AOA-9
AOA-9
அவனின்றி ஓரணுவும் – 9
உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனிதனின் மூளையில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள் செல்கள் உள்ளன.
ஒவ்வொரு செல்லையும் சிறிய மணல்துகள்கள் அளவுக்கு பெரிதாக்கினால் நமது மூளைகளில் உள்ள செல்களை நிரப்ப ஒரு லாரி போதாது.
“ஊப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” ஓர் நீண்ட நெடிய பெருமூச்சோடும் திகிலோடும் உறக்கத்திலிருந்து எழுந்தமர்ந்தான் பிரபஞ்சன்,
அந்த மூச்சு வெறும் படபடப்போ பயமோ அல்ல. மாறாக உயிர் மூச்சாக வெளிவந்தது. முகத்தில் கலக்கமும் தவிப்பும் ஏகபோகமாக குடிகொண்டது. கழுத்துபுறமெல்லாம் வியர்வை துளிகளால் நனைந்து ஈரமாகி இருந்தது. தலையையுயர்த்தி பார்த்தான். மின் காற்றாடி தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது. அருகே பார்த்தால் நித்திரா தேவியோடு ஏகாந்தமாக படுத்திருந்தார் ஹரிஹரன். அவருடைய மெல்லிய குறட்டை ஒலி மட்டும் அந்த அறையில் கேட்டு கொண்டிருந்தது .
பிரபஞ்சனுக்கு ஏதோ கனவிலிருந்து மீண்டு வந்தது போல் தோன்றவில்லை. ஒரு கொடூரமான நிகழ்வை நேரில் பார்த்துவிட்டு வந்தது போல்தான் இருந்தது. திடமான அவன் மனதையும் அந்த காட்சிகள் உலுக்கிவிட்டன, அதுவும் அந்த சில நொடிகள் அவனை ஏதோ ஒன்று மரணத்தை நோக்கி இழுத்து சென்ற பிரமை! ரொம்பவும் பிரயத்தனப்பட்டே அதிலிருந்து மீண்டு வந்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் கூட தன் உள்ளுணர்வை விழிப்போடு வைத்திருக்க வெகுசிலரால் மட்டுமே முடியும். பிரபஞ்சன் அந்த வெகுசிலரிலும் தனித்துவமானவன். அந்த கோரமான நிகழ்வை கண் கொண்டு பார்க்க முடியாமல் தன்னைத்தானே போராடி எழுப்பினான் என்று சொல்வதை விட உயிர்ப்பித்து கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு மரணமாக இருந்தது அந்த கனவு.
இல்லை! அது வெறும் கனவில்லை.
அவன் மூளை அதை திட்டவட்டமாக மறுத்தது. அப்படியெனில் அது தனக்கு எப்போதும் தோன்றும் இன்டியுஷன்களா???? (நடக்கவிருக்கும் ஆபத்தை முன்னமே உணர்த்திவிட்டு செல்லும் உள்ளுணர்வு அது)
மனிதர்களில் ஒரு சிலரிடம் மட்டும் இருக்கும் ஈஎஸ்பி சக்தி என்று கூட சொல்லலாம். (அறிவியலில் இதனை முழுவதுமாக ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் *ஈ.எஸ்.பி என்ற ஒன்று இல்லவே இல்லை என்று மறுத்துவிடவும் முடியாது. அதற்கு வாழ்கின்ற வாழ்ந்த பல மனிதர்கள் சான்றாக இருக்கிறார்கள்)
பூனை, நாய் என்ற ஐந்தறிவு கொண்ட ஜீவன்களுக்கு கூட எதிர்வர போகும் ஆபத்தை முன்னமே கணிக்கும் திறமை இருக்கிறது. ஏன்? சுனாமி வருவதற்கு முன்னதாக காக்கைகள் படபடத்து ஒன்றுகூடி பறந்ததும் கூட ஒரு வகையில் இப்படிதான்.
மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அப்படி ஒரு உள்ளுணர்வு வேலை செய்த போது மனிதனுக்கு மட்டும் ஏன் இத்தகைய கணிப்பு திறமை இல்லையா ? என்று கேள்வி எழவே செய்கிறது. அதுவும் பூமியில் ஜனித்த ஏனைய எல்லா இனங்களிலும் மேலான படைப்பு என்று கர்வமாக கர்ஜித்து கொண்டிருக்கின்றான் மனிதன். தன் மூளைதான் எல்லா இனங்களுக்கும் ‘அப்க்ரேடட் வர்ஸன்’ என்று பறைசாற்றி கொண்டிருக்கிறான். அப்படியிருக்க அந்த அப்க்ரேடட் மூளை பழுதுப்பட்டு போனதா என்றால் அதுதான் இல்லை.
அந்த மூளை தன்னை நம்புவதை விடுத்து இயந்திரங்களை நம்ப தொடங்கிவிட்டது. இயற்கையோடு வாழ்ந்த மனிதனுக்கு அத்தகைய உள்ளுணர்வுகள் எதிர்கால கணிப்புகள் இன்னும் பல்வேறு சக்திகள் இருந்தது என்பதற்கு இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் கூட சான்றுகள் இருக்கின்றன. ஆனால் இயந்திரத்தோடு வாழும் மனிதன் அதையெல்லாம் எப்போதோ தலைமுழுகிவிட்டான்.
இருப்பினும் இன்றைய காலகட்டத்திலும் சிலருக்கு குடும்ப மரபணுக்களாலோ அல்லது ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கத்தோடு வாழும் முறைமையினாலோ இன்றும் சிலருக்கு இத்தகைய சக்திகள் இருக்கிறது. பிரபஞ்சனும் அப்படியானவர்கள் ஒருவன்!
ஆனால் அவன் இன்டியுஷன்கள் பெரும்பான்மையானவை சமுத்திரம் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது.
அதுவும் அவனுடைய இன்டியுஷன்கள் இதுவரை பொய்த்ததே இல்லை.
அப்படியெனில் இந்த கோர சம்பவம்???!
கேள்வியாக தோன்றிய அந்த எண்ணமே படுபயங்கரத்தோடு அவனுக்கு அச்சமூட்டியது. ஆனால் கடலுக்கும் இந்த காட்சிக்கும் என்ன சம்பந்தம்?
உறக்கத்தை தொலைத்தவன் யோசனையோடு படுக்கையிலிருந்து எழுந்து தன் அறையின் பால்கனி கதவை திறந்து வெளியே சென்று நின்றான். சில்லென்ற காற்று வீசி வியர்வையில் நனைந்திருந்த அவன் தேகத்தை குளிர்வித்தது. அந்த காற்றை அவன் அனுபவித்த போதும் அவன் மனம் ஆசுவாசப்பட்டதாக தெரியவில்லை.
எப்படி ஆசுவாசப்பட முடியும்? இதுவரையில் அவன் நினைவில் தோன்றிய எந்த நிகழ்வும் பொய்யாகி போனதில்லை. அவன் கண் முன்பாகவே அது நிகழ்ந்தேறியிருக்கிறது. அதுவும் முதல்முதலாக சுனாமி வரப்போவதை அவன் உள்ளுணர்வு முன்பே கணித்தது.
சுனாமி வர போவதை யாருமே அறிந்திராத போது, “அலை பெருசா வர போகுது… நம்மெல்லாம் அடிச்சிட்டு போக போகுது… ஓடிடலாம்” என்று எச்சரிக்கை செய்தான் அந்த சிறுவன்.
“லூசா டா நீ… அப்படியெல்லாம் வராது” யாருமே அந்த சிறுவனின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.
அப்படியொன்று தீர்க்கமாக நடக்காது என்பதே எல்லோருடைய எண்ணமும். அதுவும் தமிழகத்திலுள்ள யாருக்கும் அப்போது சுனாமி என்ற ஒன்று இருப்பதே தெரியாது.
“கடல் போய் கரையை தாண்டி வருமா?” என்று கேலி செய்த பலருக்கு இடையில்,
“வரும்… நான் பார்த்தேன்” என்றான் உறுதியாக.
“எதுலடா பார்த்த… சொல்லுடா பார்ப்போம்… லூசு லூசு”
அவனுக்கு எல்லோருமே பைத்தியகார பட்டத்தை கட்டிவிட்டனர். இந்த கேள்விக்கு அந்த சிறுவனால் எப்படி பதில் கூற முடியும். அவன் அதை எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே புரியாத போது யாரிடம் எப்படி அவன் உள்ளுணர்வை பற்றி விளக்குவான். நடந்து முடிந்த நிகழ்விற்கு ஆதாரம் கொடுக்கலாம். ஆனால் நடக்க போகும் நிகழ்விற்கு அவனால் எப்படி ஆதாரம் கொடுக்க முடியும்.
அவனை எல்லோருமே முட்டாள் போலவே பார்த்தனர். அவன் நொந்து போகுமளவுக்கு கேலி செய்து சிரித்தனர். ஆனால் அவர்கள் நம்பவே முடியாத நடக்கவே நடக்காது என்று உறுதியாக நம்பிய ஒரு பயங்கரம் நிஜமாகவே அரங்கேறியது.
கடல் பொங்கியது. அது ராட்சத அலைகளாக உருமாறி கண்ணில் பட்ட அனைத்தையும் அசாதாரணமாக துவ்மசம் செய்தபடி அசுர வேகத்தோடு கரைகளை கடந்து பாய்ந்து வந்தது. அந்த ராட்சத அலைகளுக்குள் சிக்கியவர்கள் எல்லோரும் சின்னாபின்னமாகி போயினர். இப்படியும் கூட நடக்குமா என்ற அதிர்ச்சியில் பலரும் ஸ்தம்பித்துவிட, போராடாமலே அவர்கள் மரணம் அந்த அதிர்ச்சியோடு நிகழ்ந்து போனது.
கிட்டத்தட்ட அதே அதிர்ச்சியில்தான் பிரபஞ்சனும் இருந்தான். அவன் கண்ட காட்சிகள் உண்மையாகவே நடப்பதை நம்ப முடியாமல் அவன் பார்த்திருந்த சமயம், அவனை வாரி சுருட்டி சென்றன அந்த அலைகள்!
அன்றே அவன் மரணம் நிகழ்ந்திருக்க கூடும். ஆனால் தாயென்ற சுயநலமற்ற ஜீவனுக்கு தன் உயிரை விடவும் தனக்குள் ஜனித்த உயிரை காக்க வேண்டுமென்ற எண்ணமே பிரதானமாக இருந்ததில், அந்த பேரலைகளில் மிதந்து வந்த உடைந்த படகின் ஒரு மரத்துண்டை அவன் கரத்தில் கொடுத்தாள்.
“விட்டுடாதே செல்லம்… கெட்டிமா பிடிச்சுக்கோ” என்ற அந்த கடைசி வார்த்தைகள். அதற்கு பின் தேய்ந்து மறைந்து போன அந்த உருவம். சுற்றிலும் கடல்! கடல்!கடல்! மட்டுமே.
கெட்டியாக அந்த மரத்துண்டை பிடித்து கொள்ள வேண்டும். அது மட்டுமே அவன் நினைவில். வேகமாக அந்த அலை அவனை தூக்கி எங்கோ வீசியதில் தலையில் காயத்தோடு உடல் துவண்டு அவன் மயக்க நிலையை எய்தினான். சமுத்திரனின் ஆவேசம் அடங்கிய போது அவன் சவங்களோடு சவங்களாக கரை ஒதுங்கினான்.
அந்த சம்பவம் அவனின் முந்தைய வாழ்க்கையின் நினைவுகளை அழித்த போதும், சிற்சில சம்பவங்களோடுஅவன் அம்மாவின் முகத்தையும் குரலையும் ஒரு கருப்பு வெள்ளை நிழல் போல அவன் மூளை இன்றும் தேக்கி வைத்திருக்கின்றது..
கடலிலும் மணலிலும் தன் நினைவிலிருந்த அம்மாவை கடற்பரப்பில் தேடியும், சில நேரங்களில் கடலலைகளுக்குள் சென்று நீந்தியபடியும் தேடினான் ஒரு நாளைக்கு எத்தனை முறையென்றெல்லாம் தெரியாது. ஆனால் சமுத்திரமே கெதியாக கிடந்தான்.
பசிக்கும் போது உணவு கேட்டு வாங்கி உண்பதும் நீந்துவதும் கரைக்கு திரும்புவதும் என்றிருந்தான். அங்கிருந்த மீனவ குடும்பங்கள் சிலர் அவனை பற்றி தெரிந்து கொள்ள முற்பட்டு விசாரிக்க, அவனிடமிருந்து பதிலேதும் வரவில்லை. மிரட்டி பார்த்த போதும் ஒரு பயனும் இல்லை. ஊமை போலவே நின்றிருந்தான். ஒரு வேளை அவன் ஊமையோ அல்லது காது கேட்காதவனோ என்று கூட அவர்களுக்கு சந்தேகம் உதித்தது.
ஆனால் அவன் உண்மையில் தன் பெயர் உட்பட கடந்த காலத்தை மறந்து மனதளவில் பாதிக்கப்பட்டிக்கிறான் என்பதை அந்த மக்கள் யாருமே உணர்ந்திருக்கக்கவில்லை. மீனவ மக்களுக்கு அவன் மீது பரிதாபம் உண்டானது. அவனிடம் யாரும் எதுவும் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. யாராலும் அவனுக்கு எந்தவித தொந்தரவும் இல்லையெனும் போது அவன் பாட்டுக்கு இருந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிட்டனர்.
அதன் பிறகு இப்படியே நாட்கள் கடந்து செல்ல, அந்த சூழலில்தான் ஒரு நாள் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க தங்கள் படகுகளை தயார் நிலையில் வைத்து கொண்டனர்.
பிரபஞ்சன் திடீரென்று அவர்கள் கடலுக்கு செல்வதற்கு முன்னதாக அவர்களை நாடி வந்து, “போகாதீங்க… போகாதீங்க…” என்று தடுக்க முற்ப்பட்டான். எல்லோருக்கும் அப்போதுதான் அவனுக்கு பேச கூட தெரியுமா என்று வியப்பாக இருந்தது.
அவன் சொன்ன வார்த்தைகள் மாறாமல் அதையே மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருந்தான். அவன் முகத்தில் அத்தனை பதட்டம். இவன் ஏன் இப்படி சொல்கிறான் என்று எல்லோருமே தீவிரமாக யோசித்தனர்.
சிலரோ, “லூசு பையன்… வாங்க நம்ம போலாம்” என்று அவன் வார்த்தைகளை அலட்சியப்படுத்தினர்.
ஆனால் அவன் யாரையும் போக விடாமல் குறுக்கே புகுந்து தடுத்து கொண்டிருந்தான். சிலருக்கு அவன் செயல் கோபமாக இருந்தது. சிலருக்கு அவன் செயல் பாவமாக இருந்தது. ஆனால் யாருமே அவன் ஏன் தடுக்கிறான் என்று யோசித்து கூட பார்க்கவில்லை.
அன்றைக்கு கடலுக்கு போக இருந்தவர்கள் அவன் வார்த்தையை கேட்டிருந்தால் ஒரு மோசமான விபத்தை தடுத்திருக்ககூடும். ஆனால் எல்லோரும் எப்போதும் போல் புறப்பட ஆயத்தாமாகி விட்ட நிலையில் படகுகள் அனைத்தும் கடலுக்குள் பிரவேசிக்க தொடங்கின,
என்னதான் ஆராய்ச்சி கூடங்கள் வைத்து மனிதன் தலை கீழாக நின்று இயற்கையை ஆராய்ந்து அதனின் மாற்றங்களை கணிக்க முற்பட்டாலும், அது எந்தளவுக்கு முழுமையாக பலனிக்கிறது என்பதெல்லாம் கேள்விக்குரியான விஷயம்தான்.
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற அந்த மீனவர்களை திடீரென்று கடலின் உள்பகுதியில் எதிர்ப்பாராமல் வீசிய சுழற்காற்று தாக்கி அவர்கள் எல்லோரையும் திக்குமுக்காட செய்தது. பல படகுகள் கவிழ்ந்தன. சில படகுகள் ஒன்றோடு ஒன்று கட்டுப்பாடின்றி மோதியதில் அதன் பாகங்கள் உடைந்து சேதாரமாகின.
அதிர்ஷ்டவசமாக சில படகுகள் மட்டும் தப்பியதில் அதிலிருந்த மீனவர்கள் மற்றவர்களை காப்பாற்றினர். இருப்பினும் அவர்கள் கூட்டத்தில் இருவர் மட்டும் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. மரணம் போராட்டமாக கழிந்தது அந்த இரவு அவர்களுக்கு.
அவர்களின் குடும்பம் அவர்கள் கரைக்கு திரும்ப காத்திருக்க, நீண்ட காத்திருப்பிற்கு பின் சோகமே உருவமாக அந்த மீனவர்கள் கரைக்கு வந்து சேர்ந்தனர்.
பொருட்சேதம் உயிர்சேதம் என்று துயரின் உச்சமாக அந்த நாள் நகர்ந்த போது கடற்கரையில் அமர்ந்து கடலையே இலக்கில்லாமல் பார்த்து கொண்டிருந்த பிரபஞ்சன், ‘கடல் மகனாகத்தான் அவர்களுக்கு புலப்பட்டான். காலங்காலமாக இந்த மீன் பிடி தொழிலை செய்து கொண்டிருந்த அவர்களுக்கும் கூட கடலில் ஏற்படும் மாற்றங்களை கணிக்க முடியாத போது அவனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது.
அவன் அவர்களை எல்லாம் தடுத்ததை இப்போது யோசித்து பார்த்தால் அடங்கா வியப்பாக இருந்தது. அதோடு அவன் சொன்ன எச்சரிக்கையை கேட்டிருக்கலாமே என்று மனதினோரம் வலித்தது.
அந்த மீனவர்கள் அவனை தேடி சென்றகேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. மீண்டும் கடலுக்குள் நீந்த சென்றுவிட்டான். அவனை குறித்த அவர்கள் எண்ணங்கள் மாறியது.
அவன் ஒரு சாதாரண பிறவியாக அந்த மீனவ மக்களுக்கு தெரியவில்லை. அவனை அதிசய பிறவியாக பார்த்தனர், அதோடு அவனை, ‘கடல் மகன்’ என்று பெயரிட்டு விளிக்கவும் செய்தனர். அவன் அவர்களோடு பழகாவிடிலும் எல்லோருக்கும் அவனை பிடித்து போனது. அவனை ஒரு நாள் பார்க்கவிடிலும் அந்த மக்கள் அவனை தேடி சென்றனர். அந்தளவுக்கு அவர்கள் அவனை நெருக்கமான ஒருவனாக பார்த்து கொண்டனர்.
அவன் உடுத்தி கொள்ள தங்கள் பிள்ளைகளின் உடைகளை தந்தனர். அதோடு அவன் கேட்காமலே உணவு, தங்க இடம் கொடுத்த போதும் அவனை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவன் எப்போதும் கடலை வெறித்து பார்த்தபடி மணலில் அமர்ந்திருப்பதும் உறங்குவதும் என்று அவன் கொஞ்சமும் தன் நிலைப்பாட்டிலிருந்து மாறவே இல்லை.
இப்படியொரு சூழலில்தான் ஹரிஹரன் அவனை அழைத்து போக அந்த மக்களிடம் கேட்ட போது அவர்கள் மறுத்தனர். ஆனால் ஹரிஹரன் தன் வாழ்க்கையின் துயரத்தை பற்றி சொன்ன போது எல்லோர் மனதும் ஒருவாறு இரங்கியது. அதேநேரம் தான் இதே ஊர்தான் என்று சொன்னதில் அந்த மக்கள் சம்மதித்தும்விட்டனர்.
ஆனாலும் பிரபஞ்சனை அழைத்து போவதில் அவனுடைய சம்மதம் வேண்டுமல்லவா? ஹரிஹரன் ரொம்பவும் போராடினார் . அவனை அவர் கட்டாயப்படுத்தி அழைத்த போதும் அவரிடம் அவனை ஒரு வார்த்தை கூட பேச வைக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் கடலை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். திரும்ப திரும்ப அவனை தேடி வந்து அழைத்து செல்வதும், சில நேரங்களில் அந்த மீனவர்கள் அவனை அழைத்து கொண்டு வந்து விடுவதும் என்று இப்படியே சில நாட்கள் கழிந்தது.
ஹரிஹரனால் மனதளவில் அவனிடம் நெருங்க முடியவில்லை. அவன் பெயர் கூட தெரியவில்லை. ஆதலால் பிரபஞ்சன் என்று அவர் தன் மகன் பெயராலேயே அவனையும் அழைத்தார். மனநல மருத்துவரிடம் அவனை அழைத்து சென்றும் பெரிதாக மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று அவன் மனநிலை நிலவரத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
அதன் பிறகு ஹரிஹரன் ஒரு யோகாசன பயிற்சி மையத்திலிருந்து பெரியவரிடம் அழைத்து சென்றார். பிரபஞ்சன் மனமாற்றத்திற்கு அந்த இடம் ரொம்பவும் உதவியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்திருந்தான். சொற்பமாக ஒரு சில வாரத்தைகள் பேச ஆரம்பித்தான்.
ஹரிஹரன் பிரபஞ்சனை இயல்பாக சிரிக்க வைக்க பேச வைக்க அவனிடம் ஒரு நண்பனை போல அணுகினார். கேலி கிண்டல்கள் செய்து பேசி அவனை சிரிக்க வைக்க ரொம்பவும் பிரயத்தனப்பட்டார். அவருடைய யுக்திகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்தது.
பிரபஞ்சனும் ஹரிஹரனும் அப்பா மகன் என்ற உறவோடு இல்லாமல் நண்பர்களாக பிணைந்தனர். இன்னும் நெருக்கமாக உறவு கொண்டனர். மீனவர்கள் ஹரிஹரனை சார் சார் என்று விளித்த காரணத்தால் பிரபஞ்சனும் சிறு வயதில் அவரை சார் என்று அழைக்க ஆரம்பித்து அந்த பழக்கம் இன்றுவரை அவனுக்கு மாறவில்லை.
பிரபஞ்சன் தன் வாழ்கையில் இத்தனை ஏற்ற இறக்கங்களை மாற்றங்கள் கண்ட போதும் இந்த இன்டியுஷன்கள் அவனை விடாமல் துரத்தி கொண்டேயிருந்தன. ஆனால் இது வரை வந்த இன்டியுஷன்களை விட இது ரொம்பவும் கொடூரமாக இருந்தது.
இது நிஜமாக நடக்க போகிறது எனும் போதே அவன் உள்ளம் நடுங்கியது. எப்போதும் எப்படி எங்கே நடக்கும் என்று எந்த கேள்விகளுக்கும் விடையில்லாமல் தன்னால் என்ன செய்ய முடியும். ஆனால் அவன் மனம் சோர்ந்துவிடவில்லை.
இதை எப்படியாவது தடுக்க முடியுமா? மக்களை எச்சரிக்க முடியுமா? என்ற அவன் தொடர்ச்சியாக இதையே யோசித்து யோசித்து பித்து பிடித்த நிலைக்கு வந்திருந்தான். .
அன்றைய விடியல் நல்லபடியாக தன் தொடக்க பயணத்தை மேற்கொண்டுவிட்டது. ஆனால் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பயம் அவனை பற்றி கொண்டது.
விடிந்ததிலிருந்து படுக்கையில் தலையை பிடித்து அமர்ந்திருந்த பிரபஞ்சனை பார்த்த ஹரி அதிர்ச்சியோடு, “என்னடா பிரபா? ஏன் இப்படி இருக்க? யோகா பண்ணல” என்று கேட்கவும்,
“ஒரு கெட்ட கனவு” என்று சொல்ல வந்தவன் பின் அந்த வார்த்தையை சொல்லாமல், “ஒன்னும் இல்ல சார்” என்றான்.
“ஒன்னும் இல்லாம ஏன்டா இப்படி உட்கார்ந்திருக்க?” என்றவர் மீண்டும் அவனை நச்சரிக்க,
“என்னை கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தீங்கன்னா நானே நார்மலாகிடுவேன்” என்றான்.
பிரபஞ்சனுக்கு எப்போதும் தனிமை பிடித்தமான விஷயம். அதே போல அதிகம் பேசுவது அவனுக்கு பழககமில்லாத ஒன்று. அவன் எதையோ யோசித்து கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவர்,
“சரி… நான் உனக்கு கிரீன் டி போட்டு எடுத்துட்டு வரட்டுமா?” என்ற கேள்விக்கு,
“இல்ல நான் யோகா பண்ண போறேன்… நீங்க எப்பவும் போல வாக்கிங் போயிட்டு வந்து போட்டு தாங்க” என்றான்.
“ஓகே” என்று ஹரிஹரன் தன் காலை பணியை முடித்துவிட்டு செய்ய புறப்பட்டுவிட்டார்.
பிரபஞ்சனும் மெல்ல எழுந்து தன் யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டான். ஆனால் மனதில் அமைதி இல்லை. கடலை போலவே அந்த கனவு அவனுக்குள் அலைமோதி அவன் நிம்மதியை குலைத்தது. எப்போதும் ஒரு மணி நேரம் பத்மாசன நிலையிலிருப்பவனால் ஐந்து நிமிடம் கூட தாக்குபிடிக்க முடியவில்லை.
தெளிவு நிலை பெற வேண்டி முகத்தை அலம்பி கொண்டு தன் அறை விட்டு இறங்கி வந்தவன் சமையலறையில் தனக்காக கிரீன் டீ யை தயாரித்து எடுத்து கொண்டு ஊஞ்சலில் வந்தமர்ந்தான்.
அவன் அந்த கனவை பற்றியே யோசித்து கொண்டிருக்க, ஹரிஹரன் வரும் போது அவனுக்கு வேறொரு அதிர்ச்சியை கையோடு அழைத்து வந்தார். தன் பெட்டியோடு ஷெர்லி ஹரிஹரினோடு வந்து கொண்டிருந்தாள்.
எது யாரை வந்து அடைய வேண்டுமென்று இருக்கிறதோ அது அவர்களை வந்தடைந்தே தீரும்.
________________________________________________________________________
*ஈ எஸ் பி – ESP(Extra sensory perception) நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் அதீத உள்ளுணர்வு திறன். அதனை கூடுதல் புலனறிவு என்றும் அழைக்கின்றனர். Sixth sense