Chocolate pakkangal 1

அத்தியாயம் ஒன்று

ஞாபகமாய் வைத்திருக்கும்

மடிப்பு கலையாத போர்வையில்
எந்த அடுக்கில் உன் வாசம்?
நினைவு தப்பியலையும் ஓர்
குருட்டுப்பறவையின் பரிதவிப்பாய்
காணுமிடமெங்கும் நீ!
தொலைத்துப்போன காலத்தின்
சிறகுகள் உதிர்த்து
இறகுகள் செய்கிறேன்
உயிர் பிரித்து!

 -டைரியிலிருந்து

பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சென்னை இதயப்பகுதியின் காலை வேளை! மவுன்ட் ரோட்டில் பிரம்மாண்டமாய் அமைந்திருந்தது அந்த மிகப்பெரிய ஒன்பதுமாடி கட்டிடம்…

ஸ்ரீலக்ஷ்மி குருப் ஆப் கம்பெனிஸ்!

தலைமுறை தலைமுறையாக பல்வேறு தொழில்களில் கோலோச்சி கொண்டிருக்கும் பரம்பரை… பெயர் கூறினாலே அவர்களது பெருமையை பக்கம் பக்கமாக அனைவரும் கூறுமளவு தங்களுக்கென மரியாதையை கொண்டுள்ள குடும்பம்… நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் ஆங்கிலேயரால் சர் பட்டம் வழங்கபட்ட சர் ராமநாதன் குமாரசுவாமி, அவருடைய மகன் சுப்பையா குமாரசுவாமி மற்றும் அவரது வழியில் வந்த வாரிசுகள் என பரம்பரை பெருமைக்கு குறைவில்லாத சாம்ராஜ்யம்!

அந்த குடும்பத்தின் இப்போதையை வாரிசு கொள்ளு தாத்தாவின் பெயரை கொண்ட ராமநாதன் குமாரசுவாமி என்கிற வருண்! வம்சத்தின் பெருமையும் தேஜசும் ஒருங்கே அமையபெற்ற வசீகரன்…

கண்களில் அணிந்திருந்த கூலரை கழட்டியவாறே கம்பீரமான பார்மல்சில் அலுவலகத்தினுள் நுழைந்த போது ஊசி விழுந்தாலும் சப்தம் கேட்பது போன்ற அமைதி! ஆனால் அவன் அந்த அமைதியான மரியாதையை விட மனதில் மரியாதையை எதிர்பார்ப்பவன் என்பதும் அறிந்தவர்கள் அங்கிருப்பவர்கள்!

அவர்களது காலை வணக்கத்தை ஏற்றவாறே அவனுடைய அறைக்குள் நுழைந்தவனுக்கு எப்போதும் போல சிறு தயக்கம் தோன்றியது…

செய்ய வேண்டிய வேலைகளும் சூழ்ந்திருக்கும் கடமைகளும் அவனது எண்ணத்தை சூழ, வரிசையாக மாட்டியிருந்த தன் முன்னோர்களின் படத்திற்கு முதலில் மரியாதை தெரிவித்து விட்டு திரும்பியவனின் பார்வையில் விழுந்தது அவனது தந்தை சிதம்பரத்தின் நாற்காலி!

சிதம்பரம் குமாரசுவாமி!

அவனது தந்தை,ஆசான்,வழிகாட்டி!

எப்போதும் போல வெறுமையான உணர்வு சூழ அந்த நாற்காலியை வணங்கினான்… காலையில் அவரை பார்த்து பேசிவிட்டே வருவான் என்றாலும் அந்த நாற்காலிக்கு குரு வணக்கத்தை செலுத்தாமல் அலுவலை துவங்கியதில்லை!

“குட் டே சர்!” கையில் ஐபேடில் அன்றைய அலுவல்களோடும் முகம் முழுக்க புன்னகையோடும் அவன் முன் வந்து நின்றாள் ஸ்ருதி… கொஞ்சும் மீன் விழிகள்… கொவ்வை இதழ்கள்… எதிரில் நிற்பவர்களை வீழ்த்தி பார்க்க நினைக்கும் அழகு!

சுருக்கமாக சிரிக்கும் அஜந்தா சிற்பம்!

அவளது கலகல பேச்சிற்கும் எவரையும் பேச வைத்து விடும் திறமைக்கும் அலுவலகத்தில் ஒரு ரசிகர் மன்றமே இருந்தாலும் வருண் முன் வெகுவாக அடக்கி வாசிப்பவள்!

“யாஹ்… குட் டே… இன்னைக்கு என்னனென்ன எங்கேஜ்மென்ட்ஸ்?” அவனது லேப்டாப்பில் அன்றைய ஈமெயில்களை செக் செய்து கொண்டே அவன் கேட்க… ஸ்ருதி சுறுசுறுப்பாக கூற ஆரம்பித்தாள்!

“இன்னைக்கு மார்னிங் லக்ஷ்மி ஸ்பின்னிங் மில் ரினவேஷன் காண்ட்ராக்ட் சைன் பண்றீங்க சர்… ஆப்டர்நூன் லஞ்ச் அந்த பார்ட்டி கூட… ஈவினிங் ஈக்காட்டுதாங்கல் ப்ராஜக்ட் சைட் இன்ஸ்பெக்ஷன்… மேஜர் ஈவண்ட்ஸ்னா இப்போதைக்கு இவ்வளவுதான் சர்… ” என்று மரியாதையாக கூறியவளின் கண்களில் யோசனை தெரிய,

“சொல்லுங்க ஸ்ருதி… எதையோ சொல்ல நினைக்கிறீங்க போல இருக்கே… ”

வெகு இயல்பாக அவனிடமிருந்து வந்த கேள்வியில் தயங்கினாள் ஸ்ருதி… மனதில் தோன்றியவற்றை எல்லாம் தலைமையிடம் கேட்டு விட முடியுமா என்ன? அப்படியே கேட்டாலும் உனக்கு எதற்கு இந்த வீண் யோசனை என்று கேட்டு விட்டால்? முகத்தை எங்கு கொண்டு போய் வைத்து கொள்வது?

“சர்… பட் ஐ டோன்ட் வான்ட் டு க்ராஸ் மை லிமிட்… ”

அவளது தயக்கம் அவனது கண்களில் தெளிவாக உறுத்த, நிமிர்ந்து அமர்ந்தவன்,

“நோ ஐ டோன்ட் மைன்ட்… ப்ளீஸ் ஸ்பீக் அவுட்… ”

வருண் இந்த அளவு கூறும் போது தான் நினைத்ததை தெரிவிப்பதில் தவறில்லை என்றே தோன்றியது அவளுக்கு!

“ஸ்பின்னிங் மில் ரினவேட் பண்றது அவ்வளவு லாபமா இருக்கும்ன்னு எனக்கு தோன்றலை… பிகாஸ் இண்டஸ்ட்ரியல் சினாரியோ அந்த அளவு திருப்தியா இல்லையே… மெஷினரிஸ் அண்ட் ரா மெட்டீரியல்ஸ் காஸ்ட் ஒர்க் அவுட் பண்ணா அவுட் புட் ரொம்பவே புவர் சர்… ” சற்று கவலையாக கூறியவளை பார்த்து புன்னகைத்த வருண்,

“போர்ட் ஆப் டைரக்டர்ஸ் டெசிஷன் ஸ்ருதி… தனிப்பட்டு நான் முடிவெடுக்கலையே… ” என்று அவன் கூறிய மறுமொழிக்கு புன்னகைத்தாள்…

“அந்த போர்ட் நீங்க தானே… நீங்க எடுக்கற டெசிஷன் தானே?” புன்னகை மாறி கண்களில் கவலையோடு கேட்க,

“நோ ஸ்ருதி… அந்த ஸ்பின்னிங் மில்லை நான் ரன் பண்ணி காட்டியாக வேண்டும்… இது ஒரு மாதிரி சேலஞ்ச்ன்னு வெச்சுக்கங்க!” என்று அவன் கூற, அவளது புருவம் ஏறி இறங்கியது! இனி அவனிடம் எதையும் கூற முடியாது என்று கையெழுத்துக்களை மட்டும் பெற்று கொண்டு நகர பார்க்க,

“மஹிந்திரா சிட்டி ப்ராஜக்ட் எந்த அளவுல இருக்கு ஸ்ருதி? சைன் பண்ண ஒத்துகிட்டாங்களா அந்த பார்ட்டி?” இந்த கேள்வியை எதிர்பாராதவளாய் சற்று திடுக்கிட்டவள்,

“சர்… அந்த ப்ராபெர்ட்டி ஓனர்ஸ் இன்னைக்கு அபிராமி பில்டர்ஸுக்கு லேண்டை ரெஜிஸ்டர் பண்ணி தராங்க… ” மெல்லிய குரலில் ஸ்ருதி கூறி முடிக்க, வருணின் முகம் கோபத்தில் சிவந்தது!

“அபிராமி பில்டர்ஸ் எப்போது சீனில் வந்தாங்க?” அடக்கி வைக்கப்பட்ட கோபத்தோடு அவன் கேட்க,

“நாம் அந்த இடத்தை பேச ஆரம்பிக்கும் போதே அவர்களும் வந்துட்டாங்க போல சர்… நாம சொன்ன விலைய விட அதிகம் பேசி இருக்காங்க… ”

“ரெஜிஸ்ட்ரேஷன் எத்தனை மணிக்கு?”

“காலையில் பதினோரு மணி அளவில் இருக்கலாம் என்று ப்ராஜக்ட் மேனேஜர் சொன்னார் சர்… ” அவனது கோபத்தை பார்த்த நடுக்கம் அவளுள்!

“அந்த லேண்ட் என் கைக்கு வந்தாகணும் ஸ்ருதி… நோ அட் எனி காஸ்ட் அந்த லேண்ட் ஜிகே கைக்கு போய் விடக்கூடாது… ப்ராஜெட் மேனேஜரை கூப்பிடுங்க… ”

ஸ்ருதி பயந்த பார்வையோடு வெளியேற கோபத்தில் சிவந்த முகத்தை சமன் செய்து கொண்டு சாய்ந்து அமர்ந்தவனின் நெற்றியில் சுருக்கங்கள்…

எத்தனை இழப்புகள்! எவ்வளவு நஷ்டங்கள்!

அதையும் தான்டி அவனோடு போராடி கொண்டு தானே இருக்கிறான்… ஒரு சில நிமிடங்கள் மனம் சோர்ந்து போக நினைத்தாலும் காலம் காலமாக போற்றி பாதுகாத்து வந்த பரம்பரையின் கௌரவம் அவனை நிமிர்ந்து அமர செய்தது!

இந்த இடம் அவனது கனவினை நனவாக்க அவன் தேர்ந்தெடுத்த இடம்… வெகு நாளைய திட்டம்… ஹாங்காங் ட்ரேட் சென்டரை போல சென்னையில் அமைக்க வேண்டுமென்பது அவனது கனவு…

“நோ! விட மாட்டேன்… ” வருண் மேஜையில் ஓங்கி குத்த, பொருட்கள் சிதறி விழுந்தது… சப்தம் கேட்டு என்னவாயிற்றோ என்று அடித்து பிடித்து வந்து பார்த்த ஸ்ருதிக்கு பகீரென்றது…

“சர்… எனிதிங் ராங்?”

“நோ… நத்திங்… யு கேரி ஆன்… ” அவளை அனுப்பி வைத்துவிட்டு,அந்த நிலத்தை வாங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மேலாளர்களை அழைத்தான்…

“என்ன ஆகிற்று?”

ஆங்கிலத்தில் அவன் மென்று துப்பிய வார்த்தைகளில் இருந்த மென்மை அவனது முகத்தில் இல்லாமலிருக்க , அவர்களுக்குமே நடுக்கமாகத்தான் இருந்தது…

“சர்… ஆக்சுவலா நாம் பைனலைஸ் பண்ணிட்டோம்… ஆனா ரெண்டு நாளைக்கு முன்ன நாம் பேசியதை காட்டிலும் இரண்டு பங்கு அதிகமா கொடுக்கறதா அவங்க சொல்லியிருக்காங்க… அதனால் தான் இடம் கைவிட்டு போய்விட்டது… ” அவரது கையறு நிலையை நொந்து கொண்டு மேலாளர் ராகவன் கூற, வருண் முறைத்த முறைப்பில் அந்த மனிதர் ஆவியாகதது ஒன்று மட்டுமே மிச்சமாக இருந்தது…

“அவன் கொடுக்கறான் கொடுக்கறான் என்று சொல்றீங்களே… உங்களுக்கு வெட்கமா இல்லையா? நாம கொடுக்க முடியாதா?” அடக்கப்பட்ட கோபத்தோடு அவன் கொந்தளிக்க,

“சர்… அவர்கள் இதில் ஆரம்பத்தில் இருந்தே இன்வால்வ் ஆகியிருக்கிறார்கள் என்று எங்களுக்கு காலைல தானே சர் தெரியும்… தெரிந்திருந்தால் விட்டிருப்போமா?” இப்போது நொந்து கொண்டது கரிகாலன் என்ற இன்னொரு மேலாளர்!

“அந்த அளவு நீங்க திறமையா இருக்கீங்க… ?” கோபத்தில் கன்னம் துடிக்க அவன் கேள்வி எழுப்ப, அவர்கள் இருவருமே தலை தாழ்ந்தனர்!

“ஓகே! அங்க பத்திரப்பதிவு அலுவலகத்திலாவது நம் ஆட்கள் இருக்கிறார்களா? இல்லை அதுவும் இல்லையா?”

“செந்தில்நாதன் அங்க தான் இருக்கார் சர்… ”

“ஆக்சுவலா இது கூட்டு குடும்ப சொத்து சர்! பெரியவருக்கு வயசு எண்பத்தி அஞ்சு ஆகுது… மூணு பசங்க மூணு பொண்ணுங்க… அதுல ரெண்டு பொண்ணுங்க வழில கொஞ்சம் அதிகமா கேட்டு டிமேண்ட் பண்றாங்க போல… அந்த பிரச்னையும் கொஞ்சம் இருக்கு சர்… ” கடகடவென ஒப்பித்து விட்டு வருணை பார்க்க, அவனது முகம் ஒளி பெற்றது!

“அப்படீன்னா அந்த ரெண்டு லேடிஸ பிடிங்க… எவ்வளவு வேணும்னாலும் கொடுங்க… அவங்க யாரும் பத்திர பதிவுக்கு போக கூடாது!”

இருவரையும் விரட்டியவன், அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்… இடையில் செந்தில்நாதனுக்கு அழைத்து நிலவரங்களை கேட்டு அறிந்து கொண்டு இருந்தவனுக்கு அதிகபட்ச பதட்டம் சூழ, மீண்டும் செந்தில்நாதனுக்கு அழைத்தான்!

“அங்க நிலவரம் எப்படி இருக்கு செந்தில்நாதன்?”

“ரெஜிஸ்ட்ரேஷனுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க சர்… இன்னும் ரெண்டு பேர் வரலை… ” சற்று ஆசுவாசமாக பெருமூச்சு விட்டுவிட்டு…

“ஒஹ் குட்! அப்புறம்… ஜிகே அங்க இருக்காரா?”

“இன்னும் வரலை சர்… அவருக்காகவும் தான் வெய்ட் பண்ற மாதிரி தெரியுது… ”

எப்படியாவது அந்த பெண்களின் வாரிசுகளை வளைத்து விட்டால் அவனால் நிலத்தை வாங்கவியலாது என்பதை வியாபாரியாக கணக்கீடு செய்தவன்,அதற்கு என்னவெல்லாம் செய்வது என கரிகாலனை அழைத்து உத்தரவுகளை பிறப்பித்தான்… இன்று ஒரு நாள் பத்திரப்பதிவை தடுத்து விட்டால் எப்படியாவது அந்த பெரியவரை சம்மதிக்க செய்துவிடலாம் என்று முடிவு செய்து கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு கிளம்பினான்…

“ஸ்ருதி… ஸ்பின்னிங் மில் ரினவேஷன் காண்ட்ராக்ட் இன்னொரு நாள் சைன் பண்ணிடலாம்… அவர்களுக்கு எப்போது வசதியாக இருக்குமென்று பார்த்து டேட் பிக்ஸ் பண்ணிடுங்க!” உத்தரவிட்டு விட்டு கிளம்பியவனை குழப்பமாக பார்த்தாள் ஸ்ருதி… காலையில் ஸ்பின்னிங் மில்லுக்காக குதித்த குதியென்ன? இப்போது கூறிவிட்டு போவதென்ன? அப்படியென்ன போட்டி இருவருக்கிடையில்?அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு போக என்று எண்ணிகொண்டாள்!

எது எப்படி இருந்தாலும் நாம் மூக்கை நுழைக்க முடியாத, கூடாத பெரிய இடத்து விஷயங்கள்… நமக்கு தேவையில்லாததும் கூட என எண்ணிக்கொண்டு வருண் குறிப்பிட்டவர்களை அழைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு வேறு தேதியில் அவர்களை வர கூறி விட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்… ஏதோ அயர்வு வந்து அவளை ஆட்கொள்ள பார்க்க, செல்பேசி அழைத்தது!

கண்கள் மின்ன… எடுத்து பேச துவங்கினாள்!

*******

பத்திர பதிவு அலுவலர் முன்னர் அவன் கையெழுத்திட்டு முடிப்பதற்கும் வருண் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருக்க, நிமிர்ந்து பார்த்தான் அவன்!

அவன் ஜிகே!

வருண் முகத்தில் தீப்பொறி பறக்க, எதிரில் இருந்தவனது முகமோ கேலி புன்னகையை சுமந்து நின்றது! கண்கள் வெற்றி பார்வை பார்க்க, அந்த பார்வை வருணின் மனதுக்குள் கோபத்தை கிளப்பி விட்டது…

‘இவன் அடங்கவே மாட்டானா??’ எரிச்சலாக மனதுக்குள் அவனை புரட்டி எடுத்து கொண்டிருந்தாலும் முகத்தை அந்த உணர்வுகளில் இருந்து தற்காத்து கொண்டு அவனை ஏறிட்டான்!

“ஹாய் ராமநாதன் குமாரசுவாமி! என்ன இந்த பக்கம்?”

புருவத்தை மட்டும் உயர்த்தி கண்களில் ஏளன புன்னகையோடு ஜிகே கேட்ட கேள்வி மற்றவர்களுக்கு புரியவில்லை என்றாலும் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு வருண் ஒன்றும் மடையன் அல்லவே… எத்தனை வருடங்களான பழக்கம்… அவனது இந்த கேலியான குத்தல்களுக்கு பழகி! அவனது அந்த குத்தலை அப்படியே விட்டுவிட்டால் அவனும் வருண் அல்லவே!

“ஒரு சின்ன ரெபெரன்ஸ் பார்க்கணும்… எங்க கொள்ளு தாத்தா, அதாவது சர் ராமநாதன் கோவிலுக்காக எழுதி வைத்த இடத்தை இப்போ யாரோ மிஸ்யூஸ் பண்றதா செய்தி வந்திருக்கு… அந்த இடத்தை பற்றி விசாரிச்சுட்டு அடுத்த ஸ்டெப் எடுக்கலாம்ன்னு இருக்கேன் ஜிகே… அதான் இங்க விசிட்… ”

புன்னகை முகமாக கூறினாலும், சொற்களுக்குள் வருண் மறைத்து வைத்த உட்பொருட்களை புரிந்து கொள்ளாதவனா ஜிகே? ஒரு நொடி கறுத்து மீண்ட முகத்தை சீர் செய்து கொண்டு வருணை ஏறிட்டவன்,

“பாதுகாக்க தெரியாதவர்கள் கையில் கிடைக்கும் எதுவுமே நிலைக்காது வருண்… அது எடுத்துக்கொண்டவர்களுடைய சாமர்த்தியம்… ” மின்னிய கண்களுள் வருணுக்கு மறைத்து வைக்கப்பட்ட செய்தி அவனை கொதிக்க செய்தது…

“திருடன் எல்லா நேரத்திலும் சாமர்த்தியமா இருக்க முடியாது ஜிகே! அவனுக்கும் பள்ளம் தோண்ட ஒருத்தன் இருப்பான் இல்லையா… ”

“கேட்டு கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு உரிமையானதை அடித்து பிடுங்கத்தான் செய்வாங்க வருண்… இதற்கு இவ்வளவு பீல் பண்ண தேவை இல்லை… இது வியாபாரம்… இங்க சக்சஸ் மட்டும் தான் முக்கியம்… ”

இருவரின் வார்த்தைகளும் எரிமலை குழம்பில் தோய்க்கபட்டது என்பது இருவருக்குமே புரிந்தாலும் அதை சிறிதும் காட்டிகொள்ளாமல் இருப்பதிலும் இருவருமே சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்தனர்…

“உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியாது ஜிகே… சம்படி ஆர் மென்ட் டு பி வாட் தே ஆர்… ” வருண் அடிக்க வேண்டிய இடத்தில் அடிக்க அவனது முகம் கோபத்தில் சிவந்தது! அதுவும் ஒரு நொடி மட்டுமே… அடுத்த நொடி சீராக்கி கொண்டவன்,

“யார் குருவி… யார் பருந்து என்று இத்தனை வருஷமாக உன்னால் உணர முடியவில்லை என்றால் நீ கடக்க வேண்டிய பாதை மேலும் நீள்கிறது என்பதே அர்த்தம் வருண்! கெட் ரெடி… ” அமைதியான குரலில் கூறியவன்,

“இன்றைக்கு இரவு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கேன்… கண்டிப்பாக வந்துவிடு வருண்… திஸ் இஸ் ஸ்பெஷல் இன்வைட் பார் யூ… என்னோட கிளாஸ்மேட்டுக்கு ‘நான்’ கொடுக்கற ஸ்பெஷல் இன்வைட்… ரைட்!” கண்களை சிமிட்டிவிட்டு நான் என்பதை அழுத்தி கூறி அவன் கை கொடுக்க, வேண்டாவெறுப்பாக வருணும் கைகளை நீட்ட, அதை பற்றியவன்,

“சீ யூ அட் பார்ட்டி… ” அதே புன்னகை முகத்தோடு வெளியேற, சற்று தள்ளி நின்றிருந்த கரிகாலனையும் ராகவனையும் எரித்து விடுவதை போல பார்த்து வைத்தான் வருண்… அருகில் இருந்த செந்தில்நாதனுக்கோ பதட்டத்தில் மயக்கம் வரும் போல இருந்தது!

மெளனமாக அவர்களிடம் பேச்சை தவிர்த்து வெளியேறினாலும் வருண் எந்த அளவு கோபமாக இருக்கிறான் என்பதை அவர்களும் புரிந்தே இருந்தனர்… காரை திறந்து ஏற போனவன் மூவரையும் பார்வையால் அழைத்தவன்,…

“டோன்ட் யூ பீல் அஷேம்ட்?” வெகு அமைதியான அந்த குரலில் மூவருக்குமே குளிரெடுத்தது!

அவன் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக கேட்கிறானோ அந்த அளவு கோபத்தின் அளவும் அதிகமாயிற்றே! ஆனால் அவர்களோ விளக்கம் கூற முடியாத நிலையில் இருந்தனரே!

“சர்… ”

“இதுக்கு என்ன எக்ஸ்கியுஸ் சொல்ல போறீங்க?”

“சர்! ஒண்ணுமே சொல்ல முடியாது… ஏனென்றால் நீங்க அந்த பெண்களுக்கு கொடுக்க சொன்ன அமௌன்ட்டை விட ஒன் லேக் அதிகம் கொடுத்து கையோட அவர்களையும் அழைத்துக்கொண்டு போகும் போது எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை… ” கரிகாலன் செய்வதறியாமல் கூற… வருணுக்கு ஏதோ பொறி தட்டியது!

தான் கொடுக்க சொன்ன தொகை அவனுக்கு தெரிந்தால் அல்லவா அதை காட்டிலும் அதிகம் கொடுக்க முடியும்?அதுவும் அப்போது முடிவு செய்து விலைக்கு வாங்கப்பட வேண்டியவர்களை, அதிலும் சரியாக ஒரு லட்சம் அதிகமாக! இது எப்படி சாத்தியமானது? தனக்கு அருகிலேயே துரோகிகளா? யாரை இதில் சந்தேகப்படுவது?

அவனது பார்வையின் சந்தேக வட்டத்தில் அந்த மூன்று பேருமே விழுந்தனர்!