vkv 20

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 20

ஒரு வாரம் ஓடியே போயிருந்தது. உமாவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஊரைத் தாண்டிப் போனதற்கான எந்தவொரு அறிகுறியும் கிடைக்கவில்லை. ஊருக்குள் பெரிய குடும்பம் என்பதால் சகலருக்கும் உமாவைத் தெரிந்திருந்தது. பஸ் ஸ்டான்ட், ரயில்வே ஸ்டேஷன் எங்குமே உமாவைப் பார்த்ததாக யாரும் தகவல் சொல்லவில்லை.

இந்த ஒரு வாரத்தில் குந்தவியை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழைத்துப் போயிருந்தார்கள். முழு ஓய்வில் குந்தவி இருக்க, மிக முக்கியமான ஒன்றிரண்டு ஆப்பரேஷன்களை தவிர மற்றவை அனைத்தையும் தன் ஜூனியர்களிடம் ஒப்படைத்து விட்டு மனைவியோடு கூடவே இருந்தார் பிரபாகரன்.

அத்தனை பேரும் சோர்ந்து போய்விட, சுதாகரன் மட்டும் அபியை வட்டமிட்டுக் கொண்டிருந்தான். இது வேண்டாத வேலை என்று தமிழ் எவ்வளவோ தடுத்திருந்தும், சுதாகரன் எதையும் செவி மடுக்கவில்லை

அபியின் போக்குவரத்து அத்தனையையும் கண்காணிக்க ஆட்களை நியமித்து இருந்தான். ஒரு நண்பரின் உதவியோடு அபியின் ஃபோனுக்கு வரும் அத்தனை கால்களையும் கண்காணிப்பில் வைத்திருந்தான். கலெக்டரின் சொந்தக் காரர்கள் என்பது வேறு இன்னும் கொஞ்சம் இவற்றையெல்லாம் நடத்திக் கொள்ள வசதியாக இருந்தது. ஆனாலும் எந்தப் பயனும் இருக்கவில்லை. சந்தேகத்துக்கிடமாக எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை

சுதாகர் தன் ஜாகையை தமிழ் வீட்டிலேயே வைத்துக் கொண்டான். மறந்தும் தன் வீட்டிற்குப் போகவில்லை. குந்தவியோடு மட்டும் ஃபோனில் அடிக்கடி பேசி நலம் விசாரித்துக் கொண்டான். பொறுமை பறந்து கொண்டிருந்தது சுதாகருக்கு. அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் அன்று அபி வீட்டுக்கு போயிருந்தான்.

காரை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்ல, அபிமன்யு லாப்டாப்பில் பிசியாக ஏதோ பண்ணிக் கொண்டிருந்தான். இவனை பார்த்த மாத்திரத்தில் ஆச்சரியமாக புருவங்களை உயர்த்தியவன், சோஃபாவை நோக்கி கை நீட்டினான். சுதாகரன் அமர்ந்ததும் இரண்டு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்தவன்,

வெல் சுதாகர், என்ன காத்து இந்தப் பக்கம் வீசுது?” என்றான். சுதாகரனின் அலைக்கழிந்த தோற்றம் அவனை என்ன பண்ணியதோ, கொஞ்சம் பொறுமையாகவே பேசினான்

போதும் அபி, இப்போவாவது சொல்லுங்க, மது எங்க?” சுதாகரன் குரலில் கொஞ்சம் இறைஞ்சல் இருந்தது.

யாரைக் கேக்குறீங்க சுதாகரன்? மிஸஸ்.மாதுமையாள் சுதாகரனையா? அதுவும் இந்த அபிகிட்டயா?” அபியின் குரலில் எள்ளல் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. சுதாகரன் ஒரு தரம் கண்களை இறுக மூடினான். வன்மம் பாராட்ட இது நேரமல்ல என்று புத்திக்கு நன்றாகவே புரிந்தது.

ஆமாம், அவங்க மிஸஸ்.மாதுமையாள் சுதாகரன் எங்கிறது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். சொல்லுங்க, எங்க என் மது?”

அதை எங்கிட்ட கேட்டா? எனக்கு எப்பிடித் தெரியும் சுதாகரன்?” அபியின் குரலில் இருந்த சிரிப்பே சொல்லியது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று‘. இடம் வலமாக தலையை ஆட்டினான் சுதாகரன்.

ரொம்பவே பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன் அபி. என்னை சோதிக்காதீங்க.” 

ஐயையோ! பயமா இருக்கே, என்ன பண்ணுவீங்க சுதாகர்? அன்னைக்கு மாதிரி என் ஷேர்ட்டை பிடிச்சு உலுக்குவீங்களா?” எதற்குமே பதில் பேசவில்லை சுதாகரன். நீ எதை வேண்டுமானாலும் பேசிக்கொள். நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல், போதும் என்ற வகையில் அமர்ந்திருந்தான்

அப்பிடி என்ன நம்பிக்கை சுதாகர்? உமா எங்கிட்ட தான் இருப்பாங்கன்னு, ம்…?” 

ஊரை விட்டே மது போகல்லைன்னு விசாரிச்ச வரைக்கும் தெரிஞ்சுது அபி. ஊருக்குள்ள எங்களை எதிர்த்துக்கிட்டு மதுக்கு உதவி பண்ணுற தைரியம் உங்களை தவிர யாருக்கும் இல்லை.” அவன் சொல்லி முடிக்க, பாராட்டுதலாய் ஒரு பாவம் அபி முகத்தில் வந்து போனது.

தப்பான எண்ணம் எதுவுமே மனசுல இருக்கலை சுதாகர். இதையெல்லாம் உங்ககிட்ட விளக்கி சொல்லனும்கிற அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும், நீங்க என்னை ஏதோ வில்லனை பாக்குற மாதிரியே நடந்துக்கிறீங்க. அதனால சொல்லுறேன்.” சுதாகரன் அமைதியாக அமர்ந்திருக்க, தொடர்ந்தான் அபிமன்யு.

முதல் தடவை பாத்தப்போ ஒரு ஆர்வம் இருந்துது, இல்லேங்கலை. ஆனா அது அழகான பொண்ணுங்களை பாத்தா வர்ற சாதாரண ஆர்வம் தான். எப்போ ரஞ்சனி மூலமா அவங்களுக்கு உங்க மேல ஒரு அபிப்பிராயம் இருக்குன்னு தெரிஞ்சுதோ, அப்போவே அந்த நினைப்பை தூக்கி குப்பைல போட்டுட்டு நான் வேலையை பாக்க ஆரம்பிச்சுட்டேன். தமிழ்ச்செல்வன் அங்கிள் கிட்ட கூட சும்மா தமாஷுக்கு தான் கேட்டேன். அதை நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டுஉமாவை கூட்டிக்கிட்டு வந்து…” வாய் விட்டு சிரித்தான் அபிமன்யு. அவன் பாவம் பார்த்து சுதாகருக்கும் சிரிப்பு வந்தது.

சுதாகர், எங்க ஏரியாவுக்கு வந்து விசாரிச்சு பாருங்க, ஐயாக்கு கன்னி ராசி.” சொன்னவன் லேசாகக் கண்ணடிக்க, சுதாகரனின் சிரிப்பு விரிந்தது. லாப்டாப்பிற்கு பக்கத்தில் இருந்த நோட்புக்கை எடுத்தவன், அதில் பட படவென ஏதோ எழுதி அதை சுதாகரனிடம் நீட்டினான். நெஞ்சம் படபடக்க அதை வாங்கினான் சுதாகரன்.

உங்க மது…” சற்று இடைவெளி விட்டவன்,

இங்கதான் இருக்காங்க.” என்றான் நிதானமாக. அந்தப் பேப்பரில் ஒரு அட்ரஸ் இருந்தது. சுதாகரன் ஆழமாகப் பார்க்க,

அன்னைக்கு பிஸினஸ் விஷயமா டெல்லிக்கு போய்ட்டு திரும்பி வந்துக்கிட்டு இருந்தேன். பாத்தா வழியிலே உமா, நடந்து போய்கிட்டு இருந்தாங்க. எனக்கு ரொம்ப ஷாக் ஆகிட்டுது. அத்தனை ஜுவல்ஸை மாட்டிக்கிட்டு உங்க ஊருக்குள்ள சேஃபா அவங்க நடக்கலாம். ஊரைத் தாண்டினா அவங்க நிலைமை என்ன சுதாகர்? கொஞ்சம் யோசிச்சு பாருங்க?” அபியின் கேள்வியில் சுதாகரன் கண்களில் கலவரம் வந்தது.

என்னை பஸ் ஸ்டாப்ல, இல்லைன்னா ரயில்வே ஸ்டேஷன்ல கொண்டு போய் விடுங்கன்னு ரொம்பவே அடம்பிடிச்சாங்க. இந்தக் கோலத்துல எப்பிடி சுதாகர் அவங்களை தனியா விட முடியும்? உங்க பிரச்சினை என்னங்கன்னு கேட்டேன். அதுக்கு அத்தான் முகத்துல இனிமே முழிக்கவே கூடாதுன்னு சொன்னாங்க.” இதை அபி சொல்லும் போது சுதாகரன் முகம் கசங்கியது.

சரி, அவ்வளவு தானே வாங்க நான் உங்களை கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லி என் ஃப்ரெண்ட் வீட்டுல தங்க வெச்சேன். நான் கூட்டிக்கிட்டு போனதால இப்போ எங்க இருக்காங்கன்னாவது உங்களுக்கு தெரியும். இல்லைன்னா…” சொன்ன அபியை சுதாகரன் கேள்வியாகப் பார்க்க,

இதை அன்னைக்கே ஏன் சொல்லலைன்னு கேக்கிறீங்களா? சில பேருக்கு பக்கத்துல இருக்கும் போது ஒரு பொருளோட மதிப்பு தெரியிறதில்லை. அதுவே அவங்க கையை விட்டு போச்சுதுன்னா தான் அதோட அருமை புரியும்.” சொன்ன அபியை இமைக்காமல் சுதாகர் பார்க்க,

ரஞ்சனியை உமாக்கு துணையா அனுப்பி இருக்கேன். என் ஃப்ரெண்ட் கிட்ட, இவங்க ரஞ்சனியோட ஃப்ரெண்ட், ஊர் சுத்திப் பாக்க வந்திருக்காங்க அப்பிடீன்னுதான் சொல்லி வெச்சிருக்கேன். அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோங்க சுதாகரன். இன்னொரு விஷயம், போய்ச்சேர்றதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணி காரியத்தை கெடுத்துராதீங்க. நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சா உங்கம்மணி வேற எங்கேயாவது போயிடப் போறாங்க. அதுக்கப்புறம் என்னை குறை சொல்லப்படாது.” சொல்லிவிட்டு அபி சிரிக்க, சுதாகரனும் சிரித்தான்.

ஆனாலும் சுதாகர் சும்மா சொல்லப்படாது, உமா உங்க மேல கொலை வெறியில இருக்காங்க. நீங்க பேசாம போற போக்கிலேயே அவங்க கால்ல விழுந்திருங்க. அதுதான் பெட்டர்னு எனக்குத் தோணுது.” சொன்னவனைப் பார்த்து தலையாட்டி ஆமோதித்த சுதாகரன் காரை நோக்கிப் போனான். ஏதோ தோன்ற அபியைத் திரும்பிப் பார்க்க, அவன் கட்டை விரலை உயர்த்திகுட் லக்என்றான். அபியை நோக்கி திரும்பி வந்தவன், அவனை ஆரத் தழுவிக் கட்டிக்கொண்டான். அவன் அணைப்பை ஏற்ற அபி அவன் முதுகை லேசாகத் தட்டிக் கொடுக்க, எதுவும் பேசாமல் விறு விறுவென்று காரை நோக்கிப் போய் விட்டான். சுதாகரனின் கண்கள் லேசாகக் கலங்கி இருந்ததோ என்று அபிக்கு லேசாக சந்தேகமாக இருந்தது.

                             ————————————————————————-

இரண்டொரு ஃபோன் கால்கள் பண்ணிவிட்டு உடனேயே கிளம்பி விட்டான் சுதாகரன். ஆளத்தூருக்கு ஐந்து மைல் தொலைவில் இருந்தது அந்த ஊர். சுற்றிலும் பசுமை. வீட்டின் கட்டிட அமைப்பையும், அதன் தொன்மையையும் பார்க்கும் போதே அந்த வீட்டில் வசிப்பவர்களின் பாரம்பரியம் புரிந்தது சுதாகரனுக்கு

ஏற்கனவே ரஞ்சனிக்கு அபி மூலம் தகவல் போயிருந்ததால் வாசலிலேயே காத்திருந்தாள். அந்த black Audi நுழைந்தது தான் தாமதம், ஓடி வந்து சுதாகரனை வரவேற்றவள், அவனை அழைத்துக் கொண்டு அந்த வீட்டின் கொல்லைப் புறத்திற்குப் போனாள். வீட்டைச் சுற்றி ஒரு நூறு மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு தென்னந்தோப்பு இருந்தது

ரஞ்சனி கண்காட்டிய திசையில் பார்த்தவன், இமைக்காமல் நின்றபடி நிற்க, அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு ஒரு புன்னகையோடு நகரந்து விட்டாள் ரஞ்சனி. அங்கிருந்த தென்னை மரத்தில் சாய்ந்திருந்த உமா, கழுத்தில் கிடந்த அந்த மெல்லிய செயினை விரல்களால் சுழற்றியபடி, நெடுவானத்தை வெறித்து நின்றாள். அசைய மறுத்த கால்களை நகர்த்தி அவளருகில் போனவன்,

மது…!” என்றான். கரகரத்த அவன் குரல், அவனுக்கே கேட்கவில்லை. சட்டெனத் திரும்பியவள் முகபாவம் சொன்னது, நிச்சயமாக அவள் சுதாகரனை இங்கே எதிர்பார்க்கவில்லை என்று. ஆனால் அந்தக் கண்களில் ஒரு கணம் மகிழ்ச்சி வந்து போனதோ.

இங்கே எங்க வந்தீங்க?” கேள்வி சூடாக வந்தது.

மது, என்னடா இப்பிடிக் கேக்குறே?”

வேற எப்பிடிக் கேக்கணும்? என் வாயால உங்களை அத்தான்னு கூப்பிட எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. சொல்லுங்க, வேற எப்பிடிக் கேக்கணும்?” அவள் பதிலில் கண் மூடித் திறந்தவன்,

உன்னோட கோபத்துல இருக்கிற நியாயம் எனக்குப் புரியுது மது. எதுவா இருந்தாலும் வா, வீட்டுக்கு போய் பேசலாம்.” நிதானமாகச் சொன்னான் சுதாகரன்.

எதுக்கு வரணும்? இல்லை எதுக்கு வரணும்னு கேக்குறேன்? இன்னும் அங்க என்னை கேவலப் படுத்த ஏதாவது மிச்சம் மீதி இருக்கா?”

இல்லைடா, இனிமே யாரும் உன்னை ஒரு வார்த்தை பேச நான் அனுமதிக்க மாட்டேன். வீட்டுக்கு போகலாம் மது.” சுதாகரனின் குரல் கெஞ்சியது. இடம் வலமாகத் தலையசைத்து மறுத்தவள்,

எதையும் நம்ப நான் தயாராவும் இல்லை. எனக்கு அங்க வரவும் பிடிக்கலை.” தன் பிடியிலேயே நின்றாள் உமா.

எம் மேல தானே உனக்கு கோபம் மது? அதுக்கு ஏன் உன்னோட பெத்தவங்களை தண்டிக்குறே?” அவன் கேட்டவுடன், அவள் கண்களில் கரகரவென நீர் கோர்த்தது

ஏன்னா, என் குடும்பத்தையும் தாண்டி ஒரு தகுதியில்லாத மனுஷனை நான் என்னோட ஒட்டுமொத்த உலகமா நினைச்சிருந்தேன்.” சொன்னவளின் குரலில் அத்தனை வேதனை இருந்தது. சுதாகரனுக்கு எங்கோ வலித்தது

மது…!” அவள் பக்கத்தில் அவன் நெருங்கி வர, அவனை முறைத்துப் பார்த்தவள்,

தொட்டீங்ககொன்னுடுவேன்.” என்றாள், சுட்டு விரல் நீட்டி.

போதும், நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் உங்க பின்னாடி இழுபட்டதெல்லாம் போதும். என்னை நிம்மதியா இருக்க விடுங்க. காலம் பூரா உங்கம்மா மாதிரி ஏச்சும், பேச்சும் கேக்க நம்மால முடியாதுடா சாமி.” சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தவளின் வழியை மறித்தான் சுதாகரன்.

மது, ப்ளீஸ். நான் சொல்லுறதை இந்த ஒரு தடவை மட்டும் கேளு. யாரும் உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க. அதுக்கு நான் பொறுப்பு. வந்திரு மது.” அவன் பேச்சில் அவள் முகத்தில் ஏளனமான ஒரு சிரிப்பு வந்து உட்கார்ந்து கொண்டது.

சரி, என்னை நீ நம்பலை, பரவாயில்லை. உங்கம்மாவை யோசிச்சு பாரு. இந்த ஒரு வாரத்துல பாதியாகிட்டாங்க. அவங்களுக்காகவாவது வா மது.” அந்த அஸ்திரம் கொஞ்சம் வேலை செய்தது. அவள் முகத்தில் சற்றே இளக்கம் தெரியவும் அதைப் பிடித்துக் கொண்டான் சுதாகரன். ஃபோனை எடுத்து தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு அழைத்தவன்

அத்தை, மதுக்கிட்ட பேசுங்க அத்தை.” என்றான். ஸ்பீக்கரில் ஆராதனாவின் குரல் உமாக்கு நன்றாகக் கேட்டது.

சுதா! என்ன சொல்லுறே சுதா? உமா எங்க இருக்கான்னு உனக்குத் தெரியுமா சுதா?” அந்தக் குரலின் பரிதவிப்பில் உமாக்கு அழுகை வந்தது.

எம் பக்கத்துல தான் இருக்கான் அத்தை. நீங்க பேசுறது அவளுக்கு கேக்குது. நீங்க பேசுங்க அத்தை.” சொல்லிவிட்டு அவன் ஃபோனை நீட்ட, அதை வாங்காமல் அவனை முறைத்துப் பார்த்தாள். அவன் கண்ணில் இருந்த இறைஞ்சலை அவள் சட்டை செய்யவே இல்லை.

உமா, உமாஎங்கடா கண்ணா இருக்கே? உமாநான் பேசுறது கேக்குதா உமா? உமா…”

அம்மா…” அந்த ஒற்றை வார்த்தையில் வெடித்து அழுதார் ஆராதனா

வந்திடு உமாஎன்னை உயிரோட புதைக்காம வந்திடு உமா.” அந்த வார்த்தைகளுக்கு மேல் உமா தாமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, ரஞ்சனியை ஆளத்தூரில் விட்டு விட்டு நல்லூருக்கு கிளம்பியது அந்த black Audi.

வழிநெடுகிலும் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. இதே காரில் எத்தனை இன்பமான அனுபவங்கள், எத்தனை சல்லாபங்கள். இருவர் மனங்களிலும் எல்லாம் படமாக ஓடியது. ஊர் நெருங்கியதும் காரை நேராக கோவிலில் நிறுத்தினான் சுதாகர். அவள் கேள்வியாகப் பார்க்கவும்,

ஒரு சின்ன வேலை இருக்கு. முடிச்சுட்டு கிளம்பலாம், இறங்கு மது.” என்றான். அவள் காரை விட்டு இறங்க, மடமடவென பிரகாரத்தை நோக்கி நடந்தான். சூழ்நிலையில் கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது உமாக்கு. அவனைப் பின் தொடர்ந்து அவளும் நடக்க, ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டார் ஆராதனா.

உமா, வந்துட்டயா. எங்கேடி போனே? இந்த ஒரு வாரமும் நாங்க எவ்வளவு பாடுபட்டோம்னு உனக்குத் தெரியுமா?” ஆராதனா அவள் உடலை வருடி வருடிப் பேச கண் கலங்கியது உமாவிற்கு. பின்னாலேயே பாட்டி, தாத்தா, அப்பாஇவர்கள் எல்லோரும் இங்கே என்ன பண்ணுகிறார்கள்

கோவில் மண்டபத்தில் இன்னும் இளமாறன், விசாலாட்சி, பிரபாகரன், குந்தவி, மகேஷ் என அத்தனை பேரும் இருந்தார்கள். தளர்வாக இவளை நோக்கி வந்த குந்தவி,

எங்கிட்ட எல்லாரும் மறைச்சிட்டாங்க உமா. எனக்கு என்ன நடந்ததுன்னு இப்போ தான் தெரியும். என்னோட ஆசைக்காக, உன்னை நான் பலி கொடுத்துட்டேன் உமா. அத்தையை மன்னிச்சுர்றா.” நலிந்து போன குரலில் குந்தவி பேசவும், உமா சங்கடப்பட்டுப் போனாள்

அப்பிடியெல்லாம் எதுவும் இல்லை அத்தை. மனசுக்கு கொஞ்சம் வருத்தமா இருந்துது. கொஞ்ச நாள் தனியா எங்கேயாவது இருந்தா மனசுக்கு நல்லா இருக்கும்னு தோணிச்சு. அதான் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்.” ஏதோ சொல்லி உமா சமாளிக்க, அவளை நோக்கி வந்தான் மகேஷ்.

மகேஷ், என்ன நடக்குது இங்க? எதுக்கு எல்லாரும் கூட்டமா கோயிலுக்கு வந்திருக்கீங்க?” ஏதாவது விசேஷமா?” 

நீ வந்ததே விசேஷம் தானே உமா. எந்த மறுப்பும் சொல்லாம நான் சொல்றபடி செய்யனும், புரிஞ்சுதா?”  மகேஷ் சொல்ல அவனைக் கேள்வியாகப் பார்த்தவள்,

நான் மறுக்கிற மாதிரி நீ அப்பிடி என்ன சொல்லப் போறே?” என்றாள்.

வாக்குவாதம் பண்ண இது நேரமில்லை. நீ எங்கூட வா.” என்று சொன்னவன், அவளைக் கைப்பிடியாக மண்டபத்திற்கு அழைத்துச் சென்றான். அந்நேரம் கோவிலுக்கு வந்திருந்த ஊர் மக்களும் கூடி நிற்க, மண்டபம் சுற்றிவர ஆட்களால் நிரம்பி இருந்தது. உள்ளே என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், அழைத்துச் செல்வது மகேஷ் என்ற தைரியத்தில் அவனோடு போனாள் உமா.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போன மகேஷ், உமாவை மனையில் உட்கார வைத்தான். கேள்வியாக அவனை அவள் அண்ணார்ந்து பார்க்க,

அமைதியா உட்காரு உமாஎன்றான். அப்போதுதான் சுற்றம் கவனித்தில் பட, திரும்பிப் பார்த்தவள் திகைத்துப் போனாள். தன் அருகில் அமர்ந்திருந்த சுதாகரன் ஐயர் சொன்ன அனைத்து மந்திரங்களையும் சொல்லி முடித்து, தாலியைக் கையில் வாங்கி இருந்தான்

அதிர்ச்சியோடு உமா பார்த்திருக்க, சுற்றஞ் சூழ்ந்து அட்சதை தூவ, அவளைப் பார்த்து புன்னகைத்த சுதாகரன் அவள் கழுத்தில் தாலியை கட்டி முடித்திருந்தான். தன் தோளை உரசிய அவன் கரத்தின் ஸ்பரிசத்தில் நிஜத்துக்கு வந்தவள், தன் மார்பில் தொங்கிய அந்த மங்கல நாணைக் குனிந்து பார்த்தாள். கண்களில் அதிர்ச்சி இருந்த போதும், சுதாகரனை அவள் பார்த்த பார்வையில் நிச்சயம் கோபம் இருக்கவில்லை. ஐயர் கொடுத்த குங்குமத்தை அவள் நெற்றி வகிட்டில் தீற்றியவன், அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான். இனி உன் நன்மைக்கும், தீமைக்கும் நானே பொறுப்பு என்ற சேதி அதில் இருந்தது.