KarisalKattuPenne19

கரிசல் காட்டுப் பெண்ணே 19

 

கோயிலின் வெளியே சுற்றிலும் மறுமுறை தேடி பார்த்த ஸ்ரீராம், அருகிருந்த தெருக்களில் மெதுவாக காரை செலுத்தியபடி இருபுறமும் கவனமாக பார்த்தபடி ஊர்ந்தான். சில இடங்களில் காரை நிறுத்தி விட்டு இறங்கி அங்கும் இங்கும் இறங்கி அலைந்து தேடினான். திறந்திருந்த ஒன்றிரண்டு கடைகளில் விசாரித்து பார்த்தான்.

கையில் பணமின்றி அவளால் தூரமாக போயிருக்க முடியாது என்று தோன்றியது இவனுக்கு.

‘எங்கே இருக்க பாப்பு… ஏதாவது ஆபத்துல சிக்கிட்டு தவிக்கிறியா? நாங்க உன்னை தேடி வருவோம்னு யோசிக்கவே இல்லையா நீ!’ இத்தனை தேடியும் சீதாவைப் பற்றி எதுவும் தெரிய வராததால் அவனுள் பயம் பரவியது.

தலையைக் குலுக்கிக் கொண்டு மீண்டும் காரில் ஊர்ந்து நகர்ந்தான் இருபுறமும் அவளை தேடியபடி,

“ச்சே எங்க டா மறைஞ்சு போயிருப்பா? கையில கிடைச்சும் மிஸ்ஸாகிட்டா” ஒருவன் சத்தமாக சலிக்க, “விவரமான குட்டி போல மச்சா, அதான் ஷோக்கா எஸ்ஸாயிடுச்சு” மற்றொருவன் பேசுவதும் அவர்களை மெதுவாக கடந்து வந்திருந்த ஸ்ரீராமின் செவிகளில் ஓரளவு தெளிவாகவே விழுந்தது.

‘இவங்க பேசறது… ஒருவேளை சீதா பத்தி இருக்குமா?’ அவனுக்கு சந்தேகம் தோன்ற அவர்கள் வந்த சந்திற்குள் காரை திருப்பினான். இருளும் நிசப்தமும் மட்டுமே தெரிந்த தெரு பகுதி அது. மனித நடமாட்டம் முழுவதுமாக அடங்கி இருந்த முன்னிரவு நேரம்.

தெருவில் இறங்கி பார்வையில் தேடல் தேக்கி நடந்தான்.

“பாப்பு… பாப்பு… நீ இங்க இருக்கியா?” இரவின் அமைதியில் நிதானமாக சற்று எச்சரிக்கையாக ஒலித்தது ஸ்ரீராமின் குரல்.

அவர்களுக்கு பயந்து சீதா இங்கே எங்காவது மறைந்து இருப்பாளோ என்ற அரைகுறை யூகத்தை பிடித்து கொண்டு ஒவ்வொரு இடமாக அவள் பெயரை நிதானமாக விளித்தபடி தேடினான்.

“பாப்பு…”

‘—‘

“பாப்பு…”

‘—‘

“பாப்பு…”

“சின்னா…!”

சீதாவின் மெல்லிய பதில் குரல் கேட்ட பிறகு தான் இவன் பயம் மீள்வதாய்.

நிம்மதி பெருமூச்செறிந்தவன், “நான் தான் வெளியே வா சீதா” என்று குரல் வந்த சிறு மண்டபம் நோக்கி செல்ல, தயக்கம் முழுவதும் விலகாதவளாக இருளில் இருந்து வெளியே வந்தவள், அரை வெளிச்சத்தில் ஸ்ரீராமை கண்டதும் பாய்ந்தோடி வந்து அவனுக்குள் புகுந்து கொண்டாள்.

இத்தனை நேரம் பயத்தின் விளிம்பில் பரிதவித்திருந்தவள், தாய்கோழியின் சிறகுக்குள் பாதுகாப்பை நாடும் சேய்குஞ்சாய் அவனுக்குள் அடைக்கலமானாள்.

அவளுடலின் நடுக்கத்தை உணர்ந்தவன் கைகளும் அவளை ஆறுதலாக அணைத்திருந்தன.

“நான் ரொம்ப பயந்திட்டேன் சின்னா, அவங்க…” அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, இன்னும் முழுவதும் விலகாத பதற்றத்தோடு அவனுக்குள் மேலும் ஒன்றிக் கொண்டாள்.

“ரிலாக்ஸ் பாப்பு, நான் தான் வந்துட்டேன் இல்ல, நீ இப்ப பத்திரமா இருக்க… அதுவும் என் கைக்குள்ள” ஸ்ரீராம் சொல்ல பெண் அனிச்சையாக விலகி கொண்டாள். சங்கடமாக அவன் முகம் பார்க்க, அவன் முகத்தில் கள்ளமற்ற சிரிப்பை காட்டி நின்றிருந்தான்.

இவளும் அவனுக்கு பதில் சிரிப்பை உதிர்க்க முயல, வெகுநேரமாக உடலை குறுக்கி அமர்ந்திருந்ததால், கால்கள் மரத்து மடிய தள்ளாடிவளை தாங்கிக் கொண்டன அவனது கைகள்.

அவள் சோர்ந்து வாடி தெரிய, தோளணைத்து அழைத்து வந்து காரில் அமரவைத்து தண்ணீர் பாட்டில் கொடுத்து குடிக்கச் செய்தான்.
தண்ணீர் குடித்தபிறகு சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்.

அவளின் ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்து, “சாரி பாப்பு, நான் கூட நீ இல்லன்றதை கவனிக்காம விட்டுட்டேன்” தேய்ந்த குரலில் மன்னிப்பு வேண்ட,

“தப்பு என்னோடது தான் சின்னா, நான் தான் கவனமா ஆளுங்க கூடவே வந்திருக்கணும்…” என்று தன்னை நொந்து கொண்டவள் சிறிதும் தயக்கமற்று அவன் மேல் கையை இறுக பிடித்து கொண்டு தோளில் தலைச்சாய்த்து கண்மூடிக் கொண்டாள். மீண்டும் தொலைந்து விடுவோமோ என்ற சிறு குழந்தையின் பயம் அவளிடம்.

அவள் அதிகமாக பயந்திருப்பதை இவனாலும் உணர முடிந்தது. கிட்டத்தட்ட மூன்று மணிநேர போராட்டம், பயம் அவளுடையது.

சீதா கிடைத்து விட்டாளென்று வீட்டிற்கும், ராமகிருஷ்ணனுக்கும் தகவல் தந்துவிட்டு, அருகிலிருந்த ஒரு சிறு ஓட்டலில் கிடைத்த உணவை வாங்கி சீதாவை சாப்பிட வைத்தான். அவளும் மறுப்பு சொல்லாமல் உண்டு சற்று தெளிவாகிட, பயணத்தைத் தொடர்ந்தவன் பாதையோர‌ தேநீர் ஷாப்பில் காரை நிறுத்தியதும் சங்கரன் ஓடிவந்து மகளை பார்வையில் நிறைத்துக் கொண்டார்.

“வந்துட்டியா சீதாம்மா, கொஞ்சநேரத்தில் எங்களை கலங்கடிச்சுட்டியே மா” அப்பாவிற்கு பதில் சொல்ல கூட நா எழாமல், ராமகிருஷ்ணனின் கொதிக்கும் பார்வையில் மிரண்டு, ஸ்ரீராமின் முதுகோடு ஒன்றிக் கொண்டாள் அவள்.

“ஏய் அறிவிருக்கா உனக்கு? உன்னையெல்லாம் என்ன செஞ்சா தகும்? எங்களை ரோட்ரோடா அலைய வச்சிட்டல்ல” ராமகிருஷ்ணன் எகிற,

“புள்ள முதல்லையே பயந்திருக்கு நீங்க எதுவும் திட்டி வைக்காதீங்க மாப்பிள்ள” சங்கரன் தடுத்து பேசினார்.

“நான் திட்டற மாதிரி தான அவளும் செஞ்சு வச்சிருக்கா” என்று அவரை அடக்கிவிட்டு, “நீ இவளை எங்க பார்த்த ஸ்ரீ?” சின்னவனிடம் கேள்வியைத் தொடுக்க, சீதாவின் முகம் மேலும் வெளிரி போனது.

“வழியில ஒரு சின்ன பிள்ளையார் கோயில்ல, பயத்துல மறைஞ்சு இருந்தா” ஸ்ரீராம் பதில் தர, இவன் புருவம் நெளித்துக் கொண்டான்.

“சரி நேரமாச்சு கிளம்பலாம்” என்று ராமகிருஷ்ணன் காரில் ஏறிக் கொள்ள, சீதா எதையும் யோசிக்கவும் தோன்றாமல் ஸ்ரீராமின் காரில் ஏறி அமர்ந்து விட்டாள்.

ராமகிருஷ்ணனின் முகத்தில் அப்பட்டமாக சிவப்பேற,‌ “நானும் சீதாவும் ஸ்ரீராம் கார்ல வந்துடறோம் மாப்பிள்ள, புள்ள ஓஞ்சி தெரியுது பாவம், அலைகழிக்க வேணாம்” சங்கரன் சமாதானமாக சொல்லி விட்டு மகளின் அருகில் அமர்ந்து கொண்டார்.

அவருடன் காரில் ஏறிய நொடியில் இருந்து, இப்போது வரை சீதாவை திட்டி தீர்த்து இருந்தான் ராமகிருஷ்ணன். ஒருநிலைக்கு மேல் இவராலும் பொறுக்கமுடியவில்லை. இப்போதும் ராமகிருஷ்ணனோடு காரில் சென்றால், அவன் பேச்சைத்தான் கேட்க நேரிடும் என்று தப்பித்துக் கொள்ளவே முயன்றார் சங்கரனும்.

“எதுக்கெடுத்தாலும் சீதா மேல இப்படி எரிஞ்சு விழாத கிருஷ்ணா, சரியில்ல” ஸ்ரீராமும் சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.

ராமகிருஷ்ணனுக்கு ஏதோ அவமானப்பட்ட உணர்வு!

எல்லோரும் சீதாவிற்கு பரிந்து தன்னை குற்றம் சொல்வதாக புழுங்கிக் கொண்டான்.

பின்னிரவு விடியலுக்காக காத்திருக்கும் வேளையில் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தனர். சீதாவை நேரில் பார்த்த பிறகே நிம்மதியுற்று குடும்பத்தினர் அனைவரும் உறங்கச் சென்றனர்.

மறுநாள் பொழுது அவர்களுக்கு தாமதமாகவே விடிந்திருந்தது. கடந்த இரவின் தூக்கமின்மையும், மன உளைச்சலும் அவர்களின் அன்றாட வேலைகளிலும் மந்த தன்மையையே ஏற்படுத்தி இருந்தன.

பெரிய வீட்டில் தங்கிவிட்டிருந்த ராமகிருஷ்ணன், முன்பகல் வேளையில் தான் விழித்து எழுந்து தயாரானான்.

அவனுக்காக காலை உணவை கௌதமி பரிமாற, “சாரி சித்தி, டயாட்ல ரொம்ப நேரம் தூங்கிட்டேன், அம்மா எங்கே?” என்றான். விருந்தினர் வீட்டில் நேரந்தாழ்ந்து எழுந்து விட்டோமே என்ற சஞ்சலம் அவனிடம்.

“பரவால்ல கிருஷ்ணா, அக்கா, சீதா வீட்டுல இருக்காங்க, நீ முதல்ல சாப்பிடு” என்று பரிமாறினார்.

சாப்பிட்டு முடித்து வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு, சற்று சலிப்போடே காலார நடந்தான்.

இது அவன் வளர்ந்த ஊர் தான். சுற்றிலும் அவனுக்கு தெரிந்த பழக்கப்பட்ட மக்கள் தான். ஆனாலும் இப்படி பொடி நடையாக நடந்து வருவது அபூர்வம். பைக்கிலோ, காரிலோ வருபவன் மாமா வீட்டோடு திரும்பி விடுவான் எப்போதுமே.

இன்று அவன் மனதிற்குள் விவரிக்க முடியாத ஏதோ முணுமுணுப்பு, கசகசப்பு அதனால் தான் மாமா வீட்டை தவிர்த்து சாலையோடு நடை பயின்றான்.

எப்படியும் அங்கு சென்று சீதாவைப் பார்த்தால் இவனுக்கு கோபம் தான் வரும் எதையாவது கத்தி வைப்பான். அவளும் அசராமல் அரண்டு நிற்பாள். நினைக்கவே ஒருவித சலிப்பு தட்டியது இவனுக்குள்.

தான் மணக்க இருக்கும் மாமன் மகளைப் போல முட்டாள் பெண் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்கமாட்டாள் என்று தோன்றியது அவனுக்கு. கசப்பாக சிரித்து கொண்டான்.

“ஏப்பா ராமகிருஷ்ணா, எங்கூரு புது மாப்பிள்ள, இங்கன கொஞ்சம் வாரது” அங்கே வீட்டின் திண்ணையில் கும்பலாக அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்த சிலர் அழைக்க, இவனும் சலிப்போடு அங்கு சென்றான்.

“எப்படீ இருக்கீக மாப்புள்ள?”

“ஆளையே பாக்க முடியறதில்ல”

“என்னப்பா எங்களை நினைப்புல இருக்கா?”

இவன்மீது கேள்விகள் பாய, “உங்ககூட வெட்டி பேச்சு பேச எனக்கு டைம்மில்ல, எதுக்கு கூப்பிட்டீங்கன்னு சொல்லுங்க, உறுப்படியா விசயம் இல்லைன்னா நான் போறேன்” ராமகிருஷ்ணன் வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.

“என்னப்பா மட்டு மருவாத தெரியாம இப்படி எடுத்தெறிஞ்சு பேசுற?”

“எக்கிட்ட அதெல்லாம் ஸ்டாக்கில்ல, இருந்தாலும் உங்களுக்கு கொடுகக வேண்டிய அவசியமில்ல” அவனின் தெனாவெட்டான பதிலில் இவர்களின் முரட்டு முகங்கள் கறுத்தன.

“ஏலே நான் உனக்கு சின்ன மாமன் முறை வரும்ல, சின்ன வயசுல எந்தோளுல ஏறிட்டு ஊர சுத்தனவல்ல நீ” ஒருவர் ஆதங்கப்பட,

“இப்ப அதுக்கு நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க?” ராமகிருஷ்ணன் எதற்கும் வளைவதாக இல்லை.

“பட்டணத்து படிப்பு, கம்பூட்டர் ஜோலி, கைநிறைய காசு அதான் தம்பி விரச்சிட்டு நிக்குது” மற்றொருவன் கேலி பேச,

“அட நம்ம பெரியவூட்டு பையன் கூடத்தான் பட்டனத்துல இன்ஜீனியரு படிப்பெல்லாம் படிச்சிருக்கு, ஒத்த ஆளா நின்னு ஊரே வாய்புளக்கற மாதிரி அரண்மனை கணக்கா வூட்ட கட்டியிருக்கு, ஆனாலும் எம்புட்டு மருவாதையா பேசுது, நடக்குது” ஒருவர் சிலாகிக்க,

“இப்ப எதுக்கு தேவையில்லாம அவனை எங்கூட கம்பேர் பண்ணி பேசுறீங்க?”

“தேவை இருக்கிறதால தான் மாப்புள சொல்லுறோம், உன்ற மாமன் மகளும் அவரும் ஒண்ணுமண்ணா பழகுனது இந்த ஊருக்கே தெரியுமில்ல, உங்களுக்கு தெரியாதா?” குதர்க்கமாக ஒருவன் கேள்வி கேட்டு வைக்க,

“யோவ் ஆணும் பொண்ணும் பேசினாலே உங்க நொல்ல கண்ணுக்கு தப்பா தான் தெரியுமா? அவங்க சின்ன வயசு ஃப்ரண்ஸ்யா சும்மா பேசி, பழகி இருப்பாங்க” ராமகிருஷ்ணன் அலட்டாமல் பதில் பேசினான்.

“எப்புடி எப்புடி ஊரு திருவிழாவுல ஓரங்கட்டி பேசறதும், பருத்திக் காட்டுல கைய புடிச்சு பழகறதும் ஒண்ணுமில்லையா உமக்கு?” மற்றொருவன் கொளுத்தி போட,

“ஏலே கூறுகெட்டவைகளா, கட்டிக்க போறவன்கிட்ட நம்மூரு புள்ளய பத்தி திரிச்சு பேசுவீங்களாடா, வாய‌ மூடுங்கடா” பெரியவர் அந்த பேச்சை துண்டிக்க முயன்றார்.

“ஏன்‌ மறைக்கணுங்கிறேன், பட்டணத்து மாப்புளக்கு இதெல்லாம் பெரிய விசயமா என்னா?”

“வன துர்க்கை கோயில்ல, சண்டப்போ நானும் தானே கம்பெடுத்துகிட்டு ஓடுன, பெத்த அப்பன் முன்னாலயே அந்த புள்ளய இறுக்கி புடிச்சுட்டு நின்னாரு அந்த இன்ஜினியரு, நாந்தான் நேராவே பாத்தேனே” அந்த இருவரின் குதர்க்க பேச்சுக்கள் நீளவும்,

“இன்னோரு முறை வாயிக்கு வந்தபடி பேசினீங்க, உங்களை உண்டு இல்லன்னு பண்ணிடுவேன் பார்த்துகங்க, திருவிழாவுல மாடு முட்ட வந்ததும் எனக்கு தெரியும், அசலூர்காரன் வனதுர்க்கை கோயில்ல பிரச்சனை பண்ணதும் எனக்கு தெரியும்… என் மாமன்‌ மகளை பத்தியும் எனக்கு தெரியும்” என்று ராமகிருஷ்ணன் ஆவேசமாக எதிர்த்து பேசவும்,

“அட, அப்போ ராத்திரி வேளையில அவன் ரூம்புக்கு இந்த புள்ள போய் வந்துச்சே அதுவும் தெரியுமோ? கொல்லப்புற தோட்டத்தில எந்நேரமும் அவக வளவளக்கறதும் தெரியுமோ?” என்றவன் முகத்தில் அறைந்து இருந்தான் ராமகிருஷ்ணன். அவனும் இவன்மீது பாய, அங்கே சண்டை மூண்டது.

மற்றவர்கள் அவர்கள் இருவரையும் பிரித்துவிட, சங்கரனும் பரமேஸ்வரனும் விசயம் கேள்விப்பட்டு அங்கே வந்து சமாதானம் பேசி ராமகிருஷ்ணனை அழைத்து வந்தனர்.

கோப மூச்சுக்கள் வாங்க, சங்கரன் வீட்டு கூடத்தில் ராமகிருஷ்ணன் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தான். அவனை சுற்றிலும் சங்கரன், பரமேஸ்வரன், குலோத்துங்கன், மரகதம், கௌதமி, கோதாவரி, சீதா, செல்வி பதற்றத்தோடு நின்றிருந்தனர்.

“ஏன் கிருஷ்ணா உனக்கு இவ்வளவு கோபம்? பேச்சு பேச்சா இருக்கும் போது கைய நீட்டி இருக்க? உன்னவிட அவங்க வயசுல பெரியவங்கன்ற ஒரு மரியாதை வேணாம்” பரமேஸ்வரன் தான் குரலை உயர்த்தினார்.

“மரியாதை தர மாதிரியா அவங்க பேசினாங்க? அவங்கள சொல்லி என்ன, உங்களைத்தான் சொல்லணும், கேக்கணும், எனக்கு தெரியாம என்ன நடந்துட்டு இருக்கு இந்த வீட்ல” ராமகிருஷ்ணன் அடித்தொண்டையில் கர்ஜிக்க, “என்னடா உளர்ற நீ?” குலோத்துங்கன் மகனை அதட்டினார்.

“நான் உளரல ப்பா, சீதாவும் ஸ்ரீராமும் நெருங்கி பழகுறாங்கன்னு இந்த ஊரே பேசுது, தெரியுமா உங்களுக்கு?” ராமகிருஷ்ணன் வெடிப் பேச்சில் அங்கிருந்த அனைவருமே ஆடி போயினர்.

“எவன் டா அவன், எங்க புள்ளங்கள பத்தி நாக்குமேல பல்ல போட்டு அவதூறா பேசினது? அவனுங்க நாக்க அங்கனையே அறுத்தெறிஞ்சிட்டு வர வேணா” கோதாவரி கொதித்து பேச,

“மா… பேசுன வாய இல்ல, கொழுப்பெடுத்து போன கழுதையோட காலத்தான் உடைக்கணும்?” ராமகிருஷ்ணனின் சிவப்பேறிய கண்கள் சீதாவின் மீது நிலைக்க,
மரகத்தின் முதுகோடு மேலும் ஒன்றிக் கொண்டாள் அவள்.

அதேநேரம் ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டு ஸ்ரீராமும் கீர்த்திவாஷினியும் அங்கே வந்தனர்.

அவனை பார்த்ததும் பாய்ந்து வந்து அவன் சட்டையை ஆத்திரமாக பற்றி, “உண்ட வீட்டுக்கே துரோகம் பண்றீயா டா? சீதா எனக்கானவன்னு தெரிஞ்சும் அவகிட்ட நெருங்க நெனச்சிருக்க இல்ல” ராமகிருஷ்ணன் அடிக்க கையோங்க, அங்கிருந்த அனைவருமே பதறி கத்திவிட்டனர்.

சங்கரன் அவன் கையை தடுத்து பிடிக்க, குலோத்துங்கன் மகனை ஸ்ரீராமிடமிருந்து பிரித்து விலக்கினார். இத்தனைக்கும் ஸ்ரீராம், ராமகிருஷ்ணனை நேர் பார்வை பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தான். கீர்த்தி பயந்து அவனின் கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டு நின்றாள்.

“நீயா எதையாவது நினைச்சுகிட்டு என் பையனை அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத ராமகிருஷ்ணா… அவன்மேல தப்பிருந்தா நானே அவனை வெட்டி போட்டுடுவேன்” என்ற பரமேஸ்வரன் மகனிடம் திரும்பி, “என்ன ஸ்ரீ இதெல்லாம்? இதுதான் நீ எங்களுக்கு காட்டுற மரியாதையா?” கண்டிப்பாக கேட்டார். பெண் விசயத்தில் தன் மகன் மீது பழி விழுவதை ஒரு தந்தையாய் அவராலும் தாங்க முடியவில்லை.

“ப்பா, யாரோ என்னவோ உளரி வச்சாங்கன்னு எங்க மேல சந்தேகபடாதீங்க, கிருஷ்ணா தான் கோபத்துல கண்ணுமண்ணு தெரியாம குதிக்கிறான்னா நீங்களுமா?” ஸ்ரீராம் பதில் பேச,

“கோபபடாம உன்ன கொஞ்ச சொல்றீயா டா? வார்த்தைக்கு வார்த்தை சீதாக்கு பரிஞ்சிட்டு வந்தீயே அப்பவே உன்புத்தி எனக்கு தெரிஞ்சு இருக்கணும்”

“தப்பா வார்த்தைய விடாத கிருஷ்ணா, அப்புறம் அள்ளி சேர்க்க முடியாது” அவன் பேச்சு திசைமாறுவதை கவனித்து ஸ்ரீராம் எச்சரிக்க,

“தப்ப உன்மேல வச்சுகிட்டு என்னை பேசுறீயா நீ? முதல்ல இங்கிருந்து வெளியே போடா” ராமகிருஷ்ணன் கோபத்தில் வெடித்தான்.

“அய்யோ இங்க என்ன நடக்குதுன்னு யாராவது சொல்லுங்களேன், எங்க வீட்டு புள்ளங்க ரெண்டும் எங்க கண்ணு முன்னயே முட்டிகிட்டு நிக்கறாங்களே” கோதாவரி கதறி புலம்ப,

“ஏதாவது பேசு சங்கரா ஏன் இன்னும் அமைதியா நிக்கிற?” குலோத்துங்கனும் சத்தமிட்டார்.

“ஊர்ல வேலையத்த பயலுவ ஒண்ணுக்கு ரெண்டா கதைகட்றாக மாமா, நம்ம புள்ளக மேல குத்தங்குறை இல்ல… இதுக்கு மேல நீங்க தான் சொல்லணும்” சங்கரன் சொல்ல,

“எவனோ நாதியத்தவக பேச்ச நம்பி, நம்ம வூட்டு புள்ளங்க மேல களங்கம் பூசாதீக மாப்பிள” மரகதமும் வரிந்து பேசவும்,

“எங்கண்ணன் மவன் தான் உங்க வூட்டு புள்ள, எந்த உறவுல இவனையும் உங்க புள்ளையா சேர்த்து பேசுறீக புருசனும் பொஞ்சாதியும்” குலோத்துங்கன் தங்கை செல்வி கத்தரித்து பேசினார்.

“இரத்த சம்பந்தம் இல்லன்னாலும் ஸ்ரீராமும் என் மடியில தூக்கி வளர்த்த புள்ள தான். பாசத்துல பாகம் பிரிக்கற பழக்கம் எங்களுக்கு இல்ல ஆத்தா” மரகதத்தின் எதிர் பதிலும் அழுத்தமாக வர,

“அம்மாடி கேளுங்க அண்ணி கூத்த, நாத்தி மகனை விட்டுபுட்டு ஊரார் மகனுக்கு பரிஞ்சிட்டு வாரத, அவன் கூட பழகி கெட்ட பொண்ண, நம்ம கிருஷ்ணாக்கு கட்டி வைக்க பாக்க…” கோதாவரி விட்ட அறையில் செல்வியின் கன்னம் பழுத்திருந்தது.

“யார பத்தி பேசுறோம்னு வார்த்தைய அளந்து பேசு செல்வி, எங்க சீதா நெருப்புல போட்டாலும் தங்கமா தான் ஜொலிப்பா தகரமா கருத்து போக மாட்டா புரிஞ்சதா?” என்ற அவரின் எச்சரிக்கையில் செல்வி வாய்பொத்திக் கொள்ள,

“உனக்கும் இதே பதில் தான் கிருஷ்ணா, ஸ்ரீராமோட நினப்புல கூட தப்பு இருக்காதுன்னு நாங்க நம்புறோம் உனக்கும் நம்பிக்கை இருந்தா அவன்கிட்ட மன்னிப்பு கேளு” கோதாவரி பேச்சில் இவன் முகம் இருண்டது. குலோத்துங்கனும் மனைவியை மறுத்து பேசவில்லை. மகனை ஆழமாக பார்த்து நின்றார்.

“உன்னால எப்படி ஸ்ரீயை சந்தேகபட முடியுது கிருஷ்ணா?” என்று உடைந்து கேட்ட கௌதமி சீதாவிடம் திரும்பி, “உன்ன பத்தி பேச்சு தான் போயிட்டு இருக்கு, நீ இப்படி அமைதியா இருந்தா என்மகன் தான் தப்பானவனா தெரிவான், ஏதாவது வாய திறந்து பேசு” என்றார்.

“சின்னா என்னை தப்பா கூட பாத்ததில்ல அத்த, மாமா ஏன் இப்படி பேசுறார்னு எனக்கு… புரியல” அவள் குரலும் உடைந்தது.

“ஆமா உனக்கு ஒண்ணுமே புரியாது, அவனை எதுக்கு நீ சின்னானு கூப்பிடுற, நாங்கெல்லாம் வளர்ந்துட்டோம் நீங்க ரெண்டு பேர் மட்டும் இன்னும் சின்னபசங்கன்னு நினப்பா?” ராமகிருஷ்ணன் சீதாவிடம் பாய்ந்தான்.

“நேத்து என் முன்னாடியே அவனை ஒட்டிக்கிட்டு நின்ன இல்ல, அப்பவே உன்ன இழுத்து ஓரறை விட்டிருக்கணும்”

“நேத்து அவ பயந்து இருந்தா கிருஷ்ணா, நீயும் அவ நிலைமை புரிஞ்சிக்காம கோவப்பட்ட… அப்பவும் இப்பவும் நீ சீதாவ புரிஞ்சிக்கவே இல்லடா?” ஸ்ரீராம் சொல்லவும்,

“உன்கிட்ட பேசுனா அவன் ஏன்டீ பரிஞ்சுட்டு வரான்? அவனுங்க சொல்லும் போது கூட எனக்கு பெருசா தெரியல, இப்ப யோசிச்சு பார்த்தா எல்லாமே தப்பா தெரியுது… எங்கேஜ்மென்ட்ல ஒரு பாட்டு பாடின இல்ல, அத்தனை உருக்கமா சீதாராமன் கல்யாணத்தை பத்தி… அதை என்னை நினச்சு பாடினியா? இல்ல அவனை நினச்சு பாடினியா?” ராமகிருஷ்ணனின் மூர்க்கத்தனமான கேள்வியில் அதிர்ந்து சீதா தன் இருகைகளால் வாய் பொத்திக் கொண்டாள்.

“டேய், என்னடா பேசுற? நீ பழி சொல்றது நம்ம சீதாமேல, உன் விரலெடுத்து உன் கண்ணையே குத்திக்கிறது முட்டாள்தனம் கிருஷ்ணா” குலோத்துங்கன் கண்டிக்கவும், மற்றவர்கள் ராமகிருஷ்ணனின் இந்த குணத்தை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்து போயினர்.

அவன் எதையும் கண்டு கொள்வதாக இல்லை. “சொல்லுனு சொல்றேன் இல்ல…” சீதாவை அடிக்குரலில் மிரட்ட,

“இல்ல மாமா, நான்… கடவுளோட திருகாட்சியை மனசுல நினச்சு தான் பாடினேன்… வேற யாரையும் நினைக்கல” தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு. உண்மையைச் சொன்னாள்.

அவன் கண்கள் சுருங்கின. “அன்னிக்கு என்னை உன் பக்கத்தில கூட நெருங்க விடாம வீம்பு பிடிச்சவ, நேத்து உன் மனசுல ஒண்ணும் இல்லாம தான் அவன் கையை புடிச்சுட்டு இருந்துயா?” என்று கேட்டவன் அவளை அறைந்து விட்டிருந்தான்.

பெண்கள் சீதாவை தாங்கிக் கொள்ள, கோதாவரி மகனின் கன்னத்தில் மாறி மாறி அடிக்க தொடங்கினார்.

“நான் பெத்த பிள்ளையா டா நீ, எங்க இருந்துடா இத்தனை வக்கிரம் உனக்குள்ள வந்தது? பாவி, எந்த பேய், பிசாசு புடிச்சு உன்ன ஆட்டுதடா… பாவி பாவி உன்ன நம்பி நாங்க அழிஞ்சோமே”

அவரின் கையை தட்டி விட்டவன், “விடும்மா, தப்பு பண்ண அவளை விட்டு என்னை அடிக்கிற? உனக்கென்ன அறிவு மங்கி போச்சா?” கத்த,

“சீதாவ நீ புரிஞ்சிகிட்டது அவ்ளோ தான் டா, நான் எடுத்து சொன்னாலும் உனக்கு புரிய போறதில்ல, எப்ப அவமேல சந்தேகப்பட்டு கையோங்கினயோ அப்பவே நீ தரங்கெட்டு போயிட்ட டா”

“பெத்த புள்ள என்னைவிட உனக்கு அவ பெருசா போயிட்டாளா?”

“ஆமாண்டா, போயும் போயும் உன் கையில அவளை பிடிச்சு கொடுக்க ஆசபட்டேன் பாரு என் புத்திய சொல்லணும்…‌” அவர் தலையில் அடித்து கொள்ள,

“இனியும் அவளை கட்டிக்க எனக்கு ஒண்ணும் பைத்தியமில்ல ஷிட்” ராமகிருஷ்ணன் முடிவாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டான்.

புயலடித்து விட்ட சேதங்கள் அங்கே!

ராமகிருஷ்ணன் ஆடிய சென்ற வெறியாட்டத்தில் இளையவர்களைவிட பெரியவர்கள் தான் அதிகம் காயம்பட்டு இருந்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் நேராக பார்க்கவும் ஆண்கள் தயங்கி நிற்க, மகனை நினைத்து கோதாவரியின் விசும்பலும், மகள் வாழ்வை நினைத்து மரகதத்தின் விசும்பலும் அங்கே கேட்டிருந்தது.

சீதா வெதும்பலோடு கௌதமி தோளில் சாய்ந்திருக்க, ஸ்ரீராம், கீர்த்தி கவலையோடு நின்றிருந்தனர்.

“ம்க்கும் கிருஷ்ணா கொஞ்சம் ஷார்ட்டெம்பர்… டென்ஷன்ல அதிகமா கோபபட்டு கத்திடுவான். கொஞ்ச நேரத்தில நார்மலுக்கு வந்ததும் அவனே மன்னிப்பு கேட்டு பேசுவான்… நீங்க எதையும் மனசுல வச்சுக்காதீங்க…” குலோத்துங்கன் சமாதானம் பேச,

“வேணா மாமா, கழுத்துல தாலி ஏறும் முன்னவே எங்க கண்ணு முன்னால எங்க பொண்ண அடுக்காத பழி பேசி அடிக்கிறவரை நம்பி, எங்க சீதாம்மாவ கொடுக்க எங்களுக்கு தைரியம் இல்ல மாமா, முடிச்சுக்கலாம்” சங்கரன் முடிவாக சொல்லி விட்டார்.

“என்ன சங்கரா பொசுக்குனு முடிச்சுகிட்ட, நாங்க இருக்கோம், சீதாவ கண்ணுல வச்சு பாத்துக்க மாட்டோமா! கோதாவரி சொல்லுமா” என்று மனைவியை துணைக்கு அழைத்தார்.

அழுது வடிந்த முகத்தை அழுத்த துடைத்து கொண்டவர், “சந்தேகம் நச்சு பாம்பு மாதிரி மாமா, இவளை கட்டிவச்சாலும் காலம் முழுக்க கொத்திகிட்டே இருப்பான், நாம வளர்த்த பொண்ணு பாவம் நமக்கு வேணாம் மாமா” கோதாவரி மறுத்து சொல்லவும்,

“நிச்சயத்தோட கல்யாணம் நின்ன பொண்ணை இங்க யாரு துணிஞ்சு கட்டிக்குவாங்க? அவளை இப்படியே அம்போன்னு விடுறதும் பாவம் தான் புள்ள” குலோத்துங்கனும் தன் கருத்தை வலியுறுத்தினார்.

கோதாவரி தோய்ந்திருந்த சீதாவின் முகத்தை இரு கைகளாலும் வழித்துக் கொண்டார். “நீ விசனபடாத தாயீ, அவனுக்கு உன்ன வச்சு வாழ கொடுப்பன பத்தல… நீ கோபுரகலசம் ஆத்தா, மண்ணுல புரல விடமாட்டோம்” என்று ஆழ்மனத்தில் இருந்து வாக்கு தந்து நிமிர்ந்தார்.

“எங்க சீதா பட்டை தீட்டுன வைரக்கல்லு, அதை தகரத்துல பதிக்க நினச்ச நான் தான் பாவி… தெரிஞ்சோ தெரியாமையோ ஸ்ரீராமன் பேரோட சீதா பேரை சேத்துவச்சு ஊர்பேச்சு வந்திருச்சு… இப்ப நீ சொல்லு பரமு, எங்க சீதாவ உன் மருமவளா நீ ஏத்துப்பியாய்யா” கோதாவரி குரல் இறங்கி கேட்க,

“என்னக்கா இதெல்லாம், உங்க பேச்சை நாங்க மறுத்து இருக்கோமா? நம்ம குடும்பம் சொந்தமா சேர்ந்தா முதல்ல சந்தோஷபடறது நான் தானக்கா” பரமேஸ்வரன் சம்மதம் சொல்லவும், அங்கிருந்த சில முகங்களில் நிம்மதியும் சில முகங்கள் அதிர்ச்சியும் குழப்பத்தையும் காட்டியன.

“இல்ல, இது நடக்காது” மறுத்து சொன்னது சீதா மஹாலட்சுமி தான்.

“அப்படி சொல்லாத சீதாம்மா”

“இந்த கல்யாணம் நடந்தா, எங்கள பத்தி ஊர் பேசினதும், மாமா சந்தேகப்பட்டதும் நிசம்னு ஆகிடும்! ஸ்ரீராமையும் கீர்த்தி அக்காவையும் பிரிச்சு, அவங்க சந்தோசத்தை அழிச்சு எனக்கு கல்யாணம் வேணாம்… இந்த ஒருமுறை மட்டும் நான் சொல்லறதை கேளுங்க… எனக்கு கல்யாணம் வேணாம் விட்டுடுங்க ப்ளீஸ்…” என்று அனைவரின் முன்பும் கைகூப்பி கேட்டு விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அங்கிருந்த அனைவரின் பார்வையும் ஸ்ரீராம், கீர்த்திவாஷினி மீது தயக்கமாக மோதி நிற்க, இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்தனர். கீர்த்தி அவனை பார்வையால் மிரட்டி கொண்டிருந்தாள்.

*************

வருவாள்…