இத்தனை நாட்களாக இந்த நாள் முழுக்க இவனை நினைக்கவே இல்லை.. வெரிகுட்.. என்று தன்னையே தினமும் பாராட்டி, இனி எந்த தாக்கமும் இருக்காது என்று உருவேற்றி, திரும்பி செல்வது பற்றி முடிவெடுத்திருக்கும் இந்த வேளையில் இந்த பிறந்த நாள் வாழ்த்து ரொம்ப முக்கியமா.. முட்டாள், மடையன், மூடன்.. கையிலிருந்த ஃபோனையே மனோவாக எண்ணி கண்களால் எரித்துக் கொண்டிருந்த கண்மணி கன்னத்தில் சூடாக இறங்கிய நீரில் சுயநினைவுக்கு வந்தாள்.
நோ.. இந்த அளவு பாதிப்பு மனோவுக்கு அவள் மேல் கிடையாது. இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே இருந்ததில்லை.
மூளையின் சில சொல்பேச்சு கேட்காத சிவப்பு சட்டை நியூரான்கள் அடிப்பாவி.. நாங்களும் மாற முயற்சித்துக் கொண்டுதானிருக்கிறோம். ஆனாலும் என்றுமே பாதிப்பு இல்லை என்பது அநியாயமாக இல்லையா என்று வாயில் போட்டுக் கொண்டன.
மனோ கண்மணியின் ஹீரோ. அந்த ஹீரோ போஸ்ட் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. அருண் கொஞ்சம் அமைதி விரும்பி. படிக்கும் பொழுது கதவை மூடிக் கொள்வான்( கதவுக்கு இந்த பக்கம் கண்மணியிருந்தால்). அரவிந்த் படிப்பதற்கான ஒரே இலக்கு 35 மார்க் தான். அதற்கு மேல் ஒரு வார்த்தை அதிகம் படிப்பது கூட அவனைப் பொறுத்தவரை டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட். சௌமிக்கோ அந்த 35 என்ற டார்கெட் கூட கிடையாது.
மனோதான் இவளுக்கு வாசித்தல் என்ற உலகை அறிமுகப்படுத்தினான். ப்ரிஸம் வைத்து வானவில் காட்டுவான். காந்தம் வைத்து பூக்கள் வரைவான். இவளைப் போல இத்தனை மணிக்கு வந்தேன், இதைச் சாப்பிட்டேன் என்றெல்லாம் பேச மாட்டான். பிக் பேங் தியரி விளக்குவான். பரிணாமம் பேசுவான். ஔரங்சிப்பின் சமூகக் கொள்கையிலிருந்து மன்மோகன் சிங்கின் பொருளாதரக் கொள்கை வரை எல்லாம் பேசிய கையோடு, சாரி காலோடு எதிரணியினரிடம் பந்தைப் பறிகொடுக்காமல் தன் இருகால்களுக்கும் இடையே பந்தை லாவகமாக கடத்தி கோல் போடுவான். அவளை எப்போதும் பிரமிக்கச் செய்யும் வான்வெளி அவனுக்கும் பிடித்தது. ஹீரோவானான்.
பள்ளி முடிந்ததும் புத்தகப்பையை முதுகில் சுமந்தபடி சௌமியோடு மனோ வீட்டிற்கு தான் செல்வாள். மாலை காப்பியும் பலகாரமும் அவர்கள் பால்கனியில் கலாவதி ஆன்ட்டியின் கைவண்ணத்தில்தான். தேவகி ஆன்ட்டி கொஞ்சம் முசுடுதான் என்றாலும் எப்பாடுபட்டாவது சௌமியை அன்றைய ஹோம்ஒர்க் ஐ முடிக்க வைத்துவிட்டால் கண்டுகொள்ள மாட்டார்கள். பள்ளியில் டீச்சர் பேசியது, தோழியரோடு விளையாடியது, சண்டையிட்டது, பூச்சி பறந்தது, பூதம் வந்தது எல்லாவற்றையும் மனோவிடம் சொல்வாள். 5 மணிக்கு மேல் பாரதி வந்ததும் மறுஒலிபரப்பு நிச்சயம் உண்டு. ஆனால் இப்பொழுது நடந்த நடப்போடு அதைப்பற்றிய மனோவின் கருத்தும் சேர்த்து சொல்லப்படும்..
எனவே அவன் ஹைதராபாத் சென்ற போது மனோவை விட மனோவுடனான நேரத்தை ரொம்பவே மிஸ் செய்தாள்.. தன் சகவயது சௌமி மற்றும் அவள் தோழியரோடு ஒன்ற ரொம்பவே முயன்றாள்தான். ஆனால் இந்த வேவ்லென்த், வேவ்லென்த் என்பார்களே அதுதான் ஆங்காங்கே பயங்கரமாக இடித்தது.
காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையே பாலம் கட்டியது போல் பெரிய கம்மல் ஒன்றைப் போட்டு சௌமி வர எல்லோரும் ஹே.. வாவ்.. சூப்பர் என்ற போது கண்மணி சொன்னாள், சௌமி.. இதேபோலத்தான் தென்னாப்பிரிக்காவில் பழங்குடியினர் சிலர் பெரிய தொங்கட்டான் போடுவார்களாம். சிறுவயதிலேயே போட்டு அதன் வெயிட்டில் காது ஓட்டை பெரிதாக பெரிதாக எவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறதோ அவர் அவ்வளவு அழகாம்.
இவள் கிண்டல் அடிக்கிறாளா இல்லை சீரியசாகப் பேசுகிறாளா என்று புரியாத குழப்பத்தில் இவளையே பார்த்தாள் சௌமி. மற்றொரு முறை டீவியில், திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் காதலன் காதலியிடம் ஐ லவ் யூ சொல்ல காதலியும் மீ டு சொன்னாள். எல்லோரும் உருகிக் கொண்டிருக்க இதை அப்பவே சொல்லியிருந்தால் அவர்களுக்கும் நேரம் மிச்சம், நமக்கும் நேரம் மிச்சம் என்று கண்மணி தீர்ப்பு சொல்ல நான்கு ஜோடி கண்களில் தெரிந்த நெருப்பில் கண்மணி உருகாதிருந்தது பாரதி அம்மா செய்த புண்ணியம் தான்.
இதிலிருந்து தப்பிக்க ஒருவழி கிடைத்தது. மனோவின் மூலமாகவே. அவளுக்கும் சௌமிக்கும் புத்தகங்கள் பரிசு கொண்டு வர ஆரம்பித்தான்.அடுத்த முறை அவன் வருவதற்குள் அந்த புத்தகத்தை முடித்து விடுவாள்.
நாட்கள் நகர்ந்தன. கல்லூரி வாழ்க்கை தொடங்கியது. கம்ப்யூட்டர் மேல் காதல் வர பொறியியல் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்தாள் கண்மணி. கண்மணி அரசு கல்லூரியில் சேர, சௌமி நீர்நிலைகளுக்கு நினைவிடமாய் ஆங்காங்கே இருக்கும் கல்லூரிகளில் ஒன்றில் அதே பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை சில லட்சங்களின் உதவியுடன் தொடங்கினாள்.
தன் கடமைக்கு குணசேகரன் சொல்லிவிட்டார். காசு பிரச்சனையில்லை தேவகி. ஆனால் அவளுக்கு பிடித்த படிப்பில் சேர்த்தால் படிக்கக் கொஞ்சம் எளிதாக இருக்கும். யோசித்து சொல், என்று.
என்ன அவள் இஷ்டத்திற்கா.. தையல் தைக்க பிடிக்குமாம். ஒரு பெரிய வீட்டு மருமகளாகப் போறவள் பட்டம் வாங்க வேண்டாமா.. தேவகியின் இரண்டு மணிநேர பேச்சிற்கு பின் சௌமியே போய் குணசேகரனிடம் சொல்லிவிட்டாள், மாமா.. பி.இ படிக்கிறேன் என்று.
இவள் இப்படி என்றால் மனோவின் கதை வேறு. மனோ வயிற்றில் இருக்கும் போதுதான் கலாவதிக்கு இருதய வால்வில் கோளாறு உள்ளது தெரிய வந்தது. எட்டு மாத முடிவில் உடல்நிலை மிகவும் மோசமாக, இதற்கு மேல் அம்மாவால் தாங்க முடியாது என்று அப்பொழுதே பிறந்து விட்டானாம். இரண்டு பாரத்தில் ஒன்று குறைய இவ்வளவு தாம்பா என்னால் முடியும் என்று இதயம் கொஞ்சம் கொஞ்சமாக சீரடையத் தொடங்க மருத்துவர் இனி ஒரு குழந்தையை நினைத்துக்கூட பார்க்காதீர்கள் என்றார். அன்று முதல் ராஜா தான் அவன் அந்த வீட்டில். கண்மணியின் அம்மா கூட கிண்டலாகச் சொல்வார் மனோ தன் தந்தையிடம் ஓர் இரவு போய் நின்று , அப்பா நாளையிலிருந்து இந்த டைல்ஸ் கடையை மூடிவிட்டு பருத்தி வியாபாரம் செய்யுங்கள் என்றால் சரிப்பா.. அப்படியே செஞ்சிடலாம் என்பாராம்.
அதனால்தான் கட்டிடக்கலைப் படிப்பு முடிந்து சில மாதங்கள் ப்ராஜெக்ட் என்று அங்குமிங்கும் சுற்றியவன் நான் பிஸினெஸ் மேனேஜ்மென்ட் முடித்து விடுகிறேன் என்று சொல்லி டெல்லி சென்றான். பயங்கர பிஸியாம் வரமுடியவில்லை என்று ஒரு மாதம் கழித்து கண்மணிக்கு ஃபோன் செய்தான். அதை சொல்லி முடிக்கவே அவர்களுக்கு அரைமணி நேரம் ஆனது. அதன்பின் அவ்வப்போது ஃபோனில் பேசிக் கொள்வார்கள்.
கலர் டிரஸ் வர, கலர் கலராய் கனவுகளுடன் கட்டவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி போன்ற வாழ்க்கைமுறை என்று கண்மணியும் பிஸிதான்.
அப்பொழுதுதான் அந்த பொல்லாத நாள் வந்தது. சௌமிக்கு ஏதோ சந்தேகம் என்று கண்மணியை அழைத்தாள். பால்கனியில் படிக்க ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் பள்ளி தோழிகள் சிலர் வர மாநாடு களைகட்டியது.
அவரவர் தங்கள் கல்லூரியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டனர். என் காலேஜ் அப்படி, என் காலேஜ் இப்படி, அந்த ப்ரொபஸர் அப்படி எடுப்பார், இவர் இப்படி பேசுவார் என்று ஏதேதோ.. தவறாமல் பேச்சு காதல் கதைகளுக்குப் போனது.
என் கல்லூரியில் ஸ்வேதா என்று ஒரு பெண்ணிருக்கிறாள்பா. உங்க பக்கத்து வீடடில் இருக்கிறாரே தினேஷ், அவர் கேர்ள் ஃப்ரெண்டாம்.
என் காலேஜ்ல ஒரு சீனியர் உண்டு. மூன்றாம் வருடம் படிக்கிறார். ஒவ்வொரு வருடத்திற்கும் அவருக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்டாம்.
சௌமி ஆரம்பித்தாள். ஹா.. இதென்னப்பா.. எங்கள் மனோவிற்கு மாதம் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் உண்டு.
அரை கவனத்தை இங்கே வைத்து புத்தகத்தில் எதையோ படித்துக் கொண்டிருந்த கண்மணி மெதுவாக நிமிர்ந்தாள்.
என்ன..
என்ன என்ன..
நீ இப்போ என்ன சொன்னாய்..
மனோவிற்கு மாதம் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட்..
சீ..
என்ன சீ..
மனோ அப்படியெல்லாம் செய்ய மாட்டான்..
உன்னிடம் சொன்னதே இல்லையா? மணிக்கணக்கில் பேசுவீர்கள்.
என்ன சொல்லவில்லை..
என்ன இரண்டு பேரும் வடிவேலு காமெடி நடித்துக்காட்டுகிறீர்களா..
சௌமியா ஃபோனை எடுத்துசில ஃபோட்டோக்கள் காட்டினாள்.
நீயே பார். மனோவோட ஃப்ரெண்ட்ஸ் அவர்கள் பேஜில் போட்டது.
ஒவ்வொன்றிலும் வெவ்வேறு இடங்களில் தன் சக வயது பெண்களோடு மனோ சிரித்துக் கொண்டிருந்தான். வித் யூ ஃபாரெவர்.. லவ் யூ ஆல்வேஸ் என்று வெவ்வேறு கேப்சன்களுடன். ஒரே ஒற்றுமை எல்லா பெண்களும் பொம்மை போல் அழகாக இருந்தார்கள்.
ஃபோட்டோ எடுத்தால் கேர்ள் ஃப்ரெண்டுனு அர்த்தமா..
நீ வேணும்னா மனோகிட்டயே கேட்டுக்கொள்ளேன் என்று அலட்சியமாகத் தோளைக் குலுக்கி விட்டுக் கொண்டாள் சௌமி.
அதன்பின் புத்தகத்தில் மனம் பதியவில்லை.. எங்கேயோ லேசாக ..ஏன் வலிக்க வேண்டும்.. ஆனால் என் மனோவா இப்படி… ஒரு பெண்ணை விரும்புகின்றான் என்றால் எந்த தவறும் இல்லை தான். அதுவும் கொஞ்சம்..ம்கூம்..ஆனால் மாதத்திற்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்டாம் அவன் அப்படி இருப்பானா.
புத்தகம் பேனாவிலிருந்து வாட்ச், கைப்பை என்று பரிணமித்திருந்த பரிசுகள் இப்பொழுது வேறு விதமாய் தெரிந்தன. முகம் தெரியாத பெண்ணோடு மனோ ஒவ்வொரு கடையாய் ஷாப்பிங் செல்வது போல் காட்சி தோன்ற கற்பனையிலேயே சரசரவென்று அழித்தாள்.
ஏன் இப்படியெல்லாம் கற்பனை செய்து தன்னையே வருத்த வேண்டும். இந்த முறை மனோ வரும் போது அவனிடமே கேட்டு விடலாம்.
பிளான் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த முறை மனோ வந்தபோது அதை எப்படி கேட்பது என்றுதான் தெரியவில்லை. ஹாய் மனோ.. உனக்கு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்.. ம்கூம்.. அது தப்பாகி விடும். உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் உண்டா என்று கேட்கலாம். அதற்கு ஆமாம் என்று சொன்னால்.. என்று சொன்னால் என்ன செய்வது.. அதற்கு பின் யோசிக்க முடியாமல் கையிலிருந்த புத்தகத்தை இதே போல வெறித்துக் கொண்டிருந்த போது மனோவே வந்துவிட்டான். யோசித்து வைத்த எதையும் கேட்க முடியவில்லை. யோசித்து வைத்ததென்ன சாதாரணமாகவே பேச முடியாமல் வாய்க்கு வந்ததை பேசினாள். மனம் மட்டும் நோ.. நோ.. மனோ அப்படியெல்லாம் செய்ய மாட்டான். ஆனால் சௌமி பொய் சொல்ல மாட்டாளே.. என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது
அன்று மட்டுமல்ல. அதன்பின் பல சமயங்களில் இப்படித்தான்.
இந்த வாரம் காலேஜ் கல்ச்சுரல்ஸ் மனோ. ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பு எடுத்துக்கொண்டோம். நான்..
டொய்ங்.. அவன் செல்ஃபோன் சத்தமிட கண்மணியின் பார்வை அங்கு போனது.
என்னாச்சு..
மெசேஜ் வந்திருக்கிறதென நினைக்கிறேன்.
ம்ச்.. அப்புறம் பார்க்கலாம். நீ என்ன பொறுப்பெடுத்தாய்..
அதன்பின் கண்மணியால் பேச்சில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. யார் மெசேஜ்.. என்முன் ஏன் எடுக்கவில்லை.. ஏதேதோ எண்ணங்கள்.
எல்லா நேரமும் வாயை அடக்குவதும் சாத்தியமாயில்லை.
ஒரு அழகான ஹேர் கிளிப் அவளுக்கொன்றும் சௌமிக்கு ஒன்றும் வாங்கி வந்த போது பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள்.
என்ன மனோ.. இப்போதெல்லாம் படிப்பதற்கு இல்லையா..
ஏன் கண்மணி..
இல்லை.. இதெல்லாம் நான் வாங்க போனாலே ஒரு மணி நேரம் ஆகும். உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது..
எந்த காலத்திலே இருக்கிறாய் கண்மணி.. மால் மால் என்று ஒன்று கேள்விப்பட்டிருக்கிறாயா.. வலது பக்கம் ஆண்கள் பொருட்கள் என்றால் இடது பக்கம் பெண்கள் பொருட்கள், நேரே குழந்தைகள் பொருட்கள் பின்னே கிச்சன் பொருட்கள் எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும்.
நீ ஏன் இடது பக்கம் பார்க்கிறாய்..
இப்பொழுதெல்லாம் பழக்கப்பட்டதுதான். மூடுக்கு ஏற்ற மாதிரி ஒருமை பன்மையில் மாறி மாறி கூப்பிடுவது.
உனக்கு இப்போ என்ன பிரச்சனை.
எனக்கென்ன பிரச்சனை.. நீ எந்த பக்கம் பார்த்தால் எனக்கென்ன.. யாருடன் பார்த்தால் எனக்கென்ன.. யாருக்காக வாங்கினால் எனக்கென்ன..
அவளை வினோதமாய் ஒரு நொடி பார்த்தவன் பால்கனியை விட்டு வெளியேறி கீழே போய்விட்டான். வினோதமாய் என்று ஏன் இடக்கரடக்கலாய் சொல்ல வேண்டும் பைத்தியம் பிடித்து விட்டதா என்றுதான் பார்த்திருக்க வேண்டும். அவளுக்கே அந்த சந்தேகம் வரும் பொழுது அவனுக்கு வராமல் இருந்தால்தானே ஆச்சரியம்.
அன்றும் இப்படித்தான். எல்லோரும் அந்த பால்கனியில் உட்கார்ந்திருந்தார்கள். ஏதேதோ பேசிக்கொண்டிருந்த பொழுது சௌமிதான் தொடங்கினாள்.
இந்த படம் பார்த்தீர்களா.. ஹீரோ ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் ஒரு பெண்ணை காதலிக்க முயற்சிப்பாராம்.
ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் முயற்சிக்க அது காதலா.. நம்ம அரவிந்த் எழுதும் அரியரா..
டேய் அண்ணா.. என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்..
அருண் சொல்வது சரிதானே அரவிந்த். இது சௌமி. ஒருமுறை விரும்பியவரை மறந்து எப்படி உடனே இன்னொருவரை காதலிக்க முடியும்.
நீங்கள் சொல்வதெல்லாம் போன தலைமுறையில் சௌமி.. இப்போ எல்லாம் கல்யாணம் கிடையாது என்ற கண்டீசனோடுதான் காதலிக்கவே ஆரம்பிக்கிறார்கள்.
எல்லோரும் அப்படி இல்லை. நம்ம கிஷோர் இருக்கிறானே. கண்மணியின் சம்மதத்திற்காக மூன்று வருடங்கள் காத்திருக்கிறான்..
கையிலிருந்த ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்த மனோ மெதுவாக நிமிர்ந்தான்.
என்ன..
என்ன என்ன..
கண்மணி சௌமியை முறைத்தாள்..
மனோ கேட்டான், யார் கிஷோர்?
கல்லூரி ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே கண்மணிக்கு காதல் கடிதம் கொடுத்து அவள் நோ சொல்லி விட இன்னும் இவள் மனம் மாறுவாள் என்று காத்திருக்கிறான்.
முட்டாள். இது மனோ.
ஏன் முட்டாள்?
மூன்று வருடங்களாக ஒருவன் உன்னை டார்ச்சர் செய்கிறான். அவனைச் சொன்னால் உனக்கென்ன கோபம்..
டார்ச்சரெல்லாம் இல்லை. அப்பப்போ கிரீட்டிங் கார்டு தருவான். புது டிரஸ் போட்டால் நல்லா இருக்குனு சொல்வான். அவ்வளவுதான்..
இப்பொழுது முட்டாள் நீதான்.
மனோ கண்மணியுடன் கோபம் கொண்டு பேசிய சந்தர்ப்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் இத்தனை பேர் முன்னிலையில்.
கண்கள் கரிக்க அதற்கும் கோபம் அவன் மேல் வந்தது.
நானா முட்டாள். அப்போ யாரு சார் அறிவாளி..ஆமாம் ஆமாம். கையில் வாட்சை மாற்றுவதை விட வேகமாக காதலிப்பவரை மாற்றுபவர்கள் தான் இப்போதெல்லாம் அறிவாளிகள்.
கண்களை இறுக மூடி மூச்சை இழுத்து விட்டவன் அடுத்து பேச சில நொடிகள் ஆனது. எல்லோர் முன்னிலையிலும் சாரைப் பற்றி பேசியது தாங்க முடியவில்லை போல.
கண்களைத் திறந்து கண்மணியைப் பார்த்து பேசிய போது மனோவின் முகத்தில் இல்லாத அமைதியைக் குரலில் கொண்டு வந்திருந்தான்.
உனக்கு புரியவில்லையா கண்மணி. நீயே சொல். நீ அவனை விரும்பாத சூழ்நிலையில் அவனுக்கு அதை தெளிவாகக் கூறியிருப்பாய் என்று நம்புகிறேன், இந்த சூழ்நிலையில் அவன் உன்னைப் பின் தொடர்வது தவறு.
விரும்பவில்லை என்றால் அப்படியே விட்டுவிட வேண்டுமா, அரவிந்தின் சந்தேகம்.
என்னைப் பொறுத்த வரை நாம் விரும்புபவர் நம்மை விரும்புகிறார் என்று உறுதியாகத் தெரியாமல் நம் காதலை சொல்வதே தவறு. அதுவே அவரை டார்ச்சர் செய்வதுதான்.
அது என்னவோ சரிதான். அந்த கிஷோர் மட்டும் கையில் கிடைத்தால் முதுகிலேயே நான்கு போடுவாள். எத்தனையோ முறை சொல்லிவிட்டாள். அந்த எண்ணம் துளி கூட இல்லை என்று. சினிமா ஹீரோ போல போஸ் குடுத்து காத்திருக்கிறேன் என்பான். கோபம் வரும். மற்றவர் முன் சங்கடமாய் இருக்கும். ஆனால் இவனென்ன சொல்வது.. அதுவும் உணர்த்தியிருப்பாய் என்று நம்புகிறானாம்.
ஏன் மனோ.. நிறைய பேர் விரும்புவதாகக் கூறினால் என்ன செய்வது.. மாதத்திற்கு.. அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்த அதற்கு மேல் கேட்க முடியாத மாதிரி அவனும் சட்டென்று எழுந்தான்.
எழுந்தவன் உன் அப்பாவிடம் சொல்லி முதுகில் நான்கு போடச் சொல்ல வேண்டும். பக்கத்தில் பார்வையைத் திருப்பி, நல்ல அண்ணன்கள்.. தங்கச்சி கேட்கிறாள் பாருங்கள்.. தீர்த்து வையுங்கள் என்று அங்கிருந்து வெளியேறினான். படியிறங்கி வீட்டிலிருந்து வெளியேறியவன் வீடு அதிர கதவை அடித்து மூடிய சத்தமும் அதைத் தொடர்ந்த அவன் யமாஹா கிளம்பிய சத்தமும் வரும் வரை யாரும் அசையவில்லை. அன்றிரவு கிளம்பியவன் எப்பொழுதும் போல் அடுத்த வாரம் வரவும் இல்லை.