UKK5

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-5

 

குளித்துவிட்டு பனியனுடன் தனது ரூமிற்குள் வந்த அமரை எதிர்பார்க்காத அர்ச்சனா, அறையில் இருந்த படுக்கையில் அமர்ந்தவாறு மடியில் தலையணையை வைத்தபடி இரு கைகளையும் அதில் ஊன்றி கையில் மொபைலை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

அர்ச்சனாவை நோக்கியபடி ரூமிற்குள் நுழைந்தவன், அங்கிருந்த அவனுடைய ஃபோர்டோர் வாட்ரோபில் வலதுபுறமிருந்த கதவைத் திறந்தான்.  அதில் இரண்டாவது அடுக்கின் ஹேங்கர்களில் தொங்கவிடப்பட்டிருந்த சட்டைகளில் இருந்து, காட்டன் ஹாஃப் ஃபுல் ஸ்லீவ் நீல நிற சட்டையை எடுத்திருந்தான்.

அறைக்குள் அமர் நுழைந்தபோது தனது அறைக்குள் வந்த அரவத்தில், மொபைலில் இருந்து தலையை நிமிர்த்தி யாரென பார்த்தாள் அர்ச்சனா. பிறகு மீண்டும் மொபைலுக்குள் தனது கவனத்தை திருப்பியிருந்த மனைவியை

காயங்களுக்கு இடையில் வேதனை வராதவாறு சட்டையை போட்டவாறு, “அர்ச்சனா…!”, என மெதுவாக அழைத்தான்.

அமர்ந்தாவாறு நிமிர்ந்து, “என்ன?” எனக் கேட்ட மனைவியை

“என்ன பண்ணிட்டு இருக்க?”

“…”, ‘மொபைல் கையில இருக்கும் போது என்ன செய்வாங்களாம்!’ என மனதிற்குள் நினைத்தவள், கணவனிடம் கேக்காமல்… எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்தாள்.

“எங்க வீடு உனக்கு பிடிச்சிருக்கா?”

“தெரியல”, என்ற அவளின் பதிலில்…

“இது என்ன பதில் அர்ச்சனா?”

“எனக்கு தெரிந்த பதில சொன்னேன்”

“தெரியலனா…?!”

“தெரியாதத வேற என்னனு சொல்ல?”

அவளின் அருகில் வந்தவன் அவளை நோக்கி கையை நீட்டினான்.  அவனின் செயலில்… கணவனின் கையில் தனது கையை வைக்க விரும்பாமல் கேள்வியாக  பார்த்தவளிடம், நீட்டிய கையை மடக்கியவாறு

“சாரி, நேத்து இப்டி நடக்கும்னு நான் எதிர்பாக்கல, உனக்கு வருத்தமா இருந்திருக்கும்”, என்றவாறு அவளின் அருகில் அமர்ந்திருந்தான்.

“…”

“இன்னும் பெயின் இருக்கு… டூ டேஸ்ல சரியாகிரும், நாளைக்கு டாக்டர் வர சொல்லிருக்கார். காலைல போயி டாக்டர பாத்துட்டு வந்தபிறகு, உங்க வீட்டுக்கு மறுவீடு போகலாம் என்ன?”

“…”, எதுவும் பேசாமல் தலையாட்டியவளை தோளோடு ஒருபுறமாக அணைத்து

“ம்… ஏன் எதுவும் பேச மாட்டிங்கற… எங்கிட்ட ஃப்ரீயா பேசு”, என்பதை முடிக்கும்முன்

“நேத்து எங்க வெளிய போயிருந்தீங்க?”

“ஒரு அர்ஜெண்ட் வர்க்… அதான்”

“என்ன வேல?”,விடாமல் கேட்டவளிடம்

“சொல்லக்கூடியதுனா… நானே சொல்லிருவேன் அர்ச்சனா”

“அப்ப அது எங்கிட்டகூட சொல்லக்கூடாத விடயமா?”

“ம்…”, என்றவாறு பெருமூச்சு ஒன்றை விட்டவன் ‘ஆமாவென’ , தலையசைத்தான்.

“…”

தன்னை சமாளித்தவன், “ஏன் ரூமை விட்டு வெளிய வராம உள்ளயே இருக்க?”, என தனது சந்தேகத்தை கேட்டான்.

“வெளிய வந்து என்ன செய்ய?”, அடுத்த கேள்வியை அமரை நோக்கி வில்லிலிருந்து வெளிவரும் அம்பின் வேகத்தில் கேட்டிருந்தாள்.

“நான் இவ்வளவு நேரம் ஹால்ல தான இருந்தேன், வந்து எங்கூட பேசிட்டு இருந்திருக்கலாம்ல”

“உங்க காயத்தை பார்த்தா எனக்கு ஒரு மாதிரி இருந்தது.  அதான்…”, எதையும் மறைக்க நினைக்காமல் பேசியவளை கூர்ந்து பார்த்தவன், அவளின் தோளில் அணைத்தபடி இருந்த கையை அவள் தோளில் இருந்து எடுத்திருந்தான்.

கணவனின் செயல் சார்ந்த பிரஞ்ஞை இருந்தும், அதற்காக வருந்தாமல் இருந்தவளை பார்த்தவாறு

“அம்மாவும், அண்ணியும் மட்டும் எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்காங்க… அவங்களோட போயி பேசலாம், இல்லனா உனக்கு தெரிஞ்ச வேலய பாக்கலாம்”

“அத்தகிட்ட எதாவது வேலையிருந்தா சொல்லுங்கத்தனு சொன்னேன்.  அவங்க இதுவரை ஒரு வேலயும் சொல்லல”

“அவங்க சொல்லலனா என்ன? நீ கிச்சன் பக்கம் போனா தான சொல்லுவாங்க”

“இப்போ போகணுமா?”

“ம்…”, என்றவன் “உங்க அக்காவையும் சாப்பிட சொல்லு”

“குளிக்க போயிருக்கு… வந்தவுடனே சொல்ரேன்”, என்றவாறு அறையிலிருந்து வெளிவர ஆயத்தமானாள்.

“விருந்தாளிங்க ஹால்ல, வெளிய உக்காந்துருக்காங்க… அவங்களுக்கு எதுவும் வேணுமானு கேளு”, என்று கூறியவாறு அறையை விட்டு வெளியேறி இருந்தான்.  காலை உணவுக்கான வேலைகள் முடிந்து, வந்த உறவினர்களுக்கு பரிமாறியபடி இருந்த தனது தாயைக் கண்டவன், தனது தங்கையின் வரவை எதிர்பார்த்து வெளியே சென்றான்.

மாமியாரிடம் சென்ற அர்ச்சனா, “எதுவும் உதவி பண்ணவா அத்த!”, எனக் கேட்டாள்.

“உமாட்ட, இன்னும் கொஞ்சம் இடியாப்பம் வாங்கிட்டு வா”, என அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றைத் தர, அதனை எடுத்துக் கொண்டு கிச்சன் சென்றாள்.

அங்கு பூரியை எண்ணெயில் இருந்து எடுத்துக் கொண்டிருந்த உமாவிடம், “உங்ககிட்ட இடியாப்பம் வாங்கிட்டு வர அத்த சொன்னாங்க”, என்றாள்.

சிம்மில் அடுப்பை வைத்த உமா, நின்றவாறு அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய பேசினுள் இருந்த இடியாப்பத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூற, சொன்னதை செய்தவள், மீண்டும் டைனிங் ஹாலுக்கு வந்திருந்தாள்.

“அத்த இந்தாங்க”, என டைனிங் டேபிளின் மீது இடியாப்பம் எடுத்து வந்த பாத்திரத்தை வைத்தாள்.

சற்று நேரத்தில் சந்திரசேகர், ஜனதா இருவருடன் சீதாவும் அங்கு வர அவர்களை வரவேற்று உணவருந்த அழைத்தனர்.  தனது தம்பியுடன் ஓரிரு வார்த்தைகள் பேசிய மங்கையும் காலை உணவுடன் ஊருக்கு கிளம்பிவிட்டாள்.

அமருடன்  அமர்ந்து காலை உணவை உண்டான் சந்துரு.  பிறகு இருவரும் வெளியில் சென்று பேசிக்கொண்டிருந்தனர்.  ஒரே வயதினர் என்பதாலும், முன்பே இருவருக்கும் நல்ல புரிதல் இருந்ததால், எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொண்டான் அமர்.

முந்தைய தின அமரின் நிகழ்வுகளால் தனது மனைவி ஜனதா பதறியது, பிறகு இங்கு வரவேண்டு என அழுதது, இரவெல்லாம் இதே நினைவுடன் உறங்காமல் இருந்தது என அவளின் நிலையை எடுத்துக் கூறினான், சந்துரு.

பத்ரி, அமர் இருவருடன் மிகுந்த பாசத்துடன் இருக்கும் தங்கையைப் பற்றி சிலாகித்துவிட்டான் அமர்.  மறையாது தனது சகோதரிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான், சந்துரு.

மனதில் பாசமிருந்தாலும், ஜனதா போல் தனது சகோதரிகள் இருவருமில்லை என கூறினான் சந்துரு.  அந்த பேச்சில் அவனையும் அறியாமல் சிறு பொறாமை இழையோடியது தெரிந்தது.

காயங்களில் வலி பற்றி கேட்டவன், இனி எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் கேட்டறிந்தான்.  இவ்வாறு பலதையும் பேசியவன் கொரியர் பற்றி கேட்டான்.

“பேசாம அவங்கப்பாகிட்ட விசயத்த சொல்லிருவோமா?”, இது சந்துரு

“வயசானவரு… ரொம்ப மனசில வருத்தப்படுவாரேனு சொல்ல தயங்கினேன்”, இது அமர்

“வேற என்ன செய்யலாம்னு சொல்லுங்க!”

“கொரியர் ஆஃபீஸ்ல இருக்கிற ஃப்ரண்ட்கிட்ட சொல்லி வச்சிருக்கேன், வந்தா எனக்கு கன்வே பண்ண சொல்லி, இத மாமாகிட்ட எதுவும் சொல்ல வேணாம், சந்துரு”

“ம்… இது வரை உங்கள பத்தி எல்லாம் அப்பாவுக்கு தெரியும், இன்னிக்கு காலைல கிளம்பும் போது என்ன விசயமா வெளியில் போனாருன்னு மாப்பிள்ளைக் கிட்ட கேட்டுருன்னு சொல்லித்தான் அனுப்புனாரு”

“…”

“உண்மைய சொல்லிட்டா, இனி வரப்போற நிகழ்வுகளை நாம தனியா எதிர்கொள்ள தேவையிருக்காது.  அவங்களும் நமக்கு உறுதுணையா இருப்பாங்க, அமர், உங்கப்பாகிட்ட சொல்லலயா இது பற்றி?”

“அண்ணனுக்கு மட்டும் தெரியும்.  அப்பாகிட்ட பேசினா உடனே அவங்க வீட்டுக்கே கிளம்பி போனாலும் ஆச்சர்யமில்ல… அவங்க அப்பா நல்ல மாதிரி, அவருக்காகவும், அவ ஃப்யூச்சருக்காகவும் பாத்தா, அது அந்த பொண்ணுக்கு புரியுதானே தெரியல”, என கடந்த நிகழ்வுகளை பேசிக்கொண்டிருந்தவர்கள் அறியாத விடயம் அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த அறைக்குள் இருந்த அர்ச்சனா அப்போது ஜன்னலருகே இருந்த பிளக்பாயிண்டில் அவளது போனை சார்ஜ் செய்ய வந்திருந்தாள்.

ஆரம்பத்தில் கவனிக்காதவள், “உங்கப்பாகிட்ட சொல்லலயா இது பற்றி?” என்ற தனது தமையனின் பேச்சு பிறகு அமர் பேசியது அனைத்தையும் கேட்டவள், அங்கேயே சார்ஜ் போட்டபிறகும்… அங்கிருந்து அகலாமல், அசையாமல் என்ன விசயமாக இருவரும் பேசிக்கொள்கிறார்கள் என எதுவும் புரியாமல் யோசித்தபடி நின்றிருந்தாள்.

“வேற எதுவுமின்னா உடனே என்ன கூப்பிடுங்க, அந்த பொண்ணுகிட்ட இருந்து கொரியர் எதுவும் வந்தாலும் சொல்லுங்க…”

“கண்டிப்பா…”

“சரி இப்போ கடலூர் வர ஒரு வேலையா போகவேண்டி இருக்கு அமர், நான் இப்போ கிளம்பினா தான் இரண்டு மணிக்காவது வேலை முடிஞ்சு இங்க திரும்பமுடியும், உங்க தங்கச்சி மதியம் கண்டிப்பா சாப்பாட்டுக்கு இங்க வந்திரணும்னு மிரட்டி தான் என்ன கூட்டிட்டு வந்திருக்கா”, என்றான் சந்துரு சிரித்தபடி

“ட்ரைவர் இருக்காருல்ல? அப்பா, அம்மாட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்புங்க”, என்ற அமரின் வார்த்தையை ஆமோத்தித்தவன், இருவரிடமும் விடைபெற்றவாறு மனைவியை கண்களால் தேட, அதை உணர்ந்த அமர் வீட்டு வாயிலில் நின்றபடி, “ஜனா…, அண்ணனுக்கு தண்ணி கொண்டு வாம்மா” என குரல் கொடுக்க, அமரின் குரல் கேட்ட அடுத்த நொடி பார்த்திருந்த வேலைகளைப் போட்டுவிட்டு, செம்பில் நீருடன் சிரித்தவாறு வெளியே வந்து அமரிடம் நீட்டினாள், ஜனதா.

அமர், சந்துருவிடம் கொடுக்குமாறு தங்கையிடம் கைகளைக் காட்ட, அவள் புரியாமல் சந்துருவிடம் நீட்டினாள்.  “சரி போயிட்டு சீக்கிரமா வாங்க. எனக்கு பெயினா இருக்கு டேப்ளட் போடணும்”, என சிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்திருந்தான், அமர்.

அமரைப் புரிந்த சந்துருவின் உள்ளம், சந்தோசத்துடன்… மனைவிடம் நீரை வாங்கி பேருக்கு அருந்திவிட்டு ஜனதாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

——————-

 

பத்ரியின் விவேகம் மற்றும் மனபலத்தால் நிகி, நிசி இருவரையும் காலையில் பள்ளிக்கு அனுப்பியிருந்தான். திருமண வேலைகளால் விடுப்பு எடுத்திருந்தாலும் அலுவலகம் சென்று வருவதாகக் கூறி சென்றிருந்தான்.

உறவினர்கள் அனைவரும் காலை உணவுடன் கிளம்பியிருக்க, பெண்கள் மதிய உணவுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட, அமர் அவனது அறையில் யோசனையில் இருந்தான்.

அமரின் தந்தை கிருஷ்ணன் கையில் அன்றைய செய்தித்தாளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.  தந்தையை தேடி வந்தவன்,

“அப்பா உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும்”, என்றான்

“…” ‘இப்போ புதுசா என்ன பிரச்சனை’ என்பது போல மகனைப் பார்த்திருந்தார்.

கொரியர் பற்றிய தகவலைச் சொன்னவன், அடுத்து தான் என்ன செய்ய எனக்கேட்ட மகனை அமைதியாக பார்த்திருந்தவர்

“அத நான் பாத்துக்கறேன், அந்த பொண்ணோட அப்பா நம்பர் இருந்தா தா”

“…”, தந்தையின் சொல்லுக்கு தலையை ஆட்டியவன்

“உடம்பு சரியாகட்டும், அர்ச்சனாவை எங்கயாவது வெளியூருக்கு கூட்டிட்டு போயிட்டு வா”

“மறுவீடு?”

“மறுவீடு போயிட்டு வந்து தான்”

பிறகு பொதுவான அவனது அலுவலக விடுப்பு நாட்களைப் பற்றி பேசியவர், விடுப்பு முடிந்து போகும் போது அர்ச்சனாவை உடன் அழைத்துச் செல்ல வேண்டுமெனவும், அதற்குரிய ஆயத்தங்களை இப்போது செய்ய ஆரம்பிக்குமாறும் கூறினார்.

“அங்க நான் வேலைக்கு போயிட்டா அவளுக்கு போரடிக்குமேப்பா!”

“அதுக்கென்ன செய்ய முடியும்பா?, அது தான் சூழ்நிலைனா அதுக்கு ஏற்றமாதிரி மாறிக்க வேண்டியதுதான்”

“வேற மொழி, அவளால யார் கூடயும் பேசவும் முடியாம சிரமபடுவா?”

“கொஞ்ச நாள் அப்டி இருக்கும், அப்றம் பேசக் கத்துக்கிட்டா ஒன்னும் தெரியாது, எல்லாம் சரியாகிரும்”

மருமகளை மகனுடன் அனுப்புவதில் மிகவும் தீவிரமாக இருந்தார், கிருஷ்ணன்.  அதேபோல அன்பரசியும் நினைத்தார்.

—————-

 

மதிய உணவிற்கு வீட்டிற்கு திரும்பிய சந்துரு, அன்று மாலை விருத்தாசலம் திரும்பும் எண்ணத்தைக் கூற, கிருஷ்ணன் இன்று ஒரு நாள் மட்டும் இங்கு தங்கிச் செல்லுமாறும், சம்பந்தியான நெடுஞ்செழியனிடம் பேசிவிட்டதாகவும் கூற, வழக்கத்தை மாற்ற விரும்பாமல், மறுக்க இயலாமல் அன்று ஜனதாவின் வீட்டில் தங்க சம்மதித்திருந்தான்.

மாலையில் நிசி, நிகியுடன் பொழுது போனதே தெரியவில்லை.  அமர், அர்ச்சனா, சந்துரு, ஜனதாவுடன் நிசியும், நிகியும் சேர்ந்து வெளியே சென்று வந்தனர்.  பத்ரி, உமா, அன்பரசி, கிருஷ்ணன் ஆகியோர் எவ்வளவோ தடுத்தும், ஜனதா, அமர் மற்றும் சந்துரு குழந்தைகளை வலுக்கட்டாயமாக உடன் அழைத்துச் சென்றனர்.

அர்ச்சனா குழந்தைகளுடனும் சேராமல், கணவனுடனும் சேராமல் தனியாக இருக்க, இதைக் கவனித்த ஜனதா எல்லா இடங்களிலும் அவளையும் பிடித்து இழுக்காத குறையாக தங்களுடன் இணைத்துக் கொண்டாள்,

சந்துரு இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டுதானிருந்தான்.  அமர் எந்த வேறுபாடும் இல்லாமல் இயல்பாக அர்ச்சனாவிடம் பேசினாலும், அவளிடம் புதுப்பெண்ணுக்குரிய ஒரு மலர்ச்சி இல்லாமல் இருக்க அவனுக்கும் தர்மசங்கடமாக உணர்ந்தான்.

திருமணத்தன்று இருந்த மலர்ச்சி அர்ச்சனாவிடம் இல்லாமல் போனதை உணர்ந்த சந்துருவிற்கு குழந்தைகளை உடன் அழைத்து வந்ததை தங்கை விரும்பவில்லையோ என நினைத்து, இரு குழந்தைகளுடன் பக்கத்தில் இருக்கும் மாலுக்குள் செல்வதாகக் கூறி மனைவியுடன் அங்கு சென்றான்.

அமருக்கு அர்ச்சனாவின் செயல்பாடுகளை எதனால் அவள் ஒட்டாமல் இருக்கிறாள் என உணர்ந்துகொள்ள முடியாமல், ஆனால் அவளை அங்கிருந்த டெக்ஸ்டைல்ஸ் ஷோரூமுக்குள் அழைக்க,

“இப்போ இங்க எதுக்கு?”, வாயைத் திறந்து பேசியவளை ஆச்சர்யமாக பார்த்தவாறு

“உனக்கு எதுவும் வாங்கணும்னா வாங்கு”

“…”

உள்ளே சென்றவள் அரைமணி தியாலத்தில் ஒரு சேலையை எடுத்தாள்.  பிறகு “கிளம்புவோமா” எனக் கேட்க

“ஜனதாவுக்கும் எடுக்கலயா?”, இது அமர்

“அது எங்கண்ணன் எடுத்துக் குடுக்கும்”

“நான் அவளுக்கு அண்ணன் தான, கல்யாணமாகி வீட்டுக்கு முதன் முதல்ல வந்திருக்கா… நம்ம சார்பில ஒரு சேலை அவளுக்கு எடுத்துக் கொடுப்போம்”

“அவங்களுக்கு என்ன கலர்ல எடுக்கணும்னு எனக்கு தெரியல நீங்களே எடுங்க…”, என ஒதுங்கிக் கொண்டவளை அதற்குமேல் வற்புறுத்தாமல்

ஒரு சேலையை தேர்வு செய்தவன், இரண்டிற்கும் பில்லுக்குரிய பணத்தைக் கட்டிவிட்டு, மனைவியுடன் வெளியே வந்திருந்தான்.

மாலிலிருந்து வெளியே வராத சந்துரு, ஜனதா, நிசி, நிகி நால்வரும், அங்கிருந்த கேஃபில் நிசி, நிகிக்கு உண்ணப்பிடித்தை வாங்கிக் கொடுத்தனர்.

பிறகு குழந்தைகள் பிரிவில் இருந்த கார்டூன் எரேசர், கைவைத்த பென்சில், கலர் பென்சில், க்ரேயான்ஸ், வாட்டர் கலர், சாக்லேட்ஸ், டாய்ஸ், டெடிபியர் என கண்டதையெல்லாம் வேண்டுமென இருவரும் கைகாட்ட, தற்போது அவர்களிடம் இல்லாதவற்றை மட்டும் இருவருக்கும் வாங்குமாறு ஜனதா கூற… அதையெல்லாம் சந்துரு வாங்கிக் கொடுக்க, குழந்தைகள் இருவரும் மகிழ்ந்திருந்தனர்.

ஜனதாவை முன்பே குழந்தைகள் இருவருக்கும் பிடிக்கும்.  பத்ரி, உமா இருவரும் அடித்தாலும் ஜனதா இருவரையும் அடிக்கமாட்டாள்.  சில நேரம் பெற்றோர் மீது கோபம் கொண்டு அத்தையுடன் ஐக்கியமாகிவிடுவார்கள் இருவரும்.  தற்போது மாமாவின் தாராள மனதால் ஜனதாவின் மாமா(சந்துரு)வையும் மிகவும் பிடித்துவிட்டது குழந்தைகளுக்கு. பிறகு அங்கிருந்த ஃபன் லேண்டிற்குள் அழைத்துச் சென்று இருவரும் மகிழ்ந்து விளையாடுவதை ரசித்தபடியே இருவரின் அருகாமையையும் ரசித்திருந்தனர்.

அமரிடமிருந்து அழைப்பு வர, குழந்தைகளுடன் இங்கிருப்பதைக் கூறினான்.  பிறகு சற்று நேரத்தில் வருவதாகக் கூறி  அழைப்பை துண்டித்திருந்தான்.

—————–

 

பத்து நிமிடங்களில் வெளிவந்த நால்வரையும் பார்த்த அமருக்கு ஆச்சர்யம். முகம் கொள்ளா புன்னகையுடன், மகிழ்வோடு வெளிவந்தவர்களை சந்தோசத்துடன் பார்த்திருந்தான்.  அர்ச்சனா பழையபடி அமைதியாகியிருந்தாள்.

அமரின் கையில் ஒரு பையும், அர்ச்சனாவின் கையில் ஒரு பையும் இருப்பதைப் பார்த்திருந்தான் சந்துரு.  ஆனால் அதுபற்றி ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு திரும்பியிருந்தனர்.

நிசி, நிகியின் பொருட்கள் அடங்கிய இரு விஷேப்பர்களில் வீட்டிற்கு வந்ததைக் கண்ட உமாவும், பத்ரியும் பிள்ளைகளைக் கடிய, சந்துரு அதை எதிர்க்க குழந்தைகளுக்கு இன்னும் அந்த மாமனை பிடித்துப்போனது.

அடுத்த நாள் பள்ளிக்கு கிளம்ப வேண்டுமெனில், விரைவில் அவர்களை உறங்கச் செய்ய பத்ரியை பணிக்க, இருவரும் டிமிக்கு கொடுக்க என அக்குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியாகவும், குறும்புத்தனத்துடனும், குதூகலத்துடனும் கழிந்திருந்தது.

வெளியில் திண்பண்டங்கள், ஐஸ்கிரீம் என உண்டிருந்ததால் இரவு சாப்பாடு குழந்தைகள் இருவருக்கும் வேண்டாமென்றிருந்தனர் ஜனதாவும், சந்துருவும்.

நிசி, நிகி இருவரும் ஜனதாவுடன் உறங்குவதாகக் கூற வீடே நிசப்தமாகியிருந்தது.  அப்போதும் கணவன், மனைவி இருவரும் “அப்ப வந்து அத்தை ரூமில தூங்குங்க”, எனக் கூற குழந்தைகள் இருவரும் ஏகசந்தோசமாகியிருந்தனர்.

இருவரும் ஜனதாவின் அறையை முற்றுகையிட உமாவிற்கும், பத்ரிக்கும் என்ன செய்வது என யோசித்தபடியே “அத்தை நேத்து மாமா வீட்டுக்கு போயிருந்தால்ல, அதே மாதிரி இன்னிக்கும் சாப்டுட்டு போயிருவா, அப்புறம் நீங்க ரெண்டு பேரும் அத்த ரூமில தனியா படுத்துக்குவீங்களா”, என உமா கேட்க

“…”, நிசி

“…”, நிகி

இருவரும் எப்பொழுதும் போல அவர்கள் அறைக்குள் சென்று சோகமாக உறங்க ஆயத்தமாகினர்.

அமர் வெளியிலிருந்து வரும்போது எதிர்ப்பட்ட தாயிடம், கையிலிருந்த சேலையை கொடுத்திருந்தான். அர்ச்சனாவின் சேலையை வெளியிலிருந்து வந்த கையுடன் அவர்களது அறைக்கு எடுத்து சென்றிருந்தாள்.  அதன்பிறகு, அவர்கள் அறையிலிருந்து அர்ச்சனா வெளிவரவில்லை.

அனைவரும் இரவு உணவிற்காக வர, அமரிடம் அவளை உண்ண அழைக்குமாறு அன்பரசி கூற… அழைக்கச் சென்றவனிடம் பசியில்லை என்றுவிட்டாள். அவனும் வற்புறுத்தி அழைக்காமல் உண்ண வந்துவிட்டான்.

 

பசியில்லயாம் என்ற ஒற்றைச் சொல்லுடன் உண்ண அமர்ந்த அமரைப் பார்த்த சந்துரு, எதுவும் கூறாமல் ‘ஏன் இந்தப் பெண் எதுலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறாள்’ என்ற தங்கையைப் பற்றிய சிந்தனையில் ஒழுங்காகச் சாப்பிடாமல் எழுந்துவிட்டான்.

 

இயலாமை பொறாமையைத் தூண்டும் காரணி…

கனாவில் அக்காரணிக்கு வேலையில்லை!!!

—————————————