Alaikadal 4

Alaikadal 4

அலைகடல் – 4

அனைத்து மருத்துவ வசதிகளையும் தன்னுள்ளே அடக்கியிருக்கும் அப்பெரிய மருத்துவமனை அருங்காட்சியகத்தை தோற்கடிக்கும் அமைதியோடு இயங்கிக்கொண்டிருந்தது.

ஐசியு வாசலில் கணேசன் உயிரைக் கையில் பிடித்து காத்திருக்க உள்ளே அவரது மனைவியின் உயிரைத் தக்க வைக்கும் போராட்டம் அங்கிருக்கும் மருத்துவர் செவிலியர் முகங்களில் தெரிந்தது.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்களுக்கும் மேலாக ஆகியும் மனைவியின் நலன் குறித்து எந்தவொரு செய்தியும் வராமல் போக நெஞ்சமெல்லாம் இரத்தம் கசியும் உணர்வு. ஐந்து நிமிடம் முன்னால் சென்றிருந்தால் அவளைத் தாங்கியிருப்போமே என்றிருந்தது.

ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு வினாடியும் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை காலம் இக்கட்டான நேரத்தில் எல்லா மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு முறையேனும் உணர்த்திச் சென்றிருக்கும். அந்த நிலையில் இப்போது கணேசன் இருக்க செல்பேசி இசைத்து அவரின் மனவோட்டத்தைத் தடுத்தது.

எரிச்சலாக எடுத்து அணைக்கப்போனவர் நம்பரைப் பார்த்ததும் நிதானித்தார். பூங்குழலி பள்ளியில் இருந்து வரும் நேரமாகிய மாலை நான்கு மணியைக் கடிகாரம் தாண்டியிருக்க வீட்டின் தொலைபேசி எண் ஒளிர்ந்ததில் மகள்தான் அழைக்கிறாள் என்று கண்டுகொள்ள வெகுநேரமாகவில்லை.

மகளை சில மணிநேரங்கள் என்றாலும் மறந்திருந்த தன் மடத்தனத்தை நொந்து அதனை உயிர்ப்பித்து காதில் வைத்ததும்,

“அப்பா… இங்க அம்மாவ காணோம்ப்பா… வீடு தொறந்து இருந்துச்சி துணியெல்லாம் படிக்கட்டில விழுந்திருக்கு பயமா இருக்குப்பா நீங்க வாங்கப்பா” என்று அழுதுக்கொண்டே அழைக்க,
இங்கிருந்து நகர முடியாமல் இருக்கும் தன் இயலாமையை ஆழ்ந்த மூச்சில் கட்டுப்படுத்தியவர்,

“பூக்குட்டி அழாதடா அம்மாக்கு உடம்பு சரி இல்லை. அதான் அப்பா ஹோச்பிடல் கூட்டிட்டு வந்திருக்கேன் நீ என்ன பண்ணுறன்னா சாப்பிட்டு கதவை பூட்டிட்டு உள்ள இருக்கியா அப்பா உன்னை வந்து கூட்டிட்டு போறேன்”

“அம்மாக்கு என்னாச்சு? என்னையும் இப்போவே கூட்டிட்டு போங்க. அப்புறம் பாப்பா பாப்பாக்கு ஒண்ணும் இல்லைல இப்போவே அம்மாவ பாக்கணும் கூட்டிட்டு போங்க” அழுகை அதிகமானதுதான் மிச்சம் முதல்முறையாக தனியே வீட்டில் இருக்கவும் பயமாக இருந்தது.

செல்ல மகளின் அழுகையை அத்தகப்பனால் தாங்கமுடியவில்லை. “சரிடா சரிடா அப்பா இப்போ வந்துருவேன் ஆனா அம்மா கிட்ட யாராச்சும் இப்போ இருக்கனுமே இல்லைன்னா உன் பாப்பாக்கும் உடம்பு சரியில்லாம போயிரும். நீயே சொல்லு பாப்பா பாவமில்லையா?” எதை சொன்னால் சமாதானம் ஆகுவாளோ அதைச் சொல்ல,

உடனே தன் கண்ணீரைத் துடைத்து அழுகையை நிறுத்தியவள், “சரி சரி நீங்க அங்கேயே இருங்க ஆனா அம்மாகிட்ட பேசனும் போனை குடுங்கப்பா” என

அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கடகடவென கன்னத்தில் சத்தமின்றி இறங்கியது. “அம்மா உள்ள இருக்காடா அப்புறம் தரேன். நீ சாப்பிட்டு சமர்த்தா இரு என்ன? அப்பா வந்து கூட்டிட்டு போறேன் சரியா? சாப்பாடு இருக்கான்னு பாரு அம்மா சொல்லிட்டுதான் போனா பூக்குட்டிய சாப்பிட சொல்லுங்கன்னு”

“தெரியலப்பா இருங்க பாக்குறேன்” அலைபேசியை டேபிளில் வைத்து ஓடும் சத்தம் கேட்டது. பின் வந்து அப்பா சப்பாத்தியும் மத்தியானம் கொண்டுபோன பருப்பும் இருக்குப்பா. அம்மாக்கிட்ட சப்பாத்தி சாப்டுறேன்னு சொல்லிருங்க சரியா?”

“ஹ்ம்ம்… கண்டிப்பாடா” கமறிய தொண்டையை சரி செய்து கடினப்பட்டு உரைக்க,

“சீக்கிரம் வந்திருங்கப்பா… வருவீங்க தானே?” உறுதிபடுத்தி தந்தை சரி என்ற பின்பே தொலைபேசியை வைத்தாள் பூங்குழலி.

இரவு எட்டு மணியை நெருங்கிக்கொண்டிருக்க அதற்குள் நான்கு முறை தந்தையை அழைத்து பேசியிருந்தாள் பூங்குழலி.

கடைசியாக பேசியதில் தனக்குத் தம்பி பிறந்ததை அறிந்தவள் அவனைப் பார்க்கத் துடித்துக்கொண்டிருந்தாள்.

தொலைகாட்சியில் ஒரு கண்ணும் ஜன்னலில் மற்றுமொரு கண்ணும் வைத்து நேரத்தை நெட்டித்தள்ளி தந்தையிடம் மீண்டும் பேச தொலைபேசி அருகே செல்ல வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

ஆவலோடு கதவைத்திறந்து வெளியே ஓடிவந்துவள் தந்தையை இறுகக் கட்டிக்கொண்டாள்.

“என்னடா பயந்துட்டியா? அப்பா வந்துட்டேன்ல… இப்போ பூக்குட்டி ஹாப்பியா? உன்கூட விளையாட தம்பிபாப்பா வந்தாச்சே அம்மாவ பார்க்கப் போலாமா?”

“போலாம்ப்பா… தம்பி யாரை மாதிரி இருக்கான்? என்ன கலர்? இப்போ என்ன பண்றான்?” பூங்குழலியின் கேள்விகள் பார்க்காமல் ஸ்பரிசித்திருந்த தன் தம்பியைச் சுற்றி சுழல,

“அப்படியே உன்னை மாதிரியே இருக்கான் உன் கலரேதான்” வாய் பேசிக்கொண்டிருக்க கை அதன் பாட்டில் எடுக்க வேண்டிய பணம், ஏற்கனவே எடுத்து வைத்திருந்த குழந்தைக்கான பொருட்கள் முதலியவற்றை சேகரித்தது.

காலையில் இருந்து சாப்பிடாததால் முகம் சற்றுச் சோர்ந்திருந்தது. ஆனாலும் பூங்குழலியின் சந்தோசம் அவரையும் தொற்ற கையோடு மகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

சின்னஞ்சிறு ரோஜாக்கள் நூறு சேர்ந்து ஒன்றாய் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது குழந்தை. ரோஜாவின் மென்மையைத் தோற்கடிக்கும் தோலுடன் தாயின் அருகே துயில்கொள்ள அதையே ஆர்வத்துடன் பார்த்திருந்தாள் பூங்குழலி.

அடிக்கடி அவளின் கைகள் இளஞ்சிவப்பு நிறத்தை முழுதாய் போர்த்தியிருந்த கால்களிலும் அதில் இருக்கும் குட்டி குட்டி விரல்களிலும் படிந்து படிந்து மீண்டுக்கொண்டிருந்தது.

அருகில் இருந்த தந்தையிடம், “அப்பா தொட்டு பாருங்களேன் சித்தி பாப்பா மாதிரி… இல்லை இல்லை அதை விட சாப்ட்டா இருக்கு… என் தம்பிபாப்பா தான் அழகு இல்லைப்பா?” தன்னுடைய பொம்மையே எல்லாருடையதை விட நன்றாக இருக்க வேண்டும் என்ற குழந்தையின் குணம் வெளிப்பட்டது அதில்..

புன்னகையுடன்தலையசைத்தார் கணேசன் அருகில் உறங்கும் மனையாளிடம் தஞ்சமடைந்திருந்தது. ஆபிரேஷன் செய்து குழந்தையை எடுத்ததால் இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள் சாந்தா.

குழலியின் குரல் அவளை லேசாக எழுப்ப தாயின் அசைவை உணர்ந்து,

“அம்மா அம்மா இங்க பாருங்க தம்பிய… அப்பா பாருங்க அம்மா முழிச்சிட்டாங்க” பரபரத்தாள் குழலி.

“சாந்தா…” மனைவியின் கையைப் பற்றி மெதுவே அழுத்த முழுதாக கண்திறந்து கணவனைப் பார்த்து சோபையாக புன்னகைத்தாள்.

பார்வை மகளை வருடி கடைசியாக உறங்கும் மகனிடம் வந்தடைந்தது.
கூடவே மாமியாரின் பேச்சும் மூளையை சென்றடைய கலக்கத்துடன் கணவனைப் பார்த்தாள் சாந்தா.
பார்வையை கவனித்து மனைவிடம்,

“என்னம்மா வலிக்குதா? நர்ஸ் நீ முழிச்ச பிறகு சொல்ல சொன்னாங்க நான் மறந்துட்டேன். இரு போய் கூட்டிட்டு வரேன்” நகர முயலுகையில் அவரின் கையை விடாமல் பற்றியவர்.

“என்னங்க அத்தைக்கூட பேசுனேன். பயமா இருக்குங்க… அவங்க…” சொல்ல முடியாமல் கடைவிழியோரம் கண்ணீர் சூழ கேவ தையலிட்ட இடம் வலித்து வயிற்றில் கைவைத்து முகத்தை சுழித்தார்.

“ச்ச்ச்… அதெல்லாம் ஒன்னும் ஆகாது அம்மாக்கிட்ட விசயத்தை சொன்னேன் வாழ்த்த மனசில்லைனாலும் பரவால்ல… அதை விடு அம்மா இங்க வரமாட்டாங்க. அத்தைகிட்ட சொன்னேன் ரொம்ப சந்தோசப்பட்டாங்க நாளக்கி உனக்கு ஒத்தாசையா இருக்க இங்க வரேன்னு சொன்னாங்க. நானும் உனக்கு துணை வேணுமேன்னு உங்கம்மாவ வர சொல்லிட்டேன்”
சாந்தா மாமியார் சொன்ன விசயத்திற்கு பயப்பட கணவனோ மாமியாருக்கு பயப்படுவதாக எண்ணி சமாதானம் செய்தார்.

“இல்ல… வந்து உங்களுக்கு ஆபத்துன்னு” திக்கி திணற

“மச்… சாந்தா அந்த பேச்சை விடு. எனக்கு ஒன்னும் ஆகாதும்மா நான் நல்லாத்தானே இருக்கேன்? இதையெல்லாம் இந்த நேரத்துல மூளைக்கு ஏத்தாத நல்லதே நடக்கும்ன்னு நம்பு”
தாய் தந்தையின் பேச்சில் தாய்வழிப் பாட்டி வருவதை மட்டும் புரிந்துக்கொண்ட பூங்குழலி, “ஹய் ஜாலி ஜாலி. பாட்டி எனக்கு கதைலாம் சொல்வாங்களே நான் அதை என் தம்பிக்குச் சொல்வேனே” என குதூகலித்தாள்.

மூன்று மாதம் சென்றிருந்தது. சாந்தாவின் தாய் ஊருக்குக் கிளம்பிவிட மீண்டும் எப்போதும் போல் தந்தையும் மகளும் சமையலைத் தவிர அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்தனர்.

மகள் பாத்திரம் கழுவி துணி துவைக்க கணவன் வீட்டை பெருக்கி துடைத்து இதர சில வேலைகளை பகிர சாந்தா வேண்டாம் வேண்டாம் என்று மறுத்து கூவினாலும் கேட்பவர்தான் எவருமில்லை.
முதல் வாரம் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் மாமியாரின் குரல் மூளையை அரிக்க முழுதாக ஒட்டவே முடியவில்லை சாந்தாவால்.

கணேசன்தான் அதைக் கவனித்து பேசி பேசியே சரியாக்கி இருந்தார்.
குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையைக் கூட பல சமயம் பூங்குழலி விரும்பி ஏற்றிட இப்போதெல்லாம் அவளைக் கண்டாலே கைகால் அசைத்து அவன் பாசையில் சத்தமிடுவான்.

அவனைக் கண்டுகொள்ளாமல் பூங்குழலி அருகில் நடந்துப்போனாள் என்றால் உதடு பிதுங்கி அவள் வந்து தூக்கும் வரை கத்திக்கொண்டிருப்பான்.

அன்று இரவும் அப்படித்தான் அவளின் மடியில் சொகுசாகப் படுத்திருந்து, “குட்டா… நான் யாரு சொல்லு… நீ யாரு சொல்லு… செல்லக்குட்டா பட்டுக்குட்டா என்ன பாக்குற” என்ற பூங்குழலியின் பேச்சையும் முகபாவனையையும் கண்ணை உருட்டி சுருக்கி பொக்கைவாய் நிறைய சிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதனை ரசித்துக்கொண்டிருந்த சாந்தாவிடம், “அம்மா இவன் பேரு என்னம்மா வைக்கப் போறீங்க? எனக்கு தம்பி பொறந்திருக்குன்னு ஸ்கூல்ல சொன்னா எல்லாரும் பேருதான் கேக்குறாங்க” என

“உங்க அப்பா வரட்டும் அவருகிட்டையே கேளு குட்டி… இப்போ போய் ஹோம்வொர்க் முடி. அவனை என்கிட்ட குடு” என்றவாறு தூக்கிக்கொண்டாள்.

கணேசன் வந்ததும் அவரிடமும் அதே கேள்வி கேட்கப்பட, “ஹ்ம்ம்… என்ன பேரு வைக்கலாம்” என்று மகளிடமே கேட்க

“நல்ல சூப்பரா ஒரு பேர் வையுங்கப்பா”

“சூப்பராவா? அப்போ பூக்குட்டி தம்பிங்கிறதால பூ வில் தொடங்குற பேரை வைப்போமா? பூபாலன், பூவேந்தன், பூவரசன் இப்படி. இந்த மூணுபேர்தான் நல்லாருக்கு நீயே எதாச்சும் ஒன்னு சொல்லு பார்ப்போம்”

“ஹ்ம்ம்… பூபாலன் வேணாம் எங்க சோசியல் சார் பேரும் அதுதான்” இதைக்கூறும் போதே அவளது முகம் அஷ்டகோணல் ஆக,

“ஹாஹா சோசியல் பிடிக்காதே உனக்கு. சரி மத்த ரெண்டுல?”

“பூவரசனும் வேணாம் அதுல மரம், பாட்டுலாம் இருக்கு… இன்னொன்னு சொன்னீங்களே பூவேந்தன் அது சூப்பரா இருக்கு அதுவே வச்சிக்கலாமா?”

“சரிடா… சாந்தா நீ என்ன சொல்ற” என மனைவியிடமும் கேட்க

“நல்லாத்தான் இருக்குங்க அதுவே வச்சிக்கலாம்” என்றாள் சாந்தா.
வருடங்கள் இரண்டு உருண்டோட
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தாள் பூங்குழலி.
கீழே புத்தகம் விரித்து வைக்கப்பட்டிருக்க அருகே சம்மணமிட்டு அமர்ந்திருந்தவளின் மடியில் பூவேந்தன். கைகளால் அவனை கட்டிக்கொண்டு இடமும் வலமும் ஆடி சிறிது நேரம் கழித்து முன்னும் பின்னும் என உடல் ஆடிக்கொண்டே இருக்க பார்வை புத்தகத்தில் நிலைக்கொண்டிருந்தது.

“பூம்மா நாளக்கி பரிட்சை வச்சிட்டு இப்படி ஆடிகிட்டே இருந்தா எப்படி? டேய் நீ எழுந்திருடா” மகனின் கையைப் பிடித்து சாந்தா இழுக்க பார்க்க,

“மா அம்மா… படிச்சிட்டேன்மா ரிவைஸ் தானே பண்ணுறேன் அவன் அமைதியா இருப்பான் என்னடா” மடியில் இருப்பவனிடம் குனிந்து கேட்க,

“ஆமாம்மா நான் சத்தம் போத மாத்தேன்” என்றான் பூங்குழலியிடம்.

“டேய் நான் அக்காடா என்னையும் அம்மான்னு சொல்லுற அம்மாவையும் அம்மான்னு சொல்லுற உனக்கே இது ஓவரா இல்லை. அக்கா சொல்லுடா” என்றாள் வழக்கம் போல்.
தமக்கை அம்மா அப்பா என்றழைப்பதைப் பார்த்தே அம்மா அப்பாவை சரியாக அழைப்பவன் சமயத்தில் பூங்குழலியையும் ‘அம்மா’ என்பான் இல்லையென்றால் தாயின் அழைப்பான பூம்மாவில் ‘ம்’ ஐ எடுத்துவிட்டு ‘பூமா’ என்பான். அதனை அவ்வப்போது மாற்றிவிடுவதே பூங்குழலியின் வேலையாக இருக்கும்.

“ஆங் அக்கா” என பூவேந்தன் மாற்றியதும்.

“ஆங் சொல்லிட்டான் போங்கம்மா” என்றால் இவள் தாயிடம்.

“மார்க் வரட்டும் அப்போ தெரியும் எல்லாம் உங்க அப்பா குடுக்குற செல்லம் என் சொல்பேச்சு யாரும் கேக்குறதில்லை வரட்டும் அவரு” திட்டிக்கொண்டே அடுப்படிக்கு சாந்தா சென்றுவிட மீண்டும் தொடர்ந்தது ஆட்டம் + படிப்பு.
இவ்வாறு தெளிந்த நீரோடையென சென்றுகொண்டிருந்த அவர்கள் வாழ்வில் கல் விழுந்ததே அந்த பொதுத்தேர்வு விடுமுறையில் தான்.
கடந்த ஒரு மாதமாக கணேசனுக்கு தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி என்று ஒன்று மாற்றி ஒன்றென வந்துகொண்டே இருக்க டாக்டரிடம் சென்று மருந்து வாங்கி உண்டதும் சரியாகி மீண்டும் ஓரிரு நாளில் வலி வருவதுமாக இருந்தது.

ஒருநாள் இரவு தாங்கமுடியாத வயிற்றுவலியில் கணேசன் துடிக்க பயந்துபோன சாந்தா விரைந்துசென்று தெருவோரம் நிற்கும் ஆட்டோவை வரவழைத்தாள்.
செல்லும் முன் மகளை எழுப்பி வீட்டையும் தம்பியையும் பார்த்துக்கொள்ளுமாறு கூறி தூரிதகதியில் கணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

சிலபல பரிசோதனையின் முடிவில் மிகவும் முற்றிய டைபாய்ட் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
“எப்படி இவ்வளவு நாள் கவனிக்காமல் விட்டீங்க வயிறு குடலெல்லாம் இரத்தம் கசிந்து சீரியஸ் கண்டிஷன்ல இருக்காங்க. ஆரம்பத்துலயே வந்திருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்காது” டாக்டர் திட்டித்தீர்க்க

“அவரு மாத்திரை மருந்து சாப்பிட்டுதான் இருந்தாரு. இங்கப்பாருங்க” என்று எடுத்துக்கொண்ட மருந்துகள் மற்றும் டாக்டர் சீட்டை காண்பிக்க

“நோய் என்னனே தெரியாம சாதாரண தலைவலி வயித்தவலி மாத்திரை போட்டா எப்படி சரியாகும் மேம்? நாங்க எங்களால முடிஞ்ச அளவு ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கோம் இதுக்கு மேல கடவுள் விட்ட வழி” என்று கூறிச் சென்றுவிட
இருவருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அடி இம்முறை பயத்தில் விழுந்தது சாந்தாவிற்கு.
அடுத்த நாளே பிள்ளைங்களையும் அழைத்து ஊரிலிருக்கும் மாமனாரிடம் விசியத்தை சொல்ல, அவர் மருத்துவமனை விலாசத்தைப் பெற்றுக்கொண்டு அன்றே குடும்பத்துடன் வருவதாகவும் பயப்படாமல் இருக்கும்படியும் கூறி வைத்தார்.

இதற்கிடையே கணேசன் உறக்கமும் முழிப்புமாக இருக்க பூங்குழலி வெகுவாகக் கலங்கிப்போய் தந்தையின் அருகிலேயே இருந்தாள். சாந்தா மருந்து வாங்கிய கையோடு டாக்டரையும் பார்த்து வருவதாக கூறி பூவேந்தனையும் அழைத்துச்சென்றிருந்தாள்.

உறக்கம் மெதுவே கலைந்த கணேசன் அருகில் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் மகளிடம்,

“அம்மா எங்கேடா?” என

“அம்மா வெளில போயிருக்காங்கப்பா இப்போ வந்திருவாங்க கூப்பிடவா?”

“இல்லை வேணாம் இங்க வாயேன்” என்று படுத்திருக்கும் கட்டிலில் கை காண்பித்தார்.
அவருக்கேத் தனக்கு நடக்கப்போவது தெரிந்திருந்ததோ என்னவோ? நிறைய பேசினார் கூடவே மகளிடம் இருந்து தன் பெற்றோர் இன்று வருவதையும் அறிந்தார்.

அவரின் தாய் வந்தால் எப்படியும் தன் மனைவி மகனை வார்த்தை என்னும் வாள் கொண்டு அறுக்கப்போவது உறுதி என்பது திண்ணமாகத் தெரிந்தது.

அதைக்கேட்டு மனைவியோடு சேர்ந்து மகளும் பாதிக்கப்படாமல் இருக்க அவளைத் தயார் செய்ய ஆரம்பித்தார்.

“பூக்குட்டி நீ ஒன்னும் சின்னப்பிள்ளை இல்லை. உங்க பாட்டிக்கூட பிரச்சனைன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்ல அவங்க வந்து என்ன பேசுனாலும் அதை மனசுல வாங்காத… வாங்கவும் கூடாது அதெல்லாம் உண்மையும் இல்லை. உன் அம்மாவும் தம்பியும் உன் பொறுப்புதான்” என

“அப்பா ப்ளீஸ்ப்பா இப்படிலாம் பேசாதீங்கப்பா பயமா இருக்குப்பா” என்று அழுதுவிட

“நாளை என்ன வேணும்னாலும் நடக்கலாம்டா. நான் வந்துட்டா பிரச்சனை இல்லை அப்படி இல்லைனா நீதானே பார்த்துக்கணும்…” அவர் நடந்ததெல்லாம் கூறி பக்குவமாக அவள் வயதிற்கு ஏற்றார் போல் புரிந்துக்கொள்ளும் படி செய்தார்.

“அப்பா பாட்டிதான் எப்போவும் புரியாம பேசுவாங்களே. நம்ம தம்பிக்கூட இத்தனை நாள் நல்லாத்தானே இருந்தோம் இனியும் இருப்போம். உங்களுக்கு காய்ச்சல் எல்லாம் சரி ஆகிரும். நாம திரும்ப வீட்டுக்குப் போவோம் பாருங்க”
அதற்குப் பதில் சொல்லாமல் டிப்ஸ் ஏறாத கையால் அவளின் கன்னத்தை வருடித் தட்டினார். அப்போது ஊசியைப் போட வந்த நர்சோடு சாந்தாவும் நுழைய கணவனிடம் சிறிது பேசி அவருக்கு பழச்சாறு அருந்தக்கொடுத்தாள்.
கணேசனின் குடும்பமும் வந்துவிட நினைத்ததைப் போல் மகனைப் பார்த்து அழுதவர் பின் மருமகளையும் பேரனையும் சராமாரியாக நிந்திக்க, “அம்மா…” என்ற கணேசனின் குரல் அவரைச் சிறிது அடக்கியது.

ஏற்கனவே எடுத்திருந்த மருந்துகள் குணப்படுத்தாமல் உள்ளுறுப்புகளை சிதைத்து வைத்திருக்க அதனை சரிசெய்ய இயலாமல் காய்ச்சலும் மருந்திற்கு கட்டுப்படாமல் ஏறிக்கொண்டே செல்ல அடுத்த ஆறாவது நாளில் கணேசனின் இதயம் அதன் துடிப்பை நிறுத்தியிருந்தது.
யா

யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. பூங்குழலி நடுக்கூடத்தில் வைத்திருந்த தந்தையின் முன் கதறி அழ அவளைப் பார்த்து பூவேந்தனும் அழ இது எதையும் கருத்திற்கொள்ளாமல் திக்பிரமை பிடித்தார்போல் இருந்தாள் சாந்தா.
அவளை பார்த்தாலே பற்றிக்கொண்டு வந்தது நாச்சியாருக்கு, “பாருங்க எப்படி கல்லுக்குண்டாட்டம் என் மகனை முழுங்கி உக்காந்திருக்கான்னு” ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சொல்லியே அவர் அழுக
சாந்தாவிற்கு அதைக்கேட்க கேட்க அழுகைப் பொங்கி தன்னைப்போல் மனம் அதனை உள்வாங்க ஆரம்பித்தது. அவளின் மனநிலையை சரிப்படுத்தும் கணவனும் இல்லாமல் போக மனம் ‘தன்னால்தான் இப்படியாகிற்று தன்னால்தான்… தன் பையனால்தான்’ என்று புலம்பி இறைவன் வகுத்த விதியை தூக்கி தன்மேல் போட்டுக்கொண்டது மட்டும் போதாதென்று மகனின் மீதும் பழியேற்றியது.
முடிந்தது. அனைத்து சாஸ்திரமும் சம்பிரதாயமும் முடிந்து இறுதியாத்திரையாக கொள்ளிவைக்கக் கிளம்புகையில் தாத்தா அமுதவேல் பூவேந்தனை தூக்கச்செல்ல நாச்சியார் பாட்டிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ,
“என்ன பண்றீங்க நீங்க? நம்ம பையன் போனதே இதோ இந்த சனியன் பிறந்ததாலதான். இவன் கொள்ளிவச்சா அவன் ஆத்மாகூட நிம்மதியா சாந்தி அடையாது. நீங்க போங்க. இவனை கூட்டிட்டு போனீங்க அப்புறம் நடக்குறதே வேற” என்றவாறு வந்து பூவேந்தனை தள்ளிவிட
சாந்தாவின் அருகில் சென்று விழுந்தான் அவ்விளங்குருத்து.

“ஆஆ… ம்மா” என்று மிரண்டு அழுது தாயின் கையைப்பற்ற மெதுவே அவனிடமிருந்து கையை உருவினாள் சாந்தா.
அதற்குள் வேறொரு கரங்கள் அவனை அள்ளி அணைத்து தட்டிக்கொடுத்தது. சந்தேகத்திற்கு இடமின்றி அது பூங்குழலியின் கரங்கள்தாம்.

“பாட்டி… அப்பா இருந்திருந்தா இப்படி உங்களால செய்ய முடிஞ்சிருக்குமா. சின்னப்பையனைத் தள்ளி விடுறீங்க. இவன் பிறந்ததும் அப்பா உயிரோட இருக்கமாட்டங்கன்னு தானே நீங்க சொன்னது. ஆனா இவன் பிறந்து ரெண்டு வருஷம் ஆகுது அதுவாச்சும் உங்களுக்கு நியாபகம் இருக்கா? அப்போ இத்தனை நாள் அப்பா இருந்ததுக்கு யார் காரணம்? இவன் காரணம்ன்னு சொல்வீங்களா?”
பட்டாசாக பொரிந்துக்கொட்டி சாட்டையடியாக கேள்விகள் கேட்க,
அங்கே குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அமைதி நிலவியது அழுதுக்கொண்டிருந்த பூவேந்தனும் முதன்முதலாக உயர்ந்த தமக்கையின் குரலையும் அவளின் கோபமுகத்தையும் பயந்து நிமிர்ந்து பார்க்க
பேத்தியின் அதட்டலில் நாச்சியாரே கொஞ்சம் திகைத்துதான் போனார்.

“யார் என்ன சொன்னாலும் இவன் எங்கப்பாக்கு புள்ளைதான் அது இல்லைன்னு ஆகிறாது. தாத்தா இந்தாங்க இவனை கூட்டிட்டு போங்க” என்று தாத்தாவிடம் கொடுக்க, உடன் போக அடம்பிடித்த பூவேந்தனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.
அதன் பிறகு யாரின் பேச்சையும் கேட்காமல் கணேசனோடு ஒரு சாரர் அகன்றுவிட கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் குறைந்து குடும்பத்தினர் மட்டும் இருந்தனர்.
நாச்சியாருக்கு தன்னை எதிர்த்து கணவனே பேசாமல் இருக்க சிறு பொடிசு பேசியதைத் தாங்கவே முடியவில்லை. அப்பொழுதே சண்டை இழுத்து இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என்று அத்துவிட்டுத் தன் மற்றொரு மருமகளுடன் ஊருக்குச் செல்ல, இப்போது அங்கிருந்தது சாந்தாவின் பெற்றோர் சாந்தா பூங்குழலி மட்டுமே.
அலையடித்து ஓய்ந்தார் போல் இருக்க கூடத்தில் மாட்டியிருந்த தங்களின் குடும்பப் புகைப்படத்தின் அருகே சென்றாள் பூங்குழலி. அதில் சிரித்தபடி இருக்கும் தந்தையைப் பார்த்தவாறு கீழே சரிந்து விழுந்தவள் அவரின் ஈடு செய்ய இயலாத இழப்பை எண்ணி கதறியழ ஆரம்பித்தாள்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாலும் தான் செய்ய வேண்டிய செய்கையைத்தான் தன் மகள் செய்திருக்கிறாள் என்று மூளைக்குப் புரிந்தாலும் அத்தனை நாளாக கொஞ்சம் கொஞ்சமாக மனதினுள் நுழைந்து இன்று பசுமரத்தாணியாக பதிந்த ‘தன்னாலும் தன் பையனாலும்தான் இப்படி ஆகிற்று’ என்ற எண்ணத்தை வெளியேற்றமுடியாமல் தன்னையறியாமல் மகனிடம் இருந்து மனதாலும் உடலாலும் விலகத்தொடங்கினாள் சாந்தா.
பெற்ற தாய் விட்டு விலக, பெறாத மகனுக்கு அந்நொடியின் தொடக்கத்திலிருந்து தாயானாள் பூங்குழலி.
**************************************
டங்ங்ங்ங்…காலியாக இருந்த டீ தம்ளர் கடற்காற்றிற்கு ஈடுகொடுக்க முடியாமல் கீழே விழுந்து ஓசை எழுப்ப திடுக்கிட்டு தன் நினைவுகளில் இருந்து கலைந்தாள் பூங்குழலி.
நினைவுகளில் நெகிழ்ந்திருந்த மனம் அது நினைவுகளாகவே தேங்கிவிட்டதில் நிதர்சனம் உணர்ந்து நிகழ்காலம் முகத்தில் அறைய பழையபடி வலித்து இறுகியது மனம்.
கீழே விழுந்த தம்ளரை எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு மணியைப் பார்க்க நடுநிசி இரண்டு மணியைத் தொட ஓடிக்கொண்டிருந்தது கடிகாரம்.
நாளைக்கு விமானப்பயிற்சி வேற இருக்கு தூங்கி எழுந்தால்தான் மனம் அமைதியடைந்து விமானம் ஓட்டவே முடியும் என்று தோன்ற தனதறைக்குச் சென்று அமைதியாகப் படுக்கையில் படுத்தவள் வேறெதையும் எண்ணாமல் வழக்கம்போல் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப்படுத்தியபடி அது முடியும் முன் தூங்கிப்போனாள்.
– அலைகடல் ஆர்பரிக்கும்…

error: Content is protected !!