charkarainilave-8

நிலவு – 8

யாருடனும் எந்தப் பேச்சு வார்த்தைகளும் இல்லாமல் எட்டு மாதங்கள் அமைதியாகக் முடிந்திருக்க, தயானந்தனும் சற்று நிதானமடைந்து, தனது பணியில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.

பெரியவர்கள் தங்கள் வேலைகளை இடையறாது பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், வீட்டின் இளையவர்கள் தங்கள் காதல் பாடத்தை சிரமமின்றி கற்றுத் தேர்ந்திருந்தனர்.

அதன் விளைவு ஒருநாள் இரவில், ஊர் அடங்கிய பிறகு, சிந்து தன் கையில் இருந்த பூச்சி மருந்தை வாயில் ஊற்றிக் கொள்வதற்காக, வராண்டாவில் வெகுநேரம் அமர்ந்திருந்தாள். கள்ளத்தனமாய் காதல் செய்வதில் இருந்த தைரியம், தற்கொலை செய்து கொள்வதில் வரவில்லை.

தங்கையின் நடவடிக்கை சந்தேகத்தைக் கிளப்ப, அவளை அதட்டி, இரண்டு அறைவிட்டே என்ன ஏதென்று கேட்க, பாஸ்கருடனான பழக்கத்தை கூறி விட்டாள்.

அதனுடன் தாயாகப் போகும் தன் நிலையைச் சொல்லி, பாஸ்கர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டான் என்றும் கூற, தயானந்தனிடம் உறங்கிக் கிடந்த ஆக்ரோஷம் மீண்டும் தலை தூக்கி விட்டது.

மனதில் மூண்ட கோபம், நேரம் காலம் பார்க்கச் சொல்லாமல், ஆவேசத்தை குத்தகைக்கு எடுத்துக் கொள்ள, அந்த இரவு நேரத்தில் கீழ் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான்.

பாஸ்கர் வந்து கதவைத் திறக்க, அங்கேயே அவன் சட்டையை பிடித்து, தயா நான்கு அறை விட, அடி வாங்கிய அதிர்ச்சியில் அவனும் கீழே விழுந்து விட்டான்.

பாஸ்கர் கதவைத் திறந்த சமயத்திலேயே, வந்திருப்பது யார் என்று பார்க்க முன்னறைக்கு வந்த மிதுனா, என்ன நடக்கின்றது என்று கணிப்பதற்குள், தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருந்தான் தயானந்தன்.

அவன் வந்த இரண்டு நிமிடத்தில் மரகதமும் மகளை அழைத்துக் கொண்டு வந்து விட, அந்த இடம் ஏக களேபரம் ஆகிப் போனது.

“என் புள்ளைய ஏன் இப்டி போட்டு அடிக்கிற? விடு அவன!”

“ஆனந்தா… கொஞ்சம் பொறுமையா இருயா! அடிக்கிறதால பிரச்சனை முடியப் போறதில்ல”

மஞ்சுளாவும் மரகதமும் அடுத்தடுத்து சத்தம் போட்டுச் சொல்லியும் விடாமல் பாஸ்கரை, தயானந்தன் தாக்கிக் கொண்டுடிருக்க, ஒரு ஓரத்தில் நின்று சிந்து அழுகையை ஆரம்பித்திருந்தாள்.

என்னதான் நடக்கின்றது என்பதை அனுமானிக்கவும் அவகாசம் இல்லாமல், அதிர்ந்து நின்ற மிதுனா, வெகுவாக முயன்று தயானந்தனை, தம்பியிடம் இருந்து பிரித்து நிற்க வைத்தே, அவனது தாக்குதலை தடுத்து நிறுத்தினாள்.

“விடுங்க தயா… எங்க வீட்டுக்கே வந்து, என் தம்பிய அடிப்பீங்களா? என்ன பண்ணிட்டான்னு இப்படி போட்டு அடிக்கிறீங்க?” கோபத்தில் மூச்சு வாங்கியபடியே, கேள்விகளை கேட்டவள், மீண்டும் அவன் முன்னேறாத படி, அவனை தடுத்து நிறுத்தி இருந்தாள்.

மிதுனாவின் கேள்வியில், அவள் கையை தன்னிலிருந்து உதறி விட்டவன், சிந்துவை முன்னே நிற்க வைத்து,

“உன் தம்பி, இவளுக்கு செஞ்ச துரோகத்துக்கு, இன்னைக்கு இவ தற்கொலை வரைக்கும் போயிருக்கா… அப்படிப்பட்டவனோட அமைதியா உக்காந்து பேசனுமா?” வார்த்தைகளில் அவன் கொந்தளிக்க,

“என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல…” குழப்பத்துடன் இருந்தவள், தயாவின் பதிலில் மேலும் குழம்பி எதிர்கேள்வி கேட்டாள்.

தனது தம்பியை எக்காரணம் கொண்டும் ஒரு பெண்ணை நாசம் செய்தவன் என்ற பார்வையில் அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

தனது தம்பியைப் பற்றிய அவளின் எண்ணமெல்லாம், அவன் படிக்காமல், வீட்டிற்கும் அடங்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவன் என்பது மட்டுமே! அப்படியிருக்க அவளால் வேறெதுவும் தப்பிதமாய் பாஸ்கரைப் பற்றி நினைக்கத் தோன்றவில்லை.

“வெளியாளுங்கள தெளிவா விசாரிச்சு, பதில் கொடுக்குறவளுக்கு, நான் சொன்னது புரியலையா மிதுனா? இல்ல… குடும்பமே, அவன்கூட சேர்ந்து, எங்கள ஏமாத்த பாக்குறீங்களா?” தன்போக்கில் தயா, கோபத்தில் வார்த்தைகளை கொட்டிக் கொண்டு நிற்க, மிதுனாவிற்கும் மஞ்சுளாவிற்கும் பெரும் அவஸ்தையாகிப் போனது.

“இந்த குழப்பியடிக்கிற பேச்ச, புரிஞ்சுக்குற பொறுமை எனக்கில்ல… நடந்தது என்னனு தெளிவா சொல்லுங்க இல்லன்னா, வீட்டை விட்டு வெளியே போங்க!” என்று சட்டமாய் மிதுனா சொல்லிவிட,

“உன் தம்பியோட கொழந்தைக்கு, என் தங்கச்சி அம்மா ஆகப்போறா… இன்னும் விளக்கமா சொல்லவா? பாஸ்கர், சிந்துவ ஆசை காட்டி மோசம் பண்ணிட்டான்” தயா சொல்லச் சொல்ல,

அதைக் கேட்டு, அவள் காதுகளும் கூசிவிட, தனது கைகளால் காதுகளை பொத்திக் கொண்டு தம்பியை கோபத்துடன் முறைத்தாள். தமக்கையின் பார்வையிலேயே உஷ்ணத்தை அறிந்த பாஸ்கர்,

“இல்லக்கா… நான் எதுவும் பண்ணல! இவங்க பொய் சொல்றாங்க” வாய்கூசாமல், இல்லையென்று மறுக்க, சிந்து பெருங்குரலெடுத்து அரற்றி விட்டாள்.

தம்பியின் பதிலைவிட, சின்னப் பெண்ணின் அழுகையில், நடந்த அவலத்தை புரிந்து கொண்டவளுக்கு, அத்தனை வெறுப்பு உடன் பிறந்தவனிடம் ஏற்பட்டது.

பாஸ்கரின் பதிலில் மீண்டும் எரிமலையான தயானந்தன், அவனை சுவற்றோடு சாய்த்தே, கழுத்தை இறுக்கி மேலே ஏற்றி விட்டான். இந்த முறை காப்பாற்ற மிதுனா முன்வரவில்லை. மஞ்சுளாவும் இப்பொழுது நடப்பதை அதிர்ச்சியுடன் வேடிக்கை மட்டுமே பார்க்கத் தொடங்கியிருந்தார்.

உலக்கையாக இறுக்கிய தயாவின் கைகளை, அகற்ற பெரும்பாடு பட்ட பாஸ்கர், ஒரு கட்டத்தில் மூச்சிற்கும் தவிக்க தொடங்க, மரகதம் முன்னே வந்து மகனின் கையை, வலுக்கட்டாயமாக பிரித்து விட்டு பாஸ்கரை காப்பாற்றினார்.

“கிராமத்தான்டா… அருவா தூக்க, அசரமாட்டேன். நொங்கு சீவுற மாதிரி, சீவிட்டு போயிட்டே இருப்பேன். இனி, நீ உசுரோட எப்படி நடமாடுறன்னு, நானும் பாக்குறேன்டா… !” கர்ஜித்தவன், குரோதத்துடன் கண்களில் சிவப்பு ஏற, அவனை உறுத்து விழிக்க, அந்தப் பார்வையிலேயே நடுங்கிப் போன பாஸ்கர், உண்மையை ஒத்துக் கொண்டு விட்டான்.

மகனின் லட்சணத்தை அறிந்து கொண்ட மஞ்சுளா அதிர்ந்தாலும், தயானந்தனின் செயல், உள்ளுக்குள் பயத்தை வரவழைத்திருந்தது. சொன்னதை செய்து விட்டே, இவன் மறுவேலை பார்ப்பான் என்பதைக் அவனது பேச்சிலும் செயலிலும் கண்டவர், அந்த நிமிடத்தில் என்ன பேசுவதென்று தெரியாத ஊமையாகிப் போனார்.

சிறியவர்களின் அத்துமீறிய செயலில் அனைவரும் திகைத்துப் போயிருக்க, அப்போதைய நீதிபதியாகி, தயா பேசத் தொடங்கினான்.

“இன்னும் ரெண்டு நாள்ல, என் தங்கச்சி கழுத்துல தாலிகட்டி, நல்லவனாகிடு, இல்லன்னா எங்க ஊரு அய்யனாருக்கு படையலாகி, பரலோகம் போயிடு! எது உனக்கு இஷ்டமோ… அத முன்னே நின்னு, நானே முடிச்சு வைக்கிறேன்” நக்கலும் நையாண்டியும் கலந்த குரலில், மிரட்டலுடன் அன்றைய இரவினை கடக்க வைத்தான்.

மழையை கொட்டித் தீர்க்காத வானத்தில், இடியும் மின்னலும் முழங்கியது போல், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தான் தயானந்தன்.

பின்னிரவில் மிரட்டி விட்டுச் சென்றவன், காலை ஒன்பது மணியளவில் அழையா விருந்தாளியாய் கீழ்வீட்டில் நாட்டாமையாக வந்து அமர்ந்து விட்டான்.

நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை எனும் பொழுது, மேலும் அதற்கு பாரம் கூட்டும் விதமாக இவன் கழுத்தில் கத்தியை வைத்ததைப் போன்று, வீட்டில் வந்து அமர்ந்திருந்தது, மிதுனாவின் குடும்பத்தாருக்கு பெரும் கலக்கத்தைக் கொடுத்தது.

பெரிய மகள் சாந்தினியும் அந்த நேரத்தில் வரவழைக்கப்பட்டிருக்க, பிரச்னையை பேசி, முடிவெடுத்து விட வேண்டும் என, தயானந்தனே ஆரம்பித்தான்.

“வர்ற முகூர்த்தத்துல கல்யாணம் வைக்க நான் ரெடி… நீங்கதான் உங்க முடிவ சொல்லணும்” அமைதியை தகர்த்தெறிந்து சீறிப் பேசிட,

“எல்லாத்தையும் உங்க இஷ்டத்துக்கு நடத்தனும்னு முடிவே பண்ணியாச்சா?” மஞ்சுளா தன் சார்பில் ஆரம்பிக்க,

“நான் சொன்ன ரெண்டு விசயத்துல ஒன்னு கண்டிப்பா நடக்கும். அது, ஒன்னு எதுன்னுதான், உங்கள முடிவெடுக்க சொல்லி இருக்கேன்” அசட்டையாக பதில் அளித்தான்.

“நேத்து வந்து அடிச்சீங்க… இன்னைக்கு வந்து சட்டம் போடறீங்க! எங்களுக்கு பேச வாய்ப்பு குடுக்காம, நீங்களா முடிவெடுத்தா, எப்படி ஒத்துக்க?” மிதுனா இழுத்து வைத்த பொறுமையுடன் பேச.

“விசயம் கை மீறிப் போனபிறகு, நேரம் காலம் பார்த்துட்டா முடிவெடுக்க முடியும்?” சூழ்நிலையை தயா உரைத்திட,

“மிரட்டி பாக்காதீங்க சார்! எங்களுக்கும் ஆளுங்க இருக்காங்க, பஞ்சாயத்து வைப்போம்” இது சாந்தினி.

“அதுக்கும் நான் ரெடி… உங்களுக்கு நாலு பேர்தான் வருவாங்க, எனக்கு கிராமமே வரும், எப்படி வசதி?” அவர்களின் எந்த செயலையும் தகர்க்கும், எதிர் செயல் தன்னிடம் உண்டு என்று நிரூபித்துக் கொண்டிருந்தான் தயா.

“இப்போதைக்கு கல்யாணம் செய்து வைக்கிற சூழ்நிலை இங்கே இல்ல..” மஞ்சுளா தன் மறுப்பை ஆரம்பிக்க,

“அப்போ அருவாள, கையில எடுத்துற வேண்டியது தான்!” என்றவாறே எழுந்து நின்று கொண்டவன்,

“இப்டி ஏடாகூடமா பேசணும்னு தான், என் அம்மாவையும் நான் கூட்டிட்டு வரலே…” தன் பேச்சிற்கு விளக்கமும் சொல்ல,

“போலீஸ்கு போனா என்ன செய்வீங்க? பேசத் தெரியும்னு பேசவேணாம்” மஞ்சுளா கொதிநிலையில் என்ன சொல்கிறோம் என்றே அறியாமல் பேசிக் கொண்டிருந்தார்.

“நானும் கூட வர்றேன். நடந்தத சொல்வோம், அசிங்கம் எங்க பொண்ணுக்கு மட்டுமில்ல, உங்களுக்கும் உங்க ரெண்டு பொண்ணுகளுக்கும் சேர்த்தேதான். உங்க பையன் ஜோரா களி திங்க நானே ஏற்பாடு பண்றேன்” என்றவன் பார்வையை மிதுனாவின் மீது நிறுத்தினான்.

எல்லா இடத்திலும் நியாயம் பேசி, வாக்குவாதம் செய்பவள், இப்பொழுது என்ன செய்யப் போகிறாள்? என்று பார்வையாலேயே இவன் முறைத்துக் கேட்கும் பாவனையில் நிற்க, மிதுனா செய்வதறியாது வெறித்து நின்றாள். 

இத்தனை வாக்குவாதத்திலும் தலையிடாமல் அமைதியாக இருந்தான் பாஸ்கர். சண்டைக்காரனின் பார்வை மகளை கவனிப்பதை அறிந்ததும், ஒரு நிமிடம் மஞ்சுளா தவித்ததென்னவோ உண்மைதான்.

“நாங்க, உங்க பொண்ண வேண்டாம்னு சொல்லல, இப்போதைக்கு முடியாதுன்னு சொல்றோம். அக்காவுக்கு கல்யாணம் முடிக்காம, எப்பிடி தம்பிக்கு முடிக்க முடியும்? அவனுக்கு இன்னும் ஸ்திரமான வேலையும் இல்ல… இதையெல்லாம் கொஞ்சம் யோசிங்க, தம்பி!” பணிவாய் நிலையை மஞ்சுளா விளக்க,

“அப்போ என் தங்கச்சிக்கு என்ன பதில்?” தயாவின் கேள்விக்குரல், அழுத்தத்துடன் ஒலித்தது.

“இதெல்லாம், இந்த காலத்துல சர்வ சாதாரணம் ஆகிப்போச்சு. என்ன செய்யணுமோ செஞ்சு சுத்தப்படுத்திக்க சொல்லுங்க. எங்க சூழ்நிலை சரியான பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்”

தன் போக்கில் அடுத்தடுத்த திட்டங்களை தீட்டியவர், பெரிய யோசனையை சொல்லி விட்டவர் போல் பெருமூச்சு விட்டுக் கொள்ள, தனது உயரத்திற்கும் நிமிர்ந்து விட்டான்.

“உங்களுக்கும் பொண்ணு இருக்கு, பதிலுக்கு பதில்னு இறங்கிப் பேச எனக்கே நாக்கு கூசுது. உங்க பொண்ணுக்கு கல்யாணத்த முடிச்சு, பிள்ளைக்கு ஒரு வேலையும் ஏற்பாடு பண்ணிட்டு சொல்லுங்க… நானும் அப்பவே வர்றேன்.” அருவெருப்பாய் முகத்தை சுளித்தவன், தீவிரமான குரலில், 

“அது வரைக்கும், உங்க புள்ள என் பொறுப்புல இருக்கட்டும். நீங்க சொன்ன வழிக்கே நானும் வந்துட்டேன். இதுல மாற்றம் இல்ல…” என்றவன் பாஸ்கரின் சட்டைக் காலரை பிடித்து இழுத்துக் கொண்டே வெளியேறி விட்டான். அவனை யாராலும் தடுக்க முடியவில்லை.

“அராஜகம் பண்றீங்க சார்! இப்பவும் சொல்றேன், யோசிச்சு முடிவெடுப்போம்” மிதுனா மட்டுமே அவன் முன்னே நின்று பேச,

“நான் இறங்கி வந்தாச்சு. இதுக்கு மேலயும் பேசணும்னா என்னைத் தேடி, நீங்க வாங்க! இல்லன்னா, உங்க தம்பிய மறந்துருங்க!” என்றவாறே, பாஸ்கரை தள்ளிக் கொண்டே நடையைக் கட்டினான்.

தயாவின் வீட்டில், மகனின் செயலை மரகதமும் ஆட்சேபிக்க,

“அவங்க சொல்றதெல்லாம் நடக்கிற வரைக்கும், இவன கண் கொத்தி பாம்பாட்டம் பார்த்துட்டு இருக்க முடியுமா? எனக்கு வேண்டியது இவன் மட்டுந்தான்… அதான் இழுத்துட்டு வந்துட்டேன். அவங்க பேச்சுக்கு சரின்னு தலையாட்டிட்டு வந்தா, என்னை மாதிரி கேண கிறுக்கன் வேற யாருமே இல்ல… ரெண்டு நாள் பாப்பேன், அடுத்து கல்யாணத்தை முடிச்சு வச்சு, இவனுக்கு நான் வேலைக்கு ஏற்பாடு பண்றேன்ம்மா…” அன்னையிடம் விளக்கம் சொன்னவன்,

சிந்துவிடம் திரும்பி, “நல்லா மூணு வேளையும் உக்காந்து சாப்பிட்டு, ஏகத்தும் கொழுத்துப் போயி கிடக்கான் பய! நேத்து கேட்டேதானே? நிமிசத்துல எப்டி உன்னை வாரிவிட்டான்னு… உடம்பு முழுக்க கெட்ட ரத்தம் ஓடுது, அத சுத்தப் படுத்துவோமா?” என்றே தங்கையிடம் கேட்டவன்,

“நான் சொன்னது சரிதானே மாப்ளே? செஞ்சுருவோமா!” எகத்தாளமாய் பாஸ்கரின் முதுகை அடித்துப் பேச,

“சார்… சார் என் மேல இரக்கம் காட்டுங்க சார். நான் அப்படியெல்லாம் ஒடுற ஆள் இல்ல. நான் செஞ்சது தப்புதான். இன்னும் கொஞ்ச நாள்ல நானே, உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கிறேன்.

அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க சார்… என்னை விட்ருங்க சார்” மூச்சுக்கு மூண்ணூறு கும்பிடு போட்டு, முதன் முறையாக பாஸ்கர் வாயைத் திறந்து பேச, அவனை இகழ்ச்சியாய் பார்த்தவன்,

“உன்ன எந்த வகையில சேர்க்குறதுன்னு தெரியலடா? உன்மேல நம்பிக்கை வச்சு, நான் ஏமாற விரும்பல. உனக்கு கல்யாணமும் பண்ணி, வேலைக்கும் நான் பொறுப்பெடுக்குறேன்னு சொல்றேனே? இன்னும் என்னடா உனக்கு பிரச்சன? சரின்னு சொல்லிட்டு, கெத்தா மாப்ளே வேஷம் போட தயாராகிக்கோ!” இலகுவாய் தயா, அவனுக்கு யோசனை சொல்ல,

“இல்ல சார்… வீட்டுல எங்க அம்மா, அக்கா எல்லாரையும் பாக்கணும் சார்!” மென்று முழுங்கினான் பாஸ்கர்.

“இவ்ளோ பாசம் இருக்குறவன், எப்படிடா என் தங்கச்சிய ஏமாத்த துணிஞ்ச? அவளும் ஒரு பொண்ணுதானேடா? படுபாவி! பல்லைக் கடித்துக் கொண்டே கேட்க, பதில் பேச முடியாமல் பாஸ்கர் அமைதியாகிப் போனான்.

“என்ன சொன்னாலும், நீ செய்றது சரியில்ல ஆனந்தா… அவங்க வீட்டுல எதிர்த்து கேக்க ஆள் இல்லாதத, காரணமா வச்சுட்டு, உன் இஷ்டத்துக்கு செய்யாதே!” மரகதம் மேலும் கடிந்து கொள்ளும் போதே, மஞ்சுளா தன் மகள்களுடன் மேலே வந்து விட்டார்.

ஒரு நிமிடம் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“உங்க பிடிவாதம் மட்டுமே நடக்கனும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு… எங்க வீட்டு நிலவரத்தையும் தெரிஞ்சுட்டு பேசுங்க” நியாயவாதியாய் மஞ்சுளா பேச,

“இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க? என்ன சொன்னாலும் உங்களுக்கு ரெண்டு நாள்தான் டைம்” இவனும் இறுதியாக சொல்லி விட்டான்.

“பொண்ணுக்கு மாப்பிள்ளை அமையுறது குதிரக் கொம்ப இருக்கிற காலத்துல, தம்பி, கல்யாணம் முடிச்சவன்னு தெரிஞ்சா, எங்க வீட்டுப் பொண்ண யார் கேட்டு வருவாங்க? இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க, நான் ஒத்துக்குறேன்” பிரச்சனையின் முடிவை தயாவிடமே திருப்ப,

“உங்க பொண்ண பத்தின கவலை எனக்கெதுக்கு? இன்னும் கொஞ்சம் போனா, நகை நட்டு போட்டு கல்யாணம் பண்ணி வைக்க சொல்வீங்க போல?” நக்கலாய் பேசியவன், மூன்று பெண்களையும் பார்த்துக் கொண்டே,

“உங்க பிரச்சனைய நீங்கதான் பார்த்துக்கணும்… உங்க பொண்ணுக்கு கல்யாணம் முடியுற வரைக்கும், இவன் எங்க வீட்டு மாப்பிள்ளையா இருக்கட்டும், இல்லன்னா… எங்கையால வெட்டுப்பட்டு சாகட்டும்” வெறுப்பில் வார்த்தைகளை உமிழ்ந்தவன், வேண்டா விருந்தாளியாக அவர்களை முறைத்தான்.

“அப்டியே எங்களையும் வெட்டிப் போடுங்க… அவனோட சேர்ந்தே நாங்களும் செத்துப் போறோம். அப்புறம் எந்த இளிச்சவாயன், உங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வர்றான்னு பார்க்கலாம்” ஆக்ரோஷம் கொண்டு மஞ்சுளா கத்த ஆரம்பித்து விட்டார்.

உண்மைதானே! இவன் கோபத்தில் ஏதோ ஒன்று செய்யப் போக, பதிலுக்கு இவர்களும் யோசிக்காமல் உணர்ச்சிக் கொதிப்பில் தகாத முடிவொன்றை எடுத்து விட்டால், யாருக்கு என்ன லாபம்?

எந்த காரணத்திற்காக இதையெல்லாம் செய்கிறோமோ, அதுவே கேள்விக்குறியாகி நின்று விடுமே? இதையெல்லாம் மனதில் நினைத்து இதற்கான தீர்வை தேடி விழைந்தது மரகதம் மட்டுமே!

மகளின் நல்வாழ்விற்காக மற்றவர்களை நிர்பந்தப்படுத்தி, அவர்களின் வெறுப்பில் திருமணம் நடைபெற்றால், அந்த வாழ்வு நிலைக்குமா? இருக்கின்ற காலம் வரை, தோள் கொடுக்க வேண்டிய உறவை, வம்படியாகப் பிடித்து இழுப்பதில் அவருக்கும் அத்தனை விருப்பம் இல்லை.

ஆனாலும் இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்றால், அதற்கு தடையாக இப்பொழுது கருதுவது, அவர்கள் வீட்டுப் பெண்ணின் திருமணம்தானே?

தனது மகன் சொல்வது போல நகை, சீர்வரிசை செய்து கல்யாணம் செய்து வைக்கும் அளவிற்கு வசதி இல்லைதான். அப்படி இருந்திருந்தால், அதையும் செய்யத் தயங்க மாட்டார்.

அதனைச் செய்தால் இத்தனை பேச்சிற்கும் இடம் இல்லையே? சற்று நேர அமைதியில் அனைவரும் தங்களது எண்ணங்களில் உழன்று கொண்டிருக்க, சட்டெறு மரகதத்தின் பார்வை தயாவையும் மிதுனாவையும் இணைத்துப் பார்த்தது.

அப்படி நினைப்பது தவறுதான் என்றாலும், அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு, மனதில் அந்த எண்ணம் எழ, தடுக்க இயலாமல் அந்த நினைவை அனுபவித்தார். பொருத்தமான ஜோடியாக இருவரும் அவரின் கண்களுக்கு நிறைவைத் தர, துணிந்து  மஞ்சுளாவிடம் கேட்டு விட்டார்.

தான்சொல்வதை தட்டாது கேட்பான், என்ற நம்பிக்கை மகன் மீது மலையளவு இருக்க, நேரடியாகவே மஞ்சுளாவிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி விட்டார் மரகதம்.

பிரச்சனைக்கு தீர்வு இப்படிதான் கிடைக்க வேண்டும் என்றால், எவ்வாறு அதை தடுக்க முடியும்? இரு குடும்பத்திற்கும் பொதுவான தன்மானமும் கௌரவமும் உயரத்தில் தனது கொடியை நாட்டிக் கொண்டிருக்க, மரகதம் சொல்வதில் பாதகம் என்ற எந்த விசயமும் கண்களுக்கு புலப்படாமல் போக, மஞ்சுளா, மேற்கொண்டு இதைப்பற்றி பேசும் முன்னரே மிதுனா முடிவைச் சொல்லிவிட்டாள்.

“நீங்க சொல்ற முடிவு இந்த நேரத்துக்கு, சரியா வந்தாலும், காலம் முழுக்க சேர்ந்து வாழ முடியும்ங்கிற நம்பிக்கை எங்களுக்கும் வரணும். அதோட எனக்கான பொறுப்புகள் கடமைகள் இருக்கு, அதையெல்லாம் நான் யார் மேலயும் திணிக்க மாட்டேன்.

என் வழியில குறுக்க வர்றதையோ, என்னை எங்கேயாவது தடுத்து நிறுத்துறதையோ, நான் அனுமதிக்க மாட்டேன். இதெல்லாம் நீங்களும் யோசிங்க… நானும் யோசனை பண்ணனும். எனக்கு ஒரு நாள் டைம் குடுங்க,” தனது நிலையை தெளிவாக அழுத்தமாக உரைத்தவள், அந்த நாளின் கலவரத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைத்தாள்.

மிதுனாவின் பேச்சிற்கு செவிசாய்த்து, பாஸ்கரை அவர்களுடன் அனுப்பி வைத்த மரகதம், “எனக்கு வேற வழி தெரியல, தம்பி! நம்ம பொண்ண பாக்குற அதே நேரத்துல, இன்னொரு பொண்ணோட வாழ்க்கை, கேள்விக் குறியாகுறதுக்கு, நாம காரணமாகிடக் கூடாதுயா…

உன் மேல, நான் வச்ச நம்பிக்கையில உன் அபிப்பிராயத்த எதிர்பார்க்காம, நான் அவங்ககிட்ட கேட்டுட்டேன். உனக்கு பிடிக்கலன்னா, இப்பவே போயி இந்த யோசனை வேண்டாம்னு சொல்லிட்டு வந்திடுறேன்.

ஆனா, நீ உன்னோட பிடிவாதத்துல இருந்து இறங்கி வரனும் தம்பி… நம்ம பொண்ணுக்கு இப்படியெல்லாம் நடக்கணும்னு விதி இருந்தா அத மாத்தவா முடியும்?” பொறுமையாக மகனுக்கு புரியும் வகையில் சொன்னவர், இறுதியில் கண்ணீருடன் மகளைப் பார்த்து முடித்திட, பிள்ளைகளின் நெஞ்சில் சொல்லாத பாரங்கள் கூடு கட்டியது.

“உன் முடிவு என்னவோ, அதையே செய்வோம்மா… உன் பையன் மேல, நீ வச்ச நம்பிக்கை என்னைக்கும் பொய்யாப் போகாது. எங்க நல்லதுக்காகவே நீ, இருக்கும் போது நாங்களும் எந்த குறையும் இல்லாம சந்தோஷமா இருப்போம்மா…

நாளைக்கு அவங்க, சம்மதம்னு சொல்லிட்டு வந்தா, மேற்கொண்டு நடக்க வேண்டியத பேசி முடி! இனி அவங்ககிட்ட கடுமையா நடந்துக்க மாட்டேன்” தணிவாய் உறுதி அளித்தவன், தாயின் மனதை குளிர வைத்தான்.

இதே வேளையில் மிதுனாவின் வீட்டில், மஞ்சுளா கோபத்துடன் மகளை சாடிக் கொண்டிருந்தார்.

“நான் ஒருத்தி இருக்கும் போது உன்னை யாருடி பேச சொல்றா? உன் அக்காவே அமைதியா வேடிக்கை பார்க்கும் போது, உனக்கு என்ன அவசியம் வந்தது, அங்கே பேச?” ஏகத்திற்கும் மகளை கடிந்து கொண்டு பேச,

“நான் வாய தொறக்கலன்னா, இந்நேரம் உன் புள்ளைய அவங்ககிட்ட அடமானம் வச்சுட்டுதான் வந்திருப்போம்.  நான் ஒன்னும் கல்யாணத்துக்கு அலையல… நீ சொன்னத மனசுல வச்சுதான், அவங்களும் பேசி இருக்காங்க.

நானும் யோசிக்கிறேன்னுதான் சொல்லிருக்கேன். உன் பையன பத்திரப் படுத்திக்க, உனக்கு வேற நல்ல யோசனை வந்தாலும் சொல்லு! அத செய்வோம். ஆனா, சரிக்கு சரியா பேசி, வம்ப வெலைக்கு வாங்காதேம்மா!“ பொறுமை காத்தவள் பொங்கி விட்டாள்.

“வேற என்னதாண்டி செய்ய சொல்றே? இவனை அப்டியே, அவங்ககிட்ட தாரை வார்த்து குடுக்கச் சொல்றியா?” அதுக்கா இவன பெத்தேன்?” மகன் மீதான பாசம், மஞ்சுளாவை வேறெதையும் சிந்திக்க விடாமல் தடை செய்தது.

“உனக்கு இத்தன சுயநலம் இருக்கக் கூடாதும்மா… உன் பொண்ண பார்த்து யாரும் கேள்விக் கேக்ககூடாது. உன் பிள்ளைக்கும் எந்த கெட்ட பேரும் வரக்கூடாதுன்னு நினைக்கிற மாதிரிதானே, அவங்களும் அவங்க பொண்ண பத்தி நினைப்பாங்க.

உன்னோட வார்த்தைதான், அவங்களும் இந்த யோசனை செய்ய காரணமாகி இருக்கு. இல்லன்னா, அவங்க மனசுலயும் இப்படி ஒரு எண்ணம் வந்திருக்காது. முடிவு உன் கையிலதான். குடும்ப கௌரவம்னு தலைப்பாடா அடிச்சுக்கிற உனக்கே இஷ்டமில்லன்னா, நானும் ஒதுங்குறேன். உன் மகன நீயும் மறந்திரு” எதார்த்ததை ஆணித்தரமாய் எடுத்துக் கூற மஞ்சுளாவால் மேற்கொண்டு, வாக்குவாதம் செய்ய முடியவில்லை.

மிதுனாவிற்கும் இந்த மாதிரியான ஒரு ஏற்பாடு மனதிற்கு ஒப்பவில்லை என்றாலும், இரண்டு குடும்பங்களைப் பற்றிய வெளியுலகத்தாரின் கண்ணோட்டம் வேறாகிப் போய் விடக்கூடாது என்பதில் அவளுக்கும் மெனக்கெடல் இருந்தது.

அதனாலேயே சம்மதம் தெரிவித்தால் என்ன? என்று உழன்று கொண்டிருந்த மனது, தயாவின் நடவடிக்கை, அவனது வாழ்க்கை முறை, மற்றும் குணநலன்களைப் பார்த்து ‘இவனை விடவா, ஒரு நல்லவன், என்னைத் தேடி வந்து விடப் போகிறான்?’ என்று அவன் சார்பாகவும் வாதாடிக் கொண்டது.

மனக்குரலின் ஆசை, மூளைக்கும் கடத்த, தயாவை நிராகரிக்க, எந்த ஒரு காரணமும் புலப்படாமல் போனது. அப்படித் தெரிந்திருந்தாலும் அதை கவனத்தில் கொண்டிருப்பாளா என்றால் அது சந்தேகமே!

தயா என்றவனின் பெயரைச் சொன்னதும் தோன்றும், கடுப்பு மறைந்து அவனைப் பற்றிய நல்ல எண்ணம், நேற்றைய இரவில் இருந்தே வலம் வர ஆரம்பித்து விட்டது.

கோபத்திலும், அவளை தன்னில் இருந்து விலக்கி நிறுத்தியது, ஒரு நொடியிலும் உன் வீட்டிலும் பெண் இருக்கிறாள் என்று எல்லோரும் சொல்லும் பழிக்கு பழி வார்த்தைகளை, இதுவரையிலும் சிந்திக்காமல் இருப்பது போன்ற எண்ணங்களே, அவளது விருப்பத்திற்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருக்க, அவனுடன் பேசிய பிறகே தனது சம்மதத்தை கூற வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

மறுநாள், முடிவை அறிவதற்காக, மரகதமே கீழ் வீட்டிற்கு வர, மஞ்சுளா பாரமுகத்தைக் காட்டினாலும், மிதுனா பேச ஆரம்பித்தாள்.

“நீங்க தப்பா நினைக்கலன்னா, உங்க மகன் கூட பேசிட்டு என்னோட முடிவ சொல்லட்டுமா?” என்று அவரிடம் அனுமதி கேட்டவள், மதியம் தயா வந்த நேரம், அவனுடன் மாடிக்கே வந்து பேசினாள்.

தயானந்தன், தன்னைத் தேடி வந்தவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, இவளும் சங்கோஜத்தில் அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள். இதுவரை அனுபவித்திராத இந்த நிலையே, அவளை வேறுபடுத்திக் காட்ட, முயன்று அவனுடன் பேச ஆரம்பித்தாள்.

“நம்ம ரெண்டு குடும்பத்தோட நிலைமதான் இந்த கல்யாணத்தையும் தீர்மானிக்குது. கிட்டத்தட்ட நாம ரெண்டு பேரும், ஒரே நெலமையில இருக்கோம். தனிப்பட்ட நம்ம மனங்களோட விருப்பம் வேற வேறயா இருந்தாலும், வாழுற காலம் வரைக்கும் சந்தோஷமா இருக்கணும்னு நான் விரும்புறேன்.

என் தம்பி முழுசா தலையெடுத்து தாங்குற வரை, என்னோட சம்பாத்தியம், என் குடும்பத்துக்கு தேவை. எனக்கான கடன்கள் கடமைகளை உங்க தோள்ல இறக்கி வைக்க மாட்டேன். அதே சமயத்துல எனக்கான இடத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

நேத்து சொன்னதுதான், ஆனாலும், இன்னொருதடவ தெளிவு படுத்திடுறேன். இதுக்கெல்லாம் உங்களுக்கு சம்மதம்னா, உங்க வீட்டுல சொல்லி நடக்க வேண்டியதை ஏற்பாடு செய்யுங்க” நீண்டதொரு விளக்கத்தை அளித்தவள், மறைமுகமாய் தன் சம்மதத்தை கூற,

அதைக் கேட்டவனின் நெஞ்சம் சொல்லாத ஆனந்தத்ததில் கூத்தாடியதன் விந்தைதான் என்னவோ? ‘இந்தப் பெண்ணின் பேச்சிற்கு இத்தனை பெரிய ஆர்பாட்டமா? என் மனதில் என்று அன்றைக்குதான் அவனது மனதின் விருப்பத்தை, அவனும் அறிந்து கொண்டான்.

“உனக்கு சம்மதம்னு உன் வாயால சொல்லமாட்டியா மிதுனா?” அவளின் மனப்பூர்வமான பதிலை கேட்க ஆசைகொண்டவன், பொறுக்க முடியாமல் கேட்டு விட்டான்.

“நான் இவ்வளவு நேரம் பேசினத கேட்டீங்களா? இல்லையா? மைக் பிடிச்சு, மேடையில பேசியிருந்தா, குடிக்க சோடாவாவது கிடைச்சிருக்கும் தயா! நான் சொன்னது புரிஞ்சதுதானே?” தன்இயல்போடு சந்தேகமாய் இவள் கேட்க,

“குடும்பத்தை பத்தி பேசினத கேட்டேன். உன்னோட விருப்பத்த சொன்னத, நான் கேக்கல… உன்னோட சம்மதம் இல்லாம, நானும் சரின்னு சொல்லமாட்டேன்.” அவளின் வழியே சென்று இவனும் பேச, இவள் மனதோடு அயர்ந்து விட்டாள்.

இதை விட வெளிப்படையாக எப்படி சம்மதத்தை சொல்வது என்று அவளுக்கும் புரியவில்லை. தடையின்றி தர்க்கம் செய்பவளுக்கு, அந்த நேரத்தில் வார்த்தைகளும் பஞ்சமாகிப் போக, பேச்சில் சிக்கனத்தை கடைபிடித்தாள்.

“என் அம்மாகிட்ட, அத்தனை வேகமா, என்னோட பேசின பிறகு, சம்மதம் சொல்றேன்னு சொன்னியாம்! இப்போ சொல்லு மிது! நம்ம சுத்தி இருக்குற பிரச்சனைகளை கொஞ்ச நேரம் மறப்போம், இப்போ உன் மனசுல என்னை மட்டுமே வச்சு சொல்லு, உனக்கு சம்மதமா?” உள்ளார்ந்த குரலில் தயா கேட்ட பாவனையில், மிதுனாவின் மனம் சொக்கித்தான் போனது. 

“உங்களுக்கு சம்மதமா?” உள்ளடக்கிய மெல்லிய குரலில், அவள் கேட்ட தோரணையே, அவனிடம் தன் மனம் வீழ்ந்து விட்டதை சொல்லாமல் சொல்லிவிட, அதனை கண்டு கொண்டவன்,

“இதே கேள்விய, அலட்டலா கேட்டிருந்தா சரின்னு சொல்லிருப்பேன் மிதுனா… ஆனா இப்போ…?” என்று முகத்தை சுருக்கி, தோள்களை குலுக்கியவன்,

“முடியாதுன்னு சொல்ல… இஷ்டம்… இல்ல…” ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு பேசி, குறும்பு மேலிட அவன் பார்த்த பார்வையில், மிதுனா தனது பழைய நிலைக்கு திரும்பிருந்தாள். 

“ஓஹோ… சார் அவ்வளவு ரசனைகாரரோ? என்னோட சம்மதத்துக்கு தவம் கிடக்குறவர், இந்த பிரச்சன வரலன்னா என்ன பண்ணியிருப்பாராம்?” அவள் கேலியில் இறங்க,

“தெரியல… எப்படியும் உனக்குன்னு ஒரு ஏற்பாடு நடக்கும் போது வந்து பேசியிருப்பேன். இது நிச்சயம்!” உறுதியுடன் இவன் கூற,

“நிஜமாவா தயா!? எப்போ இருந்து இத்தன இஷ்டம் என்மேல?” விழி விரித்து அவள் கேட்க,

“இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. ஆரம்பத்துல உன்னோட பேச்சும் நடவடிக்கையும் பிடிக்கல, ஆனா போகப்போக அதுதான் உன்னை நிமிர்வா, அழகா காட்டுறப்போ மனசுக்கு சந்தோசமா இருந்தது.

அதுக்காக உன்னை கண் கொட்டாம பார்த்து, சைட் அடிக்கிற வேலையெல்லாம் செய்யலம்மா… உன்னை எனக்கு பிடிக்கும். இப்போ உன்னோட பதில்தான் வேணும்” தன் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி விட்டான்.

“அம்மாடி… என்ன ஒரு ஆராய்ச்சி பார்வை? என்மேல! இந்த மாதிரி எண்ணமெல்லாம் எனக்கு நேத்துதான் வந்தது. ஆனாலும் உங்க எதிர்பார்ப்பு என்னனு தெரியாம, ஆசைய மனசுல வளர்த்துக்க கூடாது இல்லையா? அதான் எனக்கு தயக்கமே!” இருவரும் தங்களது தயக்கங்களை உடைத்து, அவரவர் பார்வையில் பேச ஆரம்பித்தனர்.

“என் மிதுனாக்கு தயக்கமா? அதுவும் என்கிட்டேயா? இனி எந்த காலத்துலயும் இருக்க கூடாது. என் மனசுல எப்போவும் நீ கோபுரமா உசந்து இருக்கப் போற மிது! நீ எனக்காகவோ, நான் உனக்காகவோ மாற வேண்டாம். நம்மள நாம புரிஞ்சு நடந்துப்போம் அதுவே நம்ம வாழ்க்கைய, சந்தோஷமா கொண்டு போகும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு” மனம் நிறைந்தே இவனும் பேச, இருவரின் உள்ளமும் சொல்லாத இன்ப உணர்வில் தள்ளாடியது.  .

மனக் கலக்கங்களுடன், அடிதடியாக ஆரம்பித்த பிரச்சனை, இவர்களின் திருமணம் என்ற பந்தத்தில் காணாமல் போனது. அடுத்து வந்த வாரத்தில், தொடர்ச்சியாக இரண்டு முகூர்த்த நாட்கள் இருக்க, திருமணத்தை மிக எளிதாக நடத்தினர்.

முதல் நாள் பிரம்ம முகூர்த்தத்தில் மகனின் திருமணத்தை ஏற்பாடு செய்த மரகதம், மறுநாள் மகளின் திருமணத்தை நடத்தினார். பெண்ணிற்கு தாய் தந்தையாக தயாவும் மிதுனாவும் தாரை வார்த்துக் கொடுக்க, சிந்து பாஸ்கரின் திருமணமும் எளிமையான முறையில் சென்னையிலேயே நடைபெற்றது.

மனதிலுள்ள ஆசைகளை அறியாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தவர்களை, சந்தர்ப்ப சூழ்நிலை சரியான நேரத்தில் சேர்த்திருக்க, மனமொத்த தம்பதிகளாய் காதலில் திளைத்தே, தங்கள் வாழ்க்கையை இன்றளவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தயானந்தனுக்கு, தனது திருமணத்தை நினைக்கும் பொழுதே, மனைவியின் மேல் உள்ள காதல், அவனை இம்சைபடுத்த, கணவனாய் மனைவியை தேட ஆரம்பித்தான்.

அவளின் மேல் உள்ள தாபம் மனதை கிளர்ச்சியுறச் செய்ய, அதற்கு இப்பொழுது வாய்ப்பும் இல்லை, இடமும் இல்லை என்ற எண்ணமே அவனை சோர்வடைய வைக்க, தனது நிலையை எண்ணி மனம் வெதும்பியே உறங்கிப் போனான்.

மறுநாள் விடியலில் சமாதானப் புறாவை பறக்க விடவேண்டுமென்று, இவன் மாடியில் இருந்து இறங்கி வரும் போதே மனைவி, அவன் தம்பியுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட, இப்பொழுது கோபமலை ஏறுவது இவனது முறையானது.