AVA-Prefinal
AVA-Prefinal
அவள் திரௌபதி அல்ல
அரவிந்தின் பெசன்ட் நகர் பீச் ஹவுஸ்!
முகப்பறையில் அரவிந்தும் சரத்தும் டிவியில் பரபரப்பாய் ஒளிபரப்பாகி கொண்டிருந்த செய்தி சேனலை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்தனர்.
சாரதி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை!
ஆதலால் சாரதி டெக்ஸ்டைல்ஸ் இன்று மூடப்பட்டது. இதனைப் பார்த்து இருவரின் முகமும் பிரகாசித்து கொண்டிருக்க, அரவிந்தின் முகத்தில் பழி தீர்த்துக் கொண்ட ஓர் வன்மமான புன்னகை!
“மாமா! நீங்க ரியலி கிரேட்” என்று அரவிந்த் சந்தோஷத்தில் சரத்திற்கு பாராட்டு மடல் வாசிக்க,
“இப்பவே முழுசா சந்தோஷப்படாதே அரவிந்த்… இதில்ல நம்ம அவனுக்கு வைச்ச செக்” என்றான் சரத்!
அப்போது, “வீரா” என்று சொல்லிய அரவிந்தின் விழி பேசிய மொழி படுபயங்கரமாய் இருந்தது.
அவன் வேகமாய் தன் பேசியை எடுத்து, “எங்கடா இருக்கீங்க?” என்று ஆவல் ததும்ப கேட்கவும்
“அய்யோ சார்! இவளை எங்களால கன்டிரோல் பண்ணவே முடியல” என்று படபடப்போடு எதிர்புறத்தில் பதிலளித்தான் ஒருவன்.
வீராவோ உச்சஸ்ததியில், “என்னை விடுங்கடா” என்று கத்தி கலாட்டா செய்து கொண்டிருந்தாள். அவள் குரல் தெள்ளத்தெளிவாய் அரவிந்த் காதிலும் விழுந்தது.
அவனுக்குப் பதட்டம் தொற்றிக் கொள்ள,
“மயக்க மருந்தை அடிக்க வேண்டியதுதானே” என்று படபடப்போடு கேட்க,
“எங்கே சார் விட்டாதானே! ஆளு ரொம்ப ஷார்ப்பா இருக்கு” என்றான் அந்த அடியாள்.
அரவிந்திற்கு பிபி எகிற அந்த நபர் மேலும், “எப்படியோ வண்டில தூக்கி போட்டுட்டோம்… ஆனா எப்படி கொண்டு வந்து சேர்க்க போறோம்னு தெரியல” என்று புலம்பி தீர்த்தான்.
“நீங்கெல்லாம் ரவுடிங்க சொல்லிக்க அசிங்கமா இல்ல… ஒத்த பொண்ணை தூக்க… இவ்வளவு சீனா” என்று அரவிந்த் சொல்லும் போதே,
“பொண்ணா சார் இவ… பேய்… ரொம்ப ராங்கித்தனம் பன்றா… பேசாம கார்ல இருந்து வெளியே உருட்டிவிட்டுடலாமான்னு இருக்கு” என்றவன் சொன்னதுதான் தாமதம்!
“டே டே… அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க… அவ எனக்கு முழுசா வேணும்” என்று அரிவிந்த் அவசரகதியில் சொல்ல,
“பின்ன என்ன சார்… சிட்டி ல பட்ட பகல்ல… வேண்டாம்னு சொன்னேன்… நீங்கதான் இந்த டைம்ல…” என்றவன் அச்சத்தில் குரல் நடுங்க சொல்லி கொண்டிருக்கும் போதே,
அரவிந்த் நிறுத்தி, “போஃனை ஸ்பீக்கர்ல போடு… நான் அவகிட்ட பேசிறேன்” என்றான் அழுத்தமாக!
அந்த அடியாளும் அரவிந்த் சொன்னது போலவே செய்ய,
“ஏ வீரா” என்று அரவிந்த் மிரட்டலாய் அழைத்தான்.
ஒரு நொடி ஷாக்கடித்தது போல் வீரா அமைதியாகி பின் மீண்டவள் தன் குரலை உயர்த்தி,
“ஏ பக்கி… இந்த பூசணிக்கா மண்டையனுங்கல நீதான் அனுப்புக்கினியா?!” என்றாள்.
“ஆமான்டி நான்தான்… ஒழுங்கா இப்ப நீ வாயை மூடிட்டு வரல… உன் தங்கச்சிங்க கற்புக்கு நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன்” என்றவன் சொல்லி முடிக்கும் போதே அவள் ரத்த நாளங்களெல்லாம் வெடித்துச் சிதறியது போலிருந்தது.
“என் தங்கச்சிங்க… உன்கிட்ட இருக்காங்களா?!” என்றவள் அதிர்ச்சியுற அவள் குரலில் ஸ்ருதி இறங்கி நடுங்க,
“ஆமான்டி… என்கிட்டதான் இருக்காங்க” என்றான்.
அவள் யோசனைகுறியோடு அப்படியே மௌனமாகினாள். அவன் சொன்னதை நம்ப முடியாமல் அவள் குழப்பமாய் அமர்ந்திருக்க,
“நீ அமைதியா வந்தா உன் தங்கச்சிங்களுக்கு எந்த சேதாரமும் இல்ல” என்றான் அரவிந்த்!
எரிமலையாய் அவளுக்குள் கோபம் பொங்கினாலும் அவன் சொன்ன வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் அவள் சிலையாய் சமைந்திருக்க, அரவிந்த் அவள் பலத்தை நொறுக்கும் ஆயுதம்… அவள் தங்கைகள் என்பதை தெரிந்தே அதனை சரியான சமயத்தில் கையாண்டான்.
வீரா அப்போதைக்கு அவன் சொன்னதில் இருக்கும் உண்மையைக் கூட ஆராய விழையவில்லை. அவளைப் பொறுத்தவரை பொய்யாகக் கூட தன் தங்கைகளுக்கு தவறாக எதுவும் நேர்ந்துவிடுவதை அவள் விரும்பவில்லை. ஆதலால் கட்டுமஸ்தாய் அவளைச் சூழ்ந்திருந்த அடியாட்களிடம் எந்தவித எதிர்ப்புமே தெரிவிக்காமல் அமைதியாக வந்தாள்.
கார் அரவிந்த் பீச் ஹவுஸிற்குள் நுழைய அவள் பார்வை அந்த வீட்டை நோட்டமிட்டது.
என்ன நிகழ போகிறது? அம்முவும் நதியாவும் எங்கே இருக்கிறார்கள்?
இவ்வாறாக ஆயிரமாயிரம் கேள்விகள் அவள் மனதை வலம் வர… அச்சத்தில் அவள் கரங்கள் சில்லிட்டுக் கொண்டிருந்தன.
உள்ளூர உதறலெடுத்தாலும் அதை அவள் காட்டி கொள்ளாமல் அழுத்தமான மௌனத்தைக் கடைப்பிடிக்க, அவள் மனநிலையை வெளியே இருந்து பார்ப்பவர்களால் நிச்சயம் கணிக்க முடியாது.
வீராவை அந்த அடியாட்கள் உள்ளே அழைத்து வந்ததுமே,
“ஐம் வெயிட்டிங் பாஃர் திஸ் மொமன்ட் டார்லிங்” என்றான் அரவிந்த் முகம் பிரகாசிக்க!
“என் தங்கச்சிங்க எங்கடா?” என்று வீரா அந்த ஆட்களின் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு அரவிந்த் சட்டை காலரை பிடிக்க.. அந்த அடியாட்களோ அவள் இரு கரத்தை பிடித்து பின்னோடு இழுத்தனர்.
அரவிந்த் கேலியாய், “ச்ச்சோ! நான் சொன்னதை அப்படியே நம்பிட்டியா செல்லம்” என்று சொல்லி சிரித்தான்.
அவள் தன் முட்டாள்தனத்தை உணர்ந்த அதே நேரம் அரவிந்த் மீதான கோபத்தோடு “டே! உன்னை” என்றவள் வெறியாகி அந்த ஆட்களின் பிடியிலிருந்து விலகத் தத்தளித்து கொண்டிருந்தாள்.
அப்போது அரவிந்த் கண்ணசைவில் அவளை விடச் சொல்லி அன்ட்டிஹா ஆட்களிடம் கட்டளை விதிக்க… அவள் விடுபட்ட மறுகணமே அவனைத் தாக்க வந்தாள். அரவிந்த் அவள் முகவாயை அழுத்திப் பிடித்து தடுத்தபடி,
“ஆள் முன்னை விட இப்ப… ஹ்ம்ம்” என்றான்.
“செறுப்பு பிஞ்சிரும்… பொறுக்கி நாயே” என்றவள் அவன் கரத்தை தள்ளிவிட்டு பின்னோடு நகர,
சரத் அவள் தலை முடியை அழுந்த பற்றி கொண்டான்.
“ஆ வலிக்குது” என்றவள் கதற,
“ரொம்ப பத்தினி வேஷம் போடாதடி… அந்த சாரதி கூட தாலி கட்டாமலே குடும்ப நடத்திட்டிருக்கவதானே நீ” என்று சரத் கேட்க
“அது என் இஷ்டம்… நீ யாருடா அதை கேட்க… விடுறா என்னை” என்று அவள் சரத்தின் பிடியிலிருந்து விலக முடியாமல் பெரும்பாடுப்பட்டு கொண்டிருந்தாள்.
சரத் மேலும், “என் மச்சானுக்கு என்னடி குறை… அந்த சாரதி… அவன் கால் தூசு பெறுவானாடி… போயும் போயும் அவன் காலில விழுந்திருக்கிறதுக்கு பதிலா என் மச்சான் காலில விழுந்திருந்தா… உன்னை மகாராணி கணக்கா வைச்சிட்டு இருந்திருப்பான்” என்று சொல்லி அவள் முடியை விடுத்து அவளை வேகமாய் முன்னே தள்ளிவிட அவள் தடுமாறி,
“அம்ம்ம்ம்ம்ம்ம்மா” என்று கத்தி கொண்டு அரவிந்தின் காலடியில் வீழ்ந்தாள்.
வீழ்ந்த வேகத்தில் அடிவயிற்றைப் பிடித்து கொண்டு வலிதாங்காமல் அவள் அவதியுற,
அவள் வலியில் துடித்து கொண்டிருப்பதை அரவிந்த் சற்றும் பொருட்படுத்தாமல் அவள் முடியைக் கொத்தாய் பற்றித் தூக்கினான்.
“அய்யோ வலிக்குது… விடுறா” என்றவள் கதறி கொண்டே அவன் கரத்தில் அடிக்க
“உன்னை எவ்வளவு உயர்வான இடத்தில வைச்சிருந்தேன்… அசிங்கப்படுத்திட்டியே டி… அப்படி என்னடி அந்த கேடு கெட்டவன் கிட்ட பிடிச்சிருக்கு உனக்கு… ?!” என்றவன் பிடி இன்னும் இறுக்கமானது.
“அவரை பத்தி ஏதாவது சொன்ன… உன்னை கொன்னுடுவேன்டா” என்று அந்நிலையிலும் சீற்றமாய் கத்தினாள்.
“கொன்னுடுவியா… எங்கே கொல்லுடி பார்ப்போம்” என்றவன் கேட்கும் போது அவன் கரம் அவள் முடியை விடவில்லை. அவளாலும் அந்த நொடி அவனிடம் போராட முடியவில்லை.
“ஏன்டா இப்படி என்னை படுத்திற… நான் என்ன மாறி நிலைமையில இருக்கேன் தெரியுமா?!” என்றவள் தன் குரலைத் தாழ்த்தி அவதியோடு வயிற்றை பிடித்து கொண்டாள்.
அவளை யோசனையாய் ஏறஇறங்க பார்த்தவன், “பிரகனன்ட்டா இருக்கியா ?! எத்தனை மாசம்?” என்று எகத்தாளமாய் கேட்டு அவள் வயிற்றில் கை வைத்தான்.
வீராவின் கோபம் உச்சத்தைத் தொட அந்த நொடி அரவிந்த் முகத்தில் காரி உமிழ்ந்து,
“த்தூ… ஒரு நல்ல அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவனாடா நீ… அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும்… இப்படி நடந்துக்கிற” என்று ஆக்ரோஷமாய் கேட்க
அரவிந்திற்கு வெறியேறி அவனின் கோபம் பன்மடங்கு பெருகியது.
வீராவின் தலைமுடியை உதறி வேகமாய் அவளைத் தள்ளிவிட …
அவளோ அங்கிருந்த கண்ணாடி டீபாயில் சென்று வயிற்றில் மோதி வலி தாங்காமல் அப்படியே துவண்டு அதன் மீதே சாய்ந்தாள்.
அரவிந்த் உள்ளத்தில் இருந்த பழிவுணர்வு தீஜ்வாலையாய் அவன் விழிகளில் மின்ன,
“அன்னைக்கு உன் ப்ரண்ட்ஸ் முன்னாடி என்னை அவமானப்படுத்தின போதே உன்னை தூக்கியிருக்கனும்டி…. தப்பு பண்ணிட்டேன்” என்றவன் வெறியோடு கத்த,
அவள் வலியோடு நிமிர்ந்து,
“சத்தியமா… அன்னைக்கு நான் உன்னை அவமானப்படுத்த அப்படி செய்யல… அவங்க அல்லாம்தான் நான் சொல்ல சொல்ல கேட்காம அப்படி பண்ணானுங்க” என்றவள் முடிந்த வரை தன்னிலையை விளக்கினாள். ஆனால் அதை கேட்கும் மனநிலையில் அவனில்லை.
“ஓ! அவனுங்கதான் செஞ்சாங்க… நீ அப்பாவி… அப்படிதானே?” என்று கோபமாக, சரத் அப்போது
“சும்மா பேசி டைம் வேஸ்ட் பண்ணாதே அரவிந்த்… உனக்கு இவதானே வேணும்… தூக்கிட்டு போய் ஆசை தீர அனுபவிச்சிக்கோ… அப்புறம் நம்மாளுங்க கிட்ட கொடுத்திரு… அவனுங்களும் கொஞ்சம் சந்தோஷமா இருந்திட்டு போட்டோம்” என்றவன் குரூரமாய் பேச
அரவிந்த் முகம் சுளித்து, “சீ… இவளை போய் நான் தொட்டா எனக்குதான் அசிங்கம்… அந்த சாரதியோட எச்சை இவ” என்றான்.
“அப்புறம் எதுக்குடா இவளை இவ்வளவு கஷ்டப்பட்டு தூக்கிட்டு வர வைச்ச” என்று சரத் கடுப்பானான்.
அரவிந்த் சிரித்தபடி,
“ஆமா தூக்கிட்டு வர வைச்சேன்… ஏன்னா?!”
“ என்னை வேணான்னு சொன்ன இவளையும்… நான் விரும்பினன்னு தெரிஞ்சிக்கிட்டும்… இவளை கட்டிக்கிட்ட அவனையும்… அசிங்கப்படுத்த… அணுஅணுவா துடிக்க வைக்க… எப்படி மீடியாலா எங்க அப்பாவோட பேரை நாரடிச்சானோ… அதே போல அவன் பேர் நாரடிக்க”
“புரியலயே?” சரத் குழப்பமாய் கேட்க,
“நான் மட்டும் பார்க்கணும்னு நினைச்ச இவ உடம்பு… எப்போ எனக்கில்லாம போச்சோ… அதுக்கு இனிமே மதிப்பில்லாம போகனும்… எல்லா ஸோஸியல் மீடியாலயும் இவளோட நிர்வாண படம்தான் வரனும்” அரவிந்த் வன்மமாய் பதிலுரைத்தான்.
சரத்தின் விழிகள் அதிர்ச்சியில் அகல விரிந்தன. அவனே இதை எதிர்பார்க்கவில்லை.
ஏற்கனவே வலியில் தாங்க முடியாமல் அவதியுற்றவளுக்கு அவனின் அந்த வார்த்தைகள் இடியை இறக்கியது.
அவள் முகம் சிவக்க அவனை முறைத்து அருவருக்கத்தக்கப் பார்வை பார்க்க,
“என்னடி முறைக்கிற?… நீதானடி செட்டில் பண்ண சொன்ன… அதான் அவன் செஞ்சத்துக்கெல்லாம் மொத்தமா செட்டில் பண்ணிடலாம்னு… அதுவும் உன் மூலமா” என்றவன் சரத்திடம் திரும்ப,
“எப்படி மாமா என் ப்ளேன்?” என்று வினவினான்.
“செம மச்சான்… அந்த சாரதிக்கு இது சரியான தண்டனைதான்” என்றான்.
“வேண்டாம்…. இது அவருக்கு மட்டும் தெரிஞ்சிது” என்றபடி வீரா எழ முயன்று முடியாமல் மீண்டும் தரையில் சரிந்துவிட சரத் அவளை பார்த்து,
“தெரிஞ்சாலும் உன் சாரதியால இப்போதைக்கு ஒண்ணும் கிழிக்க முடியாதுடி… நீ வேணா கையை மேலே தூக்கி…… மேல இருக்க தி கிரேட் லாட் பார்த்தசாரதியைக் கூப்பிடு… அவர் வேணா… உன் மேல இரக்கப்பட்டுப் புடவை கிடவை அனுப்ப சேன்ஸ் உண்டு” என்று எள்ளிநகைத்தபடி உரைக்க, அரவிந்த் இதைக் கேட்டு பயங்கரமாய் சிரித்தான்.
அப்போதைக்கு அவளுக்கு உதவிக்கரம் நீட்ட எந்தப் பகவானும் இல்லை. அதே நேரம் உதவிகளை எதிர்பார்த்து நிற்க அவளும் திரௌபதி இல்லை.
*******
சாரதியின் அலுவலகம்!
அந்த இடத்தைத் தலை கீழாய் திருப்பி போட்டது போல எல்லாமே அலங்கோலமாய் கிடந்தன. அங்கிருந்த கோப்பைகள் யாவும் தரையில் மற்றும் மேஜையில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
சாரதி சொன்ன எந்தக் காரணத்தையும் அந்த அதிகாரிகள் ஏற்கும் நிலையில் இல்லை. நம்பவும் இல்லை.
அவர்களை மீறி அவனாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
இயலாமையோடு அவன் அப்படியே தன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவர்கள் தங்கள் சோதனையில் படுத்தீவரமாய் இருந்தனர்.
அந்த அதிகாரிகள் குடைந்து குடைந்து கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் கணேஷ் பொறுமையாய் பதிலளித்து அதற்கான ஆவணங்களைக் காண்பித்து விளக்கமளித்துக் கொண்டிருந்தான்.
அவன் மூளை வீரா என்ற பெயரை மட்டுமே ஓயாமல் ஜபித்து கொண்டிருந்தது.
அவன் உதடுகளோ, ‘ஆல் இஸ் வெல்’ என்று ஓதியபடி கிடந்தன.
இறுதியாய் அந்த அதிகாரிகள் தங்கள் சோதனைகளை முடித்து சாரதியின் முன்னே வந்து சில கேள்விகளை எழுப்ப, அதற்கும் கணேஷ் தான் பதில் சொல்ல முன் வந்தான்.
“இதுக்கு உங்க பாஸ்தான் பதில் சொல்லணும்” என்று அந்த அதிகாரிகள் சாரதியின் பதிலை எதிர்நோக்க,
“சாரி… நீங்க கேட்கிற எந்த கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாது… சொல்லவும் மாட்டேன்… உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க” என்றான் நிதானமாய் அதே நேரம் சற்று அழுத்தமாய்!
“என்ன பேசிறீங்க மிஸ்டர் சாரதி?” அந்த அதிகாரிகள் உச்சபட்சமாய் அதிர,
“வேற என்ன சொல்லணும்… நீங்க கேட்கிறதுக்கெல்லாம் நான் பொறுமையா உட்கார்ந்து பதில் சொல்லிட்டிருக்கவ… புல் ஷிட்” என்று தன் மேஜையில் மீதிருந்த பைஃல்களை தூக்கி வீசியவன்,
“என் வொய்ஃபுக்கு பிரச்சனைன்னு சொல்றேன்… அதே காதில வாங்காம… என்னை வெளியவும் போக விடாம… இது என்ன… அது என்னன்னு… இடியாடிக்கா” என்று பேசும் போதே அவன் உடலும் வார்த்தைகளும் நடுக்கமுற்றது.
“சார் கொஞ்சம் பொறுமையா” என்று கணேஷ் சாரதியிடம் சொல்ல முற்படும் போதே,
“நான்ஸென்ஸ்… வீராவுக்கு ஏதோ பிரச்சனைன்னு சொல்லிட்டிருக்கேன்… என்னடா பொறுமையா” என்று கேட்டு கணேஷை கோபமாய் அறைந்துவிட்டான்.
“மிஸ்டர். சாரதி… நீங்க ரொம்ப ஓவரா போறீங்க… நாங்க கேட்கிறதுக்கெல்லாம் சரியா ஆன்ஸர் பண்ணலன்னா” என்று அந்த அதிகாரிகளில் மேலானவர் ஒருவர் சொல்ல,
“பண்ணலன்னா… என்ன சார் பண்ணுவீங்க…. என் பணம் சொத்து அக்கௌன்ட்ஸ் எல்லாத்தையும் சீஸ் பண்ணுவீங்களா… கோஹெட்… டூ இட்… வேணும்னா என் கடையை கூட சீல் வைச்சுக்கோங்க… ஐ டோன்ட் கேர்… எனக்கு என் வொய்ஃபோட சேஃப்டியை தவிர வேறெதவும்… வேறெதவும் இப்போ முக்கியமில்லை” என்று கத்திவிட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
அவனவன் விதைத்ததை அவனவன் அறுவடை செய்தே தீர வேண்டும்.
*********************