Aval throwpathi alla – 18

அநாதை

வீரா அரண்டு போய் திரும்பி பார்க்க,

அப்போது மலையென ஒரு உருவம் நெடு நெடுவென வளர்ந்து அவள் முன்னே நின்றிருந்தது.

அவள் தோள் மீதிருந்த அவன் கரத்தை தட்டிவிட்டு ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தாள்.

“தம்பி! வத்திப்பெட்டி இருக்கா?!” என்று சிகரெட்டை வாயில் வைத்து கொண்டு அந்த மலை உருவம் கேட்க,

அவள் கோபமாக விழிகளை சுருக்கி

“என்னை பார்த்தா சிகரெட் பிடிக்கிற  மாறியா தெரியுது” என்றவள் முறைத்து கொண்டு கேட்டாள்.

“பார்த்தா தெரியல… ஆனா பழக்கம் இருக்குமோன்னு” என்று இழுத்தவன்

இறுதியாய், “ஆமா டிரைவர்தானே நீயி” எகத்தாளமாய் வினவினான்.

அவள் பார்வை இன்னும் உக்கிரமாய் மாறியது.

“அந்த பழக்கமெல்லாம் எனக்கில்ல… போயா” என்று அவனை விரட்டி விட,

அவனோ அங்கிருந்து செல்லாமல் அவளை பார்வையாலேயே அளவெடுத்தான்.

மனதில் என்ன எண்ணி கொண்டானோ? அவளை பார்த்து கேலியாய் சிரிக்க, அவளுக்கு குழப்பமானது.

“இன்னாத்துயா இப்போ சிரிக்கிற?”

“நீ ஆம்பிள பையன் மாறியே இல்ல… மீசை வைச்ச பொம்பள குட்டி மாறி இருக்க” என்றதும் உள்ளூர பதட்டமடைந்தவள்  கோப தொனியில்,

“நீ கூடதான் மனிஷ பிறவி மாறியே இல்ல… கண்டாமிருகத்துக்கு பேண்ட் சட்டை மாட்டின மாறி கீற… நான் ஏதாச்சும் சொன்னேனா?!”  என்றவள் தடலடியாய் அவனுக்கு பதிலடி கொடுத்துவிட்டாள்.

அவன் முகம் கொடூரமாய் மாறியது.

வீரா மிரட்சியுற்று, ‘இந்த காண்டமிருகம் இன்னாத்துக்கு நம்மல இந்த முறை முறைக்குது… வாயை வைச்சின்னு சும்மா இருந்திருக்கலாம்… உனக்கு வாயிலதான்டி சனி’ என்றவள் யோசித்து கொண்டிருக்கும் போதே,

“வீரா காரை எடு… கிளம்பலாம்” என்று சொல்லி கொண்டே சாரதி காரை நோக்கி பரபரப்பாய் வந்து கதவை திறந்து உள்ளே அமர்ந்தான்.

இதுதான் சமயம் என வீரா காருக்குள் ஏறி வேக வேகமாய் அமர்ந்து கொண்டாள். அந்த மலை உருவம் அப்போதும் அவளை முறைத்து கொண்டு நிற்க,

‘போயா காண்டமிருகம்!! இவனெல்லாம் பிடிச்சி ஜெயில்ல போடுங்கய்யா’ என்று மெல்லிய குரலில் வசைப்பாடி கொண்டே  காரை நகர்த்தி சென்றவள்,

“எங்கே சார் போகனும்… ஆபிஸ்க்கா?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம்ம்” என்றவன் தன் பேசியை எடுத்து காதில் வைத்து,

“சைமன்… உடனே ஆபிஸுக்கு வா… நான் உன்கிட்ட பேசனும்” என்ற தகவலை மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அதன் பிறகு அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்க,

அலுவலகத்தை சென்று சேரும் வரை தீவிரமான மௌனத்தை கடைப்பிடித்து கொண்டிருந்தான்.

வீரா அவனின் அந்த மௌனத்தை வியப்பாய் பார்த்தாள்.

‘மூச்சுக்கு முந்நூறு தடவை நம்மல திட்டுக்கின்னே வருவேன்… இன்னைக்கு என்ன ஓவரா ஸைலன்ட்டா இருக்கான்’

என்று எண்ணி கொண்டவள் அதற்கான காரணம் தெரியாமல் உதட்டை பிதுக்கி கொண்டாள்.

அவனோ யோசனை குறியோடு சிகரெட்டை புகைக்க ஆரம்பித்தவன் வரிசையாய் ஒன்று இரண்டு மூன்று என கணக்கு வழக்கில்லாமல் ஊதி தள்ளி கொண்டிருக்க,

வீரா அவன் செய்கையை நோட்டமிட்டு கொண்டே வந்தாள்.

‘இன்னாச்சு இந்த ஆளுக்கு?’ என்று மனதில் எண்ணி கொண்டே அவள் காரை இயக்க,

அவனோ மானவரியாய் சிகரெட் புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தவன் அடுத்ததாய் மீண்டும் இன்னொரு சிகரெட்டை பத்த வைக்க போக,

வீரா அவனிடம்,

“சார்… போதும் சார்… இதுக்கு மேல பிடிக்காதீங்க… உடம்புக்கு நல்லதில்ல” என்றவள் வெளிப்படையாக சொல்லிவிட்டாள்.

அவளை எரிப்பது போல் பார்த்தவன்,

“நான் உன்கிட்ட அட்வைஸ் கேட்டேன்… தேவையில்லாம நீ ஏன் முந்திர கொட்டை மாறி பேசிட்டிருக்க… காரை ஓட்டிற வேலையை மட்டும் பாரு” என்றான்.

வீராவின் முகம் சுருங்கி போனது.

அதன் பிறகு அவள் தன் பார்வையை கூட அவன் புறம் திருப்பவில்லை.

கார் அலுவலகத்தை சென்றடைந்ததும் சாரதி விறுவிறுவென முன்னேறி நடந்தவன் மீண்டும் வீராவின் புறம் திரும்பி வர,

‘இன்னாத்துக்கு இவன் திரும்பிவர்றான்’ என்றவள் லேசான அச்சத்தோடு ஏறிட்டு பார்க்க,

அவள் முன்னே வந்து நின்றவன்

“நீ அடிக்கடிக்கு உன் லிமிட்டை தாண்டிற… இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்… சொல்லிட்டேன்” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு அகன்றான்.

‘இவனுக்கெல்லாம் போய் நல்லது சொன்னேன் பாரு… என்னை சொல்லனும்’ என்றபடி தலையிலடித்து கொண்டவள் மேலும்,

‘கம்முன்னு வந்தவன்கிட்ட போய் சும்மா இல்லாம வாயை கொடுத்து வாலன்டியரா  வாங்கி கட்டிக்கலான்னா உனக்கு தூக்கம் பிடிக்காதா?’என்று காரின் முன்னிருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து தானே சொல்லி முகம்சுளித்து கொண்டாள்.

*********

சாரதியின் அலுவலக அறை

அப்போது சாரதி தன் காரியதரிசி கணேஷ் மற்றும் சைமனுடன் பேச்சு வார்த்தை தொடங்கியிருந்தான். 

“சார்! அந்த காசிமேடு சங்கர் உங்ககிட்ட மேட்டரை சொன்னான்னா?” சைமன் ஆர்வமாய் வினவ,

“ஹ்ம்ம்” என்றான் சாரதி மேஜை மீது சாய்ந்து நின்றபடி!

அவர்கள் இருவரும் அவன் எதிரே நிற்க,

கணேஷ் ஆர்வமாக, “யாரு சார்?” என்று கேட்டான்.

அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்த சாரதி,

“அரவிந்த்” என்று சொல்ல,

“அவனா?” என்று சைமன் நம்ப முடியாமல் அதிர்ச்சியானான்.

“அவன் சின்ன பையன்… அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்லன்னு நீதானே சொன்ன” என்று சைமனை கேட்டு சாரதி அவனை கோபமாய் பார்க்க,

சைமன் மிரட்சியுற்று, “சத்தியமா அவன் போய் இந்தளவுக்கு பண்ணிருப்பான்னு என்னால நம்பவே முடியல சார்.”  அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பேசினான்.

“பண்ணியிருக்கானே சைமன்!” என்றான் சாரதி யோசனையோடு!

கணேஷ் இவர்கள் சம்பாஷணைக்கு இடையில் புகுந்து,

“இந்தளவுக்கு போயிருக்கான்னா அவனை இனிமே விட்டு வைக்க கூடாது… போட்டிரனும்” என்க,

“ஆமா சார்” என்று சைமனும் ஆமோதித்தான்.

“நீங்க இரண்டு பேரென்ன லூசா?!… அவன் நாராயணசுவாமியோட ஒரே ஆண் வாரிசு… அவரோட ஆசை மகன்… அவன் மேல கையை வைக்கிறது நமக்கு நாமே ஆப்பு வைச்சுக்கிற மாதிரி… அதுவுமில்லாம நாராயணசுவாமி எனக்கு எதிரா எதுவும் செய்யாம இருக்கிறதே அவர் மகனை நான் ஏதாச்சும் செஞ்சிருவேனோன்னு பயந்துதான்… நீங்க என்னடான்னா” என்றவன் படபடவென பொறிந்து தள்ள

கணேஷ் அவனிடம், “இல்ல சார்… அவன் உங்கள கொல்ல பார்த்திருக்கான்… அதான் அந்த கோபத்தில” என்று தயக்கத்தோடு உரைத்தான்.

“அதுக்கு… உடனே நாம அவனை போட்டிரனுமா?!” என்றவன் மேலும்,

“யார் யாரை எப்படி எப்படி அடிக்கனும்னு ஒரு விதி இருக்கு கணேஷ்… நம்ம பாட்டுக்கு ஆழம் தெரியாம காலை விட கூடாது” என்றான்.

“அப்ப என்ன சார் பண்ணலாம் அவனை?!” என்று சைமன் கேட்க,

“முதல்ல அவன்கிட்ட நான் பேசனும்… அவன் ஏதோ அவசரத்தில இல்ல கோபத்தில இப்படி செஞ்சானா… இல்ல தெளிவா என்னை பழி தீர்த்தனும்கிற மோட்டிவோட செஞ்சிருக்கானான்னு தெரிஞ்சிக்கனும்… அப்பதான் அவனை எப்படி டீல் பன்றதுன்னு யோசிக்க முடியும்” என்றான்.

கணேஷ் அப்போது, “சார்… இப்பதான் ஞாபகத்துக்கு வருது… அவன் இப்ப இந்தாயால இல்லயே” என்க,

“தெரியும் கணேஷ்!… ஆனா இந்த விஷயத்தை இப்படியே வளர விட கூடாது… ஸோ நான் அவன்கிட்ட போஃன்லயாவது பேசனும்” என்று  சொல்ல கணேஷும் அவன் சொன்னதற்கு ஆமோதித்தான்.

பின்னர் சாரதி சைமன் புறம் திரும்பி,

“நீ கிளம்பு சைமன்… நான் தேவைப்படும் போது உன்னை கூப்பிடிறேன்” என்று  அவனை அனுப்பிவிட்டான்.

கணேஷ் அன்று மாலையே நாராயணசுவாமியின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்து அரவிந்தின் பேசியின் எண்ணை கண்டறிந்து சாரதியிடம் தெரிவிக்க,

அவனும் தன் முக்கிய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அரவிந்திற்கு அழைத்தான்.

“ஹெலோ யாரு?!” என்று அரவிந்தின் குரல் கேட்க,

“எப்படி இருக்க தம்பி… நல்லா இருக்கியா?” என்று எகத்தாளமாய் கேட்டான் சாரதி!

“நீங்க முதல்ல யாரு?!”

“ஹ்ம்ம்… உங்க அப்பன்”

“ஹெலோ யாருங்க நீங்க? உங்களுக்கு என்னங்க வேணும்” கோபமாகவும் டென்ஷனாக அரவிந்த் வினவ,

“என்னை ஆள் வைச்சி கொல்றளவுக்கு போயிருக்க… ஆனா என் குரலை உனக்கு அடையாளம் தெரியலயா ?!” என்று சாரதி சொன்னதும் எதிர்புறத்தில் மௌனம் சஞ்சரித்தது.

“என்னடா ஸைலன்ட்டாயிட்ட ? பேசு”

“……..” அரவிந்திடமிருந்து பதிலில்லை.

“என்ன அரவிந்த் சார்?! எனக்கு எப்படி ஆள் வைச்ச விஷயம் தெரியும்னு யோசிக்கிற… கரெக்ட்டா?!” சாரதியின் கேள்விக்கு அரவிந்த் எந்த பதிலுரையும் கொடுக்காமல் மேலும் மௌனமாகவே தொடர,

சாரதி விடாமல்,

“பேசுடா… செய்றதெல்லாம் செஞ்சிட்டு ஒண்ணு தெரியாத பாப்பா மாறி கமுக்கமா இருக்க” என்று சினத்தோடு கேட்டதும்

எதிர்புறத்தில் அரவிந்தின் குரலும் உயர்ந்தது.

“ஆமான்டா… நான்தான் உன்னை கொல்ல ஆள் வைச்சேன்… இப்ப என்னங்கிற”

சாரதி எளக்காரமாய் சிரித்தான்.

“ச்ச்சோ… பாவம்டா நீ… இவ்வளவு செலவு பண்ணி என்னை கொல்ல ஆள் வைச்ச… ஆனா நீ நினைச்சது ஒண்ணும் நடக்கல பாரேன்… ப்ச்… தேவையில்லாத நஷ்டம்” என்று சாரதி கேலிப் புன்னகையோடு சொல்ல,

“இதெல்லாம் எனக்கு ஒரு நஷ்டமே இல்ல… உன்னை கொல்றதுக்காக நான் எந்த எக்ஸ்டென்டுக்கு வேணா போவேன்… ஆனா உன்னை சும்மா மட்டும் விடமாட்டேன்” அரவிந்த் குரல் அத்தனை தீர்க்கமாய் ஒலிக்க,

“நீ தேவையில்லாம நடுவில தலையை கொடுக்கிற அரவிந்த்… அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது” சாரதி எச்சரித்தான்.

“என்னடா நீ பெரிசா கிழிச்சிருவ… எங்களோட பவருக்கும் பணபலத்துக்கு முன்னாடி நீயெல்லாம் ஒரு ஆளாடா?”

“ஆஹான்”

“உன்னையெல்லலாம் ஊதி தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்… “

“எங்கே? ஊதி தள்ளு” என்று சொல்லி சாரதி எகத்தாளமாய் சிரிக்க அரவிந்திற்கு கடுப்பேறியது.

சாரதி மேலும்,

“தாத்தன் அப்பன் சொத்தில மஞ்ச குளிக்கிற உனக்கே இவ்வளவுனா… இரத்தமும் வியர்வையும் சிந்தி சுயமா உழைச்சி முன்னேறி நிற்கிற எனக்கு எவ்வ்வ்வ்வளவு இருக்கும்” சாரதியின் குரலிலும் தீவிரம் அதிகரித்திருந்தது.

“அப்படியா? அப்ப உன் பலம் பெரிசா என் பலம் பெரிசான்னு மோதி பார்த்திருவோமா?!”

“மோதினா உனக்குதான்டா சேதாரம்…”

“யாரு எனக்கா?!” அரவிந்த் சத்தமாய் சிரித்துவிட்டு,

“என் மேலல்லாம் நீ கையே வைக்க முடியாது… ஆனா நீ.. ” என்று நிறுத்தியவன்,

“நீயெல்லாம் செத்தா கூட கேட்க நாதியத்து கிடப்ப… உனக்காகெல்லாம் ஒருத்தனும் வந்து நிற்க மாட்டான்… அன்னைக்கு ஏதோ அதிர்ஷ்டவசமா நீ தப்பிச்சிக்கிட்டா… இல்லன்னா… இன்னைக்கு நீ அனாதை பிணமா கிடந்திருப்படா” என்க,

சாரதி பதிலின்றி மௌனமாய் கேட்டு கொண்டிருந்தான்.

அரவிந்த் மேலும், “பேசாம நீ செஞ்சதெல்லாம் தப்புன்னு ஒத்துக்கிட்டு எங்க அப்பா காலில் வந்து விழுந்து மன்னிப்பு கேட்டிடு… நான் உன்னை மன்னிச்சி விட்டிடுறேன்”

“மன்னிச்சி விட்டுடிறியா?” சாரதி அழுத்தமாய் வினவினான்.

“ஆமான்டா” அரவிந்த் கோபமாய் சொல்ல அதே கோபத்தோடு சாரதியும் அவனிடம் பதிலுரைத்தான்.

“அனாவாசியமா என்னை சீண்டி விட்டுட்ட அரவிந்த்! நீ இதுக்காக ரொம்ப வருத்தப்பட போற… உன்னை கதற வைக்கிறேன்…

எல்லாமே இருக்குங்கிற திமிருடா உனக்கு… அந்த திமிரை ஒண்ணுமில்லாம பண்ணி உன்னை என் காலடில விழ வைக்கிறேன்டா” என்க,

“ஹ்ம்ம்… பார்க்கலாம்டா… யார் யாரு காலில் விழறான்னு” என்று அரவிந்த் சொல்ல

சாரதி அந்த நொடியே  அழைப்பை துண்டித்தான்.

அரவிந்தின் வார்தைகளால் சாரதியின் மனம் ரொம்பவும் காயப்பட்டிருக்க,

அவன் முகம் உக்கிரமாய் மாறி விழியெல்லாம் சிவப்பேறியிருந்தது.

சாரதிக்கு எப்போதும் தான் எல்லோராலும் ஒதுக்கப்பட்டோம் என்ற தாழ்வுமனப்பான்மை உண்டு. அந்த வலிதான் நாளடைவில் அவனை வெறி கொண்டு உழைக்க செய்தது. குறுகிய காலத்தில் இத்தனை பெரிய வெற்றிக்கு அவனை கொண்டு சேர்த்தது.

ஆனால் இன்னுமும் அனாதை என்ற வார்த்தையும் உணர்வும் அவன் முன்னே பூதாகரமாய் வளர்ந்து,

அவனின் வெற்றியையும் வளர்ச்சியையும் ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருந்தது போல அவனுக்கு அவ்வப்போது தோன்றும்.

அது வெறும் தன் பிரமைதான் என்றவன் பல நேரங்களில் சமாதானமடைந்து கொள்வான். ஆனால் இன்று மீண்டும்,  ‘அனாதை’ என்று அரவிந்த் விளித்ததை எண்ணும் போது அவனுக்கு
வெறியேறியது.

அன்பு, பாசம், இரக்கம் என்பது வான்மழை போல!

மழை பொழியும் போது பூமி எவ்விதம் செழித்து வளமை பெருகிறதோ அது போல அத்தகைய அன்பும் பாசமும் இரக்கமும் கிடைக்கபெறும் போது மனிதமும் செழித்து வளமை பெறும்.

ஆனால் இது மூன்றுமே வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் கிடைக்க பெறாத சாரதியின் மனம் இறுகி வறண்டு கிடப்பதில் ஆச்சர்யம் என்ன? 

அவனுக்கு யாருமே கொடுத்தறியதவற்றை அவன் மட்டும் பிறருக்கு எங்கனம் பகிர்ந்து கொள்வான்?

அரவிந்தின் வார்த்தைகள் சாரதியின் உள்ளூர இருந்த காயங்களை மீண்டும் குத்தி காயப்படுத்தியிருக்க,

அவன் உள்ளத்தில் ஏற்கனவே குமுறி கொண்டிருந்த எரிமலை அரவிந்தின் வார்த்தைகளில் வெடித்து சிதறி தீயை  வாரி இறைக்க தொடங்கியிருந்ததே!

அந்த ரணம் அவனுக்குள் இருந்த கோபத்தையும் வெறியையும் பன்மடங்கு பெருக்கியிருக்க,

அப்போதே அரவிந்தை ஏதாவது செய்ய வேண்டும் என்று அவன் மனம் கோபத்தில் கொப்பளித்தது.

சாரதியால் அதற்கு மேல் எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் வீராவிடம் காரை எடுக்க சொல்லி அலுவலகத்திலிருந்து புறப்பட்டான்.

எப்போதும் போல,

“எங்கே சார் போகனும்?” என்றவள் காரை இயக்கியபடி கேள்வி எழுப்பினாள்.

அவனிடமிருந்து பதில் வரவில்லை.

ஏதோ சிந்தனையில் இருக்கிறானோ என்ற எண்ணத்தோடு

அவள் மீண்டும், “சார்! எங்கே போனோம்” என்று சத்தமாய் கேட்டாள்.

“எங்கேயாச்சும் போ” என்று ஆங்காரமாய் அவன் கத்திவிட,

அவள் மிரட்சியுற்றாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘இவன் என்ன லூசா! எங்காயாச்சும் போங்கிற… எங்க போறது?’

இந்த குழப்பத்தோடு அவள் பாட்டுக்கு
பொறுமையாக காரை இயக்கி கொண்டே அவன் புறம் பார்வையை  திருப்ப,

அவனோ உச்சபட்ச கோபத்தோடு தன் நடுங்கிய கரத்தால் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது. யார் மீதோ அல்லது எதனாலயோ அவன் ரொம்பவும் சீற்றமாய் இருக்கிறான் என்றளவில் மட்டும் அவளுக்கு புரிந்தது.

error: Content is protected !!