Charkarai-Nilavu2

நிலவு – 2

நிலவின் வளர்பிறை

தேய்பிறை போலவே

நம் வாழ்க்கையின் கஷ்டங்களும்…

எதுவும் மாறும் என்ற நல்ல

எண்ணத்துடன் எதிர்நீச்சல் போடுவோம்…

தயானந்தன் இருபத்தியெழு வயது இளைஞன், மாநிறத்துடன் கூடிய களையான முகம். ஆறடி உயரம், இக்கால தலைமுறைக்கே உரிய துறுதுறு சுபாவம். அதனை தனது பணியில் காண்பித்து எப்பொழுதும் உற்சாகத்துடன் வலம் வருபவன். உழைப்பு ஒன்றையே உயிர் மூச்சாய் கொண்டவன் என்று இவனது உடற்கட்டும் முகவெட்டும் அப்பட்டமாய் காட்டிக் கொடுத்து விடும்.

கண்களில் எப்பொழுதும் ஒரு கனிவு தொற்றிக் கொண்டிருக்கும். முழுக்க முழுக்க பெண்களைச் சார்ந்தே வளர்ந்ததால் மட்டுமே வந்த உபயம் இது. மூன்று சகோதரிகளின் உடன்பிறப்பாக பிறந்ததால், இயல்பிலேயே வந்த பொறுப்புணர்ச்சி, திருமணத்திற்கு பிறகு இன்னும் கூடியிருந்தது. கோபத்தையும் பக்குவமாக வெளிப்படுத்தும் பண்பாளன்.

தனது பதினைந்து வயதிலேயே தந்தையை இழந்தவனுக்கு, பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படிக்க சாத்தியமானது. கடன்சுமையோடு கிராமத்தில் இருந்து பிழைப்பைத் தேடி குடும்பத்துடன் சென்னை வந்தவனுக்கு, சுத்திகரிக்கபட்ட குடிநீர்(மினரல் வாட்டர்) வினியோகம் செய்யும் தொழில் நன்றாக கைகொடுத்தது.

கிண்டியைச் சுற்றிலும் இருக்கும் பத்து ஏரியாக்களில் உள்ள கடைகள், மருத்துவமனைகள் அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் என அனைத்து இடங்களிலும், மொத்த விலைக்கு ஒரு லிட்டர் முதல் இருபது லிட்டர் கேன் வரை வினியோகம் செய்பவன். தனக்கான வாடிக்கையாளர்களை கணிசமாய் பிடித்து வைத்திருப்பவன்.

தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கிண்டியை மையமாக வைத்து தாம்பரம், வடபழனி, சைதாபேட்டை வரையுள்ள பகுதிகளை மூன்று பிரிவுகளாக பிரித்து, அங்கே உள்ள வீடுகளுக்கு, கேன்குடிநீரைநேரடியாக சப்ளை செய்து வருபவன்.

இடத்திற்கு தகுந்தாற் போல், விலை நிர்ணயம் செய்து லிட்டர் இருபது முதல் நாற்பது வரை வசூல் செய்து வருகிறான். வாடகை குட்டியானையில் தன் தொழிலுக்கென வலம் வரும் இவனுக்கு, வலது கரமாக இருப்பவன் இருபத்தியிரண்டு வயதான குமரன்.

காலை எட்டு மணிக்கு கேன்போட ஆரம்பிப்பவனின் தினப்படி வேலை, குடிநீர் வினியோகம் முடிந்து, கணக்கு பார்த்து, அன்றைய தினத்தை முடித்து வைக்கும் பொழுது இரவு பதினொன்றைத் தொட்டு விடும்.

முந்தைய நாளின் கணக்கினை, அன்றே முடித்து வைத்தால் மட்டுமே, மறுநாள் காலையில் கேன் கொள்முதல் இடத்தில் கணக்கை ஒப்படைத்து விட்டு, மீண்டும் அன்றைய தினத்திற்கு புதிதாக கேன் எடுக்க முடியும்.

வாரக்கணக்கு வைத்துக் கொள்ளலாம்தான். ஆனால் அது கொஞ்சம் பெரிய தொகையாகிப் போகும். அவனுக்கும் பணத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு சுற்றுவதில் அத்தனை விருப்பம் இல்லை.

முதல்நாள் இருப்பை காலி செய்து, கணக்கையும் நேர் செய்தால் மட்டுமே மறுநாள் நிம்மதியாக தொழில் பார்க்க முடியும். சென்னைக்கு வந்த ஒன்றரை வருடத்தில் இவன் கற்றுக் கொண்ட மிக முக்கிய பாடம் இதுதான். எக்காரணம் கொண்டும் கடன் இருப்பை நீட்டிக் கொள்வதில் தயானந்தனுக்கு சற்றும் விருப்பமில்லை.

ஏற்கனவே ஏறியுள்ள சுமைகளை இறக்கி வைக்கவே மூச்சு விடாமல் உழைத்துக் கொண்டிருப்பவனுக்கு,மேலும் புதிய கடன் வாங்கி மூச்சு முட்டிக் கொள்ள துளியும் எண்ணமில்லை.

சென்னைக்கு வந்த புதிதில் வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கு, கடுமையான உழைப்பைக் கொட்டவென தயானந்தன் தீயாய் வேலை பார்த்துக் கொண்டிருக்க, இவளது தங்கை சிந்து, காதல் பாடத்தை சத்தமில்லாமல் மிகத் தீவிரமாக கற்றுத் தேர்ந்திருந்தாள்.

மன உளைச்சல், வாழ்விடம் மாற்றிக் கொண்டது போன்றான அலைக்கழிப்புகள் மரகதத்தை வெகுவாக பாதிக்க, மகளை கண்காணிக்க தவறியிருந்தார் அந்த கிராமத்துத் தாய். வயிற்றின் தணலை மறந்து விட்டதைப்போல்,வயதுப் பெண்ணை பார்த்துக் கொள்ளத் தவறினால், அதன் பலன் கைமேல் கிடைக்கும் என்பது சிந்துவின் விஷயத்தில் நிரூபணம் ஆகியது.

கீழ் போர்ஷனில் குடியிருக்கும் மிதுனாவின் தம்பி,  இருபத்திமூன்று வயது நிரம்பிய பாஸ்கரும்இருபது வயதான சிந்துவும், ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் கொண்டிருக்க, தங்கள் அன்பின் தீவிரத்தை திருமணத்திற்கு முன்பே தங்களுக்கு வரப்போகும் வாரிசின் மூலம் தெரிவித்து விட, பெரும் சிக்கலும் குழப்பமும் இருவர் வீட்டிலும் குடிகொண்டது.

வயதுக்கு வந்த பெண், அதுவும் மகனை விட மூத்தவளாக மிதுனா திருமணம் முடிக்காமல் வீட்டில் இருக்க,பாஸ்கருக்கு தற்சமயம் திருமணம் செய்வது அத்தனை சாத்தியமில்லை என்று அவர்களின் தாய் மஞ்சுளா உறுதியாகப் பேசிவிட, அதன் விளைவு மிதுனாவிற்குதயானந்தனுடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

ஐந்தரை அடியில் எலுமிச்சை நிறத்தில் நவீன யுக நங்கையாக, தனது இருபத்தியைந்து வயது வனப்புடன் பார்க்க நளினமாய் இருந்தாள் மிதுனா. முதுகு வரை படர்ந்த கூந்தலும், முன்புறம் அழகுக்கென சற்றே வெட்டி விடப்பட்ட கற்றை முடியும் அவள் முகத்திற்கு அழகு சேர்த்தது.

கண்களில் சதா குடி கொண்டிருக்கும் அலட்சிய பாவனை, காண்போரை பத்து அடி தள்ளி நிறுத்தும். எப்பொழுதும் நேர்கொண்ட பார்வை,யாருக்கும் அஞ்சாமல் மனதில் தோன்றியதை உடைத்து பேசி,தன் வாதத்தை நியாயப் படுத்துபவள். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசவில்லை என்றாலும்மெத்தப் படித்த பெண்ணின் தோரணையுடன், அனைத்து விடயத்தையும் எளிதில் கிரகித்து விடுபவள்.

தனது கிராமத்து பழக்க வழக்கத்திற்கும், மிதுனாவின் நடையுடை பாவனைக்கும் சற்றும் பொருந்தாது என்று பார்த்த பார்வையிலேயே புரிந்து கொண்டிருந்தான் தயானந்தன். ஆனாலும்குடும்ப கௌரவத்தை, தன்மானத்தை முடிந்த அளவு காப்பாற்றிக் கொள்ள, கிராமத்தில் வளர்ந்தவனான தயானந்தனுக்கு அந்த திருமணத்தை ஏற்பதைத் தவிர, வேறு வழி ஒன்றும் தெரியவில்லை.

மகளின் மானம் காக்க, மகனை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று திடமாக நம்பிய மரகதம், மிதுனாவின் சம்மதத்தை எவ்வாறு பெறுவது என்று தவித்துக் கொண்டிருந்த வேளையில், தானாகவே முன்வந்து திருமணத்திற்கு சம்மதத்தை தெரிவித்தவள் மிதுனா.

“எங்க குடும்பத்தோட மானமும் இந்த கல்யாணத்துல  அடங்கியிருக்கு. நேருக்கு மாறா ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, போகப்போறது உங்க பொண்ணோட பேர் மட்டுமில்ல, என் தம்பியோட எதிர்காலமும்கூட. என்னோட கல்யாணத்தால ரெண்டு குடும்பத்தோட கௌரவம் காப்பாற்றப்படுதுன்னா, அதுல எனக்கு சந்தோஷம்தான்” என்றவளை அந்த சமயத்தில் தன் குலசாமியாகவே பார்த்த மரகதம், அன்றே மருமகளை மகளாக பாவிக்கத் தொடங்கி விட்டார்.

தயானந்தன்– மிதுனா இருவருக்கும்,இது விருப்பத்தின் பேரில் நடந்த திருமணம் அல்ல என்று தெரிந்து வைத்திருந்தாலும்,தங்களுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கை இதுதான் என்ற யதார்த்தை அறிந்து கொண்டவர்கள். அதனால் முடிந்தவரை சுமுகமாகவே பழகி, நல்லதொரு தம்பதியராகவே தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

“உங்களுக்கு நான்தான், எனக்கு நீங்கதான்னு முடிச்சு போட்டு வச்சுட்டாங்க… இதுல எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்ல, நமக்கான வாழ்க்கைய சந்தோஷமா வாழ, முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணுவோம்.  உங்களுக்கு இதுல ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லுங்க” என்று திருமண இரவில் தெளிவாக இருவரின் நிலையையும் கருத்தில் கொண்டு பேசிய மிதுனாவை, முதன் முதலில் ஆச்சரியப் பார்வை தயானந்தனுக்கு,‘இவளுக்குள் இத்தனை பக்குவமா?’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அவனைப் பொறுத்தவரையில், மிதுனா என்பவள் திமிருடன் வாய்த்துடுக்காக பேசும் இக்கால யுவதியின் சராசரி சாயல் என்றே நினைத்திருந்தான்.

மிதுனாவின் சம்பாத்தியம்தான், அவளது குடும்பத்தையே ஆணிவேராய் தாங்கிக்கொண்டிருக்கிறது என்பதை இங்கே வந்த புதிதில் அறிந்தும் வைத்திருந்தான்.

ஆனாலும் அவளது பேச்சில் வெளிப்படும் அதட்டலும் அலட்சியமும், சமயத்தில் அருகில் உள்ளோரை முகம் சுழிக்க வைப்பதை நேரிலேயே கண்டிருக்கிறான்.

இவையெல்லாம் வெளியுலகில் நிமிர்ந்து நடக்க,தன்னைதானே செதுக்கிக் கொண்டு,மிதுனா முயன்று செய்து கொண்ட மாற்றங்கள்.

மிதுனாவின் பள்ளி இறுதியாண்டில், அவளது தந்தைக்கு நெஞ்சு வலியில் அகால மரணம் ஏற்பட, வேலைக்கு சென்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள்.

தனது அக்கா சாந்தினியின் திருமண நிச்சயம் முடிந்த சமயம் அது. கல்யாணப் பெண்ணை வெளியில் அனுப்பி வேலை பார்க்க வைப்பது என்பது நன்றாக இருக்காது, மேலும் அவளது திருமணத்திற்கு பிறகு வருமானம் ஈட்ட வேண்டிய நிலையில், தான் மட்டுமே இருந்ததால், மிதுனாவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். தம்பி பாஸ்கர் பத்தாம் வகுப்பை தாண்டாத சிறியவன்.

மிதுனாவின் தாய் மஞ்சுளா, நிச்சயம் முடிந்த தனது பெரிய பெண்ணிற்கு எவ்வாறு திருமணம் முடித்து வைப்பது என்று  புத்தி பேதலித்த நிலையில் புலம்பிக் கொண்டிருக்க, அவருக்கு துணையாக பெரிய பெண் நளினாவும் சிறுவன் பாஸ்கரும், மூலையில் அவரோடு ஒட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அன்னைக்கு ஆறுதல் கூறியவள் மிதுனா மட்டுமே.

“அப்பா ஏதாவது ஏற்பாடு செஞ்சு வைச்சிருப்பாரேம்மா! அதுபடியே கல்யாணத்தை நடத்துவோம். நீங்களே மனசு விட்டா குடும்பத்த யார் பார்க்கிறது?” மிதுனா தன்பொறுப்பில் நின்று பேச ஆரம்பித்தாள்.

“உங்க அப்பா பார்த்த கிளார்க் வேலையில, சேமிப்புங்கிறதே இல்ல மிதுனா. நான் இழுத்து பிடிச்சு, சேர்த்த பணத்தை வச்சு நகை ரெடி பண்ணியாச்சு… கல்யாண செலவுக்கு கடன் வாங்கி செய்யலாம்னு பேசிட்டு இருந்தாரு. ரெண்டு பேர்கிட்ட பேசி பணத்துக்கு ஏற்பாடும் பண்ணியாச்சு. ஆனா இந்த நெலமையில அவங்க இப்போ பணம் குடுப்பாங்களாங்கிறதேசந்தேகம்தான். ஒருதடவ தடைபட்டா,பொம்பள பிள்ளைக்கு அடுத்து கல்யாணம் கூடி வர்றதும் ரொம்ப கஷ்டம்” என்று அழுகையில் கரைந்தே சொல்லிவிட,

“அப்பிடியே செய்வோம், நான் வேலைக்கு போறேன், உன்கிட்ட இருக்குற மிச்ச நகைய அடகு வைச்சு சுருக்கமா கல்யாணத்த முடிச்சிடுவோம்மா” தன் பேச்சில் மிதுனா நம்பிக்கை அளித்தாள்.

“அது உனக்காக சேர்த்து வச்ச நகை… எப்டி அத அடகு வைக்க முடியும்? அப்பிடியே வச்சாலும் திருப்பி மீட்டாகணுமே! வருமானத்துக்கே வழியில்லாம உக்காந்திருக்கும் போது, இதெல்லாம் சாத்தியப்படுமான்னு தெரியலையே சின்னகுட்டி” அங்கலாய்த்து கண்ணீர் விட,

“இதே நெலமயிலநாம எப்பவும் இருக்கப் போறதில்ல… நல்ல மாற்றம் நம்ம குடும்பத்துக்கும் வரும்மா. நான் சொல்றத கேளு” என்று பேசியவள், மஞ்சுளாவின் கண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவே தெரிந்தாள்.

தனது தன்னம்பிக்கையில் அசையாத உறுதி கொண்டவள்,தந்தை ஏற்பாடு செய்த கடனுக்கு உத்திரவாதம் அளித்து, அக்காவின் திருமணத்தை தன்னால் முயன்ற அளவு சிறப்பாக நடத்தி எல்லோரையும் அசர வைத்தாள்.

அன்றிலிருந்து அந்த வீட்டின் முழுப் பொறுப்பும் அவள் கைகளில் தானாக வந்தமர்ந்தது. திருமணம் முடிந்து சீமந்தம், முதல் பிரசவம், இரண்டாம் பிரசவம், அடுத்து தம்பியின் படிப்பு என்று மேலும் மேலும் அவள் தலையில் பாரங்கள் ஏறிக்கொண்டதே தவிர இறங்கவில்லை.

வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன் என்று அன்னையும், படிக்கிற பேர் வழி என்று தம்பியும் வீட்டினில் அக்கடாவென்று இருக்க, இவளின் பொறுப்பு சுமை கூடியதே ஒழிய குறையவில்லை.

அதன் விளைவு, அவளின் அசையாத சொத்தாக கடன் தொகை கழுத்துவரை ஏறி, அவளை பதம் பார்க்கத் தொடங்கியிருந்தது. கடன் தொகைக்கான வட்டியை சரியான நேரத்தில் கட்டி விடுவதால், பணம் கொடுத்தவர்களிடம் நல்லதொரு மதிப்பு அவளுக்கு.

படித்து முடித்தவுடன் தம்பி சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால், சற்றே சிரமம் குறையலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருப்பவள். ஆனால் அவனோ அதைபற்றிய எண்ணம் துளிகூட இல்லாமல் பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறான்.

தி.நகரில் உள்ள எட்டு தளங்கள் கொண்ட பிரபல ஜவுளிக் கடையில் சேல்ஸ் கேர்ளாக விற்பனைப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த மிதுனா, இந்த எட்டு வருடத்தில் ஃப்ளோர் இன்சார்ஜராக(தளத்தின் மேற்பார்வையாளர்)தன்னை நிலைநிறுத்திக் கொண்டுபணியாற்றி வருகிறாள்.

பெயருக்கு ஒரு பட்டம் இருந்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், தட்டுத் தடுமாறி பிஏ வரலாறு தபால் வழியில் படித்து, ஒரு வழியாக பட்டதாரி ஆகிவிட்டாள்.

கையைக் கடிக்காத வருமானம் ஈட்டி வருகிறாள்.நாள் முழுவதும் தளத்தினில் உலா வந்து, அங்கே இருப்பவர்களை கவனிப்பதே அவளுக்கென ஒதுக்கப்பட்ட பணி. காலை பத்து மணிக்கு, மேனேஜர் சொல்லும் குறிப்பிட்ட தளத்தில் மேற்பார்வைக்கென ஆரம்பமாகும் இவளது வேலை இரவு பத்து மணி வரை நீளும்.

அந்த பனிரெண்டு மணிநேர பணிநேரத்தில், மறந்தும் போய் அவள் அமர்ந்து விடக்கூடாது. அதேபோல விற்பனை பிரிவில் உள்ளவர்களும் அமராமல் இருக்க, இவள் கண்கொத்திப் பாம்பாக மேற்பார்வை பார்க்க,இவளும் நின்றோ அல்லது நடந்தோதான், தன் கடமையைச் செய்தாக வேண்டும்.

கிண்டியில் இருந்து தி.நகர் மிக அருகில் என்பதாலும், இரவு நேரத்தில் வீட்டிற்கு கொண்டு வந்து விட, நிர்வாகமே வாகனத்தை அனுப்புவதாலும் ஓரளவு பயமின்றியே வேலைக்கு சென்று வருகிறாள்.

வேலை நிமித்தம் இவள் எந்தநேரமும் விற்பனையாளர்களிடம்,சற்று கண்டிப்புடன் பேசியே ஆக வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும் உணவு இடைவெளியில் சகஜமாய் அனைவருடனும் உரையாடுவாள்.

வாடிக்கையாளர்களிடம் இன்முகம் மாறாமல் பதில் அளிப்பதில்,எப்பொழுதும் கெட்டிக்காரத் தனமாய் செயல் படுவதால், இவளை நம்பி சிறிய வயதிலேயே ஒரு தளத்தை மேற்பார்வையிடும் பணியை அவளுக்கு ஒதுக்கி இருந்தனர். தான்இருக்கும் இடங்களில் தனக்கான அடையாளத்தை முன்னிறுத்துவதில் விருப்பம் கொண்டவள்.

திருமணத்திற்கு பிறகும் தன்னிலையில் சிறிதும் மாற்றம் கொள்ளாமல்,புகுந்த வீட்டு உறவுகளை ஏற்றுக் கொண்டு,மனம் கனிந்த வாழ்க்கையை கணவனுடன் வாழ்ந்து வரும் மிதுனாவை, நினைத்தே அத்தனை பெருமை கொள்வார் அவளின் மாமியார் மரகதம்.

இயல்பிலேயே அமைதியான சுபாவம் உடையவர் மரகதம்.அதிர்ந்து பேசத் தெரியாதவர், மென்மையான குணம் கொண்டவரை, வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் மேலும் அமைதியாக்கி விட்டிருந்தது.

கிராமத்தில் வாழ்ந்தவராக இருந்தாலும் தனது பெண் பிள்ளைகளை வளர்க்கும் பொருட்டு, எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல், சின்ன சிரிப்புடன் அனைத்தையும் கடந்து விடுவார்.

தனது ஒற்றை மகன் தயானந்தனின் மேல் உயிரையே வைத்திருப்பவர். சென்னைக்கு வந்த புதிதில் மிதுனாவை பார்த்து பிரமித்தவரும் கூட…ஒரு பெண் இத்தனை தைரியமாக வேலைக்கும் சென்று, குடும்பத்தையும் கைக்குள் வைத்திருக்க முடியுமா என்று வியந்தவர்.

கிராமத்தை தாண்டாத பெண்மணிக்கு இக்கால மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. அதனால் இங்கிருக்கும் பெண் பிள்ளைகள் எது செய்தாலும் ‘அப்படியா, இப்படியும் கூட இருக்க முடியுமா’ என்று ஆச்சரியப் பார்வை பார்த்து, அதிசயப் படுவதை வழக்கமாக்கி வைத்திருந்தார்.

ஒரு சராசரி மாமியாராக,தான் நடந்து கொள்ளக் கூடாது என்று முன்பே முடிவெடுத்து வைத்திருந்தவர்தான் மரகதம். அதற்கு காரணம் காலம் காலமாக பெண்களை கட்டிக்கொடுத்த இடத்தில் அவர்கள் படும் குத்தல் பேச்சுக்கள்,தலைகுனிய வைக்கும்சுடுசொற்கள் போன்றவற்றை,தான் பெற்ற மகள்களிடமும் கேட்டு மனதோடு நொந்து கொண்டிருப்பவர்.

அதோடு தான்மருமகளாக இருந்த காலத்தில், இதையெல்லாம் தானும் அனுபவித்தவர் என்ற முறையிலும்,தனக்கொரு மருமகள் வந்தால் இதை போன்ற துன்பங்களில், அவளை நோக வைக்கக்கூடாது என்றே மனதில் உறுதி எடுத்திருந்தார்.

அந்த முடிவில் சற்றும் பின்னடையாமல் மருமகளை தனது மற்றுமொரு மகளாய் இன்றளவும் பாவித்து வருபவர். இதுவரை ஒரு கடுகடுத்த பேச்சு, குற்றம் சாட்டும் பார்வை என்றெல்லாம் பார்த்ததில்லை. மிதுனாவும் அப்படி ஒரு அவசியத்தை உண்டாக்கவில்லை என்பதும் உண்மை. அதனால் இருவரின் ஒற்றுமையும் வீட்டில் மிகக் கெட்டிதான்.

மரகதம் பெற்ற பெண்கள், மருமகளை அதட்டி, மாமியார் கட்டுக்குள் வைத்துக் கொள் என்று சொன்னாலும், நாசூக்காய் மறுத்து விடுவார்.

“எம் மருமக அதட்டல் போடுற நெலமையிலேயும் இல்ல, நானும் அவளை, என் கட்டுக்குள்ள வைச்சு பாக்கணும்ங்கிற அவசியமும் இல்ல. இன்னைக்கு அதட்டல் போட்டு வேலை வாங்குறது பெரிசில்ல… இன்னொரு அஞ்சு வருஷம் கழிச்சு, அவ பார்த்து ஊத்தினாதான் எனக்கு மூணு வேலை கஞ்சியே கிடைக்கும்.

அப்போ எல்லாம் இத நினைச்சு அந்த பொண்ணு என்மேல விரோதம் வளர்த்துக்கிட்டா, யாருக்கு நட்டமா முடியும்னு சொல்லு… மேல் வீட்டுல,இவ எனக்கு மருமகளா இருக்கான்னா, கீழ் வீட்டுல என் மக அவங்க வீட்டுல மருமகளா இருக்கா… இங்கே நான் குத்துர குத்துக்கு, அங்கே இருக்குற பொண்ணோட கன்னம் வீங்காதுங்கிறது என்ன நிச்சயம்?

எனக்கு மாமியார் மரியாதைய விட, அம்மாங்கிற பாசமே போதும்” என்று திட்டவட்டமாக பேசி, மாமியாரின் தோரணையை விடுத்து, அம்மாவின் அரவணைப்பை கையில் எடுத்துக் கொண்டார்.

************************

ஞாயிற்றுக்கிழமை காலை எட்டுமணி… தயானந்தன் வேலைக்கு செல்லத் தயாராகி இருந்தவன், தாய் மரகதம் செய்த வெண்பொங்கலை, அவர்கள் அறையில் அமர்ந்து ருசித்துக் கொண்டிருக்க. மிதுனா அவனுக்கு பரிமாறியபடி காலைக் காபி குடித்துக் கொண்டிருந்தாள்.

“ஆனந்தா… அடுத்த வாரம் சிந்துவுக்கு ஒன்பதாம் மாசம் ஏறிடுதுப்பா. வளைகாப்பு பண்ணனும், அய்யர் வீட்டுக்குப் போய் நாள் பார்த்துட்டு வந்துடுய்யா. சூழ்நிலை சரியில்லன்னு அஞ்சாம் மாசம், ஏழாம் மாசம் எல்லாம் தள்ளிப் போட்டுட்டோம். இனி அப்டி செய்ய முடியாது. நாள் குறிச்ச பிறகுதான் மத்த ஏற்பாடு எல்லாம் செய்ய ஆரம்பிக்கணும்” அங்கே வந்த மரகதம், மகனிடம் கூற,

“இன்னைக்கு வேலை அதிகமா இருக்கும்மா, மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிப் பாக்குறேன், அவருக்கு முடியலன்னா, நாளைக்கு, நான் போறேன்” தயா பதில் பேச,

“இதெல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க செய்யனும் தம்பி, உனக்கு கொஞ்சம் வேலை சுளுவா இருக்கும்போது, போய் பார்த்திட்டு வாய்யா” மரகதம் நடைமுறையை எடுத்துரைத்தார்.

“நான் போயிட்டு வரேன்த்த… தம்பிய கூட்டிட்டு போறேன்” என்று மிதுனா சொல்ல,

“வேணாம் மிதுனா, இதுக்கெல்லாம் பொண்ணு வீட்டுல இருந்து தான் போகணும்” அமைதியாக தனது மறுப்பை மரகதம் தெரிவிக்க,

“நான் பொண்ணுக்கு அண்ணிதானே அத்த… எதுக்கு என்னை போக வேணாம்னு சொல்றீங்க?”

“உன் நாத்திக்கு தாராளமா நீ செய்யலாம் கண்ணு… ஆனா, உன்கூட மாப்பிள்ளைய கூட்டிட்டு போறேன்னு சொன்னதுதான் கொஞ்சம் நெருடலா இருக்கு. சம்மந்தி அம்மாவுக்கு இப்டி போறது பிடிக்குமோ பிடிக்காதோன்னு தெரியலையே?” மரகதம் சந்தேக கேள்வியாய் முடித்திட,

“எங்கம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கத்த… அவன் பொண்டாட்டி வளைகாப்புக்காகதானே கேட்கப் போறோம், அதனால பாஸ்கரும் தப்பா ஒன்னும் நெனைக்க மாட்டான். நீங்க கவலைய விடுங்க” மருமகளின் பேச்சில் சமாதானம் ஆனவர், தன் வேலையை பார்க்க உள்ளே சென்று விட்டார்.

“இந்த அய்யர் வீட்டுக்கு போறதுன்னாலே எனக்கு அலர்ஜி மிது. ராசி நட்சத்திரம்னு சொல்லி ஏகத்துக்கும் குழப்புவாரு. என்னால முடியாதுடா சாமி! பெரிய வேலைய எனக்கு மிச்சம் பண்ணிக் குடுத்திட்ட… என் சக்கரகட்டிடி நீ” என்று கொஞ்சியவனைப் பார்த்து, அந்த காலை வேளையிலும் அவனது சர்க்கரைபாகு, அவனைப் பார்த்து சிரிப்பில் கரைந்தது.

“எல்லாரும், சோ ஸ்வீட்… ஸ்வீட்டி, கியூட்டின்னு கொஞ்சுவாங்க, நீங்க என்னடான்னா இந்த சர்க்கரையிலயே நிக்கிறீங்க” கணவனிடம் கேலியாக நொடித்துக் கொள்ள,

“ரெண்டும் ஒண்ணுதானே மிது! மத்தவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்கிட்ட வார்த்தைய கடன் வாங்கி கொஞ்சுறான். நான் என் தாய்மொழியில, சுத்த தமிழ்ல கொஞ்சுறேன். இதுல என்ன குறைய கண்டுட்ட நீ?” சட்டைக்காலரை உயர்த்திக் கொண்டு கணவன் பேச,

“அட ஆண்டவா! இதுலயும் கடன் வரணுமா? இப்டி மூச்சு விடும் போதெல்லாம் அந்த கடனை நினைக்காம இருந்தாதான் என்னவாம்? கிளம்புங்க… லேட்டா போனேன்னு லேட்டா வருவீங்க” என்று விரட்டி விட,

“கடன நினைக்காம இருக்க, கடன் இல்லாம இருக்க, வரம் வாங்கிட்டு வரணும் மித்துகுட்டி. இன்னைக்கு லீவு நாள், லேட்டா போனாலும் சீக்கிரமாவே வந்துருவேன்” என்றபடியே மனைவியின் கன்னங்களை கொஞ்சிய தன் விரல்களுக்கு முத்தமிட்டுக் கொண்டவன், அவளை இறுக்கமாக அணைத்து, விடுவித்து கிளம்பினான்.

இவனது திடீர் அணைப்பில் விதிர்த்துப் போனவள், சுற்றும் முற்றும் பார்த்தவாறு,‘நல்லவேளை அத்த இந்த பக்கம் இல்ல…’பெருமூச்சு விட்டவள்,‘இந்த அவசரத்துல, இவர் ரொமான்ஸ் பண்ணலன்னு யார் அழுதா?” என்று மனம் நொடித்துக் கொண்டாலும்,கணவனின் அணைப்பை ரசிக்க மறக்கவில்லை.

மகனுக்கு பதிலாக மருமகள் நாள் குறித்து வருகிறேன் என்று சொன்னாலும், அது சம்மந்தியின் வாய் பேச்சிற்கு அவல் ஆகிப் போகுமோ என்றே நினைத்தார் மரகதம். இந்த கொஞ்ச நாட்களில் மிதுனாவின் தாய் மஞ்சுளா, தங்களை சற்று குறைவாக பார்த்து வருவதை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

தனது சம்மந்தக்காரர்கள்,ஒரு காலத்தில் செழிப்புடன் கிராமத்தில் வாழ்ந்திருந்தாலும் தற்சமயம் ஊரை விட்டு வந்த ஒன்றுமில்லாதவர்கள் என்ற கணிப்பு மஞ்சுளாவின் மனதில் நிரம்ப உண்டு. அதே வீட்டில்தான்,தன்பெண்ணை கட்டிக் கொடுத்துள்ளோம் என்பதை ஏனோ மனதில் வைக்க மறந்து விடுகிறார் மஞ்சுளா.

எப்பொழுதும் மருமகளை இடித்துப் பேசி குற்றப்பார்வை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டு, ஜாடை மாடையாக சம்மந்த குடும்பத்தை பேசுவதையும் வாடிக்கையாக்கி வைத்திருந்தார்.

மரகதம் காதுகளில் விழ வேண்டும் என்றே, அவர் தனியாக இருக்கும் பொழுகளில், கீழே இருந்து சத்தமாகவே வார்த்தைகளை கொட்டி விடுவார். அவ்வப்போது அவரின் மகளும், இவரின் மருமகளுமான சிந்துவை குத்திக் காட்டிப் பேசுவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். மஞ்சுளாவின்  பேச்சை,மகன் பாஸ்கர்,கண்டும் காணாமல் இருந்தது,அவரை மேலும் ஏற்றி வைத்தது.

மரகதமும், சிந்துவும் இயன்றவரை எதையும் சொல்லாமல் மூடி மறைக்கப் பழகிக் கொண்டு விட்டனர். ஓய்வின்றி உழைத்து, களைத்து வருபவர்களிடம், இதை பிரச்சனையாக பேசி வார்த்தை வளர்க்க இருவரும் விரும்பவில்லை. மகள் மிதுனா இல்லாத நேரங்களில் மட்டுமே மஞ்சுளாவின் ஏச்சுக்களும் பேச்சுக்களும் அரங்கேறும்.

யாரையும் தேவையில்லாமல் பேசுவதை எப்போதும் தடுத்து விடுவாள் மிதுனா. அப்படி இருக்க, தன்புகுந்த வீட்டை பேசும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டாள் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தார் மஞ்சுளா.

சம்மந்தி அம்மாளின் சுபாவத்தில் மனம் நொந்திருந்தவரால்,  மருமகள் தானாக சென்று, நாள் குறித்து வருகிறேன் என்று சொல்லும் போது, ஒரு அளவிற்கு மேல் மரகதத்தால் தடுக்க முடியவில்லை.

மகவை சுமந்து கொண்டிருக்கும் பெண் இதனால் என்னென்ன பேச்சை வாங்கிக் கட்டிக் கொள்வாளோ என்றே மனதோடு மருகிக் கொண்டே, மருமகளை கீழே அனுப்பி வைத்தார்.

“என்னம்மா காலை டிபன் முடிஞ்சுதா?” அன்றைய நடப்பை கேட்டுக்கொண்டே மிதுனா, தன்தாய் மஞ்சுளாவிடம் பேச்சை ஆரம்பிக்க,

“உன் தம்பி பொண்டாட்டி தோசை ஊத்தி குடுத்து சாப்பிடுறதுக்குள்ள இங்கே மதியம் ஆகிடும்” என்று நொடித்தவர், சமையலறையில் பார்வையை திருப்பினார்.

அங்கே நிறைமாத வயிற்றுடன், கண்களில் அதீத சோர்வு தெறிக்க, தோசையை ஊற்றிக் கொண்டிருந்தாள் சிந்து. சென்னை வெயில் அந்த காலை நேரத்திலும் கர்ண கொடூரமாய் தாக்கியது.

வியர்வை வழிய நின்றவளை பார்த்துக் கொண்டே,“உனக்கு அவசரம்ன்னா நீயே ஊத்திக்க வேண்டியது தானே! அவள எதுக்கு சொல்ற? ஏற்கனவே நிக்க கஷ்டப்படுறா போல, இந்த வெக்கையில எதுக்கு வேலை பாக்க சொல்ற” சிந்துவை பார்த்துக் கொண்டே மிதுனா பேச,

“மத்த வேலையெல்லாம் நாந்தானே செய்றேன். காலை சமையல் மட்டும் இவளுக்கு செய்ய முடியாதாமா? என்ன பொண்ண வளத்தாங்களோ?” அங்கலாய்ப்பில் மஞ்சுளா வார்த்தையை விட,

“உன் பொண்ணுக்கும் தோசை ஊத்த சரியா வராதும்மா… அப்போ நீயும் பொண்ணை சரியா வளக்கலையா?” கூர்மையான பார்வையுடன் தாயை பார்த்து மிதுனா கேட்க,

“ஏண்டி நீயும் அவளும் ஒண்ணா? நீ வேலைக்கு போயி சம்பாரிச்சு போடுறவ! அவ தண்டத்துக்குதானே வீட்டுல உக்காந்திட்டு இருக்கா… கிராமத்துல வளந்தவளுக்கு சமையல் வேலை ஈசியா செய்ய தெரியவேணாமா? மருமக வந்தா கால ஆட்டிக்கிட்டு சாப்பிடலாம்னு சொல்றாங்க, எனக்கு அந்த குடுப்பினை இல்ல போல” ஆதங்கத்தில் வெடித்தவர், ஏகத்திற்கும் சலித்துக்கொள்ள,

“அவளோட நெலமைய கொஞ்சம் புரிஞ்சு பேசேன், எதுக்கு இப்பிடி ஓட்டை சட்டியாட்டம், வாயில ஒழுகிக்கிட்டு இருக்க?” அன்னையின் பேச்சு பிடிக்காத பாவனையுடன் பேசினாள் மிதுனா.

“உனக்கு என்னோட புலம்பல் கேலியா போச்சு…  ஒன்னுந்தெரியாத கூமுட்டைய தலையில கட்டிட்டு அழணும்னு எனக்கு விதி இருக்கு, அத மாத்தவா முடியும்” நொந்து கொண்டு பேச,

“உன் பையன் செஞ்ச தப்புக்கு, விதி மேல ஏன் பழி போடுற?எங்கே அவன காணோம்? துரைக்கு இன்னும் விடியலையா?” என்று கேட்கும் போதே, தோசையுடன் வந்த சிந்து,

“வாங்க அண்ணி! தோசை சாப்பிடுங்க…” என்று அவளுக்கும் சேர்த்து தட்டை எடுத்து வைக்க,

“நான் சாப்பிட்டேன் சிந்து, பாஸ்கர கூப்பிடு வெளியே போகணும்” என்று சொன்னவுடன் கணவனை அழைக்க விரைந்தாள் சிந்து.

“எங்கே போக அவன கூப்பிடுற?” மஞ்சுளா கேட்க,

“வளைகாப்புக்கு நாள் குறிக்கணுமாம், அத்தை சொன்னாங்க, அதுக்குதான் அய்யர் வீட்டுக்கு, நானும் பாஸ்கரும் போயிட்டு வந்துடுறோம்” மிதுனா காரணத்தை சொல்ல,

“அதெல்லாம் பொண்ணு வீட்டுல பார்த்துப்பாங்க மிதுனா… நீ எதுக்கு இதுல தலையிடுற?” மஞ்சுளா மெத்தனமாய் பேச,

“அந்த பொண்ணு வீட்டுல நான் யாரும்மா? என்னை அங்கே கட்டிகுடுத்தத நீ அடிக்கடி மறந்திடுற”

“ஓ… நீ அப்டி வர்றியா? அப்போ உன் வீட்டுக்காரர் கூட போயிட்டு வரவேண்டியது தானே? உன் தம்பி அங்கே மாப்பிளைன்னு மறந்து போயிடுச்சா? அவனுக்குண்டான மரியாதையா நீ எப்போதான் அவனுக்கு குடுக்கப் போற!” சலிக்காமல் மகளுடன் வார்த்தை வளர்த்தார் மஞ்சுளா.

“இப்பிடி பேசுறத நிப்பாட்டும்மா… எந்த காலத்துல இருக்க நீ?அவர் வேலைக்கு போயிட்டாரு, அதான் இவங்கூட போகலாம்னு வந்தேன்”

“உந்தம்பி மட்டும் சும்மா இருக்கானா?அவனும் வேலைக்கு போறவன்தான், நைட் ரெண்டு மணிக்குதான் வீட்டுக்கே வந்தான். எதுக்கெடுத்தாலும் அவன தொணைக்கு கூப்பிடுறத குறைச்சிக்கோ!”

“மாசத்துல பதினைஞ்சு நாள் போற வேலைக்கே, இவன இப்படி தாங்குறியாம்மா… இவன் பொண்டாட்டி விசேசத்துக்கு நாள் பார்க்கதானே கூப்பிடுறேன்,ஒருநாள் கொஞ்சம் கம்மியா தூங்கட்டும். கூப்பிடு அவன…”

“உம் புருசனுக்கும் பெரிய கலெக்டர் உத்தியோகம் பாக்கிறதா நெனப்பா! ஒருநாளும் லீவெடுக்காம வேலைக்கு போறதுக்கு?அங்கே பேச முடியல இங்கே வந்து சட்டம் போட்ற” தாயின் சீண்டல் பேச்சில், கோபம் வந்து வெகுண்டு எழுந்து விட்டாள் மிதுனா.

மகனுக்கு, மாப்பிள்ளை மரியாதை கொடு என்று சொன்னவர், தன் வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்கத் தவறி விட்டார். மஞ்சுளாவைப் பொருத்தவரை, தயானந்தன் ஒருநாளும் வீட்டில் தங்காதவன். பொறுப்புக்களை சுமக்கிறேன் பேர்வழி என்று எந்தநேரமும் ஒரு நிலையில் நில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவன் என்ற எண்ணமும் அவருக்கு உண்டு. அதன் காரணமே தன்மகளிடம்,தான் என்ன பேசுகின்றோம் என்பதையும் மறந்து, வீட்டு மாப்பிள்ளையப் பற்றி வாயை விட்டு விட்டார் தயானந்தனின் மாமியார் மஞ்சுளா.

*****************************************

இரண்டு குதிரையிலே ஒரு

மனிதன் போவதென்ன…

இரண்டு நினைவுகளில் சில

மனிதர் வாழ்வதென்ன…

காலங்கள்தோறும் அவர்

சிந்தனையில் மாற்றமென்ன…

மனிதன் நினைக்கின்றான்

இறைவன் அதை மாற்றுகின்றான்…