cn-10

நிலவு – 10

அனைவரும் கிராமத்திற்கு புறப்படும் நேரம், உள்ளேயிருந்து மஞ்சுளா பார்த்துக் கொண்டிருந்தாலும் தன்னிடம் வந்து சொல்வார்கள் என்ற மிதப்பான எண்ணத்துடன் வெளியே எட்டிப் பார்க்கவில்லை.

மரகதமும் சம்மந்தி வீட்டில் போய்ச் சொல்லும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. அடுத்தடுத்து மகளுக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமதிப்புகளை, இத்தனை நாட்கள் தாங்கிக் கொண்டவரால், கணவன் என்ற முறையில் காலையில் பாஸ்கர், மகளை ஏறெடுத்தும் பார்க்காமல் உதாசீனபடுத்தியது, மனமெங்கும் வலியைக் கொடுத்திருக்க, இனி எக்காரணம் கொண்டும் அந்த குடும்பத்தின் உறவினை தொடரக் கூடாது என்ற முடிவிற்கு வந்திருந்தார்.

மனமெங்கும் வெறுப்பினைச் சுமந்திருந்தவர், மகளின் எதிர்காலத்திற்கும் ஏதோ ஒரு முடிவை எடுத்த நிலையில், கீழ் வீட்டிற்குச் சென்று எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்காமல் கிளம்பிச் சென்று விட்டார்.  

தன்னைப் பெற்றவளும், தனது அண்ணன் மகனும் அருகில் இருந்த ஆறுதல், அவருக்கு புது தெம்பை மட்டுமல்ல, பல புதிய முடிவுகளை எடுக்கும் துணிவைக் கொடுத்திருந்தது. இனிவரும் காலங்களில் தனது மாற்றங்களை, மாறுதல்களைப் பொறுமையுடன் நடைமுறைபடுத்த தயாராகி விட்டார் மரகதம்.

          **********************************************

ஊருக்கு சென்றவர்களை அழைத்து, நலத்தை அறிந்து கொள்வதற்கும், விட்டுப் போன வேலைகளை முடிக்கவும் தயானந்தனுக்கு அடுத்தடுத்த நாட்கள் சரியாகப் போக, மனைவியுடன் கேள்விக்கு பதில் என்ற முறையில் மட்டுமே பேசி வந்தான்.  

மிதுனாவும், கணவனின் வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டே, எந்தவித எதிர்கேள்வியும் கேட்காது, வீட்டு வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.

முதல் முறையாக வீட்டின் முழுப் பொறுப்பையும் கையாள்பவளுக்கு நேரம் சரியாக இருந்தது. சமையல் பக்குவம் எளிதில் கைவராமல் அவளைப் பார்த்து இளித்து வைக்க, வாய் திறந்து சொல்லா விட்டாலும் முகத்தை சுளித்துக் கொண்டே, உள்ளே தள்ளினான் தயானந்தன். இதனைப் பார்த்தவளுக்கு பெரும் தலைவேதனையை கொடுத்தது.

இரண்டு நாட்கள் அமைதியாக கடந்திருக்க, மிதுனாவின் பத்து நாள் விடுப்பும் முடிந்து, மறுநாள் வேலைக்கு செல்வதற்கு ஏதுவாக, வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தவள், மாடிப்படியை அலசிவிட்டு கொண்டே கீழே வர,

“வீட்டுல யாரும் இல்லையா, மிதுனா?” கேள்வியுடன் மஞ்சுளா அங்கே வந்தார்.

“தெரிஞ்சே என்ன கேள்வி? எனக்கு கூடமாட ஒத்தாசை பண்ண போறியா?” எதிர்கேள்வியுடன், அவரைப் பார்க்க, பின்னோடு பாஸ்கரும் நின்றிருந்தான்.

“எங்ககிட்ட ஒருவார்த்தையாவது சொல்லனும்னு தோணுச்சாடி உங்க வீட்டு ஆட்களுக்கு? யார கேட்டு அவ்வளவு தூரத்துக்கு புள்ளதாச்சிய அனுப்பி வைச்சிருக்கீங்க?” மிடுக்குக் குறையாமல் கேள்விகளை அடுக்க,

“நிறுத்து… நிறுத்து! சீர்செனத்தியோட வரச் சொல்லி, தொரத்தி விட்டதோட உன் ஆட்டம் முடிஞ்சு போச்சு. இனி அவளைப் பத்தி பேசுற உரிமை, உனக்கோ உன் பிள்ளைக்கோ இல்ல.. அவ திரும்பி வந்தா, உன் கேள்விய கேட்டுக்கோ” ‘வந்தா’ என்பதில் அழுத்தம் கொடுத்து, இருவரையும் முறைக்க, எப்பொழுதும் போல் பாஸ்கர் தலை குனிந்தான்.

திங்குற சோத்துக்காவது சொரணை வருதா பாரு, தடிமாடு! களிமண்ண விட கேவலம்டா நீ… மிதுனா, மனதோடு தம்பியை வசைபாடிக் கொண்டிருக்க,

செய்யாதத எடுத்துச் சொன்னாலும் குத்தமா படுதா? நல்லதுக்கு காலமில்ல, ஒரேடியா தலைமுழுகுற நினைப்பு உங்களுக்குத்தான் இருக்கு, எனக்கில்ல…” பெரிய மனித தோரணையில் மகளிடம் குறைபட்டுக் கொண்டவர், பேச வேறெதுவும் இல்லை என்ற பாவனையில் உள்ளே சென்று விட்டார்.

மஞ்சுளா உள்ளே போனதை உறுதிப்படுத்திக் கொண்ட பாஸ்கர், மிதுனாவிடம் திரும்பி,

“ஏன்க்கா? இந்த திடீர் முடிவு, இங்கே இருந்து டெலிவரி பார்த்திருக்கலாமே? அங்கே ஒத்து வருமாக்கா?” மெல்லிய குரலில் அவனது அக்கறையை வெளிப்படுத்த,

“அவ போகும் போது, நீயும் வேடிக்க பார்த்திட்டுதானே இருந்த… அப்போ வந்து சொல்லி இருக்கலாமே பாஸ்கி?” அதட்டலோடு மிதுனா கேட்க,

“அது… வந்து… எப்படிக்கா… மாமா ஏதாவது சொன்னா?” அவன் மென்று முழுங்கிட,

“உன் பொண்டாட்டி, உன் புள்ளைங்கிற அக்கறை இருந்தா, நீ கேட்டிருப்ப… இப்படியே தடுமாறி, தண்டமா இன்னும் எத்தன நாளைக்கு நிக்கப் போறடா? இனியாவது திருந்த முயற்சி பண்ணு பாஸ்கி… உன்னைத் தேடி அவ வர்றதும், அவளைத்தேடி நீ போறதும் உன் கையிலதான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், மதிய உணவிற்கென தயானந்தன் வர, இவர்களைப் பார்த்துக் கொண்டே மேலே சென்றுவிட்டான்.

வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே, தம்பியுடன் பேசியதற்கு கடுப்பில் கடித்தவன், இன்று என்ன சொல்லப் போகிறானோ என்ற மனப் புலம்பலில் கணவன் போவதை, மிதுனா பார்த்துக் கொண்டிருக்க,

“என்னக்கா… மாமாவ அப்படி பாக்குற?” தமக்கையின் பார்வைக்கு அர்த்தம் புரியாமல், பாஸ்கர் கேட்க,

“உங்க மாமா, இப்போ படி ஏறுறாரா இல்ல, மலை ஏறுறாரா மொமென்ட், பாஸ்கி” கணவன் சென்ற திசையில் பார்வை வைத்துக் கொண்டே மிதுனா பேசினாள்.

“அக்கா நீயா பேசறா? மாமா உன்னையும் மிரட்டி வைச்சிருக்காரா?” அக்காவின் பாவனையில் அதிர்ச்சி அகலாமல் கேட்டவனைப் பார்த்து,

“மிரட்டலும் இல்ல, புரட்டலும் இல்ல, உன்னோட பேசினதுக்கு, ஸ்பெஷல் மீல்ஸ் அளவுக்கு வெரைட்டியா புகழுவாரு, அத கேக்க தயாராகணும், நான் போறேன்” எனக்கூறி அவசரகதியில் கிளம்ப,

“சாரிக்கா… மாமா இப்படின்னு எனக்கு தெரியாது… என்னால தானே?” பாவமாய் முகத்தை வைத்து சொல்ல,

“டேய், உன்கூட, பேசுறது மட்டுந்தான் அவருக்கு பிடிக்காது. அதுக்காக, இஷ்டத்துக்கு அவர வில்லனா கற்பனை பண்ணினே, தொலைச்சிடுவேன் ராஸ்கல்… இந்த பீலிங்க்ஸ் எல்லாம் ஓரம்கட்டிட்டு, உருப்படுற வழியப் பாரு” பல்லைக் கடித்துக் கடிந்து கொண்டே, படி(மலை) ஏறியவனைப் பார்க்கச் சென்று விட்டாள்.

மறந்தும் கூட தம்பியிடம் அன்றைக்கு கேட்ட பணம் கிடைத்ததா? அதற்கு என்ன ஏற்பாடு செய்தாய் என்று கேட்கவில்லை. தான் கொடுப்பதை கைவிட்டாலாவது சுயமுயற்சி மேற்கொள்வானா என்ற எண்ணத்தை செயல் படுத்த முனைந்து விட்டாள்.

வீட்டிற்கு வந்த தயானந்தன், மௌனமாய் உறங்க முற்பட,

“சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம், வாங்க” மிதுனா அழைக்க,

“தலைவலிக்குது வேணாம்” இவன் மறுக்க,

‘ஐயோடா! இவன் இப்டி ஆரம்பிச்சாலே, பொண்டாட்டிய மடிச்சு, சட்டைப் பைக்குள்ள போட்டுக்க போறான்னுதானே அர்த்தம். ஸ்டடியா இருடி மித்துக்குட்டி, என்ன செஞ்சாலும் அசரக்கூடாது சக்கரகட்டி…’ அவளது மனசாட்சி அவளுக்கு அறிவுரை கூற,

‘கருமம் பிடிச்ச மனசாட்சியும் அவன மாதிரியே கூப்பிட்டு கடுப்பேத்துது’ மனதோடு அலுத்துக் கொண்டவள், அடுத்த வேலையை பார்க்கவேன ஒதுங்கிக் கொண்ட மறுநிமிடமே, அழைத்து விட்டான்.

“தலைவலி தைலம் எடு மிது” என்றவனிடம், நொடியில் எடுத்துக் கொடுத்து விட்டு நகர,

“தடவி, தலைய பிடிச்சு விட, நாலு பேர வெளியே இருந்து வரச் சொல்லவா?” கண்களை மூடி அமைதியாக பேசினாலும், கோபத்தை தெறிக்க விட்டான். 

இதனைக் கேட்ட மிதுனாவிற்கு ஆயாசமாக இருந்தது. வளைக்காப்பு முடிந்த தினத்தில் இருந்து, தன்னிடம் பேசும்போது மட்டும் தென்படும் ஒரு படபடப்பு, வெளிப்படும் வார்த்தைகளில் வடிகட்டாத எரிச்சல், சாதாரணமாக பேசுவது போல் தோன்றினாலும், முறுக்கிக் கொண்டே தன்னிடம் சதிராட்டம் போடுகிறான். இவனை என்ன செய்தால் தகும்? என மனதோடு அவளுக்கும் கோபம் எழ, பதிலடி கொடுக்க தீர்மானித்து விட்டாள்.

“உங்க வீடு, உங்க உடம்பு, உங்க தல, இதுக்கு நடுவுல வர்றதுக்கு நான் யாரு?” அவன் பாணியில் பதில் கொடுக்க,

“ஃஉப்ப்…. சண்டை போட நல்ல நேரம் பார்த்தடி… வெயிலுக்கு பயந்து வீட்டுக்கு வந்தா, நீ பேசியே அனலை கக்குற…” வலியின் வேதனையில் பேசியவன், தலையை சுற்றி துண்டை இறுக்கமாக கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ள, இவளுக்குதான் பாவமாகிப் போனது.

‘அச்சோ… நெஜமாவே ரொம்ப தலவலி போல… கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்கணும், எனக்குதான் சம்பாத்திக்க தெரியும்னு ஓடிக்கிட்டே இருந்தா, இப்படிதான் அனுபவிக்கனும்’ மனதோடு முனுமுனுத்தவள், அவன் அருகில் அமர்ந்து தைலத்தை தடவி, தலை பிடித்து விட, அந்த சுகத்தை பத்துநிமிடம் அனுபவித்தவன், கண் திறந்து அவள் கைககளுக்கு முத்தம் கொடுத்து,

“இந்த சுகத்துக்குதான்டி, நான் ஏங்கிப் போறேன்” பிதற்ற ஆரம்பிக்க,

“ம்ப்ச்… என்னடா திருட்டுப்பூனை இன்னும் எட்டிப் பாக்கலையே, நல்ல புத்தி வந்திருச்சோன்னு நினச்சேன், விடுங்க… நாங்கதான் உங்களுக்கு வேறயா போயிட்டோமே!” சலிப்புடன் விலகிக்கொள்ள,

“ஏன்டி, கோபமா ஏதாவது பேசினா, அதையே பிடிச்சி தொங்குவியா நீ?

“என் வழிக்கு குறுக்க வரமாட்டேன்னு சொல்றவர், நான் பேசினதுக்கே கோபபட்டா வேற எப்படி எடுக்குறதாம்? எங்களுக்கும் வெனா, மானா, சூனா எல்லாம் இருக்கு” சிலிர்த்துக்கொண்டே கணவனுக்கு பதிலடி கொடுக்க,

“அதோட உடம்பு முழுக்க கொழுப்பும் ஏகத்துக்கு இருக்குடி” சிரித்தே இவனும் வார்த்தை வளர்க்க ஆரம்பித்தான்.

“ஆமாமா… நீங்க உருட்டி தந்த வெண்ணையிலதான், ஏறிபோச்சு” இவள் முறுக்கிக் கொள்ள,

“என்னை தள்ளி விட்டுப் போன கோபத்துல பேசிட்டேன், செல்லக்குட்டி. இன்னைக்கு பார்த்ததானே? ஏதாவது பேசினேனா? முறைச்சுகூட பாக்கலடி, உன்ன” நியாயவாதியாக மாறி, தன் செயலுக்கு விளக்கம் கூற,

“என் புருசனோட மனசும் நம்ம ஊர் வெதர் ரிப்போர்ட்டும் ஒண்ணு. ரெண்டுமே சொன்ன மாதிரி இருக்காது. உங்கள, நான் நம்பவே மாட்டேன்” அவளது வார்த்தைகளில் சங்கு சக்கரம் சர்ரென்று சுழல, அதே வேகத்தில் கணவனிடம் இருந்து விலக முற்பட்டாள்.

“சரிடி விட்டுத் தள்ளு… கோபப்பட்டவந்தானே, உன்னோட காலையும் கையையும் பிடிச்சு தொங்குறான். கொஞ்சம் கருணை காட்டு தாயே!” அவள் கண்களுக்குள் நேர்பார்வை பார்த்து, தன்னுடன் இழுத்துக் கொள்ள,

“மொரட்டுப் பயலே! இப்டி பேசியே என்னை விழ வைக்குற… இந்த தடவ நான் அசரமாட்டேன் போடா…” தனது ஆசைதீர வசைபாடியே, வீம்பு குறையாமல் முறுக்கிக் கொண்டாள்.

“நம்மள ஹனிமூன் கொண்டாடச் சொல்லி, விட்டுட்டுப் போயிருக்காங்கடி… அத உன் பிடிவாதத்துல சனிமூன் ஆக்கிடாதே மித்துகுட்டி” விடாத சீண்டலுடன், அவளை இறுக்கிக் கொள்ள,

“அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பித்து பிடிக்கிற மாதிரி, புத்தி மாறிமாறி பேசிக்கிட்டே இருங்க… உங்கள திருத்த முடியாது. சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க தயா! லேட் ஆகுதுன்னு அதுக்கும் என்னைதான் கடிச்சு வைப்பீங்க…” அவனில் இருந்து விடுபட்டுக் கொண்டே விலக எத்தனித்தாள்.

“வண்டிய சர்வீஸ்க்கு விட்டாச்சு மிது… நாளைக்கு மதியம்தான் வரும். அதுவரை நான், உனக்கே உனக்குத்தான்! என் பொண்டாட்டிகூட இருபத்திநாலு மணிநேரம் இருக்கப் போறேன்” விசிலடித்து உல்லாசமாகக் கூற,

“பாருடா… என் வீட்டுக்காரார் கின்னஸ் ரெகார்டுக்கு அடி போடுறார்… இதுக்கு தலவலின்னு பொய்சொல்லி ஏன் டிராமா பண்ணுறீங்க?” மிதுனா நக்கலில் இறங்க,

“நெஜமாவே, அப்டிதான் வந்தேன்டி. உன் உஷ்ண பேச்சுல, அது துண்டக் காணோம் துணியக் காணாம்னு பயந்து ஓடிருச்சு சக்கரகட்டி” அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்தே, அசராத பேச்சில் மனைவிக்குச் சரிக்கு சரியாக பேசினான்.

“சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க தயா… தலயில எந்த குண்டுச்சட்டியும் ஒட்டாம, ஒருநாள் பிரீயா இருங்க” உண்மையான அக்கறையில், அன்போடு இவள் கூறும்போது கோபம் தூரதேசம் போயிருந்தது. 

“நீ பண்ற விஷத்தை, ரசமா சாப்பிடுறவனுக்கு ரெஸ்ட் முக்கியம்தான், போயி எடுத்து வை, வர்றேன்…” மனைவியின் கைபக்குவம் தந்த அனுபவத்தை சலிப்புடன் சீண்டிக் கூற,

“ஆஹான்! இந்தப் பெருமை எல்லாம், என் மாமியாருக்குதான்… அவங்க செஞ்சு வச்ச பொடிய, நான் கலக்கி மட்டுமே வைக்கிறேன். வேற ஒண்ணும் செய்றதில்லப்பா!” தோள்களை குலுக்கிக் கொண்டே, உணவை எடுத்து வைக்க செல்ல,

“உப்பு காரத்தோட கொஞ்சம் பாசத்தையும் கொட்டிச் செய்யணும், தங்கம்! அப்போதான் கிண்டுறது பக்குவமா, ருசியா மாறி, உள்ளே போய் செரிமானம் ஆகும். இல்லன்னா பாசம் பாய்சன் ஆனா மொமென்ட்தான், மிது” என்றவாறே உண்ண அமர்ந்தான்.

“அப்போ எனக்கு பாசம் இல்லையா? நாளைக்கு ஒருநாள் நீங்க பாசமா சமைச்சு போடுங்களேன்… பாசம் பாய்சன் ஆகுதா? பானிபூரி கேக்குதானு? நானும் பாக்குறேன்” கண்களை உருட்டி, போலியாக முறைத்தபடியே வாரிவிட, மடைதிறந்த பதிலடிகள் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டே, உணவை முடித்தனர்.

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு

வெள்ளி கம்பி என்று ஆகியதே…

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு

தங்க சிற்பம் என்று மாறியதே…

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் இறக்கைகள் ஆக

நாக்கு உன் பெயர் கூற என் நாட்கள் சர்க்கரை ஆக

தலை கீழ் தடுமாற்றம் தந்தாய்

என்னில் என் கால்களில்…

பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் அகப்பட்டு காத்துக் கொண்டிருக்க, கோபங்கள் மறைந்த, சிரிப்பின் ஒலியில் அலைபேசியும் சங்கீதம் பாடியது.

மாலை நேரம் அஷ்டலட்சுமி கோவிலுக்கும், கடற்கரைக்கும் சென்று வந்தவர்கள் இரவினை வரவேற்க, கணவன் சுற்றி வளைத்த முரட்டுப் பிடியில், விரும்பியே மாட்டிக் கொண்டாள் மிதுனா.

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்கவில்லை

அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்…

நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை

உன்னை மட்டும் இங்கே நான் தொடுத்தேன்…

ஊஞ்சல் கயிறு இல்லாமல் என் ஊமை மனது ஆடும்

தூங்க இடம் இல்லாமல் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சம்

கொஞ்சும் தஞ்சம் நெஞ்சம்…

உடலோடு உயிராக மனைவியை அணைத்துக் கொண்ட கணவனின் காமத்தில், அவள் மோகம் தத்தளிக்கத் தொடங்கிட, தன் கடமையை சரியாக செய்யத் துவங்கினான் மன்மதன்.

உறக்கத் தொடங்கியிருந்த, அவள் சூடிய மல்லிகை மொட்டுகளும் உறக்கம் கலைந்து, அவர்களின் ஆசைத் திருவிழாவிற்கு முரசு கொட்டிட, இனியதொரு ஆலிங்கனம் அங்கே! மூன்றாம் ஜாமத்தில் முத்துக்குளித்த உடல்கள் ஒய்ந்து ஒன்றையொன்று அரவணைத்து, இமை மூடத் தொடங்கிய நேரம்,

“மிது”

“ம்ம்…”

“என்மேல கோபமா? உன்ன ரொம்ப திட்டிட்டேனா?” தாபம் தீராக்குரலில் கேட்டபடியே, முற்றிலும் கலைந்திருந்த மனைவியிடம், இன்னமும் அவன் விரல்கள் எதையோ தேடிக் கொண்டிருந்தது.

கணவனின் கேள்வியை விரும்பாமல் அவனது நெற்றி, தாடை, கன்னம் என கணவனின் முகம் முழுவதும் தன் அதரத்தை ஒற்றியெடுத்தவள், முடிவினில் அவனது இதழுடன் செல்லப் போர் தொடுத்தாள்.

அதில் மயங்கியவன் கிறங்கி, அணைகட்டிய தன்ஆசையை அவளிடம் வெள்ளமாக பிராவாகிக்க, அதில் கலந்து கரைந்தே போனாள். விடியலை விரும்பாத களிப்பான இரவை, பெரும் போராட்டத்திற்கு பிறகே வழியனுப்பி வைத்தனர்.

கணவனின் திருவிளையாடல்கள் கொடுத்த, சுக அயர்ச்சியில் சோம்பல் முறித்தவாறே, மிதுனா போர்வைக்குள் புரண்டு படுத்த வேளையில், கண்களுக்குள் உறக்கம் இன்னும் மிச்சமிருக்க, இமைக்கும் விழிக்கும் பெரும் சண்டையே நடந்தது. தயானந்தன் சீக்கிரமே எழுந்து விட்டிருக்க,

“லேட்டாச்சு மிது! இன்னைக்கு வேலைக்கு போகணும்னு சொன்னியே?” மனைவிக்குப் பொறுப்பாய் நினைவூட்டினான்.

“இத நேத்தே ஞாபகப்படுத்தி இருந்தா, உங்கள மொட்டைமாடிக்கு ஷிஃப்ட் பண்ணிருப்பேன்” களைப்பு மேலிட்ட குரலில், சிரித்தபடியே மிதுனா சொல்ல,

“இன்னைக்கு சாப்பாடு வெளியே பார்த்துப்போம். நீ குளிக்க, நான் ஹெல்ப் பண்றேன், எந்திரி” கண்சிமிட்டலுடன் அவளை தூக்கிக் கொள்ள வர,

“தயா… ஆசை இருக்கலாம், பேராசை இருக்கக்கூடாது, இந்த விஷப்பரிட்சை வேணாம்” மனைவி தடுத்திட,

“இந்த பேச்சுக்கே என்னை, நான் நிரூபிச்சாகணும்” என்றவன் போர்வையுடன் அவளை குளியலறைக்குத் தூக்கிச் செல்ல, அதற்கும் செல்லச் சண்டை பிடித்தாள் ஆசைமனைவி.

“புருஷன் ஆசையா தூக்குறேன்னு சந்தோசப்படுறியா? சின்ன வெட்கம் வருதா? எதுடா சாக்குன்னு சண்டைக்கு கிளம்புறடி!”

“வச்சுக்கிட்டு வஞ்சனையா பண்றேன்… வராதத, வரவைக்க நான் என்ன மந்திரவாதியா? சாமியாரா?

“வாயாடி… இப்படி பேசியே, என்னை முழுசா முடிஞ்சு வைச்சுகிட்ட”

“தப்பு தயானந்தன்… நீங்கதான் என்னைப் போர்வையில சுருட்டி வச்சுருக்கீங்க” பதிலடி கொடுத்து சிரித்தவளிடம், சிலபல வித்தைகளை நடத்தியே அவளை கிளப்பினான்.

“நீங்க எதுக்கு, என்கூட வர்றீங்க தயா?”

“என் பொண்டாட்டிகூட வர, உன்கிட்ட பெர்மிஷன் கேக்கனுமா?” வெடுக்கென்று கோபத்தை கொட்டினான்.

“ஷப்பா முடியல… ஆசையா சொன்னா கொறைஞ்சா போயிடுவீங்க? என்ன டிசைனோ?” பதிலுக்கு இவளும் அலுத்துக் கொள்ள,

“உனக்கு பிடிச்ச டிசைன்தான் மித்துகுட்டி… எல்ல்ல்லா… விஷயத்துலயும் நமக்கு ஏகபொருத்தம்” நீட்டி முழக்கி கண்சிமிட்ட,

“இனி இந்தமாதிரி லீவ் வந்தா, முன்கூட்டியே சொல்லிடுங்க, தயா… நான், எப்படியாவது எஸ்கேப் ஆகுறேன். ஒருநாள்ல என்ன அழிச்சாட்டியம் பண்றீங்க?” என்ற பதிலில் அடங்காமல் கேலிச் சிரிப்பு சிரித்தவனுக்கு,

பொய்முறைப்பும் கோபமும் மனைவியிடம் இருந்து, வெகுமதியாக கிடைக்க, காலை உணவை முடிக்க இருவரும் கிளம்பினர்.

“இன்னைக்கு எந்த ப்ளோர்ல டுயுட்டினு சொல்லு, பர்சேஸ் முடிச்சு, உன்னை பார்த்துட்டு போறேன்” மிதுனா வேலைபார்க்கும் பெரிய ஜவுளிக் கடைக்கு, அவளுடன் வந்தவன் சொல்ல,

“இங்கே என்ன வாங்கப் போறீங்க தயா? அஞ்சு ரூபா கர்சீப் வாங்கி, ஐம்பதாயிரம் ஓட்டை சொல்வீங்களே! சேல்ஸ் கேர்ள்ஸ் பாவமில்லையா?” அவனை வாரிக்கொண்டே உள்ளே சென்று விட்டாள்.

அரைமணிநேரம் கழித்து, அவன் இருக்கும் இடம் தேடி அவளே வர,

“என்ன மிது டுயுட்டில ஜாயின்ட் பண்ணலையா?”

“வெளியே போய் பேசுவோம் வாங்க!” என்றவளின் முகம் இறுகியிருக்க, கணவனை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அமைதியாக சற்றுநேரம் சாலையின் ஓரத்தில் வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தாலும் அவளது முகம், தவிப்புகளைத் தாங்கி நிற்க, எதுவானாலும் அவளே ஆரம்பிக்கட்டும் என்றே தயாவும் உடன் நடந்தான்.

“வீட்டுக்கு போவோம் தயா… எனக்கு மனசே சரியில்ல…” என்றவளின் பேச்சைத் தட்டாது, அழைத்து வர,

“வேலைக்கு வரவேணாம்னு சொல்லிட்டாங்க…”

“எதுக்குமா? லீவுக்கு மானேஜர்கிட்ட சொன்னதானே?” – தயா.

“எட்டு வருஷமா வேலை பாக்குற இடம்… இந்த மாதிரி கடைகள்ல ரொம்ப வருஷமா வேலை பாக்கிறவங்கள சமயம் பார்த்து வெளியே அனுப்பிடுவாங்க. அவங்கள தொடர்ந்து வேலைக்கு வச்சுக்கிட்டா சீனியாரிட்டி முறையில, சாலரி, அலவன்ஸ்னு கொஞ்சம் தாராளமா கொடுக்கணும்.

அதுவுமில்லாம புதுசா கல்யாணமான பொண்ணுங்க, வேலையில அவ்வளவு கவனம் வைக்க மாட்டாங்கனு பொதுவான கண்ணோட்டம், இந்த சர்க்கிள்ல இருக்கு. அதுவும் என் விசயத்துல சாதகமா போனதுல, கணக்கு முடிச்சு அனுப்பிட்டாங்க. இனி வேற வேலை தேடனும்ங்க…” சோர்வுடன் அவன் தோள் சாய்ந்து நடந்ததை சொல்ல, ஆதரவாய் அணைத்துக் கொண்டான்.

“உனக்கு மட்டும், இப்படி செய்ய என்ன காரணம் மிது?”

“என்னோட சேர்த்து, மூணு பேருக்கு கணக்கு முடிச்சு அனுப்பி இருக்காங்க. நான் லீவ்ல இருந்ததால எனக்கு தெரியல”

“யாரும் உனக்கு, இதபத்தி சொல்லலையா, மிது?” – தயா.

“வெளிப்படையா தெரியப்படுத்த மாட்டாங்க… ஏதாவது ஒரு காரணம் சொல்லி, திடீர்னு வேலையில்லன்னு சொல்வாங்க, நம்மால அத மறுத்துப் பேசமுடியாது” இறங்கிய குரலில் அவளது கவலையை வெளிப்படுத்தினாள்.

“சரி விடும்மா… இந்த வேலை போனா, வேற தேடிக்கலாம், நீ கவலப்படாதே!”

“சீக்கிரம் கிடைக்கணுமே தயா இந்த மாசம் ஒட்றதுக்கு  சம்பளப் பணம் கையில இருக்கு, அடுத்த மாசத்துக்கு என்ன செய்ய?” மனக் குழப்பம் ஆரம்பித்திருந்தது மிதுனாவிற்கு.

“உன் வீட்டுக்காரன் குத்துக்கல்லாட்டம் இருக்கேன்டி… எதுக்கு இப்போ நடுரோட்ல நிக்கிறவ மாதிரி புலம்புர” அன்பாய் ஆறுதல் சொல்லியும் தனது புலம்பலை நிறுத்தாமல் தொடர்ந்தவளை, வேறு வழியின்றியே கோபத்துடன் சமாதானப் படுத்தினான்.

“உங்களுக்கு, எங்க அம்மா செஞ்ச கெடுதல்தான், இப்டி திருப்பி அடிக்குதோன்னு, பயமா இருக்கு தயா!” விடாமல் இவள் புலம்பித் தள்ள,

“இதுக்கு மேல ஏதாவது பேசினா, அடிச்சிட்டுதான் மறுவேல பாப்பேன். கப்பலா கவுந்து போச்சு? இவ்ளோ பெரிய ஊர்ல வேற வேலையே கிடைக்காதா?” என்று கடிந்து கொண்டவன், வெளியே கிளம்பி விட்டான்.

“வண்டி ரெடி ஆகிடுச்சான்னு பார்த்துட்டு, அப்டியே சாப்பாடு வாங்கிட்டு வர்றேன், அதுவரைக்கும் நல்லா தூங்கி ரெஸ்ட் எடு சக்கரகட்டி… நைட் டியூட்டி பார்த்தது செம்ம டயர்டுனு சொன்னதானே?” சீண்டியே அவளது கன்னத்தை கிள்ளி எடுக்க,

“ஆமா, நான் ஒத்தகால்ல நின்னு தவம் பண்ணி, டயர்டு ஆனேன். இவரு நித்திராதேவிய கட்டிபிடிச்சிட்டு தூங்கிட்டு இருந்தாராம்” கணவனுக்கு பழிப்புக் காட்டிக் கொண்டே இவள் சொல்லி முடிக்க,

“ஹாஹா… இன்னைக்கும் அதே தேவியோடதான் அப்பாய்ன்மெண்ட் பிக்ஸ் பண்ணிருக்கேன். ரெடியா இருக்கச் சொல்லு” கண்ணடித்துக் கொண்டே சென்று விட்டான்.

இனி அடுத்தடுத்த புதிய மாற்றங்கள் இவர்களின் வாழ்விலும்!!!