மாமனாரைப் பார்த்து மன்றாட, மாப்பிள்ளை தங்கராசு, கிளம்பிக்கொண்டிருந்தான். அவனது கைப்பேசியிலிருந்து நறுமணம் கமழும் வாசனை வந்து, நாசியைத் துழைத்தது. ஏனென்றால் திரையில் பூத்திருந்தது, மலரின் இலக்கங்கள்.

“ஹலோ” என்றான்.

“ஐ, நீங்கதான. ஒங்க அம்மாவா இருக்குமோனு பயந்திட்டேன். கிளம்பிட்டீகளா? ”

“கிளம்பிக்கிட்டே இருக்கேன் மலரு. நீங்க என்னா செய்றீக?”

“சமைச்சிட்டு இருக்கேன் ராசு”

“படிக்கலையா? ”

வாசனை வரவில்லை.

“மலரு… மலரு…”

“அப்பா, படிக்க வேண்டாம்னு சொல்லி, சமைக்கச் சொல்லிட்டாக”

“அதுக்காக படிக்காம வுட்றாதீக”

“இல்லே ராசு மாமா… சமைச்சிட்டு, சாப்டுக்கிட்டே படிப்பேன்”

“செரி. செரி. நாங்க போய் பேசி, எல்லாத்தையும் செரி செஞ்சிருவோம்”

“நெசமாவா?”

“ம்ம்ம். நெசந்தான்”

“செரி ராசு. என்னா கலரு சொக்கா போட்டிருக்கீக?”

“பச்சை கலர். ஏன் கேக்கறீக?”

“எங்க அப்பாக்கு அந்தக் கலரு சொக்கா பிடிக்காது. நீங்க வேற கலர் சொக்கா போடுங்க. ஒங்ககிட்ட நீல கலர் இருக்கா?”

“இருக்கு மலரு”

“அப்பம் அந்தச் சொக்கா போடுங்க. லுங்கி கெட்டி இருக்கீகளா?”

“ம்ம்ம்”

“வேண்டாம் ராசு. வேஷ்டி கட்டிக்கோங்க”

“ம்ம்ம். செரி மலரு”

“கோகுல் சாண்டல் பவுடர் இருக்கா? போட்டுக்கோங்க”

“மலரு, போதுமே. கிளம்பறேன்”

“டவுனுக்குப் போறீகள, அதேன் ராசு மாமா. செரி, வச்சிரேன்” என்று மலர் வாசம் தருவதை நிறுத்திவிட்டது.

மூன்று பேரும் கிளம்பி வெளியே வரும் வேளையில், அஞ்சுதம் எதிரில் வந்து நின்றார். சந்தேகப் பார்வையுடன், அவர்கள் மூவரையும் பார்த்தார். அதிலும் முக்கியமாக தங்கராசுவின் அலங்காரங்கள்.

“மூனு பேரும்…” என்று அஞ்சுதம் பேச்சை ஆரம்பித்தார்.

“போம்போது எங்கன போறீகனு கேட்கக் கூடாது” – முந்திக் கொண்டார், பேச்சிகிழவி.

“அப்படியா! அதெல்லாம் கேட்கல. ஆனா நான் சொல்ற எடத்துக்குத் தான் போனும்”

“இது என்னாட்டி?”

“தங்கராசு, டவுனுக்குப் போயி பிள்ளைகளுக்கு நோட்டுப் புக்கு வாங்கணும். செரியா”

“செரி அம்ம”

“சட்டுபுட்டுனு கிளம்பு”

“செரி அம்ம”

அவர் சொல்லிவிட்டு, உள்ளே சென்று விட்டார்.

“ஏன்ட்டி நாமளே டவுனுக்குத்தான போறோம் ” – முத்துக்கிழவி.

“வாத்தியார் பிள்ளைதான் மக்கா இருக்கும்னு சொல்வாக… இங்கன வாத்தியாரே… “-பேச்சிக்கிழவி.

“ஆச்சி”

“இவன் வேற. நீ ஏன் சொக்காவ மாத்துன”

“மலரு சொல்லிச்சி. அவுக அப்பாவுக்கு, இந்த கலருதான் புடிக்குமாம் ”

“இது வேறயா. அது என்னா செய்யுது?”

“சமைக்கிதாம்”

“புடிக்கலயா?”

“சமைச்சு, சாப்பிட்டுக்கிட்டே படிப்பாகளாம்”

“ஏம்லே, கதைப் புத்தகம்தான சாப்டுக்கிட்டே படிப்பாக… பாடப் புத்தகமுமா?”

இப்படி பேசியபடியே, மூன்று பேரும் ‘டவுனுக்கு’ கிளம்பிச் சென்றனர். ரேஷன் கடை இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் செல்லத்துரையின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில், செல்லத்துரை வெளியே வந்தார்.

“வணக்கம் செல்லத்துரை” என்றனர், கிழவிகள் இருவரும்.

“வணக்கம் ஆச்சி. என்னா இம்புட்டு தொலவு வந்திருக்கீக? ”

“ஒன்னுமில்லை. ஒங்ககிட்ட, தங்கராசுக்காக ஒரு ஒத்தாசை கேட்டு வந்திருக்கோம்”

யோசித்தவர், “ஆச்சி, ரேஷன் கடையில புண்ணாக்கு போடறதில்லேயே” என்றார்.

“புண்ணாக்கா??” – மூவரின் ஆச்சரியங்கள்.

“இவுகதான், பால் மாட்டுப் பண்ணை வச்சிருக்காகல. அதுக்காகத்தான கேட்டு வந்திருக்கீக”

“இல்லே செல்லத்துரை… இல்லே… அதுக்காக நாங்க வரலப்பா. செத்த தேரம் ஒங்கூட பேசனும்”

“செரிங்க ஆச்சி. அங்கன இருக்கிற டீக்கடையில் உட்காந்திருக்கீகளா? நான் அஞ்சு நிமிஷத்துல வந்துறேன்”

சரியென்று மூவரும் சேர்ந்து டீக்கடைக்குச் சென்று அமர்ந்தனர். சற்று நேரத்தில் செல்லதுரையும், அங்கு வந்தார். நால்வரும் தேனீர் அருந்திக்கொண்டே பேசுவதற்குத் தயாராகினர்.

“ஆச்சி நான் ஏன் இந்தக் கடையில ஒங்கள உட்காரச் சொன்னேன் தெரியுமா?”- சம்பந்தம் இல்லாமல் பேசியது செல்லத்துரையின் குரல்.

“தெரியலே”

“இங்கன, டீ சூப்பர்ரா இருக்கும்”

இவரை சம்பந்தி ஆக்கலாமா? என்ற சந்தேகத்தில் இரு கிழவிகளும்.

“ஏன்னு சொல்லுங்க?” – சம்பந்தி.

“தெரியலேயே” – மூவரும்.

“தங்கராசு பண்ணையிலருந்துதான், இங்கன பால் சப்ளே ஆகுது” – குலுங்கிச் சிரித்தது குரல்.

“?! ?! ?!” – மூன்று பேரின் முகம்.

“முதல எனக்குத் தெரியாது. நம்ம ஊருக்கு வந்தப் பொறவுதான், தெரிஞ்சது. ரெம்ப டேஸ்ட் தம்பி. எப்படிப்பா இப்படி?”

“அது மாடுகள பிசுக்கில்லாம(no dirt) வச்சிக்கிட்டாலே போதும். அந்தால பழஞ்சியெல்லாம் (left over rice) கழனித் தண்ணீல கலக்கக் கூடாது. ”

‘மாடு வளர்ப்பு மாநாட்டிற்கு’ வந்தது போல் உணர்வு, இரு கிழவிகளுக்கும்.

“ஏன்ட்டி முத்து, பேச்சு வேற திசப் பக்கம் போகுதோ?” என்றார் பேச்சிக்கிழவி, முத்தாச்சியின் தன்டட்டி அருகில்.

“அது போனா என்னா? நீ அதுலருந்தே ஆரம்பி” – முத்தாச்சி.

“செரியா சொன்னட்டி. இப்பம் பாரு.” – பேச்சிக்கிழவி.

“செல்லத்துர, ஒரு டீக்காக தெனமும் கடைக்கு வருவீகளா? இந்தப் பாலு வீட்டிலேயே கிடைச்சா எப்படி இருக்கும். ” – பேச்சிக்கிழவி முயற்சி.

செல்லத்துரை யோசிக்க ஆரம்பித்தார். கிழவிகளுக்கு சந்தோஷம்.

“இப்பம் புரியுது ஆச்சி. தம்பி, ஊருக்குள்ள பால் சப்ளே பண்ணப் போகுதா? ” — யோசிப்பின் முடிவில் செல்லத்துரை.

தலையில் கைவைத்தவாரே, “ஏன்ட்டி முத்து, நான் பேசுறது செரியாதான இருக்கு” என்றார் பேச்சிக்கிழவி.

“நீ பேசறது செரிதான். அவருக்குத்தான் புரியல”

இதற்கிடையே…

“தங்கராசு, ஒங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். அன்னிக்கி மலரு செஞ்ச தப்புக்கு, நான் ஒங்க சொக்காயப் புடிக்க வந்திட்டேன்.”

“ஏன்ட்டி பேச்சி, அவரே விஷயத்துக்கு வர்றாருட்டி” என்றார் முத்தாச்சி, பேச்சிகிழவியின் காதில்.

“பரவால்ல, நானும் கை உயர்த்திருக்கக் கூடாதுல. மன்னிச்சுக்கோங்க ”

“அந்தால தங்கராசு, ஒங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” – மிகுந்த தயக்கத்துடன் செல்லத்துரை.

“முத்து, நீ சொன்னது, ரெம்பச் செரி” என்றார் பேச்சிகிழவி, முத்தாச்சியின் காதில்.

“ஆனா, எப்படி கேக்கனுதான் ரெம்பத் தயக்கமா இருக்கு” – கூச்சத்துடன் செல்லத்துரை.

“சட்டுபுட்டுன்னு கேட்கிறீகளா?” – மாப்பிள்ளை அவசரம்.

“இல்லே தங்கராசு, நீங்க தளபதி ரசிகர் மன்றத் தலைவராக இருக்கீகள ” – செல்லத்துரை.

“ம்ம்ம்” – மாப்பிள்ளை கலவரம்.

“இந்த மொத நாளு, மொத தடவையே படத்தைப் பார்க்கிறதுக்கு டிக்கெட் கேட்டா தருவீகளா?” – இதற்கா இத்தனை கூச்சம், தயக்கம்!!

“அது நீங்க மன்றத்தில உறுப்பினரா சேர்ந்துட்டீகனா, நான் அதுக்கு ஏற்பாடு செய்றேன் ” – மாப்பிள்ளை, தன்னை மறந்து மன்றத்து தலைவரான நொடி.

“ஏம்லே, இது ரெம்ப அவசியமா? எதுக்காக வந்தோம்னு அவருக்கு வேனா தெரியாம இருக்கும். ஒனக்கு தெரியுமில்ல. வாயை மூடுலே” என்று பேச்சிக்கிழவி அதட்டினார்.

“செல்லத்துர, நீங்க மலரு படிப்ப ஏன் பாதியிலே நிறுத்திருக்கீக? ” என்றார் முத்துக்கிழவி.

“படிப்ப நிறுத்தல ஆச்சி. அதுக்கு கல்யாணம் கட்டி வச்சிட்டு, அந்தால படிக்கட்டும்னு நினைச்சிருக்கேன். ”

‘மாப்பிள்ளையே மாறப்போகுது. நீ மன்றத்துச் சோலியப் பார்க்கிற’ என்பது போல், கிழவிகள் தங்கராசுவைப் பார்த்தனர்.

“கல்யாணம் கட்டிக்கிட்டுப் படிக்கப் போவுது. அந்த மாப்பிள்ளை பையன், காலேசில வாத்தியாராம். அவரே படிக்க வச்சிருவாராம்.”

‘இதுக்காகவாது நீ படிச்சிருக்கனும்’ என்பது போல், பேச்சிக்கிழவி தங்கராசுவைப் பார்த்தார்.

“செல்லத்துர, அது படிச்சு முடிஞ்ச பொறவு, கல்யாணம் கட்டிக்கலாமே. அதோட இல்லாம, தங்கராசுகிட்ட கூட ரோட்ல வச்சி, மலரு படிக்கிறதப் பத்தி, ஒரு விஷயம் சொல்லிருக்கு” என்றார் முத்துக்கிழவி தனது முயற்சியாய்.

“அப்படியா தம்பி”

“ம்ம்ம்”

“நடுரோட்டில நின்னு பேசாதீக தம்பி ரோட்டில பஸ்ஸு வேனு விருட்டுனு வந்துச்சுனா, என்னா பண்ணுவீக? ”

“இல்லே. ஓரமா ஒக்காந்துதான் பேசினோம்” – தங்கராசு.

கிழவிகளின் பார்வை, ‘ஏம்லே நீயும் அவர் கணக்கா பேசுற’ என்றிருந்தது.

“வேறென்ன ஆச்சி சொல்ல” – கிசுகிசுப்பாய், தங்கராசுவின் இயலாமை.

“முடியல பேச்சி, என்னா நடக்குதுன்னே புரியல” என்று தலையைத் தேய்த்துப் புலம்பினார், முத்துக்கிழவி.

“செல்லத்துர, அந்தப் புள்ள ஒரு வசனம் சொல்லிருக்கு பாருங்க, அப்படி ஒரு வசனம். நீ சொல்லுலே” என்றார், பேச்சிக்கிழவி தனது முயற்சியாய்.

“நானா எப்பம் நிறுத்திறனோ, அப்பம்தான் தோத்திட்டேன்…அ.. தோ.. ” – முடிக்க முடியாமல் தங்கராசுவின் மறதி.

“அதுவரைக்கும் ஜெயிக்கப் போராடிக்கிட்டு இருக்கேனுதான் சொல்வேன். செரியா தம்பி. ”

“ம்ம்ம்”

“ஒங்களுக்கு தெரியுமா?”

“ஒங்ககிட்ட ஒரு தடவைதான் சொல்லிருக்கு. அது படிக்க ஆரம்பிச்சதலருந்து, இதத்தான் சொல்லுது. அதேன் எனக்கு அயத்துப் போகல.”

“ஆனா விடாம சொல்லுதுல, செல்லத்துர. அதப் பாருங்க. அதுக்காகவாது, அது பரிட்சை எழுதட்டுமே” என்றார் முத்தாச்சி.

“ஆட்டுங்க ஆச்சி. எனக்கும், அந்தப் புள்ள பிகாம் முடிச்சிட்டு, எம்காம் படிக்கனும்னு ஆசை. படிக்கட்டும். அந்தால கட்டிக் கொடுக்கலாம். ”

“ஐய்யய்யோ!” – தங்கராசு.

“என்னாச்சு தம்பி?”

“அது வேற ஒன்னும் இல்லே. ஒங்க பெண்ணப் பத்தி, ஒங்களவிட நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான். அம்புட்டுத்தான். ” – பேச்சிக்கிழவி.

“அது எனக்கு தெரியும்ல ஆச்சி, அதான் தங்கராச தேடிப் போய் ஒத்தாசை கேட்டிருக்கு. ”

“அது ஏன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீகளா? ” – முத்தாச்சி.

“யோசிக்க என்னா இருக்கு. இந்த ஊரில எல்லாருக்கும் ஒத்தாசை செய்யறது டீச்சர்தான். அதே ”

“ம்ம்ம். செரிதான். ஆனா டீச்சரகிட்ட கேட்காம, ஏன் தங்கராசுகிட்ட கேட்டுச்சி?அது தெரியுதா? ”

“நல்லா தெரியும் ஆச்சி”

‘செல்லத்துரைக்குப் புரிந்துவிட்டது’ என்று மூவருக்கும் நிம்மதி.

“டீச்சருக்கும் மலருக்கும் ஒத்து வராதுல. அதே”

“தங்கராசு செத்த தேரத்துக்கு பொறவு வருவோமா? நெஞ்சு அடைக்கிறது கணக்கா இருக்குலே” – பேச்சிக்கிழவியே, பேச்சுவார்த்தையை கைவிட்ட நொடி.

மூவரும் செல்லத்துரையிடம் விடைபெற்று, எழுந்து செல்லும் பொழுது…

“தங்கராசு, ஒங்களுக்கு நீல கலரு சொக்காய் ரெம்ப எடுப்பா இருக்கு” என்றார், செல்லத்துரை.

மூவரும் ஆவென வாய்பிளந்து நின்றனர்.

அதிர்ச்சியில் இருந்து மீண்டு, “அப்பம் ஒங்களுக்கு அம்புட்டும் தெரியும்” – பேச்சிக்கிழவி.

“மலரு, நேத்து சாயங்காலமே, எங்கிட்ட சொல்லிருச்சி, ஆச்சி”

“மலரு நீங்க பேசாம இருக்கீகனு சொல்லிச்சே” – தங்கராசுவின் ஏமாற்றம்.

“இருந்தேன். ஆனா அதோட அழுகையப் பார்த்துட்டு, என்னால பேசாம இருக்க முடியல. அது, எது செஞ்சாலும் செரியாத்தான் இருக்கும். அந்தப் புள்ளைக்கு, ஒங்க மேல ஒரு அபிப்பிராயம் இருக்குனு சொல்லுச்சி”

“அந்தால, எதுக்கு இம்புட்டு எடக்கா பேசினீக? ” – முத்தாச்சி.

“நேத்து, மலர ரீசார்ஸ் கடையில வச்சி, மீன வறுக்கறது கணக்கா வறுத்து எடுத்துட்டீகளாமே! அதான் என்னைய இப்படி ஏறுமாற பேசச் சொன்னிச்சி. கடல்ல பிடிச்ச மீன, கயத்துக் கட்டில்ல போட்டு, காய வச்சி கருவாடா ஆக்கிற மாதிரி, ஒங்களயும்… ” என்று நிறுத்தினார்.

‘தேட்’ எடை போடுபவரின் மகளை சாதாரணமாக எடை போட்ட ‘மொமண்ட்’.

“அதான் ஆக்கிட்டீகளே! அந்தால என்னா ‘மாதிரி’ ”

“ஆனா, டீச்சரை நினைச்சாதான் பயமா இருக்கு ”

“பயப்படாதீக செல்லத்துர, நாங்க பார்த்துக்குவோம் ”

“மன்னிச்சிருங்க தம்பி. இல்லே நீங்க தம்பி இல்லே. மாப்பிள்ளை! ” – மாமனாரின் மதிப்பான வெட்கம்.

“இருக்கட்டும் மாமா” – மருமகனின் மரியாதை வெட்கம்.

“ஆச்சி, இருந்தாலும் அந்தப் புள்ள அங்கன வந்து நிக்கிறதெல்லாம் ஒத்துவராது” என்றார் செல்லத்துரை பொறுப்புடன்.

“நீங்க ஒன்னும் கவலைப்படாதீக. மலர வந்து நிக்கமட்டும் சொல்லுங்க. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்”

மூவரும் செல்லத்துரையிடம் விடைபெற்றுத் திரும்பிச் செல்லும்போது, பேச்சிகிழவி மட்டும் திரும்பி வந்தார்…

“செல்லத்துர”

“நடந்த விஷயத்ல, மனசு எடக்கல்லு மாதிரி கனமா இருந்தாலும், சடைக்காம பேசினீக. சந்தோஷம்”

“ஆட்டும்ங்க ஆச்சி”

“ஆனா, ஒரு கண்ணில வெண்ணையும், ஒன்னொரு கண்ணில சுண்ணாம்பும் வச்சிப் பார்க்கிறீக ”

“…?” – கேள்வியாய் செல்லத்துரை.

“மலரு சொன்னதை, ஒடனே ஒத்துக்கிட்டீகளே! இசக்கிக்கும் அதத்தான செஞ்சிருக்கணும்”

“மலரு மேல நீங்க வச்சிருக்க பாசத்தை, இசக்கி மேலயும் வச்சிருந்தா, இசக்கி இப்படி ஒரு காரியம் செஞ்சிருக்காது. அந்தப் புள்ள கூட ஒத்துப் போற வழியப் பாருங்க” என்று ஒரு குட்டு வைத்துவிட்டுச் சென்றார்.

*****

ராட்சச சிறகுகள் முளைத்த பறவை போல், கடிகார மணித்துளிகள் பறந்தன.

மலர் படிப்பையே சுவாசமாக ஆக்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்! என்னவொன்று அவ்வப்போது சுவாசக்கோளாறு வந்தது.

மலரிடம், வாய் ஓயாமல் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட தங்கராசுக்கு, அந்த மூன்று வார்த்தை மட்டும், வாய்க்குள் நுழையவில்லை.

மலர், நல்லமுறையில் பரீட்சையை எழுதி முடித்தாள். தங்கராசுவின் பால்பண்ணைதான் இவர்களுக்கான ‘மீட்டிங் ஸ்பாட்’. அன்றும் மலர், ஆச்சிகளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“அடுத்து என்னா ஆச்சி செய்யப் போறீக? ”

“முதல நீ பாஸ் காரட போடு. அந்தால பார்க்கலாம்”

பண்ணையில் வேலை முடிந்து தங்கராசு, அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

மலர் எழுந்து கொண்டு, “என்னா ராசு, இப்படி பிசுக்கா இருக்கீக” என்றாள்.

“…..”

“உச்ச வெயில் நேரம், எப்படி விசர்வை வருது பாருங்க”

“….”

அவள் பேசப்பேச, அவனுக்கு ஏதோ புலப்படுவது போல் இருந்தது. அது, இதேதானே தன் தாயும் சொல்கிறார் என்பது. இவள், அபிமானங்களுடன் அன்பைக் காட்டுகிறாள். அவர் கண்டிப்புடன், அன்பைச் சொல்கிறார்.

விகிதங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாமே தவிர, விருப்பங்கள் ஒன்றுதானே!!

‘தன் அபிமானத்தால், அன்னையின் அன்பை உணர வைத்தவள்’ என்ற ஆச்சரியத்துடன் மலரைப் பார்த்தான் தங்கராசு… அந்த அளப்பரிய ஆச்சரியம் தந்த ஆசையில்…

“மலர்”

“என்னா, ராசு மாமா”

“ம்ம்ம்… அது … அது வந்து, லவ் யூ மலர்” என்று சொல்லியேவிட்டான்.

“நானும்தான், ராசு மாமா” என்று அவனைக் கட்டிக் கொண்டாள் மலர், கல்யாண மாலையில் வைத்துக் கட்டப்பட்ட பூக்களுக்கு உரிய வெட்கத்துடன்…

“வெடுக்கு வெடுக்குனு கட்டிக்கிட்டு நிக்காதட்டி”

“போங்க ஆச்சி?”

இப்படியே நிறைய ‘ஐ லவ் யூ – கள்’, நிறைய ‘நானும்தான்’, நிறைய ‘போங்க ஆச்சிகள்’ என்று நாட்கள் சந்தோஷமாகக் கடந்தன.

*****

அடுத்த வாரத்தில் பரீட்சையின் முடிவுகள் வந்தன. ‘எல்லோருடைய கூட்டுப் பிரார்த்தனைக்கு’ கிடைத்த பலனாக, மலர் நான்கு பாடங்களிலும், நாற்பதற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாள்.

தந்தையிடம் சொல்லிய அடுத்த நிமிடமே, தங்கராசுவின் வீட்டிற்கு முன் வந்து நின்றாள்.

மலர் வந்ததை அறிந்த கிழவிகள், தங்கராசு சகிதமா வெளியே வந்தனர். மூவரும் கேள்வியாக, அவளைப் பார்த்தனர். கட்டை விரல் உயர்த்திக் காட்டி, அவர்களின் கவலைகளை களைந்தாள்.

இரு கிழவிகளும், டீச்சருக்கே ‘ரேங்க் கார்டு’ தயாரிக்க, தயரானார்.

 

error: Content is protected !!