Azhagiye marry me 21
Azhagiye marry me 21
அருணாவின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் சென்று விட மண்டபமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
அருணா இறந்த செய்தி அறிந்து மயங்கி சரிந்த மதுவை தாங்கிக் கொண்ட அருள் அடுத்து நடக்க வேண்டிய விடயங்களை கவனித்தான்.
திருமணம் நடக்கும் இடத்தில் ஒரு துக்க சம்பவம் நிகழ்ந்ததால் அனைவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அதை எதுவும் கண்டு கொள்ளாமல் அருள் மற்றும் ஸ்ரீதர் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருந்தனர்.
அருணாவின் உடலருகில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்த மதுவை வத்சலா ஆறுதல் படுத்தி கொண்டிருந்தார்.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு அருணாவின் உடல் எடுத்து செல்லப்பட கதறி அழுத மதுவை பார்த்து ஷோபா தான் செய்த காரியம் தவறோ என எண்ணி கொண்டிருக்க
அவளருகில் வந்த சுலோச்சனா
“இவ அம்மா இறந்து போனதை காரணம் காட்டியே இவளை எப்படியாவது அருளை விட்டு பிரிச்சுடணும்” என்று கூற ஏனோ அவரின் பேச்சு ஷோபாவுக்கு பிடிக்கவில்லை.
எதுவும் பேசாமல் ஷோபா சென்று விட சுலோச்சனா தன் சதி வேலைகளை எப்படி செய்வது என்று யோசிக்க தொடங்கினார்.
கார்த்திக்கோ நடப்பதை எல்லாம் பார்த்து அதிர்ந்து போய் நின்றான்.
“நான் நினைத்து வந்தது வேறு…இங்கு நடப்பதோ வேறாக இருக்கிறதே!!! என்னால் தானே மதுவிற்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை?? அவள் இனியாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தானே ஷோபா மதுவின் திருமண செய்தியை கூறவும் நான் இங்கு வந்தேன்…ஆனால்…இங்கே…” என்று தன் மனதிற்குள் கவலை நிரம்ப நின்று கொண்டிருந்தான் கார்த்திக்.
கார்த்திக் அருகில் வந்த ஷோபா
“ஸாரி கார்த்திக்…நான் உங்கள இங்கே கூப்பிட்டது மதுவோட கல்யாணத்துக்காக இல்ல….உங்கள பார்த்தா மது டென்ஷன் ஆகுவா…அதனால அவங்க இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்க மாட்டாங்கனு நினைச்சு தான் உங்கள இங்க வரவழைச்சேன்…ஆனா இங்க வேற என்னென்னவோ நடந்துடுச்சு….” என்று கூற அவளை வெறுப்பாக பார்த்தான் கார்த்திக்.
“நீ எல்லாம் ஒரு பொண்ணா??? ஒரு பொண்ணோட வாழ்க்கையையே அழிக்கப் பார்த்துருக்கியே….சே….” என்று கூறிய கார்த்திக்
“இது மட்டும் தான் பிளான் பண்ணுணியா??? இல்லை வேற ஏதாவது பண்ணி வைச்சிருக்கியா??? அதையும் சொல்லிடு….இல்லைனே நீ பண்ணுண இந்த காரியத்தை எல்லோர் கிட்டயும் முக்கியமாக அருள் கிட்ட சொல்லிடுவேன்” என்று கூற
மிரட்சி அடைந்த ஷோபா
“இல்லை இல்லை வீட்ல சொல்லிடாதீங்க ப்ளீஸ்….நான்…வந்து…ஸ்ரீதருக்கும் மதுவுக்கும் லவ் இருக்குதுனு அவங்க ஆபீஸ்ல முதல் வேலை பார்த்த ஒருவருக்கு பணம் கொடுத்து சொல்ல சொல்லிருந்தேன்…” என்று தலை குனிந்த படி கூற பளாரென அறைந்தான் கார்த்திக்.
“நீ எல்லாம் மனிஷ பிறவி தானா?? உன் பேச்சை கேட்டு நான் இந்த கல்யாணத்துக்கு வந்தேன்னு நினைக்கும் போது எனக்கே அசிங்கமாக இருக்கு…மதுவோட சந்தோஷம் பறி போனதுக்கு ஒரு வகையில் நானும் காரணமாகிட்டேனே…” என்று வருத்தத்துடன் கூறிய கார்த்திக்
ஷோபாவின் கழுத்தில் கையை வைத்து நெறிக்க பார்த்து விட்டு
“சே….” என்று தன் கையை விலக்கி கொண்டான்.
“இனி மதுவோட லைப்ல ஏதாவது குளறுபடி பண்ணலாம்னு நினைச்ச வெட்டிப் போட்டுருவேன்….” என்று ஒரு விரல் நீட்டி எச்சரித்து விட்டு செல்ல கண்கள் கலங்க கன்னத்தில் கை வைத்து கொண்டு நின்றாள் ஷோபா.
கார்த்திக்கிடம் பேசுவதற்காக வந்த ஸ்ரீதர் ஷோபா மற்றும் கார்த்திக் பேசுவதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
“ஷோபா….நீ இவ்வளவு கீழ்த்தரமான வேலை எல்லாம் பார்த்தியா??? என்னையும்…மதுவையும்…சே…. உன்னை போய் என் மனசுல நினைச்சேனே….” என்று வேதனையாக எண்ணிக் கொண்டவன் தான் வந்த தடம் தெரியாமல் திரும்பி சென்றான்.
தூணில் சாய்ந்து அழுது கொண்டிருந்த மதுவின் அருகில் அருள் வந்து அவள் தோளில் கை வைக்கவும் அவன் மார்பில் சாய்ந்து கதறி அழுதாள் மது.
“மது அழாதேடா….ப்ளீஸ்….நீ அழுதா என்னால தாங்க முடியாதுடா….உனக்கு அம்மாவா, அப்பாவா, ப்ரண்டா, எல்லாமா நான் இருப்பேன்….ப்ளீஸ் டா அழாதே….நீ அழுதுட்டே இருந்தா உன் அம்மா மனசு கஷ்டப்படும்லே…ப்ளீஸ் மது அழாதே….” என்று அவள் தலையை அருள் வருடிக் கொடுக்க மது மெல்ல மெல்ல அழுகையை குறைத்து கொண்டாள்.
சிறிது நேரம் மெளனமாக இருந்த அருள்
“மது கொஞ்சம் வெயிட் பண்ணு…எல்லோரும் கிளம்பிட்டாங்கனா நாம நம்ம வீட்டுக்கு கிளம்பிடலாம். நான் போய் பார்த்துட்டு வரேன். இப்படி உட்காரு…” என்று அருகில் இருந்த கதிரையில் மதுவை அமர வைத்து விட்டு சென்று விட சிறிது நேரம் கண் மூடி அமர்ந்திருந்தாள் மது.
மது தனியாக அமர்ந்திருப்பதை தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்த சுலோச்சனா இரு பெண்களை தன்னருகில் அழைத்து
“சொன்னது ஞாபகம் இருக்குலே…போங்க…” என்று கூறவும்
“சரிங்கம்மா….” என்று விட்டு அந்த இரு பெண்களும் மதுவின் அருகில் சென்றனர்.
“பார்த்தியாடி இந்த அநியாயத்தை!! இந்த பொண்ணு கல்யாணப் பேச்சு
எடுத்தாலே ஏதாவது கெட்டது நடந்துகிட்டே இருக்கு…” என்று ஒரு பெண் கூறவும்
மற்றைய பெண்
“ஆமாக்கா….முன்னாடி மாப்பிள்ளை விட்டுட்டு போனான்…அப்புறம் அவ அப்பா போய் சேர்ந்துட்டாரு….இப்போ கல்யாணம் முடிஞ்ச கையோட அவ அம்மாவும் போய் சேர்ந்துட்டா….இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப் போறாளோ தெரியலையே???” என்று கூற
“ஆமா ஆமா சரியான ராசி இல்லாதவ… இவ பக்கத்தில் நின்னா நமக்கும் ஏதாவது நடந்துடும் வா போயிடலாம்….” என்று கூறி கொண்டே அந்த இரு பெண்களும் சென்று விட மதுவின் மனதோ சுக்கு நூறாக நொறுங்கி போனது.
“இவர்கள் சொல்வது போல நான் ராசி இல்லாதவள் தானா?? என்னால் தான் இத்தனை குழப்பங்களா???என்னால் அருளுக்கும் பிரச்சினை வருமா??” என்று மது மனதினுள் குழம்பி கொண்டிருக்க மதுவின் குழப்பமான முக பாவனையைப் பார்த்து உச்சி குளிர்ந்து போனார் சுலோச்சனா.
அருள் வந்து மதுவை அழைக்கவும் இயந்திரம் போல நடந்து சென்று மது காரில் அமர்ந்து கொள்ள
“அம்மா இறந்த கவலையில் இருக்கின்றாள் போல…” என்று அருள் எதுவும் பேசாமல் சென்று காரை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கி பயணித்தான்.
காரில் ஏறி தன் வீட்டை நோக்கி புறப்பட்ட கார்த்திக்கின் மனது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை அசை போட்டது……
அருணாச்சலத்தின் இறுதி சடங்குகள் முடிவடைந்த பின்னர் கோபமாக புறப்பட்டு சென்ற அகிலா வீட்டை வந்தடைந்ததும் மும்முரமாக வெளிநாட்டு பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தார்.
கார்த்திக் எத்தனை முறை எடுத்து சொல்லியும் அகிலா அவனது பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை.
வலுக்கட்டாயமாக கார்த்திக்கை அழைத்து கொண்டு சென்று விட அகிலாவின் பின்னால் செல்வதா?? மதுவை தேடி செல்வதா?? என முற்றிலும் குழம்பி போய் நின்றான் கார்த்திக்.
எப்படியாவது அகிலாவின் மனதை மாற்றி விட வேண்டும் என்ற நம்பிக்கையோடு தன் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றான் கார்த்திக்.
மெல்ல மெல்ல அகிலாவின் மனதை மாற்றிய கார்த்திக் மீண்டும் அகிலாவே
“மதுவிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்…” என்று கூறுமளவு இந்த இரண்டு வருடத்தில் வெற்றி கொண்டிருந்தான்.
தான் அவசரத்தில் எடுத்த முடிவு எத்தனை பாரதூரமானது என்பதை எண்ணி கவலை கொண்ட அகிலா நாளுக்கு நாள் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்ந்து போனார்.
மதுவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று அவர் மனம் துடியாய் துடித்தது.
கார்த்திக் அகிலாவின் மன நிலையை உணர்ந்து மதுவை முதலில் தான் சென்று பார்த்து வருவதாக கூறி புறப்பட்டான்.
அகிலாவின் மன மாற்றத்தில் சந்தோஷமாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்த கார்த்திக் முதலில் மதுவின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.
இரண்டு வருடங்களுக்கு பின்னர்
மதுவின் வீட்டை ஆவலுடன் வந்தடைந்த கார்த்திக்கை பூட்டிய கதவே வரவேற்றது.
குழப்பமாக சுற்றிலும் கார்த்திக் பார்த்து கொண்டிருக்க
“ஹலோ….எக்ஸ்கியுஸ் மீ…” என்றவாறு அவன் முன்னால் வந்து நின்றாள் ஷோபா.
“நீங்க…” என்று குழப்பமாக கார்த்திக் கேட்கவும்
அவனை பார்த்து புன்னகத்தவள்
“ஐ யம் ஷோபா…மதுவை தேடி வந்துருக்கீங்க போல..” என்று கூற
அவளை வியப்பாக பார்த்த கார்த்திக்
“உங்களுக்கு மதுவை தெரியுமா??” என்று கேட்டான்.
“நீங்க யாருனு சொல்லவே இல்லையே பாஸ்….” என்று ஷோபா கூறவும்
புன்னகைத்து கொண்ட கார்த்திக்
“ஐ யம் கார்த்திக்…மதுவோட கசின்…” என்று கூற ஷோபா ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.
“இரண்டு வருஷம் கழிச்சு இப்போதான் மதுவை தேடி வர்றீங்களா???” என்று ஷோபா கேட்கவும்
அவளது கேள்வியில் சிறிது மனம் வாட
“இடையில் ஏதேதோ நடந்துடுச்சு….எல்லாம் இப்போதானே சரியாகி இருக்கு….அது தான் உடனே புறப்பட்டு வந்தேன்…” என்று சந்தோஷமாக கூற
அவனை பார்த்து கேலியாக சிரித்துக் கொண்ட ஷோபா
“இனி நீங்க வந்து என்ன ஸார் பிரயோஜனம்??” என்று கேட்கவும் புரியாமல் அவளை பார்த்தான் கார்த்திக்.
“நீங்க என்ன சொல்றீங்க???” என்று கார்த்திக் கேட்கவும்
“மதுவுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு….என் மாமா பையன் கூட…” என்று ஷோபா கூற கார்த்திக்கிற்கு உலகமே தன் சுழற்சியை நிறுத்தியது போல இருந்தது.
“என்….ன சொ…ல்றீ….ங்க???” என்று அதிர்ச்சியாக கார்த்திக் கேட்கவும்
“இன்னைக்கு தான் பிக்ஸ் ஆகி இருக்கு….மதுவோட அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்க…நீங்க வேண்டும்னா அங்க போய் பாருங்க…” என்று ஷோபா கூற கண்கள் கலங்க நின்றான் கார்த்திக்.
“நான் அவ முகத்தை எப்படி பார்ப்பேன்….இரண்டு வருஷமா வராதவன் இப்போ போய் நின்னா அவ சந்தோஷத்தை குழப்புற மாதிரி ஆகிடுமே…மதுவுக்கு எப்போ கல்யாணம்???” என்று குரல் தழுதழுக்க கார்த்திக் வினவவும்
“தெரியாதே….மதுவோட அம்மா ஹாஸ்பிடல்ல இருந்து வந்த அப்புறம் தான் தெரியும்” என்று ஷோபா கூற
“மது எங்க இருந்தாலும் சந்தோஷமாக இருக்கட்டும்….” என்று கூறி விட்டு கார்த்திக் திரும்பி சென்றான்.
“ஒரு நிமிஷம்….” என்று கார்த்திக்கை அழைத்த ஷோபா
“இவ்வளவு தூரம் வந்துட்டு மது கல்யாணத்துக்கு இருக்காம போனா எப்படி ஸார்??? உங்களை பார்த்தா அவங்க சந்தோஷப்படலாம்லே…. இன்பாக்ட் குற்ற உணர்ச்சி இருக்காதுலே உங்களுக்கும்….” என்று கூற சிறிது நேரம் யோசித்தவன் தன் போன் நம்பரை கொடுத்து விட்டு புறப்பட்டு சென்றான்.
மனம் முழுவதும் மதுவின் நினைவுகள் மேலோங்க கண்களை இறுக மூடிக் கொண்டவன் நேராக கோவிலுக்கு வண்டியை செலுத்தினான்.
காரில் இருந்து இறங்கி பிரகாரத்தில் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவன் மீது சிறு குழந்தை ஒன்று வந்து மோதவும் தன் சிந்தனையில் இருந்து விடுபட்டவன் அந்த குழந்தையை தூக்கி கொள்ள அவன் கழுத்தில் வாகாக கையை போட்டு அமர்ந்து கொண்டது அந்த குழந்தை.
சிறிது நேரம் அந்த குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்க அவனது கவலைகள் எல்லாம் தூரம் சென்றிருந்தது.
“தேனு….அங்க என்ன பண்ணுற???தேனு….” என்றவாறு ஒரு பெண் அவர்களை நோக்கி வந்து கொண்டிருக்க நிமிர்ந்து அவளை பார்த்தான் கார்த்திக்.
மஞ்சள் நிற சுடிதார் அணிந்து எளிமையாக தேவதையாக தன் கண் முன்னால் நின்ற பெண்ணை பார்த்து அவனை அறியாமலே எழுந்து நின்றான் கார்த்திக்.
“ஏய்..தேனு…உன்னை எங்க எல்லாம் தேடுறது???” என்று அந்த குழந்தையை தூக்கி கொண்டவள்
“ஸாரி ஸார்….” என்று விட்டு செல்ல கார்த்திக்கின் மனதில் ஏதேதோ சிந்தனைகள் ஆர்ப்பரித்தன.
“ஏய்…ஹரிணி…பாப்பாவை கொடு நான் பார்த்துக்குறேன்…நீ போய் அம்மாவை கூட்டிட்டு வா….” என்று ஒரு பெண் கூறவும்
“சரிக்கா…” என்று விட்டு அந்த பெண்ணிடம் குழந்தையை கொடுத்து விட்டு அவள் சென்று விட கார்த்திக்கும் தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
தான் தங்கி இருந்த அறைக்கு வந்து குறுக்கும் நெடுக்கும் சிந்தனையோடு கார்த்திக் நடந்து கொண்டிருக்க அவனது சிந்தனையை கலைத்தது அவனது தொலைபேசி.
“கார்த்தி…என் மருமகளை பார்த்தியா???” என்று அகிலா கேட்கவும்
அவன் கண் முன்னே ஹரிணியின் முகம் வந்து செல்ல சிரித்து கொண்டே
“ம்ம்ம்….பார்த்தாச்சுமா….” என்று கூறினான்.
“எப்படிடா இருக்கா??? என்னை மன்னிச்சுட்டாளா??? அவ எங்க மன்னிப்பா??? நான் பண்ணது எவ்வளவு பெரிய தப்பு!!!” என்று அகிலா மனம் வருந்தி பேச
அமைதியாக இருந்த கார்த்திக்
“அம்மா மதுவுக்கு கல்யாணம் நிச்சயமாகிடுச்சு….” என்று கூறவும்
“என்னடா சொல்லுற???” என்று அதிர்ச்சியாக கேட்டார் அகிலா.
ஷோபாவை பார்த்து அவள் கூறியது எல்லாவற்றையும் கூறியவன்
“அவ இனியாவது சந்தோஷமாக இருக்கணும்மா….இனி அவ வாழ்க்கையில் நம்ம பிரச்சினையை கொடுக்ககூடாது…அவ கல்யாணம் முடிஞ்சதும் உடனே புறப்பட்டு அங்க வந்துடுறேன்…” என்று கூற மறுமுனையில் அகிலா அழுது கொண்டிருந்தார்.
“எல்லாம் நான் பண்ண தப்பு…அவசரப்பட்டு…என்னால உன் வாழ்க்கை கேள்வி குறி ஆகிடுச்சே கார்த்தி…” என்று அகிலா கூறவும்
“அப்படி எல்லாம் இல்லைமா…இன்னாருக்கு இன்னார்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும்??? மதுவுக்கு இந்த வாழ்க்கை தான் சந்தோஷமாக இருக்கும்…” என்று கார்த்திக் கூற அமைதியாக கேட்டு கொண்டிருந்த சிறிது நேரம் கார்த்திக்கோடு பேசி விட்டு போனை வைத்தார்.
அறையில் இருந்த ஜன்னலினூடாக வானத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கார்த்திக்
“இத்தனை வருஷம் கழிச்சு அம்மா மனசு மாறி என்னை இங்க அனுப்பி வைச்சது எல்லாமே ஏதாவது நன்மைக்கா???” என்று யோசித்து கொண்டிருந்தவன் சிறிது நேரத்தில் உறங்கிப் போனான்.
திடீரென்று கேட்ட ஹார்ன் சத்தத்தில் திடுக்கிட்டு பார்த்து கார்த்திக் அப்போது தான் இத்தனை நேரம் தான் பழைய நினைவுகளோடு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தான்.
தன் போனை எடுத்து அகிலாவிற்கு அழைப்பு மேற்கொண்ட கார்த்திக் நடந்த எல்லாவற்றையும் கூற அடுத்த பிளைட்டில் அங்கு வருவதாக கூறி விட்டு உடனே புறப்பட்டார் அகிலா.
வீட்டுக்கு வந்திறங்கிய மதுவை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்ற வத்சலா அவளை அருளின் அறைக்குள் விட்டு விட்டு வந்தார்.
“மது எங்கம்மா???” என்று அருள் கேட்கவும்
“உன் ரூம்ல தான் இருக்கா அருள்…கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்ணு அனுப்பி வைச்சேன்….மனசளவுல ரொம்ப காயப்பட்டுட்டா….” என்று வத்சலா கவலையுடன் கூற
அவரது கையை பிடித்து கொண்ட அருள்
“அம்மா….மது அவ வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்திச்சுட்டா….இனி அவ எந்த கஷ்டத்தையும் சந்திக்க கூடாதுனு நான் நினைக்கிறேன்…நீயும் அவளுக்கு துணையாக இருக்கணும் மா ப்ளீஸ்….” என்று கூற
அவன் தலையில் செல்லமாக தட்டிய வத்சலா
“மது எனக்கு இன்னொரு பொண்ணு மாதிரி டா….என் பொண்ண நல்லா பார்த்துக்க நீ எனக்கு சொல்லி தரணுமா???” என்று கேட்கவும் சந்தோஷமாக அவரை கட்டி கொண்டான் அருள்.
மறைவாக நின்று அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த சுலோச்சனா
“நான் இருக்குற வரைக்கும் இதெல்லாம் நடக்க விடமாட்டேன் அருள்….உன் கிட்ட இருந்து அவளை துரத்துறது தான் இனி என்னோட வேலை….கூடிய
சீக்கிரம் ஷோபாவுக்கும், உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்….” என்று மனதிற்குள் எண்ணி சந்தோஷம் கொண்டார்.
தொடர்ந்து மன உளைச்சலில் உழன்று கொண்டிருந்த மது பால்கனிக்கு சென்று கீழே தோட்டத்தை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.
“அம்மா…..” என்று அவள் மனம் ஊமையாக அருணாவை எண்ணி அழுது கொண்டிருக்க கண்களோ நிற்காமல் கண்ணீரை சொரிந்து கொண்டிருந்தது.
அருளின்
“எல்லாமுமாக நான் இருப்பேன்….” என்ற ஒரு வார்த்தை அவள் காதில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க சிறிது மனம் சமாதானம் அடைய அறைக்குள் சென்ற மது அப்படியே உறங்கிப் போனாள்.
மறுபுறம் தன் அறைக்குள் முழங்காலின் மேல் தன் முகத்தை புதைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் ஷோபா……