AOA-6

AOA-6

அவனின்றி ஓரணுவும்- 6

பிரேசிலில் உண்டாகும் ஒரு பட்டம்பூச்சியின் சலசலப்பிற்கும் டெக்ஸாஸில் ஏற்படும் சூராவளிக்கும் கூட தொடர்பிருக்கிறது என்கிறது கயாஸ் தியரி.

ரொம்பவும் சிறியதாக தொடங்கும் ஆரம்ப புள்ளி பெரிய பெரிய விளைவுகளுக்கு வித்தாகும்.     

ரம்யமாக புலர்ந்த காலை பொழுது. சில்லென்று வீசி கொண்டிருந்த கடல் காற்று. அலைகளின் இரைச்சலோடு செவ்வானத்தில் சூரியன் மெல்ல மேலெழும்பி கொண்டிருக்க அந்த வீட்டின் மேல்தளத்தில் பத்மாசன நிலையில் அமர்ந்திருந்தான் பிரபஞ்சன்!

அவன் முதுகு தண்டு நேர்கோடாக நீண்டு நிமிர்ந்திருக்க, வலது பாதம் இடது தொடை மீதும் இடது பாதம் வலது தொடை மீதுமிருந்தது. இறைவனை பிரதிபலிக்கும் கட்டை விரலோடு மனிதனை பிரதிபலிக்கும் ஆட்காட்டி விரலோடு தொடர்பு கொண்டபடி அவன் இரு கைகளும் சின் முத்திரையை காட்டின. அதாவது மனிதன் இறைவன் நிலையை தொடுவதற்கான முத்திரைதான் சின் முத்திரையாகும்.

விடிவதற்கு முன்பாகவே மற்ற ஆசனங்களை செய்து முடித்துவிட்டு மீண்டும் பத்மாசன நிலைக்கு வந்த பிரபஞ்சன் இன்னும் தம் விழிகளை திறக்கவில்லை.

இயல்பாக ஒரு சில நிமிடங்கள் கூட மனதை கட்டுக்குள் வைத்து அந்த ஆசனத்தை செய்வது கடினம். ஆனால் அவனோ கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அந்த பத்மாசன நிலையிலிருந்தான். மனதை ஒருநிலைப்படுத்தி தெய்வ நிலையை அடையும் தவக்கோலம் அது.

மனிதனுக்குள் சஞ்சரிக்கும் தெய்வ சக்தியை முழுமையாக அடைவதே அதன் நோக்கம். அதனை நன்கறிந்து உணரந்தவன் பிரபஞ்சன்.

தன் இடையில் வெள்ளை வேட்டியை மடித்த வாக்கில் அணிந்து கொண்டு பிரபஞ்சன் மேலாடையின்றி அமர்ந்திருந்தான். அந்த நிலையில் அவனின் நேர்த்தியான உடற்க்கட்டுக்களோடு திடகாஸ்திரமான தோள்களும் வலிய புஜங்களும் தெள்ள தெளிவாக தெரிந்தன.

பயிற்சியை முடித்து கொண்டு மெல்ல தம் விழிகளை மலர்த்தினான். தம் இரு கரங்களை உயர்த்தி உள்ளங்கையால் முகத்தை அழுந்த தேய்த்து கொண்டு, மெல்ல பத்மாசன நிலையிலிருந்து தன் உடலை பிரித்தெடுத்து எழுந்து நின்றான்.

ஆறடிக்கும் அதிகமகான உயரம். கருத்த மேனியன். படிய சீவி கழுத்துபுறம் வரை வளைந்தபடியிருந்த அடர்த்தியான கேசம். நேர்த்தியாகவும் அளவாகவும் வளர்ந்திருந்த மீசை. அடர்ந்த புருவங்களுக்கு கீழுள்ள அவனின் பச்சை நிற விழிகளுக்கு மனதின் அடி ஆழம் வரை உள்ளார்ந்து சென்று எண்ணங்களை கணிக்கும் அதிகூர்மையிருந்தது. கூடவே வசியம் செய்யும் தனி கவர்ச்சிகரமும் இருந்தது. இவை எல்லாவற்றையும் கடந்து அவன் முகத்தில் தனி தேஜஸ் ஒளி மின்னியது.

முதல் முறை பார்ப்பவர்கள் யாராயினும் சில நொடிகளேனும் அவனின் தோற்றத்தையும் முகத்தில் மிளிரும் தேஜஸையும் கண்டு ஸ்தம்பிக்காவிடில் அது  வியப்புதான்.

பிரபஞ்சன் நின்றிருந்தது அந்த வீட்டின் முதல் தளத்தில். அந்த அறையில் பிரத்தியேகமாக அரைவட்டத்தில் வடிவமைக்கப்பட்ட பெரிய பால்கனி அது. அங்கிருந்து பார்த்தால் சிறு தொலைவில் ஆகாயமும் கடலும் இணைந்திருப்பது போல் பிரமை உண்டாகும்.

பிரபஞ்சனின் கூர்மையான விழிகள் ஆரவாரமில்லாமல் அமைதி ரூபமாக காட்சியளித்த சமுத்திரனிடம் தஞ்சம் புகுந்திருந்தது.

எப்போதும் கடலை பார்க்கும் போது வேறு சில மோசமான நினைவுகள் அவனை ஆக்கிரமித்து கொள்ளும். ஆனால் இன்று அவன் மூளை நேற்று இரவு காப்பற்றிய அந்த பெண்ணை பற்றி படுத்தீவிரமாக யோசித்து கொண்டிருந்தது.

இரவு உருவான அந்த கடலின் சீற்றத்தில் வெகுநேரம் போராடித்தான் அவளை மீட்டான். உண்மையில் அவள் தன்னை காப்பாற்றி கொள்ள விடாமுயற்சியோடு போராடியதால்தான்  அவளை காப்பாற்றுவது அவனுக்கு சிரமமாகிப்போனது. அவள் துவண்ட நேரத்தில்தான் அவனால் அவளை கரைக்கு கொண்டுவந்து சேர்க்க  முடிந்தது.

தன் உயிருக்காக இந்தளவுக்கு போராடியவள் நிச்சயம் தற்கொலை செய்ய உத்தேசித்திருக்க மாட்டாள் என்று தீர்க்கமாக நம்பினான். இருப்பினும் எதற்காக அவள் அந்த ஆபத்தான பகுதிக்கு சென்றால் என்ற கேள்வி அவன் மனதை துளையிட்டு கொண்டிருந்தது.

அதுவும் இரவெல்லாம் கூட அவன் சிந்தனை யாரென்று தெரியாத அந்த பெண்ணையே சுற்றி கொண்டிருந்தது. பின்னர் அவனே தான் தேவையில்லாமல் அவளை பற்றி யோசித்து கொண்டிருக்கிறோம் என்று தன் எண்ணங்களை கட்டுப்படுத்தி கொண்டு உறங்கியும் விட்டான்.

ஆனால் இப்போது மீண்டும் அவள் நினைவு எங்கிருந்து தனக்குள் வந்து குதித்தது என்றே அவனுக்கு புரியவில்லை.

அதுவும் அவளை கரைக்கு கொண்டு வந்த பின் அவள் பேச்சு மூச்சற்று கிடந்தாள்.

அவன்தான் அவள் இதழ்களை பிரித்து தன் சுவாசத்தை கொடுத்து அவள் மூச்சுவிட உதவி புரிந்தான். அப்போது அவனுக்கு அவள் உயிரை மீட்க வேண்டுமென்ற பதட்டம் மட்டும்தான் குடிகொண்டிருந்தது.

ஆனால் இப்போது அந்த நினைப்பு ஒருவித சஞ்சலத்தை உண்டாக்கியிருந்ததை அவனால் உணர முடிந்தது.

அப்போது, “பிரபா” என்று அழைத்தபடி கதவை திறந்து கொண்டு ஹரிஹரன் உள்ளே நுழைய தன் யோசனைகளை ஒதுக்கிவிட்டு,

“குட் மோர்னிங் சார்” என்று அவரை பார்த்து மென்னகை புரிந்தான்.

“யுர் கிரீன் டீ” என்று அவர் எடுத்து வந்த கப்பை கொடுக்க, அவன் அதனை பெற்று கொண்டே, “என்ன ரூமுக்கே எடுத்துட்டு வந்துட்டீங்க?” என்று கேட்டபடி அதனை குடிக்க தன் படுக்கையில் அமர்ந்து கொண்டான்.

“நீ கீழே வருவ வருவன்னு எவ்வளவு நேரம் காத்திருக்கிறது” என்று  அவர் சலிப்பாக சொல்லி கொண்டே எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

அவன் தன் டீ யை பருகி கொண்டே, “ஏதோ யோச்சிக்கிட்டே” என்றவன் பதில் முடியும் முன்னர்  ஹரிஹரன், “என்ன யோசனை? அந்த ஃபிகரை பத்தியா?” என்று கேட்டு விஷமமாக சிரித்தார்.

அவனுக்கு தூக்கிவாரி போட்டது. எப்படி கண்டுப்பிடித்தார் என்று மாட்டி கொண்ட உணர்வோடு அவரை பார்க்க,

“இதுக்கு ஏன் இவ்வளவு சீரியஸா பார்க்கிற? நீ போய் ஃபிகரை பத்தி யோசிச்சிட்டாலும்” என்று சலித்து கொண்டு அவரே ஒரு முடிவுக்கு வந்தார்.

பிரபஞ்சனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரின் வார்த்தைகள் அவனுக்கு இன்னும் சங்கடத்தை விளைவித்தது. ஆம் என்றும் சொல்ல முடியாமல் இல்லையென்றும் மறுக்க முடியாமல் அவன் இரண்டாங்கட்ட நிலையில் இருந்தான்.

ஹரிஹரன் அப்போது, “கஷ்டப்பட்டு அந்த பொண்ணு உயிரை காப்பத்திட்டு ஒரு இன்ட்ரோ கூட பண்ணிக்காம வந்துட்டியே… சரியான வேஸ்ட்டு டா நீ” என்று கடுப்பாக சொல்ல, அதை கேட்டு பிரபஞ்சனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“எனக்காக நீங்க பீல் பண்ற மாதிரி தெரியலயே… உங்களுக்குத்தான் அந்த பொண்ணோட இன்ட்ரோ வேணும் போல” என்று அவரை பதிலுக்கு அவன் திருப்பி கலாய்க்கவும்,

“எங்க? அதுக்கு கூடத்தான் நீ விடலயே… ஹாஸ்பெட்டில இருந்து அவசர அவசரமா கிளப்பி கூட்டிட்டு வந்துட்ட” என்று அவர் ரொம்பவும் வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

“அந்த பொண்ணோட பிரெண்ட் வந்த பிறகு நமக்கு அங்கே என்ன வேலை… அதான் போலாம்னு சொன்னேன்… நீங்க இவ்வளவு பீல் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா… இருந்து பேசிட்டுத்தான் வந்திருக்கலாம்” என்று அவன் சிரித்து கொண்டே சொல்ல, அவனை முறைத்து பார்த்தார்.

“பேசாதடா… அந்த சத்யா பையனுக்கு ஃபாரின் ஃபிகர் பிரெண்ட்… உனக்கு ஒரு லோக்கல் ஃபிகராச்சும் பிரெண்டா வைச்சிருக்கியா?”

பிரபஞ்சன் அப்போது, “அந்த பொண்ணு வெளிநாடா? பார்த்தா அப்படி தெரியலையே சார்” என்று தீவிரமாக கேட்கவும்,

“அந்த பொண்ணு பேகை நான்தான் பார்த்தேனே… கண்டிப்பா அந்த பொண்ணு நம்ம நாடு இல்ல” என்று தீர்க்கமாக உரைத்துவிட்டு,

“ஒரு வேளை அங்க போய் செட்டிலான நம்ம ஊர் ஆளுங்க பொண்ணா இருக்கலாம்… இல்லன்னா மிக்ஸிங்கா கூட இருக்கலாம்” என்று அவர் பாட்டுக்கு தன் யூகத்தை சொல்லி கொண்டே போனார்.

அவர் சொன்னதை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த பிரபஞ்சன், “ஹ்ம்ம்” என்றபடி யோசனையில் ஆழ்ந்தான்.

“இம்போர்டட் பிகர்… நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்ட… போடா”  என்று ஹரிஹரன் மீண்டும் பிரபஞ்சனை பார்த்து கடுப்படிக்க,

“ஐயோ விடுங்க சார்… நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பொண்ணை பத்தி இவ்வளவு பெரிய டிஸ்கஷன் தேவையா?” என்று கேட்டவன் தன் டீயை பருகிவிட்டு கப்பை மேஜை மீது வைத்தான். அதோடு அவளை பற்றிய பேச்சை   முடிக்க எண்ணினான்.

ஏற்கனவே அவளை பற்றி அவன் மனம் ஓயாமல் சிந்தித்து கொண்டிருப்பதில் லேசாக எரிச்சலுற்றவன் இப்போது அவர்களின் சம்பாஷனையும் அவளை  சுற்றி வருவதை அவன் துளியளவும் விரும்பவில்லை.

அப்போது ஹரிஹரன் மீண்டும், “ஆமா… அந்த பொண்ணு ஆபத்துல மாட்டிகிட்டான்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது பிரபா… உன் இன்ஸ்டிங்ட் மூலமாவா?” என்று சந்தேகமாக கேட்டார்.

அவர் கேள்வியில் அதிர்ச்சியாக பேச்சற்று  நின்றான் பிரபா.

நேற்று மாலை இருவரும் நடந்து கொண்டே கடலுக்கு சென்றுவிட, அப்போது ஹரிஹரன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார். இவனும் அவர் சிந்தனையை கலைக்காமல் மௌனமாக இருந்துவிட, அப்போதுதான் அவன் உள்ளுணர்விற்கு ஏதோ ஆபத்து என்று தோன்றியது. ஒரு சில வினாடிகள் கடலில் ஒரு பெண் தத்தளிப்பது போன்ற காட்சி அவன் மனக்கண் முன் தோன்றி மறைந்தது.

அந்த நொடியே எந்த பெண்ணிற்க்காவது ஆபத்தா என்று தேடி கொண்டு ஓடினான்.

உண்மையிலேயே அப்போது ஒரு பெண் கடலில் தத்தளிக்கும் காட்சியை பார்த்தவன், அவளை காப்பாற்ற அவனும் அந்த சீறி கொண்டிருக்கும் அலைகளுக்குள் குதித்தான்.

அந்த எண்ணமெல்லாம் வரிசையாக இப்போது அவனுக்குள் அணிவகுக்க, ரொம்ப வருடங்களுக்கு பிறகு அவனுக்கு மீண்டும் இப்படி (இன்ஸ்டின்க்ட்) ஒரு உள்ளுணர்வு தோன்றியதன் காரணத்தை அவனால் கணிக்க முடியவில்லை.

அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டுமென்ற பதட்டத்தில் அவன் உள்ளுணர்வு பற்றி அப்போது யோசிக்காமல் விட்டான். ஹரிஹரன் கேட்ட நொடி அவன் மனம் இன்னும் தீவிரமாக அந்த நிகழ்வை குறித்து யோசித்தது.

அவன் பதிலின்றி ஆழமான யோசனைக்குள் சென்றுவிட, “பிரபா” என்று ஹரி அழைக்கவும் சட்டென்று அந்த யோசனையிலிருந்து மீண்டுவிட்டு,

“நான் இன்னைக்கு சீக்கிரம் கிளம்பணும் சார்… ஒரு காலேஜ்ல ஸ்ட்ரெஸ் மேனேஜ்மன்ட் ப்ரோக்ராம்க்காக கூப்பிட்டு இருக்காங்க… நாம இந்த விஷயத்தை பத்தி ஈவினிங் டிஸ்கஸ் பண்ணிக்கலாம்” என்று சொல்லி அந்த பேச்சை மாற்றியதோடு அல்லாமல், தன் வேலையை நோக்கி கவனத்தை திருப்ப முயன்றான். ஆனால் அது முடியுமா என்று தெரியவில்லை. அவன் சிந்தனை திரும்ப திரும்ப ஷெர்லியை சுற்றி வளைய வந்து கொண்டிருந்தது.

ஹரிஹரன் அதற்கு மேல் அந்த விஷயத்தை பற்றி பேசாமல், “சரி பிரபா… நீ கிளம்பு… நான் டிபன் ரெடி பண்றேன்” என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டார்.

அந்த வீட்டில் பிரபாவும் ஹரிஹரனும் மட்டும்தான். மேல்தளத்திலிருந்த அறையில் பிரபா ஹரிஹரன் இருவரும் ஒன்றாக தங்கியிருந்தனர். கீழே ஒரு சின்ன முகப்பறையும் அதோடு சமையலறையும் இணைந்திருந்தது.

அந்த வீட்டின் அளவை விட தோட்டத்தின் பரப்பளவு பெரியதாக இருந்தது. சுற்றிலும் தென்னை, மா, பலா, வாழை என்று முக்கனிகளும் காய்த்து தொங்கி கொண்டிருந்தன. அவற்றோடு சிறுசிறு பூச்செடிகளும் துளசியோடு சேர்த்து சில மூலிகை வகைகளும் கூட வளர்ந்து அந்த இடம் முழுக்க வாசனை பரப்பி கொண்டிருந்தன. அங்கிருந்த மரங்கள் அசைந்து எப்போதும் சிலுசிலுவென காற்று வீசும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.

தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் இரைக்கவென ஒரு பெரிய தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டிருந்தது. தோட்ட வேலை தொடங்கி வீட்டு வேலை வரை அவர்கள் இருவருமே பகிர்ந்து செய்தனர்.

வெளியே ஒரு சிறிய வராண்டாவும் ஊஞ்சலும் அமைக்கப்பட்டிருக்க, பிரபாவும் ஹரியும் அதிக நேரம் அங்கேதான் செலவழிப்பார்கள். சில நேரங்களில் பாய் விரித்து அங்கேயே கடல் காற்றை அனுபவித்தபடி உறங்கிவிடுவர்.

வீட்டு வேலைக்கு என்று யாரையும் அவர்கள் வைத்து கொள்ளவில்லை. சமையல் வேலை தொடங்கி தொட்ட வேலை வரை அவர்கள் இருவரே பகிர்ந்து செய்து கொண்டனர். அப்படி செய்வதுதான் அவர்களுக்கும் பிடித்திருந்தது.

இருவருக்கும் இடையிலிருந்தது அப்பா மகன் உறவு என்று சொல்ல முடியாது. நண்பர்கள் போல்தான் பேசி கொள்வர். கேலி கிண்டல் என்று ஹரி சகஜமாக பேச பிரபா அதனை ரசிப்பான்.

அதுவும் பிரபா எந்த பெண்களிடமும் ஓரிரு வார்த்தைகள் மேல் பேசவே மாட்டான். அறுபது வயது பாட்டியையும் சரி. இருபது வயது பருவ பெண்ணையும் சரி. அவன் பார்வையும் சிந்தனையும் வித்தியாசப்படுத்தி பார்த்ததே இல்லை. அவன் வளர்ந்த சூழலும் ரொம்பவும் சிறு வயதிலேயே உண்டான முதிர்ச்சியும் அதற்கு காரணகர்த்தாவாக அமைந்துவிட்டது.

பலரும் இதனால் அவனை ஆன்மிகவாதி என்று கூட உரைப்பர். அதனால் ஹரிஹரன் அவனை அதை சொல்லியே ஓயாமல் கேலி செய்வார். அந்த கேலி கிண்டலிலும் அவன் எந்த பெண்ணிடமாவது நெருங்கி பழக மாட்டானா என்ற ஆதங்கமே அதிகம் இருந்தது. அது பிரபாவிற்கும் புரியும். ஆனால் அவன் இயல்பை அவனால் மாற்றி கொள்ள இயலவில்லை. குறைந்தப்பட்சம் எந்த பெண்ணிடமும் அவனுக்கு ஈர்ப்பு கூட உண்டானதில்லை.

பிரபஞ்சன் யோகசாத்திரத்தில் இளங்கலை பயன்றவன், பின் அதே யோகாசனத்திலேயே தன் முதுகலையும் முடித்திருந்தான். இப்போது யோகாவின் மூலமாக இயற்கையோடு கலந்து மனித சக்திகளை மேம்படுத்துவது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தான்.

இதுமட்டுமல்லாது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும்  அலுவலக ஊழியர்களுக்கும் மனஅழுத்தம் போக்குவது குறித்தும் சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை அவற்றோடு இயற்கையின் சக்தியும் அவற்றை காக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவன் தனிப்பட்ட வகுப்புகள் போல் எடுத்து கொண்டிருந்தான்.

பிரபஞ்சன் சொல்லும் தீர்வுகள் பலரையும் கவர்ந்தது. இதனால் நிறைய மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது.

அதுவும்  அவன் சொல்லும் தீர்வுகள் நடைமுறைக்கு சாத்தியமாகவும் எளிமையாகவும் இருந்ததில் பல கல்லூரி மற்றும் அலுவலக நிர்வாகங்களும் கூட இதற்காக அவனை தேடி வந்தனர். அதுவே நாளடைவில் அவன் வேலையாகவும் மாறி போனது. அவன் எடுக்கும் வகுப்புகளின் மணி கணக்குகளை வைத்து பணம் பெற்று கொள்வான்.

அதுவும் இன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் மனிதர்களின் பூதாகரமான பிரச்சனையாக மாறி கொண்டிருந்ததால் பலருக்கும் அவன் தயவு தேவையாக இருந்தது.

இதனால் வரும் பணம் ஹரிஹரனும் பிரபஞ்சனும் தங்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்தது போக மிச்சத்தில் அங்கே வாழும் மீனவ குடும்பங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தனர். அந்த ஊரில் இதனால் அவர்களுக்கு தனி மதிப்பும் பெயரும் இருந்தது.

பிரபஞ்சன் ஃபார்மல்ஸ் உடையில் தயாராகி கீழே இறங்கிவர, அங்கே ஹரியோடு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சதாசிவம் பேசி கொண்டிருந்தார். அவர் ஹரிஹரனுக்கு நெருங்கிய தோழரும் கூட. அவர் அடிக்கடி வருவது வழக்கம்.

இருப்பினும் நேற்று நடந்த சம்பவம் குறித்து பேசி கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணும் போதே சதாசிவம் ஹரிஹரனிடம் சொல்லிவிட்டு புறப்பட்டுவிட,

“சதா சார் எதுக்கு வந்துட்டு போறாரு?” என்று கேட்டு கொண்டே படிக்கட்டில் இறங்கினான் பிரபஞ்சன்.

“அவன் என்ன புதுசாவா இங்க வரான்” ஹரிஹரன் உணவு மேஜையில் ஒரு ஹாட் பேக்கை எடுத்து வந்து வைத்து கொண்டே கேட்க,

“இல்ல… நேத்து நடந்த இன்சிடன்ட் பத்தி எதாச்சும் பேச வந்தாரா?” என்று கேட்டு கொண்டே அவன் இருக்கையில் அமர்ந்து தட்டை எடுத்து வைத்து இருவருக்கும் காலை உணவை பரிமாறினான்.

ஹரிஹரன் கேலி புன்னகையோடு, “உனக்கு சம்பந்தமில்லாத பொண்ணை பத்தின விஷயம்… கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமா?” என்று கேட்டார்.

பிரபஞ்சன் பதில் பேசவில்லை. அவரை முறைத்து பார்த்துவிட்டு தன் தட்டில் உணவை எடுத்து வைத்து கொண்டு உண்ண தொடங்கினான். ஆனால் விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவன் கண்களில் தெரிந்தது.

அவன் சாப்பிட்டு கொண்டிருக்க, ஹரிஹரன் அவன் முகத்துக்கு நேராக ஒரு பிளாட்டினம் செயினை இப்படியும் அப்படியுமாக அசைத்து காட்டினார்.

அவன் அதனை ஆர்வமாக பார்த்தான். அதன் டாலரில் ஷெர்லி என்று பொறிக்கப்பட்டிருந்ததை பார்த்த நொடி,

“இது அந்த பொண்ணோடதா?” என்று கேட்டான்.

“ஆமா” என்று ஹரிஹரன் சொல்ல,

“இதைத்தான் சதா சார் கொண்டுவந்து கொடுத்தாரா?” என்று பிரபா கேட்டான்.

“ஆமா… நேத்து காப்பாத்தின அந்த பொண்ணுதா இருக்குமோன்னு கேட்டு” என்றவர் சொல்லவும், “ஓ!” என்று அந்த செயினை உற்று பார்த்தவன்,

“நீங்க அந்த சத்யாவோட அட்ரெஸ் கொடுத்து… அங்கேயே கொடுத்திருக்க சொல்லி இருக்கலாம் இல்ல” என்றான்.

“அந்த சத்யாதான் அவன் வீட்டில கல்யாணம் அது இதுன்னு புலம்பி தீர்த்தான்னே மறந்திட்டியா… போலிஸ் கேஸ் அந்த மாதிரி எதுவும் ஆகிடமா பார்த்துக்கோங்கன்னு வேற சொல்லிட்டு போனான்”

“ஹ்ம்ம் ஆமா… ஆனா இது எப்படி போலிஸுக்கு” என்று பிரபா சந்தேகமாக கேட்க,

“குப்பத்து பசங்கதான் அந்த பொண்ணுகிட்ட வம்பு பண்ணி இருக்காங்க பிரபா… அவனுங்களுக்கு பயந்து தன்னை காப்பாத்திக்கதான் அந்த பொண்ணு கடலில குத்திச்சிருக்கு… பாவம்!” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் முகம் கோபமாக மாறியது.

அவர் மேலும், “அவனுங்கள அடிச்சி விசாரிச்சதுல இவ்வளவும் தெரிஞ்சுது… அந்த பொண்ணு தண்ணில குதிச்சு இடத்தில ஆழம் அதிகம்னு அவனுங்களே பயந்து விட்டுட்டு திரும்பிட்டானுங்க… அப்போ அந்த பொண்ணு பயத்துல அவனுங்ககிட்ட கழட்டி கொடுத்த சைன்தான் இது… அந்த நேரத்துக்கு வாங்கி தூக்கி போட்ட லூசு பசங்க அப்புறமா கீழே கிடந்ததை எடுத்துட்டு போய் குடிக்க போயிருக்கானுங்க… அப்பத்தான் வகையா சிக்கிட்டானுங்க… சதா நீ அந்த பொண்ணை காப்பத்தின விஷயம் தெரிஞ்சுதான் இங்கே வந்திருக்காரு” என்றார்.

“நாடு விட்டு நாடு வந்திருக்க பொண்ணு… தேவையில்லாம் எந்த பிரச்சனைலயும் அந்த பொண்ணை இழுத்து விட வேண்டாம்னு உங்க பிரெண்டுகிட்ட சொல்லுங்க… அதுவும் அந்த பையன் வீட்டில வேற கல்யாண வேலை நடந்திட்டு இருக்கு” என்று பிரபஞ்சன் சொல்ல,

“நானும் இதேதான் சதாகிட்ட சொன்னேன்… அந்த பொறுக்கி பசங்கள வேற எதாச்சும் கேஸ்ல உள்ளே தூக்கி போட சொல்லி இருக்கேன்” என்றார்.

“அதான் கரெக்ட்… ஆனா இந்த செயினை எப்படி கொடுக்க போறீங்க” என்று கேட்டவன் பின் அவனாகவே, “அந்த சத்யா நம்பர் கால் ஹிஸ்டரில இருக்கும்… வந்து அவனை வாங்கிட்டு போக சொல்லுங்க” என்றான்.

ஹரிஹரன் அவனை ஏறஇறங்க பார்த்து, “எதுக்கு… சூப்பரா ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு… நான் அந்த இம்போடட் ஃபிகரை நேர்லயே பார்த்து கொடுக்க போறேன்” என்றதும் பிரபஞ்சன் அவரை பார்த்து,

“போய் கொடுங்க… ஆனா அந்த பொண்ணு உங்களை அங்கிள்னு கூப்பிடுமா… இல்ல கிரேன்ட் பா ன்னு கூப்பிடுமா?” என்று கேட்டு நக்கலாக சிரித்தான்.

“போடா… ஐம் ஸ்டில் யங் அன் எனர்ஜிட்டிக்” என்று சொன்ன ஹரிஹரன் கெத்தாக தன் தலை முடியை சிலுப்பிவிட்டு கொண்டார். இந்த வயதிலும் அவருக்கு தலையில் நிறைய முடி இருந்ததை சுட்டி காட்டினார்.

அதனை பார்த்து சிரித்த பிரபா, “ஆல் தி பெஸ்ட்… போகும் போது மறக்காம ஹேர் டை போட்டுட்டு போங்க” என்று சொல்லி கொண்டே வாசலை தாண்ட,

“போடா அதெல்லாம் எனக்கு தேவையில்ல” என்று ஹரி அவனை முறைக்க, “அப்போ கண்டிப்பா அந்த இம்போர்டட் பிகர் உங்களை கிரேன்ட் பா ன்னுதான் கூப்பிடும்” என்று அவரை வெறுப்பேற்றிவிட்டு,

“ஓகே சார் லேட்டாகுது… நான் கிளம்புறேன்… பை” என்று சொல்லிவிட்டு வாசலை தாண்டியவன் அப்படியே சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றான்.

“என்ன பிரபா? எதாச்சும் மறந்துட்டியா?” என்று கேட்டு  கொண்டே வெளியே வந்த ஹரிஹரன், அவரும் அந்த காட்சியை பார்த்துவிட்டு பிரபா முகத்தை பார்த்தார்.

அவன் விழி எடுக்காமல் வெளிவாசலில் ஷெர்லி நின்று கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தான்.

சத்யாவும் ஷெர்லிக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருந்ததால் இருவரும் வெளிவாசலிலேயே நின்று கொண்டிருக்க,

“அந்த பொண்ணு நிச்சயமா உன்னை பார்த்து தேங்க் பண்ணதான் வரா பிரபா“ என்றார்.

அந்த நொடி இயல்பு நிலைக்கு திரும்பிய பிரபா அவள் மீதிருந்த தன் பார்வையை எடுத்துவிட்டு ஹரிஹரனிடம்,

“எனக்கு டைமாச்சு… நான் கிளம்பணும்… தேங்க்ஸ் எதாச்சும் சொன்னா அதை நீங்களே வாங்கி வச்சிகோங்க… எனி வே… நீங்க நினைச்சது அதுவா தேடி வருது… என்ஜாய்” என்று தன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு வேகமாக வாசலில் நின்ற தன் பைக்கை இயக்கினான்.

அதற்குள் ஷெர்லிக்கும் சத்யாவிற்குமான வாக்குவாதம் முடிந்து இருவரும் கேட் வாயிலை தாண்டி உள்ளே வரும் போது பிரபாவின் பைக் வாசலை கடக்க, சத்யா அவனை தடுக்க எத்தனித்தான்.

“வீட்டுல சார் இருக்காரு… பார்த்துட்டு போங்க” என்று சத்யாவிடம் சொல்லிவிட்டு ஒரு நொடி கூட அங்கே நிற்காமல் வேகமாக அவர்களை தாண்டி சென்றான்.

“அவர்தான் பிரபஞ்சன்” என்று சத்யா சொல்ல ஷெர்லி திரும்பி பார்க்கும் போது அவன் பைக் சாலையில் தூரமாக சென்றுவிட்டது. அவள் முகம் ஏமாற்றமானது. அவள் அவனை பார்க்கவேயில்லை.

ஆனால் பிரபஞ்சனின் விழிகள் ஷெர்லியை பார்த்தபடியேதான் கடந்து சென்றன.

error: Content is protected !!