c2
c2
சந்திராழினி – 2
காலச் சக்கரம், பின்னோக்கி சுழன்று சில வருடங்களை விழுங்கிவிட்டிருந்தது. பனி போர்த்திக் கொண்டு உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது கொடைக்கானல் டவுன். ஜீயான் பள்ளி செல்லும் வழியில் அமைந்திருந்த சிறு மேட்டில் அந்த காலனி அமைந்திருந்தது. சிறிது சிறிதாக கட்டப்பட்டிருந்த அழகிய கல்வீடுகள்.
வீட்டின் முன்னால் தவறாது இடம்பிடித்திருந்த பச்சை புல்வெளி, துருபிடித்த இரும்பு கிராதி கேட், கேட்டில் இருந்து வீட்டின் வாசலுக்கு இருக்கும் பத்தடி தூரத்தில் இருபுறமும் பலவண்ண மலர் செடிகள் என்று அந்த சூழலே மனதிற்கு இதமழித்தது.
மாலை ஆறு மணியே ஆகியிருந்த போதும், இருட்டு வேக வேகமாக கவிழ்வதைப் பார்க்க முடிந்தது. அந்த வீட்டின் கடை கோடி அறையில் டியூப் லியட் வெளிச்சம் இரவை பகலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
“இன்னும் எவ்வளவு நேரம் தான் தலை சீவுவ யாழு? போலாம் டீ” என்று சினுங்கிக் கொண்டே தன் அக்கா யாழினி தலை வாருவதை பார்த்துக் கொண்டு கட்டிலின் மேல் அமர்ந்திருந்தாள் சந்தியா.
“போலாம்…..போலாம்….” என்று பத்தாவது முறையாக பின்னிய தலையை அவிழ்த்து மீண்டும் பின்னலிட்டாள் யாழினி.
“எப்படியும் அம்மா உன்னை ஸ்கார்ஃப் கட்டாம வெளிய விடமாட்டாங்க… அப்பறம் எதுக்கு தலையை இத்தனை தடவை சீவற?”
யாழினி பதில் சொல்லாமல், தலை வாருவதிலேயே கவனத்தை செலுத்தினாள்.
“யாழூ…..” என்று ஏதோ கூற வந்த தங்கையை பேசவிடாமல் தடுத்தாள்.
“சும்மா தொன தொனங்காத சந்து……போயி அந்த ராம் தடியன் ரெடியான்னு பார்த்துட்டு வா….. போ” என்று சற்றே காட்டமாக யாழினி கூறவும் சந்தியா எழுந்து பக்கத்துவீட்டை நோக்கி நகர்ந்தாள்.
தன் வீட்டு வாசலில் இருந்து கேட்டிற்கு சாதாரணமாக நடக்காமல், புற்களுக்கு பாத்தி போல் அமைக்கப்பட்டிருந்த செங்கல் வரிசையில் ஏறி, கைகளை இருபக்கமும் நீட்டி பேலன்ஸ் செய்து கொண்டே நடந்தாள் சந்தியா.
“பார்த்து டீ விழுந்திடாத…” என்று காய்ந்த துணிகளை சிட்டவுட்டில் அமர்ந்து மடித்துக் கொண்டிருந்த அம்மா மகேஸ்வரியை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் செங்கல் வரிசையில் ஒவ்வொரு பாதமாக வைத்து நடக்கத் துவங்கினாள்.
“எங்கே போற டீ…”
“ராம் ரெடியாகிட்டானான்னு பார்க்க போறேன்…” என்று கவனத்தை செங்கல் வரிசை மேல் குவித்தபடிக்கே பேசினாள் சந்தியா.
“உன் அக்காகாரி ரெடியாகிட்டாளா?”
“தலை சீவிட்டு இருக்கா…… ராம் ரெடியான்னு போயி பார்த்துட்டு வர சொன்னா..”
“வழுக்கி விழுந்திடாம பார்த்து போ….” என்று அம்மா கூறியதை லட்சியம் செய்யாமல், கேட் கதவை திறந்து வெளியே ரோட்டிற்கு வந்தாள்.
இங்கிருந்து பத்தடி தூரத்தில் தான் ராமின் வீடு இருந்தது.ஆயினும், கொஞ்சம் செங்குத்தான மேட்டின் மேல் ஏற வேண்டும்.
சந்தியா கைகளை கட்டிக் கொண்டு, அந்த சிறிய தூரத்தை கடந்தாள். ராமின் வீடும் ஏறக்குறைய சந்தியாவின் வீட்டைப் போன்றது தான். என்ன வெளியே ஒரு மாருதி ஆல்டோ வண்டி நின்றிருந்தது மட்டும் தான் மாற்றம்.
சந்தியா கேட் கதவை திறக்கும் சத்தம் கேட்டு, ராமின் தங்கை ரம்யா கண்ணாடிக் கதவை மூடியிருந்த திரை சீலையை விலக்கிப் பார்த்தாள். ரம்யாயும் சந்தியாவும் ஒரே வகுப்பு தான். ஆனாலும் இருவருக்கும் என்றுமே ஒத்துப் போனதில்லை.
சொல்லப்போனால், ராம், யாழினி, சந்தியா, ரம்யா நால்வருமே சிறுவயது முதலே ஒன்றாய் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். ராமும் யாழினியும் இப்போது பனிரெண்டாம் வகுப்பு, சந்தியாவும், ரம்யாவும் ஒன்பதாம் வகுப்பு. ஆனால், ராமிற்கும் யாழினிக்கும் இருந்த ஒட்டுதல், ஏனோ சிறுமிகள் இருவருக்கும் இருக்கவில்லை.
திரை சீலையை தள்ளிப் பார்த்துவிட்டு கதவை திறவாமலேயே, “ராம்..உன் ஃப்ரெண்டு வந்திருக்கா” என்று கத்திக் கொண்டே ரம்யா மீண்டும் உள்ளே சென்று விட்டிருந்தாள். கதவைத் தட்டலாம் என்று சந்தியா நினைக்கும் போதே, உள்ளிருந்து ராம்பிரசாத் புன்னகைத்த வண்ணம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
“அங்கிள் வந்திருக்காரா?” என்று போர்டிக்கோவில் நின்றிருந்த மாருதி ஆல்டோவைக் பார்த்துக் கொண்டே சந்தியா வினவினாள்.
“ம்ம்ம்….ஆமா…. காலையிலேயே வந்துட்டாரு..” என்று பதிலளித்த ராம், சந்தியாவின் பின்னாலேயே கேட் கதவிற்கு அருகில் வந்துவிட்டிருந்தான்.
“நீ ரெடியான்னு அக்கா பார்த்துட்டு வர சொன்னா..”
“எனக்கு என்ன மேக்கப் பண்ண ஒரு மணி நேரமா ஆகப் போகுது…” என்று வினவிய ராம், வீட்டின் உள்பக்கம் திரும்பி, “அம்மா நான் போயிட்டு வர்றேன்…”என்று மொழிந்தான்.
“ரொம்ப இருட்டறதுக்குள்ள சீக்கரம் வந்திருங்க……” என்று கதவருகில் எட்டிப் பார்த்த ராமின் அன்னை விஜயா, கையை அசைத்தாள். கண்ணாடி ஜன்னலின் பின்னால் நின்று அண்ணன் செல்வதை வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றிருந்தாள் ரம்யா.
“அங்கிள் பாவம் இல்லை…வாராவாரம் மதுரையில் இருந்து இங்கே டிராவல் பண்ணனும்….. “ என்று ராமின் வேக நடைக்கு ஈடு கொடுத்தபடிக்கே சந்தியா வினவினாள்.
“என்ன பண்ணறது சந்து…. எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அப்பாவுக்கு இங்கே டிரான்ஸ்ஃப்ர் கிடைக்கலை…”
“உங்க அம்மாவும் வர்கிங்க தானே….அவங்க ட்ரை பண்ணலையா?”
“அம்மா பத்தி தான் உனக்கு தெரியுமே….பயங்கற அடமெண்ட்…..அம்மா ட்ரை பண்ணியிருந்தா கிடைச்சிருக்கும்,,,,ஆனா அவங்களுக்கு கொடையை விட்டு போற ஐடியா சுத்தமா இல்லை.. என்ன பண்ணறது”
“அதுக்காக அங்கிள் ரொம்ப பாவம்…. வாராவாரம் மதுரையில இருந்து வந்துட்டு போனா டையர்டா இருக்கும் இல்லை ராம்…”
“அப்பா எஞ்சாய் பண்ணி தான் வர்றாரு சந்தூ… வீக்லி ட்ரிப் மாதிரி தான் வர்றாரு தெரியுமா…ஹி இஸ் வெரி ஹேப்பி பர்சன் சந்தூ…”
“ம்ம்ம்ம்…தெரியும்…அப்படியே உங்க அம்மாவுக்கு ஆப்போஸிட்…..”
“ரம்யாவும் இப்போ அம்மா மாதிரி வெடுக்கு வெடுக்குன்னு தான் பேசறா தெரியுமா…அப்படியே அம்மாவோட ஜெராக்ஸ் அவ”
“அவளுக்கு என்மேல பயங்கற கோவம் ராம்….. ஏன்னு தெரியலை….”
“விடு…..சரியா போயிடும்…”
ராமும் சந்தியாவும் பேசிக் கொண்டே சந்தியாவின் வீட்டு கேட் அருகில் வந்துவிட்டிருந்தனர்.
“உள்ள வா ராம்….” என்று சொல்லிக் கொண்டே, “யாழூ ராம் வந்தாச்சு…நீ ரெடியா?” என்று கத்திக் கொண்டே உள்ளே அக்கா என்ன செய்கிறாள் என்று பார்க்க சென்றாள் சந்தியா. ராம் சிட்டவுட்டில் மகேஸ்வரியின் அருகில் இருந்த காலி டீபாயில் அமர்ந்து கொண்டான்.
“டீ சாப்படறியா ராம்?” என்று சந்தியாவின் அன்னை மகேஸ்வரி வினவினாள்.
“வேணாம் ஆன்ட்டி…இப்போ தான் குடிச்சேன்…”
“அப்பா வந்திருக்காரா?”
“ம்ம்ம்…காலையில வந்தார்…. அங்கிள் இன்னும் கடையில இருந்து வரலியா ஆன்ட்டி?”
“இல்லைப்பா சீசன் டைம்….. எப்படியும் வர மணி எட்டாகிடும்…”
யாழினியும், சந்தியாவும் வீட்டினுள் இருந்து வெளியே வந்தனர். “ஹாய் ராம்…” என்று யாழினி சிரித்துக் கொண்டே மொழிந்தாள்.
“ஸ்கார்ஃப் கட்டலையா டீ…பனி பேயுது பாரு..உனக்கு சட்டுன்னு சளி புடிச்சுக்கும்….”
“மா….வேணாம்ம்மா….சீக்கரமா வந்திர்றேன்…ப்ளிஸ்…” என்று மொழிந்தவண்ணம் வீட்டை விட்டு மூவரும் கிளம்பினர்.
“ஏண்டீ கோவிலுக்கு போறதுக்கு எதுக்கு இவ்வளவு மேக்கப்….” என்று ராம் யாழினியிடம் வம்பிழுத்தான்.
“உனக்கு முக்கியமான ஒரு விஷயம் சொல்லறேன்…. “என்று யாழினி ராமிடன் சேர்ந்து நடந்தாள். அக்காவால் சட்டென ஒதுக்கப்பட்ட சந்தியா, கொஞ்சம் மெதுவாகவே இருவரையும் பின் தொடர்ந்து நடந்தாள்.
சிறிது தூரம் இறக்கத்தில் நடந்து, பின்னர் கொஞ்சம் மலைமேடான பகுதியில் ஏறி, பீஸ் பேலஸ் காட்டேஜைக் கடந்தால், அடுத்த திருப்பத்தில் சில பல கடைகளை அடுத்து அந்த பிரபல முருகன் கோவில் வந்துவிடும்.
யாழினியும், ராமும் முன்னால் நடக்க, ஓரடி இடைவெளியில் சந்தியா இருவரையும் பிந்தொடர்ந்தாள். பீஸ் பேலஸ் காட்டேஜைக் கடக்கும் போது, குல்லா தாத்தா கேட் வாசலில் அமர்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. மூவரையும் பார்த்து பொதுவாக கை அசைத்து சிரித்தார்.
“என்ன பிள்ளைகளா கோவிலுக்கா?”
“ஆமா தாத்தா….” என்று சந்தியா தான் பதிலளித்தாள்.
“இவரு குல்லாவை கழட்டவே மாட்டாரா ராம்?” என்றாள் தன் தலைமுடியை பத்தாவது தடவையாக சரி செய்தபடிக்கு.
“அதான் குல்லாவால ஃபேமஸ் ஆகி, எல்லாரும் குல்லா தாத்தான்னே கூப்பிடறாங்க..”
பேசியபடியே மூவரும் பீஸ்பேலஸ் காட்டேஜைக் கடந்து கடைவீதி இருந்த தெருவிற்குள் நுழைந்ததும் யாழினி விசித்திரமாக நடந்து கொண்டாள். யாழினியின் நடையில் ஒரு வித துள்ளல் ஒட்டிக் கொண்டது, இடுப்பை வேறு வெட்டி வெட்டி சினிமாத்தனமாக நடந்தாள்.
“யாழூ கால் சுளுக்கிருச்சா டீ…..ஏன் ஒரு மாதிரி வித்யாசமா நடக்கற?” என்று சந்தியா அப்பாவித்தனமாய் கேட்டதை லட்சியம் செய்யவே இல்லை யாழினி.
அதற்கு பதிலாக ராமிடம் திரும்பிய யாழினி,
“ராம் நீ சந்தியா கூட நடந்து முன்னால போ… நான் அர்ச்சனை டிக்கெட் வாங்கிட்டு வந்திடறேன்..” என்று மெதுவாக பின் தங்கிக் கொண்டாள்.
வழக்கமாக அர்ச்சனை எல்லாம் செய்ததில்லை. சாமி கும்பிட்டு, பிரசாதத்தி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றே உண்பர். என்னவாயிற்று இன்று யாழினிக்கு என்று ராமும் கூட யோசித்தான். இதற்கான காரணம் கூடிய விரைவிலேயே வெளிப்பட்டது.
அர்ச்சனை தட்டுடன் கோவிலுக்குள் நுழைந்த யாழினி தனியாக வரவில்லை. அவளுடன் இன்னொரு வாலிபன் உடன் நடந்துவந்தான். உயரமாய், ஜிம் பாடியுடன், தலைமுடி நுனிகளில் மெல்லிய ப்ரென் கலர் செய்து, பார்க்கவே கொஞ்சம் முரடாகத் தெரிந்தான்.
அவனுடன் நடந்து வருகையில் யாழினியின் முகத்தில் அவ்வளவு சிரிப்பு பொங்கியது. அதே போல் இடுப்பு வெட்டும் நடையுடன் அருகில் வந்தாள்.
“ராம் இது வசந்த்…. செயின்ட்.பீட்டர்ஸ் ஸ்கூல்ல டுவல்த் படிக்கறான்.” என்று ராமிற்கு அறிமுகம் செய்து வைத்தாள் யாழினி.
“வசந்த் இது ராம். என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு…எங்க பக்கத்து வீடு…அப்பறம் இது என் சிஸ்டர் சந்தியா. நையந்து படிக்கறா” என்று பரஸ்பரம் அறிமுகப்படுத்தினாள் யாழினி.
சந்தியாவிற்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. எதுவும் பதில் சொல்லாமல் ராமின் அருகில் அமைதியாக நின்று தன் அக்காவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வசந்த் எதை பற்றியும் கவலைப் படாமல், யாழினியைப் பார்ப்பதையும் அவளுடன் சிரிப்பதையும் மட்டுமே தன் ஒரே வேலை என்ற நினைப்புடன் இருந்தான்.
முருகர் சன்னதிக்கு கூட இருவரும் சேர்ந்தே தான் சென்றனர். ராமும் சந்தியாவும் இரண்டு அடி பின்னால் தொடர்ந்தனர்.
“இவனை எதுக்கு யாழூ வரசொல்லியிருக்கா ராம்?” என்று சந்தியா ராமின் காதில் கிசுகிசுத்தாள். ராம் பதில் சொல்லாமல், யாழினியையும் புதியவனையும் கவனிப்பதிலேயே கண்ணாயிருந்தான்.
முருகர் தரிசனம் முடிந்து, கோவிலை மூன்றி முறை சுற்றி வந்து, பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளி வாசலை நோக்கி நகரத்துவங்கும் முன்னர்,
“ராம், நீயும் சந்தியாவும் கோவில்ல டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க…. நான் ஒரு நோட் வாங்கனும்…. வசந்த் கூட கடைவீதி வரைக்கும் போயிட்டு வந்திடறேன்” என்று பதிலுக்கு காத்திராமல் வசந்துடன் வெளியே சென்றுவிட்டாள்.
“சந்தூ…அப்படி உட்காரலாம் வா” என்று பேந்த பேந்த நின்றிருந்த சந்தியாவுடன் கோவில் பிரகாரத்தில் அமர்ந்தான் ராம்.
“என்ன ராம் பண்ணறா இவ?”
“எனக்கும் புரியலை. ஒரு வேளை லவ் பண்ணறாளோ என்னமோ…”
“லவ் பண்ணாறாளா? உங்கிட்ட அப்படியா சொன்னா?”
“இல்லை…ஆனா முக்கியமா ஒரு விஷயம் சொல்லறேன்னு சொன்னா”
“அப்போ நிஜமா லவ்வா பண்ணறா? டுவல்த் படிக்கறான்னு அம்மா இவளை எப்படி தாங்கறாங்க…. வீட்டில டி.வி கனெக்ஷன் எல்லாம் கூட கட்பண்ணிட்டாங்க….ஐய்யோ அம்மாக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா? அவ்வளவு தான் அடி பின்னிருவாங்க“
“ஏ…ஏ…நான் ஏதோ நினைப்புல சொன்னேன்…. அவளா வந்து என்ன சொல்லறான்னு கேட்கலாம்…ஜஸ்ட் ஃப்ரெண்டா கூட இருக்கலாம் இல்லை… வீணா ஏன் பயப்படனும்…”
இருவரும் மெளனமாக யாழினியின் வருகைக்கு காத்திருந்தனர். பதினைந்து நிமிடம் கழித்து மிண்டும் வந்தவள் முகத்தில் அவ்வளவு புன்னகை.
வசந்துடன் சிரித்து சிரித்து வாய் சுளுக்கிக் கொள்ளும் அளவிற்கு முகத்தை ஈஈஈ என்று வைத்துக் கொண்டே இருவர் அருகிலும் வந்தாள்.
“நோட் வாங்கனும்னு சொன்னே…நோட்டே காணோம்..”என்று கேள்வி கேட்ட சந்தியாவை முறைத்தாள் யாழினி. நிலைமையை சகஜமாக்க எண்ணி,
“இந்தா பாப்பா..உனக்கு சாக்லேட் ஐஸ்கிரீம் பிடிக்கும்னு யாழூ சொன்னா” என்று கவரில் இருந்து ஐஸ்கிரீமை எடுத்து சந்தியாவிடம் நீட்டினான். வசந்த் தன்னை பாப்பா என்று அழைத்தது சந்தியாவிற்கு பிடிக்கவில்லை.
சந்தியா ஐஸ்கிரீமை வாங்காமல், அக்காவை ஒரு பார்வையும், ராமை ஒரு பார்வையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
சந்தியா வாங்கமாட்டாள் என்று தீர்மானமாகத் தெரிந்த பின்னர், ராம் கையை நீட்டி வசந்திடம் இருந்து ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டான்.
“ஒ.கே யாழூ…டைம் ஆச்சு…. நாளைக்கு பார்கலாம் பை… சீயூ ராம். பை…பாப்பா” என்று மூவரிடமும் விடியபெற்றுக் கொண்டு கடைவீதி கூட்டத்தில் கலந்து மறைந்து போனான் வசந்த்.
“யாரு டீ அவன்?உனக்கு எப்படி பழக்கம்?”என்று சந்தியா கேட்க நினைத்த கேள்விகளை ராம் அடுக்கினான்.
“அதான் சொன்னேனே…பேரு வசந்த்…. போன மாசம் எக்ஸாம் டைம் மேனஜ்மெண்ட் பத்தி ஒரு செமினார்க்கு செயிட்.பீட்டர்ஸ் ஸ்கூல் கூட்டிட்டு போனாங்கள்ள… அப்போ பழக்கமானான்… ஸ்மார்ட்டா இருக்கான்ல ராம்“ என்று தங்கை அருகில் நின்றதை லட்சியம் செய்யாமல், ராமிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“நீ அவனை லவ் பண்ணறியா யாழூ…அம்மாக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?” என்று கோபத்துடன் சந்தியா கேட்கவும் தான் யாழினிக்கு சந்தியாவின் நினைவு உருத்தியது.
“ப்ளிஸ் டீ சந்தூ….அம்மாட்ட இதுபத்திலாம் சொல்லாத டீ…எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா சொல்லு…என் செல்ல தங்கச்சுயில்லை” என்று ராமிடம் இருந்து தன் கவனத்தை திருப்பி சந்தியாவிடம் செலுத்தினாள்.
“எனக்கு அவனை பிடிக்கவேயில்லை…. இதுல என்னை பாப்பான்னு வேற கூப்பிடறான்.” என்று தன் போக்கில் சந்தியா பேசிக் கொண்டிருந்தாள்.
“கொஞ்ச நேரம் சும்மா இரு சந்தூ….” என்று சந்தியாவை அடக்கிய ராம், “நீ அவனை பத்தி சொல்லு யாழூ? எந்த ஊர் அவன்? லோக்கலா?”
வசந்தைப் பற்றிய கேள்வி என்றதும், யாழினி தங்கையை சமாதானப்படுத்த வேண்டுமே என்ற கவலை மறந்து மகிழ்ச்சியுடன் பதில் சொல்லத் துவங்கினாள்.
“வசந்த் ஊரு தேனியாம். அப்பா, அம்மா எல்லாரும் அக்ரிகல்சர் பண்ணறாங்க… ஒரு சிஸ்டர் இருக்கா…அவ தேனியில படிக்கறா…”
“எவ்வளவு நாளா அவனைத் தெரியும் ?”
“செமினார் அன்னைக்கு கொஞ்சம் பேசினேன். அப்பறமா தினமும் ஸ்கூல் விட்டதும் பஸ் ஸ்டாப்பில நிப்பான்.. அப்போ கொஞ்சம் பேசுவான்…. கோவிலுக்கு கூட எனக்காக மூனு வாரமா வர்றான்?”
“மூனு வாரமும் அவன் நாம வர்றாப்போ கோவிலுக்கு வர்றானா?” என்று ராம் கேட்டதற்கு யாழினி ஆமாம் என்று மட்டும் தலை அசைத்தாள்.
மூவரும் பேசிக் கொண்டே பிஸ்பேலஸ் காட்டேஜ் தாண்டி வந்துவிட்டிருந்தனர். அடுத்த ஏற்றம் ஏறி இறங்கினால், வீடு வந்துவிடும்.
“எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்க தானே ரெண்டு பேரும்?”என்று ராமையும் சந்தியாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றிருந்த யாழினியைப் பார்க்க பாவமாக இருந்தது ராமிற்கு.
“நெஜம்மாவே அவனை நீ லவ் பண்ணறியா யாழூ?” என்று ராம் கேட்டதற்கு யாழினி வெட்கப்பட்டுக் கொண்டே தலையை அசைத்தாள்.
“சொல்லு ராம்…எனக்கு ஹெல்ப் பண்ணுவேல்ல….” என்று மீண்டும் கேள்வி கேட்டாள்.
“டுவல்த் தான் படிக்கற நீ……நியாபகம் இருக்கா இல்லையா?”என்று சந்தியா எரிச்சலுடன் கூறவும், யாழினிக்கு முகம் சுண்டிப் போயிற்று. ராமிற்கும் என்ன பதில் சொல்லி யாழினிக்கு புரியவைப்பது என்று தெரியவில்லை.
மூவரும் வீட்டு வாசலை அடைந்திருந்தனர். பெண்கள் இருவரும் அவர்களது வீட்டை நோக்கி அடி எடுத்து வைக்கவும்,
“சந்தூ ..ஒரு நிமிஷம் இங்க வா”என்று சந்தியாவை ராம் அழைத்தான்.
“பாரு சந்தூ… யாழூ ஏதோ புரியாம பேசறா….அம்மாகிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்லாத சரியா…. விஷயத்தை பெரிசு பண்ண வேண்டாம், அப்பறம் யாழினியோட ஸ்டடீஸ் தான் டிஸ்டர்ப் ஆகும்… நான் யாழினிட்ட பேசி புரியவைக்கப் பார்க்கறேன்” என்று ராம் சின்ன பெண்ணிற்கு அறிவுரை சொல்வதைப் போல் கூறினான். சந்தியாவும் மறுபேச்சு பேசாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு அக்காவை பிந்தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தாள்.
ராம் பெண்கள் இருவரும் வீட்டிற்குள் சென்ற பின்னர், மெதுவாக தன் வீட்டை நோக்கி நகர்ந்தான்.
வீட்டில் இரு மகள்களின் வரவையும் அம்மா மகேஸ்வரி எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தாள்.
“சாமிக்கு அர்ச்சனை பண்ணீங்களா? கையில என்ன ஐஸ்கிரீமா? யார் வாங்கிக் கொடுத்தா?”என்று சந்தியாவின் கைகளில் இருந்த ஐஸ்கிரீமைக் கண்டு அம்மா கேட்கவும் சந்தியா என்ன பதில் சொல்வது என்று ஒரு கணம் திணறிப் போனாள்.
“சந்தூ கேட்டான்னு ராம் வாங்கிக் கொடுத்தான்ம்மா…”என்று யாழினி கூசாமல் பொய் சொன்னதை நம்பிய அன்னை அதற்கு மேல் எதும் துருவி கேட்கவில்லை.
சந்தியாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. எப்போதுமே யாழினி அக்கா எந்த உதவியும் செய்தது இல்லை. சொன்ன வேலை செய்யவில்லை, டெஸ்ட்டில் மார்க் கம்மி என்று அப்பா திட்டும் போது கூட இடையில் பேசி எதுவும் சமாதானம் செய்ய மாட்டாள். இனிமேல் அப்படி இருக்காதோ என்ற எண்ணம் உதித்தது,
“இனிமேல் அக்காவை நல்லா வம்பிழுக்கலாம்”என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் சந்தியா. இதே எண்ணத்துடன் அறைக்குள் நுழையவுமே சந்தியாவின் அல்பை சந்தோஷம் பனியில் கரைந்த சிற்பமானது
“அம்மா கேட்டா ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தானே…இது கூட நான் சொல்லனுமா?” என்று உள்ளே நுழையவுமே எகிறத் துவங்கினாள்.
“என்ன சொல்லறதுன்னு தெரியலை சரியா…உன்னை மாதிரி வாயைத் திறந்ததுவுமே பொய் சொல்ல வரலை…”
“என்ன…அம்மாட்ட சொல்லி பூச்சி காட்டலாம்ன்னு நினைக்கறியா? நீ என்னை பத்தி சொன்னா நான் உன்னை பத்தி சொல்லுவேன்…”
“என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு….என்ன இருக்கு?” என்றாள் சந்தியா தன் பங்ககிற்கு யாழினியுடன் சரிக்கு சமமாக பேசியபடி.
“ம்ம்ம்ம்..உன் ஃப்ரெண்டு திவ்யாவும் உங்க கிளாஸ் ஜேம்ஸூம் லவ் பண்ணறாகள்ள….அதை சொல்லுவேன்…”
“போய் சொல்லு….. எனக்கு என்ன பயமா? அவங்க தான லவ் பண்ணறாங்க…. நான் என்ன பண்ணேன்..”என்று சந்தியா வார்த்தையாக கேட்ட போதும் உள்ளுக்குள் அவளுக்கு உதரலெடுக்கத் துவங்கியது.
“ம்ம்ம்..இந்த விஷயம் தெரிஞ்சும் நீ திவ்யா கூட பேசறல்ல…. அதை அம்மாட்ட சொல்லட்டா? உன் பெஸ்ட் ஃப்ரெண்டு திவ்யா தான…அதை சொல்லட்டா?”
“சொல்லு போ….நானும் வசந்த் பத்தி எல்லாமே அம்மாட்ட சொல்லறேன்…. ராமும் எனக்கு சப்போர்ட் பண்ணுவான்… போ..சொல்லு…”என்றாள் சந்தியா.
யாழினிக்கு கொஞ்சம் பயம் அப்பிக் கொண்ட போதும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “ராம் என்னோட ஃப்ரெண்டு…எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவான்.” என்று ஆணித்தரமாக யாழினி கூறினாள்.
சந்தியாவிற்கும் தெரியும், ராம் கண்டிப்பாக யாழினிக்கு தான் உதவுவான் என்று. அதனால் அதற்கு மேல் அவளுக்கு என்ன சொல்லி அக்காவை பயமுறுத்துவது என்று தெரியவில்லை.
“இத பாரு சந்தூ…அம்மாகிட்ட வசந்த் பத்தி எதுவும் சொல்லக் கூடாது. ப்ராமிஸ் பண்ணு…. உன் பிசிக்ஸ் புக்கை எடுத்துட்டு வா…ப்ராமிஸ் பண்ணு..” என்று சந்தியாவிடம் பிசிக்ஸ் புத்தகத்தின் மீது சத்தியம் வாங்கிக் கொண்ட பின் தான் அமைதியானாள் யாழினி.
அடுத்து வந்த நாட்கள் யாழினியைப் பொருத்தவரையில் மகிழ்ச்சியாகவே கழிந்தது. மாலை பள்ளி முடிந்ததும் எப்போதும் தங்கையுடன் வீட்டிற்கு வருபவள், பஸ் ஸ்டாப்பில் தனக்காக காத்திருக்கும் வசந்தைப் பார்த்து பூரித்து போவாள்.
“இவனுக்கு மட்டும் ஸ்கூல் சீக்கிரம் முடிந்து விடுகிறதா என்ன? எப்படி செயிண்ட்.பீட்டர்ஸில் இருந்து மூஞ்சிக்கல்லில் இருக்கும் ஜியான் பள்ளிக்கு பத்து நிமிடத்தில் வரமுடிகிறது?” என்று யோசிப்பாள். அக்காவுடன் சிரித்துக் கொண்டு நடந்து வரும் வசந்திடம் ஒரு முறை கேட்டே விட்டாள்.
“அது என் ஃப்ரெண்டு கிட்ட பைக் இருக்கு…. அவன் கொண்டு வந்து விடுவான்” என்று வெகு பெருமையாகக் கூறினான் வசந்த்.
ஒரு நாள் பள்ளியில் நண்பனுக்கு பிறந்த நாள் என்று கவரில் கேக் கொண்டு வந்து, “இந்தா பாப்பா” என்று கொடுத்தான். இன்னொரு நாள் இரண்டு டைரிமில்க் வாங்கி வந்து சந்தியாவின் கையில் திணித்தான்.
“இல்லை வேண்டாம்…”என்று சந்தியா மறுத்த போதும், “பரவாயில்லை பாப்பா…வாங்கிக்க…உனக்காகத்தான் கொண்டுவந்தேன்”என்று சிரித்துக் கொண்டே கூறும் வசந்தை கொஞ்சம் போல சந்தியாவிற்கு பிடித்தது.