NNA9
NNA9
நீயும் நானும் அன்பே…
அன்பு-9
‘கேக்க வந்தேன்’ என்கிற பெண்ணின் வார்த்தையைக் கேட்டு ‘என்னவா இருக்கும்? எக்குத்தப்பா எனக்குத் தெரியாம… எதாவது பண்ணிட்டேனோ!’, என்ற திடீர் திடுக்கிடலோடு
“எங்கிட்டயா?”, என்று யோசனையோடு கேட்டவனைப் பார்த்து தலையசைத்து ஆமோதித்தாள் பெண்.
“எதைப்பத்திக் கேக்கப்போற!”
“ம்… நிறைய விசயம்பத்தி கேக்கனும்!”, என்று குனிந்தபடியே, குளிரோடு போராடியபடி இருகைகளால் தன்னையே இறுக அணைத்தவாறே சொன்னவளை
“சீக்கிரமா கேட்டுட்டு கீழே போ! அப்புறம் காய்ச்ச ஏதாவது வந்திரப் போகுது!”, என்று பெண்ணின் செயலைக் கண்டு விரட்டினான்.
“அப்ப நீங்க இப்பவே பதில் சொல்ல மாட்டீங்களா?”, ஏமாற்றமாகக் கேட்டவளை
‘இவ எவடா! நேரங்காலந் தெரியாம வந்து சோதிச்சிட்டு!’, என்கிற பார்வை நவீனாவைப் பார்த்தவன்,
“கேக்க வந்ததை, சீக்கிரமா கேளு வீனா!”, என துரிதப்படுத்தினான்.
“ம்… வீனாவா…!”, என்று ஒரு நொடிக்குள் தன்னை மீட்டவள், அவன் தன்னைத்தான் அப்படி அழைக்கிறான் என்ற முடிவில்,
“கிணத்துல நான் விழுந்ததுல இருந்து நீங்க வேற மாதிரி மாறிட்டீங்க…! ஏன்?”
“எப்டி மாறுனேன்!”, என்று யோசனையோடு கேட்டவனை
“நிறைய மாறீட்டீங்க…”, என்றவள் குரலில் வருத்தம் இருப்பதை உணர்ந்தான் சங்கர்.
பெண்ணோ அதற்கு மேல் எப்படி சங்கரிடம் விளக்கமாக விளக்குவது என்று தெரியாமல் விழிக்க,
“எப்பவும் போலத்தான வீனா இருக்கேன். மாறவுலாம் இல்லையே!”, என்று தனது உருவத்தை அங்கிங்கு திரும்பிப் பார்த்தபடியே முகத்தை மிகவும் தீவிரமாக வைத்துக்கொண்டு கூறினான்.
அவனின் அவனைச் சுற்றும் பார்வையை உணர்ந்தவள், “அந்த மாறுறது இல்லை!”, என்று நீ தப்பிதமாக உணர்ந்து கொண்டாய் என்பதை மறைக்காமல் கூறிவிட்டாள்.
புரிந்தவனுக்கு புன்னகை வந்திருக்க, அதை மறைத்தவாறே, “நீ கிணத்துல விழுந்ததால நான் எதுக்கு மாறணும்? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”, என்றும் கேட்டான்.
“இல்லை… உங்ககிட்ட கேட்டதை அப்டியே திருப்பி எங்கிட்ட நீங்க கேட்டா, நான் என்ன செய்ய?”, என அவனின் சமாளிப்பைச் சாதூர்யமாக சமாளித்தாள்.
அதற்குமேல் தயங்காது, “அன்னிக்கு வரப்புல விழுந்தப்போ… வந்து…. நிறைய என்னன்னவோ சொன்னீங்கள்ல…! ஆனா இப்ப நான் கிணத்துல விழுந்ததுக்கு… எதுவுமே அதைப்பத்தி எங்கிட்ட கேக்கலை… பேசலை…! எதுவும் திட்டலையே…! அதான்…!”, என்று தயங்கியவாறே கூறிவிட்டு சங்கரையே பார்த்திருந்தாள் பதிலுக்காக.
“திட்டக்கூட இப்டி வாண்டடா கேட்டு வாங்குற ஆள எனக்குத் தெரிஞ்சு என் வாழ்க்கையில இப்பதான் முதமுதல்ல பாக்கறேன்!”, என்று ஆச்சர்யப்பட்டவன், மேலும் தொடர்ந்தான்.
“அப்புறம்… அவ்ளோதானா? இல்லை இன்னும் எதுனா இருக்கா?”, மன வெம்மை தீரும் வகையில் பெண்ணின் பேச்சில் ஏனோ குற்றாலச் சாரல் அடிக்க, திறந்த வாயை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளத் துடித்தான்.
“சொன்னதைக் கேக்காம போயி கவனமில்லாம கிணறுனு தெரியாம விழுந்துட்டேன்னு, எம்மேல உங்களுக்கு கோபமா?”, ஊக்கப்படுத்தியவனின் வார்த்தையில், கேட்க வந்ததைக் கேட்டு முடித்திருந்தாள் பெண்.
“இப்பவே சொல்லணுமா? இல்லை மெதுவா சொல்லட்டா?”, பெண் குளிரில் நடுங்குவதைத் தாங்காமல் மீண்டும் கேட்டான்.
“இல்லை! நீங்க கண்ணுலயே படமாட்டுறீங்க! உங்களைக் கஷ்டப்பட்டுத்தான் இப்ப பிடிச்சிருக்கேன்! அதனால இப்பவே சொல்லுங்க!”, என்று பிடிவாதமாக நின்றவளின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கோ, அடைமழைக் காலத்திலும், வானவில்லின் வர்ணஜாலங்களாக வசந்தம் வந்து வீசியது. மனம் பறந்தது.
‘தானா, நம்மைக் காணவேண்டி வீனா தேடியிருக்கா! அதுவும் கஷ்டப்பட்டு… எதனால… எல்லாம் நம்மமேல உள்ள இஷ்டத்தால…!’
‘மோகினியேதான் இது!! பிடிக்குதுல்ல!’
“நான் எப்பவும் போலதான் இருக்கேன். நீ கவனமா இருந்தா உனக்கு நல்லதுங்கறதுக்காக, அப்ப சொன்னதுதான் எல்லாம். மற்றபடி அதுல கோபம் எதுக்கு, எனக்கு வரப்போகுது! இங்க நான் வந்து நாளாச்சுல்ல…! அத்தோட அந்த விசயத்தை மறந்தே போயிட்டேன்!”, என்று சமாளித்திருந்தான் சங்கர்.
‘அப்போ நானா வந்து வாயக்குடுத்துட்டேனா!’
“ம் வேற?”, என பெண்ணின் விழிகளை ஊடுருவியவாறு கேள்வியை எழுப்பினான்.
“அப்புறம் ஏன் என்னைய நீங்க இப்ப வந்ததுல இருந்து அவாய்ட் பண்றீங்க?”
“அவாய்ட் பண்றேனா?”, பழி போடுபவளை பாவமாகப் பார்த்தான்.
“ம்.. ஆமா… மறைக்காம சொல்லுங்க!”, விடாமல் கேட்டாள்.
“உன்னைய அவாய்ட் பண்ணலாம் இல்லை. வேலை இருந்ததால போயிட்டுருந்திருப்பேன். நீயா எதாவது சொல்லாத!”, என்றவன்,
“அவ்வளவுதான! கீழ கிளம்பு”, என்று விரட்டும் குரலில் பேசினான்.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்க, நேரங்காலம் தெரியாமல், தன்னிலை புரியாமல் வந்து நின்றவளைத் தன்னிடமிருந்து அகற்றவே அவ்வாறு ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டு பாணியில்’ பேசினான்.
அவனை நம்பினாலும், அவனது வயதை நம்ப இயலாத தனது நிலையை உணர்ந்து விரட்டினான் பெண்ணை.
சசிகலாவின் துயரங்களை, ஏக்கங்களை பார்த்து வளர்ந்தவன். சசிகலாவால் பண்பாக வளர்க்கப்பட்டவன்.
பெண்களை மதிக்கவும், உணர்வுகளை உதாசீனப்படுத்திடாது தன்னிடமிருந்து பிறரைக் காக்கவும் தாய் கற்றுத் தந்திருந்தது, சங்கருக்கு தற்போது கைகொடுத்தது.
பண்பு, அவனைத் தவறத் தூண்டாது! தவறச் செய்யும் தருணங்களை அகற்றத் தூண்டியது!
இதை அறிந்திராத பெண், தன்னை அவன் தவிர்ப்பதற்கான காரணம், தன்மேல் அவனுக்கு இருக்கும் அக்கறையின்மை என்று கணக்கிட்டுக் கலங்கியது.
“நீங்க எம்மேல ரொம்ப கேரிங் பெர்சன்னு நினைச்சேன். இப்ப என்னனா நீங்க வேற மாதிரி மாறிட்டீங்க!”, என்று சங்கரின் பேச்சைக் கொண்டு திடீர் முடிவுக்கு வந்தவள், சோகமாகக் கூறியபடியே, அங்கிருந்து அவனைப் பார்த்தபடியே வாடிய வதனத்தோடு நகர்ந்தாள்.
பெண்ணின் முதல் வார்த்தைகளைக் கேட்டு, ஒரு நொடி ஜிவ்வெனப் பறந்தவன், ‘மாறிட்டீங்க’ என்ற பெண்ணின் வார்த்தையில் உயிர் போயிருந்தது.
‘கடவுளே… இன்னிக்குன்னு வந்து மொத்தமா சேத்து வைச்சு சோதிச்சு, நோகடிக்கிறாளே! தாங்க முடியலை!’
“ஏய் நில்லு!”, என்று அருகில் சென்று, தன்னை நோக்கித் திரும்பியவளின் கண்ணை நோக்கியவன்,
“உன் குட்டி மூளையா இதையெல்லாம் கண்டுபிடிக்குது?”, என்று கேள்வியெழுப்பினான்.
“இல்லை…. விவேக்கோட டிடெக்டிவ் ஏஜென்ஸில சொல்லிக் கண்டுபிடிச்சேன்!”, என்ற சோகம் மாறாத குரலில், கிண்டலாகப் பேசியவளை
தலையோடு, அவளின் தலையில் அவளது பின்னந்தலையில் ஆதரவாய்ப் பிடித்து செல்லமாக முட்டியவன், “வரவர செம ஸ்மார்ட்டா மாறிட்டு வர வீனா! இனி எதுக்கு என் கைடன்ஸ்லாம் உனக்கு! இனி உன்னை நீயே பாத்துப்பல்ல!”, என்று கூறியதும், அவன் வார்த்தை கேட்டு மலர்ந்து சிரித்தாள்.
தன்னை நிமிர்ந்து பார்த்துச் செவ்வந்திப் பூவாகச் சிரித்தவளைப் பார்த்தவனுக்கு, அள்ளிக் கொள்ளத் தேகம் பரபரத்தது.
சங்கரின் புகழ்ச்சியில், பெண்ணுக்கோ தான் சூழலைப் புரிந்து நடக்கப் பழகிக் கொண்டதால், தன்போக்கில் இருக்க, தன்னை சுதந்திரமாக சங்கர் தன்னை இருக்க விட்டதாக எண்ணி மகிழ்ச்சி குடிவந்திருந்தது மனதில்.
தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், “எப்பவும் நான் ஒரே மாதிரியாதான் இருக்கேன். இனியும் அப்டிதான் இருப்பேன்… உன் விசயத்துல மட்டும்…!”, என்று உறுதி கூறியவனின் ‘உன் விசயத்தில் மட்டும்’ என்கிற வார்த்தைகளுக்கு சங்கர் கொடுத்த அழுத்தத்தை பெண் கவனித்தாளா? என்பது தெரியவில்லை அவனுக்கு.
“அப்ப இனி என்னை அவாய்ட் பண்ணக்கூடாது!”, விட்டால் அழுது விடுபவள்போன்ற குரலில், தரையை பார்த்துப் பேசியவளை, அணைத்துத் தேற்றும் ஆவல் வந்தபோதும், அடக்கியபடியே… அருகில் இன்னும் நெருங்கி, தாடையைப் பிடித்து நிமிர்த்தினான்.
கண்களில் பாத்தி கட்டி நின்றிருந்த நீரைப் பார்த்தவனுக்கு, பதறி வந்தது.
‘என்ன நடந்துருச்சுன்னு பொசுக்குன்னா கண்ணுல தண்ணியோட நிக்கிறா!’
பெற்றவர்களும் தன்னை வேறுஇடத்தில் விட்டிருக்க, வந்த இடத்தில் ஆதரவாக இருப்பதாக எண்ணியவனை, இழந்து விடுவோமோ என்கிற சிறுமியின் பரிதவிப்பு அது!
“ஏய்… எதுக்கு இப்ப அழற! முதல்ல கண்ணைத் துடை!”, என்று அதட்டியவனின் வார்த்தையில், அவள் கண்ணைத் துடைக்கும் முன்பே, கன்னம் வழியே நீர் வழிந்திருந்தது.
மனம் அழுதாலும், அதைக் காட்டுவது மரபிற்கு முரண் என்று கூறி வளர்க்கப்பட்ட சமூகத்தின் இனம் அவன்.
அதனால் அதை மனதிற்குள் மறைத்து, கழுத்தில் இருந்த அவனது துண்டை எடுத்து, வேகமாக பெண்ணது கன்னத்து நீரை இதமாக ஒத்தி எடுத்திருந்தான்.
இங்கு வந்தது முதல், முல்லை, தங்கவேலு, சசிகலா தவிர யாருடனும் அதிகம் ஒட்டாதவளின் பட்டியலில், தற்போது தன்னைச் சேர்த்துக் கொண்டதை, பெண்ணின் வார்த்தைகளைக் கொண்டு கணித்திருந்தான் சங்கர்.
“நீயா எதாவது மனசைப் போட்டுக் குழப்பாம, நல்லா படிக்கணும்!
ஒரே வீட்ல பிறந்திருந்தாலும், பசங்களும் பொண்ணுங்களும் இங்க டிஸ்டன்ஸ் கீப்அப் பண்ணி வளர்றதுதான் கிராமத்து வழக்கம்.
நம்ம ரெண்டு பேரும் கசின்ஸ்தான…! மெட்ராஸ் மாதிரி இந்த ஊரு கிடையாது. அதனால இந்த ஊருக்கு தகுந்த மாதிரி இருந்தாதான் உன்னை நல்ல பொண்ணுனு சொல்லுவாங்க…!”, என்று பெண்ணுக்கு புரியும்படி எடுத்துச் சொன்னான்.
தாய் புஷ்பா சொல்லியதையே, சங்கரும் அவனது பாணியில் தனக்குச் சொல்ல சரியெனக் கேட்டுக் கொண்டாள்.
தலையை ஆட்டியவாறு தன்பேச்சைக் கேட்டு நின்றவளை, “இந்தக் கிளைமேட் உனக்கு ஒத்துக்குமா என்னனு தெரியலை! ரொம்ப நேரம் இங்கேயே நின்னா முடியாம வந்திரும்…! எதையும் மனசுல போட்டுக் குழப்பாம போயித் தூங்கு!“, என்று அவனின் பழைய பல்லவியை தொடரக் கேட்டவள்
அதுவரை சற்றுத் தணிந்திருந்தவள், சங்கரின் வார்த்தையைக் கேட்டு, “என்னை விரட்டுறதிலேயே குறியா இருக்கீங்க! நானா ஒன்னும் குழப்பல. நீங்க என்னையக் கண்டுக்கலன்னுதான் குழம்பிட்டேன்!”, என்று ஆத்திரத்தில் பேசியதோடு, அடியாழத்தில் இருந்ததை வாரி, வார்த்தையோடு வார்த்தையாக வெளியே வீசியிருந்தாள் பெண்.
நவீனாவின் பேச்சில் ரசித்துச் சிரித்தவன், “நல்லா வாய் பேசுற வீனா! இப்டி பேசுனா உன்னை இங்க வாயாடின்னு சொல்லிருவாங்க!”, என்று பெண்ணை, தன்மனத்திற்கு மாறாக மிரட்டியிருந்தான்.
“அப்புறம் நான் உன்னைய என்னைக்கு கண்டுகிட்டேன், இப்பக் கண்டுக்கலன்னு வந்து எங்கிட்டயே என்னைப்பத்தி கம்ப்ளைண்ட் பண்ற!”, என்ற வினாவை தன் வீனாவை நோக்கிக் கேட்க
சங்கரின் முந்தைய பயணங்களின் போதான, அவனது பார்வை முறையை செயலில் செய்து காண்பித்தவள், “இப்டி பாப்பீங்க முதல்லலாம்! ஆனா இப்பலாம் பாக்கறதே இல்லை!”, என்ற பெண்ணின் வருத்தமான பேச்சில் முழுவதுமாகத் தொலைந்திருந்தான் சங்கர்.
‘பாக்காத போது பாத்திருக்கா! அது தெரியாம பேக்கொதக்கா இருந்திருக்கேன்!’
“எல்லாம் தெரிஞ்சுட்டே, ஆனா ஒன்னுந் தெரியாதமாதிரி கமுக்கமா இருந்திருக்க?”
“இல்லை! இப்போ ரீசன்ட்டாதான் வாட்ச் பண்ணுனேன். அவ்வளவுதான்!”, என்று சீரியசாகக் கூறி, புன்னகை மாறாமல் நின்றவளை
“எல்லா டவுட்டும் இப்ப க்ளியராயிருச்சுல்ல!”
“அது தெரியலை! ஆனா டவுட் வரும்போது வந்து திரும்பவும் கேப்பேன்!”, என்றபடியே
“ஆங்… உங்களுக்கு கல்யாணமாமே? எப்போ?”, என்று மனதில் தோன்றிய வருத்தத்தை மறைத்துக் கொண்டு சிரித்தபடியே கேட்டிருந்தாள்.
‘என்னடீ உளர்ற’, உள்ளுக்குள் பதறியிருந்தான்.
“ரொம்பச் சந்தோசமா வந்து கேக்குற? யாரு சொன்னா உனக்கு இப்டியெல்லாம்?”
‘கட்டிக்கனும்னு நினைச்சவளே வந்து, உனக்குக் கல்யாணமானு சந்தோசமா கேட்டா…! என்னங்கடா செய்யறது? காலக் கொடுமையில்லை! இது காதல் கொடுமை!’
“கேள்விப்பட்டேன்!”, மிடுக்காக கூறினாள்.
“ம்… வீட்டுக்குள்ளயே உளவாளி வச்சிருக்கபோல! அதுக்குல்ல என்ன எங்கல்யாணத்துக்கு அவசரம்!”, என்றவனை, மனதிற்குள் இருந்து ஏதோ உந்தியது கேட்கச் சொல்லி… யோசிக்காமல் கேட்டிருந்தான்… தாமதிக்காது…
“பொண்ணு யாராம்?”
“ம்… அது தெரியலையே? நான் அதப்பத்திக் கேக்க மறந்துட்டேனே?”, வருத்தமாகக் கூறினாள்.
“நாலஞ்சு வருசம் செண்டு யோசிச்சு சொல்லு! நீங்கட்டிக்கிறேன்னு சொன்னா மேற்கொண்டு பெரியவங்களைப் பேசச் சொல்லுவோம்!”, என்று சிரித்தபடியே சீரியஸ் மோடில் மனதை திறந்திருந்தான்.
“ஆங்…”, என்று ஒரு நிமிடம் சங்கரின் பேச்சில் விழித்தவள்,
“ஏன் உங்க கேங்கு ஆளுங்க எல்லாம் சேந்து, என்னை உசிரோட போட்டுத் தள்ளறதுக்கா?”, என்று பெண்ணும் வாயை விட்டிருந்தாள்.
பெண்ணின் வார்த்தையில் சுதாரித்தவன், பெண்ணை விடாது கேட்டு விசயத்தை வாங்கியிருந்தான்.
ஸ்டோர் ரூம் துவங்கி, கிணறு வரை தொடர்ந்த சம்பவங்களை, சங்கரிடம் சங்கடத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தாள் நவீனா.
சங்கருக்கும் புரிய வந்தது. தன்னைத் திடீரெனத் தொடரும், ஊடுருவும் நவீனாவின் பார்வைக்கான காரணமும் விளங்கியது. நவீனாவின் தற்போதைய இந்த மாற்றத்திற்கான காரணத்தையும் விளங்கிக் கொண்டிருந்தான்.
அத்தைகளை மட்டுமே சமாளிக்க வேண்டும் என எண்ணியிருந்தவனுக்கு, அவர்களது பெண்களையும் சமாளிக்க வேண்டிய தனது நிலை இப்போது புரிந்தது.
ஆனாலும் தனது வேலையை இலகுவாக்கியவர்களை எண்ணி நன்றி உணர்வும் வந்து போனது.
இல்லையென்றால், இன்று தன்னைத்தேடி நவீனா இங்கு மெனக்கெட்டு வந்திருக்க மாட்டாள் என்பதும் திண்ணமே!
“உங்களுக்கு இங்க குளிரலையா?” என்று பெண் கேட்டவுடன்தான், நடப்பிற்கு வந்தான்.
“ம்… என்ன கேட்ட?”, பெண்ணின் பேச்சில் கவனமில்லாதவன் மீண்டும் கேட்டான்.
“குளிரலையான்னு கேட்டேன்”, என்றவுடன், சற்றமுன்பு தன்னை அவள் எருமையோடு ஒப்பிட்டுப் பேசியது நினைவில் வர
“உனக்கு கருப்பு பிடிக்காதா வீனா?”
“ம்…”, என்று தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்து சிரித்தபடியே,
“ம்… கொஞ்சம் பிடிக்காதுதான்… ஆனா எம்மேல நீங்க ரொம்ப கேரா இருக்கிறதைப் பாத்து, கலர் பத்தின என் ஒப்பீனியன் கொஞ்சமா மாத்திட்டேன்”, என்று எதையும் மறையாமல், ஆனால் சங்கோஜத்தோடு கூறினாள்.
அத்தோடு, “ஆச்சி… நான் ரூமில இல்லைனா அத்தையை போயி தொந்திரவு பண்ணுவாங்க. நான் அங்கயும் இல்லைனா அவ்ளோதான்”, என்றபடியே வாய்பொத்தி சிரித்தபடியே கிளம்பியவளை
“நாங்கேட்டதுக்கு நீ பதில் சொல்லலையே?” என்றான்.
“ஆங்… என்ன கேட்டீங்க?”, கிளம்பியவள் நின்று கேட்டாள்.
“சரி, நீ இப்ப கீழ போ. இன்னொரு நாள் அதப்பத்தி பேசிக்கலாம்!”, என்று கிளம்பியவளை நிறுத்தாமல் கீழே கருத்தாக அனுப்பியிருந்தான்.
குழந்தையா!
இல்லை நீ குமரியா!
குழந்தையென்றால்
குற்றமாகுமடி!
குமரியென்றால் என்
பித்தம் தணியுமடி! அதில்
குழப்பம் தீருமடி! – நம்
காதல் வாழுமடி! – எனது
ஆயுள் நீளுமடி!
சிலநேரம் முதிர்வான பேச்சு, சிலநேரம் சிறுபிள்ளைத்தனமான செயல்கள் என்று மாறி மாறி தன்னோடு உரையாடிச் சென்றவளை எண்ணி குழப்பத்தோடு அமர்ந்துவிட்டான் சங்கர்.
‘அவளுக்கு என்னோட கேரிங் பிடிச்சிருக்கு. ஆனா தெளிவா இருக்கா… இன்னிக்கு நடந்துட்டதை வச்சிப் பாத்தா… எல்லாம் நமக்கு சாதகமாதான் இருக்கு.
படிக்கிற புள்ளை! மனசுல ஒன்னை ஏத்திட்டா எல்லாம் சிரமமா போயிரும்! படிச்சி முடிக்கட்டும். பாத்துக்கலாம். அதுவரை வரக்கூடிய சோதனையெல்லாம் வேதனையோட தாங்கிக்கத்தான் வேணும்’, என்று தன்னையே தேற்றியிருந்தான் சங்கர்.
//////////////
மோனிகா, நவீனா இருவரும் படிப்பில் மிகவும் சுட்டியாக இருந்தார்கள்.
குணத்தில், செயலில் முற்றிலும் மாறுபட்டிருந்தனர்.
தாஸ் மகனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, பண்ணையில் மேற்பார்வை அவ்வப்போது சென்று செய்து வருகிறார்.
சசிகலா தற்போது மோனிகாவையும், நவீனாவைப் போல கருத்தாக கவனித்துக் கொள்ளத் துவங்கியிருந்தார்.
நவீனாவிற்கு எதாவது செய்யும்போது, தோழியையும் உடன் வற்புறுத்தி அழைத்து, அத்தையிடம் ஆரம்பத்தில் ஒப்படைத்து, இருவரும் சற்று இலகுவாகப் பேசத் துவங்கியிருந்தனர்.
ஆனாலும், கண்டிப்புகளை பெண் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்கிற தயக்கம் காரணமாக சசிகலா மற்றும் மோனிகாவிற்கிடையே இடைவெளியிருந்தது.
சாந்தனுவிற்கு மருத்துவம் படிக்கும் எண்ணம் மனதிற்குள் இருந்தது.
ஆகையினால் மிகுந்த சிரத்தையோடு தற்போது முதலே படித்தான்.
சங்கரும், சாந்தனுவின் ஆர்வத்தைக் கண்டு, உந்துதல் வார்த்தைகளைக் கொடுத்திருந்தான்.
அதற்கான முன்னேற்பாடான விடயங்களை தம்பிக்கு செய்து கொடுத்தான்.
///////
கார்த்திகைத் தீப திருநாள்!
அன்று இரவு வீடுதோறும் விளக்குகள் பளிச்சென்றிருந்தது.
வீடு முழுவதும் விளக்கை ஏற்றிவிட்டு, இன்னும் வேணும், இன்னும் வேணும் என்று வந்து கேட்டு நின்ற சிறுசுகளைக் கடிந்து கொண்டார் முல்லை.
“அந்தக் காலத்துல வீடுகள்ள கரண்டு கிடையாது. அரிகேன் விளக்கு, சிம்னி விளக்குன்னு வச்சிருந்த காலமது.
மழைகாலம் ஆரம்பிச்சவுடனே பூச்சி, பொட்டு, பொழுதடைஞ்சிட்டா வெளியேறி ஊறத் தொடங்கிரும்.
அந்த நேரம் அதோட வரத்தை(வருகையை) தெரிஞ்சிக்கத்தான கார்த்திகை முச்சூடும் வாசல், அப்புறம் நாம புழங்கற இடத்தில எல்லாம் விளக்கு வைக்கிறது பழக்கம்.
அப்டி வச்சாதான் அந்த வெளிச்சத்துல வந்த பூச்சியத் தெரிஞ்சிக்க முடியும்னு, அந்தக் காலத்துல செஞ்சாங்க!
அந்த வெளிச்சத்துல வெளியே வர பூச்சியபத்தி தெரிஞ்சுட்டு, அதுக்கு ஏத்தமாதிரி அவங்க தங்களைக் காபந்து பண்ணிக்க, சில வழிமுறைகளைச் செய்து வச்சிருப்பாங்க.
இப்பதான் வெளிச்சமா வீடு முழுக்க லைட்டு எரியுது. பத்தாக்குறைக்கு கொல்லைப் பக்கமெல்லாம் வேற லைட்டு போட்டிருக்கு. அத்தோட மண்தரையே தெரியாம இடம் முழுக்க, மார்பிளு, டைல்ஸுன்னு போட்டு வச்சிருக்கோம்.
பூச்சி வரதுக்கு வழியெங்க இருக்கு.
பின்ன எதுக்கு இன்னும் விளக்கு வேணுனு வந்து நிக்கிறீங்க…
பழைய சாஸ்திர, சம்பிரதாயங்களை எதுக்கு இப்போ செய்யறோம்னே தெரியாம காசுக்கு புடிச்ச தெண்டமா, எதையாது செய்யக் கூடாது!
விளக்கு வச்ச அளவு எரியட்டும். இதுக்கு மேல வேண்டாம்”, என்று நீண்ட உரையை ஆற்றி அனைவரையும் அமைதிப்படுத்தி அங்கிருந்து அன்பாகவே விரட்டியிருந்தார் முல்லை.
இரவு நேரத்தில், குளம், கண்மாய்களில் விளக்குவிடும் பழைய முறையை இன்னும் சிலர் பின்பற்றுவது வாடிக்கை. வீட்டுப் பிள்ளைகள் அங்கு கிளம்பியிருந்தனர்.
எலுமிச்சை, முட்டைக் கூடு இதில் விளக்கேற்றி தெப்பம்போல நீர் நிரம்பியிருக்கும் குளக்கரையில் விட்டால், அது வாடைக்காற்றுக்கு அசைந்து அசைந்து முன்னேறும் அழகே அழகு!
பாவாடை தாவணியில் கையில் விளக்கோடு, குளத்தருகே சென்ற நவீனாவை பயத்தோடுதான் பார்த்திருந்தார்கள், சாந்தனு குரூப்.
மோனிகா வரமாட்டேன் என்றிருந்தாள்.
சிறுவர்கள் அனைவரும் பனை மரத்துப் பாலையில் செய்து வைத்திருந்த கார்த்திகை பொரியுடன் காத்திருந்தனர்.
விளக்கு வைத்துவிட்டு பெண்கள் வீட்டிற்குச் சென்றதும், சிறுவர்கள் அவர்களது கார்த்திகை கொண்டாட்டங்களை மத்தாப்பு போல பறக்கும் பொரியை கையில் பிடித்தவாறு கரைகளில் ஓடுவார்கள்.
இருட்டில் அது பார்க்க மிகவும் ரம்மியமாக வெளிச்சமாக இருக்கும்.
தைரியமாக விளக்கு விடச் சென்றவளை தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான் சங்கர்.
தீபாவளிக்கு வந்து போனவன், தற்போதுதான் மீண்டும் ஊருக்கு வந்திருந்தான்.
தவிர்க்காத சிரிப்பு, இருவருக்குமே ஏதோ மனநிறைவைத் தந்திருந்தது.
பேச்சுகள் குறைவே! அதுவும் அத்தியாவசியம் என்றால் மட்டுமே!
பார்வைகளை மட்டுமே காணும் வேளைகளில் பரிமாறி, மனபாரமற்று இருந்தனர்.
பவுர்ணமி வெளிச்சம் மட்டுமே. தெருவிளக்குகள் பேருக்கு இருந்தது. சில விளக்குகள் எரிந்தது. பல விளக்குகள் நடித்தது.
மிக நெருக்கத்தில் வந்தவர்களை மட்டுமே அடையாளம் கண்டு கொள்ள இயலும்.
அங்கும் இங்குமாக மக்கள் விளக்கு வைப்பதும், மேலேறி வீடு செல்வதுமாக இருந்தார்கள்.
பலர் கரையில் நின்றபடியே வேடிக்கை பார்த்தார்கள்.
விளக்கேற்றி விட்டு, கரையை நோக்கி ஏறிவந்தவளை இடைமறித்திருந்தாள் காயத்திரி.
இடைமறித்தவளைப் பார்த்தவன், யாரது வழியை மறைக்கிறது? என்ற எண்ணத்தோடு, நவீனாவை நோக்கி, ‘இன்னிக்கு என்ன வம்பு இழுத்துட்டு வரப் போறானு தெரியலையே’, என்று வேகமாக முன்னோக்கி வந்திருந்தான்.
அதற்குள் நவினாவின் அருகில் சென்ற தனது தாயைக் கண்டு சங்கர் தயங்கி நின்றிருந்தான்.
அதுவரை நவீனாவையே கரையிலிருந்தபடியே கவனித்திருந்தவர், உடன் வந்து திடீரெனப் பேசும் பெண் யாரென சரியாகத் தெரியாததால் முன்னேறி வந்திருந்தார்.
அருகில் வந்து பெயரை அழைக்க முற்படுமுன், நவீனாவின் தைரியமான பேச்சில் கரையில் இருந்த மரத்தின் நிழல்படும் இடத்தில் தள்ளியே நின்றிருந்தார் சசிகலா.
மற்றவர்கள் பின்னோடு நடந்து வர, மறித்தவளை, “என்னக்கா?”
“ம்… வரவர பயமத்துபோயி, ரொம்ப தைரியம் வந்திருச்சோ”
“எதுக்கு தைரியம்?”
“அன்னிக்கு விழுந்தும், பயமில்லாம வந்து விளக்கு வைக்கிற?”
“உங்க மாதிரி யாரும் எம்பக்கத்தில இல்லைங்கற தைரியந்தான்”, என்றவளை அதிர்ச்சியோடு பார்த்த காயத்திரியிடம்,
“நீங்க வாரிவிட்டதால விழுந்தேன்னு சொன்னா, வீட்டு வாசல்ல உங்குடும்பத்தையே ஏத்த மாட்டாங்கனு எனக்குத் தெரியும். அந்தப் பாவம் எனக்கெதுக்கு?
தம்மாத்தூண்டு தைரியமாவது இருந்திருந்தா, முகத்துக்கு நேரா வந்து விசயத்தைச் சொல்லி என்னையத் தண்ணிக்குள்ள தள்ளி விட்ருக்கணும்.
அதைவிட்டுட்டு…. காலை இடறிவிட்டு விழவச்சுட்டு ஆளு அப்ஸ்காண்ட் ஆகிருக்கீங்க. சின்னப்புள்ளத்தனமா இல்லையா உங்களுக்கு!
ஆனா நான் ஏன் இதுவரை யாருகிட்டயும் சொல்லலைனா… (பயபுள்ள அப்டித்தான் சத்தியமா சொல்லுச்சுங்க…! நம்புங்க…!), நம்ம கணக்கை நாமளே நேரம் வரும்போது தீத்துக்களாம்னு முடிவுக்கு வந்துட்டேன்ல… அதான்!”, என்று நிறுத்தியிருந்தாள்.
முகம்மாற, “நான் என்ன பண்ணேன். நான் ஒன்னும் பண்ணலயே!”, என்றபடியே தனது குட்டு வெளிப்பட்ட பதற்றத்தில் நகர்ந்தவளை
விடாமல் கைபிடித்து நிறுத்தியவள், “சும்மா கதைவிடாதக்கா. தேவையில்லாம எதாவது செஞ்சு கொலைக்கேசுல உள்ள போயிராத…!”, என்று கலாய்த்துவிட்டு
“இருந்தாலும், செத்தாலும் சசி அத்தைக்கு நா மட்டுந்தான் மருமக! வேணுனா எழுதி வச்சுக்கோ!”, என்று ரஜினி பாணியில் பேசியபடியே அகன்றவளை
வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தாள் காயத்திரி.
நவீனாவின் பேச்சில் இருந்த தெளிவைக் கண்டவ சசிகலாவிற்கோ, ‘அய்யோடா… நாம யாரோ என்னவோன்னு, புது எடத்துல தனியா மாட்டிக்கிச்சுனு நவீனாவை நினைச்சு பயந்து போயி வந்தா, இது புலி மாதிரில்ல காயத்திரிகிட்ட பாயுது! அவளும் பயந்து போயி ஓடுறா!
என்னதான் இவளுகளுக்கு இடையில இதுக்குமுன்ன நடந்துச்சுன்னு தெரியலையே!
அதுக்காக வீட்டுல வந்திருக்கிற புள்ளைய தண்ணிக்குள்ள வாரிவிடக் கண்டோமா? என்ன அவங்கம்மா இப்டி வளத்திருக்காங்க?
நாம எதுவும் இதைப்பத்திப் பேசாமலே, சவால் விடுற அளவுக்கு இந்த நவீனா புள்ளை வந்திருக்கான்னா, நம்ம பய எதுவும் புள்ளைகிட்ட விசயத்தை, உசாரா இல்லாம உளரிட்டானோ!’, என்று எண்ணியவாறே யோசனையோடு அகன்றிருந்தார் சசிகலா.
மருமகளாக்கிக் கொள்ளும் முடிவோடு இருந்த சசிக்கு, பெண்ணின் பின்னே நடந்தவாறே, ‘வாடி… என் சீவகங்கை சீமை சித்தராங்கி! குழந்தைனு நினைச்சிருந்தா, அந்தப் புள்ளைகிட்ட போயி சபதம் எல்லாம் போட்டு, வம்பா பேசிட்டு வர!’, என்று எண்ணியவாறே மனதிற்குள் நவீனாவை மெச்சியபடி பின்தொடர்ந்திருந்தார்.
தனிமையில் மகனிடம் இதுபற்றி பகிர்ந்திருந்தார். மகனும் காயத்திரி, மற்றும் இதர பெண்களும், நவீனாவிடம் நடந்து கொண்டிருந்த முறைமையைப் பற்றியும் தாயிடம் பகிர்ந்திருந்தான்.
“என்னடா தம்பி, உனக்கு பெரிய க்யூவே சுயம்வரத்துக்கு தயாராகுதுபோல!” என்று கிண்டலித்துவிட்டு,
“நல்லா நிதானமா யாரையும் புண்படுத்திறாம முடிவெடுக்கனும் சங்கரு. ஆனா இன்னும் ஆறு வருசம் போகட்டும். அப்பதான் உனக்கும் பொறுப்பு வரும்!”, என்று இதுவரை பொறுப்பாக இருக்கும் மகனிடம், இதமாக தனது மனதைப் பகிர்ந்து கொண்டார் சசிகலா.
“எனக்கு ஒன்னும் கல்யாணத்துக்கு அவசரமில்லைம்மா!”, என்று தாயிடம் மனந் திறந்திருந்தான் மகன்.
/////////////
அரையாண்டு விடுமுறை வந்தது. ஆனால் வெற்றியால் வந்து அழைத்துச் செல்ல இயலவில்லை. நவீனா அதற்காக வருந்தவும் இல்லை.
ஆங்கில வருடமும் இனிமையாகவே பிறந்தது.
பொங்கல்…
அறுவடை செய்திருந்த அனைத்தும், புதியதொடு இதமான மணத்தை பரப்பியிருந்தது.
வெளியில் வைத்துப் பொங்கல் வைப்பதை பெண் ஆச்சர்யமாகப் பார்த்திருந்தாள்.
இதுவரை புஷ்பா, இப்படி பொங்கல் வைத்துப் பார்த்திருக்கவில்லை.
இரண்டு நாள்களும் பொங்கல். முதல் நாள் வீட்டில். மறுநாள் பண்ணையில்…
ஐந்தாறு நாள்கள் விடுமுறை.
காணும் பொங்கலுக்கு, காரைக்குடிக்கு தியேட்டருக்கு வந்திருந்த புதிய திரைப்படத்தைக் காண குடும்பமே கிளம்பியது.
வால்டர் வெற்றிவேல்…
மூத்தவர் குடும்பத்தில் மோனிகா, சங்கர், நடுவில் உள்ளவர் குடும்பத்தில், ராஜவேலு சாரதா தவிர அனைவரும், இளையவர் குடும்பத்தில் முல்லை, தங்கவேலு தவிர மற்றவர் என அனைவரும் கிளம்பியிருந்தனர்.
அனைவரும் செட்டு செட்டாக குடும்பத்துடன் அமர்ந்துவிட, நவீனா, மோனிகாவின் பொறுப்பை சங்கர் ஏற்றுக்கொள்ளும்படி நேர்ந்திருந்தது.
சசிகலாவின் வார்த்தைகளைக் கேட்டு சரியென்று உடன் வந்திருந்தான் சங்கர்.
இரண்டு வரிசைகளை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது குடும்பம்.
மோனிகா, நவீனா, சங்கர் மூவரும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர்.
மெட்ராஸில் உள்ள தியேட்டரைப் பார்த்து பழக்கப்பட்ட நவீனாவிற்கு, அமரவே அய்யரவாக (அருவெருப்பு) எண்ணினாள்.
இருந்தாலும், மெனக்கெட்டு கிளம்பி வந்துவிட்டதாலும், தனித்து வீடு திரும்பும் தூரத்தில் வீடு இல்லாததாலும், எதுவும் பேச இயலவில்லை.
பெண்ணைப் பார்த்தவனுக்கு, எதுவோ சரியில்லை என்று தோன்றியது. ஆனாலும் எதையும் கேட்காமல் படம் பார்க்கத் துவங்கியிருந்தனர்.
‘சின்ன ராஜாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது…’, என்கிற பாடலுக்கு, சுகன்யாவின் ஆட்டம் ஆரம்பித்தபோதே, முழங்கையில் ஏதோ கடிக்கும் உணர்வு நவீனாவிற்கு.
கொசுவோ என இரண்டு முறை கைகளைத் தடவி சரி செய்தவள், மீண்டும் முழங்கை பகுதியில் ஏதோ ஊரும் உணர்வில், ஏதோ கையில் பிடிபட… மோனிகாவிடம் விடயத்தைப் பகிர்ந்தாள்.
த்ரீ ஃபோர்த் கையை உடைய உடையணிந்து வந்திருந்த மோனிகாவிற்கு அப்படி எந்த பிரச்சனையும் வந்திருக்கவில்லை.
மிடியணிந்து வந்திருந்தவளுக்கோ, ஏதோ கடிக்கும் உணர்வு கூடியதுபோல உணர்ந்தாள். வேறு வழியில்லாமல் சங்கரை சரணடைந்திருந்தாள் பெண்.
இடையில் அரங்கை விட்டு, நவீனாவை வெளியே அழைத்துச் சென்று கையைப் பார்த்தவனுக்கோ, கண்டவுடன் புரிந்திருந்தது.
மூட்டைப் பூச்சியின் பசிக்கு வீணாகி இருந்தது, வீனாவின் ரத்தமென்று!
கடித்த இடத்தில் எல்லாம் தடிப்புகள். அதற்குமேல் அவளுக்கு அங்கு படம் பார்க்கும் எண்ணமே போயிருந்தது.
இடையில் இவளை மட்டும் எப்படி வீட்டிற்கு அழைத்துச் செல்ல என்று எண்ணியவன், பெரிய சித்தப்பாவிடம் மட்டும் விடயத்தைப் பகிர்ந்துவிட்டு, மோனிகாவை அவர்களிடம் ஒப்படைத்து நவீனாவோடு கிளம்பியிருந்தான்.
உடன் வருகிறேன் என்று சொன்ன மோனிகாவை, படம் பார்க்குமாறு கூறி தியேட்டரில் விட்டுவிட்டு, இருவர் மட்டும் வீடு திரும்பியிருந்தனர்.
“என்ன இங்க தியேட்டரை மெயின்டெயின் பண்ணாம இப்டி வச்சிருக்காங்க?”, என்று சலித்தவளை
“என்னதான் அவங்க மெயின்டெயின் பண்ணாலும், மக்கள் ஒத்துழைச்சாதான சரி செய்ய முடியும்!”, என சமூகச் சிந்தனையோடு கூடிய உரையாடலைத் தொடங்கி, பேசியவாறே வீட்டை அடைந்திருந்தனர்.
வந்தவன் தாயிடம் வீனாவை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் காரைக்குடிக்கு கிளம்பியிருந்தான்.
சுடுநீரில் உடைகளைக் களைந்து முக்கச் செய்தவர், அத்தோடு இளஞ்சூடான நீரில் நவீனாவைக் குளிக்கச் செய்திருந்தார்.
அதில் சற்று இயல்பானதுபோல உணர்ந்தவள் அத்தையோடு ஐக்கியமாகியிருந்தாள்.
தாஸ், மருமகளிடம் வந்த பேச்சுக் கொடுக்க, மரியாதை நிமித்தமாக அவர் கேட்டதற்கு இதமாகவே பதிலுரைத்தாள்.
பேசியவரையில் அவளுக்கு தாஸிடம் எந்தக் குறையும் தெரியவில்லை. மிடுக்கோடு பேசுபவரைப் பார்த்தவளுக்கு, இது சங்கரிடம் சற்றுக் குறைவாகவே இருப்பதாக உணர்ந்தாள்.
அந்த மிடுக்கு, மிலிட்டரியின் சரக்கு என்பதும் பெண்ணுக்குப் புரிந்தது.
மற்ற மாமன்களைப் போல, நவீனா என்று பெயரை அழைத்துப் பேசாமல், மருமகளே, மருமகளே என்று வார்த்தைக்கு வார்த்தை பேசியவரை, வித்தியாசமாகவே உணர்ந்தாள்.
சற்றுநேரம் தனது பெற்றோரைப் பற்றி பேசியவருக்கு, கேட்டதற்கு பதிலுரைத்தாள்.
சங்கடங்களிலிருந்து சற்று மீள்வதாக அவரை உணர்ந்தாள் பெண்.
அத்தையிடம் விடைபெற்றுக் கொண்டு, தங்களது பகுதிக்கு வந்தவள் ஆச்சியோடு பொழுதை நெட்டித் தள்ளினாள்.
////////////
மாலையில், படம் பார்க்கச் சென்றவர்கள் வீடு திரும்பிய வேளை!
மாலையில் வீடு திரும்பியதற்கு மாறாக, தற்போது வீட்டிற்கு திரும்பி வந்த சங்கரைக் கண்டு பதறியிருந்தார் சசி.
அனைவரிடமும் ஒரே முனுமுனுப்பு. ஏதோ ஒன்று சரியில்லை என்பது புரிந்தது. மோனியின் முகமும் சிவந்து காணப்பட்டது.
நடந்ததை அவனது நடையிலேயே உணர்ந்து கொண்டிருந்தார் அந்தத்தாய். சங்கரோ எதுவும் பேசாமல் அறைக்குள் அடைந்திருந்தான்.
நடந்தது என்ன?
யாரிடம் கேட்கலாம் எனப் புரியாமல் திணறிய சசிகலாவிற்கு விடயம் என்னவென அறிந்து கொள்ள இயன்றதா?
அடுத்த அத்தியாயத்தில்….
=======