AOA-14

அவனன்றி ஓரணுவும் – 14

பூமியின் மேற்பரப்பு(lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளாட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும் நீரின் அடியுலுமாக உள்ள இந்த பிளேட்டுகள் உராயும் போது நிலஅதிர்வுகள் உண்டாகும்.

3 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வை உணர்வது கடினம். 7 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு பெரும் சேதத்தை ஏற்படுத்தவல்லன. வரலாற்றில் பதிவான மிக பெரிய நிலநடுக்கங்கள் 9.0 ரிகடருக்கும் கூடுதலானவை. (2011 அண்மையில் நிகழ்ந்த ஜப்பான் நிலநடுக்கம்)   

டிசேஸ்டர்

இரவு நடந்தது என்னவென்று நான் யோசித்து கொண்டிருக்கும் போதே எனக்கு நினைவு தப்பிவிட்டது. நான் விழித்த போது செம்மை பூசியிருந்த வானம் சூரியனின் வருகையை எனக்கு அறிவித்து கொண்டிருந்தது.

அப்பொழுதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. தான் இத்தனை நேரம் மயக்கநிலையில் இருந்திருக்கின்றேன்!

ஆனால் எப்படி? எதனால்? எனக்குள் அதிர்ச்சி பரவ ஆரம்பித்தது. அவசரமாக எழுந்து கொள்ள பார்த்தேன். ஆனால் இன்னும் என் மயக்கம் முழுவதுமாக தெளியவில்லை போலும். உடல் ரொம்பவும் பாரமாக இருந்தது. தலையில் பாரங்கல்லை வைத்து அழுத்தியது போன்ற உணர்வு. அதற்கு மேல் எழுந்து கொள்ளும் என் முயற்சியை கைவிட்டுவிட்டு மீண்டும் படுத்து கொண்டேன்.

வேகமாக என் மூளை இரவு நடந்தவற்றை பற்றி ஆராய தொடங்கின. ஏதேனும் பூச்சி அல்லது பாம்பு என்னை கடித்திருக்குமோ என்ற யோசனை!

இருக்கலாம்! ஆனால் இத்தனை நேரம் நான் உயிரோடு இருக்கும் பட்சத்தில் அது விஷக்கடியாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றிற்று. ஆனால் அதுவும் தீர்க்கமாக தெரியவில்லை. இப்படியெல்லாம் எனக்கு சில முறைகள் நடந்திருக்கிறது. ஆனால் நினைவு தப்பி மயங்கியதெல்லாம் கிடையாது.

மீண்டும் நான் மெல்ல எழுந்து கொள்ள முயன்றேன். உம்ஹும்… முடியவில்லை. என் முயற்சியில் மீண்டும் பலத்த தோல்வி. லேசாக பயம் எட்டி பார்த்தது. இப்படியே படுத்து கிடந்தால் தன்னை ஏதாவது காட்டு விலங்குகள் வேட்டையாட கூடும். யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று பார்த்தால் மனித நடமாட்டமே சுற்றிலும் இருப்பதாக தெரியவில்லை.

என் மனம் தீங்கை எடைபோட்டது. சில விஷக்கடிகள் மனிதனின் உடலின் அத்தனை பாகங்களையும் செயலிழக்க செய்துவிடும். கடைசியாக இதயம் செயலிழந்து உயிர் போகும்.

ஒருவேளை அப்படிதான் எனக்கு நடக்கிறதா? இதுதான் தன் வாழ்க்கையின் கடைசி  பயணமா? எங்கேயோ பிறந்த நான்  இங்கே வந்து என் மரணத்தை தழுவ போகிறேனா ? எல்லாமே  இதோடு முடிந்து போய்விடுமா? எனக்கு அந்த நொடியும் மரணத்தை குறித்த பயமில்லை. என் தேடல்கள் விடையில்லாமல் போய்விடுமே என்றுதான் வருத்தமாக இருந்தது.

போகட்டும். என்னை நானே ஆசுவாசப்படுத்தி கொண்டேன்.  இதுதான் முடிவென்றால் அதை மனதார ஏற்று கொள்ள வேண்டும்.

பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இறப்பதுதான் இயற்கையின் சாசுவாதமான நியதி. இன்றுதான் என் கடைசி நாள் என்றால் அதற்கு என்னை நான் தயார் செய்து கொள்ள வேண்டும். அழுது புலம்பி கண்ணீரோடும் வேதனையோடும் நான் மறிப்பதை ஒருபோதும் விரும்பவில்லை.

என் வாழ்க்கையில் அப்படியான அதிருப்திகள், கவலைகள் என்று எதுவுமே இல்லாத போது நான் அழ வேண்டிய அவசியமென்ன? அதுவும்  நான் அதிகமாக  நேசித்தது இந்த பூமியைத்தான். என் தேகம் நான் நேசித்த இந்த பூமியின் மீது கிடக்கிறது.

இப்படியே என் உயிர் பிரிந்தாலும் அது இன்பகரமான விஷயம்தான் என்று எண்ணி கொண்டே முகத்தில் புன்னகையோடு ஆகாயத்தை பார்த்தேன்.

நெடுநெடுவென உயர்ந்து வளர்ந்த மரங்களின் இடைவெளிகளில் சூரியகிரணங்கள் உள்நுழைத்து கொண்டிருந்தன. பசுமையான மரக்கிளைகளுக்கு இடையில் வண்ணமயமான பறவையினங்கள் அந்த விடியலின் வருகையை க்ரீச் க்ரீச் என்று சத்தமிட்டு ரசனையாக வரவேற்று கொண்டிருந்தன.

அவைதாம் எத்தனை அழகான காட்சிகள். விவரிக்க வார்த்தைகளே இல்லை. எத்தனை முறை பார்த்தாலும் இந்த மாதிரியான காட்சிகளை ரசிக்காமல் இருக்கவே முடியாது. மனிதனை தவிர மற்ற எல்லா ஜீவராசிகளும் இயற்கையை ஆராதிக்கின்றன. ஆனால் இன்றைய காலகட்ட மனிதனுக்கு அவற்றை ரசிக்கும் பொறுமையும் இல்லை. ரசனையும் இல்லை.

கற்கால மனிதன் அப்படி வாழ்ந்திருப்பான். பணத்தின் தேவை இல்லாத மனிதன் அப்படி வாழ்ந்திருப்பான். அதிகார பித்து இல்லாத மனிதன் அப்படி வாழ்ந்திருப்பான். ஆடம்பரங்களை விரும்பாத மனிதன் அப்படி வாழ்ந்திருப்பான்.

ஆனால் இன்றைய மனிதனுக்கு இந்த அனைத்து பித்தும் தேவைகளும் கூடிவிட்டது. தன்னையே மறந்து இயந்திரத்தனமாக ஓடி கொண்டிருக்கிறான். ஆனால் என் வாழ்க்கை அப்படியானது இல்லை.

இயற்கையின் அழகோடு பின்னி பிணைந்த என் வாழ்க்கையின்  நொடிகள் ஒவ்வொன்றும் அழகானவை! சுவரிசியமானவை! பூமிக்கும் எனக்குமான இந்த பந்தம் விசித்திரமானவை! நான் மடிந்து இந்த பூமிக்குள் மண்ணோடு மண்ணாக கலந்துவிட போகிறேன்.

அப்படி நான் சிந்தித்து கொண்டிருக்கும் போதுதான் என்னருகிலிருந்த சில வியத்தகு விஷயங்களை நான் கவனிக்க நேரந்தது. நான் படுத்து கொண்டிருக்கும் இடம் மிகவும் மென்மையாக இருந்தது. பச்சை  இலைகளை பறித்து தரையில் யாரோ படுக்கை போன்று பரப்பியிருப்பார்கள் போலும்.

அதோடு என்னருகே நெருப்பு கங்குகள் கணனென்று கொண்டிருந்தன. மிருகங்கள் எதுவும் தீண்ட கூடாத வகையில் யாரோ செய்த முன்னேற்பாடுகள்.

அந்தளவுக்கு தன்மீது அக்கறை கொண்டு யார் இதெல்லாம் செய்திருப்பார்கள். ஒரு வேளை…  தான் இரவு கண்ட அந்த மாயபெண்ணா?

அப்போது அது என் கனவில்லையா? அந்த எண்ணம் வந்த மறுகணம் இரவு நடந்தது உண்மைதானா என்ற கேள்வி எழுந்தது.

கேள்விகளை தாண்டி நம்ப முடியாத ஆச்சரியங்களால் நான் சிலாகித்தேன். மனிதனுக்கு மறையும் சக்திகள் இருக்குமா? இல்லை அது ஏதாவது என் கற்பனையா? அது கற்பனை என்றால் தன்னை சுற்றி இருக்கும் இவையெல்லாம்….

குழுப்பமாக இருந்தது. அப்படியெனில் அந்த பெண் என் அருகில்தானே இருக்க வேண்டும்? அவள் எங்கே சென்றாள்? தலையை சுழற்றி பார்த்து தேடினேன். எந்த ஆள்அரவமும் இல்லை. யாருமே அருகாமையில்  இருப்பதாகவும் தெரியவில்லை.

நிமிடங்கள்தான் கடந்திருக்கும். ஆனால் பல மணிநேரங்கள் கடந்து போனது போல் ஒருவித சோர்வு உணர்வு என்னை ஆட்கொள்ள, எழுந்து கொள்ள முடியாத இயலாமையின் காரணத்தால் அப்படியே விழிகளை மூடி கொண்டேன்.

அப்போது யாரோ என் முகத்தில் தண்ணீரை ஊற்றினர். பதறி போய் யாரென்று விழித்து பார்த்தேன். அது அவளேதான்!

நான் மயக்கதிலிருந்தேன் என்று எண்ணி கொண்டு என் முகத்தில் தண்ணீர் தெளித்தால் போலும். அவள் இப்போது குனிந்து என் முகத்தருகே பார்த்து கொண்டிருந்தாள். மயில்தோகை போல் விரிந்த அவள் இமைகளினுள்ள கருவிழிகளில் நான் என்னையே பார்த்தேன்.

அத்தனை அழகான கண்கள் அவை. இயற்கையின் மீதான என் காதலும் ரசனையும் அவள் அழகின் முன்னே பின்வாங்கி கொண்டிருந்தன.

அவள் அத்தனை அழகு!’

பிரபஞ்சன் ஆழ்ந்து படித்து கொண்டிருக்கும் போது அவன் உடலில் ஏதோ ஒரு அதிர்வு ஏற்பட்ட உணர்வு. பதட்டத்தோடு எழுந்து நின்றான். அவன் கால்களில் ஒருவித நடுக்கம். பின்னுக்கு யாரோ இழுப்பது போன்றிருந்தது. எல்லாமே ஒரு சில நொடிகள்தான்.

அவன் மூளைக்கு எட்டிய வரை அது ஏதோ நிலஅதிர்வு என்றே தோன்றியது. ஆனால் ஊர்ஜிதமாக தெரியவில்லை. அது ஒருவேளை தன் பிரேமையாக கூட இருக்கலாம் என்றவன் யோசித்த அதேநேரம் அவன் மனதில் பதட்டமும் குடிகொண்டது.

மீண்டும் ஓர் மோசமான இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி தனக்கில்லை என்று எண்ணி கொண்டான். தன் கையிலிருந்த பக்கங்களை மேஜையில் வைத்துவிட்டு  பால்கனியிலிருந்து கடலை பார்த்தான். அமைதியாகவே காட்சியளித்தது. ஆனால் அவன் மனமோ உள்ளுர  கொந்தளித்து கொண்டிருந்தது.

எந்த நொடி என்ன நடக்குமோ என்று நரகமாக இருந்தது. அப்போதுதான் அவன் மனதிற்கு ஓர் எண்ணம் தோன்றியது. அதன் பின் வேறெதுவும் யோசிக்காமல் உடையை மாற்றி கொண்டு கீழே இறங்கினான்.

ஹரியோடு ஷெர்லி சமையலறையில் ஏதோ பேசி கொண்டிருந்தாள். அவன் முகப்பறையை கடந்து செல்லும் போது ஷெர்லி ஹரியிடம் சொன்ன வார்த்தை அவன் காதில் விழ அப்படியே நின்றுவிட்டான்.

“ஹரி… நான் வெளியே ஊஞ்சலில் இருக்கும் போது ஏதோ ஷேக்கான மாதிரி பீல் ஆச்சு” என்று அவள் உணர்வுகளை சொல்ல,

ஹரி சத்தமாக சிரித்துவிட்டு, “ஊஞ்சல்ன்னா ஷேக் ஆகத்தான் செய்யும்” என்று கேலி செய்தார்.

“அது அப்படி இல்ல ஹரி… நான் என்ன சொல்ல வரேன்னா” என்று அவள் தன் உணர்வுகளை புரிய வைக்க முடியாமல் திண்டாடி கொண்டிருந்தாள்.

அப்போது ஹரி, “நீ உன் ஹென்சம் பத்தியே யோசிச்சிட்டு இருந்திருப்ப… அதான் உனக்கு இப்படியெல்லாம் ஷேக் ஆகுற மாதிரி பீல்” என்று ஹரி சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார்.

“நோ” என்று ஷெர்லி சிணுங்கி கொண்டே மறுக்க, அப்போது  இவர்கள் சம்பாஷணைகளை கேட்டு கொண்டிருந்த பிரபாவிற்கு கோபம் பற்றி கொண்டு வந்தது ஹரி மேல்!

ஆனால் இப்போது  அவன் இருக்கும் மனநிலையில் அவர்களிடம் எதையும் கேட்டு வாதம் செய்ய விரும்பவில்லை. ஷெர்லி சொன்னபடி தனக்கு தோன்றிய அதே உணர்வு அவளையும் ஆட்கொண்டது. அப்படியெனில் அது நிலஅதிர்வுதான் என்று முடிவுக்கு வந்தான்.

வேகமாக வீட்டை விட்டு வெளியேறி கடற்கரை நோக்கி சென்றான். அவன் வெளியே செல்வதை சமையலறை சாளரம் வழியாக பார்த்த ஹரி வெளியே வந்து, “டே! பிரபா… டிபன் சாப்பிட்டிட்டு போடா” என்று அழைத்தார்.

ஆனால் அதற்குள் அவன் தன் பைக்கில் ஏறி விரைந்துவிட்டான். “என்னாச்சு இவனுக்கு… ஏன் காலையில இருந்த ஒரு மாதிரி இருக்கான்” என்றவர் வாய்விட்டு புலம்ப,

அருகிலிருந்த ஷெர்லி அவரிடம், “என்னாச்சு ஹரி?” என்று கேட்டாள்.

அவர் அவளிடம் யோசனையாக, “நேத்து நைட் எதாச்சும் நடந்துச்சா பியுட்டி?” என்று அவளிடம் கேள்வி கேட்க,

அவள் முகத்தில் வித்தியசாமான மாற்றங்கள். எதை சொல்வது? எப்படி சொல்வது? என்று அசடு வழிந்து கொண்டே, “நத்திங்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

அவர் கேட்ட விஷயம் வேறு. ஷெர்லி யோசித்த விஷயம் வேறு. இதற்கிடையில் வேகமாக சென்ற பிரபாவின்  பைக் கடற்கரை ஓரத்தில் நின்றது. இறங்கியவன் விரைவாக நடந்து அங்கு வசிக்கும் மீனவ மக்களிடம் பேசினான். அதாவது அன்று முழுவதும்  யாரும்  கடற்கரை ஓரத்தில் வசிக்க வேண்டாம் என்று எச்சிரிக்கை செய்தான். ஆனால் வெளிப்படையாக அவன் எதுவும் அவர்களிடம் சொல்லவில்லை.

அந்த மீனவர்களுக்கு அவனை சிறுவயதிலிருந்தே தெரியும். அவன் சொல்வதில் ஆழமான அர்த்தம் இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணரந்தவர்கள் அவர்கள்!

“சரிங்க தம்பி… நீங்க சொல்றது மாதிரியே செய்றோம்” என்று சொல்ல, “சீக்கிரம் அண்ணே! அப்புறம் கடல் பக்கத்தில இருக்க உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லி விடுங்க” என்று மீண்டும் அழுத்தமாக ஒரு எச்சரிக்கை செய்தான்.

அப்போது கரைகளை மோதி கொண்டிருந்த கடலலைகளை ஒருமுறை திரும்பி பார்த்தான். அமைதியாகத்தான் தென்பட்டது. இருப்பினும் அந்த அமைதியில் ஏதாவது ஆபத்து இருக்குமோ என்று அவன் மனம் பதட்டம் கொண்டது.

அவன் நெற்றியில் வியர்வை துளிகள் கசிந்தன. விழிகளை கண்ணீர் மறைத்தன. யாருக்கும் எதுவும் நேர்ந்திட விட கூடாது என்கிற அச்சத்தால் வெளிவந்த கண்ணீர் துளிகள். மீண்டும் பைக்கை எடுத்து கொண்டு தன் வீட்டை நோக்கி செலுத்த தொடங்கினான்.

அப்போது அவன் சென்ற வழிமுழுதும் அழகாக  தோரணங்கள் கட்டி தொங்கி கொண்டிருந்தன. சத்யாவின் திருமண ஏற்பாடுகள். அவர்கள் வீட்டு வாசலிலும் வாழை மர தோரணங்களும் சீரியல் பல்புகளும் அலங்கரித்திருந்தன. பந்தக்கால் நடும் விழா முடிந்திருந்தது. ஆனால் பிரபாவின் பார்வை அந்த அலங்காரங்களையும் தோரணங்களையும் பார்க்கவில்லை. உள்ளே நிரம்பியிருந்த ஜனத்திரளை பார்த்தது.

பெண்கள் குழந்தைகள் என்று உறவினர்கள் நிரம்பியிருந்தனர். கடலுக்கு வெகுஅருகாமையிலிருக்கும் வீடு அவர்களுடையது. சுனாமி வந்தால் அவர்களுக்கு ஆபத்தின் சதவீதம் அதிகம் என்று தோன்றிய மறுகணம் பைக்கை அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்திவிட்டு இறங்கினான்.

சுனாமி வரும் என்பதெல்லாம் அவன் கணிப்பு மட்டும்தான். அவன் கனவு கூட அது சம்பந்தப்பட்டதாக இல்லை. இருப்பினும் அவன் மனம் காலையில் அவன் உணர்ந்த நிலஅதிர்வை கருத்தில் கொண்டு சுனாமியோடு தொடர்புபடுத்தி கொண்டது.

வெறும் யூகம்தான் என்றாலும் அதனை அவனால் இயல்பாக எடுத்து கொள்ள முடியவில்லை. இத்தனை உயிர்களை அலட்சியம் செய்யவும் முடியவில்லை.

ஹரிக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் இருக்கும் பகைமை பற்றி யோசிக்க அது நேரமுமில்லை. அவனை பொறுத்தவரை அது ஏதோ அரத்தமற்ற பிரச்சனை என்றே தோன்ற, அவன் வேகமாக அவர்கள் வாயிலுக்குள் நுழைந்தான்.

அங்கே இருந்த யாருமே அவனை கவனிக்கவில்லை. ஆனால் வெளியே நின்றிருந்த சத்யாவின் தந்தை லோகநாதன் அவனை கவனித்துவிட்டார். அவன் வீட்டிற்குள் நுழைவதை அவர் விரும்பாமல் அவனை வழிமறித்து, “என்னடா வேணும் உனக்கு?” என்று காட்டமாக கேட்டார்.

“அது இல்ல சார்… வந்து” என்றவன் தடுமாற,

“என் பையன் கல்யாணத்துல பிரச்சனை  பண்ண வந்தியா?” என்று கேட்டார்.

அவன் பதறியபடி, “சேச்சே! அப்படி எல்லாம் இல்ல சார்” என்றான்.

“அப்புறம்” என்றவர் மேலும் கீழுமாக அவனை இளக்காரமாக பார்க்க, அவன் எப்படி தான் வந்த விஷயத்தை சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தான்.

அப்போது அவர், “ஆமா அந்த வெளிநாட்டு பொண்ணை உங்க வீட்டுலதான் தங்க வைச்சிருக்கீங்க போல” என்று கேட்கவும் அவன் உடனே, “அது ஷெர்லியா விருப்பபட்டுதான்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னர்,

“ஒ! யார் மேல விருப்பபட்டு?” என்று எள்ளலாக கேட்டார் லோகநாதன்.

பிரபஞ்சன் ஒரு நொடி அதிர்ந்து அவரை பார்க்க, அவர் குரூரமாக சிரித்தார்.

“ஷெர்லியை பத்தி பேச நான் வரல… எனக்கு வேறொரு விஷயமா உங்ககிட்ட பேசணும்” என்று அவன் பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டான்.

“அனாதை பையன்… எனக்கு உன்கிட்டஎன்னடா பேச்சு” என்றவர் சீற்றமாக சொல்லிவிட்டு,

“போடா வெளியே” என்று சத்தமாக கத்திவிட்டார். அங்கிருந்த எல்லோரும் பிரபஞ்சனை திரும்பி பார்த்தனர். தான் இனி எது சொன்னாலும் அவர்களுக்கு புரியாது என்று எண்ணி கொண்டு அவன் வேறுவழியில்லாமல் திரும்பி நடந்தான்.

பிரபா பைக்கை எடுக்காமல் வாசலிலியே நின்றான். அனாதை என்ற வார்த்தை ஒன்றும் அவனை பெரிதாக பாதித்துவிடவில்லை. அதற்கெல்லாம் வருந்தும் சாதாரண உணர்வுகள் கொண்டவனும் இல்லை. அவன் வாழ்க்கை கற்று தந்த பாடம் அத்தகையது.

அவன் வருத்தமெல்லாம் அவர் தான் சொல்ல வந்ததை இப்படி காது கொடுத்து கூட கேட்காமல் போகிறாரே என்றுதான். உடனடியாக ஏதோ யோசனை வர, தன் கைபேசி எடுத்து சத்யாவிற்கு அழைத்தான். அழைப்பு மணி அடித்த மாத்திரத்தில் எதிர்புறத்தில் இணைப்பு துண்டிக்கபட்டது.

அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது வேறொரு யோசனை வந்தது. வேகமாக தன் பைக்கை எடுத்து கொண்டு தன் வீட்டிற்கு வந்தவன்,

“ஷெர்லி” என்று அழைத்து கொண்டே உள்ளே வந்தான்.

அவள் மிகுந்த ஆர்வத்தோடு அவன் முன்னே வந்து நின்று, “டிட் யு காலட் மீ?” என்று கேட்டாள்.

“ஹம்ம்… சத்யாவுக்கு உங்க போன்ல இருந்து கொஞ்சம்  கால் பண்ணுங்க… நான் பேசணும்” என்றான்.

இவ்வளவுதானா? என்றவள் முகம் வாடி வதங்கி போக எதுக்கு ஏனென்று எல்லாம் கேட்காமல் அவள் தன் பேசியை எடுத்து சத்யாவிற்கு அழைத்தாள். ஆனால் அவள் அழைப்பையும் சத்யா அப்போது ஏற்கவில்லை.

“உஹும்.. சத்யா ஃபோனை அட்டென்ட் பண்ணல” என்றாள்.

பிரபாவிற்கு மீண்டும் ஏமாற்றமானது.

“திரும்பியும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க” என்றவன் சொல்ல, “பட்ஒய்?” என்றவள் புரியாமல் அவனை பார்க்க,

“ப்ளீஸ்!” என்றவன் காரணம் சொல்லாமல் அவளை இறைஞ்சுதலாக பார்த்தான்.

அவள் மீண்டும் அழைத்தாள். ஆனால் சத்யா அழைப்பை ஏற்கவில்லை.

பிரபா உடனே, “அவங்க வீட்டுல இருக்க வேற யாரோட நம்பராச்சும்” என்று கேட்கும் போதே, “நோ சாரி” என்றவள் மறுப்பாக தலையசைத்தாள்.

அவன் பெருமூச்செறிந்தான். அவன் அதற்கு பின் அவள் முன்னே நிற்காமல் துவண்டு போய் மாடியேறி செல்ல அப்போது ஹரி, “ஏ பிரபா! என்னடா பிரச்சனை? என்கிட்டயாச்சும் சொல்லி தொலையேன் டா” என்று கேட்டார்.

“வர கோபத்துக்கு உங்கள எதாச்சும் நல்லா திட்டி விட்டுருவேன்… போயிடுங்க” என்று கடுகடுத்தவன் மேலே ஏறி தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

“இவன் ஏன் இப்படி காலையில இருந்து லூசு மாதிரியே சுத்திக்கிட்டு இருக்கான்… இதுல என்னை எதுக்கு திட்டிட்டு போறான்” என்று அவர் யோசித்து கொண்டிருக்கும் போதே ஷெர்லி பிரபாவை பின்தொடர்ந்து அறைக்குள் சென்றாள்.

“அய்யய்யோ! இவ எதுக்கு உள்ளே போறா? இருக்கிற கடுப்பில இவளை எதாச்சும் காச்சு மூச்சுன்னு காத்திட போறான்” என்று அவரும் பதட்டத்தோடு மேலே ஏறி அறைக்குள் செல்ல எத்தனிக்க, அப்போது ஷெர்லி பிரபா அருகில் படுக்கையில் அமர்ந்து கொண்டு அவன் கைகளை பிடித்து கொண்டு ஏதோ பேசி கொண்டிருந்தாள்.

பிரபஞ்சன் அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் கோபவுணர்வு துளி கூட இல்லை. இந்த காட்சியை பார்த்த ஹரி முகம் பிரகாசமானது.

‘பாரவாயில்ல நம்ம நினைச்சுது நடக்குது… ஹம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்’ என்று எண்ணி கொண்டே அவர் அவர்களை தொந்தரவு செய்யாமல் கீழே இறங்கி சென்றுவிட்டார்.

ஆனால் அவர் நினைத்தது போல் அங்கே ஒன்றும் நடக்கவில்லை. ஷெர்லி அறையின் வாசலில் போய் நின்ற போது பிரபா தலையை பிடித்து கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தான்.

அந்த நொடி ஷெர்லி எதுவும் யோசிக்காமல் அவன் அருகில் வந்து அமர்ந்து, “வாட் ஹெப்பன் பிரபா? எதனால இவ்வளவு டென்ஷன்? யார்கிட்டயாவது உங்க பிராபளத்தை ஷேர் பண்ணா உங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டா பீல் ஆகும் இல்ல… ஒரு வேளை சொல்யுஷன் கூட கிடைக்கலாம்” என்று அவன் கண்களை பார்த்து பேசி கொண்டிருந்தாள்.

முதலில் அவள் செய்கையில் அவன் துணுக்குற்றாலும் அவள் வார்த்தைகள் அவனை அமைதிப்படுத்தின. இமைக்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

அதுவும் இவையெல்லாம் மனஉளைச்சளிலிருப்பவர்களிடம் அவன் சொல்லும் வார்த்தைகள். அந்த நொடி மனபாரம் லேசாக இறங்கிய உணர்வு!

ஷெர்லியின் வார்த்தைகள் அவன் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. ஆனால் அவன் மனநிலைக்கு அந்த ஆறுதல் வாரத்தைகள் தேவைப்பட்டது.

அவள் தன் கையை பிடித்து கொண்டு நெருக்கமாக அமர்ந்திருப்பதையெல்லாம் அப்போதைக்கு அவன் பொருட்படுத்தவில்லை. அவளிடம் ஏதோ ஒரு காந்த சக்தியிருந்தது. அருகே இருப்பவர்களை நொடி நேரத்தில் ஈர்த்து தன்வசப்படுத்தும் காந்த சக்தி அது. கிறிஸ்டோபர் அந்த மாயபெண்ணிடம் உணர்ந்த அதே சக்தி.

அது ஷெர்லி வழிவந்த சந்ததிகளின் சிறப்பம்சம். ஷெர்லிக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அது அவளின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருக்கும் ஆற்றல்!

பிரபா சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டு பின் அவளிடம் அவனுக்கு வரும் கனவுகளில் தொடங்கி கடைசியாக வந்த கனவு வரை சொல்லிமுடித்தான். இவற்றையெல்லாம் அவளிடம் பகிர்ந்து கொள்வதினால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட போகிறதென்பது பற்றியெல்லாம் அவன் யோசிக்கவில்லை.

அவன் பாரத்தை இறக்கி வைக்க எண்ணினான். ஆனால் ஷெர்லி அவன் சொல்வது அனைத்தையும் மிகுந்த சிரத்தையோடு கேட்டு முடித்தாள். நேற்று இரவு ஹரி குடிபோதையில் பிரபாவின் இன்ஸ்டிக்ட் பற்றி உளறிய சில விஷயங்களும் நினைவு வந்தன.

அவளுக்கு ஓரளவு அவன் சொல்ல வந்த விஷயம் புரிந்தது. அவள் எழுந்து நின்று கொண்டு, “ஈஎஸ்பி பவர் பத்தி நான் கேள்விபட்டிருக்கேன்…  ஆனா அதெல்லாம் உண்மைன்னு நான் பிலீவ் பண்ணல… பட் நீங்க சொல்றதை கேட்கும் போது” என்று அவள் தன் விழிகளால் வியப்பு உணர்வை வெளிப்படுத்தினாள்.

பிரபா எதுவும் பேசாமல் மௌனமாக பால்கனி பக்கம் சென்று கடலை பார்த்து கொண்டு நின்றான்.

ஷெர்லி அவன் பின்னே வந்து நின்று, “உங்களோட கனவுக்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்ப,

“உஹும் தெரியல…ஆனா என் ஈஎஸ்பிக்கும் கடலுக்கும் சம்பந்தம் இருக்கு… உங்களை காப்பதினதும் அப்படிதான்” என்றவன் கடலை வெறித்தபடியே விரக்தியாக பதிலுரைத்தான்.

ஷெர்லி இதை கேட்டு வியப்பும் களிப்பும் அடைந்த அதேநேரம் அவன் சொன்னதை பற்றி யோசித்துவிட்டு, “ஒரு வேளை ஜப்பான்ல ஃபுக்காஷிமால நடந்த மாதிரி இங்கேயும் சுனாமியால நுய்க்கிளியர் டிசெஸ்டர் நடக்குமோ?” என்று கேட்டுவிட, அதிர்ந்து அவள் புறம் திரும்பினான்.

“இப்ப என்ன சொன்னீங்க ஷெர்லி… நுய்க்கிளியர் டிசெஸ்டர்ன்ன்ன்ன்னா!!!” என்று நடுக்கத்தோடு கேட்க,

“ஹ்ம்ம் எஸ்… உங்க ட்ரீம் பத்தி கேட்கும் போது அப்படிதான் தோணுது” என்றவள் சொன்ன நொடி அவனுடைய அச்சம் பல்லாயிரம் மடங்கு பெருகியது.

தனக்கு ஏன் இந்த விஷயம் தோன்றவில்லை. அதுவும் தற்போது தமிழகத்தில் இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

அதிலும் ஒன்றான கல்பாக்கம் அவர்கள் வீட்டிலிருந்து அரைமணி நேர தூரத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. அணுகதிர் வீச்சின் பாதிப்புகளும் அதனால் ஏற்பட்ட விபத்துக்களும் உலக வராலற்றின் அதிபயங்கரமான பக்கங்களாக பதிவாகியுள்ளன.

இவற்றையெல்லாம் யோசிக்கும் போதே பிரபஞ்சனுக்கு அவன் நிற்கும் இடத்தில பூமி பிளந்துவிடும் போலிருந்தது.

அதிர்ச்சியில் உலகமே ஸ்தம்பித்த நிலையில் நின்று கொண்டிருந்த பிரபாவின் தோள்களை தொட்டு, “ரீலேக்ஸ்” என்று சொல்ல, அவளை உயிரற்ற பார்வை பார்த்தான்.

மீண்டும் படுக்கையில் வந்து தலையை பிடித்து கொண்டு அமர்ந்து கொண்டான்.

அணுசக்தி என்பது மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஒன்று. மனித சக்திக்கு மேலான ஒரு சக்தியால் மட்டுமே இத்தகைய ஆபத்திலிருந்து  காப்பாற்ற முடியும். அதாவது மனிதன் கண்மூடித்தனமாக நம்பி கொண்டிருக்கும் கண்கண்ட சக்தி. கடவுள் சக்தி!

அவனன்றி ஓரணுவும் அசையாது எனும் போது அவன் ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் அந்த ஒருவன் எங்கே? விடை தெரியா பெரிய கேள்விகுறி அது?!

***********

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த அணுவுக்கு அணுவாக பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் பேரொளி கடவுள்!