக நிறுத்த, பசுபதி மறுப்பாக தலை அசைத்தான்.

   எனக்காக சொல்லலியா?” அவள் குரல் கம்ம கேட்க, தன் மனைவியை தன்னோடு சேர்த்து கொண்டான் பசுபதி.

 அது மட்டும் காரணமில்லை இந்திரா. அப்பா மேல தான் தப்புனு சொல்ல மனசு வரலை. அதை சொல்றதால, எதுவும் மாறப்போறதில்லை. மனஸ்தாபமுன்னு, ஏதேதோ வார்த்தையை விட்டு, சண்டை பெரிசாகிருச்சு.” பசுபதி அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்.

   அப்ப, உங்க அம்முக்குட்டி கிட்ட சொல்ல வேண்டியது தானே?” இந்திரா கூற, “அவ கேட்டா தானே? பிடிவாதக்காரி. அத்தை, என் கல்யாணத்துக்கும் வரலை. என் வளைக்காப்புக்கு கண்டிப்பா வரணும். அதுக்கு,  இப்பவே எல்லாரையும் ஒண்ணா, அழைச்சு ஒரு கை பார்க்கணுமுன்னு சொல்லிட்டா.” அவன் புன்னகையோடே கூறினான்.

          பிடிவாதமின்னாலும், அதுல ஒரு நியாயம் இருக்குதே.” இந்திரா கூற, பசுபதி மனதிற்குள் புன்னகைத்து கொண்டான்.

   சரி, நீ ஏன் இங்க நிக்குற? சாயங்காலம்  கொஞ்சம் சீக்கிரம் போவோம். அவங்களுக்கு உதவியா இருக்கும். இப்ப உள்ள வா.” பசுபதி கூற, “நீ போ. நான் வரேன்.” என்று அவள் கூற, உள்ளே சென்றான் பசுபதி.

    ஆனால், பின்னால் வராத மனைவியை அவன் தேட, இந்திரா அவர்கள் தோட்டத்தில் தொங்கி கொண்டிருந்த மாங்கனியை எட்டி எட்டி பறிக்க முயற்சித்து தோற்று கொண்டிருக்க, அவளை அப்படியே தூக்கினான் பசுபதி.

    எந்த சிரமுமின்றி, கனிந்தும், கனியாத மாங்கனியை அவள் பறிக்க. அவளை இறக்கிவிட்டான் பசுபதி.

            இறக்கிவிட்டானேயொழிய, அவளை விலக்கவில்லை. அவள் காதோரமாக, “என்ன ரகசியம்?” என்று ரகசியம் பேசினான். 

    ஒண்ணுமில்லை…” அவள் குழைய, அவன் நெகிழ்ந்தான்.

       அப்ப எதுக்கு என்னை உள்ள போக சொல்லிட்டு, அப்படி எட்டி எட்டி பறிக்க பாக்குற?” அவளை அணைத்தபடி அவன் கிசுகிசுக்க, “அது சும்மா…” அவளும் புன்னகையை மறைத்தபடி கூறினாள்.

   எத்தனை நாளா, என் தோட்டத்தில் திருட்டு மாங்காய் பறிக்குற?” அவன் வம்பிழுக்க, “ஹலோ…” என்று பட்டென்று கோபமாக திரும்பினாள் இந்திரா.

     அடியேய், எடுத்த உடனே என் பிள்ளைக்கு அடாவடித்தனத்தை சொல்லி தர?” அவன் கேலியாக மிரட்ட, அவள் சட்டென்று நெகிழ்வாக, “என் குழந்தை உன்னை மாதிரி, மத்தவங்க நல்லதை மட்டுமே யோசிக்குற மாதிரி தான் வளரனும்.” ஆழமான குரலில் கூறினாள்.

   அவன் அவள் தலை கோதி, “உன்னை மாதிரி தைரியமா வளரனும். அப்ப, தான் இந்த காலத்தில் பிழைக்க முடியும்.” என்று அவன் கூற, “அதுக்கு முன்னாடி டாக்டர் கிட்ட செக்கப் போகணும்.” என்று அவள் சூழ்நிலையை சகஜமாக மாற்றினாள்.

   இப்ப போயிடுவோம்.” அவன் கூற, சந்தோஷமாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் இந்திரா.

            அம்மா, அப்பா, கணவன், தோழன் அனைத்தும் இவளுக்கு நான் தான். இவளை நான் நல்லா பாத்துக்கணும்.என்ற எண்ணத்தோடு அவன் அவளை அணைக்க, அந்த அணைப்பில் அரவணைப்பை உணர்ந்தாள் இந்திரா.

       அவள் இமைகள் நீர்த்துளிகளை வெளியிட விரும்பாமல் வேகமாக படபடத்தது. இமைகளின் துடிப்பை, அவன் இதய துடிப்பு உள்வாங்கி கொண்டது.

அன்றைய மாலை பொழுதில்…

            வீடு முழுதும் பலூன் கட்டப்பட்டிருந்தது. ஹாப்பி பர்த்டே…என்ற வாசகம் கொண்ட நியான் பலூன் மேலே பறந்து கொண்டிருந்தது.

            பசுபதி, இந்திரா ஆவுடையம்மாள் நுழைய அனைவரையும் இன்முகமாக ரேவதி, சுரேஷ் வரவேற்றனர்.

    பவானியம்மாள், முகமன் விசாரித்து கொண்டிருந்தார்.

    கவின், “அத்தை…” என்றழைத்து, இந்திரா கேட்கும் கேள்விக்கு அழகாக பதில் கூறிக் கொண்டிருந்தான். 

    டேய்… சமத்து பையன் ஆகிட்ட டா நீ.” என்று அவன் கன்னத்தில் இதழ் பத்தித்தாள் இந்திரா. “தேங்க யூயூ அத்தை.” அவனும் இந்திராவின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு விளையாட சென்றான் அவன் தோழர்களுடன்.

   புதிதாக ஒரு கண்ணாடி அணிந்திருந்தான் கவின்.

   அபிநயாவை கண்களால் தேடினான் பசுபதி.

 “வாத்தியரம்மா உள்ள வேலையா இருக்காங்க.” ரகுநந்தன் கூற, “உங்க மாண்ட்டெஸ்ஸரி ஸ்கூல் எப்படி போகுது?” என்று கேட்டான் பசுபதி.

  வாத்தியரம்மா புண்ணியத்தில் நல்லா போகுது.” என்று ரகுநந்தன் புன்னகைக்க, “ஹா… ஹா…” பெரிய குரலில் சிரித்தான் பசுபதி.

  இப்படி சிரிக்காதீங்க. புள்ளைங்க பயந்திர போகுது.” இந்திரா பசுபதியின் காதில் கிசுகிசுக்க, தன் தங்கையை நிறைவாக பார்த்தான் சுரேஷ்.

    இந்திராவின் தாய்மை செய்தியும் அனைவருக்கும் தெரிவிக்க பட்டிருந்தது.

              பசுபதி புன்னகைக்க, “நான், அபிநயாவை பார்த்துட்டு வரேன்.” என்று அவள் உள்ளே செல்ல, அங்கிருந்த பலகாரத்தில் அசந்தே விட்டாள் இந்திரா.

     எல்லாம் நீயா பண்ண?” இந்திரா கண்களை விரிக்க, “இத்தனை பேர் உதவிக்கு இருக்காங்கள்?” அபிநயா புன்னகைத்தாள்.

      அத்தை…” என்று அபிநயாவை நோக்கி ஓடி வந்தான் கவின். 

   உங்க மாமாவை கூட்டிட்டு வா. எல்லாரும் வர நேரம் ஆகிருச்சு. மாமா, எடுத்து வைப்பாங்க நீ டிஷ் நேம் செட் பண்ணனும். சரியா?” என்று அபிநயா கேட்க கவின் தலை அசைத்தான்.

        கவினின் சமத்தில் இந்திரா மட்டுமில்லை, அப்பொழுது தான் அங்கு வந்திருந்த அபிநயா பெற்றோரும் மேலும் நண்பர்களின் பெற்றோர்களும் அசந்து விட்டனர்.

      ரகுவோடு சேர்த்து உங்க அத்தானையும் வர சொல்லு. சும்மா பேசிட்டு தான் இருக்காங்க.” இந்திரா பசுபதியை வம்படியாக அழைத்தாள்.

    கிட்ஸ் டிஷ்.” என்று கூறி, “கேக் பாப்ஸ், மார்ஷ்மல்லோ பாப்ஸ், சாக்கோ டிப்ட் ஃபுரூட் போக்கே, பர்த்டே குக்கீஸ், பாஸ்தா,  மினி பர்கர்.” என்று அபிநயா அடுக்கி கொண்டே போக, அதை பசுபதியும், ரகுநந்தனும் எடுத்து வைக்க, கவின் பெயர் பலகையை அழகாக அடுக்கி வைத்தான்.

    பெரியவர்களுக்காக, இடியாப்பம், பொடி இட்லி, மினி ஊத்தப்பம், பப்ஸ் என இன்னும் ல பதார்த்தங்கள் அபிநயா கூற இவர்கள் அடுக்கி வைத்தார்கள்.

      கவினுக்கு கார் பிடிக்குமென்று, அவனுக்கு பிடித்த கார் வடிவ கர்ட்டூன் கேக் செய்திருந்தாள் அபிநயா. ஃபாண்டன்ட் வைத்து கருப்பு நிற கார் டயர் , சீட்,  சிவப்பு நிற காரின் மேல் பாகம் செய்திருந்தாள்.

விப்பிங் கிரீம் வைத்து மற்ற அலங்காரங்களை செய்த்திருந்தாள் அபிநயா.

ஆங்காங்கே மஞ்சள் நிற எழுத்துக்கள்.       

    வாவ்!!! கார் கேக்? அச்சு அசல் கார் மாதிரியே இருக்கு. பாப்ஸ் எல்லாம் அழகழகு கலர்ல, பார்க்கவே செம்ம அழகா இருக்கு. குட்டிஸ் கண்ணுல எல்லாம் அத்தனை ஆர்வம். நம்ம இப்ப ம்..ன்னு சொன்னா போதும். வெளுத்து வாங்கிருவாங்க.” என்று இந்திரா ஆச்சரியத்தோடு கூறினாள்.

 ம்… பர்த்டே ப்லேட்ஸ்ல கொடுதிறலாம் இந்திரா.” என்று அபிநயா கூற, “உங்க அத்தான் உன்னை பாராட்டுறதுல முழு அர்த்தம் இருக்கு.” என்று இந்திரா பேசிக் கொண்டிருக்கையில் அவர்களை நெருங்கினான் பசுபதி.

     அம்முக்குட்டி, இவ்வளவும் நீ பண்ணியா?” என்று மற்றவர்கள்  யாரும் அறியாவண்னம் அபிநயாவிடம் சிடுசிடுத்தான் பசுபதி.

   அத்தான்…” அவள் தடுமாற, “இந்த நிலைமையில் இதை நீ தான் பண்ணனுமா? ஒரு பிறந்த நாளைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையா? அவங்க அம்மா, அப்பாவுக்கே இல்லாதா அக்கறை.” அவன் கடிந்து கொண்டான்.

 

  இந்திரா இவர்களை கவனித்து கொண்டு தான் இருந்தாள். “அத்தான், கவின் இப்ப தான் சரியாகிட்டு வரான். அவனுக்காக தான்.” அவள் தன்மையாக கூற, “மாப்பிள்ளை எதுவும் சொல்லலியா?” பசுபதி கடுப்பாகவே கேட்டான்.

   ஐயோ அத்தான், அவுக ஏற்கனவே என்னை திட்டிட்டு தான் இருக்காக. நீங்க வேற ஏத்தி விடாதீக.” அபிநயா பசுபதியிடம் எகிறினாள்.

   சரியாக அங்கு வந்து சேர்ந்தான் ரகுநந்தன். “கூட நாலு வார்த்தை நல்லா கேளுங்க பசுபதி.” ரகுநந்தன் கூற, அபிநயா அவனை ஆள் கட்டி விரலால் மிரட்டினாள்.

      வாத்தியரம்மா, சொன்னா சொன்னது தான்.” அவன் புன்னகைத்து கொண்டே, அவளுக்கு தண்ணீரை கொடுத்தான்.

 வேலை முடிச்சிதில்லை. இனி நாங்க பாக்குறோம். நீ உட்கார்.” என்று கூறிக்கொண்டே ரகுநந்தன் செல்ல, பசுபதி இந்திராவிடம் அக்கறையோடு அமரும் படி  கண்களை காட்டி சென்றான்.

        உன் அத்தானுக்கு உன் மேல பாசம் அதிகம். அம்முகுட்டினா தனி பாசம்!” என்று இந்திரா, அபிநயா அருகே அமர்ந்து கொண்டே கூற, “ஆமா…” என்று பெருமிதத்தோடு தலை அசைத்தாள் அபிநயா.

   உன் மேல அத்தானுக்கு, கண்மூடித்தனமான காதல்.” என்று அபிநயா, இந்திராவை பார்த்து கன்சிமிட்ட, “அ… அது எப்படி சொல்ற?” என்று இந்திரா வெட்கத்தோடு தடுமாறினாள்.

     அதெல்லாம் எனக்கு செய்தி வந்திருச்சு. இன்னிக்கு அதை பார்வையிலையே பார்த்திட்டோம்.” அபிநயா கூற, அந்த நொடியில், தன் கணவனின் காதலை எண்ணி முகம் சிவந்தாள் இந்திரா.

  அபிநயா முகத்தில் பரம திருப்த்தி.

  அனைவரும் ஒன்று கூட, பலரும் கவினின் மாற்றத்தை பற்றியே  ரேவதியிடம் விசாரித்து கொண்டிருந்தனர்.

    கவினால், உணர்வுகளை உள்வாங்க முடியவில்லை என்றும், இப்பொழுது அவன் அணிந்திருக்கும் சூப்பர் பவர் கிளாஸ் மற்றவர்கள் உணர்வுகளை படம் பிடித்து அவனுக்கு உதவுவதையும், அதற்கு அபிநயா தான் முழுதாக உதவினாள் என்றும் அபிநயாவை வெளிப்படையாக பாராட்டிக் கொண்டிருந்தாள் ரேவதி.

       மன்னிப்பு கேட்க அவள் தன்மானம்  இடம் கொடுக்கவில்லை. ஆனால், பாராட்ட அவள் மனம் முழுதாக இடம் கொடுத்தது. அதுவும் மகனுக்காக அபிநயாவின் இந்த மெனக்கிடலிலும், மகனின் மாற்றத்திலும் ரேவதி முழுதாக சந்தோஷத்தில் உருகி இருந்தாள்.

            உனக்கு பெரிய மனசு அபிநயா. எல்லாத்தையும் மன்னிச்சிடுற.” ரேவதியின் செயலை பார்த்துக் கொண்டே  இந்திரா அபிநயாவை சிலாகிக்க, “இல்லை இந்திரா. என்னால சில தப்புக்களை மறக்கவே முடியாது. நான் அத்தனை நல்லவள் எல்லாம் கிடையாது.” என்று அபிநயா அழுத்தமாகவே கூறினாள்.

   அது என்ன மன்னிக்குறதுக்கும், மறக்குறதுக்கும் உள்ள வித்தியாசம்?” இந்திரா அவள் தன் பல நாள் கேள்வியை அபிநயாவிடம் கேட்டுவிட்டாள்.

     பொறுத்துக் கொள்ள முடிந்த வலிகளை தருபவர்களை மன்னிக்கலாம். மரண வலியை கொடுத்ததை மறக்கவே முடியாது. புகுந்த வீட்டில் உள்ளவங்க திட்டினா ஏத்துக்கலாம். ஆனால், அழிக்க நினச்சா ஒரு பொண்ணு எதுக்கு ஏத்துக்கணும்? மனைவியிடம் கோபம் கொள்ளுற கணவனை ஏத்துக்கலாம். ஆனால் , துரோகம் பண்ற கணவனை எப்படி ஏத்துக்க முடியும்?” என்று அபிநயா கேட்க, இந்திரா அபிநயாவின் நிமிர்வை மரியாதையோடு பார்த்தாள்.

         அதற்குள், “அத்தை கேக் கட் பண்ண வாங்க.” என்று கவின் இந்திரா, அபிநயா இருவரையும் அழைக்க, “நான் இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சேன் பேசிக்கிட்டே இருப்பேன்.” என்று கூறிக்கொண்டே, அபிநயா எழ, இந்திரா அபிநயா இருவரும் சென்றனர்.

    பெரியவர்கள் அனைவரும் பேச்சை விடுத்து, அவர்கள் பக்கம் திரும்பினர். ராமசாமி, ஆவுடையம்மாள் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. முகம் திருப்பிக் கொள்ளவுமில்லை.

       அபிநயா செய்திருந்த ஏற்பாட்டை பார்த்த ரேவதி, அனைவர் இருப்பதையும் தன்னையும் மறந்து, “நான் தான் உன்னை புரிஞ்சிக்காம, பல பொழுதுகள் பல தப்பு பண்ணிடேனில்லை? விதியோ?” என்று ரேவதி தடுமாற்றத்தோடு கேட்டாள்.

    தன் மனைவியை ஆச்சரியமாக பார்த்தான் சுரேஷ்.

     அபிநயா என்ன பேசுவது என்று தெரியாமல் இப்பொழுது தடுமாற, ரகுநந்தன் தன் மனைவியை பெருமையாக பார்த்தான்.

         ராமசாமி, தன் மகளை பெருமிதமாக பார்த்தபடி, “நடப்பது விதியா இருக்கலாம். ஆனால், அதை மனிதன் மதியால் வெல்லணும் மா. எல்லா மனிதர்களும் சில பொழுதுகள் தவறுவது இயல்பு தான். ஒரு தவறில் யாருடைய வாழ்க்கையும் முடியறதில்லை. ஆனால், அந்த பொழுதின் தவறை புரிஞ்சிகிட்டு, அதை சரி பண்ணிட்டு வாழறவன் தானே மனுஷன்.” என்று அவர் பெரிய மனிதனாக பேசினார்.

    எத்தனை உன்னதமான வார்த்தைகள்?’ என்ற எண்ணத்தோடு, அனைவரும் அவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தனர்.

       ரேவதி ஆமோதிப்பாக தலை அசைக்க,  வருத்தப்பபடாத ரேவதி. உன் மகன் வாழ்க்கை இனி ஜோரா இருக்கும். ” என்று அவர் புன்னகையோடு கூறினார்.

      அதன் பின் கவின், “கேக் கட்டிங்…” என்று கூற, அனைவரின் கவனமும் அங்கு திரும்ப, கவின் முதல் துண்டை கையில் எடுக்க, “யாருக்கு டா?” என்று அனைவரும் அவனை ஆர்வமாக பார்த்தனர்.

   அம்மாவுக்கு…” என்று ரேவதி கூற, “அப்பாவுக்கு…” என்று சுரேஷ் கூற, “அத்தைக்கு…” என்று அபிநயாவும், இந்திராவும் கூற, “தாய் மாமன் நான்… அதனால மாமா எனக்கு…” என்று ரகுநந்தன் கெத்தாக கூற, கவின் யாருக்கு அந்த கார் கேக்கின் முதல் பகுதியை கொடுத்தான் என்று அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் தான் தெரியும்.

     ஆனால், அந்த மாலை பொழுது அவர்களுக்கு சற்று வண்ணமயத்தோடு, அழகாவே அமைந்திருந்தது. அவர்களோடு, நம் விடியலும் வண்ணமயத்தோடு அழகாக விடியட்டும்!

அன்புடன்,

அகிலா கண்ணன்.