Vannam konda vennilave 2
Vannam konda vennilave 2
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 2
1978 அன்று.
கோயம்புத்தூர், அவினாசி சாலை. இளமாறனும், தமிழ்ச்செல்வனும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
“எங்கம்மாகிட்ட அதையும், இதையும் சொல்லி பர்மிஷன் வாங்கிறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன் தமிழ்.”
“ம்… என்னால அப்பாக்கிட்ட உண்மையை சொல்ல முடியல, ஆனா அம்மாகிட்ட குந்தவியை பாக்க போகப் போறேன்னு சொல்லிட்டேன்.”
“ஐயோ! நிஜமாவா?”
“அம்மா எல்லாத்தையும் புரிஞ்சுக்குவாங்க மாறா, நான் எதையும் அம்மாகிட்ட மறைக்க மாட்டேன்.”
“என்ன சொன்னாங்க?”
“அந்த பொண்ணோட அப்பா கொஞ்சம் கெடுபிடின்னு சொல்லியிருக்க, அதனால வம்புல மாட்டிக்காம பத்திரமா போய்ட்டு வான்னு சொன்னாங்க.”
“இங்கப்பார்ரா! அம்மாவும், மகனும் எல்லாம் பேசிக்குவீங்களா?”
“ம்… எல்லாம் பேசிக்குவோம்.”
“அங்க ஒரு சிவப்பு புடவை பார்க்க சூப்பரா இருக்குதே, இதையும் போய் அம்மாகிட்ட சொல்வியா?”
“என் கண்ணுக்கு அது சூப்பரா தெரியலையே, தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவேன்.” இரண்டு பேரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
Coimbatore Medical College.
குந்தவி தற்போது அங்குதான் படித்துக் கொண்டிருந்தாள். அவள் வீட்டில் மிகவும் கண்டிப்பு. அத்தனை சுலபத்தில் அவளால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. ஊருக்கு வரும் போது கூட நண்பர்களால் குந்தவியை பார்க்க முடியவில்லை. அதனால் இப்படி ஒன்றிரண்டு முறை யாருக்கும் தெரியாமல் கோயம்புத்தூர் வரை வந்து பார்த்து விட்டு செல்வார்கள்.
கல்லூரி வளாகத்தின் விசிட்டர்ஸ் அறையில் இருவரும் காத்திருந்தார்கள். ஹாஸ்டலுக்கு ஆண்கள் செல்ல அனுமதியில்லை. சற்று நேரத்திற்கெல்லாம்,
“மாறா! தமிழ்!” என்று கூவிக் கொண்டு வந்தாள் குந்தவி. மூவரிடமும் இளமை பொங்கி வழிந்தது.
“எப்படி இருக்கே குந்தவி?”
“நல்லா இருக்கேன் தமிழ். நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?”
“அம்மிணியை பாத்தாலே தெரியுது, நல்லாத்தான் இருக்கீங்கன்னு. இது என்ன பட்டணத்து ஸ்டைலா? நடத்துங்க அம்மணி, நடத்துங்க.”
“கேலி பண்ணாத மாறா, இங்கெல்லாம் இப்படி உடுத்தலைன்னா சிரிக்கிறாங்க, சீனியர்ஸ் ராகிங் பண்ணுறாங்க.” அவள் சிணுங்க,
“அழகா பாவாடை, தாவணி போட்டிருந்த பொண்ணு, இதென்ன கராட்டிக் காரன் மாதிரி எதையோ மாட்டிக்கிட்டு நிக்குது!”
“சும்மா அவளை கலாட்டா பண்ணாத மாறா. நீ சொல்லு குந்தவி, படிப்பெல்லாம் எப்படிப் போகுது?”
“பிழிஞ்செடுக்கிறாங்க தமிழ், இவ்வளவு காலமும் படிச்சதெல்லாம் என்ன படிப்பு, இதுதான் படிப்பு எங்கிற அளவுக்கு படுத்துறாங்க.”
“ஏய் பொண்ணே! டாக்டருன்னா பின்னே சும்மாவா? அப்படித்தான் இருக்கும். நீ ஆசைப்பட்ட படிப்பு, உன்னோட கனவு. மார்க் கொஞ்சம் குறைஞ்சு போச்சு மாறான்னு ஒப்பாரி வெச்சயே அதெல்லாம் மறந்து போச்சா?”
“அப்படி இல்லை மாறா. முன்னாடி எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் நாம எல்லாம் ஒண்ணாக் கூடி கொஞ்ச நேரம் சிரிச்சுப் பேசினா சுலபமா போயிடும். இப்பதான் நீங்க யாருமே எங்கூட இல்லையே.” குந்தவியின் கண்களில் நீர் கோர்த்தது.
“குந்தவி, அப்படியெல்லாம் நினைச்சு உன்னையே நீ வருத்திக்கப்படாது. இங்கேயும் எல்லார்க்கிட்டயும் நல்லா பழகனும், புரிஞ்சுதா?”
“ம்…”
“இப்ப எதுக்கு கண்ணை கசக்குறே, உங்கப்பாக்கு இதெல்லாம் தெரிஞ்சுது… அம்மணி பாடு திண்டாட்டம் தான்.”
“இல்லை மாறா, அப்பா வரும் போது இதெல்லாம் பேசமாட்டேன். நீங்க ரெண்டு பேரும் எங்கிறதால மனசுல இருந்தது அப்படியே வந்திருச்சு.”
“சரி குந்தவி, ஹாஸ்டல் சாப்பாடெல்லாம் எப்படி? நல்லா இருக்குமா?”
“அவ்வளவு மோசம்னு இல்லை தமிழ். ஆங்… உங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லனும்னு நினைச்சேன். என் சீனியர் ஒருத்தர், பிரபாகரன்னு பேரு. என்னோட ரொம்ப நல்லா பழகுவாங்க. மெரிட்ல பாஸ் பண்ணி இருக்காங்களாம். கேட்ட உடனே நான் மலைச்சுப் போயிட்டேன் தெரியுமா?”
நண்பர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, இது எதையும் கவனிக்காத குந்தவி பிரபாகரன் புகழ் பாடுவதிலேயே இருந்தாள்.
“நல்லா பேசுவாங்க, எனக்கு டவுட் எல்லாம் சொல்லிக் குடுப்பாங்க. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என் ட்ரெஸ் பாத்து கிண்டல் பண்ணினப்போ அவங்கதான் இப்படி உடுத்துன்னு எனக்கு சொன்னாங்க.”
“அவங்க சொன்னா, நீ உடனே கேட்டுக்குவியா?”
“ஏன் மாறா? அவங்க எனக்கு நல்லது தானே சொல்லிக் குடுக்குறாங்க.”
“நல்லதை யாரு வேணாலும் சொல்லிக் குடுக்கலாம் தப்பில்லை. அதைவிடு குந்தவி, பையன் பணக்கார வீட்டுப் பையனா?”
“இல்லை தமிழ், அவ்வளவு வசதி கிடையாது, அம்மாவும், ஒரு தங்கையும் மட்டும்தான். நல்லா படிப்பாங்க. பெரிய கார்டியோலோஜிஸ்டா வரனும் எங்கிறது அவங்க கனவாம்.”
“ம்… அப்படியா, இதெல்லாம் உங்கிட்ட பேசினாங்களா?”
“ஆமா தமிழ், என்னையும் மேல ஏதாவது பண்ணு, இங்கிலீஷ் நல்லா இம்ப்ரூவ் பண்ணுன்னு நிறைய சொல்லுவாங்க.”
“பாத்து பழகு குந்தவி, உங்கப்பா பத்தி தெரியும் இல்லையா? கவனமா இருந்துக்கோ என்ன?”
“உங்க ரெண்டு பேரைப் பத்தியும் பிரபாகிட்ட சொன்னேன். கண்டிப்பா ஒரு நாளைக்கு சந்திக்கனும்னு சொன்னாங்க. அடுத்த முறை வரும் போது லெட்டர் போட்டுட்டு வாங்க, சரியா?”
“சரிடா, நேரமாகுது. நாங்க கிளம்பட்டுமா?”
“ஐயோ! கிளம்புறீங்களா, மாறா ஏன் ஒன்னுமே பேசமாட்டேங்கிறே?”
“அதான் தமிழ் பேசுறானே, நான் சும்மா கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“பி காம் முடிச்சுட்டு என்ன பண்ணப் போறே மாறா?”
“வேற என்ன பண்ண? வேலை தேடவேண்டியது தான். இனியாவது எங்கம்மாவை நிம்மதியா உக்கார வெச்சு சோறு போடனும்.”
“தமிழ், உன்னோட ஐடியா என்ன?”
“எம் பி ஏ பண்ணனும் குந்தவி. அதுதான் என் லட்சியம். அதுக்கப்புறம் அப்பா தொழிலை எடுத்துப் பெரிசா பண்ணனும்.”
“கண்டிப்பா உங்க ரெண்டு பேரோட லட்சியமும் நிறைவேறும். அதே மாதிரி எப்பவும் நாம மூணு பேரும் இதே மாதிரி ஃப்ரெண்ட்ஸா இருக்கனும், இல்லையாப்பா?”
“நாங்க இருப்போம் குந்தவி, நீ இருப்பியா?”
“ஏன் மாறா இப்படி கேக்குறே? நான் இருக்க மாட்டனா?”
“நீ இருப்பே, நாளைக்கு கல்யாணம் ஆகி புருஷன் வந்து எங்களை வேணாம்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ?”
“அப்படி சொல்லுற புருஷன் எனக்கு வேணாம்னு தான் சொல்லுவேன். என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு எப்பவுமே முக்கியம் மாறா. இன்னொரு தரம் இப்படி பேசாதே. கஷ்டமா இருக்கு.”
“குந்தவி, ஏன்? உனக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகுமா? நம்ம மாறன் பண்ணிக்க மாட்டானா? அவனுக்குன்னு வர்றவ ஏதாவது சொன்னா ஐயா என்ன பண்ணுவாராம்?”
“அதானே, அப்பிடிச் சொல்லு தமிழ். அது என்னய்யா பழக்கம், பொண்ணுங்க கூட எல்லாம் சகவாசம் வெச்சிருக்கேன்னு உன்னோட பொண்டாட்டி கேட்டா, என் பக்கம் திரும்பி கூட பாக்கமாட்டே மாறா நீ!” குந்தவி சிரிக்க,
“அடப் போவியா! நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. சும்மா சைட் அடிக்கிறதோட சரி. கல்யாணமாவது, பொண்டாட்டியாவது…”
“நம்பிட்டோம்! அங்கப் பாரு மாறா, அந்த மஞ்சள் துப்பட்டா உன்னை ரொம்ப நேரமா சைட் அடிக்குது.”
“அட, நான் இதை இவ்வளவு நேரம் கவனிக்கலையே!” மாறன் சற்று நகர, குந்தவியின் கைகளில் எதையோ திணித்தான் தமிழ். பிரித்துப் பார்க்க பணம் இருந்தது.
“ஐயோ தமிழ், எனக்கெதுக்கு பணமெல்லாம்.”
“பரவாயில்லை குந்தவி, வெச்சுக்கோ.”
“எங்கிட்ட இருக்கு தமிழ்.”
“உங்கிட்ட இருக்கும்னு எனக்குத் தெரியும். உங்கப்பா தேவைக்கு குடுத்திருப்பாரு. இங்க, பொண்ணுங்க எல்லாம் அப்படி இருக்க மாட்டாங்க. வெளியே போவாங்க, செலவு பண்ணுவாங்க. அப்போ எல்லாம் நீயும் அவங்க கூட சேந்து போகனும். ஒதுங்கக் கூடாது என்ன?”
“சரி தமிழ்.”
“ரொம்ப ஒதுங்கினா நம்மளை பட்டிக்காடுன்னு ஒதுக்கிருவாங்க. அதுக்காக ரொம்பவும் சுத்தக் கூடாது, சரியா?”
“சரி தமிழ்.”
“கவனமா இருந்துக்கோ, நல்லா சாப்பிடு. படிக்கிறேன் பேர்வழின்னு வயித்தை காயப் போட்டுடாதே.”
“ம்…” குந்தவியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“இப்ப எதுக்கு கண்ணைக் கசக்குறே? சீனியரோட எல்லாம் பாத்து நடந்துக்கனும் புரிஞ்சுதா?”
“சரி மாறா, இனி எப்ப வருவீங்க?”
“அடுத்த முறை வரும் போது லெட்டர் போட்டுட்டு வர்றோம். அந்த பிரபாகனை கூட்டிட்டு வா, நாங்க பாக்கனும்.”
“ம்…”
பிரிய மனமேயில்லாமல் பிரிந்து போனார்கள். தமிழ் எதுவும் பேசாமல் மௌனமாக நடக்க, அதற்கு மேல் பொறுக்க முடியாத இளமாறன்,
“என்ன தமிழ்? குந்தவி என்னென்னவோ சொல்லுறா, நீயும் சும்மா கேட்டுக்கிட்டு வர்ற?”
“வேற என்ன பண்ணச் சொல்லுற?”
“குந்தவி நம்ம பொண்ணுப்பா, என்ன ஏதுன்னு விசாரிக்க வேணாமா?”
“அவளுக்கும் நம்ம வயசுதான். குந்தவி நினைச்சிருந்தா இதை நம்மக்கிட்ட சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை. ஆனாலும் அவ சொல்லுறா. அந்தப் பையனும் உன்னையும், என்னையும் பாக்கனும்னு சொல்லி இருக்கான். தப்பான எண்ணம் இருந்தா அப்படி சொல்லி இருக்க மாட்டான். என் கவலையெல்லாம் என்னன்னா, அவளுக்கு பொருத்தமானவனா அந்தப் பையன் இருக்கனும்.”
“இந்தக் காதலெல்லாம் நம்ம ஊருக்கு ஒத்து வராது தமிழ். அவங்க அப்பாக்கு தெரிஞ்சா நிலைமை என்ன ஆகும்?”
“ம்… நீ சொல்றதெல்லாம் சரிதான் மாறா. வாழப் போறவங்க முடிவு பண்ணும் போது நாம என்ன பண்ண முடியும்?”
“நாம சொன்னா குந்தவி கண்டிப்பா கேட்டுக்குவா.”
“கட்டாயம் கேப்பா, அதுல சந்தேகமே இல்லை. ஆனா அதுக்கப்புறம் உயிர்ப்பே இல்லாம ஒரு வாழ்க்கை வாழுவா, அது பாவம் மாறா. இதை அப்புறம் பாக்கலாம், வா பொழுது சாயுறதுக்கு முன்னாடி ஊர் போய் சேரலாம்.”
“ம்…”
** ** ** ** **
2018 இன்று.
நன்றாக போர்வையை கழுத்து வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் உமா என்கிற மாதுமையாள். போர்வைக்கு வெளியே தெரிந்த அந்த வட்ட முகத்தில் கொஞ்சம் குறும்புத்தனமும், கொஞ்சம் குழந்தைத் தனமும், எக்கச்சக்கமான பிடிவாதமும் தெரிந்தது. அந்த நீண்ட புருவமும், சற்றே கூரான மூக்கும், செதுக்கி வைத்த இதழ்களும் பிரம்மன் கொஞ்சம் சிரத்தை எடுத்து படைத்த படைப்பு என்று சொல்லாமல் சொன்னது.
“மாது… மாதும்மா… மாதுமையாள்…!”
தான் ஆசை, ஆசையாக தன் பேத்திக்கு வைத்த பெயரை தவணை முறையில் அழைத்துக் கொண்டிருந்தார் தமிழ் அரசி.
“ம்… பாட்டி… இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுங்க பாட்டி.”
“இன்னுமா! இப்பவே நேரம் ஒன்பது மணியாகுது ராஜாத்தி.”
“என்ன பாட்டி நீங்க…” சிணுங்கிக் கொண்டே எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள் உமா. பக்கத்தில் அமர்ந்த தமிழரசி,
“அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க, தாத்தா மில்லுக்கு போக ரெடி ஆகியாச்சு. ரெண்டு பேரும் வந்து, எங்க உமான்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன். எழும்பி குளிச்சிட்டு வாடி செல்லம்.”
பாட்டியும், பேத்தியும் கொஞ்சிக் கொண்டிருக்க, அந்த ரூமிற்குள் நுழைந்தார் ஆராதனா. உமாவிற்கு இத்தனை அழகு எங்கிருந்து வந்தது என்று அவரைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
“என்ன அத்தை, இன்னும் உங்க பேத்தியோட கொஞ்சி முடியலையா? ரெண்டு அடியைப் போட்டு துரத்தி விடாம நீங்களும் கொஞ்சுறீங்க. நாளைக்கு போற இடத்திலும் இந்தக் கூத்து தான் நடக்கப் போகுது.”
“சேச்சே! என்ன ஆராதனா இப்படி சொல்லிட்டே. என் பேத்தி சமத்து, அப்படியெல்லாம் பண்ண மாட்டா, இல்லைடி கண்ணா.”
உமாவின் நாடியைப் பிடித்து தமிழரசி கேட்க, மேலும் கீழும் தலையாட்டினாள் உமா. ஆராதனாக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டவர்,
“சரி சரி, சீக்கிரம் குளிச்சிட்டு வா உமா, அப்பா ஏர்போர்ட்டிலிருந்து கூப்பிட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க, சீக்கிரம்.”
“தமிழ் கூப்பிட்டானா ஆராதனா? நானே கேக்கனும்னு நினைச்சேன்.”
“ஆமா அத்தை, இப்பதான் கூப்பிட்டாங்க. மாமா ரெடியாகிட்டாங்க, வாங்க சாப்பிடலாம்.”
சொல்லி விட்டு ஆராதனா நகர, தமிழரசி பேத்தியையும், மருமகளையும் பார்த்தபடி இருந்தார். அழகு என்றால் அது ஆராதனா தான். தன் மகன் தமிழ்ச் செல்வனுக்கும், ஆராதனாவிற்கும் பன்னிரண்டு வருடங்கள் வித்தியாசம். அதில் அவருக்கு கொஞ்சம் கவலை இருந்தாலும், அவர்களது அன்னியோன்யமான இல்லறம் எதையும் இட்டு நிரப்பி விடும்.
சிதம்பரமும், தமிழரசியும் எந்தக் குறையும் இல்லாமல் ஆராதனாவை பார்த்துக் கொண்டார்கள். எப்படி நடக்க வேண்டிய திருமணம்! தமிழரசியின் மனதில் வெறுமை படர்ந்தது. இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் போட்ட முடிச்சை எப்படி மாற்ற முடியும்? ஆராதனாவை படிக்க வைத்து, தொழில் கற்றுக் கொடுத்து, என்று எதிலும் குறை வைக்கவில்லை.
ஆராதனாவும் இன்று வரை தன் கணவனின் பெற்றோருக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. தன் பெற்றோர் இருந்து செய்ய வேண்டிய அனைத்தையும், அவர்கள் இடத்தில் இருந்து செய்த மாமனார், மாமியார் மீது அத்தனை பாசமும், மரியாதையும் வைத்திருந்தார்.
“பாட்டீ…!” சிந்தனை கலைந்த தமிழரசி திரும்பிப் பார்க்க, குளித்து முடித்த உமா இவரை அழைத்த வண்ணம் இருந்தாள்.
“என்ன யோசனை பாட்டி? எத்தனை தரம் கூப்பிடுறது உங்களை. வாங்க சாப்பிடலாம், பசிக்குது எனக்கு.” இருவரும் டைனிங் டேபிளுக்கு போக, சிதம்பரமும் வந்து உட்கார்ந்தார். வயது ஏறியிருந்தாலும், அந்த மிடுக்கும், கம்பீரமும் இன்னமும் அப்படியே இருந்தது அவரிடம்.
“குட் மார்னிங் தாத்தா.”
“குட் மார்னிங் கண்ணம்மா. இது என்ன பழக்கம்? இத்தனை லேட்டா எந்திரிக்கிறது.”
“ப்ளீஸ் தாத்தா, இங்க வரும் போது மட்டும் தான் இப்படி. ஹாஸ்டல்ல அஞ்சு மணிக்கே எழும்பிடுவேன்.”
“சரி சரி, சாப்பிடும்மா.” எல்லோரும் உட்கார, ஆராதனா பரிமாறினார்.
“நீ சாப்பிடல்லையாம்மா?”
“இல்லை மாமா, அவங்க இப்போ வந்திருவாங்க, நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்“
“வந்ததும் வராததுமா மில்லுக்கு வரத் தேவையில்லை. ஓய்வெடுக்கச் சொல்லு. நான் இப்போ போய் பாத்துக்கிறேன். பின்னேரமா ரெண்டு பேரும் வந்தா போதும்.”
“சரி மாமா.”
ஒரு பத்து மணியளவில் தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு வந்துவிட்டார். குளித்து விட்டு வந்தவருக்கு சூடாக டிஃபன் ரெடியாக இருந்தது.
“என்ன ஆரா, வீடு ரொம்ப அமைதியா இருக்கு? உமா ஹாஸ்டல்ல இருந்து வரல்லையா?”
“வந்திட்டா, பாட்டியும், பேத்தியும் கோவிலுக்கு போயிருக்காங்க.”
“அப்படியா, நீயும் உக்காரு சாப்பிடலாம்.” இருவரும் சாப்பிட ஆரம்பிக்க,
“போன வேலை என்ன ஆச்சு?”
“ம்… சக்ஸஸ் தான். இந்த முறை இன்னும் ஒரு லோட் அதிகமா கேக்குறாங்க, புதுசா ஒரு யுனிட் போட்றலாமான்னு யோசிக்கிறேன்.”
“எது பண்ணுறதா இருந்தாலும் இளமாறன் அண்ணாக்கிட்ட கலந்து பேசிட்டு பண்ணுங்க.”
“சரிம்மா.” சாப்பிட்டு முடித்தவர்,
“ஆரா, வேலையெல்லாம் முடிஞ்சுதுன்னா ரூமுக்கு வா.” சொல்லி விட்டு நகர்ந்தார்.
காலை நீட்டி கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தார் தமிழ்ச்செல்வன். காதோரம் லேசாக நரைத்திருந்தது, இருந்தாலும் கம்பீரம் குறைந்திருக்கவில்லை. உழைத்து உழைத்து உரமேறியிருந்த உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். மனைவியின் வருகையை ஆவலாக எதிர்பார்ப்பதை அந்தக் கண்கள் அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது.
“ஆரா…!”
“இதோ வந்துட்டேன்.” குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் ஆரதனா.
“இப்படி உக்காரு.” தன்னருகே கட்டிலில் தட்டிக் காட்ட,
“சமையலை ஆரம்பிக்கனும், சீக்கிரம் சொல்லுங்க.”
“அதை சமையல்க்கார அம்மா பாத்துக்குவாங்க நீ உக்காரு.” ஆராதனாக்கு சிரிப்பு வந்தது. இது வழமை. தமிழ்ச்செல்வன் இரண்டு, மூன்று நாட்கள் சேர்ந்தாற் போல வீட்டில் இல்லாவிட்டால், திரும்பி வந்ததும் அவருக்கு மனைவியிடம் அனைத்தையும் கொட்ட வேண்டும். பிஸினஸ் முதற்கொண்டு, தான் பார்த்த அனைத்து நல்லது, கெட்டது வரை கொட்டி விடுவார்.
“ஆரா…!”
“ம்… சொல்லுங்க, இழுக்கும் போதே தெரியுது, ஏதோ தப்பு பண்ணி இருக்கீங்கன்னு.”
“ஓ… கண்டுபிடிச்சிட்டயா? ஒன்னுமில்லைம்மா, சூப்பரா ஒரு மலேஷியன் பொண்ணு. அட அட, என்ன அழகு! சும்மா சொல்லக் கூடாது போ.”
“மலேஷியன் பொண்ணா, ஆன்ட்டியா? நல்லா பாத்திங்களா?”
“அடியேய்! என்னைப் பாத்தா உனக்கு எப்படித் தோணுது? புருஷன் எவளோ ஒருத்தியை வர்ணிக்கிறேன், கொஞ்சமாவது கோபம் வருதா உனக்கு? சண்டை போடுவேன்னு பாத்தா டவுட் கேக்குறே?”
“மூஞ்சைப் பாத்தா தெரியாதா, எது மொசப் புடிக்கிற…” முடிக்காமல் அவர் வாய்க்குள் முணுமுணுக்க…
“ரொம்பவே அசிங்கப்படுத்தறேடி.” சொல்லிக் கொண்டே தன் மனைவியின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவர்,
“இந்த முறை என்னமோ தெரியலை, உன்னை ரொம்பவே மிஸ் பண்ணினேன் தங்கம், அதனால…”
“பிஸினஸ் மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் பார்ட்டி குடுத்திருப்பாங்க, நீங்களும் எல்லாரோடையும் சேந்து ரெண்டு பெக் எடுத்தீங்க, சரியா?”
“இல்லை, இந்த தடவை மூணு.”
“ஆஹா! அப்படியா? நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள்.”
“ஏய்! கேலி பண்ணுற பாத்தியா.”
“பின்ன என்ன பண்ணுவாங்க, நீங்க பாக்குற வேலைக்கு உங்களை கொஞ்சுவாங்களா?”
“ஏன், கொஞ்சினா என்ன தப்பு?”
“ஆமா, பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற வயசாச்சு, இப்போ நாம கொஞ்சுறதுதான் ரொம்ப முக்கியம்.”
“அப்ப கல்யாணம் பண்ணி குடுத்துட்டு கொஞ்சலாங்கிறியா?”
“இப்போ உங்க பிரச்சினை என்னங்க?”
“நீ எப்போ என்னை கொஞ்சுவேங்கிறதுதான்.”
“என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு? ஓவர் ரொமான்ஸா இருக்கு.”
“ரொமான்ஸ் பண்ண வேண்டிய வயசுல பிஸினஸ் பின்னாடி ஓடியாச்சு. அதனால தான் இப்போ அப்படியெல்லாம் தோணுதோ என்னவோ!” வாஞ்சையோடு சிரிக்கும் மனைவியின் முகம் பார்த்தவர்,
“ஆரா, நீ சந்தோஷமா இருக்கியா?” எனக் கேட்டார்.
“இந்தக் கேள்வியை எங்கிட்ட கேக்கக்கூடாதுன்னு பல தடவை சொல்லி இருக்கேன்.”
“மனசு கேக்கமாட்டேங்குதுடி, எவ்வளவு அழகா இருக்கே! கல்யாண வயசுல உனக்கொரு பொண்ணு இருக்கான்னா யாரு நம்புவா?”
“யாரும் நம்ப வேணாம், நீங்க நம்பினா போதும்.”
“என்னாலையும் தான் நம்ப முடியல்ல, ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு பாத்த மாதிரியே இருக்கே.” கணவன் வாயில் சின்னதாக ஒரு அடி வைத்தவர்,
“பேச்சைப் பாரு.” என்றார்.
“உனக்கு நான் பொருத்தம் தானா ஆரா? நமக்குள்ள இவ்வளவு வயது வித்தியாசம் இருக்கே, அது உனக்கு கஷ்டமா இல்லையா?” அவர் கண்களுக்குள் ஆழ்ந்து சில நொடிகள் பார்த்தவர்,
“உங்களை விட வேற யாருமே பொருத்தம் இல்லை. கல்யாண மேடை வரைக்கும் இவன்தான் மாப்பிள்ளைன்னு சொல்லி ஒருத்தன் வந்தானே, அந்தக் கல்யாணம் நடந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? எவ்வளவு அற்புதமான ஒரு வாழ்க்கையை நான் மிஸ் பண்ணி இருப்பேன். என்னால நினைச்சுக் கூட பாக்க முடியலை.”
உணர்ச்சிகளின் பிடியில் நடுங்கிய மனைவியை லேசாக அணைத்துக் கொண்டார் தமிழ்ச்செல்வன். அந்தக் கசப்பான பொழுதுகளை கடக்க நினைப்பவர் போல, கணவனின் கைகளுக்குள் ஆராதனாவும் புகுந்து கொண்டார். அந்த மோன நிலையை கலைக்காமல் சற்றே எல்லை மீறியது தமிழ்ச்செல்வன் கைகள்.
“அத்தையும், உமாவும் வந்திருவாங்க.”
“அதெல்லாம் வரமாட்டாங்க, எங்கம்மாவுக்கு தெரியும் அவங்க மகனைப் பத்தி.”
“நல்ல அம்மா, நல்ல மகன்!” இருவரது சிரிப்புச் சத்தமும் அந்த ரூமை நிறைத்தது.