Oh Papa Laali–Epi 12

அத்தியாயம் 12

செந்தோசா ஹைலண்ட் எனும் இந்தத் தீவு சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய ஓரிடமாகும். சிலோசோ கடற்கரை, வண்ணத்துப்பூச்சி சரணாலயம், டோல்பின் ஷோ, கோ கார்ட் ரைட் என எல்லா வயதினருக்கும் ஏற்ற இடம் இந்த செந்தோசா ஹைலண்ட்.

 

அவர்கள் வான்மதியின் கொண்டேவுக்குத் தனிக்குடித்தனம் வந்து மூன்று மாதங்கள் ஓடி இருந்தன. சூர்யா பிரிண்டிங் பிஸ்னஸ் மற்றும் தொடர் தொலைக்காட்சி நாடகங்கள் என மிக மிக பிசியாக இருந்தான். இதற்கிடையில் ஒரு வாரம் ஷூட்டிங்குக்கு இந்தியா வேறு சென்று வந்திருந்தான். இந்நாட்டில் உள்ள மக்களின் தொலைந்து போன உறவுகளை கண்டுப்பிடிக்கும் தொடர் அது.

இந்தியாவின் பல கிராமங்களுக்குப் பயணிக்க வேண்டி இருந்ததால் வான்மதியை அழைத்துப் போகவில்லை அவன். அந்த ஒரு வாரமும் அவனைப் பாடாய்படுத்தி விட்டாள் பெண். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை போன் போட்டு, பிசியில் இவன் எடுக்காவிட்டால் விடாமல் மேசேஜ் போட்டு என சூர்யாவை படுத்தி எடுத்து விட்டாள். ஷூட்டிங்கை முடித்து எப்போதடா போய் சிங்கப்பூர் சேர்வோம் என நொந்துப் போய் விட்டான் இவன்.

அன்று மிகவும் களைத்துப் போய் வீடு திரும்பினான் சூர்யா. வீடு வந்த கணவனுக்கு டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் வான்மதி. வேலைக்கு ஆட்கள் வாரம் ஐந்து முறை வருவார்கள். அவர்கள் செய்ததில் திருப்தி இல்லாமல் இவளும் மறுபடி சுத்தம் செய்யும் பணியை செய்வாள். ஆனாலும் வீட்டோடு வேலையாட்களை வைத்துக் கொள்வதில் இருவருக்கும் இஸ்டமில்லை. சமையல் செய்ய முடியாத நாட்களில் உணவை ஆர்டர் செய்து வீட்டுக்கே வரவழைப்பாள் வான்மதி.

“வர்மன், டீ குடிச்சிட்டுப் போய் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்”

“ஹ்ம்ம் சரிம்மா” என்றவன், டீ குடித்ததும் அப்படியே சோபாவிலே சரிந்துக் கொண்டான். பல இடங்களுக்கு ஷூட்டிங் என அலைந்தக் களைப்பு அவனுக்கு. கண்கள் மெல்ல சொருக,

“வர்மன்” எனும் அழைப்பில் கண்ணைத் திறந்தான்.

“போய் குளிங்க வர்மன்! ப்ளீஸ்! வெளிய போய்ட்டு வந்ததும் குளிச்சிடனும்” என சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போல சொன்னவள், சாப்பாட்டை எடுத்து வைக்க கிச்சனுக்குப் போனாள். பத்து நிமிடம் கழித்து வந்து பார்த்தால், சோபாவிலேயே உறங்கி இருந்தான் சூர்யா.

அவனை தொட்டு அசைத்தாள் வான்மதி.

“வர்மன், எழுந்துக்கோங்க! குளிச்சிட்டு, சாப்பிட்டு தூங்கலாம். ப்ளீஸ் எழுந்துக்கோங்க”

கண்ணைத் திறக்க முடியாமல் திறந்தவனுக்கோ கோபம் பட்டென மூண்டது தன் மனைவியின் மேல்.

“நான் என்ன சின்ன பிள்ளையா மதி? எனக்குக் குளிக்கத் தெரியாதா? இல்ல சாப்பிடத் தான் தெரியாதா? சும்மா சும்மா குளி, சாப்பிடு, இத செய், அத செய்னு நொச்சுப் பண்ணாதே! எரிச்சலா வருது” என தூக்கத்தில் எழுப்பவும் கண்கள் செவ்வரியோடியிருக்க, சத்தம் போட்டவன் ரூமுக்குள் நுழைந்து கதவை அடித்து சாத்தினான்.

எப்பொழுதும் தான் சொன்னதை எல்லாம் கேட்கும் சாந்தமான வர்மன், தன் பெயருக்கேற்ப சூரியனாய் தகித்ததை தாங்க முடியாமல் விக்கித்து நின்றாள் வான்மதி.

படபடத்த நெஞ்சை நீவி விட்டப்படி சோபாவிலேயே அமர்ந்துக் கொண்டாள் பாவை. ரூமுக்குள் சென்றவன், அப்படியே கட்டிலில் சரிந்தான். அடித்துப் போட்ட மாதிரி மூன்று மணி நேரம் தூங்கியவன், பசியில் வயிறு சத்தமிட எழுந்து அமர்ந்துக் கொண்டான். எழுந்ததும் தன்னவளைக் கடிந்துக் கொண்ட நினைவுகளும் கண் முன்னே எழுந்து நின்றது.

“இடியட்! அறிவே இல்லடா உனக்கு. வெளிய உள்ள டென்ஷன இப்படித்தான் பொண்டாட்டி கிட்ட காட்டறதா! ஸ்டுப்பீட்!” என தன்னையே கடிந்துக் கொண்டவன் அவசரமாக குளிக்கப் போனான்.

வெளியே வந்தவன் கண்டது ஹோல் சோபாவிலேயே கண்ணீர் கறையுடன் தூங்கிக் கொண்டிருந்த தன் அழகு மனைவியைத் தான். அவள் கோலம் கண்டு மனம் வலிக்க, மெல்ல அவளை நெருங்கினான். அவள் கண்ணீர் கறையைத் தன் உதட்டாலே இவன் ஒற்றி எடுக்க, படக்கென விழித்துக் கொண்டாள் பெண்.

“வர்மன்… சாரி வர்மன்! இனிமே அப்படிலாம் செய்ய மாட்டேன் வர்மன். குளிக்க சொல்ல மாட்டேன், பிரஸ் பண்ண சொல்ல மாட்டேன், தலை சீவ சொல்ல மாட்டேன்! எதுவும் சொல்ல மாட்டேன் வர்மன். என் கிட்ட இப்படிலாம் கோச்சிக்காதீங்க வர்மன்” மீண்டும் மடை திறந்தது.

“சாரிடா குட்டி! என்னை மன்னிச்சிரு. ஏதோ வோர்க் டென்சன். உன் கிட்ட காட்டிட்டேன். ரியலி சாரிடாம்மா” என சமாதானப்படுத்தியவன், அவளை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டான்.

“இன்னிக்கு என் பேபிம்மாக்கு என் கையால நானே ஊட்டி விடுவேன்” என சொல்லியவன், டைனிங் டேபிளில் அவளை அமர்த்தி உணவை ஊட்டிவிட்டான். கண் கலங்க சாப்பிட்டவள், தன் கையால் அவனுக்கும் ஊட்டிவிட்டாள். அன்றைய பிரச்சனை அப்படியே அமுங்கிப் போனது.

அன்று மதிய வேளையே வீட்டுக்கு வந்திருந்தான் சூர்யா. வான்மதி மெகஷினுக்காக ஒரு ஆர்ட்டிகள் எழுதும் வேலையில் இருந்தாள்.

மனைவியை நெருங்கி கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தவன்,

“சீக்கிரம் கிளம்பி போகனும்! சேன்னல் பைவ்ல ஒரு ட்ராமால நடிக்க காண்ட்ரேக்ட் போட்டிருந்தாங்க. அதுல சம் டிஸ்க்கிரிபன்சிஸ். ரெண்டு மணிக்கு மீட்டிங். இப்பவே மணி ஒன்னாச்சு.” என சொல்லியபடியே தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

அவனது வார்ட்ரோபில் வைத்திருந்த பைலை காணோம்.

‘இவ இருக்காளே! இவளோட வேலையாத்தான் இருக்கும்’

“மதி!” என சத்தமாக கூப்பிட்டான்.

“யெஸ் வர்மன்!”

“என் பைல் எங்கடி?”

“புக் கபோர்ட்ல பாருங்க வர்மன். இந்த ஆர்டிகள் இப்போத்தான் ஒரு ப்ளோல போகுது. இப்போ எழுந்து வந்தா மறுபடி ப்ளோ வராது.”

“உன்ன யாரு என் கபோர்ட்ட நோண்ட சொன்னது?”

“இல்ல வர்மன்! இறைஞ்சி கடக்குதேன்னு அடுக்கி வச்சேன்”

“கடவுளே, சுத்தம் பண்ணவாச்சும் எனக்கு ஒரு பொண்ண குடுன்னு கேட்டதுக்கு, அச்சுப்பிசகாம அப்படியே ஒரு பொண்ண குடுத்துட்டியேய்யா! என்னே உன் கருணை!” சிலிங்கைப் பார்த்து கடுப்பாக மொழிந்தவன், புத்தக அலமாரி இருக்கும் அறைக்கு அவசரமாக ஓடினான்.

அல்பபெட்டிகல் ஆர்டரில் எல்லா பைலையும் அழகாக அடுக்கி வைத்திருந்தாள் அவன் மனைவி. இவன் பைல் என்ன ஆர்டரில் வருகிறது என தெரியாமல் அவசர அவசரமாகத் தேடினான் சூர்யா. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு, பொன்னான பத்து நிமிடங்கள் வீணாக போய் கடைசியில் டபில்யூ வரிசையில் கிடைத்து இவன் பைல். அதை எடுத்துக் கொண்டு அவன் திரும்ப, அங்கே பத்ரகாளி முறைப்பில் நின்றிருந்தாள் வான்மதி.

“என்னடி?”

“என்ன வர்மன் இப்படி எல்லாத்தையும் களைச்சுப் போட்டு வச்சிருக்கீங்க?”

“உன்னை யாரும்மா என்னோட பொருள என்னைக் கேட்காம இங்க கொண்டு வந்து வைக்க சொன்னா? பாரு, தேடி எடுக்கவே எனக்கு எவ்வளவு நேரம் ஆச்சுன்னு”

“கண்டுப்பிடிக்க முடியலைன்னு ஒரு குரல் கொடுத்திருந்தா நான் வந்து எடுத்துக் குடுத்துருப்பேன்ல வர்மன்.”

“உன் மேல தான் தப்பு வான்மதி! என் பைல எடுத்ததும் இல்லாம பைத்தியம் மாதிரி அல்பபெட்டிகல் ஆர்டர்ல அடுக்கலன்னு இப்ப யாரு அழுதா!”

“வ..வர்மன்! பைத்தியம் சொல்லாதீங்க ப்ளிஸ்” மெல்ல குரலை உயர்த்தினாள் வான்மதி.

“பைத்தியத்த பைத்தியம்னு தான் சொல்லுவாங்க! சட்டைலாம் கூட கலர் கோட் போட்டு அடுக்கி வைக்கற, டப்பர்வேர்லாம் சைஸ் வாரியா, கலர் வாரியா அடுக்கி வைக்கற! சரி அதெல்லாம் விடு! என் அண்டர்வேரயாச்சும் விட்டு வச்சியா? அதுக்கும் கூட கலர் கார்டினேட் பண்ணி அடுக்கி வச்சிருக்கற நீ பைத்தியம் இல்லாம வேற என்ன!”

“சொல்லாதீங்க, அந்த வார்த்தைய சொல்லாதீங்க! பைத்தியம் சொல்லாதீங்க வர்மன்! ப்ளிஸ் அப்படி சொல்லாதீங்க” என ஹிஸ்டீரியா வந்தது போல திரும்ப திரும்ப கத்தி சொன்னவள் இவன் சுதாரித்து அருகே நெருங்கும் முன்னே மயங்கி விழுந்திருந்தாள். விழுந்தவளின் நெற்றி ஸ்டடி டேபிளின் முனையில் முட்டிக் கொள்ள, ரத்தம் பீரிட்டு வந்தது.

“மதிம்மா” எனும் அலறலுடன் அவளை நெருங்கினான் சூர்யவர்மன். மயக்கத்தில் கூட வாய்,

“நான் பைத்தியம் இல்ல, இல்ல, இல்ல” என முணுமுணுத்தது.

பாடுவான்…..