சரி © 7
அதிகாலை இல்லை! கண் விழிக்கவில்லை! தூக்கம் மட்டும் கலைந்தவனாய் சித்து! அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது அந்த மெல்லிசை.
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது (2)
காதல் சொன்ன காகிதம்
பூவாய் போனது
வானில் போன தேவதை
வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
‘நான் எழுதிய கடிதத்தை நீ நெஞ்சுக்குள்ளே வாசிக்க வேண்டும் என்றுதான் எழுதினேன். ஆனால் கொடுக்க துணிவில்லாமல் நானே வைத்துக்கொண்டேன். என்றாவது ஒருநாள், நல்ல நாளில் கொடுக்கிறேன் என் கண்மணியே’, என்று நினைத்துக்கொண்டே கண்விழித்து யோகியைப் பார்த்தான். காணவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சித்து ஓய்வு எடுக்கட்டும் என்று அவனை எழுப்பாமல், யோகி வழக்கம் போல் வேலைக்கு கிளம்பிப் போயிருந்தான். மணியைப் பார்த்தான் காலை சிற்றுண்டி நேரத்தைத் தொட்டிருந்தது.
சித்துவிற்கு அன்று விடுமுறை என்பதால், தூக்கம் கலையும்வரை ஓய்வெடுத்துவிட்டுதான் எழுவான். அது ஒவ்வொரு ஞாயிறும் நடக்கும் வழக்கம்தான். அன்று அதிகமாகவே தூங்கியிருந்தான். இரவில் ஏதேதோ எண்ணங்கள் சிறகடித்து பறந்ததால் தூக்கம் வர வெகு நேரமாயிற்று.
இப்பொழுதும் ஏதோ யோசித்தவாறே, காலை வேலைகளை எல்லாம் இயந்திரத்தனமாக செய்துவிட்டு, யோகி தயார்செய்து வைத்திருந்த தேநீரை கையில் எடுத்துக்கொண்டு சாளரம் அருகில் வந்தமர்ந்தான். மற்றொரு கையில் அலைபேசி.
ஒரு கையால் தேநீரை வாயில் சிறுசிறு மிடறுகளாய் அனுப்பிக்கொண்டே, மறுகையில் சைலன்ட் மோடில் வைத்திருந்த அலைபேசியைப் பார்த்தான். ஒரே ஒரு அழைப்பு மட்டும் வந்து ஓய்ந்திருந்தது, அது சம்யு!
சித்துவிற்கு தூக்கிவாறிப் போட்டது. மனமெல்லாம் தடக் தடக் என ரயிலே இல்லாமல் ஓடியது. அவன் இதயத்தின் லப்டப் சப்தம் அவனுக்கே கேட்டது!
‘இது கனவா! இல்லை, உண்மைதான். எனக்குள் ஏற்பட்ட மாற்றம் அவளுக்குள்ளும் நிகழ்ந்திருக்குமா? அதுதான் அழைத்திருக்கிறாளா? எது எப்படியோ இப்போது பேசியே ஆகவேண்டும்!’, என்று நினைத்தவனாக சற்று தயக்கத்துடன் அலைபேசியில் தெரிந்த சம்யுவின் எண்ணில் அழுத்தினான். மணி ஒலித்துக்கொண்டே இருந்தது மறுமுனையில். சிறிது நேரமும் காத்திருக்க முடியவில்லை சித்துவால்.
“ஹாய் சித்து”, சம்யு.
அதுவரை இல்லாத ஆனந்தம் அவன் உள்ளத்தில். ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டு, “ஹாய் சம்யு”, என்றான். உற்சாகம் தொற்றிக்கொண்டது அவனையறியாமலேயே.
“ஆர் யூ ஃப்ரீ நௌ?”, சம்யு.
“யா, அஃப்கோர்ஸ். ஜஸ்ட் நௌ, எந்திருச்சு கைல டீ கப்போட முழுமுதற் வேலையா, முக்கிய வேலையா, சம்யுக்கு கால் பண்ணிட்டிருக்கேன்”, என்றான் முகமெல்லாம் மலர்ச்சியுடன்.
“யோகிக்கும் லீவா?”, சம்யு.
“அவன் காலைலேயே வழக்கம்போல மாலுக்கு போயிட்டான். சண்டே மார்னிங்தான் அவன் ரொம்ப பிஸி”
“நேற்று எப்படி ஃபீல் பண்ணீங்க?”
“ஃபைன். வெரி வெல் அரேஞ்மென்ட், மோர் கம்ஃபர்ட்டபிள் அன்ட் ஃபீல் பெட்டர்”
“ரிது சொன்னா”, என்று அவன் எதிர்பார்க்காத எதையோ கூற வந்தாள் சம்யு.
“ரிதுவா? என்ன சொன்னாங்க?”, என்றான் சற்று ஆர்வம் குறைந்தவனாக.
“நீங்க நேத்து கொஞ்சம் ஃபீல் பண்ணிங்களாமே?”, சம்யு.
‘ரொம்பவே ஃபீல் பண்ணேன். அது உங்களுக்குத் தெரியாது’ என்று நினைத்துக்கொண்டு, “ச்சே, ச்சே, அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே”, சித்து.
“ஒன்னு சொல்லவா?”, என்று புதிர் போட்டாள் எதிர்முனைக்காரி.
“நீங்க எத்தனை வேணும்னாலும் சொல்லுங்க! நா கேக்குறேன்”
“நீங்க கொடுத்த கிஃப்ட்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”
“தேங்க் காட். ஐம் வெரி ஹேப்பி. சம்யு, சும்மா சொல்லலையே?”
“உண்மையிலேயே வெரி நைஸ். எனக்கு வந்த கிஃப்ட்லயே ஒங்க கிஃப்ட்தான் ரொம்ப வித்யாசமா இருந்தது”
“தேங்க்ஸ் அகெய்ன் சம்யு, நான் எதிர்பாக்கவேயில்ல”
“ஆனா, நான் எதிர்பார்த்தேனே!”, என்று மீண்டும் ஆச்சரியப்பட வைத்தாள்.
“என்ன?”, தயக்கமாக கேட்டான்.
“ஒன்னுமே இல்லையே”
“என்ன, ஒன்னுமே இல்லையா?”
“ஆமா, கிஃப்ட் பேக்ல ஒரு வார்த்த கூட வாழ்த்துச் சொல்லி இல்லையே!”
“அது அவசரத்துல…”, என்று இழுத்தான்.
“ஒரு ‘அன்புடன்’ அப்டீன்ற வார்த்த கூடவா எழுத நேரமில்ல?”
“அய்யோ, நிறைய அன்பு இருக்கு சம்யு. நேரமும் நிறைய இருந்துச்சு. இன்ஃபேக்ட் நீங்க உங்க பர்த்டேன்னு சொன்னவுடனே, ஃப்ரைடே நைட்டே கிஃப்ட் வாங்கிட்டோம் தெரியுமா?”
“அடப்பாவிகளா, அப்புறம் ஏன்? எதுவுமே எழுதல? எழுதற அளவுக்கு நான் வொர்த் இல்லையா என்ன?”
“நீ ரொம்ப ஒர்த் சம்யு. அந்த அளவுக்கு என்னால எழுதத் முடியுமான்னு தெரியல. அதான் எழுதுனதக் கூட கிஃப்ட் பேக்ல வைக்கவே இல்ல”, என்று சித்து உண்மையைச் சொல்லிவிட்டான்.
“எழுதுனீங்களா? நா நம்ப மாட்டேன்”, என்றாள் சம்யு வீம்பாக.
“உண்மைதான், நம்புங்க ப்ளீஸ்”
“உண்மைன்னா, இப்பவும் எழுதுனது ஒங்கட்டதான இருக்கும்?”
“ஆமா, இருக்கு”
“அத ஒடனே எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க பாப்போம்”, என்றாள் ‘ஒடனே’வில் அழுத்தம் கொடுத்து.
“அதவிட எனக்கு வேறென்ன வேல? ஆனா பாத்துட்டு சிரிக்கக் கூடாது, கேலிபண்ணக் கூடாது. அன் ஒன்மோர் திங், அவங்க ரெண்டு பேர்கிட்டயும் காண்பிக்கக் கூடாது”
“அப்பப்பா எவ்வளவு கூடாது? அப்படிக் கூடாதத என்ன எழுதி வச்சிரிக்கீங்க? அனுப்புங்க பாப்போம்”
“அவங்களும் ஒங்க கூடவா இருக்காங்க?”, என்று கேட்டுக்கொண்டே எழுந்து, முத்தைய தினம் எழுதிய அந்த துண்டுச் சீட்டை டைரியில் இருந்து எடுத்தான்.
“இல்லையே, ஏன்”
“இருந்தா நான் ஷையா ஃபீல் பண்ணுவேன்”
“ஷையா… அய்யோ. யாரும் இல்ல, நா ரூம்ல தனியாதான் இருக்கேன். போதுமா? நா ஃபோனக் கட் பண்றேன்”, சம்யு.
“ஓக்கே, பை”, என்று அலைபேசியை அணைத்தவன், தான் பரிசுப் பொருளுடன் கொடுக்கலாம் என்று எண்ணி யோகிக்குக் கூட தெரியாமல் சனிக்கிழமை பகலெல்லாம் யோசித்து எழுதி வைத்திருந்த அந்த துண்டுச் சீட்டை எடுத்து, டேபிளில் வைத்து கையில் வைத்திருந்த அலைபேசியால் புகைப்படம் எடுத்தான்.
இனி என்ன வேண்டும்
இப்பூவுலகில்
என்றெண்ணும் அளவில்
எந்நாளும்
மகிழ்வுடன் குறைவின்றி
வாழவேண்டும்
நீ எனக்கு!
ஒரு உத்வேகத்தில், சம்யுக்தா கொடுத்த தைரியத்தில் வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டான் சித்து.
©©|©©
அன்று உணவு இடைவேளை நேரத்தில், சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் கிராமத்திலிருந்து, யோகியின் தாய்மாமன் சுந்தரம் அவனை அலைபேசியில் அழைத்தார்.
“என்ன மாப்ள போன் பண்ணச் சொன்னீங்களாமே”, சுந்தரம்.
“ஆமா மாமா. அம்மா என்னமோ சொத்துன்னு சொன்னாங்க, அதப் பத்தி ஒங்கட்டப் பேசுனா கொஞ்சம் தெளிவாத் தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேட்டேன்”, என்றான் யோகி.
“என்ன பேசனும்ன்னு சொல்லுங்க மாப்ள”
“என்னென்ன சொத்து மாமா இப்போ பிரிக்கப் போறீங்க?”
“சொல்லிக்கிற அளவுக்கு பெரிய சொத்து எதுவும் எங்க வம்சாவழியில விட்டுட்டுப் போகலையே மாப்ள. ஒன்றரை அடிச் சுவரு வச்சு பழைய காலத்துல கட்டுன இந்த வீடு ஒன்னு, அப்பறம் நஞ்ச, புஞ்சன்னு கொஞ்சம் வயல் வாய்க்கா கெடக்கு”
“பத்திரம் இருந்தா காப்பி ஒன்னு அனுப்பி வைக்க முடியுமா மாமா?”
“கொரியர்லயா?”
“நீங்க என்ன மொபைல் யூஸ் பண்றீங்க மாமா? அதுல வாட்ஸ்அப் இருக்கா?”
“எனக்கு அதெல்லாம் ஒன்னுந்தெரியாது மாப்ள. நா வேணா வைஜெயந்திகிட்ட கேக்கவா?”
“கேளுங்க மாமா. நா வெயிட் பண்றேன்”
யோகிதாஸின் தாய் மாமனுக்கு, மனைவி மீனாட்சி அம்மாள் மற்றும் இரண்டு பெண்கள். மூத்தவள் ஐஸ்வர்யா, இளையவள் வைஜெயந்தி. இருவரும் பள்ளிப் படிப்பை முடித்திருந்தார்கள்.
ஐஸ்வர்யாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். அவள் கணவனின் வீடும் அதே கிராமத்தில், நடந்து செல்லும் தூரத்தில்தான் என்பதாலும், கணவன் வெளிநாடு சென்றுள்ளதாலும் பெரும்பாலும் தாய்வீட்டிற்கு வந்து தங்கிவிட்டுச் செல்வாள்.
இளையவள் வைஜெயந்தி பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காக மாலை நேரங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு சிறிய அளவில் டியூஷன் எடுத்து பொழுதை போக்கிக்கொண்டிருக்கிறாள்.
தற்காலத்திற்கேற்ற ஞானம் பெற்றவள். தலையில் ஹெட்ஃபோனுடன் வீட்டின் பின்புறம் அமர்ந்து, தனது லேப்ட்டாப்பில் (பள்ளியில் படிக்கும்பொழுது இலவசமாக கொடுத்தது) எதையோ பார்த்துக் கொண்டிருந்தவளை தந்தை சந்திரன் அழைத்தார்.
“ஏம்மா வைஜீ, கொஞ்சம் இங்க வாயேன்”
அவளுக்குக் காதில் விழவில்லை என்பதை உணர்ந்த சுந்தரம், அருகில் இருந்த தன் மனைவி மீனாட்சியிடம், மகளை அழைத்து வருமாறு சைகை செய்தார்.
“கூப்டீங்களாப்பா?”, என்று வந்து நின்றாள் இளையவள்.
“இந்தாம்மா, மாப்ள யோகி ஏதோ கேக்குறாரு, என்னன்னு கேட்டுக்க. விவரம் என்னன்னு எனக்கு சொல்லு”, சுந்தரம்.
அலைபேசியை கையில் வாங்கியவள் “ஹலோ அத்தான், நல்லாருக்கீங்களா?” என்றாள் சந்தோஷமாக.
“நல்லாருக்கேன் வைஜீ. நீ எப்படி இருக்க?”, யோகி.
“நான் நல்லாருக்கேன் அத்தான். அப்பா என்னமோ சொல்றாங்களே, என்னத்தான் அது?”, வைஜீ.
“ஒன்னுமில்லம்மா, நீ வாட்ஸ்அப் யூஸ் பண்றியா?”
“ம், என்னோட மொபைல்ல இருக்கு. என்ன செய்யனும் சொல்லுங்கத்தான்”
“அப்பாட்ட சில பத்திரங்களோட டீட்டெய்ல் கேட்டேன். கொரியர் பண்றேன்னு சொன்னார். அது லேட்டாகும். அதான் ஒன்னோட மொபைல்ல எனக்கு வாட்ஸ்அப் பண்ணிறேன்”
“சரித்தான்”
“அப்பாட்ட ஃபோனக் குடு”
“குடுக்குறேன்த்தான். ஒடம்பப் பாத்துக்கிருங்க”, என்றவள் திரும்பி “இந்தாங்கப்பா”, என்று அப்பாவிடம் அலைபேசியைக் கொடுத்துவிட்டு அவரின் உத்தரவிற்காக காத்திருந்தாள்.
“மாமா, நீங்க எந்தெந்த பத்திரமெல்லாம் அனுப்பனும்னு நெனக்கிறீங்களோ அதெல்லாம் வைஜீட்ட குடுங்க, வைஜீ அத மொபைல்லயே ஃபோட்டோ எடுத்து எனக்கு அனுப்பிரும். அது போதும்”, என்றான் யோகி.
“சரி மாப்ள, அனுப்பட்டும். நீங்க ஊருக்கு வரதாச் சொன்னீங்களாமே? எப்ப வரீங்க?”, சுந்தரம்.
“அம்மாவே எல்லாம் பாத்துக்கிருவாங்கன்னா நா வரவேண்டிய அவசியம் இருக்காதுன்னு நெனக்கிறேன் மாமா”
“என்ன படக்குனு வரலைன்றீங்க?”
“அவசியம் ஏற்பட்டா கட்டாயம் வாறேன் மாமா?”
“சரி மாப்ள, உங்க இஷ்டம். நா போன வைக்கிறேன்”
“சரி மாமா. அம்மா, அத்தைல்லாம் கேட்டதாச் சொல்லுங்க. நான் சாயந்தரம் ரூமுக்கு போய்ட்டு பேசறேன்”
“சரி மாப்ள வைங்க”
©©|©©
சம்யுக்தா அறையில் இருப்பதை அறிந்த, அவளது தந்தை, அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி, அனுசியாவிடம் தன் மகன் திலீபனைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.
“திலீப்பெங்கம்மா? காலைல இருந்த மாதிரித்தான் தெரிஞ்சது. ஆளப் பாக்கவே முடியலையே?”, தாமோதரன்.
“தொர எங்க வீடு தங்குறாரு?, லீவு நாள்னா, காலைல எந்திருச்சா டிஃபன் பண்றதோடச் சரி. அப்பறம் ஆளப் புடிக்க முடியாது”, அனு.
“மதிய சாப்பாட்டுக்கு எப்புடியும் வந்துதான ஆகணும்”
“எப்பவும் மூனு மூன்ரை மணிக்கு வருவான். இன்னக்கி அதுவும் கட்”
“இன்னக்கி சாப்பிட மாட்டானா?”
“எல்லாம் அவனோட அக்காக்காரி கொடுக்கிற எடந்தான். காச வாங்கிட்டு வெளில சாப்பிடப் போயிருக்கு”
“ஏன்?”
“பர்த்டே கொண்டாடுனதோட தொடர்ச்சிதான்”
“புரியலையே”
“ஒங்களுக்கு ஒன்னும் புரியாது. அதுக பார்ட்டி ஹீர்ட்டின்னு பேசிக்கறதுக”
“ஓ, அவ்ளோதான”
“என்ன இவ்ளோ ஈசியா சொல்லிட்டிங்க”
“இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம்தானம்மா. ரொம்பப் போனா எத்தன நாள் இதெல்லாம் செய்வாங்க? இவளுக்கே நாளைக்கு ஒரு கல்யாணம் ஆகிப் போய்ட்டா இவன் இந்த மாதிரில்லாம் கேக்கவா போறான். அவளோட சூழ்நிலையே புதுசா மாறிடும்”
“இருந்தாலும் நீங்க புள்ளைங்களுக்கு அதிகமாவே செல்லங் கொடுக்கிறீங்க”
“நா வீடு வர்றதே கம்மியாத்தனமா இருக்கு. அந்த நேரத்துலயும் அதுகளப்போட்டு படுத்தியெடுத்தா நல்லாவா இருக்கும்?”
“சரி விடுங்க”
“நா விட்டுறேன். ஆனா, எந்நேரமும் அதுகளோட வீட்லயே இருக்குற நீ நிச்சயமா என்னோட உரிமையையும் சேத்து எடுத்துக்கிட்டு, கண்டிப்போட இருக்கணும்”
“அதுசரி, எல்லாத்தையும் எந்தலைலயே கட்டிட்டிங்க?”
“நா கட்டவே இல்லம்மா. ஏற்கனவே நீ வச்சிருக்கறத்தான் சொல்றேன். இதுவரைக்கும் நீ இந்த குடும்பத்த சரியாத்தானமா கொண்டு வந்திட்டிருக்க.”
“சரியாத்தான் இருக்கு, ஆனா இனிமே இன்னும் கொஞ்சம் அதிகமா கவனிக்க வேண்டிருக்குமோன்னு தோனுதுங்க”
“அது நூறு சதம் உண்மைதாம்மா. புள்ளைங்கவேற வளர்ந்துடுச்சுங்க. ஆதுவும் சம்யு தன் கால்ல நிக்கற அளவுக்கு வளந்துட்டா”
“அதாங்க நேத்து நானும் ஒன்னுஞ் சொல்லிக்கிறல. அவ ஆபீஸ்ல இருந்து நெறயப் பேர் வந்திருந்தாங்க. எல்லாமே புதுசு புதுசா இருந்துச்சுங்க”
“ஆமா, அவ வேலைக்குப் போற எடத்துல பழகுனவங்கள நீ பாத்துருக்க மாட்டீல்ல. காலேஜ்ல படிக்கும்போது வந்துபோன ஃப்ரன்ட்ஸத்தான் இதுவரைக்கும் பாத்திருப்ப. டெக்கரேசன்லாம் நல்லாருந்துச்சாம்ல எப்படி இவ்ளோ செலவு பண்ணா சம்யு?”
“அட நீங்க வேற, அவ ஆஃபீஸ்ல கூட வேலபாக்குற யாரோ சொல்லித்தன் இவ்ளோ செஞ்சிருக்கா. டெக்கரேசன் எல்லாம் அந்த ஸ்கூலே பண்ணிருச்சு. நம்ம புள்ளைங்க சாப்பாடு மட்டும் அரேஞ்சு பண்ணிக்கிருச்சுங்க”
“அதுவும் ரிதுவோட ஸ்பான்சரா?”
“கரெக்ட்டா சொல்லிட்டிங்க. ஆனா இந்த பர்த்டேக்கு இவ கவர்மென்டு வேலக்குப் போனதால அவளுக ரெண்டு பேருக்கும் டிரெஸ் வாங்கிக் கொடுத்திருக்கா”
“அப்டிப் போடு. நாமகூட இந்தளவுக்கு அவளுக்குச் செய்யலயே! இந்த பர்த்டே அவளுக்கு மறக்க முடியாத பர்த்டேவாக்கூட இருக்கலாம்ல?”
அதே நேரம், அதே வீட்டில், சம்யுக்தாவின் அறையில் சம்யு, “எனக்கு இது மறக்க முடியாத பர்த்டேவா ஆயிருச்சு சித்து!” என்று அடிமனதில் இருந்து உண்மையாக கூறிக்கொண்டிருந்தாள்.
©©|©©
“ஏய் ரிது, ரொம்ப நேரமா சம்யுவோட மொபைல் எங்கேஜ்டா இருக்கேடீ?”, என்று யாஷிகா தன் அறையில் இருந்து கூவிக்கொண்டிருந்தாள்.
“நீ மொபைலச் சொல்ற. நா அவளே எங்கேஜ்டா இருப்பான்னு நெனக்கிறேன்டீ”, ரிது.
“அதுக்குள்ளயா? அதுவும் நம்மட்டக் கூட சொல்லாமலா?”, யாஷிகா படபடத்தாள்.
“நம்மட்டச் சொல்லிட்டு, அறிமுகப்படுத்திட்டு ஏற்பட்ற எங்கேஜ்மென்ட் இல்லடீ இது”, அலட்டிக்கொள்ளாமல் கூறினாள் ரிது.
“எங்கேஞ்மென்ட் யாரோடன்னு எனக்கும் தெரியும்”, என்றாள் யாஷிகா பரம ரகசியத்தை அறிந்ததுபோல்.
“மொதல்ல கன்ஃபார்ம் பண்ணிக்குவோம். அப்பறம் கொண்டாடுவோம்”
“கொண்டாடியே ஆகனும்”, என்றாள் யாஷிகா குஷியாக.
“சரி, நா மறுபடியும் சம்யுக்கு ட்ரை பண்றேன்”, ரிது.
“ஓக்கே, ஓக்கே. பேசிட்டு கொஞ்சம் பாசிட்டிவா சொல்லுடி”
“அதுசரி, நீ என்னமோ ப்ரப்போஸ் பண்ணி, அத நா கேட்டுச் சொல்லப் போற மாதிரியில்ல கெஞ்சுற?”
“நமக்கு அந்தளவுக்கெல்லாம் தைரியம் இல்லப்பா”, யாஷிகா பின்வாங்கினாள்.
“நமக்குன்னு என்னையும் எதுக்குடி சேத்துக்கற?”, ரிது.
“அப்ப ஒனக்கும் ஐடியா இருக்கா?”, யாஷிகாவிற்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“ஒனக்கும்தான் இருக்கும். நாம எல்லாரும் ஒரே கேட்டகிரிதான். ஆனா வெளிப்படுத்துற விதம், நேரம் வேணா ஸ்லைட்டா டிஃபர் ஆகலாம்”, அமைதியாக அறிவுரை போல் போதித்துக்கொண்டிருந்தாள் ரிது.
“என்னடீ சொல்ற. நா இது வரைக்கும் அந்த மாதிரில்லாம் நெனச்சுக்கூட பாத்ததில்லப்பா”, யாஷிகா.
“இதுவரைக்கும்னு நீயே ஒத்துக்கிற பாத்தியா? அப்ப இனிமே நடக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லாம சொல்ற”, ரிது.
“நா அப்படிச் சொல்லலயே”
“நோ யாஷிகா. நமக்கென்ன வயசா போச்சு? இன்னும் எவ்வளவே இருக்கு. பாக்கலாம்டீ”
முடிந்த பேச்சு மீண்டும் தொடர்ந்திருந்ததை அப்போதுதான் இருவரும் உணர்ந்தவர்களாய்.“சரி, சரி. நீ சம்யுவ கூப்பிடு. நா அப்பறம் லைன்ல வறேன்”, யாஷிகா.
“ஓக்கே, பை”, என்று அழைப்பைத் துண்டித்தவள், மீண்டும் சம்யுக்தாவை அழைத்தாள்.
மறுமுனையில் அலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது.
அலைகள் ஓய்வதில்லை!
©©|©©