Chocolate pakkangal 2

Chocolate pakkangal 2

அத்தியாயம் இரண்டு

விழிக்கும் இமைக்குமான 
போராட்டத்தில் 
அணைந்து அணைந்து எரிகிறது 
சில நிகழ்வுகளும் நினைவுகளும்!

நன்றாக விடிந்து விட்டிருந்த காலை பொழுது… சூரியன் சுறுசுறுப்பாய் அவனது வேலையை ஆரம்பிக்க,மிக மிக நவீனமான அந்த ஜிம்மில் அன்றைய காலை பொழுது மேலும் சுறுசுறுப்பாக துவங்கியிருந்தது…

ஒவ்வொருவரும் அவரவர்களது பயிற்சியில் மூழ்கி இருக்க, அங்கு உடற்பயிற்சி கொண்டிருந்த ஒருவனின் கண்மூடித்தனமான, தன்னை மறந்த பயிற்சி யாருடைய கண்களிலும் படவில்லை!

எதேச்சையாக அங்கு வந்த அவனது தனிப்பட்ட பயிற்றுனர் ஸ்க்ரீனில் தெரிந்த விபரத்தை பார்த்து கிட்டதட்ட அவனை நோக்கி ஓடினார்… அவரால் வேறு என்ன செய்துவிட முடியும்? ட்ரெட் மில்லில் அந்த பேய் வேகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓடியிருக்கிறான் என்பதை பார்த்த பிறகு அவரால் தென்றலை போலவா நகர முடியும்?

“ஜிகே! ஸ்லோ டவுன் மேன்… ஜஸ்ட் ஸ்லோ டவுன்… ” மூச்சிரைக்க வந்து அவனை வலுக்கட்டாயமாக வேகத்தை குறைக்க கூற, அவனது கவனமனைத்தும் நேற்றைய நிகழ்சிகளிலேயே இருந்தது…

“நீ எவ்வளவுதான் என்னை தோற்கடிக்க நினைத்தாலும் ரொம்ப மோசமா வாழ்க்கையில் தோற்று போனவன் நீ ஜிகே… என்ன தகிடுதத்தம் வேண்டுமானாலும் நீ செய்து, எவ்வளவு நஷ்டத்தையும் எனக்கு வரவைக்கலாம்… ஆனா உன்னுடைய நஷ்டம் என்ன, நிலை என்ன என்று நான் ஒவ்வொரு முறையும் சொல்ல தேவையில்லை… யூ ஆர் ன் அப்சொல்யுட் பெயிலியர்!”

வருணை அடி மேல் அடி வைத்து உட்கார வைக்க நினைக்கும் போது அவன் ஏளனமாக கூறிய இந்த சொற்கள் எப்போதும் போல அவனது உணர்வுகளை தாக்கி வேதனையை தந்து விட்டு போக, தனக்கு மறுக்கப்பட்ட நியாயங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் அனைத்தையும் விட உயிர் போகும் வேதனையை தினமும் அனுபவித்து கொண்டிருக்கும் அவனது மனதை ரணப்படுத்தி விட்டு அகன்றன!

அந்த வேதனையை எதை கொண்டு தீர்க்க?

அவனை சுற்றிலும் இருந்த நட்பு வட்டாரமோ, அவனை தேடியபெண்களோ, அவனாக தேடிய பெண்களோ, மதுவோ அல்லது எதுவுமே அவனை சமாதானப்படுத்த முடியவில்லையே!

உலகத்தையே சுற்றி வந்தாலும் தேர் நிலைக்கு வந்துதானே தீர வேண்டும்… ஜிகே நிலைக்கு வந்த காலத்தில் அவனது காயம் மேலும் அதிகமானதே தவிர குறையவில்லையே! இப்போதெல்லாம் அவன் அந்த காயத்திற்கு இடும் மருந்து என்பதே வருணின் நஷ்டங்களும் இவனது லாபங்களும் தான்… அந்த அளவு வெறித்தனமாக இந்த விளையாட்டில் தன்னை மூழ்கடித்து கொண்டிருந்தவனை வருணால் காயப்படுத்த முடிந்தது ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே!

வருணின் அந்த சொற்கள் அவனை எந்த அளவு வெறி ஏற்றிவிடும் என்பதும், இதற்கு விலையாக தான் என்னனென்ன கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் அறியாதவனல்ல… ஆனாலும் எதிரியை உயிர் வாதனையில் வீழ்த்தி பார்ப்பதும் சுகம் தானே அவனை பொறுத்தமட்டில்!

“ஜிகே… ஜிகே… ” காதுகளில் ஹேண்ட்ஸ்ப்ரீ மாட்டிகொண்டு பாடலில் ஆழாமல் நினைவுகள் தந்த வலிகளில் ஆழ்ந்திருந்தவனுக்கு பயிற்றுனர் அழைத்தது காதில் விழாமல் இருக்க, அவனை தோளில் தட்டி உணர்வுக்கு கொண்டு வந்தார்…

காதில் இருந்த ஹேண்ட்ஸ்ப்ரியை கழட்டி விட்டு ஓடி கொண்டே என்னவென்று அவரை பார்க்க,

“ஸ்லோ டவுன் ஜிகே… ”

அப்போதுதான் ஸ்மரணை வரபெற்ற ஜிகே,மன்னிப்பு கேட்டுவிட்டு பயிற்றுனரின் சொற்படி வேகத்தை படிப்படியாக குறைத்து சாதாரண நடைக்கு மாறினான்…

“பயஸ்… ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க? ஐ கேன் மேனேஜ்… ”

சாதாரணமாக கூறிவிட்டு நடந்து கொண்டிருப்பவனை என்ன செய்வது என்று தோன்றியது… ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஹூடியில் பயிற்சியை தொடர்ந்தவனின் உடலில் வியர்வை ஆறாக பெருகி கொண்டிருந்தது…

“ஜிகே… லிகமென்ட் கிழிஞ்சு போய்டும்… ஒய் யூ ஆர் டேகிங் திஸ் ரிஸ்க்?” குரலில் அவனுக்கான அக்கறை தெரிய,

“ப்ச்… ஓகே பயஸ்… நான் கவனிக்கலை… இனிமே இப்படி ஆகாம பார்த்துக்கறேன்… ” என்றவன் அப்போதும் ட்ரெட் மில்லை விட்டு இறங்கவில்லை…

“ஒர்க் அவுட் செய்யும் போது நம்முடைய கவனமனைத்தும் இங்கே தான் இருக்க வேண்டும் ஜிகே… ஐ டோன்ட் ஹேவ் டு டீச் யூ… பட் யூ ஆர் அன்யுஸ்வல் சம்டைம்ஸ்… ” அவரது அக்கறையான வார்த்தைகள் அவனது மனதில் கசப்பையே விதைத்தன…

“பயஸ்… ஐ ஆம் அன்யூஸ்வல் ஆல்வேஸ் அண்ட் பை ஆல் மீன்ஸ்… ”

தனக்குள்ளாக நினைத்து கொண்டவனின் மனதின் கசப்பு எப்போதும் அவனது முகத்தில் வெளிப்படுவதில்லை… அவனது உணர்வுகளை எவருமே படிக்க அனுமதித்ததில்லை அவன்… படிக்க முயல்பவர்களும் மிக மோசமாக தோற்று போக வேண்டியிருந்திருக்கிறது…

அவனோ நினைவுகளின் தாக்கத்தில் நிற்காமல் பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்க…

“ப்ளீஸ் ஜிகே! போதும்… ட்ரெட் மில்லிருந்து முதல்ல இறங்குங்க… இதற்கும் மேல் நடந்தால் கண்டிப்பாக லிகமென்ட் டேர் ஆகித்தான் இறங்குவீங்க… ”

சற்று கண்டிப்புடன் பயஸ் கூறியதை புன்னகையோடு ஏற்று கொண்டவன் முழுவதுமாக அந்த நடை பயிற்சி இயந்தரத்திற்கு ஒய்வு கொடுத்துவிட்டு கீழிறங்கி மற்ற கார்டியோ பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்க… பயஸ் சற்று அதிகமாகவே பதட்டத்தில் ஆழ்ந்தார்… கண்மண் தெரியாமல் இதென்ன இப்படி வெறித்தனம்?

“ஜிகே… ஸ்டாப்… ஸ்டாப்… போதும்… கூல் டவுன் செய்துட்டு கொஞ்சம் மூச்சு பயிற்சியை மட்டும் செய்துட்டு கிளம்புங்க… ஆல்ரெடி ஹெவியா பர்ன் பண்ணிட்டீங்க… ”

அவரது பதட்டம் ஜிகே முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க பயஸின் தோளில் தட்டிவிட்டு,

“ஹே! லவ் யூ மேன்… ” குறும்பாக கூறி கண்ணை சிமிட்டி விட்டு வீட்டிற்கு கிளம்பினான்…

*******

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்றும் இல்லை கண்ணா

குறையொன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நீயிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

அலுவலகம் செல்ல தயாராகி வந்தவனை வரவேற்றது அவனது அன்னையின் குரல்… கண்ணனிடம் கரைந்து கொண்டிருந்தார்… பாலையும் தேனையும் செய்து குழைத்து செய்த குரல்…

முற்பிறவியில் சரஸ்வதிக்கு தேனை குடம் குடமாக அபிஷேகம் செய்திருப்பாளோ?

அன்னையின் தேமதுர குரலை கேட்டு விட்டால் எதுவுமே தோன்றாது ஜிகேவுக்கு! அப்படியே அமர்ந்து விடுவான்… எத்தனை கவலைகள் இருந்தாலும் அழுத்தங்கள் இருந்தாலும் மறக்க செய்யும் குரல் அவனது அன்னையுடையது!

மிகப்பிரபலமான கர்னாடக சங்கீத பாடகியாக இருந்தவர்… இப்போதும் அவருடைய குரலுக்கான ரசிகர்கள் எக்கச்சக்கம்! ஆனால் இப்போது பாடுவதை முழுவதுமாக நிறுத்தி விட்டார்… வாழ்கையில் பல பாடங்களை மகனை கொண்டு கற்று கொண்டு விட்டபின் எடுத்த முடிவு அது!

அப்போதும் தன்னை மறந்து டைனிங் டேபிளில் அமர்ந்து விட்டவனுக்கு அபிராமி பூஜையை முடித்து ஆரத்தி தட்டை அவன் முன் நீட்டி திருநீறு இட்டு விட்ட போதே அவனுக்கு மீண்டும் உணர்வு வரபெற்றது!

எதிரில் மகாலக்ஷ்மியின் திருவுருமாக அபிராமி!

கஸ்தூரி மஞ்சள் பூசிய முகமும் குங்குமமும் சந்தன கீற்றுமாக இருக்கும் அவருக்கு வயது ஐம்பத்தி இரண்டு என்று அவராக கூறினாலன்றி எவருமே அறியமுடியாது!… அன்னையும் மகனுமாக சேர்த்து நிற்கையில் அவனுக்கு அக்கா என்று சொல்ல கூடிய தோற்றத்தில் இருப்பவர்…

சிறுவயது முதல் பயின்ற நாட்டியமும், இதுவரையில் விடாத யோகாவும், அதை காட்டிலும் வாழ்க்கை எதை தருகிறதோ அதை முழு மனதோடு ஏற்று கொண்டு வாழ்வதுமான வாழ்க்கையும், அவரது முகத்தில் தெளிவை தந்திருந்தது! அவரது ஒரே கவலை தன் மகனும், அவனது செயல்களும் மட்டுமே!

அவனுக்கு தன் அன்னையை பார்க்கையில் அவர் வணங்கும் அம்பிகையே தன் முன் வந்தது போல எப்போதும் உணர்வான்… அவ்வளவு பாசம் தன் அன்னையின் மேல்! அபிராமிக்கோ அவனை பார்க்கையில் பார்வதி தேவியை போன்றே பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையில் அமர்ந்து விட்ட கணேசனாகத்தான் தோன்றும்! அதனாலேயே தன் புத்திரனை எண்ணி மனம் நொந்து போவார்!

மகன் மேல் சிற்சில வருத்தங்கள் இருந்தாலும் அவரது மகன் அவரை பொறுத்தவரையில் உயர்ந்தவன்… ஆறடியில் கம்பீரமாக மாநிறத்தை சற்று தாண்டி அவனது தந்தையின் பிரதிபிம்பமாக அவனை பார்க்கும் போதெல்லாம் உள்ளம் விம்மும்… பூரிக்கும்!

“என்ன கண்ணா?என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” மகனுக்கு காலை உணவை பரிமாறி கொண்டே அபிராமி கேட்க…

“எனக்கெல்லாம் ஒன்றுமில்லை… நீ தான் மிஸ்டர் கிருஷ்ணர் கிட்ட எக்கச்சக்கமா மனு கொடுத்துட்டு இருந்த போல இருக்கே… ” கேலியாக கண்களில் சிரிப்போடு அன்னையை பார்த்து கேட்க…

“நான் வேறெதுக்கு மனு கொடுப்பேன் தம்பி? இனிமேலாவது இந்த பிள்ளைக்கு நல்ல புத்திய கொடு கிருஷ்ணான்னு அவன் கிட்டத்தான் கேட்க முடியும்… ” அவன் மேல் இருக்கின்ற கோபத்தை வெளிப்படுத்த அபிராமிக்கு தெரிந்த முறை இதுதான்…

“ஏன்ம்மா இருக்க புத்தியெல்லாம் போதவில்லையா? அந்த ஆசாமிக்கிட்ட இன்னுமா கடனை கேட்டு வைப்ப?” சலித்து கொள்வது போல தனது அன்னையை வாரியவனை முறைத்தார் அபிராமி!

“தம்பி… சுவாமிய அப்படியெல்லாம் பேச கூடாது… ” கறாராக கூறியவரின் தோரணையில் சிரித்து விட்ட ஜிகே…

“மா… எனக்கு நீ மட்டும் தான் கடவுள்… உனக்கு பூஜை பண்ண சொல்லு பண்றேன்… ஆனா வெறும் படத்தை காட்டி இதுதான் சாமின்னு சொல்ற பாரு… அந்த காமெடிய என்னால டைஜஸ்ட் பண்ணவே முடியல… விட்டுடும்மா… ” என்று வயிறு வலிக்க சிரித்தவனை பார்த்து முறைத்தார் அபிராமி!

இதுதான் ஜிகே!

“கிருஷ்ணா… இந்த பையனுக்கு எப்போடா நல்ல புத்திய தருவ?” சலித்து கொண்டவர், ஒரு கிண்ணத்தில் பாயாசத்தை ஊற்றி அவனிடம் வைத்தார்… அவனது முகத்தை பார்த்து கொண்டே!

பாயாசத்தை பார்த்தவன் அன்றைய தேதியை நினைவுக்கு கொண்டு வந்தவனது முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது!

“இதை எடும்மா… ” உணர்வுகளை முற்றிலுமாக மறைத்து இறுக்கமான முகத்தோடு அழுத்தமான குரலில் வெகு நிதானமாக அவன் கூறியது, பெற்ற அவருக்கே உள்ளுக்குள் குளிரை பரவ செய்தது!

வேறு யாராக இருந்தாலும் அந்த இடத்தில் நின்று பேசவும் முடியாது என்பதும் அபிராமிக்கு தெரியுமாயிற்றே! அவன் கட்டுபடுவதும் கீழ்படிவதும் கூட அவர் ஒருவருக்குத்தான் என்பதையும் அறியாதவரல்ல… ஆனால் அவராலுமே இதில் அவனை கீழ்படிய வைக்க முடிந்ததில்லை… அபிராமிக்கு என்றுமே பிடிவாதம் பிடிக்க தெரியாது… ஆனால் அவரது மகனோ பிடிவாதத்திலும் கோபத்திலும் முதன்மையாக இருக்க , எப்போதும் பணிவது அவராகத்தான் இருப்பார்… முன்பு அவனது தந்தைக்கு இப்போது அவரது மகனுக்கு!

“ஒரே ஒரு ஸ்பூன் மட்டும் சாப்பிடு தம்பி… உன்னை அதுக்கு மேல போர்ஸ் பண்ண மாட்டேன்… ப்ளீஸ்… நல்ல நாள் அதுவுமா… எனக்காக!” மகனை கெஞ்ச அவனோ சற்றும் இறங்காமல்,

“ஒரு ஸ்பூன் என்னம்மா சாப்பிட வேண்டும்? விஷமா?” உடைந்த கண்ணாடியிலிருந்து விழுந்த சில்லாக கோபத்தில் வந்த வார்த்தை மனதை தைக்க,

“தம்பி… நமக்கு என்ன விதிக்கபட்டிருக்கோ அதுதான் நடக்கும்… அதை ஏற்று கொள்ள பழக வேண்டும் கண்ணா… ” அவனை எப்படியாவது சமாதானப்படுத்தவேண்டும் என்று நினைத்து அவர் கூற,

“ம்மா… அந்த விதி சதி எல்லாம் உன் வரைக்கும் மட்டும் இருக்கட்டும்… எனக்கு வேண்டாம்… அதற்கு நான் தயாராக இல்லை… முதல்ல இதை எடுக்கறியா இல்ல நான் எடுக்கட்டா?” அவனது அமைதியான அழுத்தமான குரல் அவரை சில்லிட செய்தது… அவன் எடுத்தால் பாத்திரம் பறந்தல்லவா போகும்!

சமாதானங்கள் எதுவுமே பயன்படாமல் உறுமி விட்டு சென்ற மகனை பார்த்தவரின் கண்களில் கண்ணீர் படலம் சூழ்ந்தது! கோபத்தில் பாதி உணவில் எழுந்து சென்றவனை ஈர்த்தது முன் ஹாலில் டீபாயின் மேல் இருந்த பழ தட்டு!

என்னவென்று குனிந்து பார்த்த ஜிகேவின் நெற்றி சுருங்கியது!

அது திருமண பத்திரிக்கை!

நெற்றியில் சுருக்கத்தோடு பழங்களின் மேல் இருந்த திருமண பத்திரிக்கையை எடுத்து பார்க்க,அபிராமிக்கு மனதில் பதட்டம் சூழ்ந்தது!

“கிருஷ்ணா… காப்பாற்று!”

அவரது வாய் அவரையும் அறியாமல் முணுமுணுத்தது… நெற்றி சுருங்க அந்த பத்திரிக்கையை பிரித்தவனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய அவனது முகத்தை கவனமாக ஆராய்ந்தார் அபிராமி… சட்டென்று உணர்வை காட்டி விட்டால் அவன் ஜிகே அல்லவே! அவனாக கேட்பதற்கு முன்னர் தானே கூறிவிடலாம் என்று அவசரமாக முடிவு செய்து,

“ராஜேஸ்வரி வீட்ல இருந்து குடும்பமா வந்தாங்க தம்பி… பொண்ணுக்கு கல்யாணம் வெச்சு இருக்காங்களாம்… ” தடதடத்த மனதோடு அவர் கூற, அவரை உணர்வற்ற பார்வை பார்த்தான் ஜிகே!

பத்திரிக்கையை பிரித்து பக்கத்தை புரட்டியவனின் கண்களில் விழுந்தது அவன் தேடிய பெயர்!

மனம் ஏனோ அவனையும் அறியாமல் வலிக்க, அந்த பெயரை உறுத்து விழித்தவனின் கண்களில் வேதனை… வாழ்வின் வசந்தங்களை தானே தீயால் பொசுக்கி விட்டபின் யாரை என்ன சொல்வது? ஆனால் அந்த தீ அவனை எரித்து, வடுக்களையும் அல்லவா விட்டு சென்றிருக்கிறது! அதுவும் வடுக்கள் அல்லவே,ஆறாத பச்சை ரணங்கள் ஆயிற்றே!

தன்னுடைய வேதனையை அன்னை அறிந்தால் அவருக்கும் வேதனையாக இருக்குமே என சட்டென தன்னை மீட்டு கொண்டு, எடுத்த இடத்திலேயே பத்திரிக்கையை வைத்து விட்டு வெளியேறிய மகனை அறிந்து கொண்ட அன்னைக்கு அவரது கையறு நிலையை நினைத்து வெறுப்பாக இருந்தது…

ஜிகே எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் அவரது மகன் அல்லவா? சிறுவயது முதலே அவனுடைய கோபங்களையும் மகிழ்ச்சிகளையும் துக்கங்களையும் உடன் இருந்து கண்டவருக்கு அவனது ஒரு நொடி முகமாற்றம் புரியாமல் போக வாய்ப்பில்லையே!

எப்போதும் போல தன்னை நினைத்து புலம்பி கொண்டவரின் கண்களில் கண்ணீர் மேகங்கள்!

********

ஈக்காட்டுதாங்கலில் கட்டப்பட்டு கொண்டிருந்த ஐந்து நட்சத்திர விடுதியின் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட்டுவிட்டு வருண் வீடு திரும்பியபோது மணி எட்டாகி இருந்தது… உடலை அடித்து போட்டது போன்ற வலி… கண்களில் மிதமிஞ்சிய சோர்வு…

ஆனாலும் மனம் என்னவோ ஜிகேவை நினைத்து கொதித்து கொண்டிருந்தது… ஒரு முக்கியமான அரசாங்க டெண்டரை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் அன்று ஜிகே வெற்றி பெற்றிருந்தான்… வருண் நினைக்கையில் ஜிகே அதை தட்டி பறிப்பதுதான் வாடிக்கையாகி இருக்கிறதே!

இதற்கு முடிவு தான் என்ன என்பதும் அவனுக்கு புரியவில்லை… அவனுடன் சமாதானம் என்பதும் சாத்தியமே இல்லாத ஒன்று என்பதும், அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுவுமே உண்மை!

உடல் ஒய்வு வேண்டும் என்று தூக்கத்திற்கு கெஞ்சி கொண்டிருக்க… சோர்வாக வீட்டினுள் நுழைந்தான்!

வீடு களைகட்டி இருந்தது!

ஆதிரையும் பிள்ளைகளுமாக!

குழந்தைகளோடு வந்திருந்த அவனது தங்கை வள்ளியம்மையும் சேர்ந்து கொட்டமடித்து கொண்டிருந்தாள்…

“அத்தை… போதும் ப்ளீஸ்… ” அவளுக்கே குழந்தையிருக்க, விசாலாட்சி ஆதிரைக்கு உணவை ஊட்டி விட்டு கொண்டிருந்தார்… பார்த்தவுடன் பக்கென்று சிரித்து விட்ட வருணை பார்த்து முறைத்தாள் ஆதிரா…

“இப்போ எதுக்கு சிரிச்சீங்க?” இடுப்பில் கை வைத்தபடி முறைத்தவளின் தோரணையில் வருணின் சிரிப்பு இன்னமும் அதிகமாக…

“மாமா… ” என்று பத்திரம் காட்டினாள்!

“பிருத்வி குட்டியே ஒழுங்கா தானா சாப்பிடுதாம்… நாலு கழுதை வயசாகுது இன்னமும் அம்மாவை ஊட்டி விட சொல்லி சாப்பிட்டுட்டு இருக்கியா நீ?”

கேலியாக கூறிக்கொண்டிருக்கும் போதே அவனது சப்தம் கேட்ட பிருத்வி ஓடி வந்து அவனது தோளில் தொங்க, அவனுக்கு பின்னால் வள்ளியம்மையின் செல்வங்கள் அவன் மேல் ஏற, வருண் மூன்று வாண்டுகளின் படையெடுப்பில் திணற துவங்க, அதை கண்ட ஆதிரையும் வள்ளியம்மையும் ஹைபை கொடுத்து கொண்டு சிரித்தனர்…

“ஏய் பிசாசு உன் பையனை மரம் ஏற சொல்லி கொடுத்துதான் கூட்டிட்டு வந்தியா… அப்படியே உன்னோட குரங்கு புத்தி… ” வள்ளியம்மையை பார்த்து நொந்து போய் கேட்டவனை அதே சிரிப்போடு,

“ஏன்? தினம் தினம் நாங்க சமாளிக்கறோமில்லையா? இன்றைக்கு ஒரு நாள் நீ சமாளிண்ணா… ” என்று கண்ணை சிமிட்ட, சிரித்து கொண்டிருந்த ஆதிரையோ…

“இதற்கு தான் சாப்பிடறதை பார்த்து கண்ணு போட கூடாது… உடனே எப்படி அட்டாக் பண்றாங்க… பார்த்தீங்க இல்லையா?” குறும்பாக சிரித்தாள்!

ஒரு வழியாக மூன்றையும் சமாளித்து பொத்தென்று சோபாவில் ஆதிரையின் பக்கத்தில் அமர்ந்தவனுக்கு அன்றைய சோர்வனைத்தும் காணாமல் போயிருந்தன… குழந்தைகள் எப்போதும் பவர் ட்ரான்ஸ்மிட்டர்கள் தானே!

“ஆமா… இவங்க சாப்பிடறதை பார்த்து நாங்க கண்ணு போடறமாக்கும்?” அவளது பின்மண்டையில் சிறு அடி வைக்க, தலையை தேய்த்து விட்டு கொண்டே வருணை செல்லமாக முறைத்தாள்…

“வருண்… ” விசாலாட்சியின் குரல் அவனை அடக்க, ஆதிரையை கேலியாக பார்த்து,

“போம்மா தாயே! உன்னோட ஜால்ரா கிட்ட போய் நல்லா கொட்டிக்கோ… ” என்று ஆதிரையை விரட்ட, அவளோ அழகு காட்டி கொண்டே காரியத்திலும் கண்ணாக இருந்தாள், அதாவது உண்பதில்!

“பாவம் குழந்தை! இத்தனை நாள் படிக்கற பிஸியில் ஒழுங்கா கூட சாப்பிட்டு இருக்க மாட்டா… பாவம்ன்னு ஊட்டி விட்டா உடனே உனக்கு மூக்கு வேர்த்துடுமே… ” வருணை திட்டிவிட்டு மீண்டும் ஆதிரைக்கு ஊட்ட துவங்க, மகன் பிருத்வியை அணைத்து மடியில் இருத்திக்கொண்டு சிரித்தாள்… வருணுக்கு அழகு காட்டியவாறே!

எப்போதும் போல அந்த காட்சி அவனது மனதில் கல்வெட்டாக பதிந்து போனது!

ஆதிரையை பார்க்கும்போதெல்லாம் எழும் அவளுக்கான அவனது உணர்வுகள், இப்போதும்! அவளை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவனின் மனம், பிரித்து உணர தெரியாமல் பிசைந்தது! அவளது புன்னகை அவனுக்குள் பெருமூச்சை பரவ செய்தது!

பிருத்வியை இழுத்து தன் மடியில் இருத்தி கொண்டான்… பிருத்வி அமர்வதை பார்த்ததும் ரோஷனும் ரக்ஷாவும் மாமனின் மடிக்கு போட்டியிட, அதை பார்த்து சிரித்து கொண்டே விசாலட்சி கேட்டார்,

“ஆதி… உன் படிப்பெல்லாம் முடிஞ்சுதுதான? இன்னும் எதுவும் பாக்கி இருக்கா?” இந்த கேள்வியில் குழப்பமாக அவளது அத்தையை பார்த்தவள்,

“முடிஞ்சுதுத்தை… ஏன் கேக்கறீங்க?”

“இல்லம்மா… இனிமே என்ன செய்ய போறதா ப்ளான்? பிருத்வி குட்டிக்கும் ஸ்கூல் சேர்த்தற வயசு தான்… இங்க சேர்த்தலாமா இல்லை லண்டன்ல ப்ளான் செய்து வைத்திருக்கிறாயா?” கேள்வி பொதுவாக இருந்தாலும் விசாலாட்சிக்கு அவளை இனியும் லண்டனில் விட்டு வைக்க மனமில்லை…

அங்கே அவளது தாயுடன் இருந்தாலும் , இங்கே இருக்க வேண்டிய தேவையை அவள் இன்னமும் உணரவில்லை என்றே நினைத்தார்… ஒருவேளை தாம் உணரவைக்கவில்லையோ?தனக்கு தானே கேட்டு கொண்டவரால் அதையும் ஏற்க முடியவில்லை…

“நம்ம சைந்து கல்யாணம் முடியட்டும் த்தை… நம்ம கம்பெனி மேனேஜ்மென்ட்ல கொஞ்ச நாள் இருக்கேன்… எனக்கும் ட்ரைனிங் வேணுமே… ” ஆதிரா இயல்பாக கூற, திடுக்கிட்டு அவளை பார்த்தான் வருண்…

ஆதிரை அங்கு வருவதா?

error: Content is protected !!