charkarainilave-5

charkarainilave-5

நிலவு – 5

மயக்கம் தெளிந்த சிந்துவை, அவசரமாக மருத்துவமனைக்கு அன்று அழைத்துச் செல்ல, அவளைப் பரிசோதித்த மருத்துவர் பயப்பட ஒன்றும் இல்லை என்று அனைவரையும் அமைதிப் படுத்தினார்.

கோடைவெயிலின் உஷ்ணம், ஓய்வின்மை, அதோடு கர்ப்பிணிக்கே உண்டான சோர்வும் சேர்ந்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்றி வைத்திருக்க, அதனைச் சமன்படுத்தவென இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றி, அங்கேயே ஓய்வெடுக்க வைத்தார்.

கூடிய வரையில் மன உளைச்சல்கள் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுரை சொன்னவர், மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், அது கர்ப்பவதிக்கு நல்லதல்ல என்ற எச்சரிக்கையும் செய்து, இரவே வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

அன்றைய இரவில் நர்மதாவும் கங்காவும், தங்கள் குடும்பத்தாரை ஊருக்கு அனுப்பி விட்டு, அவர்கள் மட்டும் தாய்வீட்டில் தங்கிவிட, அனைவரும் அவரவர்களின் எண்ணத்தில் உழன்றபடியே உறங்கச் சென்றனர்.

அனைவரிடமும் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து அமைதியாக நடமாட ஆரம்பித்திருந்தாள் மிதுனா. தங்களின் மேல் கோபத்தில் இருக்கிறாள் என்று அவர்களுக்கும் விளங்கினாலும், என்னவென்று சமாதானம் செய்வது? இதுவரையில் அவள், தங்களிடம் முகம் சுளிக்காமல் பேசுவதே பெரிய விசயமாக எடுத்துக்கொண்டு  அமைதியாக இருந்தனர்.

மஞ்சுளாவும் பாஸ்கரும், மேல் வீட்டை எட்டிப் பார்க்கவில்லை. வளைகாப்பு முடிந்த இரண்டு நாட்களில், சிந்துவும் மெதுவாக தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கியிருக்க, வீடு அமைதியாக இருந்தது.

ஊருக்கு புறப்படும் முன், மிதுனாவை அழைத்த நர்மதா, “நடந்ததெல்லாம் பெரிய பேச்சுதான். எதையும் சரின்னு சொல்லி நியாயப்படுத்த முடியாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு மறக்க முயற்சி பண்ணு மிதுனா” எதார்த்தத்தை கூறி அவளைச் சமாதானப்படுத்த,

“உன்னை குத்தம் சொல்லிப் பாக்கனும்னு நாங்க நினைக்கல. சந்தர்ப்பம் சூழ்நிலை எங்களையும் பேச வைச்சிருச்சு… நீயும் சிந்துவும் எப்பவும் எங்களுக்கு ஒன்னுதான்” தணிந்து கங்காவும் சொல்ல, தன்னை விட வயதில் பெரியவர்களை அதற்கு மேல் இறங்க வைக்க, மிதுனாவிற்கும் மனம் வரவில்லை.

“நானும் கொஞ்சம் யோசிச்சிருக்கணும் அண்ணி, என் பேச்சுக்கு மறுப்பு இருக்காதுன்னு முடிவு பண்ணினது தப்பா போச்சு” தன்னைத்தானே சுதாரித்துக் கொண்டு, சமாதனமாகி விட்டாள்.

இன்னும் பல அனுசரணையான பேச்சுக்களும் அமைதியான விசாரிப்புகளிலும் மிதுனாவுடன் பேசியவர்கள், தங்களின் ஆதரவு என்றும் தம்பியின் மனைவிக்கு உண்டு என்று தெரிவித்தே ஊருக்கு கிளம்பி சென்றனர். மிதுனாவும், அவர்களை சிரித்த முகத்துடனே, அனுப்பி வைத்தாள். 

இந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்தபடியே யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தது, மிதுனாவிற்கும்  மனபாரத்தை மேலும் ஏற்றி வைத்ததே தவிர குறையவில்லை. கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டே வீட்டிருக்குள் வளைய வருவதும் பெருத்த சங்கடமாய் தோன்றியது.

ஏனோ, அவளுக்கு வேலைக்கு சென்று வர மனம் ஒப்பவில்லை. வீட்டின் சூழ்நிலை சரியான பிறகு போய்க் கொள்ளலாம் என்று, பத்து நாட்களுக்கு நீண்ட விடுப்பு சொல்லியிருந்தாள்.

சிந்துவை கவனித்துக் கொண்டும், மாமியாருக்கு உதவி செய்து கொண்டும் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தவள், மறந்தும் கூட தயானந்தனிடம் பேச முயற்சிக்கவில்லை.

அவனும், மனைவியை முறைத்து பார்க்கும் வேலையை இரண்டு நாட்கள் செவ்வென செய்து கொண்டு, அவளது கோபத்தின் அளவை ஏற்றி வைத்துக் கொண்டிருந்தான்.

மூன்றாம் நாளில் இருந்து, தனது தேவைகளை கேட்கும் பாவனையில் இவன் பேசவர, அவனுக்கு பதில் சொல்லாமல், வேண்டியதை செய்துவிட்டு, கணவனுடன்  பேசுவதை தவிர்த்தாள் மிதுனா.

‘இவ செஞ்ச வேலைக்கு பக்கத்துல கூப்பிட்டு வச்சு கொஞ்சுவாங்களா? அதிகப் பிரசங்கி… செய்றதையும் செஞ்சுட்டு, முறைக்கிறத பாரு’ மனைவியை பார்க்கும் பொழுதெல்லாம், சண்டை போடாத குறையாக மனதிற்குள் கடித்து வைக்க, பதிலுக்கு அவளும் பார்வையாலேயே பருத்தியாக வெடித்தாள்.

வீட்டில் சமையலறை, படுக்கையறை என இரண்டு அறை மட்டுமே இருக்க, தனிமை என்பதும் கேள்விக்குறியாகி விட்டது. கீழே பெண்களை விட்டுவிட்டு, இரவு உறக்கத்தை மொட்டைமாடியில் மாற்றிக் கொண்டிருந்தான் தயானந்தன்.

இரண்டு நாட்கள் அவளோடு கோபத்தை கொண்டாடியவனுக்கு, மூன்றாம் நாளில் இருந்து, மனைவியின் முகம் பார்த்து பேச வேண்டுமென்று மனம் அலைபாய்ந்திட, தன்னையும் அறியாமல் பேச ஆரம்பித்திருந்தான்.

இவனது கோபத்தீயில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தவள், கணவனின் பாச அழைப்பில் மேலும் நெய் வார்த்துக் கொண்டு, தனது உஷ்ணத்தை வளர்த்துக் கொண்டாள்.

‘இவர் நினைச்சா கோபப்படவும், வந்து பேசுவும், இவர் கீ குடுக்குற பொம்மையா நானு? தயாவுக்கு தயவுதாட்சணம் பார்த்தா, என்னோட சூடு சொரணை எல்லாம் மர்கயாதான். நம்ம பக்கம் நூல் விட்டு, பட்டம் விட வரட்டும், காலுக்கு கீழேயே போட்டு நசுக்குறேன்… தன் பங்கிற்கு மனதிற்குள் கனஜோராய் சவால்களை விட்டுக்கொண்டு, நடமாடிக் கொண்டிருந்தாள் மிதுனா.

மதியம் உணவருந்த வந்த வேளையில் கிடைத்த சொற்ப நேரத்தில், அவன் முகம் பார்த்தும் பேசாமல் இருக்கவும், வம்படியாக மனைவியை இழுத்து, வாயில் ஒரு கவளம் உணவை திணித்தான் தயா.

சாதரணமாகவே முறைப்பவள், அவனது இந்தச் செயலில் பார்வையாலேயே ருத்ர தாண்டவம் ஆடிவிட்டாள். வாயில் உள்ளதை அவசரகதியில் விழுங்கியவள்,

சரியான முரட்டு தடியன்… எப்பவும் அக்கம் பக்கம் பாக்குறதே இல்லை பல்லைக் கடித்துக் கொண்டு முணுமுணுக்க,

“எப்ப இருந்து இந்த பழக்கம்?” மனைவியை சீண்டியபடியே தயா கேட்க,

“எந்த பழக்கம்?” காட்டமாய் எதிர் கேள்வி கேட்டாள் மிதுனா.

“நாள் முழுக்க மனசுக்குள்ளயே பேசிக்கிற பழக்கம்”

“எப்படி பேசணும்னு கூட, உங்ககிட்ட கேட்டுட்டுதான் செய்யனுமா?” வார்த்தைகளில் இவள் பட்டாசு வெடிக்க,

“உன் பார்வையிலயும் பேச்சுலயும், இடி மின்னல் எல்லாம் தெறிச்சிட்டு வருதுடி. என் கூட நல்லவிதமா பேசு மிது! இப்படியே இருந்தா கொஞ்சமும் நல்லா இல்ல…” கணவனும் சமாதான மத்தாப்புக்களை சிதற விட்டான்.

“இந்த கொம்பேரிமூக்கன், ஜோடிக்கு, எல்லாமே கணக்கில்லாமதான் வரும். இவர்கிட்ட நல்ல விதமா பேசிட்டாலும், கூட்டிட்டு போய் டூயட் பாடிடப் போறாரா? உங்க கோபத்துக்கு பயந்துதான் நாங்க பேசமா இருந்தோமாக்கும்” படபட பட்டாசுச் சரமாய் வெடித்தவள், ஏகத்திற்கும் முகத்தை சுளித்துக் கொண்டே, உணவு பரிமாறினாள்.

“என்னா பேச்சு பேசுற? உனக்கு எங்கே இருந்துடி இவ்வளவு வாய் வந்தது!” பொய்யாய் அலுத்துக் கொண்டவனை,

“வந்த வேலை என்னவோ பார்த்துட்டு, கிளம்புங்க” கடித்து வைக்காத குறையாக, விரட்டியும் விட்டாள்.

“நீ என்னதான் விரட்டினாலும், இந்த மானங் கெட்ட மனசு, உன்கூட பேசச் சொல்லி பாடாபடுத்துடி” பாவமாய் பதில் பேசிவிட்டு அகன்றான்.

மீண்டும் மீண்டும் அவளோடு வார்த்தையாடி சமாதானப்படுத்த ஆசைதான். ஆனால் அவன் இருந்த இடம், சூழ்நிலை அதை செய்ய இயலாமல் போக, மனதிற்குள் தன் எண்ணங்களை அடக்கி வைத்தான். அதோடு மற்றொரு தலைவலியும் அவனுக்கு வந்து சேர்ந்திருந்தது.

“மொட்டைமாடியில செட்டு போட்டு, சின்னதா ஒரு ரூம் போட ஏற்பாடு பண்ணு தம்பி… இல்லைன்னா நைட் புழங்குறதுக்கு மட்டும் ஒருரூம் தனியா வாடகைக்கு பிடி. புருஷன் பொஞ்சாதி எந்த நேரமும் தனித்தனியா இருக்குறது நல்லதில்ல” மரகதம் நடப்பை எடுத்துரைக்க,

“கொஞ்சநாள் தானேம்மா இப்படியே இருப்போம்” தயா மழுப்பினாலும், அவர் விடவில்லை.

“இந்த சமாதானம் எல்லாம் வேணாம், ஒழுங்கா ஒரு ஏற்பாடு பண்ணிக்கோ… இல்லன்னா ஒரு தனி வீடு பிடிச்சுக்குடு. நானும் சிந்துவும் அங்கே போறோம்” மரகதம் புதிய உத்தரவைப் போட, தயா அதிர்ந்தே போனான்.

“ம்மா… என்ன இது? இப்டியெல்லாம் முடிவு பண்றீங்க!”

“உன்கிட்ட ஒரு மாசமா சொல்றதுதானே தம்பி… நீ இதுவரைக்கும் காதுல வாங்காம இருந்தா, நான் என்ன செய்ய?” மரகதம் கேள்வியை மகனிடமே திருப்ப,

“சரிமா… சிந்து பிரசவம் முடியட்டும், பாக்கலாம்”

“அதெல்லாம் நடக்கிறப்போ தானா நடக்கும். நீ, இந்த வேலைய மொத பாரு” விடாமல் வீம்பாக நிற்க, சரியென்று சம்மதித்து அதற்கான யோசனையில் இறங்கி விட்டான்.

தாயின் பேச்சிற்கு, மனைவியிடம் அபிப்பிராயம் கேட்கலாம் என்றால், இன்னும் அவள், கணவனுடன் முகத்திருப்பல் விழாவை, மிக விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

அதற்கும் அசராமல் இவன் கேட்க, “இத்தன வருஷமா, நான் சொல்றததான் நீங்க செஞ்சுட்டு வர்றீங்களா? எங்கே இருந்தாலும் இனிமே நான் இப்டிதான்” அவள் பிடி கொடுக்காமல் பேச, இவனும் முழித்துக் கொண்டு நின்றான்.

மனம் முழுவதும் மனைவியை தியானம் செய்து கொண்டிருக்க, அன்று இரவு வேலை முடித்து சீக்கிரமே வீட்டிற்கு வந்தவன், உணவையும் எடுத்துக் கொள்ளாமல், தலைவலி என்ற காரணத்தை சொல்லி, மொட்டைமாடிக்கு சென்று விட்டான்.

அவன் சென்ற பத்தாவது நிமிடத்தில், கையில் பால் மற்றும் மாத்திரை, தைலத்தோடு மிதுனா மேலே செல்ல,

லஜ்ஜாவதியே என்ன

அசத்துற ரதியே

லஜ்ஜாவதியே என்ன

அசத்துற ரதியே

ராட்சசியோ தேவதையோ

ரெண்டும் சேர்ந்த பெண்ணோ

அடைமழையோ அனல் வெயிலோ

ரெண்டும் சேர்ந்த கண்ணோ

தொட்டவுடன் ஓடுறியே

ஏ தொட்டாசிணுங்கி பெண் தானோ

அழகினாலே அடிமையாக்கும்

ராஜ ராஜ ராணி

வழக்கம் போல் தன் மொபைல் எஃப்எம்மில் பாட்டை ரசித்துக் கொண்டிருந்தான் தயானந்தன்.

நிலா வெளிச்சத்தில், மெல்லிய தென்றல் காற்று வருடிச் செல்ல, மனைவியின் கலைந்த நெற்றிமுடி அவனை பித்தம் கொள்ள வைக்க,

“ஆயுசு நூறுடி என் சக்கரகட்டி! இப்போதான் உன்னை நினைச்சு இந்த பாட்ட ரசிச்சேன்” உல்லாசக் களிப்பில் பேச,  

“பால் சாப்பிட்டு, மாத்திரை போட்டுக்கோங்க” மிதுனா  சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்க,

“எனக்கு தலைவலி போய் வயித்து வலி வந்திருச்சு… மாத்திரை வேணாம், கொண்டு போ” முறுக்கிக் கொண்டு பதில் பேசினான்.

“இப்போ வயித்து வலிக்கு மருந்து கொண்டுவந்தா, வலி காலுக்கு இறங்கிடுமா?” கணவனின் கள்ளத்தனத்தை அறிந்தே இவள் கேட்க, மனைவியின் கேள்வியில் எழுந்து அமர்ந்தவன்,

“உன்னை பேச வைக்க, நான் சீக்காளியா மாறனும்னா, அப்பிடியே மாறிட்டுப் போறேன்” என்றவாறே, அவளை இழுத்து தன்மேல் விழ வைத்தான்.

எதிர்பாராத விசையில் கணவனின் மேல் எசகுபிசகாய் விழுந்தவள், சுதாரிக்கும் முன்பே, மனைவியை தன் முரட்டுப் பிடிக்குள் கொண்டு வந்திருந்தான் தயானந்தன்.

“விடுடா தடியா… இதுக்கு மட்டும் பொண்டாட்டி வேணுமா?” திமிறிய படியே மிதுனா சிடுசிடுக்க.

“இனி உன்ன ஒன்னும் சொல்லலடி… நீ பத்திரக்காளியா நின்னாலும், என் சக்கர நிலவுன்னு கொஞ்சிட்டு போறேன் சரியா? உன்னோட முறைப்ப, என்னால தாக்கு பிடிக்க முடியல” தனது அவஸ்தைகளை பட்டியல் இட்டவனின் மோவாய், அவள் தோளோடு உரசி, காது மடல்களை கடித்து வைக்க, இவளுக்கும் அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க தொடங்கியது.

அவனது கன்னத்து முட்கள் மனைவியின் கழுத்தை பதம் பார்க்க, அவனின் கைகள், கொடியிடையின் ஆராய்ச்சியில் இறங்க முயற்சித்தது. மூச்சுக் காற்றில் வெப்பம் சேரத் துடித்தவள், முயன்று அவனை விலக்கி விட, தனது உடும்பு பிடியில், இதழ் பயணத்தை அவளின் மேல் நடத்த முயற்சித்தான் தயானந்தன்.

கூச்சம் தாங்காமல் கணவனை பலம் கொண்டு விளக்கி விட்டு அவனிடமிருந்து நகன்று கொண்டாள்.

செக்கச் சிவந்திருந்த முகம், கணவனின் மோகத்தில் தன்னை மூழ்கடித்துக் கொண்டதை வெளிப்படையாக காட்டியது. தனது வதனமே, தனக்கு எதிரியாக மாறி நிற்க, அதனுடனும் மனதிற்குள் சண்டை பிடித்தாள் மிதுனா.

‘ச்சே… என் முகமே எனக்கு வில்லியா இருக்கு, இப்பிடியா மயங்கிப்போய் சொக்கிப் விழணும்’ தன்னைதானே பழித்துக் கொண்டு, முகத்தில் கடுமையை வரவழைத்திருக்க,

“என் சக்கரகட்டி, நிமிசத்துல மிளகாபஜ்ஜியா மாறிட்டா… என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோடி” கணவன் தன் சமாதானத்தை கையில் எடுக்க,

“இதத்தானே நானும் உங்ககிட்ட எதிர்பார்த்தேன், என் நெலம தெரிஞ்சும், எல்லார் முன்னாடியும் பேசிட்டு, இப்போ புலம்பி என்ன பண்ண?” பொறியத் தொடங்கி விட்டாள்.

“பிளீஸ், அந்த பேச்ச விடு மிது… இதுக்கு மேலயும் என்னை பழிவாங்காதே” என்றவாறே மீண்டும் அவளை இழுத்துக்கொள்ள முயல, நொடியில் சுதாரித்து எழுந்து விட்டாள்.

“நீங்க பேசிட்டு, நான் பழி வாங்கிறதா சொல்றது, கொஞ்சமும் நியாயம் இல்ல… நல்லா அனுபவிங்க” வெடுக்கென்று கூறி கீழே இறங்கிச் சென்று விட்டாள்.

பெருமூச்சு விட்டபடியே மனைவியின் நினைவில் தவித்தவன், வானத்தில் தனியாக உலா வந்து கொண்டிருந்த பால்நிலாவினைப் பார்த்து,

‘உன்னைப் போல நானும் தனியாகத்தான் காய்ந்து கொண்டிருக்கிறேன்’என்றே மனதிற்குள் பிதற்றித் தள்ளினான்.

“என்னை அவளுக்கு புரிய வைக்கணும், நானும் அவள புரிஞ்சுக்கணும், இது நடக்குமா? இதுக்கு எத்தன காலம் ஆகப் போகுதோ தெரியலையே?” தன் புலம்பலைத் தொடர்ந்தவன்,

நிலா வெளிச்சத்தில் தன் மனைவியை எப்படி தன்னோடு பேச வைப்பதென்று மிகத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். அவனது யோசனைகள் யாவும் பெரும் மலைப்பாய் தோன்ற, கவலைகளால் அழுத்தப்பட்ட மனது தலைவலியில் வந்து முடிவுற்றது.

“ச்சே… என்ன வாழ்க்கைடா இது” என்று அலுத்துக் கொண்டவன், இத்தனை பாடு படுவதற்காகவா கிராமத்தை விட்டு, நகரத்திற்கு வந்தோம் என்றே மனம் ஆயாசப்பட்டது.

வாழ்க்கைப் பாடத்தை கற்றுத் தந்த, அவனது கிராமத்து நாட்களை நினைக்கும் பொழுதே, மனதில் பல எண்ணங்கள் படையெடுக்க, அந்தத் தனிமையில், அவனது கிராமத்திற்கே சென்று விட்டான் தயானந்தன்.

****************************************************

விருப்பாச்சி… தயானந்தன் பிறந்து வளர்ந்த் ஊர். இது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வருவாய் கிராமம். ஒட்டன் சத்திரத்தில் இருந்து சுமார் 9.5 கி.மீ தூரத்தில் அமைந்த சிறிய கிராமம்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்த விருப்பாச்சி கோபால நாயக்கர் பிறந்த ஊர். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள, விருப்பாச்சிபாளையம் என்னும் ஊரினை ஆட்சி செய்த குறுநில மன்னர். இவரது மற்றொரு பெயர் திருமலை கோபால சின்னப்ப நாயக்கர்.

வரலாற்றில் அதிகம் அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர். அவர் ஆட்சி செய்த விருப்பாச்சி பாளையமே, தற்போது விருப்பாச்சி என திரிந்துள்ளது. ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட, பதினெட்டாம் நூற்றாண்டில் படை திரட்டி கூட்டமைப்புச் செய்து, போரிட்ட மன்னர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

ராணி வேலுநாச்சியாருக்கும் ஊமைத் துரைக்கும் அடைக்கலம் கொடுத்ததால், வெள்ளையர்கள், கோபால நாயக்கர் மீது ஆத்திரம் அடைந்தனர். ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டிப் புரட்சி செய்த காரணத்தால் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியரால் 1801–ம் ஆண்டு செப்டம்பரில், இவர் தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது நினைவாலயம் விருப்பாச்சி பகுதியில் அமைந்துள்ளது. திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம், சுமார் அறுபத்து ஒன்பது லட்சம் செலவில், 0.024 ஹெக்டேர் பரப்பளவில், தமிழக அரசால் நிறுவப்பட்டது.

விருப்பாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த நல்காசி(நங்காஞ்சி) ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிற்றுராகும். இந்த கிராமத்தில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் பரப்பலாறு அணைக்கு அருகே, தலைக்குத்து(தலையூற்று) அருவி அமைந்துள்ளது.

இயற்கையும் நீர்வளமும் சூழ்ந்த இந்தப் பகுதியில் பசுமைக்கு பஞ்சமில்லை. இங்கு தோட்டப் பயிர்களான முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ், மக்காசோளம் முட்டைக்கோஸ் வெங்காயம் போன்றவை அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன.

வடகாடு, பாச்சலூர், தாண்டிக்குடி, பண்ணைக்காடு ஆகிய மலைப் பகுதியில் விளையும் மலைவாழைக்கு பெரிய சந்தை இங்கு இருந்துள்ளது. இன்றைய வாகனப் போக்குவரத்தால் தற்போதைய சந்தைக் கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளன.

சுதந்திர இந்தியாவிற்கு முன்பு, இந்த ஊரில் ஜமீன்தார் ஆட்சி இருந்தது. ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட விருப்பாச்சி ஜமீனுடன் வேலூர், இடையகோட்டை, சத்திரப்பட்டி போன்ற ஜமீன்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகின்றன.  

ஜமீன்தாரின் காலத்தில், அந்த மாளிகையில் தலைமை கணக்குபிள்ளையாக இருந்தவர், தயானந்தனின் தாத்தா தாணுமலையான். ஜமீன் விசுவாசி, கணக்கு வழக்குகளை நிர்வகிப்பதில் தேர்ந்த திறமைசாலி.

உள்ளார்ந்த அன்போடு அனைவரையும் அனுசரித்துப் போகும் இவரின் குணத்தினால், ஊர் மக்களின் நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றுவிட, அந்த காலத்திலேயே புகழோடும், வசதி வாய்ப்புகளோடும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்.  

இவரின் காரிய நேர்த்தியைப் பார்த்தே, ஜமீனில் இருந்து பெரிய மாளிகை போன்ற வீடு அவருக்கு தானமாக வழங்கப்பட்டிருந்தது. நிலபுலன்கள் அதிக அளவில் கைவசம் இல்லையென்றாலும், அந்த மாடமாளிகையே பெரும் சொத்தாக அவருக்கு மாறியிருந்தது.

தனது மகன் அறிவுநம்பியை விவசாயத்தில் சிறிய வயதில் இருந்தே ஈடுபடுத்த, அவரும் அதில் நன்றாக அனுபவம் பெற்றார். தாணுமாலையான் காலத்திற்கு பிறகு, ஜமீன் முறையும் ஒழிய, தானமாக கொடுக்கப்பட்ட ஜமீனின் பெரியவீடு மட்டும் எப்படியோ தப்பித்து இவர்களுக்கு சொந்தமாக மாறியிருந்தது. அப்படி மாற்றி இருந்தார் தயானந்தனின் தந்தை அறிவுநம்பி.

ஆடம்பர வாழ்வில் மிகுந்த விருப்பம் உள்ளவர் அறிவுநம்பி. நல்ல அறிவாளி. ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நிலங்களை போக்கியம் மற்றும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருபவர்.

ஒரு குத்தகைதாரர், குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்யும் நிலத்திற்கு, இதுவரை எந்த உச்சவரம்பும் விதிக்கப்படவில்லை. அதனால் அந்த முறையில் மிகப் பெரிய அளவிலேயே விவசாயத்தை செய்து வந்தார்.

குத்தகை ஒப்பந்தத்தை எந்த வெளி ஒப்புதலும் இல்லாமல், வாய் வார்த்தையாக, இரு தரப்பும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நீட்டித்தும் கொள்வார். ஊர் மக்களுக்கு, அறிவு நம்பியின் மீது அத்தனை நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

மூன்றுக்கு, ஒன்று என்ற பங்கு விகிதத்தில் விளைச்சலையோ அல்லது பணத்தையோ நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு வருவாயாக கொடுத்து, மிகச் சிறப்புடனே குத்தகையை எந்த வித சுணக்கமும் இல்லாமல் செழுமையாக நடத்தி வந்தார் அறிவுநம்பி.

இவரின் ராசி மற்றும் தொழில் நேர்த்தியில், இவர் குத்தகைக்கு எடுத்த நிலங்களில், அதிக மகசூல் மற்றும் சாகுபடியை வாரிக் குவிக்க, பலரும் தானாகவே முன்வந்து நிலத்தை அவரிடம் குத்தகைக்கு கொடுக்க முன்வந்தனர்.

அந்த வகையில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் சென்று தன்தொழிலை திறம்பட நடத்தி, வருமானம் ஈட்டி வந்தார். பெருமளவு சோளம், கம்பு, நெல், பருத்தி போன்றவற்றை பயிர் செய்து வந்தவர், காய்கறிகளிலும் தன் கவனத்தை திசை திருப்பி, அந்த சாகுபடியிலும் வெற்றி கண்டார்.

காய்கறிகளை, ஒட்டன்சத்திரத்தை விடுத்து, சரக்கு லாரிகளில் ஏற்றிக்கொண்டு, சென்னைக்கே சென்று, ஒரே மூச்சில் வியாபாரத்தையும் முடித்து வந்தார். நீண்ட பேச்சுக்களை வளர்க்காமல், வியாபாரத்தை ஒரே மூச்சில் முடிக்கும் காரியவாதி.

அறிவுநம்பி, தனக்கு வரும் லாபங்களில் நகைகளையும் ஆடம்பர பொருட்களையும் வாங்கிக் குவித்தவர், நிலத்தை மட்டும் குத்தகை முறையிலேயே எடுத்து, விவசாயம் பார்த்து வந்தார்.

தன்னைவிட அந்தஸ்தத்தில் குறைந்த, விவசாயக் கூலியின் மகள் மரகதத்தின் மேல் ஆசை கொள்ள, மகனின் விருப்பத்திற்கு செவி சாய்து, அவரது தாய் கோமளவல்லி திருமணத்தை முடித்து வைத்து விட்டார்.

அந்தஸ்து பேதம் சொல்லிக் காண்பித்தே, மருமகளை எப்பொழுதும் தள்ளி நிறுத்துபவர். தனது வெறுப்பினை எல்லாம் மகன் வீட்டில் இல்லாத பொழுதுகளில், மருமகளை குத்திக் குடைந்தே, தன்மனதை சாந்தப்படுத்திக் கொண்டார்.

தாய் வீட்டின் ஏழ்மை மற்றும் உலக நியதி, கணவன் மேல் வைத்த பாசம் எல்லாம் சேர்ந்து, மாமியாரின் வசவுகளை மரகதமும் கணவனிடம் சொல்லாமல் மறைத்து விடுவார்.

ஊரெல்லாம் சுற்றிக், களைத்து வருபவரிடம் எதையும் சொல்லாமல், இன்முகத்துடன் காலத்தை கடத்தி வந்தார் மரகதம். தம்பதியரின் காதல் வாழ்க்கைக்கு பரிசாக அடுதடுத்து பெண் மகவுகளை பெற்றிட, அதற்கும் மருமகளை பழித்து, திட்டித் தீர்த்தார் கோமளவல்லி.

மாமியாரின் பேரன் ஆசைக்கு இணங்கி, ஆண் பிள்ளைக்கென பல பரிகாரங்களை செய்த பிறகே, தயானந்தனைப் பெற்றெடுத்தார் மரகதம். அதன் பிறகு பாட்டியின் பாசப்பார்வை பேரன் மீது விழ, அவரது சொல்லம்புகள் சற்று ஒய்வு கொண்டன.

வாழ்க்கை சந்தோஷமாக பயணிக்கும் வேளையில், ஆந்திர நண்பர் ஒருவர் புதிய வகை உரத்தை தாயரித்து, அறிவுநம்பியிடம் கொடுக்க, அந்த உரமும் ஏமாற்றத்தை தராமல் பயிர்களில் அதிக வளர்ச்சியைக் கொடுத்தது.

அதை பார்த்து, தான்குத்தகை எடுத்த அனைத்து வயல்களிலும் அறிவுநம்பி, அந்த உரத்தை தெளித்து வர, ஆரம்ப நாட்களில் வளர்ச்சியை கொடுத்த அந்த மருந்து, ஆறு மாதங்கள் கழித்து அதன் சுயரூபத்தை காண்பித்தது.

உரத்தின் வீரியம் முதல் ஆறுமாதங்கள் அதிக வளர்ச்சியை கொடுத்து, அதன் பிறகு விளைச்சலை பாதித்து, கொஞ்சம் கொஞ்சமாக மண்ணின் வளத்தையே சிதைத்து விட்டது.

உரமருந்தின் வீரியத்தினால்தான் இத்தனை பாதிப்புகள் என்று கண்டுபிடிப்பதற்குள், இரண்டு வருடங்கள் கடந்து போயிருந்தன. அதற்குள் அந்த ஆந்திரவாசி தலைமறைவாகி விட்டிருந்தான்.

அந்த நேரத்தில் தயானந்தனுக்கு ஏழுவயது. கடைக்குட்டி சிந்து பிறந்த நேரம். பெண் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்று மீண்டும் கோமளவல்லி தன் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்து விட்டார்.

விளைச்சல் அனைத்தும் பாதிக்கப்பட்டு, பெருமளவில் நஷ்டமடைந்த அறிவுநம்பி, நிலத்து சொந்தக்காரர்களிடம் பேசியபடியே குத்தகைப் பணத்தை கொடுத்து தன் கௌரவத்தை காத்துக் கொண்டார்.

ஆனாலும் மீண்டும் அதே நிலத்தில் பயிர் செய்ய ஆரம்பிக்க, அதுவும் ஏமாற்றத்தை கொடுக்கவும், இம்முறை நில உரிமையாளர்களிடம் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தார்.

ஆரம்ப நாட்களில் அறிவுநம்பியின் பதிலுக்கு சரியென்று தலையாட்டியவர்கள், நாட்கள் செல்லச் செல்ல பணம் கேட்டு, வீட்டிற்கே வந்து சத்தம் போட்டு சென்றனர். மண்ணின் வளம் பாதிக்கப்பட்டதால், பயிர் செய்வதும் முடியாமல் போக, அந்த ஆதங்கமும் சேர்ந்து பெரும் சண்டைகள் நாள்தோறும் அரங்கேறத் தொடங்கின.

தங்களின் வாழ்வாதாரமே போய் விட்டது என்று கத்தி கூப்பாடு போட்டு, பஞ்சாயத்து வரை போய் விட, வீட்டிலுள்ள நகைகளை விற்று ஓரளவு பணத்தை கொடுத்து சமன் செய்தவர், மீதிப் பணத்திற்கு, தான்வசித்து வரும் பெரிய வீட்டை அடமானம் வைத்து கணக்கினை முடித்தார்.

அந்த நேரத்தில் பெரிய பெண் நர்மதாவும் வயதிற்கு வர, குடும்ப அந்தஸ்தை காரணம் காட்டி, பெரிய விழாவாக எடுக்க வேண்டும் என்று கோமளவல்லி சொல்ல, அன்று ஆரம்பமாகியது கடன் வாங்கி அனைத்தையும் செய்யும் நடைமுறை.

மனமொடிந்த நிலையில், தொழிலில் நாட்டம் இல்லாமல் அறிவுநம்பி நாட்களை கடத்தி வர, வீட்டில் பிள்ளைகள் வளர்ந்து வந்தார்கள். ஊரில் அனைவருக்கும் பணத்தை கொடுத்து, தனது பிரச்னையை முடித்துக் கொண்டதால், அறிவுநம்பியின் குடும்பத்திற்கு எப்பொழுதும் மரியாதை குறையவில்லை.

தொழில்சுமையும், குடும்பச் சுமையும் ஒரே நேரத்தில் அழுத்தம் கொடுக்க, கடன் கேட்ககேட்க கிடைத்தாலும், அறிவுநம்பியால் ஓரளவிற்கு மேல், பாரத்தை சுமக்க முடியவில்லை. ஒரு நாள் இரவு தூக்கத்தில் இறைவனை கண்டு தனது லாப நஷ்ட கணக்குகளை தீர்க்க நெஞ்சுவலியோடு சென்று விட்டார்.

தந்தை இறந்த பொழுது தயானந்தனுக்கு வயது பதினைந்து. வீட்டில் மூத்தவராக கோமளவல்லி சொற்படியே குடும்பம் நடக்க, அடுத்த இரண்டு வருடத்தில் பெரிய பெண் நர்மதாவிற்கு அவர்களுக்கு சமமான அந்தஸ்தத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. அனைத்தும் வீட்டின் மேல் கடன் வாங்கியே நடத்தினார் அந்த பெரியவர்.

குடும்ப கௌரவத்தை எக்காரணம் கொண்டும் எங்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றவரின் பிடிவாதத்தில், கடன்சுமை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருந்தது.

பள்ளி இறுதியாண்டு வரை படித்த தயானந்தனும், பட்டப் படிப்பு படிக்காமல் விவசாயத்தில் இறங்க, அவனுக்கு அத்தனை பக்குவம் வரவில்லை. அவனது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.  

வீட்டில் அனைவரும் பெண்களாக இருக்க, ஒற்றை ஆண்மகனாய் துணிந்து, வெளியூர் சென்று சம்பாத்தியம்  செய்வதற்கு, யாரும் அவனை அனுமதிக்கவில்லை.

“இந்த குடும்பத்துக்கு இருக்குற ஒத்த ஆம்பள நீதான். உன்னை வெளியூருக்கு அனுப்பிட்டு, இங்கே எங்களால நிம்மதியா இருக்க முடியாது” என்று பாட்டி கோமளவல்லி சொல்ல, மகனின் மேல் உள்ள பிரியத்தில் மரகதமும் தலையாட்டி, மகனின் ஆசைக்கு முட்டுக்கட்டைப் போட்டு விட்டார்.

முடிவில் தனக்கு தெரிந்த நண்பர்களின் உதவியுடன், வாகன ஓட்டுனர் பயிற்சியை முடித்த தயானந்தன், அவர்கள் இருக்கும் கிராமத்தை சுற்றி வரும் மினிபஸ்ஸில் நடத்துனராக பணிபுரிந்து வந்தான்.

இரண்டு தமக்கைகளுக்கு திருமணம், வளைகாப்பு, பிள்ளை பிறப்பு, தங்கையின் சடங்கு என்று எல்லாவற்றையும் கடன் வாங்கி, எந்த வித குறையும் இல்லாமல் நடத்திவிட, அவனது வருமானத்தில் வீட்டில் மூன்றுவேளை உணவிற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

தயானந்தன் வசிக்கும் வீடு மிகப் பெரியது. அருமையான வேலைப்பாடுகள் நிறைந்த சிறிய அரண்மனையைப் போன்றது. விற்பனைக்கு என சொன்னாலும், அழகாக ஒரு கோடிக்கு பக்கத்தில் அதனை மதிப்பிடலாம். அதன் காரணம் தொட்டே வீட்டை அடமானம் வாங்கியவர், கேட்கும் பொழுதெல்லாம் பணம் கொடுத்து, ப்ரோநோட்டில் எழுதிக் கொண்டார்.

கடன்தொகை கிட்டத்தட்ட இருபத்தியைந்து லட்சத்தை தாண்டியிருக்க, கடன் கொடுத்த வேலாயுதம் பணம் கேட்டு வீட்டிற்கு வந்து அமர்ந்து விட்டார். பரம்பரையாக வட்டித்தொழில் பார்த்து வரும் குடும்பம் அவருடையது.

“பெரியம்மா… இன்னைக்கு, நேத்து இல்ல, உங்க பிள்ள இருக்குறப்போ கடன் கொடுக்க ஆரம்பிச்சேன். மதிப்பு, மரியாதை தெரிஞ்ச குடும்பம், எப்படியும் பணத்தை புரட்டி குடுத்திடுவீங்கனு நினைச்சுதான், இவ்ளோ நாளும் கேக்கும் போதெல்லாம் கொடுத்தது” தன்மையாகவே கோமளவல்லியிடம் எடுத்துச் சொன்னார். 

“வாஸ்தவம் தான்யா… நீ பணம் கொடுக்காம, இருந்தா இந்நேரம் என் பேத்திகள கரை சேர்த்திருக்க முடியாது. என் பையனுக்கு வந்த கெட்ட பேர போக்கியிருக்க முடியாது” பெரியவரும் அவர் பேச்சினை ஆமோதிக்க,

“ஆனா என்னோட பணத்துக்குதான், இப்ப என்ன பதில்னு தெரியமா நிக்கிறேன். என் பசங்களும் தொழில கையில எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாளபின்ன கணக்கு கேக்கும் போது நானும் பதில் சொல்லனும். வட்டியும் அசலும் சேர்த்தா, முப்பது லட்சம் பக்கத்தில வரும். எப்போ கணக்க முடிக்கப் போறீங்க?” வந்த வேலையை கையில் எடுத்துக் கொண்டார் அவர்.

“இப்போ சம்பாதிக்கிறது என் பேரன்தான்யா… அவன கலந்துகிட்டு, உனக்கு தாக்கல் சொல்லி விடறேன்” பதில் பேசி அவரை அனுப்பி வைத்தவர், பேரனிடம் குடும்ப நிலைமையை அன்றுதான் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

“என்னபாட்டி? இப்படி ஒரு குண்டு தூக்கி போடறீங்க… நம்மகிட்ட இருக்குற பணத்துலதான் எல்லாமே நடக்குதுன்னு, நான் இவ்ளோ நாளா நினைச்சிட்டு இருந்தேனே? அதெல்லாம் பொய்யா?” அதிர்ச்சியில் உறைந்தவன் பெரியவரிடம், தான் இத்தனை நாட்கள் எண்ணியிருந்ததை சொல்லிவிட்டான்.

“நம்ம அந்தஸ்த எங்கேயும் விட்டுக் கொடுக்க கூடாது ராசா… நம்ம வீட்டுப் பொண்ணுங்கள அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்துற வீட்டுல கட்டிக் கொடுத்துட்டு, எப்படி எங்களால நிம்மதியா இருக்க முடியும்?” கோமளவல்லி தனது கொள்கையை விளக்க,

“அதுக்காக இப்படியா? எப்படி அடைக்க போறேம்னு யோசனையாவது பண்ணீங்களா பாட்டி? நீங்களும் இத பத்தி என்கிட்டே ஒரு வார்த்தையும் ஏன்மா முன்னாடியே சொல்லல?” தாயையும் பாட்டியையும் ஒரே நேரத்தில் கடிந்து கொண்டான் தயானந்தன்.

“உங்கப்பன் குத்தைகக்காரன், கணக்கில்லாம பணத்தை செலவு செய்வான், அதே போல சம்பாதிக்கவும் செய்வான். அவனுக்கு பொறந்தவன் இப்படி கேள்வி கேக்கலாமா? நீ முன்னுக்கு வந்து இதையெல்லாம் நேர்பண்ணுவேன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். நீ என்னையே கேள்வி கேக்குற… இதெல்லாம் நல்லாயில்ல பேராண்டி பாட்டியும் கண்டித்து சொல்ல, பதில் தெரியாத கேள்விகளில் அன்றைய இரவு முடிந்தது.

அடுத்த வந்த வாரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், மூளை வேலை நிறுத்தம் செய்ததைப் போல், தயானந்தன் தவித்து விட்டான். வசிக்கும் வீட்டை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற தீர்வைக் கண்டவன், அதை அப்படியே பாட்டியிடம் சொல்ல,

“நம்ம குலத்துக்கே கௌரவம் குடுத்த வீடு இது. மூணு தலைமுறையா வாழ்ந்துட்டு, இருந்தாப்புல கைமாத்தியே ஆகணும்னு சொன்னா, எப்டி ராசா? இளந்தாரிப் பய துடிப்பா இருக்க வேணாமாயா? என்னோட கொள்ளுப்பேரன இந்த வீட்டுலதேன் தொட்டில் கட்டி தாலாட்டு பாட நினைக்கிறேன். நான் இருக்குற வரைக்கும் இத விக்க விடமாட்டேன்” கோமளவல்லி தன்போக்கில் பேசியபடியே தடை விதிக்க,

“அப்போ என்னை தொல்லை பண்ணாதீங்க… நீங்களாச்சு, உங்க கடனாச்சு..!” பதிலுக்கு தயாவும் விட்டேற்றியாகப் பேசிவிட்டு வெளியே சென்று விட்டான்.

வயதானவர், இத்தனை காலமும் கம்பீரமாக நடமாடியவருக்கு, பேரனின் பேச்சு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. எங்கே ஊராரின் முன், தன்குடும்ப கௌரவம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற மனக்கவலையில் படுத்தவர், மறுநாள் எழுந்து கொள்ளவில்லை.

மாமியாரின் மறைவை கல்யாணச் சாவாக சிறப்பாக எடுத்துச் செய்ய மரகதம் சொல்ல,

“இனிமே இந்த டாம்பீகம் எதையும் என்கிட்ட எதிர்பாக்காதீங்கம்மா… கடன் வாங்க மாட்டேன், என்கிட்ட இருக்குறத வச்சு என்ன செய்யனுமோ, அதுக்கு ஏற்பாடு பண்றேன்” என்றவன், அன்று முதல் குடும்பப் பொறுப்பை கைகளில் எடுத்துக் கொண்டான். 

சரியாக ஒருமாதம் கழித்து கடன் கொடுத்த வேலாயுதம் வந்து மீண்டும் வந்து நிற்க, என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றான்.

“ஆனந்தா… உனக்கு ரெண்டு வருஷம் டயம் தர்றேன் அதுவரைக்கும் என் பசங்கள என்னால சமாளிக்க முடியும். அதுக்குள்ள கடன முடிச்சு விடப் பாரு. அதுக்கு பிறகு என்ன நடந்தாலும் நான் பொறுப்பாளியாக மாட்டேன்” இறுதித் தவணையை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

நடுக்கடலில், தண்ணீருக்கு தவித்தவனைப் போல், அசையாமல் பித்து பிடித்துபடியே இருந்தவனை உலுக்கி சுயத்திற்கு அழைத்து வந்தார் மரகதம்.

“என்ன ஆச்சு தம்பி?” மகனை உலுக்கி மரகதம் கேட்க,

“இன்னும் என்ன ஆகணும்மா? கைநிறைய வருமானம் எனக்கே இல்ல, ரெண்டு வருசத்துல எப்படி முடிக்கப் போறோம்?” இவனும் பதிலுக்கு புலம்பித் தள்ள,

“நமக்கு சென்னையில ஒரு வீடு இருக்குய்யா… அத வேணா வித்து கடன அடைக்க முடியுமான்னு பாரு. அந்த வீட்டுல குடியிருக்கிற மனுஷங்க கடுதாசி போட்டே, வருசக் கணக்காச்சு. விலாசம் குடுக்குறேன், அங்கே போய் பார்த்துட்டு, வீட்டை கிரயம் பண்ற வழியப் பாரு” என்று ஆறுதல் அளித்தவர், மகனை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

தனது கடன் சுமைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் மார்க்கம், சென்னையில் உள்ளது என்று நம்பியே வந்தவன், இறுதியில் அங்கேயே தங்கி விட வேண்டியதாயிற்று.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!