அத்தியாயம்
8

தொடர்ச்சியாக இருமுறை அழைத்தும் எடுக்காத தோழியை நேரில் சென்று சந்திக்க எண்ணி, தந்தை, தாய் இருவரிடமும் கூறிக்கொண்டு தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள், அனன்யா.

தோழிக்கு சர்ப்பிரைஸ் கொடுக்க எண்ணிக் கிளம்பிய அனன்யா, கிராமத்தின் ஆரம்பத்திலேயே சற்று ஒதுங்கி இருந்த அலுவலகத்திற்கு, வழி கேட்டு சரியாக வந்திருந்தாள்.

அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த காரைப் பார்த்தவளுக்கு, எங்கோ பார்த்த நினைவு வர ‘யாருடையது, நமக்கு தெரிஞ்சவங்களோட வண்டி மாதிரி இருக்கே! யாரோடதா இருக்கும்?’ என யோசித்தபடியே உள்ளே வந்தாள்.

அலுவலகத்தில் அகல்யாவின் அறைக்குள் ‘மேடம், சார் கூட பேசிட்டு இருக்காங்க… கொஞ்சம் வயிட் பண்ணுங்க’, எனக் கூறி அங்கிருந்த நாற்காலியில் அனன்யாவை அமருமாறு பணித்தார், அலுவலக உதவியாளர்.

அரை மணித் தியாலம் காத்திருந்தவள், காத்திருந்து பார்க்கும் அளவிற்கு தனது தோழி இன்று நல்ல பதவியில் இருப்பதை எண்ணி மகிழ்ந்திருந்தாள், அனன்யா.

அலுவலக சம்பந்தமான பேச்சிற்காக, தனது தோழியை சந்திக்க வெளியிலிருந்து மேலதிகாரியோ அல்லது வெறு அலுவலர்களோ வந்திருப்பதாக எண்ணி பொறுமையோடு காத்திருந்தாள்.

ஏறத்தாழ முக்கால் மணிநேர காத்திருப்பிற்குப் பின், கதவு திறக்கும் சத்தம் கேட்டு எதேச்சையாக அனன்யா திரும்ப, திறந்த கதவிலிருந்து நவீன் முதலில் வெளியே வந்தான்.

நவீனை அங்கு எதிர்பாராதவள், வெளியில் நின்றிருந்த காரைப் பார்த்து தனக்கு தோன்றிய காரணத்தை யூகித்திருந்தாள்.

நவீன் முன்னே வர, அவன் பின்னால் சிரித்துப் பேசியபடி வந்த அகல்யாவைக் கண்டவள், அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து நின்றிருந்தாள்.

நவீன், அகல்யா இருவரும் தங்களைப் பற்றி பேசிச் சிரித்தபடியே வெளியே வந்திருக்க, இருவரும் எதிர்பாராத அனன்யாவின் வருகை அவர்களை ஒரு கனம் ஸ்தம்பித்துப் போகச் செய்திருந்தது. தங்களைத் தானே மீட்டுக் கொள்ள அவகாசம் இல்லாமல் திணறியிருந்தனர்.

அங்கு அனன்யாவை எதிர்பார்க்காத இருவரும், தங்களது சிரிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, ‘அனன்யா இங்க எப்டி சொல்லாம திடீர்னு…!’ என கேள்வியாக நோக்க

அதுவரை சிரித்தபடியே வந்த இருவரின் வதனமும் மாலை நேர சூரியகாந்தியைப் போல வாடியிருந்தது. இருவருக்கும் எப்படிப் பழக்கம் என்ற எண்ணத்தோடு அவர்களைப் பார்த்தவாறு நின்றிருந்த அனன்யா சுதாரித்து தன்னை இயல்பாக்கிக் கொண்டு, “சும்மா உன்னை பாத்துட்டு போகத்தான் வந்தேன் அகி! ஒரு வாரத்துக்கு முன்னையே கல்யாணத்துக்கு நம்ம வீட்டுக்கு உன்னை வரச் சொல்லி ஞாபகப்படுத்திட்டு போகலாம்னு தான் வந்தேன்”, என்று தனது சிரிப்பு மாறாமல் இயல்பாகக் கூறினாள்.

என்ன பேசுவதென்றே தெரியாமல் நின்ற அகல்யா, “வா… அ..னி..! என்ன சொல்லாம கொள்ளாம திடீர்னு கிளம்பி வந்திருக்க!”, என்று தட்டுத் தடுமாறி என்ன பேசுவது எனத் தெரியாமல் கேட்டு வைத்தாள்.

“கால் பண்ணிட்டே இருந்தேன். நீ எடுக்கல… வேணா… திரும்ப வீட்டுக்குப் போயி… உங்கிட்ட இங்க வரப் போறதை கன்வே பண்ணிட்டு கிளம்பி வரவாடீ”, என்று அனி சிரித்தபடியே கேட்டாள்.

வஞ்சமில்லா மனம் வாஞ்சையோடு எப்பொழுதும் போல பேசியது.
“சரி. வெளியே நின்று பேசினது போதும். வா… வா… அங்க ரூம்ல உக்காந்து பேசலாம்!”, என அனன்யாவை அவளின் அலவலுக அறைக்குள் அழைத்தாள்.

“ஓஹ் பேசலாமே… வாங்க நவீன் நீங்களும்! மூனு பேரும் அங்க போயி உக்காந்து பேசலாம்!”, என நவீனையும் விடாமல் அனன்யா அழைக்க

மேற்கொண்டு தான் இங்கு இருப்பதா? இல்லை கிளம்புவோமா என்ற எண்ணத்தில் நின்றிருந்தவன், அனன்யாவின் பேச்சில் குழம்பி நின்றான்.

அனன்யாவிடம் எதுவும் பேச முடியாமல், நவீன் அகல்யாவைப் பார்க்க, “நீ சொல்லுடி அகி!, நீ சொன்னா தான் நவீன் உள்ள வருவார் போல!”, என தனது தோழியைப் பார்த்து சற்றுக் கிண்டலாகவே அனன்யா கூறினாள்.

எதுவும் பேசாமல் அகல்யா அவளின் அறைக்குள் செல்ல, அவளைப் பின்பற்றி அனன்யா, நவீன் இருவரும் உள்ளே சென்று அவளின் எதிர்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

நவீன் எத்தகைய வினா, அனன்யாவிடம் இருந்து வரும் என்று தெரியாமல், அதற்கு தான் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று புரியாமல், மனம் சற்று தொய்ந்திருக்க அமர்ந்திருந்தான்.

அகல்யா, நவீன் இருவரும் எதுவும் பேசாமல் அமைதி காக்க, “என்ன நவீன், கல்யாண வேலையெல்லாம் எப்டி போகுது?”, அனன்யா அங்கிருந்த இறுக்கம் போக பேச்சைத் துவங்கினாள்.

“அததுக்கு ஆளு வச்சு அப்பாவே எல்லாம் பாக்கறாரு”, என்று இயல்பாக இல்லாமல், சுவாசத்திற்கு தவிப்பவன் போல பேசினான்.

“இந்தப் பக்கம் ஏதோ வேல விசயமா வந்திங்களா?”, என அனன்யா நவீனைப் பார்த்து நேரடியாகக் கேட்டாள்.

எதிர்பாராத சந்திப்பினால் உண்டான மனக் குழப்பத்தில் இருந்தவனுக்கு எதுவும் பேச முடியாமல் அகல்யாவைப் பார்ப்பதும், பின் தலையை கீழே குனிவதுமாக அதுவரை இருந்தான் நவீன்.

அனன்யாவின் கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டி கட்டாயம் வந்துருக்க, “சும்மா தான் ….”, என்று இழுத்து அதற்கு மேல் என்ன சொல்ல என்று தெரியாமல் அகல்யாவையும், அனன்யாவையும் மாறி மாறிப் பார்த்தபடியே ஒரு அவஸ்தையோடு அமர்ந்து இருந்தான்.

“நீ சொல்லு அகி, சார் என்ன விசயமா இங்க வந்தாரு”, என்று அதுவரை அதே அவஸ்தையுடன் இருந்தவளைப் பார்த்து அனன்யா கேட்டாள்.

“இல்ல அனி, சும்மா இந்தப் பக்கம் ஏதோ வேலயா வந்தவரு, அப்டியே என்ன பாத்துட்டுப் போகலாம்னு ஆஃபீஸ்கு வந்ததா சொன்னாரு!”, என அகல்யா அந்த இடத்தின் இலகுவற்ற தன்மையை இயல்பாக்க முயன்று கூறினாள்.

“சொல்லுங்க நவீன், எதுனாலும் ஓப்பனா பேசுங்க, இப்டி அமைதியா இருந்தா எனக்கு ஒன்னும் புரியல! அல்ரெடி உங்க ரெண்டு பேருக்கும் நல்லா தெரியுமா?”, அகல்யா

“…”, அகல்யாவே என்ன சொல்லலாம் என யோசித்து அமைதி காத்தாள்.

“…”, நங்கூரமான அனன்யாவின் நேரடி வினாக்களுக்கு நா ஒத்துழைப்பு தராததால் அமைதியாக இருந்தான், நவீன்.

இருவரும் எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பார்த்து ஒருவருக்கொருவர் என்ன பேசவேண்டும் என்று பேசிவைத்திருந்தால், அனன்யா கேட்பதற்கு இலகுவாகப் பதில் சொல்லியிருக்கலாம்.

ஆனால் இருவராலும் துணிந்து பேச இயலவில்லை.

அவரவர் மனம்போல பதில் கூறப் போகும் நிலையில் மாறி பதில் வந்தால், இருவர் மானமும் போகும் என்று மனது சொல்லியிருக்க, இருவருமே மௌமாகியிருந்தனர்.

“ஏன் நா கேக்கிறேன்னா… உங்க ரெண்டுபேரு கூடவும் டெய்லி நேருல பாக்க முடியலனாலும்… போனுல தினந்தோறும் பேசுறேன்.

ஆனா ரெண்டு பேருமே உங்க நியூ ஃபிரண்ட்ஷிப் பத்தியோ, இல்லை இந்தப் பக்கம் வேலை விசயமா நவீன் வந்து போறதைப் பத்தியோ, அப்போ அகல்யாவை மீட் பண்ணேன்னோ ரெண்டுபேருமே எங்கிட்ட எதுவும் இதுவர ஷேர் பண்ணிக்கல.

இப்பவும் இயல்பா நீங்க ரெண்டுபேரும் இல்ல. எப்டி உங்க ரிலேசன நான் எடுத்துக்கணும்னு சொல்லுங்க!

நான் அப்டியே அத ஃபாலோ பண்ணிக்க ட்ரை பண்றேன்”, என்று அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தை கூறி இருந்தாள் அனன்யா.

நவீன் பேசத் தயங்கி அமைதியாகவே இருந்தான்.

தனது தோழியின் வார்த்தைகள் தந்த தைரியத்தில், மனதில் இதுவரை வைத்திருந்ததை மறைக்காமல் பேசத் துவங்கினாள், அகல்யா.

“இல்ல அனி, நம்ம ரெண்டு பேரு டேஸ்ட்டும் ஏறத்தாழ ஒரே மாதிரி தான… அதான்… நாம ரெண்டு பேருமே… ஏன் நவீன மேரேஜ் பண்ணிக்க கூடாது!”, தயங்கிவாறு அனன்யாவை நோக்கி அகல்யா கேட்டிருந்தாள்.

தீயை உடம்பில் வாரியிறைத்தது போல இருந்தது, அகல்யாவின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு.

அகல்யாவின் பேச்சைக் கேட்டுக் கொந்தளித்த மனதை சரிசெய்ய முனைந்தாள்.

சற்று நேரம் அமைதியாக இருவரையும் மாறி மாறி பார்த்தபடியே, அகல்யா பேசியதை சற்று உள்வாங்கி, அதன் பின் அனன்யா பேச ஆரம்பித்திருந்தாள்.

“என்ன அகி, யோசிச்சு தான் பேசுறியா…! என்ன பேசுறோம்னு உனக்கு புரியுதா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா?”, அனன்யா சற்று குரலை உயர்த்தி நவீனை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடியே அகல்யாவிடம் பேசியிருக்க

“இது வர எல்லாம் ஷேர் பண்ணிகிட்ட… நாம இரண்டு பேரும் மேரேஜ் லைஃபையும் ஷேர் பண்ணிக்கிட்டா என்ன தப்பு அனி!”, அகல்யா மீண்டும் தனது பிடியில் நின்றாள்.

“உனக்கு அப்டி ஒரு அபிப்ராயம் இருக்கலாம் அகி. உன் அபிப்பிராயத்தில அவருக்கும் உடன்பாடு இருக்கலாம்”, என்று நவீனைக் கைகாட்டிப் பேசியவள்,

“ஆனால் அந்த விசயத்துல பங்கெடுத்துக்க போற எனக்கும் சில நியாமான ஆசைகள்னு இருக்கும்ல. நீங்க சொல்ற விசயத்துல என் தனி நபர் சார்ந்த முடிவுனு பாத்தா… எனக்கே அதுல உடன்பாடில்ல!”, மனதைத் தெளிவாகக் கூறினாள் அனன்யா.

“ஏன் உனக்கு பிடிக்கலயா!”, மனக்கலக்கம் முகத்தில் அப்பியிருக்க வருத்தத்தோடு கேட்டாள் அகல்யா.

“என்ன பிடிக்கணும்! ஏன் பிடிக்கணும்?”, சற்று கோபமாகவே அகல்யாவிடம் கேட்டாள் அனன்யா.

“இல்ல நாம ரெண்டு பேரும் நவீன மேரேஜ் பண்ணிக்கிட்டா… எப்போவும் பிரியாம இருக்கலாம்ல!”, சப்பைக் கட்டான ஒரு கேள்வி அகல்யாவிடம் இருந்து வந்தது.

“இப்போ ஆறேழு மாசமா நீ இந்த ஊருலயே தான் இருக்க. நான் எங்க வீட்ல தான தனியா இருந்தேன்…”, இது வரை நாம், நமது என்று அகல்யாவிடம் பேசியிருந்த அனன்யா, இன்று எங்க வீடு என்று பிரித்துப் பேசியதையும் அகல்யா கவனிக்கவே செய்தாள்.

“…அப்ப பிரிஞ்சு தான இருந்தோம்! இல்ல எங்கூடவே இருக்கணும்னு நினைக்கிறவ, ஏன் வேலைக்குனு வந்து இங்க தங்குன?”, நறுக்கெனக் கேட்டிருந்தாள், அனன்யா.

இதுவரை இப்படி பேசியறியாத அனன்யாவை அகல்யா வித்தியாசமாக பார்த்திருந்தாள்.

வேறொரு பரிணாமத்தில் தனது உயிர்த்தோழியை முதன் முதலாகப் பார்த்த அதிர்ச்சியில் அகல்யா அதற்கு மேல் பேச யோசித்தபடியே அமைதியாகியிருந்தாள்.

“…”, அகல்யா

அனன்யாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முதலில் திணறிவாறே இருந்தவள், அதன்பின் துணிந்து, “அது எப்படி வேலயும், மேரேஜ் லைஃபும் ஒன்னாகும் அனி! இது உனக்கே நியாயமா படுதா?”, எனத் தனது செயலை நியாயப் படுத்த முயன்றிருந்தாள், அகல்யா.

“அதே தான் நானும் சொல்றேன். வேலை பாக்க நீ வெளியூறுல போயி இதுவரை பாத்து எடுத்து எல்லாம் செஞ்சவங்க தயவே வேணாணு பிரிஞ்சு இருப்ப… அது நியாயம்.

ஒரு வீட்டில ஆயிரம் கனவுகளோட பொண்ண பெத்து பாத்துப் பாத்து கண்ணுக்குள்ள வச்சு வளத்து, கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வேணுனு தரகருக்கு தச்சனை தந்து, அவரு கொண்டு வந்து தரதுல தராசு இல்லாம தராதரம் பாத்து, மனசுக்குப் புடிச்சு… அவங்களுக்கு ஏத்த மாதிரி பாதிய மறைச்சு, பாதிய உரைச்சு, நம்ம பொண்ணுக்கு இவன் சரியா வருவானானு அண்டை அயலாருகிட்ட விசாரிச்சு, அது மனசுக்கு ஒப்பி கடைசியில… சரி நம்ம பொண்ணுக்கு ஏத்தவன்னு பெத்தவங்க பேசி முடிவு பண்ணுவாங்க.

முடிவு பண்ணவன்தான் மூச்சு இருக்குற வரைன்னு, முட்டாத்தனமா கல்யாணக் கனவோட கட்டிக்க போறவனை நினைச்சு நாளும் பொழுதும் எப்போ வரும்னு காலண்டரைப் பாத்துப் பாத்து பெருமூச்சு விட்டு நாளைக் கடத்த நாங்க பாடாபடுவோம்.

அந்த மாப்பிள்ளைய, கைல வச்சிருக்குற கேக்கை பாக்க வச்சுப் சாப்பிடக்கூடாதுன்னு பங்கு போட்டுக்கற மாதிரி, பங்கு போட்டுக்குறதுக்குனு கிளம்பி நீங்க வரதை, என்னால ஒத்துக்க முடியாதுன்னு நான் நினைக்கிறது, சொல்றது எல்லாம் உனக்கு அநியாயம் அப்டித்தானே அகி!

ஹப்பிய ஷேர் பண்ணிக்கிற அளவுக்கு எனக்கு பிராட் மைண்ட் எல்லாம் இல்ல அகி, நான் சாதாரண பொண்ணு!”, என தனது முடிவை நேரடியாகவே கூறியவள், நவீனை நோக்கி,

“நவீன் நீங்களும் அகியோட ஒப்பீனியன் அக்சப்ட் பண்றீங்களா?”, என அனன்யா நவீனைப் பார்த்துக் கேட்க

“அகல்யா தான் சொன்னா… சிறு வயசுல இருந்தே எல்லாமே ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கிருவீங்கனு… அதான்…!”, என்று அகல்யா மீது பழியைப் போட்டுத் தப்பினான் நவீன்.

“அதான்னு நீங்களும் சரின்னு சொல்லிட்டிங்களா? ம்… சொல்லுங்க.

ஒரு கல்லுல ரெண்டு மாங்கானு நீங்களும் சரினு சொல்லிட்டிங்களா நவீன்!”, என கிண்டலாக சிரித்தபடியே நவீனைக் கேட்டாள் அனன்யா.

“அப்டி இல்ல…, அகல்யா அப்டி சொன்னதால உனக்கும் ஓகேன்னா எனக்கு நோ பிராப்ளம்னு… சொன்னேன்!”, நவீன்.

“எனக்கு வேணான்னு சொன்னா… என்ன செய்றதா இருந்தீங்க நவீன்!”, விடாமல் தனது தோழிக்குப் புரிய வைத்திடும் நோக்குடன் நவீனைக் கேள்வி கேட்டாள் அனன்யா.

“…”, இது போன்ற ஒரு சூழலை எதிர்பார்க்காததால் அமைதியாக இருந்தான், நவீன்.

“சொல்லுங்க நவீன்!”, விடாமல் கேட்டிருந்தாள்.

“உன் விருப்பம் போல செய் அனன்யா!”, நவீன்

“என் விருப்பப்படி செஞ்சா இப்ப அகல்யா நிலம என்ன? உங்க பேரண்ட்… அகல்யாவ நீங்க மேரேஜ் செய்துக்க ஒத்துப்பாங்களா? அவதான் புரியாம உங்ககிட்ட கேட்டான்னா… நீங்க என்ன செய்து வச்சிருக்கீங்க?

இன்னொரு விசயம்… எதேச்சையா பாத்து… இன்னிக்கு ஒரே நாளுல இவ்ளோ விசயம்… எப்டி பேசி முடிவு பண்ணீங்கனு எனக்கு புரியல…!

அகிய நீங்க அவ, இவனு உரிமையா பேசுறதயும், அவ இவ்ளோ தூரம் ஸ்டெபனா முடிவெடுத்துப் பேசுறதை வச்சு பாக்கும்போது… கொஞ்ச நாளாவே ரெண்டு பேரும் மீட் பண்ணியோ இல்லை கால் பண்ணியோ பேசி உங்களுக்கு இடையேயான உறவை உரம் போட்டு வளத்து வந்த மாதிரி தான், உங்க ரெண்டு பேரோட ஆக்டிவிட்டிஸ்ஸூம் இருக்கு…!”, என நவீனைப் பார்த்து நறுக்குத் தெரித்தாற்போல தான் யூகித்த அனைத்தையும் விடாமல் கேட்டாள் அனன்யா.

“…”, நவீன், அகல்யா இருவரும் அனன்யாவின் வார்த்தைகளைக் கேட்டு அமைதியாக இருக்க,

“இது வர எல்லாம் பெரியவங்க தான கல்யாண விசயம் முழுக்க பாத்து முடிவு பண்ணிருக்காங்க, அதனால நான் அப்பாகிட்டயே என் முடிவ தெளிவா சொல்லிறேன். அவங்க எல்லார்கிட்டயும் பேசிக்குவாங்க, இப்ப நான் கிளம்பறேன்!”, என்று நவீனைப் பார்த்து கூறியவள்,

அகல்யாவை நோக்கி, “கொஞ்சம் நிதானமா நீ இத ஹேண்டில் பண்ணிருக்கலாம் அகி.

எடுத்தவுடனே இத நவீன்கிட்ட சொல்லணும்னோ இல்லை கேக்கணும்னோ உனக்குத் தோணிருக்கு!

ஆனா ஒன்னா வளந்த எங்கிட்ட… என் வாழ்க்கைய பங்கு போடணும்னு நினைச்ச சம்பந்தப்பட்ட… எங்கிட்ட… ஒரு வார்த்தை உனக்கு சொல்லணும்னு தோணலல்ல…!”, என அனன்யா கேட்கவும், அகல்யா தனது தலையைக் குனிந்து கொண்டாள்.

“இப்பவும் நான் இங்க வரலனா… இந்த விசயம் எனக்கு தெரியாமலேகூட போயிருக்கும்!

ஆளுதான் வளந்திருக்க…! இனிமேலாது யோசனை செய்து புத்தியோட வாழப்பாரு! எல்லாம் போன பின்ன குய்யோ… முய்யோனா… போன எதுவும் வராது!

அவரு ஆண் பிள்ளை அவருக்கு இதுல என்ன பெரிய நஷ்டம் வந்துரும். ஒன்னுமில்ல.

ஆனா நீ… ஒரு பொண்ணு! உனக்கு எதாவது பிரச்சனைன்னா அது எவ்வளவு பெரிய கஷ்டம்னு உனக்கு புரியாம போனதுதான் துரதிஷ்டம்.

இதுதான் நீ எல்லாத்தையும் ஷேர் பண்ற அழகு போல… அவங்கவங்களுக்கு வந்தா தான் ஷேரிங்னா எப்டினு தெரியும்…!

இதுவர… என்னோடதான் உங்கூட நான் ஷேர் பண்ணிருக்கேன் அகி. ஒரு நிமிசம் இல்ல ஒரு நாளு முழுக்க உக்காந்து இத நினைச்சுப் பாரு. நாந்தான் உன்னோட என் பொருட்களை ஷேர் பண்ணிக்கிட்டேனே தவிர, உன்னோட எதயும் நான் இதுவரை ஷேர் பண்ணிட்டது கிடையாது…! உக்காந்து நல்லா யோசி!

இத சொல்லிக்காமிச்சிறக் கூடாதுன்னு தான் இத்தன வருசமா இதப் பத்தி பேசல… ஆனா புரியதவங்களுக்கு பொட்டுல அடிச்ச மாதிரி பேசினாதான் புரியும்னா…! அதயும் செஞ்சிறலாம்னு தான்… இன்னிக்கு உங்கிட்ட பேசிட்டேன்”, அதற்குமேல் அந்த அறையில் இருக்க இயலாமல் அங்கிருந்து கிளம்பியிருந்தாள், அனன்யா.

சூறாவளி வந்து ஓய்ந்தது போல அந்த இடம் இருந்தது.

அனன்யா கிளம்பியதும், சற்று நேரம் அகல்யாவிடம் நம்பிக்கை வார்த்தைகள் பேசி கிளம்பியிருந்தான், நவீன்.

வீட்டிற்கு வந்தவளுக்கு, பெற்றோரிடம் நடந்த விடயத்தைப் பகிர பகீரென இருக்க, தனது அறைக்குள் முடங்கியிருந்தாள் அனன்யா.

அவளது செல்ஃபில் இருந்த பேப்பரை எடுத்தவள்,

உனக்கென்ன கெடுதல் செய்தேன்!
உயிர்த் தோழியே…!
உத்தம தோழியே…!

உடுத்தியிருந்ததை…
உடுத்த வாங்கியதை…
உவப்போடு கொடுத்தேன்!

மனச்சிறையில் மணவாளனாய்
ஏற்றி வைக்க எண்ணியவனை
யாசகம் கேட்கிறாய்!

யாசகம் கொடுக்க…
மனம் கவர்ந்தவன் பொருளல்ல…!

உடல்,பொருள், ஆவி அனைத்தும்
அவனே என ஏற்க
துணிந்தவளை
துச்சமாக எண்ணியவனை
தள்ளி நிறுத்தவா?

நினைவறிந்த நாள் முதலாய்
நித்தமும் உடன் வளர்ந்த தோழி!
பாசத்தை பங்கிட்டது போல
மோகத்தை பங்கிட
துணிந்தவளுக்கு
பூ வைத்தவனை
தாரை வார்த்து…!
மணநாளை மறுத்து
தள்ளி நிக்கவா…!

கவனித்தாயா…!
காலத்தால் என் அசைவுகளை
கவனித்தாயா…!!!

உலகளவு உயர்ந்திருந்தவளே!
உலகையே…
உனக்காக…
விலைபேசவும்
விளையும் நான்…!
விலையுயர்ந்த எதையும்
விட்டுக்கொடுத்தேன்!
விட்டுக் கொடுத்த எதையும்-மீண்டும்
தொட்டுப் பார்க்க எண்ணாத
என்னுள்ளம் கவனிக்கப்படாமலேயே
கவலைக்குள்ளானதே!

கொடுத்ததை
பகிரவில்லை!
கிடைத்தவற்றை
பகிர்ந்தது போல
கிளர்ச்சிக்கு சொந்தமானவனை
கிஞ்சிற்றும் பகிரும் எண்ணமில்லை!

நீ…
என்னை உணராமல்
வளர்ந்தது…
என்னாலா?

என்னை ஈன்று
உன்னையும் குறை அறியாமல் வளர்த்த
உத்தம சீலர்களின்
உயர் பண்பினாலா?

இனி பகிர்வும் இல்லை
பகையும் இல்லை
எண்ணம்போல்
வாழ்க்கையை வாழ்

உயிரானவர்களை
உயர்வானவர்களை
வருத்தாதே வருந்தாதே!
வாழ்த்துகள்…!

என தனது மனதில் இருந்ததை எழுதி படுக்கையில் ஒருபுறம் வைத்தவள், மனபாரம் குறைந்து மனம் இலேசாக தன்னை உணர்ந்தவள், படுத்தவுடன் தன்னை மறந்து உறங்கியிருந்தாள்.

அனன்யா வீட்டினுள் நுழையும்போதே கவனித்த தேவகி, நீண்ட நேரம் எந்த அணுக்கமும் இல்லாமல் போன மகளின் அறைக்குள் வந்து படுக்கையில் படுத்திருந்தவளைப் பார்க்க,

அவளுக்கென்ன… அடுத்த அத்தியாயத்தில்…

error: Content is protected !!