கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 22
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 22
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 22
கீர்த்தனாவின் கேள்வி விஜயேந்திரனிடம் சாட்டையடியாக இறங்க, தன் கண்களை இறுக மூடிக்கொண்டு, “கொடுத்த வாக்கை காப்பாத்த போனேன்.” என்று விஜயேந்திரன் நிதானமாகக் கூறினான். விஜயேந்திரனின் முகம் பாறையாக இறுகி, எதையும் வெளிக்காட்ட விரும்பாமல் விலகி நின்றது.
‘காப்பாத்தி இருப்பாரோ? இல்லை ஏன் காப்பற்ற வில்லை?’ என்ற கேள்வி கீர்த்தனாவின் மனதில் எழுந்தாலும், அதைக் கேட்க அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
அதன் பின் அவர்களுக்குள் மௌனமே நிலவியது. இரண்டு நாட்களில், முகுந்தன் வீட்டிற்கு வர, பூமா நடுக் கூடத்தில் நின்று கொண்டிருந்தார்.
“முகுந்தன் உள்ள வரட்டும். அந்த பெண் வரக் கூடாது.” என்று பூமா உறுதியாகக் கூற, முகுந்தன் தன் தாயைப் பரிதாபமாகப் பார்த்தான்.
‘நான் படிச்சி முடிக்கலை. கையில் ஒரு வேலை கிடையாது. நான் என் முகுந்தனை எப்படி காப்பாத்துவேன்?’ நிரஞ்சனாவின் மனம் வேகமாகப் பதட்டமாகச் சிந்தித்தது.
“அம்மா. முகுந்தன் நிரஞ்சனா இந்த வீட்டில் இருந்தால், நானும் என் மனைவியும் இங்க இருக்கோம். உங்களுக்கு
பிடிக்கலைன்னா, ஒன்னும் பிரச்சனை இல்லை. நாங்க நாலு பேரும் கிளம்புறோம்.” என்று விஜயேந்திரன் கம்பீரமாகக் கூற, ‘மனைவியா?’ என்று தன் கண்களைப் பெரிதாக விரித்தாள் கீர்த்தனா.
‘முகுந்தன் அண்ணன் இருக்கிற வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.’ என்று நிரஞ்சனாவின் சிந்தனை ஓட, ‘என் நிலைமை இப்படியா ஆகணும்?’ என்று முகுந்தனின் கண்கள் கலங்கியது.
முகுந்தனின் அறை கீழே ஏற்பாடாகி இருக்க, விஜயேந்திரன் தன் சகோதரனை அவர்கள் அறைக்கு அழைத்துச் செல்ல, நவநீதன் தன் மகன்களோடு அறைக்குச் சென்றார்.
அனைவரின் முன் அவமானப்பட்ட பூமா, கடுப்பாக, “ஏய் நில்லு.” என்று கூற, கீர்த்தனா, நிரஞ்சனா இருவரும் நின்றனர்.
‘நீரு… படிப்பில்லை. வேலையில்லை. நீ ஒரு தெண்ட சோறு. இந்த அம்மா, என்னவெல்லாம் பேசுமோ?’ என்று எண்ணியபடி நிரஞ்சனா, தயக்கமாக மாமியாரைப் பார்க்க, “உன் ராசி. உன்னால் தான் என் மகன் இப்படி இருக்கான். நீ அவன் கிட்ட போகாதா?” என்று பூமா கண்டிப்போடு கூற, சரேலென்று தன் முகத்தை நிமிர்த்தி பூமாவை பார்த்தாள் நிரஞ்சனா.
கீர்த்தனா, நிரஞ்சனாவை பரிதாபமாகப் பார்க்க, நிரஞ்சனாவின் வயது, அவளுக்கே உரிய துடுக்குத்தனம், முகுந்தன் பிழைத்துக் கொண்டான் என்பதில் வெளி வர தயாராக இருந்தது.
“நான் காரணம் இல்லை அத்தை.” என்று நிரஞ்சனா நிதானமாகக் கூற, “அத்தையா? யாருக்கு யார் அத்தை?” என்று பூமா கோபமாக கேட்டார்.
“அத்தை… முகுந்தனுக்கு நான் மனைவி. அவர் எனக்கு கணவர்ன்னு நான் உறுதியா இருக்கேன். முகுந்தன் உங்களுக்கு மகன், அப்படிங்கிறதில் நீங்க உறுதியா இருந்தா நீங்க தான் எனக்கு அத்தை.” என்று நிரஞ்சனா கூற, “கீர்த்தனா, இவ, வாய் எப்படி நீளுது பார்த்தியா?” என்று பூமா தன் மூத்த மருமகளிடம் புகார் கொடுத்தார்.
“எல்லாம் உன் புருஷன் பண்ற வேலை. இவளை…” என்று பூமா பற்களைக் கடிக்க, முகுந்தனின் நிலைமை அவரை வாயடைக்கச் செய்தது. கீர்த்தனா அவர்கள் சம்பாஷணையை, ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்ற ரீதியில் பார்க்க, “பாருங்க. நீங்க பேசியதில் நான் சொல்ல வந்ததை மறந்துட்டேன்.” என்று நிரஞ்சன் மீண்டும் பேச ஆரம்பிக்க, பூமா நிரஞ்சனாவை கோபமாகப் பார்த்தார்.
“முகுந்தனுக்கு இப்படி ஆனதுக்கு நான் காரணமில்லை. நீங்க தான் காரணம்.” என்று உறுதியாகக் கூற, பூமா, கீர்த்தனா இருவரும் நிரஞ்சனாவை அதிர்ச்சியாக பார்த்தனர்.
“நாங்க வந்தனைக்கே நீங்க எங்களை சேர்த்திருந்தா நாங்க பாண்டிச்சேரிக்கு கார்ல போயிருப்போம். இப்படி ஆக்சிடென்ட் ஆகியிருக்காது. நீங்க எங்களை வெளிய அனுப்பினதால் தான், நாங்க பைக்ல போனோம். அப்ப, நீங்க தானே காரணம்?” என்று நிரஞ்சனா நியாயம் கேட்க, அவள் குறும்பில் கீர்த்தனாவின் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது.
‘நிரஞ்சனா. எஸ்கேப். ஓடி போய், முகுந்தன் பக்கத்தில் உட்காந்துக்கொ. இல்லைனா, இந்த அம்மா, உன்னை இப்படியே வெளியே அனுப்பிரும்.’ என்று மனதில் கூறிக்கொண்டு முகுந்தன் இருந்த அறைக்குள் வேகமாக நுழைந்து கொண்டாள் நிரஞ்சனா.
கீர்த்தனா, அனைவரும் இருக்கும் அறைக்குள் நுழைய, பூமா அங்கு செல்ல மனமில்லாமல் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார்.
“முகுந்தன் ரெஸ்ட் எடுக்கட்டும். நாம எல்லாம் நாளைக்கு பேசிப்போம்.” என்று விஜயேந்திரன் கூற, முகுந்தன் சம்மதமாகத் தலை அசைத்தான்.
நவநீதன், விஜயேந்திரன், கீர்த்தனா மூவரும் வெளியே வர, “அப்பா. ரெண்டு பேருக்கும் டின்னெர் இங்க கொடுக்க சொல்லுங்.” என்று விஜயேந்திரன் கூற, “மாமா. வேண்டாம் மாமா. முகுந்தன் வெளிய வரட்டும். கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் ஒகே. ரூம்குள்ள இருந்தா ரொம்ப லோன்லியா இருக்கும் மாமா.” என்று விஜயேந்திரனிடம் கூறாமல், நவநீதனிடம் பேசினாள் கீர்த்தனா.
“கீர்த்தனா சொல்றது தான் சரி.” என்று நவநீதன் தன் மருமகளை ஒத்து போக, “அப்பா. அம்மா, நிரஞ்சனாவை ஏதாவது சொல்லுவாங்க.” என்று விஜயேந்திரன் கூற, “நிரஞ்சனா சமாளிச்சிபா மாமா.” என்று கீர்த்தனா மீண்டும் நவநீதனிடம் பேசினாள்.
இப்படியான சில பல வாக்குவாதங்களோடு, முகுந்தனின் செயல்கள் தீர்மானத்திலிருந்தன.
கீர்த்தனா படி ஏறி அவர்கள் அறைக்குள் செல்ல, “கீர்த்தனா.” என்று அதிகாரமாக ஒலித்தது விஜயேந்திரனின் குரல். கீர்த்தனா சாவகாசமாகத் திரும்பிப் பார்க்க “உனக்கு இப்ப என்ன பிரச்சனை?” என்று விஜயேந்திரன் காட்டமாகக் கேட்டான்.
“இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்?” என்று கீர்த்தனா கேட்க, “நான் உன்னை மாதிரி சுத்தி வளைச்சி பேசுறதில்லை. எனக்கு நாசுக்காவெல்லாம் கேட்கத் தெரியாது. நான் கேட்டா அதுக்கு ஒரே அர்த்தம் தான்.” என்று விஜயேந்திரன் கீர்த்தனாவின் கண்களைப் பார்த்துக் கூற, கீர்த்தனா மௌனித்தாள்.
கீர்த்தனாவின் கண்கள் பல கேள்விகளைத் தேக்கி நிற்க, “நான் சொல்லாமல் போனது தப்பு தான்.” என்று கீர்த்தனாவின் பார்வை தீட்சன்யத்தில் விஜயேந்திரனின் குரல் இறங்கி ஒலித்தது.
‘போனதே தப்பு…’ என்று கீர்த்தனாவின் குரல் ஓலமிட, அதை பிரதிபலிக்க விரும்பாமல் அவள் தன் கண்களை இறுக மூடினாள். “இந்த பார். நான் உன்கிட்ட பொய் சொல்லலை. இதுவரைக்கும் எதையும் மறைத்ததில்லை. அன்னைக்கு சூழ்நிலை, உன்கிட்ட என்னால் சொல்ல முடியலை.” என்று விஜயேந்திரன் தன்னிலையை விளக்க, “என்கிட்டே நீங்க ஏன் சொல்லணும்?” என்று தெனாவட்டாக கேட்டாள் கீர்த்தனா.
“உன் கோபத்தில் அர்த்தமே இல்லை. நீ ஒரு நாளும் எனக்கு மனைவியாக முடியாது. நமக்கு இடையில் இருக்கிறது நட்பு தான். இதில் நீ இந்த அளவுக்கு கோபப்படறதில் அர்த்தமே இல்லை.” என்று விஜயேந்திரன் நிதானமாகக் கூற, “நட்பா? அப்படினா? உங்க ஊரில் நட்பா இருக்கிறதுக்குத் தாலி கட்டுவாங்களா? அச்சச்சோ எனக்கு தெரியாம போச்சே!” என்று தன் கன்னத்தில் கைவைத்து குறைப்பட்டாள் கீர்த்தனா.
“என்ன நக்கலா?” என்று விஜயேந்திரன் சீற, “நீங்க கட்டின தாலியைக் கழட்டி, உன் மூஞ்சியில் விட்டெரிஞ்சிட்டு போக எனக்கு எவ்வுளவு நேரம் ஆகும்?” என்று தன் ஒற்றை கண்ணைச் சுருக்கி கேட்டாள் கீர்த்தனா.
இவர்கள் பேச்சை உடைந்த கண்ணாடி மாளிகை சுவாரசியமாகவும், பரிதாபமாகவும் கேட்டுக் கொண்டிருந்தது.
“ஐய… யாரும் உன்கூட வாழ இங்க துடிக்கலை. எதையும் மறைக்காம உன்கிட்ட எல்லா விஷயத்தையும் உன்கிட்ட சொன்னேன் பாரு, என்னை சொல்லணும். இந்த பொண்ணுங்களே இப்படி தான்.” என்று விஜயேந்திரன் கடுப்பாகக் கூற, “இவங்களுக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டறேன். என் வீட்டுக்கு கிளம்பறேன்.” என்று விஜயேந்திரனுக்கு கேட்காத வண்ணம் பற்களுக்கு இடையே நறநறக்க அவள் அலைபேசி ஒலித்தது.
“அப்பா…” என்று அழைத்துக் கொண்டே கீர்த்தனா பால்கனிக்கு சென்றாள். முகுந்தன் நலத்தை விசாரித்துவிட்டு, கலக்கமான குரலில் பேசினார் சத்யமூர்த்தி.
“விஷயத்தைக் கேட்டவுடன் பதறிட்டேன் கீர்த்தனா. மகனுக்குன்னு நவநீதன் சொன்னவுடனே, நம்ம மாப்பிள்ளைக்கோன்னு நெஞ்சே நின்னுடுச்சு கீர்த்தனா. இல்லைன்னு தெரிஞ்சவுடனே தான் இதயம் துடிக்க ஆரம்பிச்சுது. இப்படி யோசிக்கிறது சுயநலம்ன்னு அறிவுக்கு தெரிஞ்சாலும், மனசு என் மக விஷயத்தில் சுயநலமா தானே யோசிக்கும் கீர்த்தனா? சரி தானே?” என்று கீர்த்தனாவின் தந்தை சத்தியமூர்த்தியின் குரல், மகள் பாசத்தில் உணர்ச்சியோடு கேட்க, “சரி தான் அப்பா.” என்று கீர்த்தனா கண்களில் கண்ணீரோடு, குரலில் உணர்ச்சியை மறைத்துக் கொண்டு கூறினாள்.
“நீ நல்லாருக்க தானே கீர்த்தனா?” என்று சத்யமூர்த்தி கேட்க, “எனக்கு என்ன அப்பா குறை? எல்லாரும் நல்லவங்க அப்பா. நீங்க என் பக்கத்தில் இல்லைங்கறதை தவிர வேற குறை இல்லை அப்பா.” என்று மேலும் சில உரையாடல்களோடு தன் பேச்சை முடித்துக் கொண்டாள் கீர்த்தனா.
அவள் கழுத்தில் தொங்கிய தாலி அவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தது. ‘நான் என்ன செய்யணும்?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு, அறைக்குள் செல்ல, விஜயேந்திரன் அவளுக்காகக் காத்திருந்தான்.
அவனை ஒதுக்கி விட்டு கீர்த்தனா அறையை விட்டு செல்ல, “ஏய்! இப்ப எதுக்கு இப்படி என்னை அவமதிக்குற? சொல்லாமல் போனது தப்பு. சாரின்னு சொல்றேன்ல?” என்று விஜயேந்திரனின் குரல் உச்சந்தியில் ஒலிக்க, கீர்த்தனா அவனை மௌனமாகக் கடந்து சென்றாள்.
“இத பார். நீ உங்க வீட்டுக்கு கிளம்பு. இங்க இருந்து என்னை கடுப்படிக்காத.” என்று விஜயேந்திரன் அவளை அங்கிருந்து அகற்றும் நோக்கோடு கூற, “நீங்க வான்னா, வரதுக்கும் போன்னு சொன்னா போகிறதுக்கும் நான் நீங்க வச்ச ஆளில்லை. இஷ்டமிருந்தா இங்க இருங்க. இல்லையா, அன்னைக்கு சொல்லாம கொள்ளாம திருட்டுத்தனமா நைட் ஓடுனீங்களே அதே மாதிரி கிளம்புங்க.” என்று கீர்த்தனா அசட்டையாக கூற,அவள் கழுத்தை பிடித்தான் விஜயேந்திரன்.
“நெறிங்க. என் கழுத்தை நெறிங்கன்னு சொல்றேன்.” என்று கீர்த்தனா அழுத்தமாகக் கூற, விஜயேந்திரனின் கைகள் நடுங்கியது.
“முடியாது. உங்களால் முடியாது. அதுக்கும் தைரியம் வேணும். அதுக்கும் உண்மை எண்ணம் வேண்டும். என்ன மனுஷயா நீங்க? அம்மா, அப்பாவுக்கு உண்மையா இல்லை. காதலிசீங்க… சரி காதலிச்சாச்சு. காதலிச்ச பொண்ணுக்காவது உண்மையா இருந்தீங்களா? அதுவும் இல்லை. சரி ஊருக்காகக் கல்யாணம் பண்ணியாச்சு. கட்டின பொண்டாடிக்கும் உண்மையா இல்லை. அக்னி சாட்சியாக நடந்த கல்யாண்துக்கும் உண்மையா இல்லை.” என்று கீர்த்தனா கூறிக்கொண்டே போக, “ஏய்… நிறுத்து, நான் எல்லாத்துக்கும் உண்மையா தான் இருக்கேன். சூழ்நிலை என்னை குற்றவாளியாக்கிருச்சு.” என்று விஜயேந்திரன் உடைந்த குரலில் கூறினான்.
கீர்த்தனா அவனை வெறுப்பாகப் பார்க்க, “முகுந்தன் மாதிரி எனக்குக் கல்யாணம் பண்ணத் தெரியாது. நான் பண்ணலை. அம்மா, அப்பா கிட்ட சொல்லணும்னு காத்திருந்தேன். அதுக்குள்ள முகுந்தன் கல்யாணம் நடந்திருச்சு.” என்று விஜயேந்திரன் கூற, “முகுந்தன் அவர் காதலுக்கு உண்மையா இருக்கார்.” என்று கீர்த்தனா எங்கோ பார்த்தபடி கூறினாள்.
“ஏன் நான் இல்லையா? இத்தனை மாசமும் உரிமையா மனைவின்னு நீ என் பக்கத்தில் இருக்கும் பொழுது, நான் உன்னை மனைவியா பார்க்கலை. எங்க தப்பு பண்ணிருவோமோன்னு தான் விலகிப் போனேன். நான் என் காதலுக்கு நேர்மையாவும், உண்மையாவும் தான் நடந்துக்கிட்டேன். அது இந்த உலகத்துக்கு புரியலை.” என்று விஜயேந்திரன் கூற, “உங்க உண்மைக்கு ஹரிச்சந்திரன் பட்டம் தான் கொடுக்கணும்.” என்று கீர்த்தனா முணுமுணுத்தாள்.
“உன் கிட்ட கூட நான் பொய் சொல்லலையே கீர்த்தனா. நடந்த எல்லாத்தயும் சொல்ல தானே செய்தேன். கடைசி நாளை தவிர? ஆனால், அதுக்கு தகுதியான ஆள் நீ இல்லைன்னு நிருபிச்சிட்ட.” என்று விஜயேந்திரன் விரக்தியாகக் கூற, “ஆமாம். நான் அவ்வுளவு நல்லவள் இல்லை.” என்று கீர்த்தனா சினத்தோடும், இயலாமையோடும் கூற, “யாருமே நல்லவங்க இல்லை. நான் உற்பட.” என்று விஜயேந்திரன் சலிப்பாகக் கூறினான்.
கீர்த்தனா சமையலறைக்குச் சென்று, சமையல் வேலையைத் தொடங்க, முகுந்தனின் அறையில் “நீரு… இங்க வாயேன்.” என்று தன் மனைவியை அருகில் அழைத்தான் முகுந்தன். நிரஞ்சனாவின் தலை முடி அவள் கண்களில் விழ, அதை ஒதுக்கி விட, அவன் கைகள் பரபரக்க அது முடியாமல் போக, அவன் மனதில் ஓர் வெறுமை உண்டாகியது. ‘இந்த சின்ன செயலை கூட என்னால செய்ய முடியாதா? நான் வேலைக்கு போகணும். இப்படியேவா வீட்டில் இருப்பேன். ஐயோ… ஐயோ…’ என்ற கதறலோடு முகுந்தனின் மனதில் பல கேள்விகள் எழ, அவன் கண்கள் கண்ணீரை உகுக்கத் தயாராக இருந்தது.
‘அழுதா நிரஞ்சனா தாங்க மாட்டா, அவ தைரியமா இருக்கிறதை நான் கெடுக்கக் கூடாது. இதை நான் கடந்து வர வேண்டும்.’ என்று கவனத்தை நிரஞ்சனாவின் பக்கம் திருப்பினான் முகுந்தன்.
அடர்ந்த இலை பச்சை நிற சேலையில், அவள் இடுப்பு பகுதி யானையின் தந்தத்தின் நிறத்தில் வழுவழுப்பாகத் தெரிய, முகுந்தனின் முகத்தில் குறும்பு கூத்தாடியது. அதைக் கண்டுகொண்ட நிரஞ்சனா, “டேய்… முகுந்த்… நீ எங்க பாக்குற?” என்று கண்களை உருட்டினாள் நிரஞ்சனா.
“நீ எதைக் காட்டினையோ? அதை பாக்குறேன்.” என்று முகுந்தன் புருவம் உயர்த்த, “பேட் பாய்.” என்று அவன் மார்பில் குத்தினாள் நிரஞ்சனா.
“நீரு அது மட்டும் தான் உருப்படியா இருக்கு. அதையும் காலி பண்ணிராத.” என்று முகுந்தன் கூற, அந்த சொல்லில் அடிபட்டு கண்களில் கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள் நிரஞ்சனா.
“ஏய்… சாரி டீ… அப்படிப் பேசலை. பேசலை பேசலை.” என்று முகுந்தன் கெஞ்ச, அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் நிரஞ்சனா. “என்னால முடியலை முகுந்த். நீ இப்படி எல்லாம் பேசாத. நான் தாங்க மாட்டேன்.” என்று நிரஞ்சனா கெஞ்சிக் கொஞ்ச,”சரி… ஏன் சேலை கட்டின, மனுஷன் முடியாமல் இருக்கான்னு, தைரியதில்லையா?” என்று அவன் வம்பிழுக்க, “ச்சீ போடா.” என்று நிரஞ்சனா சிணுங்கினாள்.
“நல்லாருக்கா?” என்று நிரஞ்சனா கேட்க, அவள் இடையைப் பார்த்தபடி, “செம்ம…” என்று முகுந்தன் கூற, முகுந்தனின் கைகளை தன் இடையோடு சேர்த்துக்கொண்டு, அவன் மேல் சாய்ந்தாள் நிரஞ்சனா.
“உங்க அம்மாவுக்கு பயந்துகிட்டு தான் முகுந்த் இதைக் கட்டினேன். கட்டவே தெரியலை. கழண்டு, கழண்டு கீழ விழுது. நானும் கீழ விழறேன்.” என்று தற்போதைய பெரும் பிரச்சனையைக் கண்களில் அபிநயத்தோடு கூறினாள் நிரஞ்சனா.
“அச்ச்ச்சசோ! ” என்று முகுந்தன் அதிகமாகப் பதற, “என்ன ஆச்சு?” என்று நிரஞ்சனா அவனிடமிருந்து பதட்டமாக விலகிக் கேட்டாள். “ம்..ச்ச்… ஏன் தள்ளி போற? அப்படியே உட்காரு. சொல்றேன்.” என்று முகுந்தன் தீவிரமாகக் கூற, நிரஞ்சனா முகுந்தனைச் செல்லமாக முறைத்தாள்.
“சொல்லனுமா, வேண்டாமா?” என்று முகுந்தன் சட்டம் பேச, “சொல்லு…” என்று அவன் மேல் சாய்ந்த கேட்க, “உன் சேலை பிரச்சனையைப் பத்தி தான் யோசிச்சேன். எவ்வுளவு கஷ்டம் உனக்கு? நீ கீழ விழுந்தா யார் பிடிப்பா? சேலை….” என்று அவன் முடிக்காமல் நிறுத்த, “டேய்…” என்று கடுப்பாக கூறினாள் நிரஞ்சனா.
“நீ வேற கடுப்படிக்காத. நானே அவுங்க சேலை கட்டிருக்காங்களே. இந்த காலத்தில் யார் காட்டுவா? உங்க அம்மா ரூல் அப்படியோன்னு பயந்து கஷ்டப்பட்டு கட்டிருக்கேன்.” என்று நிரஞ்சனா சோகமாக கூற, “கட்டலை… சுத்திருக்க…” என்று கேலி செய்தான் முகுந்தன்.
“சரி. எதோ ஒன்னு. இப்ப என்ன செய்யறது?” என்று நிரஞ்சனா கேட்க, “அதை கழட்டிரு.” என்று முகுந்தன் கூற, நிரஞ்சனாவின் கண்கள் கோபத்தில் சிவக்க, முகமோ வெட்கத்தில் சிவக்க, அதை ரசித்தப்படி, “சுடிதார் போட்டுக்கோ. அம்மா ஒன்னும் சொல்ல மாட்டங்க.” என்று நிரஞ்சனாவை மேலும் வம்பிழுக்கமால் சமரசம் பேசினான் முகுந்தன்.
நிரஞ்சனா வேகமாகத் தலை அசைக்க, “உள்ள வரும் பொழுது அம்மா கிட்ட என்ன பிரச்சனை?” என்று முகுந்தன் கேட்க, கண்சிமிட்டிச் சிரித்தாள் நிரஞ்சனா.
“வயசானவங்க. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயிறேன்…” என்று முகுந்தன் கெஞ்சுதலாகக் கூற, “அது எப்படி டா, லவ் மேரேஜ், இல்லை வீட்டில் பார்த்த கல்யாணம் எப்படி நடந்தாலும் அம்மா விஷயத்தில் மட்டும் ஒரே மாதிரி இருக்கீங்க?” என்று நிரஞ்சனா கேட்க, அவளை மேலும் கீழும் பார்த்தான் முகுந்தன்.
“எப்படி பார்த்தாலும் சரி. கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம். உன்னையே விட்டுத் தரமுடியாது. உங்க அம்மா, உன்னை கேட்கறாங்க. என்னால் முடியாது. இதை நீ உங்க அம்மா கிட்ட சொல்லவேண்டாம். நானே சொல்லிட்டேன்.” என்று நிரஞ்சனா கூற, முகுந்தன் புன்னகைத்துக் கொண்டான்.
அனைவரும் உணவருந்த மேஜைக்குச் செல்ல, நிரஞ்சனா முகுந்தனிடம் பேசியபடி அவன் சூழல் நாற்காலியை தள்ளி கொண்டு மேஜை அருகே வந்தாள். பூமா படக்கென்று எழுந்து கொண்டார். “என்னால, கண்டவங்களோட உட்கார முடியாது.” என்று பூமா செல்ல எத்தனிக்க, “நீ மத்தவங்களை அவமான படுத்துறதா நினைச்சிட்டு, உன் மகனை அசிங்க படுத்தற.” என்று நவநீதன், தன் மனைவியை கண்டிக்க, “அம்மா… காயப்படுறது நம்ம முகுந்தன் அம்மா.” என்று தன் தமயனுக்காக தன் தாயிடம் கெஞ்சினான் விஜயேந்திரன்.
“அண்ணா. எதுக்கு பிரச்சனை. நாங்க அப்புறம் வரோம். நீரு… வா நாம நம்ம ரூமுக்கு போகலாம்.” என்று முகுந்தன் கண்டிப்போடு கூற, நிரஞ்சனா சூழல் நாற்காலியை திருப்ப எத்தனிக்க, “யாருக்கு பிடிக்கலையா. அவங்க போகட்டும்.” என்று நவநீதன் கூற, நடந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அனைவரின் மாற்றத்தை ஒத்து கொள்ள முடியாமலும் பூமா கண்ணீரோடு தன் அறைக்குச் சென்றார்.
“நீங்க சாப்பிடுங்க. நான் உங்க அம்மா கூட சாப்பிடுறேன். இல்லைனா அவ ரொம்ப வருத்தப்படுவா.” என்று நவநீதன் கூற, மகன்கள் இருவரும் சம்மதமாகத் தலை அசைத்தனர்.
தந்தை உள்ளே சென்றதும், கீர்த்தனா தோசை எடுக்க உள்ளே சென்றாள்.
“நம்ம அப்பா… அம்மா…நைஸ் கபில்… நீயும், கீ… சாரி அண்ணியும் எப்படி?” என்று புருவம் உயர்த்தி கேட்டான் முகுந்தன்.
அனைவரின் வருத்தத்தையும், முகுந்தனின் உற்சாகம் குறைத்தது. முகுந்தனின் மனவலி தெரிந்தாலும், எல்லாரும் அதை போக்கவே முடிவு செய்தனர்.
முகுந்தனின் கேள்விக்கு விஜயேந்திரன் புன்னகையைப் பதிலாகக் கொடுத்தான்.
கீர்த்தனா பரிமாற, “நான் உதவி பண்ணட்டுமா?” என்று நிரஞ்சனா முன்னே வர, “நீ முகுந்தனைக் கவனி.” என்று கூறி முகுந்தனின் தட்டில் மொறுமொறு வென்று தோசையை வைத்தாள் கீர்த்தனா.
“அண்ணி… எனக்கும், அண்ணனுக்கும் இப்படி தோசை தான் பிடிக்கும்.” என்று முகுந்தன் கூற, “தெரியும்.” என்று முகுந்தனிடம் கூறிக்கொண்டே, தடிமனான தோசையை விஜயேந்திரனின் தட்டில் பரிமாறினாள் கீர்த்தனா.
தனக்காக காத்திருந்து, மொறுமொறு வென்று பார்த்துப் பார்த்து பரிமாறும் கீர்த்தனா விஜயேந்திரனின் கண்முன் தோன்ற, அவளை யோசனையாகப் பார்த்தான் விஜயேந்திரன்.
‘கணவன் மனைவியாக இல்லைனாலும், நட்போட தானே இருந்தோம்? நான் அப்படி என்ன பண்ணிட்டேன்?’ என்ற கேள்வி அவன் மனதில் எழ, மௌனமாக உண்ண ஆரம்பித்தான் விஜயேந்திரன்.
நிரஞ்சனா, முகுந்தன் இருவரும் இவர்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை. காதலால், அனைத்து இழப்புகளையும் கடந்துவிடலாம் என்று உறுதியாக நம்பினர் அந்த இளம் ஜோடி.
அடுத்த தோசை, மாவாக இருக்க, “கீர்த்தனா மாவா இருக்கு.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தான் விஜயேந்திரன். “தோசைக் கல் காயலை போல..” என்று கூறி சட்டாபையோடு திரும்பினாள் கீர்த்தனா.
முகுந்தனுக்கு, நேர்த்தியான வட்ட வடிவில் வெந்தய நிறத்தில் மொறுமொறுவென்று தோசை சூடாகப் பரிமாறப்பட, விஜயேந்திரனுக்கு கருகிய நிலையில், உருவமற்ற தோசையைப் பரிமாறினாள் கீர்த்தனா. தோசை விஜயேந்திரனை பரிதாபமாகப் பார்க்க, விஜயேந்திரன் கீர்த்தனாவைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் கேள்வியைப் புரிந்தவள் போல், “தோசைக் கல் ரொம்ப காஞ்சிருச்சு.” என்று கீர்த்தனா கிசுகிசுப்பாக கூறினாள்.
விஜயேந்திரன் மெல்லிய புன்னகையோடு எழுந்து கொள்ள, கீர்த்தனா கண்டும் காணாமல் அமர்ந்தாள். கீர்த்தனா முன்பு, அவன் கரம் பிடித்துத் தடுத்த காட்சி விஜயேந்திரனின் கண்முன் தோன்ற, அவன் தன்னை உலுக்கிக் கொண்டு சுயநினைவுக்குத் திரும்பினான். அன்பு அதன் இருப்பை விட, இல்லாமையை விஜயேந்திரனுக்கு அழுத்தமாக உணர்த்த ஆரம்பித்தது.
‘என்ன செய்ற கீர்த்தனா?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள் கீர்த்தனா. அவள் கண்களிலும் நீர்த் துளிகள்.
மாடியிலிருந்து கீர்த்தனாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜயேந்திரன். கீர்த்தனா ஏதோ பெயருக்குக் கொறித்துக் கொண்டு, அவர்கள் அறைக்குள் நுழைய, விஜயேந்திரன் சுவரில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு, “தோசை கல்லு சரியா இருந்ததா? சாப்பிட்டாச்சா?” என்று நக்கலாகக் கேட்டான் விஜயேந்திரன்.
“ஒழுங்கா இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் தோசை ஒழுங்கா வரும். ஒழுங்கா இல்லாதவங்களுக்கு ஒழுங்கா வராது.” என்று இரு பொருள் படக் கூறினாள் கீர்த்தனா.
“கீர்த்தனா ப்ளீஸ். கொஞ்சம் நேரடியா பேசேன். நான் உன்கிட்ட எதையுமே மறைக்கலையே. எதுக்கு இவ்வுளவு கோபம்?” என்று விஜயேந்திரன் வழிமறித்து கேட்க, “சொல்லாமல் விட்டுட்டு போனவருக்கு என் கோபத்தின் மேல் என்ன அக்கறை?” என்று முகம் திருப்பி கேட்டாள் கீர்த்தனா.
“என்னவோ ஆருயிர் மனைவியை விட்டுட்டு போன மாதிரி கேட்கற? உனக்கும் எனக்கும் இடையில் எதுவும் இல்லை. அப்புறம் ஏன் இப்படி பண்ற?” என்று விஜயேந்திரன் கடுப்பாக கேட்க, “எதுவும் இல்லாத நான் கோபப்பட்டா, உங்களுக்கு ஏன் வலிக்குது?” என்று கூறி கீர்த்தனா விலகி செல்ல, கீர்த்தனாவின் கைகளை பிடித்து, “என் கேள்வி உனக்கு புரியுது. ஆனால், பதில் சொல்லமாட்ட. அப்படி தானே?” என்று விஜயேந்திரன் விடா கொண்டனாக நிற்க, கீர்த்தனா அவனை ஆழமாக பார்த்து அவன் கேள்விக்கான பதிலைக் கூறினாள்.
கீர்த்தனாவின் பதிலில், விஜயேந்திரனின் கைகள் தானாகக் கீழே இறங்கியது. அதிர்ச்சியின் உச்சக் கட்டத்தில் பேயறைந்தார் போல் நிற்க, கீர்த்தனா போர்வைக்குள் புகுந்து கொண்டு தூக்கத்தைத் தழுவினாள்.
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.