SY20

SY20

சரி © 20

 

வார இறுதியில் சித்தார்த்தின் வீட்டில் இருந்து இம்முறை அவன் தாயார் பாமா, தந்தை மார்தாண்டம், பெரியப்பா சிவநேசன் மற்றும் பெரியம்மா ரமணி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் யோகியின் தாய் சரண்யா, யோகியின் கட்டாயத்தின் பேரில் கிளம்பி வந்திருந்தார்.

 

சித்துவும், யோகியும் சரண்யாவின் அருகில் அமர்ந்திருந்தனர். ரிதுவந்திகாவின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.

 

சம்யுக்தாவின் வீட்டு வரவேற்பறையில் அனைவரும் அமர்ந்திருக்க, சம்யுக்தாவை யாஷிகா மணப்பெண் அலங்காரத்தில் அழைத்து வந்தாள்.

 

இதென்னமா புதுசா பொண்ணு பாக்குற மாதிரி கூட்டிகிட்டு வற! வாங்க, வந்து இப்படி உக்காருங்க!, சித்துவின் தாய் பாமா, சம்யுக்தாவை தன் அருகில் அழைத்தார்.

 

யோகி மற்றும் சரண்யா ஆகியோருக்கு மட்டும் கேட்கும் தொனியில் சித்து பேச ஆரம்பித்தான், அம்மா பொண்ணு எப்படி இருக்கு?

 

சூப்பர் செலக்ஷன்டா!, சரண்யாவும் சன்னமான குரலில் பதில் கூறினார்.

 

அடுத்தபடியாக மறுபக்கம் இருந்த யோகி, அம்மா பொண்ணு எப்படி இருக்கு?, என்று சரண்யாவிற்கு மட்டும் கேட்குமாறு கேட்டான்.

 

டேய்! ரெண்டு பேரும் தனித்தனியா கேக்குறீங்க? ரெண்டு பேருக்கும் வேற வேற பதிலா சொல்ல முடியும்!, சரண்யா செல்லமாக அலுத்துக்கொண்டார்.

 

அம்மா, அவன் கேட்டது வேற பொண்ண. நா கேக்குறது வேற பொண்ண!, யோகி.

 

வேற வேறன்னா? எல்லாப் பொண்ணுமோ நல்லாத்தான்டா இருக்கு! டேய்… ஆமா… இப்ப எதுக்கு நீ கேக்குற? அதுவும் வேற பொண்ண!, சரண்யா ஆச்சரியத்துடன் மகனை கேட்டுக்கொண்டே யாஷிகாவை நோக்கினார்.

 

அம்மா, இப்பவே ஒங்க பையனுக்கும் பொண்ணு பாக்குற வேலைய முடிச்சிருங்க! அதுக்குத்தான் கேக்குறான்!, சித்து சற்று புரியும்படியும் புரியாத மாதிரியும் கூறினான்.

 

என்னடா சொல்ற! அந்தத் தோழிப் பொண்ணையா?, சரண்யா.

 

ஆமாம்மா, அதேதான்! விடாதீங்க புடுச்சுக்கோங்க!, சித்து.

 

அங்கிருந்து எழ முயன்ற யோகியை கையில் பிடித்துக்கொண்டார் சரண்யாஎங்கப்பா ராசா ஓட்ற! உக்காரு!, மெதுவாகச் சொன்னார்.

 

இவர்களின் சம்பாஷனைகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, சம்யுக்தாவிற்கு, சித்துவின் தாய் பூ வைத்து அலங்காரம் செய்துகொண்டிருந்தார்.  சம்யுக்தாவின் தாயார், திலீபன், யாஷிகா ஆகியோரின் உதவியுடன் காபி, சிற்றுண்டி கொடுக்க, அனைவரும் சுவைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர். சம்யுவின் தந்தை அன்று வீட்டுக்கு வரமுடியவில்லை.

 

யோகி, யாஷிகாவை அழைத்து தாய் சரண்யாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். யாஷிகா யோகி அறிமுகம் செய்து வைத்ததும், காலைத் தொட்டு ஆசீர்வாதம் வழங்குமாறு குனிந்தாள். அதற்குள் தடுத்து நிறுத்தினார் சரண்யா.

 

அந்த வரவேற்பறையில் இருந்த அனைவரும் அதை கவனித்தனர். சித்துவின் வீட்டாருக்கு மட்டுமே யாஷிகா-யோகி விசயம் தெரியாது. அதனால், அவர்களைத் தவிர மற்றவர்கள் அவரவர் வேலையில், பேச்சில் மும்முரமாய் இருந்தனர்.

 

சித்துவின் தாயார் பாமாவை அழைத்து, விசயத்தை கூறினார் சரண்யா. இருவரும் யாஷிகாவின் கையைப் பற்றிக்கொண்டு, மிகவும் அந்நியோந்யமாக பேசியது யாஷிகாவிற்கு பிடித்திருந்தது.

 

திலீபன் அன்றைய நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். அவனை அருகில் அழைத்த யோகி, தன் தாய் மற்றும் யாஷிகாவுடன், தன்னை ஒரு புகைப்படம் எடுக்கச் சொல்லி, அதை அலைபேசியில் சேமித்துக்கொண்டான்.

©©|©©

 

சித்துவும், யோகியும் டி-நகரில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் வரை வந்து அனைவரையும் வழியனுப்பி வைத்தனர். பேருந்தில் சரண்யா, பாமாவின் அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு, பேருந்து கிளம்ப ஆரம்பித்தவுடன் பேச ஆரம்பித்தார்.

 

சித்துவுக்கு கல்யாண தேதி என்னக்கு முடிவு பண்ணியிருக்கீங்க அத்தாச்சி?, சரண்யா

 

ஏற்கனவே சொல்லலையா அத்தாச்சி! அடுத்த மாசம் இருபத்தி நாலு அல்லது இருபத்தேழுல வக்கிறதா இருக்கு. ரெண்டுல எதுன்னு இன்னும் முடிவு பண்ணல. ஏன்தாச்சி கேக்குறீங்க?, பாமா.

 

ஒன்னுமில்ல சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னுதான்!, சரண்யா.

 

யோகிக்கும் அப்படியே பேசி முடிச்சிற வேண்டியதுதான அத்தாச்சி!

 

முடிக்கலாம்! ஆனா, அந்த புள்ளயோட அப்பா செங்கல்பட்டுல பெரிய கான்ட்ராக்டராம்! யாரு போயிப் பேசுவா? அவுங்கப்பா இருந்தா இந்நேரம் எல்லாத்தையும் முன்ன நின்னு முடிச்சு வப்பாரு!, என்று உண்மையான வருத்தத்துடன் கூறினார் சரண்யா.

 

யோகியோட குணத்துக்கு எல்லாம் நல்லபடியா முடியும் அத்தாச்சி!

 

எங்க வீட்லருந்து எத்தன பேர் வரனும் சொல்லுங்க, யார் யாரெல்லாம் வரனும் சொல்லுங்க! நா கூட்டிகிட்டு வரேன். வாங்க போய் பொண்ணு கேப்போம்! இதெல்லாம் ஒரு மேட்ரே இல்ல அத்தாச்சி!, பாமா தைரியமூட்டினார்.

 

இப்படி நீங்கள்லாம் இருக்கறதாலதான் நானும் எம்பையனும், எங்களுக்கும் பக்கத்துல நாலுபேர் இருக்காங்கன்ற நெனப்போட வாழ்ந்துகிட்டு இருக்கோம் அத்தாச்சி!, சரண்யா.

 

விடுங்கத்தாச்சி! என்னக்கின்னு சொல்லுங்க நா சித்து அப்பாவ லீவு போட்டுட்டு கிளம்பச் சொல்றேன், பாமா.

 

அப்படியா அத்தாச்சி! ரொம்ப சந்தோசம்! எங்கண்ணனையும் நா கேக்குறேன். அது மகள யோகிக்கு எடுக்கலைன்னு ஏதும் கோவத்துல இருக்கோ என்னமோ! அதெல்லாம் நீங்க எல்லாரும் சேந்து எம்மகனுக்கு நல்லபடியா முடிச்சுவச்சிருவீங்கன்னு நம்பிக்கை இருக்கு அத்தாச்சி! ஆனா, நா கேக்க வந்ததே வேற!, மேலும் புதிர் போல் பேசினார் சரண்யா.

 

வேறென்னத்தாச்சி கேக்கணும்?, பாமா.

 

சீக்கிரமா பேசி முடிச்சிட்டா, நம்ம பயலுக ரெண்டு பேருக்கும் ஒரே மேடைல கல்யாணத்தப் பண்ணி பாக்கலாம்னு ஒரு நப்பாசை! அதான் கேக்கலாமா, வேணாமான்னு ஒரே யோசனையா இருந்துச்சு!

 

அது வந்து…, என்று இழுத்தார் பாமா.

 

முடியாதுன்னா நா கட்டாயப்படுத்தல!, சரண்யா.

 

அதுக்கில்ல அத்தாச்சி! இது நம்ம மட்டும் முடிவெடுக்க முடியாதுல்ல! மத்த எல்லார்கிட்டயும் கேக்கணும்! அப்பறம் நம்ம வீட்டு வாரிசுக, அதான் கல்யாண மாப்பிள்ளைகள்டயும் பேசி முடிவெடுக்கணுமே! அதான் யோசிச்சேன்

 

நீங்கதான் எப்படியாவது இத ஆரம்பிச்சு, முடிச்சு வைக்கணும்!, என்று பாமாவின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவதுபோல் கேட்டார் சரண்யா.

 

பாமாவிற்கு தர்மசங்கடமாக தோன்றிற்று. ஆனால், சிறுவயதிலிருந்தே சித்துவும், யோகியும் ஒன்றாக எல்லாவற்றையும் செய்துகொண்டிருப்பதால் பாமாவும் இம்மாதிரி சில வேளைகளில் நினைத்ததுண்டு.

 

தன் குடும்பத்தில் அனைவரிடமும் கூறி, முயற்சிப்பதாக பாமா கூறினார். அதற்கு முன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம், யாஷிகாவின் வீட்டில் சம்மதம் வாங்கி, நிச்சயம் செய்துவிட வேண்டும் என்றும் கூறினார்.

 

யோகி-யாஷிகாவின் நிச்சயம், யோகியே யூகிக்காத அளவில் போய்கொண்டிருந்தது!

©©|©©

 

அந்த வார இறுதியில், சித்து மட்டும் மதுரைக்குக் கிளம்பினான். மறுநாள் சம்யுக்தாவின் வீட்டில் இருந்து எல்லோரும் தன் வீட்டிற்கு வருவதால் அவனுக்கு ஏக சந்தோசம். வீடறிதலுக்கு சம்யுக்தா வரத் தேவையில்லை என்று கூறியும், அவள் பிடிவாதமாக பெற்றோருடன் கிளம்பினாள். உடன் தம்பி திலீபனும் வருகிறான்.

 

அனைவரையும் வரவேற்க வெள்ளிக்கிழமை மாலையே மதுரைக்கு கிளம்பிய சித்துவை, பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு ஏஆர் கஃபே வந்து சேர்ந்தான் யோகி.

 

வெளியில் தன் முதலாளியின் வாகனம் நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு சற்று அவசரமாக அலுவலக அறைக்கு வந்தான். உள்ளே ராஜசிம்மன் அமர்ந்து ஏதோ அருந்திக்கொண்டிருந்தார்.

 

வாங்க யோகி! எங்க திடீர் விஜயம்!, ராஜு.

 

சித்து ஊருக்குப் போறான் சார்! அதான் டிராப் பண்ணிட்டு வந்தேன்! நாளைக்கு சம்யு வீட்லருந்து எல்லாரும் சித்து வீட்டுக்கு போறாங்க சார், யோகி.

 

ம்! கல்யாண வேலையெல்லாம் ஜரூரா நடக்குதுன்னு சொல்லுங்க!

 

எஸ் சார்!

 

உக்காருங்க யோகி! சித்துவோட கல்யாண வேலையில நீங்க ரொம்ப பிஸியா?

 

எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டே யோகி பேசினான், ரொம்ப பிஸியெல்லாம் ஒன்னுமில்ல சார்! மஹால், சாப்பாடுன்னு எல்லா பெரிய வேலைகளையும்  பெரியவங்களே பாத்துக்கிறாங்க சார்! அதுனால சித்துவுக்கோ, எனக்கோ ரொம்ப வேலை ஒன்னும் இல்ல சார், யோகி.

 

ஒங்க வீட்ல, ஒங்க கல்யாணத்தப் பத்தி எதுவும் ஸ்டெப் எடுத்துருக்காங்களா யோகி?, ராஜு.

 

யாஷிகா வீட்டுக்குப் போகனும்னு அம்மா சொல்லிட்டிருந்தாங்க சார். ஆனா, இன்னும் ஒன்னும் செட் ஆகல. அவங்க கூட யாராவது வந்தாத்தான் பேசுறதுக்கு நல்லாருக்கும்னு நெனக்கிறாங்க சார்

 

அதுவும் சரிதான். நீங்க கார் ஓட்டுவீங்களா?, ராஜு.

 

சம்பந்தமே இல்லாமல் திடீரென இவ்வாறு கேட்டது யோகிக்கு புரியவில்லை. இருந்தாலும், முதலாளியின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கூறத்தானே வேண்டும்!

 

ஓட்டுவேன் சார், யோகி.

 

இங்க வேலையெல்லாம் எப்படிப் போய்கிட்டு இருக்கு?, ராஜு.

 

ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு சார்! நாம எதிர் பார்த்ததவிட நல்ல பிகினிங் இருக்கு சார்!, யோகி.

 

சந்தோசம்! இப்ப நாம ஒரு இடத்துக்குப் போகனும். வாரீங்களா?

 

ஷ்யோர் சார்! எங்க சார்?

 

சொன்னத்தான் வருவீங்களா?

 

அப்படில்லாம் ஒன்னுமில்ல சார். தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி மைன்ட்செட்டோட வரலாமேன்னு கேட்டேன்!

 

அங்க போனப்பறம்தான், அங்க நடக்கறதுக்கு ஏத்தமாதிரி நம்ம மைன்ட செட் பண்ணிக்க வேண்டியிருக்கும்! சரி, நீங்க போய், ரிலாக்ஸ் பண்ணிட்டு, ரெஃப்ரஸ் ஆகி வாங்க நா வெயிட் பண்றேன்

 

தன் முதலாளி புதிர் போல் கூறியது யோகிக்கு சற்று தயக்கத்தை ஏற்படுத்தினாலும், இதுவரை தனக்கு நல்லமே நடந்திருக்கிறது என்பதை எண்ணிக்கொண்டு, பத்தே நிமிடத்தில் தன்னை தயார்படுத்திக்கொண்டு அவர் முன் வந்து நின்றான்.

 

யாஷிகாவிற்கு ஃபோன்போட்டுக் கொடுங்க யோகி, ராஜு.

 

திடீரென அவர் இவ்வாறு கேட்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை யோகி. குழப்பத்துடன், அவசரமாக அலைபேசியை எடுத்து யாஷிகாவை அழைத்தான்.

 

யாஷிகா, சார் பேசனும்னு சொல்றார்! கொஞ்சம் லைன்ல இரு ஃபோனைக் கொடுக்குறேன், யோகி.

 

சாரா! யாரு?, மறுமுனையில் யாஷிகா சந்தேகமாய் கேட்டாள்.

 

ரிது அப்பா, யாஷிகா!, யோகி.

 

ஓ! சரி, சரி கொடுங்க, யாஷிகா.

 

என்னம்மா வேலை அதிகமா? ஆர் யூ கம்ஃபர்டபிள் டு டாக் வித் மீ?, ராஜு.

 

நோ ப்ராப்ளம் அங்கிள்! வேலையெல்லாம் கிட்டத்தட்ட முடிச்சிட்டேன். கிளம்பற நேரந்தான். சொல்லுங்க அங்கிள், யாஷிகா.

 

அப்பா ஊர்லதானம்மா இருக்காரு? வெளியூருக்கு எதுவும் போயிருக்காரா?

 

ஊர்லதான் இருக்கார் அங்கிள்!

 

நா அவரப் பாக்க வறேன்னு வீட்ல சொல்றியா! வீட்ல இருந்தா பாத்து, பேசிட்டு வந்திரலாம்!

 

சொல்லிறேன் அங்கிள்! தேங்க்யூ அங்கிள்!

 

எதுக்கு தேங்க் பண்ற!

 

எங்க விசயமாத்தான அங்கிள் பேசப் போறீங்க! அதுக்குத்தான் தேங்க்ஸ்!

 

நா அப்படிச் சொல்லலயே! வேற பிஸினஸ் விசயமாக் கூட போகலாம்ல!

 

“…”

 

என்னம்மா சத்தத்த காணமே!

 

ஒன்னுமில்ல அங்கிள்! எங்களுக்குன்னு யாரு இருக்கான்னு யோசிச்சிகிட்டு இருந்தோம்! அந்த நேரத்துல நீங்க அப்பாவப் பாக்க போறேன்னு சொன்னதும் நா கொஞ்சம் எக்ஸைட் ஆகிட்டேன்! ஆனா…”, குரல் சற்று கம்மிற்று யாஷிகாவிற்கு.

 

நோ ஒர்ரிமா! ஆல்வேய்ஸ் ஐம் வித் யூ! நா இப்ப ஒங்கப்பாவ பாக்கப் போறதே அதுக்குத்தான், ஓக்கே!

 

ஓ! தேங் காட்! தேங்க்ஸ் அகென் அங்கிள்!, மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போனாள் யாஷிகா.

 

ஓக்கே! ஓக்கே! நீயும் எனக்கு ஒரு பொண்ணுதானம்மா! சரி, நா கிளம்பறேன். யோகிட்ட ஏதும் சொல்லணுமா? ஃபோன வச்சிறவா?

 

இல்ல அங்கிள்! வச்சிடுங்க

 

இப்பொழுது யோகிக்கு எங்கு, யாரை பார்க்கப் போகிறோம் என்பது நன்று புரிந்தது. தெரிய வேண்டும் என்பதற்காகவே, ஆனால் அதை நேரடியாக சொல்லாமல் யாஷிகாவிடம் பேசுவதன் மூலமாக தெரியப்படுத்தியிருந்தார் ராஜசிம்மன்.

 

போகலாமா யோகி! நீங்கதான் டிரைவ் பண்ணணும். ஒங்க விசயமா போறதுனால, கொஞ்சம் பிரைவசியா ஏதாவது பேசும்போது டிரைவர் கூட இருந்தா நல்லாருக்காது! ஸோ, அவர வீட்டுக்குப் போகச் சொல்லிட்டேன்

 

எஸ் சார்! கிளம்பலாம் சார்!, யோகி பரபரப்பானான்.

 

முதன் முறையாக தன் முதலாளியின் வாகனத்திற்கு சாரதியாய் அமர்ந்து, தன் வாழ்க்கைப் பயணத்தின் அடித்தளம் அமைக்க மகிழ்வுடன் கிளம்பினான்.

©©|©©

 

சம்யுக்தாவின் வீடு வரை சென்று வந்த அசதியில், மதிய உணவிற்குப் பின் சற்று ஓய்வெடுக்கலாம் என்று படுக்கையில் சாய்ந்த ரிதுவந்திகா உறங்கிப் போயிருந்தாள். அந்தி சாயும் வரை அவள் எழவில்லை.

 

தாயார் திலோத்தமையும் பார்த்துவிட்டு, அவளை எழுப்ப மனமின்றி திரும்பிப் போனார். அவர் வந்து போன ஆள் அரவம் ரிதுவின் ஆழ்ந்த தூக்கத்தை சற்று களைத்தது. எழுந்து பார்த்து திகைத்தாள். வெகுநாட்களுக்குப் பிறகு, பகலில் இப்படி ஒரு தூக்கமா!

 

ரிதுவந்திகாவினால் தன் செயலை நம்ப முடியவில்லை. படுக்கையில் இருந்து எழுந்தவள், பக்கத்து மேசையில் படபடத்துக்கொண்டிருந்த ஒரு காகித உறையைக் கவனித்தாள்.

 

அன்பு மகளுக்கு,

அப்பாவின் தேடல்!

என்ற வாசகத்துடன் இருந்த அந்த காகித உறைக்குள் என்ன இருக்கும் என்று ரிதவந்திகாவால் யூகிக்க முடிந்தது.

 

தான் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தன் தந்தை வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்று உணந்தாள். இப்பொழுதெல்லாம் தந்தை ராஜசிம்மன் அடிக்கடி பகல் நேரங்களில் வீட்டிற்கு வந்து செல்கிறார். அவரின் இந்த செயல், தாய் திலோத்தமைக்கு சற்று மன நிறைவைத் தருகிறது.

 

அந்த காகித உறையை கையில் எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்து தன் தாயைத் தேடினாள். அவர் சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார்.

 

வாம்மா, நல்லா தூங்குன போல! வந்து பாத்தேன். எழுப்ப மனசில்லாம திரும்பிட்டேன். ரொம்ப அசதியோ?

 

எனக்கே தெரியலம்மா! நல்லாத் தூங்கிட்டேன், ரிது.

 

சரி, என்ன குடிக்கிற? காபி, டீ, பால்? பாதாம் போட்டுத் தரவா? சூப்பர் பால்! பண்ணைல இருந்து இப்பதான் வந்துச்சு, காய்ச்சிகிட்டே இருக்கேன்!, திலோ.

 

அதெல்லாம் இருக்கட்டும்மா! இதென்ன?, என்று கையில் இருந்த காகித உறையைக் காண்பித்துக் கேட்டாள் ரிது.

 

அருகில் நின்றிருந்த பணிப்பெண்ணிடம் பாலை காய்ச்சி எடுத்துவருமாறு சைகையில் கூறிவிட்டு அதுவா…, அப்பா மதியத்துக்கு மேல வீட்டுக்கு வந்திருந்தார்மா. ஒன்னப் பாத்துட்டு, பேசிட்டுப் போயிறலாம்னு மேல வந்தார். நீ தூங்கிட்டு இருந்தியா, அதுனால அங்கயே வச்சிட்டு போயிட்டார். பாத்தியா! உனக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்கா? என்று திலோ கேட்டுக்கொண்டே, ரிதுவை சமையலறையில் இருந்து தள்ளிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தார்.

 

எதுக்கும்மா இப்ப அவசரப் படுத்துறீங்க?, ரிது அழுவதுபோல் கேட்டாள்.

 

அவசரமெல்லாம் ஒன்னுமே இல்லமா! நாங்களும் எங்க பங்குக்கு ஸ்டெப் எடுக்கணும்ல!, திலோ.

 

ஸ்டெப்தான, எடுங்க! நல்லா எடுங்க! ஆனா கொஞ்சமாவது கேப் உடுங்களேம்மா!, என்று கூறிய ரிது பொத்தென அங்கிருந்த பெரிய சோபாவில் அமர்ந்தாள்.

 

அருகில் அமர்ந்த தாய், அவளின் தலையை லேசாக வருடியவாறே, ஒனக்கு வேண்டாம்னா, விட்டுடுவோம்மா! ஆனா ஒனக்கு ஒன்னு தெரியுமா? இது மாதிரி வரன்கள் நிறைய வந்துகிட்டே இருக்கு! அப்பாதான் நீ கொஞ்ச நாளாவது ஃப்ரீயா இருக்கட்டுமேன்னு யாரையும் கன்சிடரே பண்ணல

 

அப்பறமென்ன! அப்படியே விட்ற வேண்டியதானே?, ரிது.

 

ஆனா, அன்னக்கி நீ அழுத சத்தம் லேசா அவர் காதுல விழுந்துருக்கு! அதையே அவரால தாங்கிக்க முடியல! எதா இருந்தாலும் தீர்வுன்னு ஒன்னு இருக்கணும்ல ரிது! அது என்னவா இருக்கும்? இதுதான! அதுனாலதான், ஒடனே அவரோட கான்டாக்ட்ல இருந்த ஒரு ஃப்ரண்டு மூலமா வந்த இந்த வரனோட ஃபோட்டோவ அனுப்பச் சொல்லி மெயில் பண்ணிருக்காரு. அதுக்கப்பறம் இன்னிக்குத்தான் பையனோட அப்பாவே நேர்ல வந்து, பாத்து இந்த ஃபோட்டோ, ஜாதகமெல்லாம் குடுத்துத்துட்டு போயிருக்காரு. அதெல்லாம் எனக்கே இப்பத்தாம்மா தெரியும்!

 

இந்த மெயில் பண்றது, ஃபோட்டோ கேக்குறதெல்லாம் நீங்களும் அப்பாவுமே பாத்துக்கோங்க! எம்மேல அப்பாவுக்கு எவ்ளோ அன்பும், அக்கறையும் இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்மா! அதுனால, நீங்க ரெண்டு பேரும் சேந்து முடிவு பண்ணி, யாருக்குக் கழுத்த நீட்டச் சொல்றீங்களோ, அவருக்கே நீட்றேன்! ஆனா, இப்ப என்ன விட்ருங்க, ப்ளீஸ்!, ரிது முடிவாக கூறிவிட்டு எழுந்து, வெளியில் வந்து, அங்கிருந்த அழகான தோட்டத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டாள்.

 

எல்லோர்க்கும்.
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லார்க்கும்.
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே                                            (2)

 

வினாக்களும் கனாக்களும்
வீணாக ஏன்
பொன்நாள் வரும் கைக் கூடிடும்
போராட்டமே
நாளை என்றோர் நாளை நம்புங்கள்

 

எல்லோர்க்கும்.
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லார்க்கும்.
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

 

மண் மீதிலே
எந்த ஜீவனுக்கும் அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே
ஓர் ஆயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்   (2)

 

நினைத்தது நடப்பது எவன் வசம்
அனைத்தையும் முடிப்பது அவன் வசம்
தெய்வம் என்ற ஒன்றை நம்புங்கள்

 

எல்லோர்க்கும்.
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லார்க்கும்.
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே                         (2)

©©|©©s

Leave a Reply

error: Content is protected !!