Oviyam final 1A

அன்று இரவு கணவனின் தோளில் சாய்ந்திருந்த மாதவி அடிக்கடி அவன் தாடையில் அண்ணார்ந்து முத்தம் வைத்தபடி இருந்தாள். அந்த ஆலமரத்தடி வீட்டின் ஏகாந்தத்தில் இருவரும் தனித்திருந்தார்கள்.

“என்னடா?” கனிவாக வந்தது டாக்டரின் குரல்.

“இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் செழியன்.” அவள் பெயர் சொல்லி அழைக்கும் போதே டாக்டருக்குப் புரிந்தது, அவள் சந்தோஷத்தின் அளவு.

“ஏன்னு கேக்க மாட்டீங்களா?”

“அதான் தெரியுமே.”

“என்னவாம்?”

“உங்க மாமனார் இன்னைக்கு உங்கக் கூட அவ்வளவு பேசினாரே. அது போதாதா உங்களுக்கு?”

“ஆமா… ரொம்ப ஹாப்பியா இருக்கேன் நான். ஆனா அது மட்டும் ரீசன் இல்லை.” இப்போது செழியனின் கை மனைவியின் வயிற்றை இதமாக வருடிக் கொடுத்தது.

“வேற என்னவாம்?”

“இந்த டாக்டர் மாதவி மேல எத்தனை பைத்தியமா இருக்கார்னு இன்னைக்கு அத்தனைப் பேருக்கும் புரிஞ்சிருக்கும் இல்லை?” மனைவியின் பேச்சில் ஆச்சரியப்பட்டான் செழியன்.

“மாதவி!?” இப்போது எம்பிக் கணவனின் இதழில் இதழ் பதித்தாள் மனைவி.

“ரொம்பப் பெருமையா இருக்கு. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. சுயநலமாச் சிந்திக்கிறேன்னு நல்லாவே புரியுது. ஆனாலும் அதைத் தடுக்க முடியலை. எப்பவுமே என்னைச் சுத்தி இருக்கிறவங்களை மட்டுமே யோசிப்பேன். ஆனா இன்னைக்கு எனக்காக யோசிக்கிறது சுகமா இருக்கு.” இப்போது செழியன் சிரித்தான்.

“சிரிக்காதீங்க டாக்டர்.” முறைப்பாகச் சொன்னவள் அவன் முகத்தைத் தன்னருகே இழுத்து ஏதேதோ பண்ணினாள். செழியன் கிறுகிறுத்துப் போனான்.

“வேணாம் மாதவி!” அவன் செல்லமாக அதட்ட, மையலாகச் சிரித்தாள் மாதவி. தான் எத்தனை சிறந்த காதலன் என்பதை இன்னுமொரு முறை மனைவிக்கு நிரூபித்தான் இளஞ்செழியன். இருந்தாலும் மனதுக்குள் நிறைய விஷயங்கள் வண்டாய் குடைந்து கொண்டிருந்தன. மனைவி உறங்கிய பின்னும் விழித்திருந்தான் செழியன்.

அதேவேளை… ஃபோனில் அர்ச்சனாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் அருண்.

“போதுமே… ரொம்பத்தான் கொஞ்சாதே அருண்.”

“ஏன்டீ?”

“உங்கக்காக்கிட்ட மன்னிப்புக் கேக்கவும் தானே இத்தனைக்

கொஞ்சல்?”

“ஆமா…”

“போடா!”

“ஏய்! அதையேன்டி அப்படி நினைக்கிறே? எனக்காக, என்னைச் சந்தோஷப் படுத்துறதுக்காக என் டார்லிங் இன்னைக்கு அத்தனைப் பேர் முன்னாடியும் அவ்வளவு இறங்கிப் பேசினாளேன்னு நினைக்கும்போது…”

“ஆமா… நான் அத்தனைப் பேர் முன்னாடியும் இறங்கினது உனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு இல்லை?”

“அதுக்குப் பேர் இறங்குறது இல்லைத் தங்கம். விட்டுக் குடுக்கிறது. இது குடும்பம்டி. விட்டுக் குடுக்கணும். இன்னைக்கு நீ அதைத்தான் பண்ணினே. நீ மட்டும் இப்போ எம் பக்கத்துல இருந்தேன்னு வெச்சுக்கோயேன்…”

“என்னப் பண்ணுவே?”

“என்னென்னமோப் பண்ணுவேன்.”

“அப்போக் கிளம்பி வரட்டுமா?”

“அடிங்!” சொல்லி விட்டுச் சத்தமாகச் சிரித்தான் அருண்.

“ஆனா எங்கண்ணா இறங்கி வரலையே அருண்.”

“வருவாரு. அத்தானை நான் சரியாப் புரிஞ்சிருக்கேன்னா, அவரால அங்க இருக்க முடியாது. கூடிய சீக்கிரமே திரும்பவும் அவர் உங்க வீட்டுக்கு வந்திருவார்.’

“அப்படியா சொல்றே?”

“இல்லைன்னாலும் மாதவி வர வெச்சிருவா.”

“ஆமா… அப்பாப் பேசின உடனே அண்ணி முகத்துல அவ்வளவு சந்தோஷம். கவனிச்சியா?”

“ம்…‌ அதென்ன? உங்கப்பா அந்தர் பல்டி அடிச்சுட்டாரு?”

“டேய்!”

“இல்லைடி… இத்தனை நாளும் அவ்வளவு முறுக்கிட்டு இன்னைக்குத் திடீர்னு பேசினாரா? எனக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு.”

“ம்… அதுவும் சரிதான்.”

“அதான் சொன்னாரே… பிள்ளைங்க வாழ்க்கையைப் பத்தி அவருக்குச்

சில கனவுகள் இருந்துச்சுன்னு. பையன் தான் அதை உடைச்சிட்டான். பொண்ணாவது அதை நிறைவேத்தி வெப்பான்னு எதிர்பார்த்திருப்பாரா இருக்கும்.”

“அதுக்காக… உன்னை விட முடியுமா அருண்?”

“அப்படி எங்கிட்ட என்ன இருக்கு? விட முடியாத அளவுக்கு?”

“நீ பக்கா முரடன் அருண்.”

“அடியேய்!”

“உண்மையைத்தான் சொல்றேன். நீ ரொமான்ஸ் பண்ணினாக் கூட அதுல முரட்டுத்தனம் தான்டா ஜாஸ்தியா இருக்கு. எப்பப்பாரு அந்தக் கண்ணுல ஒரு கோபம், அலட்சியம்.”

“அன்னைக்கு உனக்குக் குடுத்த அடியை ஒன்னுக்கு ரெண்டாக் குடுத்திருந்தாச் சரியா இருந்திருக்கும்.”

“ஆமா… பெருசா இவர் குடுத்துட்டாரு! அன்னைக்கு ஆத்திரம் தான் வந்திச்சு.‌ ஆனா அதுக்கப்புறம்…”

“அதுக்கப்புறம் என்னடி?” அருண் குரலில் சிரிப்பிருந்தது.

“அடிக்கிற கைதான் அணைக்கும்.” மெல்லிய குரலில் பாடினாள் அர்ச்சனா.

“ஓஹ்ஹோ! அப்போப் புயல் மாதிரி இருக்கிற அர்ச்சனா முயல் குட்டி மாதிரி மாற்ர காலமும் வருமா?”

“கண்டிப்பா ட்ர்ரை பண்ணுவேன் அருண். உனக்காக… என்னோட அருணுக்காக.” அந்த வார்த்தைகளில் அருண் உருகிப் போனான்.

“லவ் யூ டி ராட்சசி. லவ் யு ஸோ மச்.” சத்தமாக அவன் சொல்லப் பெண் சிரித்தாள்.

0-0-0-0-0-0-0

ஐந்து வருடங்களுக்குப் பிறகு…

அந்தப் பெரிய கல்யாண மண்டபம் ஜே ஜே என்று இருந்தது. கருணாகரன் மகளின் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்திக் கொண்டிருந்தார். அவர் வீட்டின் கடைசித் திருமணம் என்பதால் காசைத் தண்ணீராக இறைத்திருந்தார்.

“மாதவி!”

“சொல்லுங்க மாமா.” நான் குடுத்த லிஸ்ட்ல இருக்கிறவங்க உன்னோடப் பொறுப்பு. எந்தக் குறையும் வந்திரக் கூடாது. உங்கத்தைக்கிட்டக் கூடக் குடுக்காம உங்கிட்டக் குடுத்திருக்கேன். கவனம்.”

“சரி மாமா.”

“அகல்யா எங்க?”

“அருணுக்கிட்ட இருக்கா மாமா.”

“மாப்பிள்ளையை எதுக்கும்மா இப்போ டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு?”

“இல்லை… அவன்தான் கூட்டிக்கிட்டுப் போயிருக்கான் மாமா.”

“எம் பேத்தியை எங்கிட்ட விட்டுடும்மா. நான் பார்த்துக்கிறேன்.” சொல்லிக்கொண்டிருக்கும் போதே செழியன் மகளோடு வந்து கொண்டிருந்தான்.

மாதவியும், மகளும் அன்று மயில்கழுத்துக் கலரில் உடை அணிந்திருந்தார்கள். எப்போதும் போல இப்போதும் மாதவியின் புடவைத் தெரிவு கணவன் தான். கற்பகம் தான் அதே கலரில் பேத்திக்கும் பட்டுப் பாவாடை சட்டைத் தைத்திருந்தார்.‌ குட்டிக் காசுமாலை ஒட்டியாணம் அணிந்து தேவதைப் போல இருந்தது குழந்தை.

“அடடே! அகல்யா குட்டி தாத்தாக்கிட்ட வாங்க. நாம ரெண்டு பேரும் வாசல்ல நின்னு வர்றவங்களை வெல்கம் பண்ணலாம்.”

“ஓகே தாத்தா.” குழந்தையும் தாத்தாவோடு போய்விட செழியன் இப்போது முறைத்தான்.

“என்ன டாக்டர்?”

“இவ்வளவு நேரமும் அருணோட இருந்தா. இப்பத்தான் எங்கிட்ட வந்தா. அதுக்குள்ள அப்பா கூட்டிக்கிட்டு போறார். எம் பொண்ணை எங்கூடக் கொஞ்ச நேரம் இருக்க விடமாட்டாங்களா இவங்க?” கணவனின் குற்றச்சாட்டில் நியாயம் இருந்ததால் மாதவி புன்னகைத்தாள்.

இப்போதெல்லாம் கருணாகரன் கற்பகம் தம்பதிகளின் ஒரே பொழுது போக்கு அகல்யா தான். கருணாகரன் கூட பிஸினஸையெல்லாம் இப்போது பெரிதாகக் கவனிப்பதே இல்லை. மாதவியின் பேறு கால விடுமுறை முடிந்த பின்னர் குழந்தை முழுதாக இவர்கள் வசம் வந்துவிட்டதால் மாதவிக்கு வேலைக்குச் செல்வது இலகுவாகிப் போனது. அதில் மாதவியின் பெற்றோருக்கும் லேசான வருத்தம் உண்டு. ஆனால் தங்கள் மகளையும் பேத்தியையும் உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் சம்பந்தி வீட்டாரைக் கொஞ்சம் அனுசரித்துத் தான் போனார்கள்.

செழியன் வீடு தங்குவது இப்போதெல்லாம் வெகு அபூர்வம்.‌ அப்போதும் மகள் அவனிடம் அதிகம் நேரம் செலவழிப்பதில்லை. அதனால் இப்போதெல்லாம் சேர்ந்தாற் போல இரண்டு நாட்கள் கிடைத்தால் வண்டி பெரியாருக்குப் பெட்டியைக் கட்டி விடுவான். அந்த இரண்டு மூன்று நாட்களும் இனிக்க இனிக்க மனைவி மகளோடு கொண்டாடி விட்டு வருவான்.

“உங்களுக்கு வேணும்னா இன்னொன்னைப் பெத்துக்கோங்க டாக்டர்.” போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிற மனைவியைப் பார்த்துச் சிரித்தான் இளஞ்செழியன். அன்றைக்குப் பார்த்தது போல புதுக்கருக்கு அழியாமல் அப்படியே இருந்த மனைவி மேல் என்றைக்கும் அவனுக்குக் காதல் பொங்குமோ?!

“மாதவி… அங்கப்பாரு.”

“என்ன மேனகா?” ரஞ்சிதாவும் மேனகாவும் கூடத் திருமணத்திற்கு வந்திருந்தார்கள்.

“இந்த டாக்டருக்கு இப்போவாவது எங்களையெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா? அப்படி என்ன மந்திரத்தைத்தான் போட்டு வச்சிருக்கியோ! மனுஷன் இன்னைக்கு வர உன்னை விழுங்கிற மாதிரித்தான் பார்க்குறாரு.”

“ஆமா… உங்களுக்கும் வேற வேலையில்லை, அந்த மனுஷனுக்கும் வேற வேலையில்லை.” அங்கலாய்த்து விட்டுப் போனாலும் அந்தக் குரலில் பெருமையும் காதலும் பொங்கி வழிந்தது. ரிசப்ஷன் பெண்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அவர்களை விட செழியன் மாதவி மேல் யார் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள முடியும்?

“வாங்க வாங்க!” வாசலில் நின்றபடி பேத்தியைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் கருணாகரன்.

“என்ன கருணாகரன்? மகளுக்கு இத்தனை நாளும் கல்யாணம் பண்ணாம இருந்துட்டு இப்போப் பெரிய சர்ஜனா இல்லைப் பிடிச்சிருக்கீங்க?”

“ஆமா மகேந்திரன். எதுக்கு வெளியே குடுக்கணும்? மருமகளோட தம்பி. தெரிஞ்ச பையன். நல்லக் குடும்பம். இதுக்கு மேல என்ன வேணும். அதான் பேசி முடிச்சிட்டோம்.”

“அதுவும் சரிதான். கருணாகரனுக்கு மகளை விட மருமகள்தானே எப்பவும் பெருசு. இல்லைன்னாத் தொழில்ல பார்ட்னர் ஆக்கி இருப்பாரா?”

“மருமகள் மட்டுமில்லை… மாதவிதான் எங்க மூத்தப் பொண்ணு மகேந்திரன். சொந்தத்துல பண்ணி இருந்தாக்கூட இப்படியொரு பொண்ணு கிடைச்சிருக்குமா? என்னையும் கற்பகத்தையும் அப்படிப் பார்த்துக்கிறா. அவ்வளவு பாசம், அக்கறை. இத்தனைக்கும் வேலைக்குப் போற பொண்ணு.”

“அது சரிதான். சந்திரமோகன் ஏப்ப சாப்பையானதையா கருணாகரனுக்குக் கொண்டு வருவாரு?”

அவர்கள் அத்தனைப் பேரும் கேலிப் பண்ணிச் சிரித்தாலும் கருணாகரனின் முகத்தில் நிலவிய சாந்தத்திற்கு கற்பகத்திற்கு அடுத்த படியாக மாதவியே காரணம்.

தனிக்குடித்தனம் போக இருந்த மகனை மடைமாற்றி மீண்டும் வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள் பெண். அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் அவ்வப்போது போட்டுப் பார்த்த நாத்தனாரையும் ஒரு வழியாகச் சமாளித்திருந்தாள்.

அருணும் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று விட அர்ச்சனாவைக் கண்டிக்க யாரும் இருக்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அர்ச்சனாவிற்கு வாழ்க்கை என்றால் என்னவென்று பிடிபட்டு விட்டது. இந்தப் படபடப்பும் முன்கோபமும் இருக்கும் வரை தனது வாழ்க்கையில் நிம்மதி இருக்கப் போவதில்லை என்று புரிந்தவள் தன்னைத்தானே படிப்படியாக மாற்றிக் கொண்டாள்.

மாதவியின் பெற்றோருக்கு இது காதல் கல்யாணம் என்று தெரியாத வகையில் காய் நகர்த்தி இருந்தார் கருணாகரன்.

“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” ஐயரின் குரல் ஓங்கி ஒலிக்க தாலியைக் கட்டி முடித்தான் அருண். அருகில் அத்தனை அழகாக அதற்கு மேல் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அர்ச்சனா. புடவை இப்போது அவளுக்கு அத்தனைப் பாந்தமாகப் பொருந்திப் போனது. சபையையும் பார்க்காமல் மனைவியின் கன்னத்தில் முத்தம் வைத்தான் அருண்.

“அவன் யாரு? நம்ம மச்சினன் இல்லை!” பெருமையாக செழியன் மீசையை முறுக்கிக் கொள்ள தலையில் அடித்துக் கொண்டாள் மாதவி. கல்யாணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

***

அமுதவல்லி நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார். பெரிய இடத்துப் பெண். அதுவும் டாக்டருக்குப் படித்திருக்கிறது. உமாசங்கரும் அமுதவல்லியும் எவ்வளவு சொல்லியும் புதிய வீடொன்று வாங்க அர்ச்சனா அனுமதிக்கவில்லை. அதிலேயே அவர்களுக்கு மனம் நிறைந்து போனது. அருணின் பழைய வீடே தனக்குப் போதுமென்று முடித்துவிட்டாள். ஆனாலும் பெரியவர்கள் சும்மா இருக்கவில்லை.

அருணின் ரூமோடு சேர்ந்தாற்போல இருந்த நிலத்தில் பெரிதாக ஒரு ஹால், சின்னதாக ஒரு லைப்ரரி என்று வடிவமைத்து இளையவர்களுக்கு வசதி பண்ணிக் கொடுத்தார்கள். அதனால் அர்ச்சனாவிற்கு எந்தக் குறையும் அந்த வீட்டில் இருக்கவில்லை.

அருண் நெடுநேரமாக அறையில் காத்திருந்தான்.‌ இன்னும் அர்ச்சனா வந்து சேர்ந்த பாடில்லை. டீவியை ஆன் பண்ணியவன் செய்திகளைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். கதவு திறக்கும் ஓசை கேட்டது. அர்ச்சனாதான் வந்து கொண்டிருந்தாள்.

“அடேங்கப்பா! என்ன மேடம் இத்தனை லேட்டா வாறீங்க? உங்களுக்காக நான் எத்தனை நேரமாக் காத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா?”

“அப்படி நான் எங்கப் போயிடப் போறேன் அருண்? பாவம் அத்தை. தனியாக் கிடந்து கஷ்டப்படுறாங்க.‌ அதான் கொஞ்ச நேரம் அவங்களோட இருந்துட்டு வர்றேன்.”

“ஏன்? மாதவி எங்க?”

“அவங்க எத்தனை நேரத்துக்கு இங்க இருக்க முடியும்? அகல்யா வேற சிணுங்க ஆரம்பிச்சுட்டா. அதான் அத்தை அண்ணியைப் போகச் சொல்லிட்டாங்க.”

“ஓ… இந்த அகல்யாக்குட்டி இன்னைக்கு எவ்வளவு க்யூட்டா இருந்தா இல்லை?”

“ம்… அண்ணா அண்ணியோட அழகையெல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டு வந்திருக்கா.”

“ம்… அது நிஜம்தான்.”

“அருண்…”

“சொல்லுடா.” மனைவியைத் தன்னோடு அணைத்துக் கொண்டான் அருண். களைத்துப் போய் தெரிந்தாள்.

“எல்லாம் நல்லபடியா நடந்துச்சு இல்லை?”

“ம்… ரொம்பத் திருப்தியா இருந்துச்சு மனசுக்கு.”

“அப்படியா? அப்பா ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்துச் செஞ்சாங்க அருண்.” குதூகலமாகக் கணவனின் முகம் பார்த்துச் சொன்னாள் அர்ச்சனா.

“அதுவும் தான்…”

“அப்படீன்னா… நீங்க எதைச் சொல்லுறீங்க?”

“ஏற்பாடுகள் எல்லாம் ரொம்பவே திருப்தியா இருந்துச்சு. அதையெல்லாம் தாண்டி அர்ச்சனாங்கிற பொண்ணால எம்மனசு இன்னைக்கு நெறைஞ்சு போச்சு.”

“அருண்?!”

“ஆசைப்பட்டாலும் ஆரம்பத்துல பயமா இருந்துச்சு அர்ச்சனா. பெரிய இடத்துப் பொண்ணு. நம்ம வீட்டோட சேர்ந்து போவாளா? நம்ம அப்பா அம்மாவை கடைசி காலத்துல நல்லாப் பார்த்துப்பாளான்னு?”

“ம்… இப்பவும் அந்தப் பயம் இருக்கா?” கேட்ட இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான் அருண்.

“நான் அதைப் பண்ணத் தவறினாலும் என்னோட அர்ச்சனா என்னைப் பெத்தவங்களை நல்லாப் பார்த்துக்குவான்னு நம்பிக்கை இருக்கு.” சொன்ன கணவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் பெண்.

“தூங்குடி… ரொம்ப டயர்டாத் தெரியுற.”

“ம்ஹூம்… முடியாது.” அருணோடு வம்பு வளர்க்க ஆரம்பித்திருந்தாள் அர்ச்சனா. அருணுக்குச் சிரிப்பு வந்தது. வெளியே அத்தனைப் பக்குவமாக நடந்து கொண்டாலும் தங்கள் தனிமையான நேரங்களில் அவள் குறும்புகள் தலை தூக்கத்தான் செய்தன. அருண் என்று வந்துவிட்டால் அர்ச்சனா எப்போதும் ஒன்றுபோல தான். அந்தக் குறும்புக்காரப் பெண்ணோடு இனிதாக இல்லறத்தை ஆரம்பித்தான் அருண்

***

அப்பாவும் மகளும் கட்டிலில் ஒரு பெரிய விளையாட்டே விளையாடிக் கொண்டிருந்தார்கள். நேரம் பதினொன்றையும் தாண்டி இருந்தது. மாதவி ரூமில் இறைந்து கிடைந்த பொருட்களை எல்லாம் அந்தந்த இடங்களில் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள்.

“அகல்யா!” தாத்தாவின் குரல் கேட்டதும் அப்பாவை மறந்து தாத்தாவிடம் போனது குழந்தை.

“நேரமாச்சே… இன்னும் என்னோட பட்டுக்குட்டி தூங்கலையே!” பேத்தியைக் கொஞ்சியபடி போய்விட்டார் கருணாகரன். பொம்மையைத் தொலைத்த குழந்தை போல அமர்ந்திருந்தான் இளஞ்செழியன். மாதவி பொங்கிச் சிரித்தாள்.

இதுவே வாடிக்கை என்பதால் மாமனார் வந்து போகும் வரை நைட்டிக்கு மாறமாட்டாள். இப்போது புடவையைக் களைந்துவிட்டு நைட்டிக்கு மாறியவள் கணவனின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“நான் சொல்றதைக் கேளுங்க டாக்டர். இது சரிவராது. பெட்டர் நீங்க இன்னும் ஒன்னுக்கு ட்ர்ரை பண்ணுங்க.”

“ஆமா… வீட்டுல இருக்கிறதே அபூர்வமா ஆகிப் போச்சு. இதுல இன்னொன்னைப் பெத்துக்கிட்டு உனக்கு எப்போ மயக்கம் வரும்? நீ எப்போ விழுந்திடுவேன்னு பார்த்துக்கிட்டு இருக்கிறதுக்கா மாதவி?”

“மாதவிக்கும் வயசு போகுது டாக்டர்.”

“அப்படியா என்ன? நீ இதை அடிக்கடி சொல்லு. அப்போதான் எனக்கே அது ஞாபகம் வருது.”

“ஐய்யே! போதுமே… ரொம்பத்தான் வழியாதீங்க.” மனைவியின் அபிநயத்தில் சிரித்தான் இளஞ்செழியன்.

“மாதவி… அடுத்த மாசம் ரெண்டு நாள் எனக்கு எந்த ஆப்பரேஷனும் இல்லை. அங்கிள் கைல கால்ல விழுந்தாவது அந்த ரெண்டு நாளையும் என்னை விட்டுடுங்கன்னு கேக்குறேன். நீயும் ஃப்ரீ ஆகிக்கோ. நாம மூனு பேரும் வண்டி பெரியார் போறோம்.”

“சரிங்க.”

“என்னோட பொழுதுல முக்கால்வாசி நேரம் தியேட்டர்லதான் கழியுது. மீதி நேரம் வீட்டுக்கு வர்றேன் தூங்குறேன். உன்னையும் சின்னவளையும் நான் ரொம்பவே மிஸ் பண்ணுறேன் மாதவி.” கணவனின் ஆதங்கத்தில் அவன் மார்பை நீவிக் கொடுத்தாள் மாதவி.

“அம்மா கூட முன்னை மாதிரி எங்கிட்டப் பேசுறது இல்லை. எப்பப் பாரு அகல்யா கூடத்தான் இருக்காங்க.”

“குடும்பம்னா அப்படித்தான் டாக்டர். இதெல்லாம் இருக்கிறது தான். எல்லாத்தையும் நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் போகணும்.”

“இந்தச் சின்னக் குட்டியைப் பார்த்தியா? தாத்தாவைப் பார்த்துட்டா எல்லாத்தையும் மறந்துட்டு ஓடிடும். அதுல எங்கப்பாக்குப் பெருமை வேற. இன்னைக்குக் மண்டபத்துல அவரோட ஃப்ரெண்ட்ஸ் அத்தனைப் பேர்கிட்டயும் பீத்திக்கிறார். எம்பேத்திக்கு நான்னா உசிரு. நான் இருந்தா அவளுக்கு அவங்க அம்மாவே தேவலைன்னு.”

“அட ஆண்டவா! இதுக்கு நான் தானே உங்கப்பாவைக் கோபிச்சுக்கணும். இங்க தலைகீழா இருக்கு!”

“சமயத்துல அவருக்கு நான் மகனா மருமகனான்னே எனக்கு சந்தேகம் வருதுடீ.” இப்போது மாதவி வாய்விட்டே சிரித்து விட்டாள்.

“எப்படி மாதவி உன்னால இப்படி இருக்க முடியுது?”

“சிம்பிள் டாக்டர். எல்லார் மேலயும் அன்பு வைங்க. எந்தக் குறையும் தெரியாது.”

“அடிப்போடி… பெரிய இவ மாதிரிப் பேசிக்கிட்டு.”

“அர்ச்சனாக்கு ஒரு குழந்தை பொறந்துச்சுன்னா அத்தை மாமா அங்கக் கொஞ்சம் பிஸியாகிடுவாங்க.” மனைவி முடிக்கும் முன்பாக பரபரத்தான் இளஞ்செழியன்.

“ஆமால்லை… என்னோட ஃபோன் எங்க? முதல்ல அருணுக்கு ஒரு ஃபோனைப் பண்ணி அதுக்கு ஒரு வழியைப் பண்ணுடா சாமின்னு சொல்லுவோம்.”

“ஏங்க? என்னப் பண்ணுறீங்க நீங்க? இப்பப் போய் அருணைக் கூப்பிடுவீங்களா?”

“அட ஆமால்லை! ஆனா இப்படி யாரு நமக்கு நினைச்சா மாதவி? ஹனிமூன் போன அடுத்த நாளே தியேட்டர்ல கூப்பிட்டு உக்கார வெச்சாங்க. கல்யாணமாகி ஒரு மாசத்துலேயே கனடாக்கு மூட்டையைக் கட்ட வெச்சிட்டாங்க.”

“ஹா… ஹா… ” மாதவி இப்போது விழுந்து விழுந்து சிரிக்க அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் டாக்டர்.

“என்ன டாக்டர் அப்படிப் பார்க்குறீங்க?”

“மாதவி…”

“ம்…”

“நீ என்னோட வாழ்க்கையில வரலைன்னா நான் என்ன ஆகியிருப்பேன்?”

“இந்த மாதவி இல்லைன்னா இன்னொரு பார்கவி, இல்லைன்னா தேவகி. யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்திருப்பீங்க.” அவள் சொல்லி முடித்தபோது செழியன் அவளை இறுக்கி அணைத்திருந்தான்.

“பார்கவி, தேவகியா? கொன்னுடுவேன். நீ இல்லைன்னா நான் கல்யாணமே பண்ணி இருந்திருக்க மாட்டேன் மாதவி.”

“அப்படியா? ஐயோ டாக்டர்! வலிக்குது, விடுங்களேன்.” அவள் கெஞ்சவும் அவன் பிடி லேசாகத் தளர்ந்தது.

“அப்பா! இப்படியா பண்ணுவீங்க? மாதவிக்கு வயசு போகுது டாக்டர்.”

“உனக்கு என்னதான் வயசு போனாலும் இன்னும் ஒரு வருஷத்துக்கு எதுவும் இல்லை மாதவி.”

“பிடிவாதம் பிடிக்கிறீங்களே செழியன்.”

“ஆஹா! என்ன பேரெல்லாம் சொல்லிக் கூப்பிடுறீங்க? மேடம் பேர் சொல்லிக் கூப்பிட்டா அதுக்கு அர்த்தமே வேற ஆச்சே!”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை.” வெட்கத்தில் முகம் சிவந்த பெண் கணவனின் மார்புக்குள் ஒழிந்து கொண்டது. செழியனும் அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

புண்ணியம் கோடி செய்வதன் நானும், ஜென்மங்கள் யாவும் உன்னுடன் சேர…

உறவுச் சிறகை விரித்தவள்…

வசந்தமே அருகில் வா… நெஞ்சமே உருக வா…

 

error: Content is protected !!