cn-13

நிலவு – 13

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை… உடலெங்கும் மருத்துவ உபகரணங்கள் இணைக்கப் பட்டிருக்க, கையில் மாவுகட்டு போடப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் மஞ்சுளா அனுமதிக்கப் பட்டிருந்தார். அதீத காய்ச்சலில் வலிப்பு வந்து, மயக்கத்திற்கு சென்றிருந்தார்.

வெளி வராண்டாவில் சாந்தினி, மிதுனாவிடம் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தாள்.

பாஸ்கர் ஃபோன் பண்ணின நேரத்துக்கு, நான் போய் பார்த்திருந்தா, இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காது மிதுனா… அவன் போகும்போது கதவ சாத்தி வச்சுட்டு மட்டுமே போனதும் நல்லதா போச்சு. இல்லன்னா தாழ்ப்பா தொறக்க, தனியா நேரம் போய், இன்னும் டென்சன் ஆகியிருக்கும்.

நைட் ஒன்பது மணிக்கு பேச்சு மூச்சு இல்லாம, அம்மா கிடக்கிறப்போ, எதுவும் ஓடல… பக்கத்து வீட்டு தம்பிதான் நூத்தியெட்டுக்கு ஃபோன் அடிச்சி, இங்கே கூட்டிட்டு வர்றதுக்கு ஹெல்ப் பண்ணான். உங்க மாமா மதியம்தான் வெளியூர் கிளம்பி போனாரு. இங்கே எல்லாம் முடிச்சு, உனக்கு தகவல் சொல்லும் போது மிட்நைட் ஆகிடுச்சு” பயம் விலகாத படபடப்புடன் சொல்லிக் கொண்டிருக்க,

“பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கலாமே? இன்னும் நல்லா கவனிப்பாங்களே?” மிதுனா தனது கணிப்பைச் சொன்னாள்.

“பிரைவேட்ல போனா, அட்மிஷனுக்கே ஐம்பதாயிரம் கட்டியாகணும். அடுத்தடுத்து ட்ரீட்மென்டுக்கு லட்சக்கணக்குல தேவைப்படும். யார்கிட்ட இருக்கு? இப்போ ஊருக்கு வந்துட்டு போனது, திரும்பவும் பாஸ்கர் வேலைக்கு போனதுன்னு நிறைய செலவாகிப் போச்சுடி… உங்க மாமாகிட்ட கைமாத்தா கேட்டுத்தான், வாங்கிக் குடுத்திருக்கேன்” என்று சாந்தினி உள்ளதை தெளிவாக கூறி விட்டாள்.

சாந்தினியின் கணவன் மனோகர் நல்லவன். ஆனால் பணப் பரிமாற்றத்தில் வெகுகெட்டி. தன் கையிருப்பை செலவளிக்காமல், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் நியாயவாதி. ஒரு ரூபாய் கொடுப்பதற்கு, ஓராயிரம் முறை கணக்கு பார்ப்பவன், இத்தனை கொடுத்ததே தெய்வச்செயல் என்பது மிதுனாவிற்கும் விளங்கிப் போனது.

நடுஇரவில் சாந்தினியிடம் இருந்து தகவல் வந்ததும் தாயனந்தனும் மிதுனாவும் கிராமத்தில் இருந்து கிளம்பி, நேராக மருத்துவமனைக்கே வந்திருந்தனர். இரு பெண்களும் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருக்க, மனைவியின் அருகில் நின்றிருந்தான் தயா.

“பாஸ்கர் எப்போ வர்றான்? விவரம் சொல்லிட்டீங்களா?” தயா கேட்க,

“அவனுக்கு ட்ரைனிங் இன்னைக்கு ஸ்டார்ட் ஆகுது, இடையில வரமுடியாது. கம்பனியில கேட்டுட்டு வரப் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கான்” என்று சாந்தினி சொல்ல,

“கட்டினவள காப்பாத்த தெரியல, பெத்தவள பார்த்துக்க முடியல… உலக அதிசயமா இவன் மட்டுந்தான் வேலை தேடி அலையுற மாதிரி இருக்கு” கடுகடுத்தபடியே பாஸ்கரை வசைமாரிப் பொழிந்தான் தயா.

பாஸ்கரின் மேல் தயானந்தனுக்கு எப்பொழுதும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. அதற்கு மகுடம் சூட்டுவது போல், இப்பொழுது பெற்ற தாயையும் கவனிக்காமல், தன் வேலையை முன்னிட்டு சென்றதில், அவனைப் பற்றி முன்னிலும் விட வெகுவாக கீழிறக்கி மதிப்பிட்டுக் கொண்டான்.

“கைக்கு, சர்ஜரி பண்ணி, பிளேட் வைக்கனும்னு சொல்றத, எப்போ செய்வாங்க?” தயானந்தன் முன்வந்து கேட்க,

“அதுக்கு மொத அம்மா கண்ணு முழிக்கணும் தம்பி… ஹை பீபி.. ஜுரம் இதெல்லாம் குறையணும். சர்ஜரிக்கு அவங்க உடம்பு தாங்கனுமே… அதையும் பார்க்கணும்” என்று தாய்க்கு ஏற்பட்ட பல பின்னடைவுகளை சொல்லிக் கொண்டே வந்தாள் சாந்தினி.

மஞ்சுளாவின் மீதுள்ள மனத்தாங்கலை, ஓரம் கட்டிவிட்டு தனது மனைவிக்கு துணையாக வந்து விட்டான் தயானந்தன்.

அன்னைக்கு நேர்ந்ததை கிரகித்துக் கொள்ள முடியாமல் பெண்கள் இருவரும் தவித்து நிற்க, மேற்கொண்டு நடக்க வேண்டியதற்கு, தயா பொறுப்பெடுத்துக் கொண்டான்.

மரகதம் அவ்வப்பொழுது அலைபேசியில் நிலவரத்தை கேட்டு, பெண்களை தன்சார்பில் தைரியப் படுத்திக் கொண்டிருந்தார். தேனுபாட்டியும் பல வேண்டுதல்களை ஆண்டவனிடம் வைத்திருப்பதாகக் கூறிச் சமாதானப் படுத்தினார்.

மஞ்சுளாவின் குற்றத்தை பெரிதாக்கிப் பேசியவர்கள் இப்பொழுது அவரின் நலனில் அக்கறை கொண்டு விசாரிக்கத் தொடங்கி இருந்ததில், மிதுனாவிற்கும் அவர்களின் மேல் ஏற்பட்டிருந்த மனக்குறை மறந்து போனது.

தொடர்ந்து வந்த மூன்று நாட்கள் மிதுனா மருத்துவமனையில் தங்கிக் கொள்ள, பாதிநாள் வேலைக்கும் சென்று, மீதி நேரங்களில் மனைவிக்கு துணையாகவும் இருந்து, பார்த்துக் கொண்டான் தயானந்தன்.

சாந்தினி, தன் குடும்பம், பிள்ளைகளின் பொருட்டு அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தாள். பாஸ்கர் மூன்று நாட்கள் பயிற்சியில் இருக்க வேண்டிய கட்டாயம் என்று, இது வரையிலும் தாயைப் பார்க்க வராமல் நாட்களை கடத்திக் கொண்டிருந்தான்.

நாளுக்கு நாள், ஒவ்வொரு பின்னடவை சொல்லிக் கொண்டே வந்தனர் மருத்துவர்கள். அதிக மன அழுத்தத்தால் தொடர் மயக்கம், இடது பக்கம் வாதம், மருந்தின் வீரியத்தால் மஞ்சள் காமாலை என்றவர்கள், நான்காம் நாள் நினைவு தப்பிப் போய்விட்டது. பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர்.

நிலவரத்தை தெரிந்து கொண்டு, பாஸ்கர் வந்து சேர்ந்த அன்று, மஞ்சுளா தன் இறுதி மூச்சை இழுத்து விட்டு, தனது பயணத்தை காலதேவனுடன் இணைத்துக் கொண்டார்.

தான் இருக்கும் இடத்தில், தனது பேச்சு மட்டுமே இறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர், இறுதிமூச்சையும் தன் விருப்பபடி, மகன் அருகில் இருக்கும் போதுதான் நிறுத்தினார்.

மகனின் நலத்தையே தனது சுயநலமாக எண்ணி வாழ்ந்தவர், தன் மேல் தவறு இருப்பதை அறிந்தும் யாரிடமும் மன்னிப்பை வேண்டாமல், பணிந்தும் பேசாமல் நான் இப்படித்தான் என்று உலகிற்கு உணர்த்திவிட்டு போய்விட்டார்.

நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்திற்கும் எந்தவித மனசுணக்கமும் கொள்ளாமல் தயானந்தன் முன்னிற்க, அவனுடன், சாந்தினியின் கணவன் மனோகர் துணை நின்றான்.

செலவுகள் அனைத்திற்கும் வழக்கம் போல தயா பொறுப்பேற்று விட, எந்தவித தடங்கலும் இல்லாமல் காரியங்கள் நடைபெற்றன.

குடும்பத்தின் மருமகளான சிந்துவை காரில் அழைத்துக் கொண்டு வர, மரகதமும் தமிழ்செல்வனும் வீட்டு மனிதர்களாய் நின்று உதவி புரிந்தனர். சம்மந்தி முறைமைகள் அனைத்தையும் செய்து, புண்ணிய ஆத்மாவாக்கி, எந்த குறையும் இல்லாமல் வழியனுப்பி வைத்தனர்.

தங்களுக்கு ஏற்பட்ட மனப் பிணக்கையும், கோபத்தையும் ஒதுக்கி வைத்து, மரகதமும் தயாவும் காரியங்களை கையில் எடுத்துக் கொண்டு செய்ததைப் பார்த்து தமிழிற்கு ஆச்சரியேமே! அதனை தன் அத்தையிடம் கேட்டும் விட்டான்.

“அந்தந்த சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி அவங்க மனக் கஷ்டத்தை இறக்கி வைக்கிறோம்… பழி வாங்க, இது என்ன சீரியலா தமிழ்? மனுஷ வாழ்க்கையில வீராப்பை காட்டிட்டு திரிஞ்சா, வீணா போயிடுவோம்” என்று மரகதம் விளக்கம் சொல்ல,

“நீ அல்டிமேட் மாமியார் ஆகிட்ட அத்தை… தங்கச்சி நீ நெஜமாவே குடுத்து வச்சவதான்” கேலி பேசி மிதுனாவை சிரிக்க வைத்தான் தமிழ்.

அடுத்தடுத்த இன்னல்களில் மிகவும் சோர்ந்து போயிருந்த  மிதுனாவும் மாமியாரின் பேச்சினைக் கேட்டு சிலிர்த்துக் கொண்டாள். தமிழைப் போல அவளுக்கும் ஆச்சரியமே…

“என் மருமக, தவிச்சுட்டு இருக்கும்போது, என் பையனோட சந்தோஷமும் தொலைஞ்சு போயிரும். என் மகன் மனகஷ்டத்த பார்த்து, எனக்கு சொட்டு தண்ணி இறங்காது. இதுவும் ஒருவகையான சுயநலம்தான்யா” உள்ளொன்று வைத்து புறம் பேசித் தெரியாத, வெள்ளை மனதை அப்பட்டமாக வெளிப்படுத்தினார் மரகதம்.

சொந்தங்கள் ஒன்று கூடி பேசினாலும் பாஸ்கர் யாருடனும் ஒட்டிக் கொள்ளாமல் தனியே இருந்தான். மிதுனா இருந்தால் மட்டுமே, குழந்தையை எட்டிப் பார்க்கவேன மேலே வருபவன், மற்றவர் அவனை கவனிக்க நேர்ந்தால், உடனே விலகிச் சென்று விடுவான்.

துக்கம் விசாரிக்க வந்த, அனைவரும் குழந்தையைப் பார்த்து விட்டு, “மகன் வந்த நேரம், உனக்கு தாய் இல்லாமல் போயி விட்டதே, எல்லாம் மகனின் ராசி” என்ற அனுதாபத்தில், பாஸ்கரை குழப்பி விட்டு சென்றனர்.

“நான் பொறந்த நேரம் சரியில்லன்னு, என் பாட்டி, என்னை ஒதுக்கி வச்ச மாதிரி, என் பிள்ளைக்கும் பேச்சு வந்துருச்சே…” என்று வேதனைப்பட்ட சிந்துவிற்கு, மாமியார் இறந்தது, துக்கத்தை விட கோபத்தைக் கொடுத்தது.

மறந்தும் பாஸ்கரை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சடங்கு சாங்கியம் என்று மனைவியாக பக்கத்தில் நின்றாலும், பாராமுகமாய் இருந்தாள்.

மனைவியின் ஒதுக்கத்தை, பாஸ்கர் கருத்தில் கொள்ளாமல், கணவனாக சகஜமாக பேசி, அவளை, தன் காரியங்களில் எல்லாம் பொறுப்பேற்க வைத்திருந்தால், நிலைமை மாறி இருவரும் சேர்ந்து வாழவும் யோசித்திருக்கலாம்.

ஆனால் இவள் கிழக்கே திரும்பினால், அவன் மேற்கே பார்த்து நின்றான். ஆக மொத்தம் இருவருக்குமான விரிசல் என்னவோ முன்னை விட அதிகமாகியது. மனம் விட்டுப் பேசாமல் தங்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிக் கொண்ட பெருமையை இருவரும் பெற்றனர்.

காரியங்கள் முடிந்த பின்னர், பிடிவாதமாக கிராமத்திற்கு புறப்பட்டுச் செல்ல வேண்டுமென்று, சிந்து பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்.

நடந்தவைகளை மறக்க பழகிக் கொள், இங்கேயே இருப்போம் என்று மரகதம் சொன்னாலும், சிந்து, தன் மனதில் கொண்ட வைராக்கியத்தில், பின்னடையவில்லை.

“பிரச்சன பண்ணின, எங்க அம்மாவே போனபிறகு, அந்த பேச்சை, இன்னும் ஏன் பிடிச்சு தொங்கிட்டு இருக்க, சிந்து?” மூத்தவளாய் சாந்தினி எடுத்துச் சொல்ல,

“இத்தனை நாள் அவர் அம்மாக்கு பயந்தவர், பொறுப்பில்லாதவர்னு நினைச்சிட்டு இருந்தேன்… ஆனா இப்படி ஒரு சுயநலவாதியா இருப்பார்னு எதிர்பார்க்கல. ஒரு உயிர் போக காரணமா இருந்தவரோட, எந்த நம்பிக்கையில சேர்ந்து வாழச் சொல்றீங்க? நாளைக்கு எங்களுக்கும் இப்படி நடக்காதுன்னு என்ன நிச்சயம்?

அப்படியே நாங்க வந்தாலும் எப்படி பொழைக்கப் போறோம்? குழந்தைக்கு பால் வாங்கவும் இன்னொருத்தர் கைய எதிர்பார்க்கிற நிலைமையிலதானே இப்போவும் இருக்காரு?” பாஸ்கரனின் பலவீனத்தை தாக்கிப் பேசினாள் சிந்து. தயானந்தன் நடப்பதை வேடிக்கை பார்க்கும் பாவனையில் பாஸ்கரை முறைத்துக் கொண்டு நின்றான்.

“நிலைமை இப்படியே இருக்காது சிந்து, இவன் வேலைக்கு போக நினைச்சுதானே, அம்மாவையும் கவனிக்காம போயிருக்கான்… இத்தனை கோபம் தேவையில்லை உனக்கு” சிந்து பேசியது உண்மையாக இருந்தாலும், தன் தம்பியின் மீது குற்றம் சொன்னது பிடிக்காமல், கண்டிப்புடன் பேசிய மிதுனா, தம்பியை பார்த்து,

“உனக்காக, நாங்க பேசிட்டு இருக்கோம்டா… இனி இப்படி நடக்காதுன்னு பேசித் தொலையேன். இதையும் நாங்க சொல்லிதான் நீ செய்யனுமா?” தம்பியுடனும் கடிந்து கொள்ள,

“ஒரு பொறுப்பான ஆம்பளையா எப்போதான்டா மாறப்போற?”  என்று சாந்தினியும் சேர்ந்து கொண்டாள்.

இருவரின் மீதும், சகோதரிகள் இருவருக்கும் அத்தனை கோபம் வந்திருந்தது. இன்னும் எத்தனை நாட்கள்தான் இவர்களைப் பற்றியே நினைத்து, நாட்களைக் கடத்துவது என்று மனதளவில் சோர்ந்தும் போயிருந்தார்கள்.

“என்ன செய்றதுன்னே தெரியாத, குழப்பத்துல இருக்கேன்கா… அடுத்த வேளை சாப்பாட்டுக்கு, நானே கையேந்திட்டு இருக்குறப்போ, எந்த தைரியத்துல கூப்பிட சொல்ற?” யாரையும் ஏறிட்டுப் பார்க்கவும் முடியாமல், தலைதாழ்த்திக் கொண்டே இறங்கிய குரலில் பேசினான் பாஸ்கர்.

“அப்போ என்னதான் செய்றதா உத்தேசம் பாஸ்கி?” – சாந்தினி.

“கொஞ்ச நாள் யாருடைய தயவும் இல்லாம தனியா இருந்து பார்க்குறேன்… அப்படியாவது சூடு, சொரணை, ரோசம் வந்து நல்லவனா மாற முயற்சி பண்றேன்” விரக்தியோடு கெஞ்சுவதைப் போல் தன் கோரிக்கையை வைக்க,

“பொண்டாட்டி புள்ளையோட சேர்ந்து இருந்தாலே, அந்த குணம் தானா வந்திரும்டா… குடும்பத்த எப்பவும் விட்டுக் கொடுக்க கூடாது, பாஸ்கி!” என்ற மிதுனா, தயாவைப் பார்க்க, அவன் முன்னை விட அதிகமாய் பாஸ்கரை முறைத்துக் கொண்டிருந்தான்.

‘இவன் எப்பொழுதுதான், என் தங்கையுடன் வாழப் போகிறான்? இந்த லட்சணத்திற்கு காதல் என்ற போர்வையில் கல்யாணத்தையும் முடித்தாகி, குழந்தையும் பிறந்து விட்டது’ என்று அலுப்புடன், சலித்துக் கொண்டே அவனை மனதோடு திட்டிக் கொண்டிருந்தான்.

“என்னோட வாழ்க்கையில, சிந்து மட்டுந்தான். இது நம்ம அம்மா மேல சத்தியம்… ஆனா, நான் தனியா இருந்து, வாழ்ந்து பார்க்க நினைக்கிறேன்கா…” தனது பேச்சில் நிலையாக நின்றுவிட்டான் பாஸ்கர்.

உடன் பிறந்தவன் தன் தவறை உணர்ந்தது, மன நிறைவைத் தந்தாலும் மிதுனாவிற்கு, தம்பியின் முடிவில் அத்தனை மகிழ்ச்சி இல்லை.

அவன் தவறை உணர்ந்ததற்கு விலையாக தாயின் உயிர் என்றால் யாருக்குதான் சந்தோஷத்தை கொடுக்கும்? பாஸ்கரின் அனைத்து செயலுக்கும் மஞ்சுளா காரணமாகிப் போனார். தனது இறப்பில் மகனுக்கு, அவனது சுயத்தை உணரும் படி, மாற்றி விட்டுச் சென்று விட்டார் என்றுதான் சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டும்.

“இப்போ இதையெல்லாம் சொல்லி என்ன பிரயோசனம்டா? அடுத்தவங்க காட்டுற அக்கறைய, சலுகையா எடுத்துக்கிட்டா நாம தொலைஞ்சு போயிடுவோம், பாஸ்கி! இனிமேலாவது எதார்த்தம் என்னன்னு புரிஞ்சு நடந்துக்கோ…” முடிவினை மாற்றும் முயற்சியில் மிதுனா, பேசிக் கொண்டிருக்க,

“கொஞ்ச நாள் இவங்க பிரிஞ்சே இருக்கட்டும் மிதுனா… தட்டிக் குடுக்கிறவங்களோட பாசத்த விட, தட்டிக் கழிக்கிறவங்களோட கோபம், இவன, ரோசப்பட வைக்குதான்னு பார்க்கலாம்” என்று தயானந்தன் முடிவாய் சொல்லி விட்டான். 

“ரெண்டு பேரை பார்க்காதே தம்பி… இவங்கள நம்பி பொறந்திருக்குற குழந்தைய, நாம பார்த்தாகனும்யா” என்று மரகதமும், இருவரின் பொறுப்பை உணர்த்தும் முயற்சியில் இறங்க,

“நீங்க சொல்ற மாதிரியே வலுக்கட்டாயமா சேர்த்து வைச்சா, இவங்க பஞ்சாயத்த தீர்க்கவே, நமக்கு பொழுது போதாது. இவங்களும், தங்களோட பொறுப்பு என்னன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ண மாட்டாங்க… சிந்து சொல்றதும் சரிதானே, நாளை பொழுதுக்கு, அடுத்தவங்க கையதானே எதிர்பார்த்துட்டு இருக்கான்” பாஸ்கரின் இயலாமையை கூறிவிட,

“சகலை சொல்றதும் சரிதான். இவங்களுக்காக, தெனமும் பஞ்சாயத்துக்கு உட்கார முடியுமா? எங்க பொழப்பையும் பார்க்க வேணாமா?” சாந்தினியின் கணவன் மனோகரும் ஆமோதிக்க, அங்கே பதில் பேச்சு இல்லை.

பருவத்தின் வீரியத்தில் ஆசை கொண்டவர்கள், தங்களது பக்குவமின்மையில் வாழ்க்கையை தொலைக்க தயாராக இருந்தனர்.  

உண்மைக் காதல், உயிர் நேசம் என்ற உணர்ச்சிப் பேச்செல்லாம், யதார்த்த வாழ்க்கையில் காணாமல் போய் விடுவதற்கு, இதை விட வேறு சாட்சி தேவையில்லை.

அதற்காக காதல் தவறு என்று கூற வரவில்லை. எந்த இடர்பாட்டிலும் தனது இணையை விட்டுக் கொடுக்காமல், தாங்கிப் பிடிப்பதில் காதல் உண்டு. எதுவும் ஒருகை ஓசையாக இருக்கும் பட்சத்தில், உண்மையான நேசமும் விரக்தி அடைந்து, பிரிவில் வந்து முடிவடைகிறது. புரிதல் உள்ள காதல் என்றும் வெற்றியைப் பெறும்.

தன்னால் பாஸ்கருடன் வாழ்க்கையை தொடர முடியாது என்ற பிடிவாதத்தில் ஜெயித்த சிந்து, கிராமத்திற்கு கிளம்பி விட, வேறு வழியில்லாமல் மரகதமும் உடன் சென்றார். 

பயிற்சியில் சரியாகப் பங்கு கொள்ளாததால், கிடைத்த வேலை கை நழுவிப் போயிருக்க, பழையபடி வேலை தேட ஆரம்பித்தான் பாஸ்கர்.

“இருந்தாலும் உன் தம்பிக்கு இத்தனை வீம்பு ஆகாது… என் கூட வந்தா, லயனுக்கு கூட்டிட்டு போயி பழக்கபடுத்த மாட்டேனா? கம்யூட்டர் பொட்டியை தட்டித்தான் சம்பாத்திக்கணுமா?” என்று தயாவும் மிதுனாவிடம் குறை பட்டான். பத்து நாட்கள் கடந்து தனக்கு மும்பையில் வேலை கிடைத்திருப்பதாக கூறி, பாஸ்கரும் கிளம்பி நின்றான்.

வண்டிச்சாவி, வீட்டுச் சாவி அனைத்தையும் மிதுனாவிடம் ஒப்படைத்தவன்,

“வீட்டை நீ யூஸ் பண்ணிக்கோக்கா, இல்லன்னா, காலி பண்ணனும்னா கூட சரி, உனக்கு எது நல்லதுன்னு படுதோ அப்படியே செஞ்சுக்கோ… எனக்காகன்னு எந்தப் பொருளையும் ஒதுக்கி வைக்காதே,” மிதுனாவிடம் தலை குனிந்தவாறு பேசிய பாஸ்கரை, வெட்டவா குத்தவா என்கிற ரீதியில் பார்த்தான் தயானந்தன்.

அத்தனை கோபம் பாஸ்கரின் மேல்… மிக யோக்கியமாய் பொறுப்பை தட்டிக் கழிக்கும் வேலையை செய்பவனை, எதைக் கொண்டு சாற்றலாம், என்றெல்லாம் அவன் கை பரபரக்க, பல்லைக் கடித்துக் கொண்டு, தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.

“நீ இங்கே வரப்போறதே இல்லையா பாஸ்கி?

“எனக்கு மட்டும் இவ்வளவு பெரிய வீடு வேண்டாம்க்கா… நான் வரும் போது, பார்த்துக்கலாம்”

“ரெண்டு பேரும் பிடிவாதம் பிடிச்சு, எங்கள கஷ்டப் படுத்துறீங்கடா… உங்களுக்காகன்னு இருக்குறவங்கள மறந்து போயிட்டீங்க” முகத்தை சுளித்துக் கொண்டே, தனது வருத்தத்தை வெளிப்படுத்தினாள் மிதுனா. 

“அடிக்கடி ஃபோன் பண்ணுடா! எங்கே இருக்கேன்னு தகவல் சொல்லு பாஸ்கி…”

“நிச்சயம் ஃபோன் பண்றேன்க்கா” என்றவனின் கைகளில், பணத்தை வைத்தாள் மிதுனா.

“வேண்டாம்க்கா என்கிட்ட இருக்கு…” தயக்கத்துடன் மறுத்தான் பாஸ்கர்.

“நல்ல நோக்கத்தோட கிளம்புறவனுக்கு, மனசுல சஞ்சலம் இருக்கக் கூடாது மாப்ளே, உங்க அக்கா கொடுத்தத ஏன் வேணாம்னு சொல்ற?” முறைத்தாலும் நல்லவிதமாக பேசிய தயானந்தனை, ஒரு நிமிடம் பார்த்த பாஸ்கர், கிளம்பி விட்டான்.

கணவனும் மனைவியும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தனித்தனியே பயணிக்க தொடங்கி விட்டனர். இனி இவர்கள், தங்களது பொறுப்புக்களை உணர்ந்து, வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்கும் பொழுது, சேர்ந்து வாழ விரும்புவார்களா? இவர்கள் கொண்ட நேசம் இவர்களை சேர்த்து வைக்குமா? என்பதை காலம்தான் தீர்மானம் செய்ய வேண்டும்.

           ************************************

மனம் முழுவதும் வெறுமை சூழ்ந்திருக்க, தயானந்தனும் மிதுனாவும் அமைதியாக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர். தங்களுக்கான நேரமும், இடமும் தனியாக வாய்க்காதா என்று ஏங்கித் தவித்தவர்கள், இன்று அந்தச் சூழ்நிலையை வேண்டாத பொருளாய் கடந்து கொண்டு இருந்தனர்.

தாய் மறைந்த துக்கத்தில், வருத்தத்துடன் இருக்கிறாள் என்று மனைவியை பற்றி தயா நினைக்க, பாஸ்கரின் செயலுக்கு, கணவன் தன்னிடத்தில் கோபத்தைக் காட்டுகிறான் என்று அர்த்தம் பண்ணிக் கொண்டாள் மிதுனா. மொத்தத்தில் குழப்பமான மௌனங்கள், அவர்களிடையே உறவாடிக் கொண்டிருந்தது.  

வீட்டில் தனியாக இருப்பதில் விருப்பமற்று போக, வேலை தேடுவதில் தீவிரம் காட்டினாள். பலவருட அனுபவம் இருந்ததால் உடனே வேலையும் கிடைத்துவிட, கணவனிடம் விவரத்தை சொல்ல,

“நீ, அனுமதி கேக்குறியா? இல்ல வேலைக்கு போறேன்னு உன் முடிவை சொல்றியா?” எதிர் கேள்வியாக, தயா கேட்ட தோரணையே பிடிக்காமல் போக, அந்தப் பேச்சில் முகத்தை சுளித்தாள் மிதுனா.

“சரி போயிட்டுவான்னு சொன்னா, உங்க பெர்மிசனா எடுத்துப்பேன். சரின்னு மட்டும் சொன்னா, என் முடிவு உங்களுக்கு சம்மதம்னு நெனைச்சுப்பேன்” அவனுக்கு குறையாமல் இவளும் பதில் அளிக்க,

“ரெண்டும் சொல்லாம வேண்டாம்னு சொன்னா, என்ன செய்றதா உத்தேசம்”?

“சண்டை போடற மன நிலையில நான் இல்ல தயா… வீட்டுக்குள்ள இருக்க எனக்கு மூச்சு மூட்டிப் போகுது. தனியா இருக்க முடியல…” ஓய்ந்த குரலில் இவள் சொல்லி முடிக்க,

“கிராமத்துக்கு போயிட்டு வா மிது… வேலைக்குதான் போகணும்னு ஏன் அடம்பிடிக்கிற?”

“எனக்கு எங்கேயும் போக இஷ்டமில்ல… வேலை கைவிட்டுப் போன அன்னைக்கே, என்னோட நிம்மதியும் போச்சு” என்றவளின் பேச்சில் அத்தனை வருத்தம் மேலிட்டது

“நிம்மதி போற அளவுக்கு என்ன நடந்தது?” அனுசரணையான தாயவின் கேள்வியில், மிதுனா, மஞ்சுளாவிடம் தான்பணம் கொடுக்க மறுத்ததை கூறி,

“தெரிஞ்சோ தெரியாமலோ நாங்க மூணு பேரும் எங்கம்மா சாவுக்கு காரணமா போயிட்டோம். என்னோட பேச்சுல வருத்தமா போனவங்களுக்கு, அடுத்தடுத்து நடந்தது எல்லாமே அவங்களுக்கு எதிராத்தான் முடிஞ்சது…” என்றவள் அன்று தன் தாயிடமும் சாந்தினியிடமும், பேசியதை ஒப்பித்துவிட, மனைவியின் இந்த செயலை, பெரிதும் கண்டித்தான் தயா.

“உன்கிட்ட, இத எதிர்பார்க்கல மிது… அவங்க தப்பே செஞ்சிருந்தாலும், நீ எப்படி உன் பொறுப்ப தட்டிக் கழிக்கலாம்? உங்கம்மாவ ஒதுக்கி வச்சுதானே நீயும் பேசியிருக்க…”

“ஏன் நீங்களும்தானே, பாஸ்கரை ஒதுக்கி வைக்கிறீங்க?”

“கோபத்துல திட்டியிருக்கேனே தவிர, எப்போவும் ஒதுக்கி வச்சதில்ல… பெத்தவங்ககிட்ட என்னடி உனக்கு வீராப்பு? அவங்க வயித்துல அடிச்சு என்ன லாபத்தை கண்ட நீ?” கோபத்தில் வெடித்தான் தயா.

“ஏற்கனவே மனசுல இதையே போட்டு குடைஞ்சுட்டு இருக்கேன், நீங்களும் சேர்ந்து ஏத்தி வைக்காதீங்க தயா… உங்க வீட்டுலகூட எல்லோரும் ஒரெடியா எங்க வீட்டை குற்றம் சொல்லிட்டுதானே இருந்தாங்க… அப்போ அவங்க செஞ்சது சரி… நான் செஞ்சது தப்பா?”

“அவங்க கோபத்தை வெளியே கொட்டி இருக்காங்க… உன்னை யாரும் ஒதுக்கி வைக்கலையே? பெத்தவங்களும் அடுத்தவங்களும் உனக்கு ஒன்னா?” என்ற கணவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பரிதவித்து நின்றாள் மிதுனா.

எல்லாவற்றையும் கோபம் என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி, ஒதுங்கி விடுபவர் பலர் உண்டு. ஒரு சிலர் அதே கோபத்தை காண்பித்து, உரிமையை விட்டுக் கொடுக்காமல் அதிகாரத்துடன் அன்பு காட்டுவதும் உண்டு. தயானந்தனின் கண்ணோட்டம் இரண்டாம் வகையைச் சார்ந்தது.  

“இப்படி எல்லாருக்கும் பார்த்துகிட்டே இருந்தா எனக்கான நியாயத்தை, நான் எங்கே போயி தேட?” ஆதங்கமாய் மிதுனா கேட்க,

“உங்கம்மாகிட்ட, உனக்கு என்னடி நியாயம் வேண்டியிருக்கு? வளர்த்த கடனுக்கு, உன்னால சாப்பாடு போடுற வேலைய செய்ய முடியாதா? நாளைக்கு நானும் இப்படி திட்டிட்டு, திரும்ப உன்னை தேடி வந்தா, என்னையும் ஒதுக்கி வைப்பியா?” தர்க்கத்தை நிறுத்தாமல், கணவன் பேசிக் கொண்டே போக,

“போதும் நிப்பாட்டுங்க தயா… உங்க அளவுக்கு, பெரிய மனசு எனக்கில்ல… நான் யதார்த்தவாதிதான். எனக்கு பதிலுக்கு பதில் குடுத்துதான் பழக்கம். அது யாரா இருந்தாலும் சரி… நான் செஞ்ச தப்புக்கு, நானே புழுங்கிட்டு செத்துப் போறேன்… உங்கள துணைக்கு கூப்பிடல…” கொதிப்புடன் பதிலளித்தாள்.

“உரிமையை விட்டுக் கொடுக்காதே… அதே சமயத்துல பொறுப்பையும் தட்டிக் கழிக்காதேன்னு சொல்றேன். அதுக்கும் கோபப்படுவியா?”

“உங்க தயாள குணம், நல்லவர் வேஷம் எல்லாம் வெளியாட்களுக்கு மட்டுந்தானா? பொண்டாட்டிய திட்றதுக்கு மட்டுமே பேச வர்றீங்க… இப்படிதான் வாழ்க்கை முழுசும் இருக்கப் போறோமா தயா?” சலித்துக் கொண்டே ஆயாசத்துடன் கேட்டவள்,

“அடுத்த வாரத்தில இருந்து வேலைக்கு போகப் போறேன்.. இத எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி, என் முடிவுல மாற்றமில்ல… இனி எந்த விசயத்துக்கும் நாம சேர்ந்து பேச வேண்டாம்” என்ற பேச்சோடு ஒதுங்கிக் கொண்டாள் மிதுனா.  

குற்ற உணர்வில் சிக்கித் தவித்தவளை மேற்கொண்டு கேள்விகள் கேட்டே, கோபத்தின் எல்லைக்கே செல்ல வைத்திருந்தான் தயானந்தன். இருவருக்குமான புரிதல் இருந்தாலும் பேசும் விவாதங்கள் இருவரையும் தள்ளியே நிறுத்தி வைத்தது. இனி இவர்களின் பயணம் இப்படியே தொடருமா…?